9.15.2006

மீண்டும் அகதி

நம்பினோம் இம்முறையும்
கையெழுத்துகளில் தலையெழுத்து மாறியதாய்.
மழைத்தாரை ஊடறுத்த பூர்வீக நிலம்
பள்ளத்தாக்கென படுத்திருந்தது
சூரைப்பற்றைகள் வலிந்து சண்டைக்கிழுக்க
பாம்புகள் கலவி புரியும் காடு.
இரவும் பகலும் மண்ணுடன் நிகழ்ந்த சமரின் முடிவில்
எழுந்தது எமக்கென்றோர் கூடு.

சின்னத்தங்கை சொன்னாள்
‘இந்தச் செவ்விளநீர் மரம் என்னுடையது
இதற்கு என் பெயர் வைப்போம்’என.

எல்லாம் ஆயிற்று…!

பறவைகள் திரும்பி
குரலெடுத்துப் பாடிய ஒரு காலையில்…
முடிந்தது இளவேனில்…!

மண் பிடித்து துளிர்விட்ட பாரிஜாதமே!
உன் முதற் பூவைக் காணாமற் போகிறோம்.
வாலுரசித் துள்ளியோடும் பூனைக்குட்டீ!
ஆட்களற்ற வீட்டில் அலையவிருக்கும்
உன் குஞ்சுக்குரல்
என் கனவுகளில் இப்போதே எதிரொலிக்கிறது.

வெடிக்கக் காத்திருக்கும்
துப்பாக்கிகளின் நிழலில் தூங்கவியலாது.
கருணையற்ற இரவுகளையும் நம்புவதற்கில்லை.
முகத்தில் பதியும் சப்பாத்துக்கால்களோவெனில்
மானிட விதிகளை அறியாதவை.

குற்றவாளிகளாய் கையுயர்த்தி வெளியேற
நாம் யாது செய்தோம்…?
வாழவிடாத வஞ்சினத்தில்
வழிகிறது கண்ணீர்…!

விரும்பியதோ அதிகமில்லை…
அலாரம் மண்டையில் அடித்தெழுப்பாக் காலை…
விடிகாலை வேம்பின் குயில்…
முற்றத்துக் குளிர்…
சூடான தேநீர்…
கொஞ்சம் கவிதை…
மழைபெய்யும் போதெழும் மண்வாசம்…!

ஜனநாயக நாடு! ப்ச்…!!
தயைகூர்ந்து சிரிக்கவேண்டாம்!!!

வெளியேறமுடியாத குழந்தைகளே!
மன்னித்துவிடுங்கள்
உறுத்திக்கொண்டேயிருக்கும் உயிரின் குரலை
மறுதலிக்க முடியவில்லை!

மேலும்…
இறப்பதைவிட
இழிவுபடுத்தப்படுதலுக்கு அஞ்சுகிறோம்.
~0~

No comments: