12.29.2008

பாடல்கள் திறக்கும் பலகணிகள்


இசையை குறிப்பாக பாடல்களை எப்போதிருந்து நேசிக்க ஆரம்பித்தேன் என்று சரியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால், பாடல்களைக் கேட்கும்போது அவற்றை முதன்முதலாகவும் அதிகமாகவும் கேட்ட காலங்களில் வாழ்ந்த சூழல் மற்றும் நிலவெளிகளுள் போய் விழுவது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. பாடலின் இழையைப் பற்றிக்கொண்டு காலங்களைக் கடந்து பயணிப்பதென்பது சாத்தியப்படக்கூடியதே.

அக்காவின் நீட்டிய கால்களில் படுத்திருந்து அவள் பிசைந்து ஊட்டிய மீன்பொரியல், சொதி, சோற்றைச் சாப்பிட்ட நாட்களில் மெல்லிய குரலில் அக்கா பாடியது என்ன பாடல் என்பதை உணரும் வயதில்லை. ஆனால் அவள் குரலும் இழுவையும் நினைவிலிருக்கிறது. மரணத்தை ஒரு குப்பி வழியாக அவள் ஊற்றிக் குடித்து இல்லாமல் போனபிறகும் ‘ங்….ங்…’என்ற கமகம் மனம் நொய்மையடைந்த பொழுதுகளில் ஒலித்து அழவைத்திருக்கிறது. அது மீன்பொரியல் வாசனையோடு கூடிய இசையாக இருந்ததென்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

பெரும்பாலும் பாடல்களும் புகைப்படங்களும் நாட்குறிப்புகளும்தான் இறந்தகாலத்தை மீள அழைத்துவந்தன; வருகின்றன. ஒரு புத்தகக் கடையில் அன்றேல் கண்காட்சியில் எவ்வாறு காலத்தைப் பற்றிய கவனம் அறுந்துபோகிறதோ அங்ஙனமே புகைப்பட ‘அல்பம்'களையும் நாட்குறிப்புகளையும் புரட்டும்போதும் கடிகாரம் நின்றுவிடுகிறது. அன்றேல் அவற்றின் மீது காலுந்தி ஒரே எட்டில் பின்னோக்கிப் போய் விழுந்துவிடுகிறோம்.

குறிப்பாக பாடல்கள் நம்மை நிலத்திலிருந்து வானத்தை நோக்கி எய்துவிடுகின்றன. தேங்கிய ஏக்கங்கள் வழிந்தோட மடைவெட்டிவிடுவன பாடல்கள்தாம். ஒலிக்கும் வரிகளில் தம்மைப் பொருத்திப் பார்க்காத உள்ளங்கள் ஏது? ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் மரங்கள் சூழ்ந்த பள்ளிக்கூட மைதானத்தில் காரணந் தெரியாத சோகத்துடன் அமர்ந்திருந்த நாட்கள் நினைவில் வருகின்றன. விஜயமாலினி என்றொரு தோழியின் நினைவு வருகிறது. நட்பு என்றால் என்னவென்ற விளக்கங்களும் விசாரணைகளும் இல்லாத வயதில் அவளுடைய சைக்கிளின் பின்னே அமர்ந்து வயல்வெளிக் காற்று தலை குழப்பப் போனது ஞாபகம் வருகிறது. மேலும் தொலைந்த ஒரு அடிமட்டத்திற்காக அழுததும். கறுப்பில் பளிச்சென்று அழகாயிருந்த விஜயமாலினியின் அக்காவும் அவளது செவிகளில் விழவேண்டுமென்பதற்காகவே நகைச்சுவைத் துணுக்குகளை உதிர்த்தபடியிருந்த பெடியங்களும் நினைவில் வருகிறார்கள்.

‘பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகை என்றே பேராகும்’ (கீழே சுட்டியுள்ளது) என்ற இந்தப் பாட்டு உண்மையில் நாயகன் நாயகியை வர்ணித்துப் பாடுவதாக அமைந்தது. ஆனால், அந்தக் குரலில் இழையோடியிருக்கும் சோகத்தினால் அதை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.
http://www.musicindiaonline.com/p/x/OrfgQ4NJ6wGfHDfOBitZ/?done_detect

ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம், கரித்துண்டுகளால் பெயர்கள் எழுதப்பட்ட அதன் சுவர்கள், காதல், நண்பர்கள், மாட்டுப் பட்டி, சங்கக் கடை, சாண வாசனை... பாம்பு கொட்டாவி விடும்போது எழும் உழுந்து வாசனை... இவற்றையெல்லாம் எடுத்து வருவன ‘ஒரு தலை ராகம்’பாடல்கள். ‘கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர வாசம்’என்ற பாடலுக்கு நீங்கள் அழுதால் அந்தக் காலத்தில் நீங்கள் காதலித்துக்கொண்டிருந்தீர்கள் என்று பொருள்:) டி.ராஜேந்தர் அடுக்குமொழியில் அதிகம் பேசுவதில் எனக்கு உவப்பில்லை. என்றாலும், அவரது பாடல்களின் கவித்துவத்திற்கு நானுமோர் விசிறி.

நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ….

என்ற பாட்டு ராஜகுமாரனுக்கு (கணவர்) மிகப் பிடித்த பாட்டு. அதனாலோ என்னவோ எனக்கும் பிடிக்கும். அந்தப் பாடல் கடைசியாக ஒரு விசும்பலுடன் முடியும்.

‘பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசமெனும் நீரிறைச்சு
ஆசையில நா (ன்) வளத்தேன்

இந்திய இராணுவத்தின் முற்றுகையுள் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில் இந்தப் பாட்டை அடிக்கடி நாங்கள் கேட்கநேர்ந்தது. வாசற்படியோரம் இருந்த மல்லிகை அவிழ்ந்து மயக்கும் வாசனையை வீசிக்கொண்டிருக்க, இருள் கவிந்த மாலை நேரங்களில் கதவு நிலையின் இந்தப்புறம் நானும் அந்தப்புறம் ராஜகுமாரனும் (அப்போது காதலர்கள்) அமர்ந்திருக்கும்போது நான் அவரைப் பாடும்படி கேட்பேன். மறுக்காமல் ‘பட்டுவண்ண ரோசாவாம்’பாடுவார். ரோந்து வரும் இராணுவத்தின் கடலை எண்ணெய் மணமும் மல்லிகைப்பூ வாசமும் இந்தப் பாடலும் பயமும் கலந்ததான ஒரு வாசனை அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எழுகிறது. நாம் விரும்பிக் கேட்கிற எல்லாப் பாடல்களுக்கும் ஏதோவொரு வாசனை இருக்கத்தான் செய்கிறது.

‘நட்பு’என்ற சொல்லுக்கு எதிரில் ஒரு பெயரைப் பொருளாக எழுதமுடியுமானால் நான் ‘சுகி’என்றே எழுதுவேன். ஆண்டுகள் கடந்தாலும் மாறாத அன்பு அவளுடையது. திருமணமாகி, புலம்பெயர்ந்து பிரிந்து, குழந்தைகள் பிறந்தபிறகும் நீடித்திருக்கிறது எங்களது நேசம். அவளைப் பற்றி எழுதுவதென்றால் தனிப்பதிவுதான் போடவேண்டியதாயிருக்கும். ஒருகாலத்தில் நாங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாயிருந்தோம். அப்போது இருவருக்கும் திருமணமாகியிருக்கவில்லை.

பூவே செம்பூவே உன் வாசம் வரும் (சொல்லத் துடிக்குது மனசு)
என்ற பாடல் எங்கே ஒலிக்கக் கேட்டாலும் நினைவில் வருவது சுகியின் உணர்ச்சி ததும்பும் பெரிய கண்கள்தான்.

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா (வருசமெல்லாம் வசந்தம்)
என்ற பாடல் இலண்டன் நகரத்து வேகநெடுஞ்சாலைகளில் சுகியின் குடும்பத்தோடு பயணித்த ஞாபகங்களுள் ஏந்தியெடுத்துச் செல்கிறது.

செம்பருத்திப் பூவே செம்பருத்திப் பூவே
உள்ளம் அள்ளிப் போனால் நினைவில்லையா…?
(சொன்னால்தான் காதலா)

என்ற பாட்டை என்ன காரணத்தினால் விரும்பினேன் என்று தெரியாது. எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் :) இப்போதுதான் வந்திருக்கிறது. திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிக்காத பாடல்களுள் அது ஒன்றாயிருக்கிறது.

தொண்ணூறுகளில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நாங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள எங்களது சொந்த ஊரில் இருந்தோம். எங்காவது போராளிகள் வீரச்சாவடைந்தால் சந்தியில் ஒலிபெருக்கி வழியாக சோக இசை அன்று முழுவதும் வழிந்துகொண்டே இருக்கும். அதைக் கேட்கக் கேட்க சாப்பிடவும் மனம்வராது. ஒரு வேலையும் ஓடாது. அந்தக் காலகட்டத்தில் விடுதலை தொடர்பான பாடல்களே எங்களை அதிகமாக ஈர்த்திருந்தன. பாடல்கள் ஒருவகையில் உணர்ச்சிவழி செலுத்துபவை. விடுதலைப் பாடல்களைக் கேட்டு இயக்கத்தில் சேர்ந்தவர்களுள் எனது நண்பர்களில் சிலரும் அடங்குவர்.

காகங்களே… காகங்களே…காட்டிற்குப் போவீங்களா?- காட்டினிலே எங்கள் காவல் தெய்வங்களைக் கண்டு கதைப்பீங்களா?’

என்று ஆரம்பிக்கும், எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் வெளிவந்த பாடல் அன்று குழந்தைகளின் உதடுகளில் உலவித்திரிந்த பாடலாகும்.

வீசும் காற்றே தூது சொல்லு-தமிழ்நாட்டில்
எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள்-அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு
.....................................
இங்கு குயிலினம் பாட மறந்தது
எங்கள் வயல்வெளி ஆடை இழந்தது
தங்கைகளின் பெரும் மங்களம் போனது
சாவு எமக்கொரு வாழ்வென ஆனது’

என்ற வரிகளுடன் வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்த பாடல் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாகியும் நாங்கள் சேதி சொல்லிக்கொண்டுதானிருக்கிறோம். தமிழகத்தின் செவிகளில் அரிதாகத்தான் விழுந்துகொண்டிருக்கிறது.

‘தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
தேசமெங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்-அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்’

என்ற பாடலையும் வாணி ஜெயராம்தான் பாடியிருந்தார். அவரது கணீரென்ற குரலில் மனசுள் இறங்கிய பாடல் அது. மேற்கண்ட மூன்று பாடல்களும் ஒரே இசைப்பேழையில் இடம்பெற்றிருந்தன. அதன் பெயர் நினைவின் தடங்களிலிருந்து அழிந்துபோயிற்று. அறியத் தந்தால் மகிழ்வேன்.

‘அடைக்கலம் தந்த வீடுகளே
போய் வருகின்றோம் நன்றி-நெஞ்சை
அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம்-உங்கள்
அன்புக்குப் புலிகளின் நன்றி’

போன்ற பாடலைக் கேட்டு நெகிழ்ந்துபோய் போராளிகளை அரவணைத்த வீடுகள் அநேகம். ‘எங்கள் பிள்ளைகள், எங்கள் சகோதரர்கள்’ என்ற பிணைப்பைத் தந்ததில் பாடல்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ‘பிள்ளைகள் வருவார்கள்’என்று சோறு குழைத்து வைத்துவிட்டு இருளை வெறித்தபடி இரவிரவாகக் காத்திருக்கும் இரத்த உறவில்லாத அன்னையர்களையும் சகோதரிகளையும் கொண்ட மண் அது.

வன்னியிலிருந்து கவிஞர் புதுவை இரத்தினதுரை-பாடகர் சாந்தன், கவிஞர் காசி ஆனந்தன் - பாடகர் தேனிசை செல்லப்பா என்ற இரண்டு பேர் இசையிணைவில் அற்புதமான பாடல்கள் பிறந்தன. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களால் முருகன்மேல் எழுதப்பட்ட நிந்தாஸ்துதிப் பாடல்களை உள்ளடக்கிய ‘நல்லை முருகன் பாடல்கள்’என்ற இசைத்தட்டு மிகுந்த வரவேற்பை புலம்பெயர்ந்த ஈழத்தவர் மத்தியில் பெற்றிருந்தது.

புலம்பெயர்ந்து குளிரில் கொடுகி சொற்பகால வெயிலில் உலர்ந்து வாழ்ந்திருந்த காலங்களில் விடுதலைப் பாடல்கள் சோறும் தண்ணியுமாயிருந்தன. இசை எங்கள் தாயகத்தை வரிகளாய் காவி வந்தது.

‘மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத்தடையில்லை
நாங்க மட்டும் உலகத்திலே நாடு திரும்ப வழியில்லை’
……………………………...
'ஊர்க்கடிதம் படிக்கையிலே விம்மி நெஞ்சு வெடிக்குது போர்ப்புலிகள் பக்கத்திலே போக மனம் துடிக்குது’

ஊருக்குத் திரும்பிச் செல்லமுடியாத ஆற்றாமையுடன் மேலைத்தேசங்களிலும் அயல்நாடுகளிலும் வாழ்ந்திருந்த இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் கண்ணீர்தான் பாடலாக வழிந்தது. அந்தப் பாடலை கவிஞர் காசி ஆனந்தன் எழுதியிருந்தார். எங்கள் பிரியத்திற்குரிய தேனிசை செல்லப்பா பாடியிருந்தார்.

நூற்றாண்டுகளாய் தொண்டைக்குள் சிக்கிய முள்ளாய் வழிமறித்துக் கிடந்த ஆனையிறவு முகாம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதையடுத்து ‘ஆனையிறவு’என்றொரு இசைப்பேழை வெளியிடப்பட்டது.

'வந்தார்கள் வென்றார்கள் என்றார்கள் அந்நேரம்
தேகமெல்லாம் மின்னல் ஓடியது’

என்ற கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகளில் மெய்சிலிர்த்தோமென்றால், அது சற்றும் மிகையன்று. ‘புல்லரிச்சு… மெய்சிலிர்த்து…’என்றெல்லாம் தேய்ந்த சொற்களை மேலும் தேய்க்க மனதில்லாதபோதிலும் கட்டாயத்தேவை நிமித்தம் பயன்படுத்தவேண்டியிருக்கிறது.

வெளியே பனிகொட்டிக் கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் நாங்கள் ஒரு பாடலைக் கேட்டோம். பத்திரிகையை விடியற்காலையில் பதிப்பகத்திற்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தத்தில் எழுத்துக்களோடு மல்லுக் கட்டிக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பாடல் சூடான கோப்பியைப் போல உள்ளே இறங்கியது. அதைக் கேட்டதும் நாங்கள் ஒரு வரலாற்றுக் கடமையைச் செய்துகொண்டிருப்பதான ‘மிதப்பு’ எங்களுக்கு வந்துவிட்டது. நித்திரையும் களைப்பும் பறந்துபோயிற்று. பிறகு கொஞ்சநாட்களுக்கு அந்தப் பாடல் எங்களோடு பத்திரிகை அலுவலகத்தில் வாழ்ந்தது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. கவிஞர் அறிவுமதி அந்தப் பாடலை எழுதியிருந்ததாக ஞாபகம். (தவறெனில் திருத்தவும்)

நண்பா நண்பா நலந்தானா…
நாடும் வீடும் சுகந்தானா
………………………………
‘எங்கள் வியர்வையும் உங்கள் குருதியும்
இணைந்தால் ஈழம் மலரும்’

என்னை ஈர்த்த பாடல்கள் பற்றி பொதுவாக ஒரு பதிவெழுத வெளிக்கிட்டு ஈழப்பாடல்களுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி நிற்பதை உணரமுடிகிறது. நீரோட்டத்தின் திசையில் பூ ஓடுவதைப்போல… நினைவின் திசையில் எழுத்தும் பயணிக்கிறது போலும்.

நாடிழந்து அன்றேல் நாட்டைப் பிரிந்து அலையும் துயரினாலோ என்னவோ அவ்வாறான பாடல்களில் ஒட்டிக்கொண்டுவிடுகிறேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தைப் பற்றி சில விமர்சனங்கள் இருந்தபோதிலும், அதில் இடம்பெற்ற ‘விடைகொடு எங்கள் நாடே… கடல் வாசல் தெளிக்கும் வீடே’என்று ஆரம்பிக்கும்போதே (கவிஞர் வைரமுத்து எழுதியது) இமையோரம் கண்ணீர் துளிர்த்துவிடுகிறது. கைத்தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டால் அந்தப் பாடலே முதலில் பதிலளிக்கும். அதேபோன்று துயரைக் கிளர்த்தும் பாடலொன்று ‘அரண்’ படத்தில் (கவிஞர் பா.விஜய் எழுதியது) இடம்பெற்றிருக்கிறது. அதையும் பாடியவர் மாணிக்க விநாயகம் என்றே நினைக்கிறேன். கொஞ்சம் கிராமிய மணம் வீசும் கரகரத்த அந்தக் குரல் மனசைக் கரைக்குந் தன்மையது.

அல்லாவே எங்களின் தாய்தேசம்
பூவாசம் பொங்கிய தால் ஏரி
பூவனம் போர்க்களம் ஆனதேனோ…
பனிவிழும் மலைகளில் பலிகள் ஏனோ…

கவிஞர் பா.விஜயின் தடித்தடியான புத்தகங்களைப் பார்த்து (ஒரே சமயத்தில் 10 புத்தகங்கள் வெளியிடப்பட்டன) ‘பயந்து’போயிருந்த நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. இந்தப் பாடலைக் கேட்டபிறகு அவர் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கலாம் என்றொரு நம்பிக்கை வந்திருக்கிறது.

‘எங்கள் காஷ்மீரின் ரோஜாப்பூ விதவைகள் பார்த்து அழத்தானா?’
என்ற வரி சில நண்பர்களால் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டது.
‘காஷ்மீரிய முஸ்லிம் பெண்கள் தலைக்குப் பூ வைத்துக்கொள்வார்களா?’என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது.

இப்போது கவிஞர் தாமரையின் வரிகளில் கரையும் காலமாயிருக்கிறது. கேட்கும்போதே ஒரு பாடல் பிடித்துப்போனதென்று அதன் நதிமூலம் அறியப் புகுந்தால் அதை எழுதியவர் கவிஞர் தாமரையாக இருக்கக் காண்கிறேன். இது என்னளவில் இனிய வியப்பாகத்தான் இருக்கிறது. அதை இரண்டாகப் பெருக்குகிற இன்னொரு விடயம் யாதெனில், அதை பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருப்பதுதான். எனக்கு குரல்களைப் பிரித்தறியத் தெரியாது என்ற வகையில், அதெப்படி தாமரையின் வரிகளும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலும் இணையும் பாடல்கள் பிடித்துப்போகின்றன என்பது இன்றுவரை தீரா வியப்புத்தான்.

பார்த்த முதல் நாளே (வேட்டையாடு விளையாடு)

ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே… (காக்க காக்க)

கண்கள் இரண்டால் (சுப்பிரமணியபுரம்)

வசீகரா என் நெஞ்சினிக்க (மின்னலே)

இவ்வாறாக பட்டியல் நீள்கிறது.
இவை தவிர, எப்போதும் சாத்தியமற்ற ஆதர்ச உலகை விரும்பி சில பாடல்களைக் கேட்பதுமுண்டு. அவற்றுள் ‘மாயாவி’படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் தந்த அழகிய வாழ்வு’என்ற பாடல் மிக மிக நேசத்திற்குரியதாக இருக்கிறது.

பாடல்கள் மாற்றி மாற்றி எறியும் நிலவெளிகளுள் விழுந்து அந்தப் போதையில் கண்கிறங்கிப் பின் எழுந்து தெளியும்போது விரியும் உலகம் பயந்தருவதாகவும் குரூரமானதாகவும் பாதுகாப்பாற்றதாகவும் வஞ்சனை நிறைந்ததாகவும் இருக்கிறது. இசை ஒரு தற்காலிக தப்பித்தல்தான். புத்தகங்கள் மற்றும் எழுத்தும்கூட. பாடல்கள் மீது பிரியம்தானென்றாலும் மலையிலிருந்து வழியும் தண்ணீரின் ஓசைக்கு இணையான ஒரு பாடலை நான் இதுவரை கேட்டதேயில்லை.

12.24.2008

தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பினர் நடத்திய உண்ணாநிலைப் போராட்டம்


இப்போதுதான் ஒரு ‘சூடான’கூட்டத்திற்குப் போய்விட்டு வந்தேன். அதை ‘சூடாக’எழுதாவிட்டால் ஞாபகங்கள் ஆறிப்போய் கிடப்பில் போடவேண்டியதாகிவிடும். ‘சூடான இடுகைகள்’ பற்றிய தமிழ்மணப் பதிவையும் பின்னூட்டங்களையும் வீட்டிற்குள் நுழைந்ததும் படித்ததன் விளைவு ----------- என்ற சொல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

‘தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்’என்று பதிவு போட்டாலும் சூடு சுரணையில்லை. சும்மா இருப்பதென்றால் குற்றவுணர்வாகத்தான் இருக்கிறது. கூட்டங்களுக்குப் போய் ஒன்றும் வெட்டிப் பிடுங்கப் போவதில்லை என்று தெரிந்தாலும் ஆவலாதி விடுவதில்லை. தவிர, எனக்குத் தெரியாத பல விசயங்களைப் பேசக் கேட்பதில் பெருவிருப்பு. ஈழம், தேசபக்தி, எங்கடை சனம் இன்னபிறவற்றையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஈழத்தமிழரைக் கொன்றுகுவிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தை பாவலர் கரிகாலன்,லலித்குமார், பா.ஜோதி நரசிம்மன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள்.

‘இங்கேதான் உண்ணாவிரதம் நடக்கும்’என்று ஆட்டோ சாரதி காட்டிய இடத்தில் ஒருவரும் இல்லை. எதிரில் பார்த்தால் பத்துப் பதினைந்து பேர் மட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் ‘சாமியானா’எனப்படும் பந்தல் போடும் துணி சுருட்டிவைக்கப்பட்டிருந்தது. தெரிந்த ஒரே முகமான எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தை அணுகிக் கேட்டபோது ஏதோ கட்சி ஊர்வலம் போகவிருப்பதாகவும் அது முடிந்ததும் கூட்டம் ஆரம்பமாகுமென்றும் தெரிவித்தார். மெரீனா கடற்கரைச் சாலை முழுவதும் இரட்டை இலையும் வெள்ளை வேட்டிகளும் சொகுசு வாகனங்களும் ‘அம்மா’படமுமாக அமளிதுமளிப்பட்டது நினைவில் வந்தது. இன்றைக்கு எம்.ஜி.ஆர். நினைவுநாளாம். தோழியர் பஞ்சத்தில் தனிக்குரங்காக அமர்ந்திருந்தபோது கவிஞர் நந்தமிழ் நங்கை எங்கிருந்தோ தோன்றித் தோள்தந்தார்.

கொஞ்சநேரத்தில் கவிஞர் செந்தமிழ்மாரியும் மழையும் எங்களுடன் இணைந்துகொண்டார்கள். (மழை அஃறிணையா?) விஸ்தாரமான நடைபாதையோரத்தில் நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு அந்த இரைச்சலில் ஈழத்தமிழருக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தபோது நேரம் பதினொன்றரை மணியாகிவிட்டது. போக்குவரத்து இரைச்சல் என்பது செவிகளைப் பேச்சுக்கு ஒப்புக்கொடுக்கும்வரைதான் நீடித்தது. பிறகு நாங்களெல்லோரும் பேச்சுக்குள் நுழைந்துவிட்டோம். ஐந்தே முக்கால் மணிக்கு உண்ணாநிலைப் போராட்டம் முடிவுக்கு வரும்வரை உள்ளேதான் இருந்தோம்.

எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமையேற்று நடத்துவாரென அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் வரவில்லை. பதிலாக பா.செயப்பிரகாசம் அவர்கள் தலைமையேற்றுப் பேசுகையில், மௌனம் காக்கிற அரசுகளை அசைப்பதாக நமது போராட்டங்கள் அமையவேண்டும் என்று குறிப்பிட்டார். சென்னை-கொழும்பு-டெல்லி என்ற மும்முனைகளிலும் மாற்றங்கள் நிகழவேண்டுமென்றார்.

இந்த ‘என்றார்’ ‘குறிப்பிட்டார்’ ‘சூளுரைத்தார்’ என்று நிறைய இணைப்பு வாக்கியங்கள் எழுதவேண்டியிருப்பதனால் யார் யார் என்ன பேசினார்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். இடையில் தேவையானால் கட்டியக்காரியாக வந்துபோகிறேன்.

ம.தி.மு.க. மாநில செயலாளர் நடராஜன்: இலங்கைத் தமிழர்களை இனவழிப்புச் செய்கிற பேரினவாத அரசாங்கத்துக்கு, 2050கோடி ரூபாவை இந்திய அரசாங்கம் வட்டியில்லாக் கடனாகக் கொடுத்திருக்கிறது. ஆக, எங்களுடைய வரிப்பணத்தைக் கொண்டு எம்மினத்தை அழிப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ராஜீவ் காந்தி கொலையுண்டபோது தி.மு.க.வினர் தாக்கப்பட்டார்கள். அதே தி.மு.க.வினர் இன்றைக்கு காங்கிரஸ்காரர்களோடு கைகோர்த்துக்கொண்டு அவர்களது பேச்சுக்குத் தலையாட்டுவது விசித்திரமாக இருக்கிறது. யார் தடுத்தாலும் தமிழீழம் மலர்ந்தே தீரும்.

பாவலர் தமிழச்சி தங்கபாண்டியன்: பல நாடுகளாலும் தடைசெய்யப்பட்டிருக்கிற கொத்துக்குண்டுகளைப் போட்டு அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள். ஈழப் பிரச்சனையை தனிப்பட்ட ஒரு இனத்தின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், இதனையொரு உலகளாவிய மனிதநேயப் பிரச்சனையாகப் பார்க்கவேண்டும். சகோதரி ஒளவை தன் கவிதையில் கூறியதுபோல இடப்பெயர்வு என்பது மிகப்பெரிய வலி.
“கால்களை உதறினேன்செம்மண்ணும் போயிற்றுஎம் மண்ணும் போயிற்று”
ஈழப்பிரச்சனையில் கலைஞரின் கண்ணீரின் உக்கிரத்தைக் யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அவர் படும் துயரத்தையும் தூக்கமற்ற இரவுகளையும் யாரோ அறிவர்?

பாவலர் த.பழமலய்: பிரச்சனைகள் வந்தபோதெல்லாம் கரையோர மக்கள்தான் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதைக் கண்டும் காணாததுபோல இந்திய அரசு மௌனம் காப்பது ஏன்? இப்போது இலங்கை அரசு செய்வது சண்டையல்ல; சாவு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் சிறுவர்களைச் சண்டையில் ஈடுபடுத்துவதாகக் குற்றஞ்சாட்டியது இலங்கை அரசு. ஆனால், இன்றைக்கு கள நிலவரத்தைப் படித்துப் பார்த்தால் சிங்களச் சிப்பாய்களாக இருந்த சிறுவர்கள் பலியாகியிருக்கிறார்கள். அப்படியானால், யார் சிறுவர்களைச் சண்டையில் ஈடுபடுத்துவது சிங்கள அரசா? விடுதலைப் புலிகளா?
ஈழப்பிரச்சனையில் தமிழகம் என்ற ஒரு மாநிலம் மட்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் போதாது. இதையொரு பொதுப்பிரச்சனையாக எடுத்துக்கொண்டு இந்தியாவின் மாநிலங்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுக்கவேண்டும்.

பேராசிரியர் முத்துமணி: ‘மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை. நாங்க மட்டும் உலகத்திலே நாடு திரும்ப வழியில்லை’
என்ற கவிஞர் காசி ஆனந்தனின் பாடலைக் குறிப்பிட்டு நாடு திரும்ப முடியாதிருக்கும் தமிழர்களின் துயரத்தைப் பற்றிப் பேசினார். ஈழம் தொடர்பான உண்மைகளைத் தமது எழுத்தில் இனங்காட்ட வேண்டிய கடப்பாடு படைப்பாளிகளுக்கு இருக்கிறது என்றார்.

மங்கையர்ச்செல்வன்: (அமைப்பாளர் மீனவர் விடுதலை வேங்கைகள்)
இந்தப் போரை நடத்திக்கொண்டிருப்பது யாரென்று நினைக்கிறீர்கள்? இலங்கை அரசா… இல்லவே இல்லை! ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் ஆயுதங்களை வழங்கி இந்தப் போரை உண்மையில் நடத்திக்கொண்டிருப்பது இந்திய அரசுதான். நியாயப்படி பார்த்தால், “இந்திய அரசே! போரை நிறுத்து”என்றுதான் நாம் குரலுயர்த்தவேண்டும்.

பாவலர் யூமா வாசுகி: கவிதை வாசித்தார்.
தமிழர்களுக்கு விடிவு பிறக்கும் என்பதாக அந்தக் கவிதை முடிந்திருந்தது.

பாவலர் ரவி சுப்பிரமணியன்: ஈழத்தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு உதவுபவர்களை அறியவேண்டும்.

கண்மணி (குணசேகரன்?) கல்தோன்றி மண்தோன்றா காலத்தே… என்று தொடங்கும் ஒரு பாடலை எழுதி இசையோடு பாடினார்.

ஐயம்: கல் தோன்றும் முன்… மண் தோன்றும் முன்… தமிழன் தோன்றியிருந்தானா?

எழுத்தாளர், திரைத்துறை ஆய்வாளர் அஜயன் பாலா: தமிழகத்திலே இருக்கிற அகதி முகாம்களுக்கு அடிப்படை வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை. மிக மோசமான நிலையில் அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். இனிவருங் காலங்களில் அக்குறைகள் களையப்படவேண்டும்.

பா.செயப்பிரகாசம்: திரைத்துறையிலும் இருக்கிற அஜயன் பாலா காட்சி ஊடகம் வழியாக அச்சீர்கேடுகளை வெளிக்கொணரவேண்டும்.

ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி: இங்கே சொல்லும்படியான பேரெழுச்சிகள் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தத் தமிழகமும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் கொந்தளித்துக்கொண்டிருப்பதான ஒரு தோற்றப்பாடு ஈழத்தமிழர்களிடையே இருக்கிறது. அதற்குக் காரணம் போர்ச்சூழலில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதுதான். சிறிய நிகழ்வுகள் கூட பெரிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு அளிப்பதாக எனது நண்பர்கள் வாயிலாக அறிகிறேன். களத்திலிருந்து வருகின்ற செய்திகளின்படி தொடர்ந்து ஐந்து நாட்களாக சிங்கள இராணுவம் தோல்வியைத் தழுவி வருகிறது.
படைப்பாளிகளே! உங்கள் படைப்புகள் வழியாகவும் விடிவைக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

துணுக்கு:ஈழத்தமிழர்கள் தொடர்பான எந்தவொரு கூட்டத்திற்குப் போனாலும் டி.எஸ்.எஸ்.மணி அங்கே சமூகமளித்திருப்பதைக் காணமுடிகிறது. யாருக்கும் தெரியாத சில அரசியல் செய்திகள் அவருக்கு மட்டும் தெரிந்திருக்கும். அதை கிசுகிசு மாதிரியான ஒரு தொனியில் அவர் பேசக் கேட்பது ஒரு இனிய அனுபவம். தொழில்நுட்பவியலாளர்கள் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு உண்ணாநிலை நிகழ்வில், மதுரை பேச்சுவழக்கில் (என் புரிதலின்படி) அவர் ஹிண்டு ராம், சுப்பிரமணியசுவாமி வகையறாக்களை வாங்கு வாங்கென்று வாங்கியது பிடித்திருந்தது. அந்த உற்சாகத்தை இந்த மேடையில்- மன்னிக்கவும் நடைபாதையில் காணவில்லை.

பாவலர்: பட்டி சு.செங்குட்டுவன்
யார் தடுத்தாலும் எனது ஆதரவு ஈழத்தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கு என்றும் உண்டு.

முனைவர் புகழேந்தி:
காங்கிரஸாரின் தமிழின விரோதச் செயற்பாடுகள் சகிக்க முடியாதிருக்கின்றன.
“ராஜீவ் காந்தி கொலையை எத்தனை நாளைக்குச் சொல்லுவாய்?”என்பதை மையமாக வைத்து கவிதையொன்றை வாசித்தார்.

பாவலர் ரவி சுப்பிரமணியன் பாரதியாரின் ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி’என்ற பாடலை மிக உருக்கமான குரலில் பாடினார். யாரோ ஒரு பழைய பாடகரின் சாயல் குரலில் இருந்தது. ஜெயராமனாக இருக்கலாம்.

முனைவர் இரத்தின. புகழேந்தி
‘நாங்களும் நீங்களும் ஒன்றுதான்’என்ற ஒப்பீடுகளோடு கூடிய கவிதையை வாசித்தார்.

பாவலர் இளந்திரையன்:

இந்திரா காந்தியைக் கொன்றது சீக்கியர்கள். அவர்களை மன்னித்து விட்டீர்கள். இன்றைக்கு ஈழத்தமிழர்கள் விடயத்தில் இறையாண்மை பேசும் காங்கிரஸாரே!அன்றைக்கு உங்கள் இறையாண்மை எங்கே போயிற்று? சீக்கியர்களுக்கு ஒரு நீதி; ஈழத்தமிழர்களுக்கு ஒரு நீதியா?

வியப்பு: சின்னப் பெடியன்.. நல்ல பேச்சாற்றல்... அரசியல்வாதியாக ஆகக்கூடும்.

பாவலர் ஆறு. இளங்கோவன் (நீங்க அவரில்லைத்தானே:) )
காங்கிரஸ்காரர்களுக்கு வாக்களிக்கக்கூடாது (பேர் மட்டுந்தான் ஒன்றுபோல)


எழுத்தாளர் சீதையின் மைந்தன்

காங்கிரஸ்காரர்கள் ஏதோ இன்றைக்குத்தான் காட்டிக்கொடுத்ததுபோல சத்தமிடுகிறீர்களே… அவர்கள் அந்த நாளிலிருந்தே இந்த வேலையைத்தான் செய்துவருகிறார்கள். (பலத்த கைதட்டல்) பகத்சிங்கைத் தூக்கிலிட யார் காரணம்? நேதாஜியை மாநாட்டை நடத்தவிடாமல், தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் செய்தது யார்? கடைசியில் அவர் அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டு காணாமலும் போய்விடவில்லையா? காங்கிரஸ்காரர்களின் துரோகம் புதிதல்ல.

பா.ஜோதி நரசிம்மன்: இந்திய மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கவேண்டும்.

லலித்குமார்: பூங்காற்று தனசேகரின் கவிதையை வாசித்தார்.

பாவலர் கரிகாலன்: கலைஞருக்கு ஒரு வேண்டுகோள் - காங்கிரஸாரைத் திருப்திப்படுத்த சீமான் உள்ளிட்டோரைக் கைது செய்திருக்கிறீர்கள். அவர்களை விடுதலை செய்யாவிடில் அது தேர்தலில் தி.மு.க.வினருக்குப் பாதகமான விளைவுகளை அளிக்கும்.

பாவலர் குட்டி ரேவதி: உணர்ச்சிவசப்பட்டுப் பேசி உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. வெறுமனே உணர்ச்சிவசப்படுவதை நிறுத்தி அறிவார்த்தமாக நாம் அடுத்து செய்யக்கூடியது என்ன என்று சிந்திக்கவேண்டும். இதுநாள்வரை இந்தப் பிரச்சனை குறித்து பேசுவதற்கான ஒரு சூழல்கூட இங்கே இருக்கவில்லை. இப்போது அந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். முதலில் நாம் பழம்பெருமை பேசுவதை நிறுத்தி அறிவின் தளத்தில் இயங்க ஆரம்பிக்க வேண்டும்.


சிவாஜிலிங்கம் (இலங்கை.பா.உறுப்பினர் - தமிழ் தேசிய கூட்டமைப்பு)
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலே உருவாகி வருகிற எழுச்சியைக் கட்டுப்படுத்த மறைமுகமாகப் பல வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிகிறேன்.
‘இது சிங்களவர்களுடைய நாடு’என்று சரத் பொன்சேகா சொன்னார். ‘தமிழர்கள் வந்தேறு குடிகள்’என்று சந்திரிகா குமாரதுங்கா சொன்னார். ஆனால், சிங்களவர்கள்தான் வந்தேறு குடிகள் என்கிறது வரலாறு. விஜயன் இலங்கைக்கு வரும்போது ‘விசா’வாங்கிக்கொண்டா வந்தான்? (கைதட்டல்)

பாவலர் லலித்குமார் தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு உருவான கதையைச் சொன்னார்.
மும்பாய் தாக்குதல் நடைபெற்ற அன்றிரவு அதைப்பற்றி குறுஞ்செய்திகள், ஆதங்கம் செறிந்த தொலைபேசி உரையாடல்கள் இரவிரவாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டன. தொலைக்காட்சிகள் தொடர்ச்சியாக அந்தத் தாக்குதலை ஒளிபரப்பிக்கொண்டேயிருந்தன. அப்போது எங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. 2000 மைல்களுக்கப்பால் இருக்கும் மும்பாயைப் பற்றி, வேறு மொழி பேசுகிறவனைப் பற்றி இவ்வளவு கவலைகொள்கிறோமே… 20 கடல் மைல்களுக்கப்பால் இருக்கிற ஈழத்தமிழனைப் பற்றி நாம் கவலைகொள்கிறோமா…? எழுதுவது மட்டுந்தான் படைப்பாளியின் கடமையா? சமூக அக்கறை சார்ந்து இயங்குவதற்கு ஒரு அமைப்பு தேவையாக இருந்தது. அதனடிப்படையிலே உருவானதுதான் தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு.

பாவலர் சி.சுந்தரபாண்டியன்: காங்கிரஸார் தமிழகக் கட்சியினருடனேயே கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்துக்கொண்டு தமிழர்களுக்கெதிராகவே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் அவர்கள் தோற்கவேண்டும்.

அ.பத்மநாதன்: காங்கிரசுக்கு இது தேய்பிறை காலம். தங்கபாலு தமிழனே இல்லை. பிரபாகரன்தான் தமிழர்களின் தனிப்பெருந்தலைவன். எதிர்வரும் 26ஆம் திகதி நடக்கவிருக்கும் தமிழீழ அங்கீகார மாநாடு அதை முரசறையும்.


ஓவியர் வீரசந்தானம்: விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறலிலே ஈடுபடுவதாகச் சிலர் சொல்கிறார்களே…மாவிலாறிலே இரண்டு நாட்களுக்கு முன் இராணுவத்தினரால் ஒரு இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டாள். மாட்டுப்பட்டியொன்றின் மீது குண்டுவீசியதில் 85 மாடுகள் செத்துமடிந்திருக்கின்றன. பரந்தன் வீதியில் இருந்த தேவாலயமொன்றில் இன்றைக்கு குண்டு போடப்பட்டதில் பலர் சிதறிப் பலியாகியிருக்கிறார்கள். கிளிநொச்சியில் 56,500 வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 22,500 போராளிகள் களத்தில் பலியாகியிருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கானோர் அகதிகளாக அலைகிறார்கள். யார் மனித உரிமை மீறலைச் செய்வது என்று தெரியவில்லையா?
இலங்கை இராணுவத்திற்கான புதைகுழி அங்கே தோண்டப்பட்டுவிட்டது.

எழுத்தாளர் இராசேந்திரசோழன் (மண் மொழி சஞ்சிகை ஆசிரியர்) படைப்பாளிகளுக்கென்று தனித்துவமான அடையாளங்கள் இருக்கின்றன. தென்னாபிரிக்கா நிறவெறியை எதிர்ப்போம்; பாலஸ்தீன விடுதலையை ஆதரிப்போம்; வியட்நாமியப் போராட்டத்தை மெச்சுவோம்; ஆனால், ஈழத்தமிழர்களது பிரச்சனை குறித்துப் பேசாதிருப்பது எப்படி?
த.மு.எ.ச. சார்புடைய மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு அதைப் பற்றி விமர்சனங்கள் உண்டு.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்: மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நானும் அதே கேள்வியைக் கேட்கிறேன்… நந்திக்கிராமம் பிரச்சனையைப் பற்றி த.மு.எ.ச. ஏன் கேள்வி எழுப்பவில்லை? ரஷ்யாவின் ‘தாய்’நாவலைப் பற்றிப் பேசுகிறீர்கள். அந்தத் தாயைக் கொண்டாடுகிறீர்கள். தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பிவைக்கும் ஈழத்தாய்மாரைப் பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை? போர் ஆலோசனைக் குழுவிடம் தனது 3 குழந்தைகளையும் ஒப்படைத்துவிட்டு களத்திற்குச் சென்ற ஈழத்துத் தாயை நீங்கள் அறிந்ததில்லையா? ஏன் இந்த மௌனம்? ஒரு ஆக்கிரமிப்பிற்கெதிராகக் குரல் எழுப்பாதவர்கள் ஏகாதிபத்தியத்தோடு உடன்படுவதாகத்தானே பொருள்?

பாவலர் இன்குலாப்: இந்தக் கூட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பமாக அனுமதி வழங்கப்படவில்லை. அதற்குக் காரணம் என்ன? நமது ஜனநாயகம் எதிர்ப்புக் குரலுக்கு இணக்கமாக எப்போதும் இருப்பதில்லை. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்… காங்கிரஸாரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சேர்ந்து ஒரு சாதனையைச் செய்திருக்கிறார்கள். அதாவது, பெரிய பெரிய சிறைச்சாலைகளைக் கட்டியிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் மக்கள் விரோதப் போக்கை முறையாகப் பயின்றிருக்கிறார்கள். 150பேர் மும்பையில் இறந்துபோனார்கள் என்று கூக்குரலிடுகிறவர்கள் - ஈழத்தமிழர்கள் கூட வேண்டாம் - தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாமா? ஆக, மக்கள் அரசுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிற இந்திய அரசு, தன் மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறதா?

செத்துக்கொண்டிருப்பவன் தமிழன் என்பதற்காக மட்டும் அவனை ஆதரிக்கவில்லை; அவன் ஒரு மனிதன் என்பதற்காகவுந்தான் ஆதரிக்கிறோம். இனவழிப்புப் போர் சிங்களவன் மீது நடத்தப்பட்டால் சிங்களவன் பக்கம் நின்றுதான் பேசியிருப்போம். அதைக் கண்டித்திருப்போம்.

இப்படியாக பேசினார்கள்.. பேசினார்கள்… பேசினார்கள். ஆனால், காலையிலிருந்து மாலை ஐந்தே முக்கால் மணிவரை அங்கிருந்தும்கூட களைப்புத் தோன்றவில்லை. ஏனென்றால், செவிக்குணவு ஈயப்பட்டுக்கொண்டிருந்தது. வாகனங்கள் போக்குவரத்து ஓகோகோவென்று இரைச்சலாக இருக்கிறதே என்று ஆரம்பத்தில் தோன்றியது. பிறகு சத்தம் ஒடுங்கிவிட்டது. பேச்சு மட்டுந்தான் செவிகளில் இறங்கியது.

அரசியலுக்கும் ஈழத்தமிழருக்கும் பெண்களுக்கும் அப்படியென்ன ஒவ்வாமையோ… கவிஞர்கள் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் மட்டுந்தான் அதிகமான பெண்கள் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் குட்டி ரேவதி, நந்தமிழ் நங்கை, இன்பா சுப்பிரமணியம், தமிழ்நதியாகிய நான் ஆகியோர்தான் கலந்துகொண்டோம்.

'சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து’என்று பதாகையில் போடப்பட்டிருந்தாலும் அதிகம் கண்டிக்கப்பட்டதென்னவோ காங்கிரஸார்தான். இந்த உண்ணாநிலைப் போராட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் கடைசிவரை கூட்டம் கலையாதிருந்ததுதான். இரண்டு மூன்று பேரைத் தவிர ஏனையோர் அமர்ந்தது அமர்ந்தபடி பேச்சில் இறங்கி அன்றேல் கிறங்கிக் கிடந்தார்கள். தவிர, பிரபாகரன், புலிகள், தமிழீழம், தாயகம், தேசியத் தலைவர் என்ற பதங்களெல்லாம் தாராளமாகப் பிரயோகிக்கப்பட்டன. கண்ணை உருட்டி விழிப்பது, காதருகில் கிசுகிசுப்பது இன்னபிற இல்லாதிருந்தது உவப்பளித்தது.

ஈழப்பிரச்சனை பற்றிய அறிவும் தெளிவும் பொதுமக்களுக்கு வருமோ இல்லையோ நானறியேன். ஆனால், எப்போதும் குண்டாந்தடியும் கையுமாக நிற்கும் பொலிஸ்காரர்களுக்கு வந்துவிடுமென்ற நம்பிக்கை இருக்கிறது.

சீமான் சேகுவேராவின் ‘ரீ சேர்ட்’ஐப் போட்டுக்கொண்டு பேசி சிறைப்பட்டாலும் பட்டார். அதுவொரு ‘மாதிரி’ஆகிவிட்டது. இந்தக் கூட்டத்திலும் பலர் சேகுவேராவை மார்பிலும் முதுகிலும் தாங்கித் திரிந்தார்கள்.

எப்போதும்போலதான்… நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், பெருமிதங்களைக் கூட்டங்கள் தரத் தவறுவதில்லை. தெருவில் இறங்கி வீடு நோக்கிப் போகும்போது ஜி.நாகராஜனின் நாவல் தலைப்புப் போல (நாளை மற்றுமொரு நாளே) ‘இதுவும் இன்னுமோர் கூட்டம்’என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை. என்ன செய்வது பெயரிலி…? ‘தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்’சும்மா இருக்கவும் முடிவதில்லை.:)











12.21.2008

சீமான் கைதும் இறை ‘ஆண்மை’யும்


சீமான்,கொளத்தூர் மணி,பெ.மணியரசனைக் கைது செய்துவிட்டார்கள். அவர்கள் செய்தது இமாலயத் தவறு. அவர்கள் வார்த்தைகள் கண்காணிக்கப்படும் ஒரு நாட்டில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டார்கள். மறதி மன்னிக்கப்பட முடியாதது. இப்போது உங்களுக்கு சிதைந்துபோன ரஷ்யாவும் அதன் உளவுப்படையும் நினைவில் வந்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. முகத்தை மூடாத பெண்களுக்குத் தண்டனை வழங்கும் தலிபான்கள் நினைவில் வருவதற்கும் நான் பொறுப்பாக முடியாது. தஸ்லிமா நஸ்ருதீன், சல்மான் ருஷ்டி போன்றோரின் அலைச்சல்களும் உளைச்சல்களையும் ஏன் நினைத்துக்கொள்கிறீர்கள்? கருத்துரிமைப் புண்ணாக்கு கட்டாயம் வேண்டுமா என்ன? சாப்பிடுவதற்கும் அதிகபட்சமாக எச்சிலை உமிழ்வதற்கும் மட்டுந்தான் வாயைத் திறந்திருக்கவேண்டும். ஈழத்தமிழருக்காக உணர்ச்சிவசப்பட்டோ உருப்படியாகவோ பேசி உள்ளே போய் உட்கார்ந்திருக்க வேண்டிய தேவையென்ன?

‘இத்துடன் சீமான் பெரியாளாகி விடுவார்’என்றார் ஒரு நண்பர். அடுத்தவன் வீட்டில் இழவு விழுந்தால் எட்டாம் நாள் இறைச்சிக் கறிச்சோறு என்றில்லாமல், பதிலளிக்க முடியாத கேள்விகளை அதிகார மையங்களைப் பார்த்துக் கேட்கும் சீமானுக்கு இதுவும் வேண்டும்: இன்னமும் வேண்டும். ‘இவர் தன் வேலையைப் பார்க்காமல் பிரபாகரன், வெங்காயம் பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்’என்றார் இன்னொருவர். உண்மைதானே… காலையில் எழுந்து காப்பி குடித்து கக்கூசுக்குப் போய் அதன்பிறகு வேலைக்குப் போய் களைத்துத் திரும்பி தொலைக்காட்சியில் ‘குலுக்கல்’களைப் பார்த்து மனைவியையோ காதலியையோ கூடிவிட்டுத் தூங்காமல், ‘ஐயோ.. அண்டை நாட்டில் சகோதரனைச் சாகடிக்கிறார்களே… கேட்பாரிலையா…?’என்று கைகளை உயர்த்திக் கேட்பது மன்னிக்க முடியாத குற்றந்தான்! பெரியவர்கள், விடயமறிந்தவர்கள் அவரைத் தயைகூர்ந்து மன்னித்துவிடுங்கள்.

‘புனிதமான’ அரசியல் தலைவர்களைப் பற்றித் தரக்குறைவாக சீமானும் கொளத்தூர் மணியும் பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசுகள் மக்களின் வரிப்பணத்தில் குண்டுகளை வாங்கி அண்டை அயல்களுக்குக் கொடுத்தால் என்ன… அதைத் தனது மக்களின் தலைகள் மீதே போட்டு சிதறுதேங்காய் ஆக்கினாலென்ன? அரசாங்கங்கள் எல்லாம் சம்பந்தக்குடிகள் என்பதை மறந்தது தமிழ்த்தேசியம் பேசுபவர்களின் குற்றமல்லவா? வியட்நாமில் எரியும் நெருப்பிலிருந்து அம்மணமாக ஒரு குழந்தையை அலறியடித்துக்கொண்டு ஓடிவரச்செய்தது தீவிரவாதிகளன்றோ? ஈராக்கைப் பிணக்காடாக்கியது, பங்காளாதேஷில் பல ஆயிரக்கணக்கான பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது, யாழ்ப்பாணத்தின் பிரம்படி ஒழுங்கையில் உயிரோடு மக்கள் மீது கவசவாகனங்களை ஏற்றி இரத்தமும் சதையும் தெறிக்கத் தெறிக்கக் கொன்றது, உகண்டாவில் மனிதக்கறி சாப்பிட்டதெல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள்? அனைத்து அரசாங்கங்களும் காவியுடை உடுத்திக்கொண்டு கொல்லாமை விரதத்துடன் இருப்பதை நீங்கள் அறியீர்களா? கறுப்பாடையும் கழுத்து மாலையுமாக ஐயப்ப பக்தர்களான அரசாங்கங்கள் சாலைகளில் நடந்துபோவதை நீங்கள் கண்டதில்லையா? பிள்ளைப் பூச்சிகளான, அஹிம்சாவாதிகளான தலைவர்களைப் பற்றி சீமானும் ஏனைய தலைவர்களும் இப்படி அபாண்டமாகப் பேசலாமா?

இறையாண்மை என்பது, பிணக்குவியலின் மேல் குந்தியிருந்தபடி சிக்கன் பிரியாணியும் 65வும் சாப்பிடுவது என்ற கருத்துப்பட நீங்கள் பேசியிருக்கக்கூடாது. சொந்தக்காரப் பிணங்களுக்கு மட்டும் ஒப்பாரி வைப்பது அதன் வரைவிலக்கணங்களுள் ஒன்றெனச் சுட்டிக்காட்டியிருக்கக் கூடாது. ‘ஹிண்டு அன் கோ’வினரின் தினப்படிச் சாப்பாட்டில் விழும் உப்பெனச் சாடியிருக்கக்கூடாது. காங்கிரஸ்காரர்களின் சொல்லாயுதமென சொல்லியிருக்கக்கூடாது. குற்றம் குற்றமே! (இங்கே ‘திருவிளையாடல்’நினைவுக்கு வரவேண்டும்.)

சட்டங்களும் சித்தாந்தங்களும் மக்களை மந்தைகளாக்கி மேய்க்கின்றன என்று நீங்கள் நினைப்பது தவறு.சீமான்! நீங்கள் சினிமாவைப் பற்றிப் பேசுங்கள். ‘தம்பி’எடுத்ததுபோல ‘தங்கச்சி’என்றொரு படம் எடுங்கள். பெரியாரைக் குறித்துப் பேசுங்கள். ‘இறையாண்மை எங்கே இருக்கிறது?’என்று கையை உயர்த்தி காற்றைத் துளாவி உதடு துடிக்கத் தேடாதீர்கள். அது பரம்பொருள். கறுப்புச் சட்டைக்காரர்களின் கைகளுக்கு அகப்படாதது. கண்ணுக்குப் புலப்படாதது.

அரசாங்கங்களுக்கு முகங்கள் இல்லை. கண்ணாடி பார்ப்பதுமில்லை. இல்லையெனில் பயங்கரவாதிகளென தங்களைத் தாங்களே தூக்கிலிடவேண்டியதாகிவிடும்.
இந்த ‘ஜனநாயகம்’என்ற செத்துப் புழுத்த வார்த்தையை என்ன செய்வதென்று தெரியவில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை இதையெல்லாம் பொட்டலம் கட்டமுடிந்தால் கட்டி ஒவ்வொருநாளும் உரத்த குரலில் கூவியபடி வரும் குப்பை வண்டிக்காரனிடம் போட்டுவிடலாம்.

ஆக மொத்தத்தில் நம்மால் செய்யக்கூடியது ஒன்றுதான்… ‘மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்’ என்ற பிரயோகத்தை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நகைச்சுவைத் துணுக்காக அறிவிக்கும்படி பரிந்துரைக்கவோ இரந்துகேட்கவோ செய்யலாம்.

மண்டையைக் குடையும் கொசுறுக் கேள்வி: அடுத்தவன் மனைவியை, தங்கையை, மகளை துடிக்கப் பதைக்க வன்கலவி செய்வதும் கொல்வதும் இறை ‘ஆண்மை’யின் கூறுகளில் ஒன்றா நண்பர்களே?

12.14.2008

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தகவல் தொழில்நுட்பவியலாளர்களின் உண்ணாநிலைப் போராட்டம்


ஈழத்தமிழர்கள் துயர்ப்பட மட்டுமே பிறந்தவர்களன்று; பெருமிதப்படவும் தகுந்தவர்கள் என்ற எண்ணத்தை யாராவது இருந்திருந்துவிட்டு விசிறிச் செல்வதுண்டு. நேற்று சனிக்கிழமை கோயம்பேட்டில் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் மனம் நெகிழ்வும் நிறைவும் அடைந்திருக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால சென்னை வாசத்தில் கலந்துகொண்ட எந்தவொரு நிகழ்வும் இத்தகு மனவெழுச்சியைத் தந்ததில்லை.

“துப்பாக்கிகளுக்கு இதயம் இல்லை... உங்களுக்கு?’ – ‘போரை நிறுத்து’ஆகிய வாசகங்களைக் கொண்ட ‘ரீ சேர்ட்’டுகளை அணிந்த இளைஞர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த அரங்கினுள் நுழைந்தபோது நீண்ட சொற்பொழிவுகளில் செவிகள் களைத்துப்போய்விடும்… விரைவில் எழுந்து வேறு வேலை பார்க்கச் சென்றுவிடலாமென்றே நினைத்திருந்தேன். ஆனால், பேச்சு என்பது எப்போதும் பேச்சு அல்ல… பேசுகிற விதத்தில், சென்றடையும் இடத்தில் பேசினால் அதுவொரு விளக்கை ஏற்றிவிடும் என்பதைக் கண்கூடாகக் கண்டேன். வார்த்தைப் பொறியொன்றால் எத்தனை சுடர்களை ஏற்றமுடியும் என்பதை அனுபவபூர்வமாக உணரமுடிந்தது. அத்தனை இளைஞர்கள் கூடியிருந்த அரங்கில் தேவையற்ற பேச்சு இல்லை; கைத்தொலைபேசிகள் விதவிதமாகப் பாடவில்லை; அவசியமற்று எழுந்து ஓடித் திரிந்து யாரும் தங்கள் இருப்பைத் துருத்திக் காண்பிக்கவுமில்லை. கவனச்சிதறலற்று, கூடியிருக்கும் நோக்கத்தில் குவிந்திருந்தன எல்லா மனங்களும்.

எங்களில் அநேகர் பொதுப்புத்தி சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறோமென்பதை அங்கே பேசியவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அதாவது, ‘தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்கள் கட்டுப்பாடற்றவர்கள்; வேலை நேரம் போக களியாட்டங்களில் திளைக்கிறவர்கள்; பணத்தைத் துரத்துவதில் வாழ்க்கையை இழக்கிறவர்கள் என்றெல்லாம் நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். இத்தகைய சமூகப் பொறுப்புணர்வு உங்களிடம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’என்ற வியப்பை அங்கு உரையாற்றிய அநேகர் வெளிப்படுத்தினார்கள்.

பழ.நெடுமாறன், எழுத்தாளர் ராசேந்திரசோழன், சி.மகேந்திரன் (கம்யூனிஸ்ட் கட்சி) பேராசிரியர் கல்யாணி, சுப.வீரபாண்டியன், விடுதலை ராசேந்திரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், வைகோ, இயக்குநர் சீமான், தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, ஓவியா, கவிஞர் அறிவுமதி, வழக்கறிஞர் அருள்மொழி, ஜெகத் கஸ்பர்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்கள்.

வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள், பேரினவாதத்தின் வெறியாட்டங்கள், அதற்கு ஒத்தூதும் ஊதுகுழல்கள், தமிழர்களின் அவலநிலை, அதன் மீதான பாராமுகங்கள், போராட்டத்தின் நியாயம், அதனை இழிவுபடுத்துவோரின் ஈனச் சுயநலம் என பல்வேறுபட்ட விடயங்கள் அங்கு பேசப்பட்டன.

கேட்டுக்கொண்டிருந்தவர்களின் முகங்களைத் திரும்பிப் பார்த்தேன். ஒவ்வொருவரும் சொற்களைத் துளி சிந்திவிடாமல் அருந்திக்கொண்டிருந்தார்கள். அது பேசியவர்களின் ஆற்றலா… மழைக்காக ஏங்கிக் கிடந்த மண்ணின் உறிஞ்சலா...? பேச்சுக்கேற்ப அந்த முகங்கள் மாறியதைப் பார்க்கும்போதில் ‘இந்தக் கூட்டத்தில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்களோ’என்ற நினைவு எழுந்தது. அண்மையில்தான் மு.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’என்ற நூலை வாசிக்கப் பொழுது வாய்த்தது. அன்றைக்கு மாணவர் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் அநேகர் மகத்தான அரசியலாளர்களாக உருவானதுபோல, நேற்றைய கூட்டமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே தோன்றியது. அவர்கள் கண்களைப் பார்க்க நேர்ந்திருப்பின் நான் மிகைப்படுத்தவில்லை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

பழ. நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலியும் ‘கீற்று’இணையத்தள அமைப்பாளர் ரமேசும் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து வழங்கிக்கொண்டிருந்தார்கள். சக பதிவரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவருமான லஷ்மணராஜா அங்கு நடைபெற்ற நிகழ்வுகளைத் தனது புகைப்படக்கருவியினுள் பதிவுசெய்துகொண்டிருந்தார். என்னாரெஸ் பிரின்ஸ் உடனிருந்தார். எத்தனையோ நாள் உழைப்பின் விளைவு அற்புதமான ஒழுங்கமைப்பில் தெரிந்தது.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்கள் கலந்துகொண்டதானது உறுத்தலாக இருந்தது. பொது நிகழ்வுகளில் எப்போதும் பெண்களின் எண்ணிக்கை பாயாசத்தில் முந்திரி மாதிரி அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருப்பது (புதுசாக ஏதாவது யோசிக்க வேண்டும்) எப்போதும் அயர்ச்சியூட்டுவதாகும். அதற்கான நதிமூலம் தேடினால், ‘சமூகம், ‘அதன் கட்டமைப்பு’ 'குடும்பம்' என்ற சலிப்பூட்டும் பழக்கப்பட்ட பதில்களையே வந்தடைய வேண்டியதாய் இருக்கும்.


ஈழப்போராட்டத்தை ஒரு கருவியாகக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன். ஊடகக்காரர்களைக் கண்டால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் தலையைக் காட்டுபவர்களைப் பார்த்து வெறுத்திருந்தேன். ஒரு புல்லையும் தூக்கிப் போடாமல் சொல்லையுண்டு செழிப்பவர்களைக் காணநேர்ந்திருக்கிறது. இந்நிகழ்வு நெஞ்சார்ந்த நிறைவு. உணர்வாளர்களின் ஒன்றுகூடல். தகவல் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு ஈழத்தின் வரலாற்றுத் தகவல்களை வழங்கிய காலப்பதிவு. வார்த்தைகள், கூடியிருந்த எல்லா மனங்களுக்கும் விளக்கினை எடுத்துச்சென்றன.

அடுத்த தலைமுறையிலும் பற்றிக்கொண்ட பொறி பற்றிப் படரும் என்ற நம்பிக்கையுடன் எழுந்து வெளியில் வரும்போது, அந்த நாளின் நிறைவு தந்த நெகிழ்வில் பாடல் வரிகள் உள்ளே ஓடுகின்றன.

‘குறை ஒன்றும் இல்லை
மறைமூர்த்தி கண்ணா…’

நாம் முணுமுணுக்கும் பாடலாவது அவ்விதம் இருந்துவிட்டுப் போகட்டுமே...!

பிற்குறிப்பு: உண்ணாநிலைப் போராட்டம் இன்றைக்கும் தொடர்கிறது. நாளையும் தொடரும். மாணவர்கள் சோர்ந்துபோய் படுத்திருப்பதாக நண்பர் ஒருவர் கூறினார். நேரம் அனுமதித்தால் இன்றைக்கும் கலந்துகொள்ள வேண்டும்.

11.29.2008

புயலின் நாள்


மழை.. மழை... மழையன்றி வேறில்லை. கால்களில் எப்போதும் ஈர நசநசப்பு. இரண்டு மணி நேர மின்வெட்டே நாங்கள் மின்சாரத்தால்தான் இயக்கப்படுகின்றவர்களோ என்று நினைக்கத் தூண்டியிருக்க, முழுஅளவில் இருள் மூடினால் என்னதான் செய்வது? இணையத்தொடர்பு இல்லையென்றால் எத்தொடர்பும் இல்லையோ என்று ஒவ்வொரு நிமிடமும் நினைக்கும்படியாயிற்று. 26ஆம் திகதி எழுதிய பதிவை இன்று இடும் காரணம் இதுதான். ஆனால், சென்னையில் மழை எத்தனை அழகாயிருந்தது என்று எழுதும்போது ஆதவன் தீட்சண்யாவின் கவிதை ஒன்று நினைவில் வருகிறது. தலைக்கு மேல் கூரையுள்ளவர்கள் யன்னல் வழியாக மழை பார்த்துவிட்டு கவிதை எழுதுவதைப் பற்றி அந்தக் கவிதையில் சொல்லியிருப்பார். யார் எப்படிக் கோபித்துக்கொண்டாலும் மழையைப் பற்றி எழுதும் தாகம் மட்டும் தீராததாகவே இருக்கும்போல...


வேம்புகளில் புகுந்த காற்றுப்பேய்
எந்தச் சிமிழிலும் அடைபட மறுத்து
தலைசுழற்றியாடுகிறது.
அப்போதுதான் துரோகம் செவியுற்ற பெண்ணென
மூசியறையும் கடலிரைச்சல்
வீடுவரை வருகிறது.
கனத்த மழைத்திரை
சகலமானவற்றிலும் கவிந்து மூட
தெருக்களைத் தெப்பக் குளங்களாக்கி
கரைகடந்து போகிறாளொருத்தி.

மின்னறுந்த இவ்விரவில்
அலைக்கழியும் மெழுகுவர்த்தியின் துணையோடு
‘இன்றுதான் நீ பிறந்தாய்’என
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எறிகணைகளால் கிழிபடும் அந்நிலத்தில்
இன்று
நீயுறையும் பேறுற்ற
பெரும் அடவி எதுவோ?

11.02.2008

நிலம் மற்றுமோர் நிலா


இருபுறமும் வேகமாகப் பின்னகரும் காடுகள், கண்ணிவெடி குறித்த அபாய அறிவிப்புப் பலகைகள், நிர்விசாரமாக மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள், சோதனைச்சாவடிகள்… இவை தாண்டி வவுனியாவிலிருந்து ‘ஏ ஒன்பது’ வீதியில் விரைந்த பயணமானது, விவரிக்கவியலாத கனவொன்றினை ஒத்திருந்தது. காரினுள் ஒலித்த பாடல்கள் என்னை வேறு வேறு காலங்களுள் மாற்றி மாற்றி எறிந்துகொண்டிருந்தன. ஒரு பாடலில் ஏறி ஆண்டுகளைக் கடந்து செல்வதென்பது நினைக்குந்தோறும் விந்தையானதும் உண்மையானதுமாயிருந்தது. உணர்ச்சிமிகுதியால் எக்கணமும் விழி தளும்பிச் சிந்திவிடுவேன் என அஞ்சினேன்.

முன்னொருபோதில், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பேருந்தொன்று சில மாதங்களுக்கொரு தடவை இரணைமடுச் சந்தியில் என்னை உதிர்த்துவிட்டுப் போகும். திருவையாறு நோக்கிச் செல்லும் பாதையில் மெலிந்ததோர் சிறுபெண்ணாய் களைப்போடு நடந்துபோவேன். அந்தப் பாதையும் எனது சுயசித்திரமும் என்ன காரணத்தினாலோ மனதில் அழியாதிருந்தன. அப்போது திருநெல்வேலிப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் வாடகைக்கு அறையெடுத்து நாங்கள் நால்வர் தங்கியிருந்தோம். விடுமுறை நாட்களில் எல்லோரையும் முந்திக்கொண்டு ஆரவாரமாக நான் கிளிநொச்சிக்குக் கிளம்பிப் போவதற்கு அப்பா-அம்மாவைத் தவிர்ந்த வேறு சில காரணங்களும் இருந்தன. வயல்வெளி நடுவில் அமைந்த குடிசையின் முன் குருவிகள் தத்தி நடை பழகும். எப்போதும் பச்சைச் சாண வாசனையடிக்கும் வாசலிலே ‘எனக்கு இதைவிட்டால் வேறு வேலையில்லை’ என்ற பாவனையில் மயிலொன்று வந்து ஆடிவிட்டு தானியம் கொறித்துப் போகும். அதன் கழுத்து நொடிப்பும் தோகை விசிறலும் வித்துவக்கர்வமும் கைதேர்ந்த நாட்டியக்காரிக்குத் துளியும் குறைந்தனவல்ல. காற்றடிக்க வயல் சிலிர்த்தடங்கும் மாலைப்பொழுதுகள், என்றோ எங்கோ கடல்கடந்துபோனவனின் ஞாபகக்கணப்பை ஊதித் துன்பம் கிளர்த்திய நாட்கள் அவை. இவையெல்லாவற்றையும் விட மேலதிக காரணமாய் நிலாவும் தோழிகளும் இருந்தார்கள்.

கிழக்கில் ஏதோவொரு கிராமத்தில் படித்துக்கொண்டிருந்த நிலா வடபுலத்தை வந்தடைந்த காரணம் அநேக தமிழர்களுக்கு நிகழ்ந்ததும் அவர்களுக்குப் பழகிப்போனதுமான கதைதான். சம்பவங்கள் வேறுபட்டாலும் வலி ஒன்றாயிருந்தது. எப்படியோ அவள் எங்கள் வீட்டோடு ஒட்டிக்கொண்டாள். நிலா நல்ல உயரம். பலசாலியும்கூட. துப்பாக்கியைத் தோளில் கொழுவிக்கொண்டு சீருடையின் கால்களை மடித்துவிட்டபடி வயல் வரப்பிலேறி நடக்கும்போது நான் கூட கூட ஓட வேண்டியிருக்கும். என்னைவிட இரண்டே வயது இளையவள். என்னை ‘நித்திலா’என்றே அழைத்தாள். ‘அம்மா…!’என்றழைத்தபடி அந்தக் குடிசையினுள் தலையைத் தாழ்த்திக்கொண்டு அவள் நுழையும்போது எனக்குள் ஒரு பரவச அலையடிக்கும். அவள் என்னால் நிகழ்த்த முடியாததையெல்லாம் நிகழ்த்திக் காட்டுபவளாயிருந்தாள். அவளை நான் வியப்பின் கண்களால் தொடர்ந்தவாறிருந்தேன்.

“அம்மா! நீங்கள் வைக்கிற கத்தரிக்காய்க் குழம்பு நல்லாயிருக்கு” என்று அவர்களில் யாராவது சொல்வார்கள். அம்மாவின் கண்கள் கலங்கும். தனது சமையல் நன்றாயிருப்பதாக யாராவது சொல்லக் கேட்பதுதான் அம்மாவின் உச்சபட்ச சந்தோசமோ என்று நினைக்கும்படியாக நெகிழ்ந்துபோவார்.

“யார் பெத்த பிள்ளையளோ…”என்ற வார்த்தைகளைத் தொடரும் பெருமூச்சை பலதடவைகள் நான் அவதானித்திருக்கிறேன்.

அந்தப் பெண் போராளிகளை அவர்களறியாதபடி நான் கவனிப்பதுண்டு. யாழினியையும் அமுதாவையும் தனித்துக் காணவியலாது. அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும் அழுதழுது சமாதானமாவதும் வழக்கமாயிருந்தது. ஆழியாளுக்கு மோட்டார் சைக்கிளில் ஏறி காற்றினைக் கிழித்துப் பறப்பதில் ஆனந்தம். அதற்காக பொறுப்பாளரிடம் அடிக்கடி தண்டனையும் பெறுவாள். ஆனால் மறுபடி மோட்டார் சைக்கிளில் ஏறியமரும் வரைதான் அது ஞாபகத்திலிருக்கும். அமுதா நன்றாகச் சாப்பிடுவாள். அவள் வயிற்றுக்குள் பூதம் இருப்பதாக தோழிகளிடையே ஒரு பரிகாசக் கதை உலவியது. நிலமகள் நன்றாகக் கவிதை எழுதுவாள். அதிகம் பேசமாட்டாள். மௌனமும் சிரிப்பும்தான் பெரும்பாலும் அவளது மொழி. அடித்துப் பிடித்து அவர்கள் பழகுவதும் சிரிப்பதும் இழப்புச் செய்திகள் வரும்போது விக்கித்து துக்கித்துக் கிடப்பதும்.. பின் தெளிவதும்… அவர்களாக நான் இருக்கமுடியாமற் போனதில் உள்ளுக்குள் எனக்கு வருத்தந்தான்.

“வீட்டை விட்டிட்டு இருக்கிறது கஷ்டமா இல்லையா நிலா”

அவள் சிரிப்பாள். பார்வையைத் தொலைவனுப்பி சில கணங்கள் மௌனமாக இருப்பாள். கண்களில் நீர் மெலிதாகத் திரையிடுவதாகத் தோன்றுவது என் கற்பனையாகவும் இருக்கலாம். தேவதைகள் அழக்கூடுமா என்ன…?

“எனக்கு நீங்கள் எல்லாரும் இல்லையா…?”

“எண்டாலும்….”

அந்நாட்களில் நான் உடலும் மனமும் நொய்மையான நோஞ்சானாயிருந்தேன். அவர்கள் இலாவகமாகச் சுமந்துசெல்லும் துப்பாக்கியை ஐந்து நிமிடங்களுக்கு மேல் என்னால் தூக்கி வைத்திருக்கவியலாது. நிலாவிடம் கேட்டால் ‘அதெல்லாம் பயிற்சியும் பழக்கமும்’என்பாள்.

ஒரு தடவை விடுமுறையைக் கழிக்கவும்-களிக்கவும் வீடு சென்றிருந்தபோது அவர்களில் எவருமே வரவில்லை. அம்மாவின் வழக்கமான பாராயணங்கள், முறைப்பாடுகள் எதனையும் காணோம். அந்தக் குடிசையினுள் வழக்கத்தை விட இருள் அடர்ந்திருந்தது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டையாக இருக்கலாம் என்று நினைத்தேன். எதிர்பார்ப்பு மங்கித்தேய்ந்த இரவில் அரிக்கன் லாம்பின் திரியை இழுத்துத் தணித்துவிட்டுப் படுத்திருந்தேன். காட்டுக்குள்ளிருந்து மயிலொன்று நெஞ்சைக் கிழிக்குமாப்போல கூப்பிடுகிறது.
மெல்லிய விசும்பல் ஒலி… அம்மா அழுதுகொண்டிருந்தா.

“அம்மா! ஏன் அழுகிறீங்கள்?”

“அந்தப் பிள்ளை நல்லாச் சாப்பிடும். கேட்டுக் கேட்டுச் சாப்பிடும்…மீன்குழம்பெண்டால் சரியான விருப்பம் அதுக்கு”விசும்பல் பெருகி அழுகையாக வெடித்தது.

“சண்டைக்கெண்டு மன்னாருக்குப் போன இடத்திலை வயித்திலையும் நெஞ்சிலையும் குண்டு பாய்ஞ்சு….. உடம்பை நேரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு போய்ட்டினமாம்… அங்கைதான் தாய்தேப்பன் இருக்கினம்”

“அமுதா…!” அதிர்ந்தது வயிறு. காற்று கூரையை உசுப்பி உசுப்பி ஊளையிட்டது. எழுந்து வெளியில் வந்தேன். அன்றைக்கும் இரவு அழகாகத்தானிருந்தது. ஐயோ…!இந்த மயில் ஏனிப்படி உருகிக் கரைகிறது…!

“யாழினி…! நீ எவ்வளவு அழுதிருப்பாய்? தனித்துத் திரியும் அன்றில் பறவையானாயடி…!”

“ஏய்!அமுதான்ரை வயித்துக்குள்ளை பூதம் இருக்குமோ…”

அதைக் கேட்டு அவள் சிரிப்பாள். நெருக்கி நெருக்கி அமைந்த பற்கள் தெரிய அழகிய வெள்ளந்தியான சிரிப்பு அது! அநேக கறுப்பு நிறமானவர்களுக்கு எப்படியோ அழகிய பற்கள் வாய்த்துவிடுகின்றன என்ற என் நினைப்பு இதுவரை பொய்த்ததில்லை.

நான்கைந்து நாட்கள் கழித்து, நன்றாக இருட்டியபிறகு நிலா மட்டும் சோர்ந்துபோய் வந்தாள். மற்றவர்கள் எங்கேயென்றதற்கு ‘யாழ்ப்பாணத்தில்’ என்றாள். அமுதாவின் உடலை விதைகுழியில் இறக்கியபோது யாழினி மயங்கிவிழுந்துவிட்டதைச் சொன்னாள். சாப்பிடும்போது உள்ளிருந்து ஒரு கேவல் வெடித்தது. பாதியில் எழுந்துவிட்டாள். எனக்கும் அழுகை வந்தது. அன்றைக்கு வயல் வரப்பில் அமர்ந்து ‘என்னை நினைத்து யாரும் கலங்கக்கூடாது’என்ற பாடலை உரத்துப் பாடினாள். அவள் பாடிய விதம் முகம் தெரியாதவர்களிடம் சூளுரைப்பது மாதிரியிருந்தது. குரலைக் கத்தியாக்கி சண்டை போடுகிற மாதிரியுமிருந்தது. இந்த நேரம் ஏனிவள் பாடுகிறாள் என்று உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது. அந்தக் குரலில் நெஞ்சு பதைத்தது.

“இனி இஞ்சை வரக்கிடைக்குதோ தெரியாது நித்திலா”

“ஏன்…?”

“எங்கடை குறூப்பை மன்னாரிலை போய் நிக்கச் சொல்லியிருக்கு”

நெருங்கி என்னை இறுக அணைத்தாள். அந்தக் கரடுமுரடான ஆடைகளில் புல் வாசனை வீசியது. அப்பா வயலைச் சுற்றிவரப் போயிருந்தார். அம்மாவைக் கட்டியணைத்து விடைபெற்றுக் கிளம்பிவிட்டாள். வயல் வரப்பில் அவள் வேகமாக நடந்து கோட்டுச் சித்திரமென இருளுள் கரைந்தது இன்றைக்கும் நினைவிலிருக்கிறது.

அதன்பிறகு கிளிநொச்சிக்குப் போவதைக் குறைத்துக்கொண்டேன். ஏதோவொரு பயம் என்னைப் பின்னின்று இழுத்தது. அப்பாவும் அம்மாவும் எப்போதாவது யாழ்ப்பாணத்திற்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போனார்கள். வாழ்வு அநிச்சயத்தில் கழியும் நிலை வர வரத் தீவிரமடைந்தது. ஊர் பயத்தில் உறைந்து கிடந்தது. இன்றைக்கு எந்த வீட்டிலிருந்து ஒப்பாரிச்சத்தம் கேட்குமோ என்றஞ்சிக் கண்விழிக்கும்படியாக காலைகள் பதட்டத்துடன் விடிந்தன. தெரிந்த பல இளைஞர்களை சடலங்களாகப் பார்க்க நேரிட்டது. சில பெண்களையும். என்னோடு படித்தவர்களில் ஒருத்தி கால்களில் குருதி ஒழுக மார்பில் பற்தடங்கள் பதிந்திருக்க விழிகள் வானம் பார்த்து நிலைத்திருக்கக் கிடந்தாள். படிப்பு பாதியில் நின்றது. நான் கொழும்பிற்குப் போனேன். பிறகு கனடாவிற்குப் போனேன். அப்பா-அம்மா கொழும்புவாசிகளானார்கள். மாரிகளில் மழை ஒழுகும் இடங்களுக்கு ஓடி ஓடிச் சட்டி வைத்து வாழ்ந்த அந்த வயல் நடுவிலான குடிசையைக் காலம் தின்றது.

ஞாபகங்களைத் தின்னும் சக்தி மட்டும் காலத்திற்கு இருந்திருந்தால் நிலாவை நான் மறந்திருக்கக்கூடும்.

அன்றிரவு அவள் பாடியது… கடவுளே! அது என்ன குரல்! தனிமையை கோபத்தை ஆற்றாமையை துயரத்தை ஊற்றி நெய்த குரலது!

நிலா இன்னமும் வன்னியில்தானிருப்பதாக நண்பர்களில் ஒருவர் சொல்லத் தெரிந்துகொண்டேன். இயக்கத்தில் பெரிய பொறுப்பொன்றில் இருக்கும் ஒருவரை மணந்துகொண்டதாகவும் அவரே சொன்னார்.

வரப்புகளில் சறுக்காமல் வேகநடை நடக்கும் நிலா… ‘நித்திலா… நித்திலா…’என்று நிமிடத்திற்கொரு தடவை பெயர் சொல்லியழைத்தே பேசும் நிலா…தனது துப்பாக்கியை எந்நேரமும் துடைத்துத் துடைத்துப் பளபளப்பாக்கிக்கொண்டிருந்த நிலா… இப்போது எப்படி இருப்பாள்…?
இரணைமடுச் சந்தியில் காரை நிறுத்தச் சொன்னேன். ஏதேதோ ஞாபகங்கள் குளிர்மேகங்களைப் போல கடந்துபோயின. திருவையாறு செல்லும் பாதையில் நடந்துபோய்க்கொண்டிருந்த மெலிந்த சிறு பெண்ணில் வாஞ்சை பெருகியது. அவள் இறந்தகாலத்தைய என்னை ஒத்திருந்தாள். ஓடிப்போய்க் கைகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. நாகரிகமான பைத்தியம் போலிருக்கிறது என்று அவள் நினைத்துக்கொள்ளக்கூடும்.

கிளிநொச்சி நிறையவே மாறியிருந்தது. ஒரு மாதிரிநகரம் போலிருந்தது. காய்ச்சல் காய்ந்த பிறகு வரும் புதுத்தோலும் பொலிவுமாய் நிமிர்ந்திருந்தன கட்டிடங்கள். வெயில் மட்டும் பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தது. நிலாவின் கணவனை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. வழிசொல்லியவர்களின் கண்களில் சந்தேகம் மின்னியது. ஒரு இளைஞன் எங்களைப் பின்தொடர்ந்தவாறிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. மேடும் பள்ளமுமான அந்த வீதி வழியாக கார் விழுந்தெழும்பிப் போயிற்று. அந்த வீட்டின் முன் கார் நின்றபோது ஆறு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையொன்று ஓடோடிவந்து பார்த்துவிட்டு உள்ளே ஓடிற்று. நிலா வெளியில் வந்தாள். ஒருகணம் திகைப்பில் வாய்பொத்தினாள். மறுகணம் கைகளைப் பிடித்துக்கொண்டு அழவாரம்பித்து விட்டாள். சீருடையிலேயே பார்த்துப் பழகியிருந்த என் கண்களுக்கு அவள் தோற்றம் முற்றிலும் புதிதாயிருந்தது.
“இப்பதான் நினைவு வந்ததா…”என்ற கேள்வியை பத்துத் தடவையாகிலும் கேட்டிருப்பாள்.

“நிறத்து உடம்பு வைச்சு… அடையாளமே கண்டுபிடிக்க முடியேல்லை… நித்திலா நீ… நீ எண்டு கூப்பிடலாமோ…”

“வேறை எப்பிடிக் கூப்பிடுறது… நீ மட்டுமென்ன… பாவாடை சட்டையில வேறை ஆரோ மாதிரியிருக்கிறாய்”

நான் சிரித்துக்கொண்டிருந்தேன். கண்களில் நீர் தன்னிச்சையாக வழிந்துகொண்டிருந்தது. இருபதின் தொடக்கத்தில் இருந்த இளம் பெண்ணொருத்தி உள்ளிருந்து வந்தாள். அவளது இடுப்பில் இருந்த குழந்தை ‘அம்மா’என்றபடி நிலாவிடம் தாவியது. புதியவர்களைக் கண்ட மிரட்சியில் அவள் தோள்களில் முகம் புதைத்தது.

“இது ரெண்டாவது சூரன்… சரியா அப்பா மாதிரி”

“அது என்ரை தங்கச்சி” அறிமுகப்படுத்தப்பட்டவள் சின்ன நிலா போலிருந்தாள். வந்தவர்களுக்குத் தேநீர் வைக்கவென்று உள்ளே போனாள்.
நான் நிலாவை வியப்போடு பார்த்தேன். அதுவரை எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி திண்ணையிலிருந்து குதிப்பதும் ஏறுவதுமாயிருந்த பெண் குழந்தையை இழுத்து நிறுத்தினாள்.

“இது எங்கடை மூத்தது வானதி… நல்லாச் சித்திரம் வரைவா… ஒரு இடத்திலை சும்மா இருக்கமாட்டா.. முதலாம் வகுப்புப் படிக்கிறா”

“இவரைத் தெரியுந்தானே உனக்கு…”அவள் தன் கணவனைப் பற்றிப் பேசத் தொடங்கினாள். நான் வியப்போடு கேட்டுக்கொண்டிருந்தேன். அவள் கழுத்தில் மஞ்சள் கயிறொன்று மட்டுமிருந்தது. வேறு நகைகளில்லை. பேச்சினிடையில் அமுதாவின் பெயர் வந்தது. தேங்காய் துருவுவதை நிறுத்திவிட்டு ‘ஞாபகமிருக்கா…?’என்றாள்.

“அமுதாவின்ரை சிரிப்புக் கூட நல்லா நினைவிருக்கு”என்றேன்.
“கொஞ்ச நாளிலை யாழினியும் கரும்புலியா பெயர்பதிஞ்சு போயிட்டா. ஆழியாள் கடற்சமரிலை வீரச்சாவு. நிலமகள் திருகோணமலையில இருக்கிறதாக் கேள்விப்பட்டன். புதுப் புதுப் பிள்ளையள் நிறையப் பேர் வந்திருக்கினம்”

நிலாவின் மகள் வானதி கையில் ஒரு பொருளோடு வந்து நின்றாள். உற்றுக் கவனிக்க ரவைக்கூடு எனத் தெரிந்தது. குண்டுகள் அடங்கிய அதை விளையாட்டுப் பொருள்போல கையில் வைத்துச் சுழற்றிக்கொண்டிருந்தாள். என் அடிவயிற்றினுள் பயம் பரவியது.

“அந்த அறைக்குள்ளை போகவேண்டாமெண்டெல்லோ சொன்னனான்”அதட்டினாள்.
வானதியோ இன்னும் உசாரடைந்தவளாக ஓடிப்போய் தூக்கமாட்டாமல் இன்னொரு பொருளைத் தூக்கிவந்தாள். நான் பதறினேன். நிலா யாரையோ விளித்து சாவதானமாகச் சொன்னாள்.

“நிலவன்! அந்த அறையை ஒருக்காப் பூட்டிவிடுங்கோ”

இளம்வயதுப் போராளியொருவன் வந்து வானதியைத் தூக்கி உயரத்தில் எறிந்து விளையாட்டுக் காட்டி அதை நைச்சியமாக வாங்கிக்கொண்டு போனான்.

“வானதி எண்டொரு அக்கா நல்லா கவிதை எழுதுவா. ஆரம்பகாலப் போராளிகளிலை ஒராள். நீயும் கேள்விப்பட்டிருப்பாய்… அவவின்ரை ஞாபகத்திலை இவளுக்குப் பெயர் வைச்சது… சரியான வால்… துறுதுறுவெண்டு எந்தநேரமும்”

ஆட்டிற்குக் குழை வைக்கவென்று எழுந்துபோனாள் நிலா. சீருடையும் துப்பாக்கியுமாக நான் பார்த்த நிலா இல்லை இவள் என்று தோன்றியது. கண்கள் மின்ன அன்றிரா சன்னதங்கொண்டவளாகப் பாடிய நிலாவை நான் எதிர்பார்த்து வந்தேனா… கொஞ்சம் ஏமாற்றமாகக்கூட இருந்தது. கணவன்… பிள்ளைகள்… சமையல்… ஆடு… தேவதைகளின் பாதங்கள் மண்ணைத் தொடுவதை சாதாரணர்கள் சகிப்பதில்லை.

சாப்பிட்டுவிட்டுப் பிள்ளைகள் தூங்கிவிட்டார்கள். ‘ங்…..’என்ற இராகமிழுத்தலோடு வயதான குரலொன்று பக்கத்து வீட்டில் தாலாட்டிக்கொண்டிருந்தது. முற்றம் முழுவதும் ரோஜாவும் மல்லிகையுமாய் சொரிந்திருந்தன. நட்சத்திரங்களின் மஞ்சள் ஒளி படர்ந்திருந்த அந்த நிலம் அவ்விரவில் உன்னதக் கனவொன்றின் சாயலில் பொலிந்தது.

“எத்தினை மணிக்கு அவர் வருவார்?”நான் கேட்டேன்.

“அவர் இஞ்சை இல்லை நித்திலா… மட்டக்களப்புக்குப் போட்டார்… அங்கை சண்டை இப்ப மும்முரம்”

“எப்ப வருவார்…?”

“மாசக்கணக்கிலை ஆகும்”

நான் வியப்போடு அவளைப் பார்த்தேன். அவள் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்குப் பயமா இல்லையா நிலா…”தணிந்த குரலில் கேட்டேன். இருந்தும் எனது குரல் மௌனத்தின் அழகைச் சிதைக்கவே செய்தது.

“வேறை வழியில்லை நித்திலா… எத்தினை பிள்ளையள் செத்துப்போச்சுதுகள். என்ரை மடியிலையே நாலைஞ்சு உயிர் போயிருக்கு. அக்கா அக்கா எண்டு எனக்குப் பின்னாலை திரியும் ஒரு பிள்ளை. மிதிலா எண்டு பேர். அதின்ரை உடம்பைக் கூட முழுசா எடுக்க முடியேல்லை. ஒரு கை மட்டும் கிடைச்சுது… அந்தப் பிள்ளையின்ரை அண்ணாவும் ஒரு மாவீரன். அந்தத் தாய் என்னைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழுத அழுகை… இப்ப நினைச்சாலும் இதெல்லாம் விட்டுப்போட்டு எழும்பி ஓடச் சொல்லுது.. ஆனா…”நிலாவின் கைகள் மடியில் கிடந்த மகனின் தலையைக் கோதின. விரல்கள் வழி தாய்மை சொட்டுவதைப் பார்த்தபடியிருந்தேன்.

பக்கத்து வீட்டில் தாலாட்டின் சுநாதம் நின்றிருந்தது. தென்னோலைகள் விர் விர்ரென ஒன்றுடன் ஒன்று உராயும் ஓசை கேட்டது.

“இவனுக்கு மூண்டு வயசாகட்டுமெண்டு பாத்துக்கொண்டிருக்கிறன். பிறகு அம்மா வந்திருந்து பாத்துக்கொள்ளுவா.”

உணர்ச்சிகளின் கண்ணாடியாகிய அந்த விழிகள் ஈரத்தில் மினுங்குவதைப் பார்த்தேன். எனக்குள் அமுதா,யாழினி,நிலமகள்,ஆழியாள்…. சற்றுமுன்னரே அறிமுகமான மிதிலா எல்லோரது ஞாபகமும் படம்போல வந்துபோயிற்று. சற்றுமுன் இவளைப் பற்றி நான் என்ன நினைத்துக்கொண்டிருந்தேன் என்பது நினைவில் வந்தது. விம்மி விம்மி அந்த இரவை நனைத்து அழவேண்டும் போலிருந்தது. நிலாவின் விரல்களைப் பற்றிக்கொண்டு வெப்பியாரம் வழியும் குரலில் ஒன்றை மட்டுமே சொல்ல முடிந்தது.

“எனக்கு என்னைப் போலை ஆக்களை நினைக்க வெக்கமா இருக்கு நிலா”


நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’தொகுப்பிலிருந்து

10.20.2008

இராமேஸ்வரமும் இனவுணர்வும்


அநேக வீட்டுக்கூடங்களைப் போல எங்கள் வீட்டுக் கூடத்திலும்(விறாந்தையிலும்) மாலையானதும் அழுகையும் விம்மலும் பொங்கி வழியும். தொலைக்காட்சியில் நெடுந்தொடரொன்றில் யாராவது ஒரு பெண் அழுகையையும் வசனத்தையும் சமஅளவில் கலந்து வழங்கிக்கொண்டிருப்பாள். தொலைக்காட்சியின் முன்னால் அதற்குச் சற்றும் குறைவிலாத சோகம் ததும்ப யாராவது அமர்ந்திருப்பார்கள். நேற்று எனது அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது (அவ்வப்போதுதான் வருவது:)) வழக்கத்திற்கு மாறாக குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் -நாய்க்குட்டியையும் சேர்த்து பத்துப்பேர்-(கண்ணைப் போட்டுறாதீங்க) தொலைக்காட்சியின் முன் அசையாது அமர்ந்திருந்தார்கள். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிக்கொண்டிருந்தார். “கவிஞர் வைரமுத்து என்ன மாதிரிப் பேசினார் தெரியுமா”என்று என்னையும் உள்ளே இழுத்துப்போட்டார்கள். வழக்கமான குசும்பால் ‘பகல் கனவில் கவிஞர் வைரமுத்து வரவில்லை’எனச் சொல்லிவிருந்தேன். நிகழ்ச்சியின் கனம் என் குசும்பில் கத்திவைத்தது.

"கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலை, வாக்குகளாக விழவேண்டுமா?" என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் உணர்வுபூர்வமாகக் கேட்டிருந்ததை பின்னால் இணையத்தளங்களில் வாசிக்கக் கிடைத்தது.


இலங்கைத் தமிழர்களும் தமிழக மீனவர்களும் சிங்கள அராஜக அரசினால் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து திரைத்துறையினர் இராமேஸ்வரம்வரை சென்று நடத்திய கூட்டத்தைப் பார்த்தபோது, கேட்டபோது ‘என்னடா நடக்குது இங்க…?’ என்ற வியப்புத் தாளவில்லை. கடந்த மாதம் வரை தமிழகம் இருந்த உறைநிலைக்கும் இன்றைய கரைதலுக்கும் இடையில் மலையளவு வித்தியாசம். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால் குற்றம், கூட்டம் நடத்தினால் கைது, ஈழத் தமிழர்களுக்கு வீடு கொடுக்கப் பயம் என வேற்றுக் கிரகவாசிகளென (சீமான், பழ.நெடுமாறன்,வைகோ,திருமாவளவன் போன்ற சிலரைத் தவிர்த்து) ஈழத்தமிழர்கள் மட்டில் பாராமுகமாயிருந்த தமிழகத்தில் இனவுணர்வு விழித்தெழுந்தது எப்படி? ‘நான் இந்தியன்’என்ற நிலைப்பாடு ‘நான் தமிழன்’எனக் கண்ணிமைக்குத் தருணத்தில் மாறியது எங்ஙனம்? ‘ராஜீவ் காந்தி கொலை’ என்ற பதினெட்டாண்டு கால இருட்திரை விலகி உண்மை கண்கூசும்படியான வெளிச்சத்துடன் அரங்கேற என்ன காரணம்?

ஆக,இனவுணர்வு என்பது தமிழர்களிடம் ஒளிந்திருந்திருக்கிறது. இருண்ட சிறைக்கூடங்கள் மற்றும் சித்திரவதைகளின் மீதான அச்சம்தான் அவர்களுக்கு வாய்ப்பூட்டுப் போட்டிருக்கிறது. அன்பு உலகைப் புரட்டிப்போடும் என்பதெல்லாம் வெறும்புரட்டு. அதிகாரம்தான் யாவற்றும் எசமானன்.


நடப்பவற்றையெல்லாம் பார்க்கும்போது“கலைஞர் எப்போதடா பேசுவார்” என்று காத்துக்கொண்டிருந்த மாதிரி இருக்கிறது. அவருடைய நீண்ட மௌனத்தின் விலை அதிகம். ஹிட்லரின் பேச்சு-யூதர்களை அழித்தது. கலைஞரின் மௌனம்…? அரசியல் சூத்திரங்கள், சதுரங்கக் காய்நகர்த்தல்கள், தொலைநோக்கு இலாபம் எனப் பல சொற்றொடர்கள் சமகால நிலையை விளக்குவதற்கான பிரயோகத்தில் உள்ளபோதிலும், நாற்காலிகளையே கரைத்தது ஒரு இறுவட்டில் இடம்பெற்ற இனவழிப்புக் காட்சிகள்தான் என்ற கதையும் உலவுகிறது. இருக்கலாம்! கலைஞர் வெறுமனே ஒரு அரசியல்வாதியாக மட்டும் இருந்திருந்தால் மேற்குறித்த கூற்றைப் புறங்கையால் புறந்தள்ளிவிடலாம். அவருடைய கலையுள்ளம், கவியுள்ளத்தை அக்காட்சிகள் ஏன் கரைத்திருக்கக்கூடாது? ‘நீயறியாய் நீராழம்’என்று இதை வாசிக்கும் எவரேனும் இந்நேரம் சிரித்துக்கொள்ளவும் கூடும்.


‘இந்த மலர் யாரால், எதனால் மலர்ந்தது?’என்ற கேள்விகள் வியர்த்த வியாக்கியானங்கள். மலர்ந்திருக்கிறது. அதுவொரு தேவமலரைப் போலிருக்கிறது. அதன் வாசனையூடே நடந்துபோகும்போது உண்டாகும் பரவசத்திற்கு இணையில்லை.


இராமேஸ்வரத்தில் திரைத்துறையினரால் நடத்தப்பட்ட கூட்டத்தைப் பார்த்தபோது, அவர்களெல்லாம் பேசியதைக் கேட்டபோது ‘‘இந்நிலை வந்தடைய எப்பாடுபட்டோம் எம் தேவா’ என்று நெகிழ்ந்துபோய் அழத் தோன்றியது. 'தமிழகம் விழித்துக்கொண்டதென மகிழாதீர். இந்திய இறையாண்மை அதன் கண்களை மறுபடியும் மூடிவிடும்'என்று யாரோ அசரீரியாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும், பதினெட்டு ஆண்டுகள் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் விலக்கப்பட்டவர்களாக வாழ்ந்திருந்த வலி கொடிதிலும் கொடிது. பதினாறு மைல் தொலைவில் ஒரே மொழி பேசுகிற சகோதரர்கள் இருந்தும் யாருமற்ற ஏதிலிகள் போல – ஒரு கை வெட்டப்பட்ட நிலையிலும் மறுகையால் எங்கள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தோம். எண்பதுகளுக்குப் பிற்பாடு தமிழகத்தில் இப்படியொரு இன அலை அடிப்பது இதுதான் முதற்தடவை. பேச்சு-அதிலும் திரைத்துறையினரின் பேச்சு அரிதாரம் கலைத்ததும் அதுவாக கரைந்துவிடும் என்பது சில ‘அறிவுஜீவி’களின் கணிப்பாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரிதாரர்கள்தான் அதிகாரர்களாக மாறியிருக்கிறார்கள். வரலாற்றை மாற்றியுமிருக்கிறார்கள். தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு துரும்பு கிடைத்தாலும் பற்றிக்கொள்ளவே துடிப்பான். நாங்களோ கண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறோம்.


இனி இராமேஸ்வரம் பேச்சு: திரு.டி.ராஜேந்தர் ‘நான் எப்பேர்ப்பட்டவன்’ என்று கொஞ்ச நேரம் எடுத்துரைத்துவிட்டு, வழக்கமான தன் பாணியில்…
“நாங்கள் மீனுக்குப் போடுவோம் வலை

உத்தரவு கொடுத்தால் எதிரிகளைச் செய்வோம் கொலை

தமிழன் உணரவேண்டும் தன் நிலைஎன்றார்.


இயக்குனர் கே. எஸ்.ரவிக்குமார் ஈழத்தமிழர்களாகிய உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையூட்டிப் பேசிவிட்டு “ஈழத்தமிழர்களுக்கு மேலும் இன்னல் நடந்தால் தமிழகம் இராமேஸ்வரக் கரையைத் தாண்டி வரத் தயங்காது”என்றார்.


இயக்னநர் சேரன் தன்னுடைய சினிமாவைப் போல யதார்த்தமாகவே பேசினார். “புரட்சி என்பது உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும். திரைத்துறையினர் செய்யட்டும்@ அரசியல்வாதிகள் செய்யட்டும்… என்று நீங்கள் கையைக் கட்டிக்கொண்டிருந்து ஆகாது. மக்களாகிய நீங்கள் உங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனையாக அதைக் கருதிப் பங்கேற்கவேண்டும்.”என்றார்.


இயக்குனர் சீமான் என்ன பேசியிருப்பார், எப்படிப் பேசியிருப்பார் என்பதை அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்குப் போனவர்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. ‘பேச்சில் அனல் பறந்தது’என்று எழுதுவதை வாசித்திருக்கிறோம். அதை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு இரண்டு முறை கிட்டியது. விஷயஞானம்,தனது பேச்சோடு பார்வையாளரைக் கட்டிப்போடும் திறன், உணர்வுப்பெருக்கு… (வியர்வைப் பெருக்கும்) உடல்மொழி… என அவர் பேச ஆரம்பித்தால் கூட்டம் காதைக் கொடுத்துவிட்டுக் கட்டுண்டு கிடக்கிறது.


“பர்மாவில் தமிழனை அடித்தார்கள். பம்பாயில் தமிழனை அடித்தார்கள். மலேசியாவில் தமிழனை அடித்தார்கள். கேரளா, கர்நாடகா,ஆந்திராவில் தமிழர்களை அடித்தார்கள். ஆனால், நம்மை அடித்தவர்களை திருப்பி அடித்த ஒரே இடம் தமிழீழ மண்தான்”என்றார். கைதட்டல் காது கிழிந்தது.

மேலும், ‘தமிழீழம் இன்னமும் கிடைக்கவில்லை என்று யாரும் நினைத்துக்கொண்டிருக்கவேண்டாம். அது எப்போதோ கிடைத்துவிட்டது. அங்கே இப்போது எல்லை விரிவாக்கம் நடந்துகொண்டிருக்கிறது. மேலும் சர்வதேச அங்கீகாரத்தை தமிழீழம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது”என்றார்.


இயக்குனர் அமீர் “தமிழ்நாட்டிலிருந்து எம்.பிக்கள் மத்திய அரசுக்கு வேண்டும். ஆனால், தமிழர்கள் வேண்டாமா?”என்று கேட்டார். அவருடைய பேச்சும் ஆழ்ந்த கருத்துடையதாகவும் உணர்வுபூர்வமாகவும் அமைந்திருந்தது.


நடிகர் லிவிங்டனின் பேச்சு ஒரு பிரார்த்தனைபோல உள்ளத்தைக் கரைக்கும்படியாக அமைந்திருந்தது. தானும் கண்கலங்கி கூட்டத்தையும் கலங்கவைத்தார்.


நடிகர் வடிவேலு ஈழத்தில் நடக்கும் இனவழிப்பை தான் இணையத்தளங்களில் பார்த்து ஆழ்ந்த துயரமடைந்ததாக கண்கலங்கிப் பேசினார். அங்கே அமைதி நிலவ இந்தியா அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார். ‘பெரியவங்க என்ன சொல்றாங்களோ அதுக்கு கட்டுப்பட்டு’என்ற வாக்கியத்தை அடிக்கடி பிரயோகித்தார்.


நான் சீமானை வியந்துகொண்டிருக்க, எங்கள் வீட்டு ‘குட்டி நட்டி’களின் வாக்குகளை அள்ளிக்கொண்டு போனவர் மன்சூர் அலிகான்தான். ஏனென்றால் அவர்தான் நிறைய கெட்டவார்த்தைகளால் மஹிந்த ராஜபக்சவைத் திட்டித் தீர்த்திருந்தார். ‘பிச்சைக்கார நாய்’, ‘மயிராண்டி’ ‘அவனுக்குத் திறந்து காட்டவா இங்க இருக்கோம்’ இன்னபிற வசவுகளும் அவற்றுள் அடக்கம்.


“ராஜ பக்சே! நீ ஒரு கோட்சே”
என்றார் இருந்தாற்போல. வில்லன் நடிகராகவே அவரைப் பார்த்திருந்தவர்கள் வியக்கும்படியாக திடீரென்று கதாநாயகனாகிவிட்டார். கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் யாரோ எழுந்துவந்து காதில் குசுகுசுக்க ‘எந்தச் சட்டத்தில உள்ள தூக்கிப் போடப் போறாங்க… 306 ஆ...----------- என்று கேட்டுத் தனது 'சிறையறிவை' நிரூபித்தார். ஆக, அஞ்சா நெஞ்சன் மன்சூர் அலிகானுக்கு உண்மையிலேயே ‘தில்’இருப்பதைக் கூட்டத்தில் பார்க்க முடிந்தது.


மன்சூர் அலிகான் கேட்ட அதே கேள்வியை சேரன் வேறு விதமாகக் கேட்டார். “மன்சூர் அலிகான் பேசிக்கொண்டிருக்கும்போது ‘அடக்கி வாசிங்க… பொலிஸ்காரங்க நிக்கிறாங்க’என்று குசுகுசுக்கிறார்களே… இங்கே காவலுக்கு நிக்கிற பொலிஸ்காரங்க என்ன மராட்டியங்களா… அவங்களும் தமிழங்கதானே… அப்படியானால் தமிழனுக்காகப் பேசவிடாமல் தடுப்பது யார்…? என்ன நடக்குது இங்க?”என்று குரலெழுப்பினார்.


கவிஞர் நா.முத்துக்குமாரின் கவிதையைக் கேட்டதும்… அழுததை இங்கே சொல்ல மாட்டோம். நல்லவேளை இரவாகியும் மின்விளக்குகள் அணைக்கப்பட்டே இருந்தன.


பேரணிக்குத் தலைமை தாங்கிய இயக்குனர் பாரதிராஜா தனது கரகரப்பும் கணீரும் கூடிய குரலில் இராமேஸ்வரத்தில் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும் காரணத்தைச் சொன்னார்.
“இது ஈழத்தமிழர்கள் அகதிகளாக வந்து கால் பதித்த இடம். கண்ணீர் விட்ட இடம். எனவேதான் இங்கு வந்தோம். சென்னையில் உட்கார்ந்துகொண்டு முதுகையா சொறிய முடியும்? சாவு வீடு என்றால் நாம்தான் அந்த வீட்டுக்குப் போகவேண்டும். அதை விட்டுவிட்டு ‘பிணத்தைத் தூக்கிக்கொண்டு என் வீட்டுக்கு வா’என்று கூறுவது சரியாக இருக்காது”என்றார். மேலும் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளது நிர்வாகத் திறனையும் அங்கு வாழும் மக்களின் தமிழ் பற்றினையும் வெகுவாகச் சிலாகித்துப் பேசினார்.


இவர்களைவிட நடிகர்கள் ஜீவா, பாண்டியராஜன், கருணாஸ், பார்த்திபன், இயக்குனர் வி.சி.குகநாதன், தயாரிப்பாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், மீனவ சங்கத் தலைவர்கள் இன்னும் பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.
“பேசமாட்டேம் பேசமாட்டேன்னு சொல்லிட்டுப் பேசிட்டுப் போய்ட்டாங்கய்யா” என்பதுபோல ‘இங்கு அரசியல் பேசவேண்டாம். எதிரிகளைச் சாடும் மேடை இதுவல்ல’என்ற தொனியில் எல்லோரும் சொன்னாலும் ஒரு வார்த்தையாவது ‘உள்குத்து’வைத்துச் சொல்லாமல் மேடையைவிட்டு இறங்கவில்லை என்பதைக் கவனித்தோம். பதில்குத்து அடுத்த பக்கத்தில் இந்நேரம் தயாராகிவிட்டிருக்கும்.


எல்லோரும் நன்றாகவே பேசினார்கள். ‘தமிழரைய்யா நாங்கள் தமிழர்’என்று பெருமிதம் பொங்கி வழிந்தது. “பேச்சுப் பேச்சாவே இருக்கட்டும். ஆம்மா…”என்று வடிவேலு பாணியில் இம்முறையும் சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எனினும்‘சொல்லில் விளையும் செயல்’என நம்பவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இம்முறையேனும் சொல் சொல்லாகவே உறையாதிருக்கட்டும். மேலும், வாராமல் வந்த இச்சாதகமான சூழ்நிலையை, விடுதலைப் புலிகள் பின்னடையும்போதெல்லாம் பட்டாசும் பலகாரமும் சுட்டுக் கொண்டாடும், அவர்கள் முன்னேறும்போதெல்லாம் புண்ணிலே புளிப்பற்றிக்கொண்டதுபோல பதறும், சுயலாபத்திற்காக ஒரு இனத்தையே இழிவுசெய்து அழிவுக்குத் துணைபோகும், சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு ஒத்தூதும் சில உள்ளுர் ஊதுகுழல்கள் தகிடுதத்தங்கள் செய்து கெடுக்காமலிருக்கவேண்டுமே என்பதே இப்போதைய முதன்மைப் பிரார்த்தனை.

10.13.2008

தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்

ஆயுதங்களைக் கைவிடும்படியாக
அறிவித்தல் கிடைத்தது.

நல்லது!

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்

எஞ்சிய வீடுகளை
நாங்களே தரைமட்டமாக்க...
சுவர்களில் மூளை சிதறி வழியும்
கனவுகளோடிருக்கும் உங்கள்
விழிகளை ஏமாற்றி
குழந்தைகளுக்கு முன்னதாகவே நஞ்சூட்டி விட…
அரச மரங்களை விடுத்து
கோயில்களைத் தகர்த்துவிட…
நீங்கள் வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
யோனிகளுடை பெண்களை
இழிவின்முன் கொல்லவும்

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

சுறுசுறுப்பாக இயங்கவிருக்கும்
உங்கள் வதைகூடங்களைச் சுத்திகரிக்க…
புகட்டுவதற்கென
மலமும் மூத்திரமும் குடுவைகளில் சேகரிக்க…
நகக்கண்களுக்கு ஊசிகள்...
குதிகால்களுக்கு குண்டாந்தடிகள்...
முகம் மூடச் சாக்குப்பைகள்…
மேலும்
கொஞ்சம் மிளகாய்ப்பொடி தயாரிக்க

உங்களுக்கும் அவகாசம் வேண்டுமல்லவா?

எங்களது பூர்வீக நிலங்களில் குடியமர்த்த
ஆட்களையும் அடியாட்களையும்
தயார்ப்படுத்தியாயிற்றெனில்
யாவும் நிறைவு.

பூரண (மயான) அமைதி பொலிக!

ஆயுதங்களைக் கைவிடுமுன்
அவகாசம் வழங்கி
தேவரீர்
கருணை பாலிக்க வேண்டுகிறோம்.

10.08.2008

எழுதாத காரணம்

“எழுதாத காரணம் என்ன?”என்றாய்.

வாசிக்கவெனப் புரட்டிய பக்கத்தினின்று
சிறகு தழைத்தெழும் விழிப்பறவை
முடிவற்ற வானில்
திசைதப்பியலைகிறது.

வரிகள் வழிந்தோடிவிடும் வெற்றிடங்களில்
ஞாபகக் கத்திகள் சுழல்கின்றன.
உபரியாய்
ஊளையிடுதலே ஒரே பொழுதுபோக்கான
கீழ்வீட்டு நாய்கள்…
சாணை தீட்டுபவனின் கூர்மைக் குரல்…
வெறுமையைத் தெளிக்கும் வெயிலை
விரட்டுவதாக
சதா தற்பெருமையடிக்கும் மின்விசிறி…
ஆளற்ற தெருவில் ஒலிப்பானின்
அநாவசிய அலறல்கள்…
கதவுக்கு வெளியில்
பஞ்சாயத்து வேண்டும் பல்குரல்கள்...
பலவீனமறிந்த பிச்சைக்காரி
கூடவே அழைத்துவரும் சிறுகுழந்தையின்
பாவனைப் பசிக்குரல்...

இவை தாண்டி
பனிக்கால மரங்களுள்
சிறைப்பட்ட துளிர்களாய்
காத்திருக்குமோ கவிதை?



8.29.2008

புதைந்து போனவள்


அந்த முழுநிலா நாளில்
வெள்ளித்தகடென விகசித்தது மொட்டைமாடி.
கண்ணாடிக் குவளையூடே
நரம்புகளில் புகுந்த செந்நிறத் திரவநதி
அள்ளிச்சென்றது கவலைக் கழிவுகளை.
கூடுதல் நட்சத்திரங்களாய்
விழிகள் மினுக்கிட
அவள் பேசிக்கொண்டிருந்தாள்.

பெண்ணெழுத்து சட்டாம்பிள்ளைகளின்
பிரம்போயும் முதுகெனவும்
அரங்கனின் புண்ணியத்தில்
ஆண்டாள் தப்பியதும்
சொல்லிச் சிரித்த அதிர்வில்
காலடியில் கிடந்த பூனை
விழித்து நெட்டுயிர்த்தது.
மேலும்
காமம் கனலும் கொங்கையெழுத
நஞ்சுண்ட கண்டனை காதலிக்க உத்தேசித்திருப்பதாய்
உற்சாகமாய் அறிவித்தாள்.

அந்நிலாவும்
அன்றவள் ஒளிர்ந்த பொன்னிராவும்
நெடுங்கோடையில் நீரோடைக் குளிர்ச்சி.

‘வேசிக்கும் விதவைக்கும்
எதிர்ப்பதம் தேடித் தோற்றால்
அகராதியை எரிப்பேன்’என்றவளை
சில நாளாய் காணேன்.

பிறிதொருநாள்
இருண்ட அடுக்களையில்
நிதானமாய் அமர்ந்து
வட்டம் பிசகாத தோசைகளை
வார்த்தபடியிருந்தவளைக் கண்டேன்.

அவளைப் புதைத்த இடத்தில்
குழந்தைகள்
மலங்கழித்துக்கொண்டிருந்தார்கள்.





8.07.2008

பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்

“கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாய் இருக்கப் பழகுவது நல்லது”என்ற கவிதை வரிகளை, பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எவ்வாறு மறந்திருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது என்மீதே ஆயாசம் பொங்குகிறது. உரிமைகளைக் குறித்துப் பேசக் கூடிய கூட்டத்திலும் பேச்சுரிமை என்பது தனிநபர்களின் செல்வாக்கு, அவர்களுடைய பின்புலம், சமூகத்தினால்(அன்றேல் அவர்களாலேயே) கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் சார்ந்தது என்பதை அறியநேர்ந்ததில் வருத்தமே.
முற்கூட்டிய தீர்மானங்களுடன் இப்பதிவினை வாசிக்க முனைபவர்கள் தயவுசெய்து வேறு பக்கத்தைக் கிளிக்கிட வேண்டுகிறேன். பெண்கள் சந்திப்பில் நிகழ்ந்ததுபோல – அரசுசாரா நிறுவனங்களின் புள்ளிவிபரங்களினையொத்த விமர்சனக்கட்டுரையன்று இது. ஆதலால் நேரடியாகவே விடயத்திற்குள் இறங்குகிறேன்.

புலிகள் புனிதர்கள்: விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையும் விசுவாசமும் எனக்கில்லை. ஆனால், ஈழம் குறித்த எந்தவொரு அரசியல் அறிவும் தெளிவும் அற்ற ஒருவர் பெண்கள் சந்திப்பிற்குச் சமூகமளித்திருப்பாரேயாகில் கீழ்க்காணும் முடிவுகளுடனேயே அவ்விடத்தை விட்டு நீங்கியிருப்பார்.
1.வன்னியில் இருக்கும் புலிகளுக்கு தங்கள் கருத்துக்களுடன் முரண்படுபவர்களைக் கொன்றுகுவிப்பதன்றி வேறெந்தப் பணிகளும் இல்லை.
2.இலங்கையில் நடந்துகொண்டிருப்பது சகோதரச் சண்டையன்றி இனப்பிரச்சனையல்ல.

3.புலிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் சிங்கள பௌத்த அரச அதிகாரத்தின் கீழ் வாழ்வது எளிது.

4.அரசியல், சமூக அறிவற்ற முட்டாள்களை போராட்டம் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.

‘பெண்கள் சந்திப்பு’என்று இவ்வொன்றுகூடலுக்குப் பெயரிட்டதன் பொருத்தப்பாட்டினை என்னவென்பது?

இலங்கையிலிருந்து நிவேதா, இந்தியாவிலிருந்து மாலதி மைத்ரி, சுவிசிலிருந்து ‘ஊடறு’றஞ்சி,இலண்டனிலிருந்து நிர்மலா ராஜசிங்கம், அமெரிக்காவிலிருந்து மோனிக்கா, பிரான்சிலிருந்து தேவதாஸ், குறமகள், ஜானகி பாலகிருஷ்ணன், ஜோதி பிரபாகரன், சுதா குமாரசாமி, பார்வதி கந்தசாமி, விஜி, யுவனிதா நாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆக்கங்களை வழங்கிய இக்கூட்டத்தின் ‘கட்டுப்பாட்டாளராக’த் தொழிற்பட்டவர் நிர்மலா ராஜசிங்கமே.

அரசியல் ‘ஞானம்’ பொருந்திய அறிவுஜீவியும்- பெண்ணிய ஆய்வாளரும்- தனது கருத்துக்களை வெளிப்படுத்துமளவிற்கு தமிழ் தகைமையுடைத்ததன்று என்ற கருத்தினாலோ என்னவோ அடிக்கடி மேட்டுக்குடி மொழியென நம்பப்படும் ஆங்கிலத்திற்குத் தாவிவிடுகிறவருமான நிர்மலாவின் ‘உரத்த’ குரல் பலருடைய கேள்விகளை விழுங்கிச் செரித்தது. ‘பேச்சுரிமை’, ‘கருத்துரிமை’, ‘வாழ்வுரிமை’ இன்னபிற புண்ணாக்குகளைப் பற்றி இத்தகையோர் பேசிக்கொண்டிருப்பது வியப்பளிக்கிறது. நேர மட்டுறுத்தல் மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டுமென இக்கூட்டத்தை ஒழுங்கமைத்த சுமதி ரூபனால் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருந்தபோதிலும், நேரம் செல்லச் செல்ல அதை அவரே மறந்துவிட்டதாகத் தோன்றியது. குறிப்பாக நிர்மலா பேசியபோதெல்லாம் கடிகார முட்கள் அசையாது நின்றன. தனது சகோதரியின் கவிதைகளை ஆனந்தித்து வாசித்தபோதும், ஒரு நொடியில் பதில் சொல்லியிருக்கக்கூடிய ‘எத்தனையாம் ஆண்டு நீங்கள் இயக்கத்தில் இருந்தீர்கள்?’என்ற கௌசல்யாவின் கேள்விக்கு அவர் தன்வரலாறு உரைத்தபோதும் காலம் உறைந்துபோயிற்று. ‘தேசியவாதமும் பெண்ணியமும்’என்ற தலைப்பின் கீழ் பேசுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பெண்களை எவ்வாறு அஞ்ஞான இருளுள் கட்டிக்காத்து வருகிறது என்று பேசியபோது முரளி கீழ்க்கண்டவாறு கேட்டார். “நீங்கள் தமிழீழத் தேசியவாதமும் பெண்ணியமும் என்றல்லவா இவ்வுரைக்குத் தலைப்பிட்டிருக்கவேண்டும்?” - கூட்டத்தின் தலைப்பே பொருத்தமற்றிருக்கும்போது, உரையின் தலைப்பைக் குறித்தெல்லாம் யாரையா கவலைப்படப்போகிறார்கள்? நிர்மலாவை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ‘நீ அப்பனைப் பற்றிக் கேட்டால் நான் சுப்பனைப் பற்றித்தான் பேசுவேன்’என்ற பாணியிலேயே அவரது பதில்கள் அமைந்திருந்தன.

ஆகஸ்ட் 3ஆம் திகதிய அமர்வில் நிர்மலா தனது உரையை ஆரம்பித்த விதமே அலாதியானது. ‘இந்தச் சந்திப்பானது ஒருபக்கச்சார்பாகப் போய்க்கொண்டிருக்கிறது@ இங்கே புலிகளின் அராஜகம் பற்றித்தான் பேசப்படுகிறதேயன்றி, அரசபயங்கரவாதம் கவனமாக மறக்கப்பட்டிருக்கிறது’என்று முதல்நாள் கூறப்பட்டதை மனதிற்கொண்டு உரையின் முதல்வாசகம் அமைந்திருந்தது. “அரசாங்கத்தால் செய்யப்பட்டவை நமக்கெல்லோருக்கும் தெரியும்” என்று சாமர்த்தியமாக ஆரம்பித்தார். ஒரு வாக்கியத்தின் வாயிலாக இலட்சக்கணக்கான கொலைகளை,வன்புணர்வுகளை,ஆட்கடத்தல்களை, இடப்பெயர்வுகளை எளிதாகக் கடந்துசெல்வதற்கு அதீத புத்திசாலித்தனம் வேண்டும். “ஹிட்லர் அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்றான் என்பது நமக்கெல்லாம் தெரியும் என்பதால் நாங்கள் இப்போது ரஷ்யப்படைகள் செய்த அட்டுழியங்களைக் குறித்துப் பேசுவோமாக”என்பதை ஒத்திருந்தது அது.

மேலும், புலிகள் பெண்களை அரசியல் ஞானமற்ற அறிவிலிகளாக, ஆயுதங்களாகப் பாவிக்கிறார்கள் என்பதையிட்டுக் கலங்குகிறார். ‘ஆண்களுக்கு நிகரான ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டபோதிலும்’என்று மெச்சியதன் வழி நடுநிலை நகர்வொன்றினை மேற்கொண்டுவிட்டு தன் நோக்கத்திற்குத் திரும்புகிறார். புலிகளிடமிருந்து தப்பி அன்றேல் விலகி வந்த பெண்கள் சொல்லும் கதைகள் நெஞ்சை அதிரவைக்கும் தன்மையன என மிகவருந்தும் அவர், இத்தனை ஆண்டுகால வெளிநாட்டு வாசத்தின்போது, அத்தகைய தமிழ் பெண்களுக்கான ஒரு அமைப்பைத் தோற்றுவித்து அவர்களுக்குத் தொண்டாற்றாமல் இருப்பது வியப்பினை அளிக்கிறது.

‘புலிகள் இயக்கத்தில் காதல், திருமணம் போன்றனவற்றிற்கெல்லாம் அனுமதியில்லை என்பதால் இயல்பான உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன’ என்று அவர் ஆதங்கப்பட்டதைப் பார்த்தபோது, எண்பதுகளின் ஆரம்பப் பகுதியிலேயே அவரது ஞாபகம் நகராமல் உறைந்துகிடக்கிறதோ என்றெண்ணத் தோன்றியது. ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தபிறகு, குறிப்பிட்ட ஆண்டுகள் சேவையாற்றிய பிறகு ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ளலாம் என்ற நடைமுறை புலிகள் இயக்கத்தில் இருப்பதை அறிவுஜீவியும் பெண்ணியவாதியுமாகிய அவர் மட்டும் அறியாமற் போனது துரதிர்ஷ்டமே. இரண்டு தசாப்தங்களின் முன்னர் இருந்த இயக்கமில்லை அது என்பதை அவர் தெரிந்தே மறுக்கிறார். ‘உனக்காக நான் அழுகிறேன் பார்’என்ற போலிப் பெருந்தன்மையுடன் கூடிய மேட்டுக்குடி முதலைக் கண்ணீரில் வழுக்கிவிழுவது தொலைக்காட்சிகளில் ‘கோலங்கள்’போன்ற நெடுந்தொடர்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், பெண்களை முன்னிறுத்தி புலிகளைச் சாடுவதே அவரது நோக்கம் என்பது வெளிப்படை.

இயக்கத்திலிருந்து வெளியேறி வெளிநாடு வந்தவர்கள் இன்னமும் பொட்டையும் பூவையும் புடவையையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு பழமை பேணுவதாகச் சொன்னதைக் கேட்டபோது ‘என்னே அறிவு’என்று மெச்சத் தோன்றியது. ஆடைகள் ஒருவரின் மனதையும் ஆளுமையையும் பிரதிபலிக்கின்றன என்பதே பொதுப்புத்திசார் புண்ணாக்குத்தனந்தான். அவ்வாறெனில் பொட்டைத் துறந்து ஜீன்ஸ் அணிந்தவர்கள் எல்லோரும் அறிவானவர்கள் என்றல்லவா ஆகிறது? ஜீன்ஸ் அணிந்த, பொட்டு வைக்காத ‘அறிவுக்குஞ்சு’கள் எத்தனை பேரை நாம் நமது நாளாந்த வாழ்வில் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்!

மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. அவரவர் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து-பார்வையிலிருந்து புரிதல்கள் மாறுபடலாம். ஆனால், தவறான தகவல்கள் வெளியுலகிற்குச் சென்று சேரலாகாது. தவிர, கூட்டங்களுக்கியைபுற நோக்கங்கள் இருக்கலாமேயன்றி, நோக்கங்களுக்கேற்றபடி கூட்டங்களைத் திசைதிருப்பலாகாது. பெண்கள் சந்திப்பினைப் புலி எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டமாக மாற்றியதே எனது விசனம். வழக்கமான, சொல்லிப் புளித்துப்போன உதாரணமாக இருந்தபோதிலும் மீண்டும் சொல்கிறேன்: மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால், மாட்டைக் கொண்டுவந்து தென்னைமரத்தில் கட்டிவிட்டு தென்னைமரத்தைப் பற்றி எழுதியதையே அக்கூட்டம் நினைவுறுத்தியது.

பிரான்சிலிருந்து வந்து கலந்துகொண்ட தேவதாஸ் ‘தேசியப் போராட்டமும் சாதியமும்’என்ற தலைப்பில் கட்டுரையொன்றை வழங்கினார். அதன் சாராம்சமானது ‘தேசியப் போராட்டம் தலித்துகளை மேலும் பின்னடையச் செய்துவிட்டது’என்பதாக இருந்தது. அவர் தனது உரையை முடித்தபின் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “ஈழத்தில் நடக்கும் போராட்டம் தலித்துகளைப் மேலும் பின்னடையவே செய்கிறது என்பதை, வன்னியோடு தொடர்புடைய-அங்கு போய் வந்துகொண்டிருக்கிற- தமிழகத்து தலித் தலைவர்கள் அறிந்திருக்கவில்லையா?” என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார் “ஒன்றில் அவர்கள் ஈழத்தின் உண்மை நிலையை அறியாதிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விடுதலைப் புலிகளிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு பேசுகிறார்கள்.” இந்தப் பதிலுக்காக அவர் தனது முதுகில் ஒரு தடவை தானே தட்டிக்கொள்ள வேண்டும்.

வேறொருவர் தேவதாசைப் பார்த்து “நீங்கள் அங்கே இப்போது இருக்கும் நிலையைப் போய்ப் பார்த்தீர்களா? இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நான் அண்மையில் அங்கிருந்தவன்”என்று சொன்னார். அதற்கு அசரீரியாக ஒரு குரல் “அவர் போனால் திரும்பி வரமாட்டார்” என்றது. கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. சிறுபிள்ளைகளின் கூட்டத்தில் இருப்பதான ஒரு உணர்வு தோன்றியது. அப்படியானால், ‘போடப்பட்டவர்கள்’ எல்லோரும் வன்னிக்குப் போன இடத்தில் வைத்துத்தான் போடப்பட்டிருக்கிறார்கள் என்ற நகைச்சுவைத் துணுக்கிற்கு ஜோராக மீண்டும் ஒரு தடவை கைதட்டிக்கொள்ளலாம்.

23ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்களைவிட, அண்மைய காலங்களில் அங்கிருந்தவள் என்றவகையில் எனக்கு நிலைமைகள் தெரியும். கக்கூசுக்குப் போகும் பாதையையும் புலிகளின் துப்பாக்கிக்குழல் அடைத்துக்கொண்டிருக்கிறது என்பது போன்ற பேய்க்கதைகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுவதெனத் தெரியவில்லை.

இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்திய சுமதி ரூபன் தெரிந்து அல்லது தேர்ந்து அழைத்திருந்த பேச்சாளர்கள் மாற்றுக் குரல்களை முடக்க வல்லவர்கள். வலுவான குரல்கள் ஒலிக்கும் ஏனையவை தொண்டைக்குள் இறுக்கப்படும் என்பதை கையுயர்த்தியவர்களை கையமர்த்தியவர்கள் அறிவர். ‘பேசினால் கொல்கிறார்கள்’ என்று கூக்குரலிடுபவர்களுக்கு மற்றவர்களின் குரல்களையும் செவிமடுக்க வேண்டும் என்று தோன்றாமற் போனது ஏன்? ஆக, பேச்சுரிமை என்பது அவ்வவ்விடங்களின் அதிகாரமும் அபிமானமும் சார்ந்ததாகிறது.

பெண்கள் சந்திப்பின் முடிவில் அவர்கள் என்னென்ன பிரேரணைகள் எடுத்தார்கள் என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் கற்றுக்கொண்டவை:

1.பொருந்தாத இடங்களில் பிரசன்னமாகாதிருத்தல்

2.பேசும் நேர மட்டுறுத்தல் என்பது ஆட்களையும் அவர்தம் அதிகார மற்றும் அவர்மீதான அபிமானத்தைப் பொறுத்தது

3.உரிமைகளைப் பேசுமிடங்களிலும் அசமத்துவம் நிலவும்.

4. ‘பெண்’என்ற தலைப்பின்கீழ் நீங்கள் ‘புலி’யைப் பற்றியோ ‘நரி’யைப் பற்றியோ பேசலாம்.

நண்பர்களுக்கு: உங்களில் எவர் வாழ்வில் தவறொன்றும் செய்யாதவரோ அவர் ‘இவளுக்கு வேண்டும்’என்ற முதற் கல்லை என்மீது எறியட்டும்.

8.05.2008

சத்தியமாய் கவிதையில்லை

காதல்:
நரம்புமேடையில்
ஹோர்மோன்கள்
நடத்தும் நாடகம்

அரசியல்:
அவரவர் புண்களிலிருந்து
வழியும் சீழ்

எழுத்து:
முன்னால் நிற்பவனின்
கண்ணறிந்து கடைவிரிக்கும்
புனித வியாபாரம்

தாம்பத்யம்:
இரண்டுபேர் ஆடுகிற
கண்ணாமூச்சியாட்டம்

எல்லா மயிரும் தெரிந்தபிறகும்
மூடுபல்லக்கில் அசைந்தசைந்து
எத்தனை நளினமாய்
முகமினுக்கிப் போகிறது வாழ்க்கை.

7.12.2008

மீள்திரும்புதலும் ஒரு வாக்குமூலமும்


நந்திதா:முன்னொருபோதும் காணாத மழையா?

நந்திதா 1:ஒரே மழை எத்தனை விதமாய் பெய்கிறது!

நந்திதா:மனசின் கருவி கண். காட்சி பொறுப்பன்று.

நந்திதா 1:நெட்டுக்குத்தாகப் பெய்திருக்க வேண்டிய மழை, காற்றின் அதிகாரத்தின் முன் தோற்றுப்போய் சாய்ந்தடிக்கிறது. சில கலைஞர்கள் நினைவில் வருகிறார்கள். நிலத்தில் குமிழியிடும் மழையின் எத்தனத்தைக் காலால் தள்ளிக் கலைக்கிறது காற்று. அதனுள்ளும் இருக்குமோ வன்முறை?

நந்திதா:வன்முறை எவருள் இல்லை?

இத்தனை மழை பொழிகிறது. வெள்ளம் எங்கே போயிற்று? அங்கெனில் சாக்கடைகள் நிரம்பி வழியும். மலத்துணுக்குகள் மிதக்கும். முழங்கால் உயரத்திற்கு தண்ணீர்க்காடு பரவிவிடும். சாலையோரம் வாழ் மனிதர்கள் அன்றைய தூக்கத்தை தண்ணீருக்குக் கொடுத்துவிட்டு முழங்காலில் தலைவைத்து எங்கேனும் குந்தியிருப்பர். மீன்குஞ்சுகள் தத்தளித்து தறிகெட்டலையும்.

நந்திதா 1:நீ ஆரம்பிக்கிறாய்.

நந்திதா: ஒப்பீட்டின் குரல் ஓயாது.

நந்திதா 1:தெரிவுகள் இல்லையேல் ஒப்பீடில்லை. உள்ளது ஒன்றெனில் திருப்தி.

நந்திதா:என்னை நான் பரிகசித்துக்கொள்வதுண்டு‘ஜீன்ஸ் அணிந்த குறத்தி’என்று.

நந்திதா 1:அதன் வழி நீ உன்னை நாகரிகமானவள் என்று உயர்த்திச்சொல்கிறாயா? ஒரு இனக்குழுமத்தை எதற்காக இங்கிழுக்கிறாய்? கவிதையில் எழுதியதற்கே நண்பர் குறைப்பட்டார்.

நந்திதா:இல்லை. ஓரிடத்தில் தரிக்கவியலாத மனோநிலையை அல்லது வாழ்முறையை, சொல்லிப் பழகிப்போன சொற்களால் வெளிப்படுத்த முயல்கிறேன். உவமைகள் பழகிவிட்டன. அங்காடி நாய்போல அலைச்சல். இதுவும் யாரோ சொன்னதே.

நந்திதா 1:வந்தாயிற்று. இங்கு ஒரு குறையுமில்லை. நேசிக்கும் பூனைகள்போல் சுத்தக்காரி. கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரு காகிதத் துண்டுகூட இல்லை. புதர்களில் சிக்கி அலைக்கழியும் வெள்ளை பிளாஸ்டிக் பைகள் இல்லை.

நந்திதா:நம்மைக் குற்றவுணர்வுக்காளாக்கும் பிச்சைக்காரர்கள் இல்லை. கண்களைத் தாழ்த்தியபடி வேகவேகமாக அவர்களைக் கடந்துபோக வேண்டியதில்லை. கால்களின் சூடு குரலில் தகிக்க ஒரு கிழவி மல்லிகைப்பூ விற்றுப்போவாள். வெயிலில் வதங்கிச் சுருங்கிய தோல்.

நந்திதா 1:நாய்களைப் பற்றி இப்போது பேசுவாய்.

நந்திதா: நாய்களைப் பற்றி நான் நிறையப் பேசிவிட்டேன்.
குப்பைத்தொட்டிகளை பசியின் கண்களால் கிளறும் நாய்களைப் பற்றி நான் பேசிவிட்டேன். பூனைகள்…

நந்திதா 1:இறந்துபோயின நிராதரவாய். இறந்துகொண்டிருக்கிறது ஒன்று.

நந்திதா:ஞாபகங்கள் பட்டு மென்மயிராய் காலுரசுகின்றன. இல்லை முட்களாய் குத்துகின்றன. அவற்றின் துக்கம் தோய்ந்த கண்களை நான் கனவுகாண்கிறேன்.

நந்திதா 1:இந்தச் சாலைகளைப் பார்! விபத்துக்களைத் தவிர்க்க மட்டுமே ஒலிப்பான்கள் என உணர்ந்திருக்கும் ஓட்டுநர்கள் நிறைந்த நகரம் இது.

நந்திதா:வாகனங்களுக்கிடையில் எவ்வளவு இடைவெளி. சுருட்டிச் சுருட்டி வயிற்றுக்குள் போட்டுக்கொள்வதைப்போல… விழுங்கியபின்னும் கறுத்தப் பாம்புகளெனத் தொடரும் சாலைகள்.

சில சமயங்களில் ஒற்றை ஆளாய் சாலையோரம் நடக்கும்போது அச்சமாகவும் இருக்கிறது. நடப்பதற்காக வேண்டி மட்டுமே நடக்கும் மனிதர்களின் ஊரிது.

நந்திதா 1:வேக நெடுஞ்சாலைகளால் தூரம் குறுகிவிடுகிறது. நகரம் வேண்டியமட்டும் கொள்ளுமளவு சுருங்கியிருக்கிறது. ஐந்தே நிமிடங்களில் நான் விரும்பிய உணவகத்திற்குப் போகிறேன்.

நந்திதா:நள்ளிரவுகளிலும் விழித்திருக்கும் பேரங்காடிகள்.

நந்திதா 1:விற்பனையாளர்கள் குறிப்பாக அழகிய பெண் விற்பனையாளர்கள் சிந்தும் புன்னகை இதமாயிருக்கிறது. நமது கண்களைப் பார்த்து உண்மையான அர்த்தம் தொனிக்கும்படியாக ‘நன்றி’, ‘மன்னிக்கவும்’, ‘வருந்துகிறேன்’என்ற வார்த்தைகளைச் சொல்கிறார்கள். அடுத்து உள்வரவிருக்கும்-வெளியேறவிருக்கும் நபருக்காக கதவை அநேகமானோர் திறந்துபிடித்தபடியிருப்பது உயர்பண்பு.

நந்திதா:வீடுகள்…

நந்திதா 1:ஆம் வீடுகள். விசாலமான படுக்கையறைகள். சோம்பேறிகளை உற்பத்தி செய்யும் சோபாக்களும், கூறியது கூறும் தொலைக்காட்சிகளும். உடம்பை அன்னையைப் போல ஏந்திக்கொள்ளும் மெத்தைகள். கார்கள்… கார்கள்… மேற்கூரை திறந்திருக்க காற்றில் இழையும் கூந்தல்.(கூந்தல் என ஒருமையில் சொல்வதா மயிர்க்கூட்டம் ஆகையால் பன்மையா)

நந்திதா: மெத்தைகளை இப்படியும் சொல்லலாம்-காதலனைப் போல உள்வாங்கிக்கொள்ளக்கூடியன. ஆனால், மெத்தைகள் துரோகிக்குந் தன்மையற்றவை. ஆனால் அறிந்தவை.

இயந்திரங்களுக்கு உடலைத் தின்னக்கொடுத்தவர்கள் அன்றேல் நண்பர்களுடன் மதுவருந்தியவர்கள் நடுநிசி கடந்து தங்கள் விசாலமான, நான்கைந்து குளியலறைகளுடன் கூடிய அற்புதமான வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். ஒற்றை விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. நானூறு டொலர்களுக்கு வாங்கிய மரத்தினாலாய கிருஷ்ணன் அரையிருளில் நின்றபடி புல்லாங்குழலூதிக்கொண்டிருக்கிறான்.

நந்திதா 1:மனைவி வீட்டு வேலைகளை முடித்து அப்போதுதான் உறங்கவாரம்பித்தாள். அல்லது அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்வழியில் குழந்தைக் காப்பகத்திலிருந்து குழந்தையை அழைத்து வந்திருந்தாள். பிள்ளைகள் தூங்கி வெகுநேரம்.

நந்திதா:எல்லா மனைவியரும் தூங்குவதில்லை. இரவின் நிறம் உண்மையாகவே கறுப்பு. தனிமை…

நந்திதா 1: தனிமை…இனிதாம்! தனிமை சிலசமயங்களில் செவிகிழியக் கூச்சலிடும். தனிமை குறித்த பேச்சுகளை நான் தவிர்க்கிறேன்.

நந்திதா:அதுதான் விவாகரத்துக்கள் பெருகிவிட்டனவா?

நந்திதா 1:இரவு சில குழந்தைகளுக்குப் பிரளயம். தாயும் தந்தையும் பொருதும் போர்க்களத்தில் குழந்தைகளே மடிந்துபோகிறார்கள். வளர்ந்த பிள்ளைகள் மதுக்கோப்பைகளிலேறி தப்பித்து விடலாமென எண்ணிப் போகிறார்கள். சிறிய வயதிலேயே காமமும் போதையும் பெருகிவழியும் அறைகளுள் உறவுகள் சலிக்கின்றன. துரோகம் வலதுகாலை எடுத்துவைத்து உள்நுழைகிறது.

நந்திதா: தொலைக்காட்சியில் உரத்தலறும் குரலுக்குப் பின்னணியாகிறது விசும்பல். “அவள் போய்க்கொண்டிருக்கிறாள்… அவன் போய்க்கொண்டிருக்கிறான்… அவர்கள் போய்விட்டார்கள்”

நந்திதா 1:இது ஜூலை மாதம். இதமான குளிர் காற்றில் இருக்கிறது. சில இலைகளை கைதேர்ந்த சித்திரக்காரர்கள் மினக்கெட்டு வரைந்திருக்கிறார்கள். கடவுளே! அரிதிலும் அரிதான நீலப் பூக்களை நான் பார்த்தேன். மரங்கள் அப்போதுதான் பிறந்த குழந்தைகள் போல… இல்லை… உவமைகள் சலித்துவிட்டன. மரங்கள் பச்சையாக முழுதாகச் சாப்பிட்டுவிடலாம் போல செழிப்பாக இருந்தன.

நந்திதா: டிசம்பரில் பனி பொழியும். பால் தோற்கும் வெண்மை! எலும்புக்குருத்துக்கள் நடுங்கும். தோலைக் குளிர்வண்டு குடையும். உன் செவி உனதல்லாததாகும். விபத்துச்செய்திகளுடன் காலைகள் விடியும். குளிர் தொடுக்கும் போரில் உடல் தோற்றுச் சாயும்.

நந்திதா 1:எனது மண்ணில் எல்லா மாதங்களும் டிசம்பராக இருக்கக்கூடாதா என்று நான் ஏங்கியிருக்கிறேன். வேம்பில் மழைத்துளி தொங்கும். துளி மூக்கும் கண்ணுமாய் ஒரு குருவி பூவிலாடும். வெயில் இளங்கால்களால் நகர்ந்து நகர்ந்து படியிலேறும்.

நந்திதா:ஏக்கங்கள் தீர்ந்துபோய்விட்டன. வாழ்க்கை கவனமாகக் கையாளவேண்டிய கண்ணாடிக் குவளையாகிவிட்டது. எந்நேரமும் சிதறலாம்.

நந்திதா 1:வாழ்ந்தே தீர்வது வாழ்க்கை. மரணத்திற்கும் காரணங்கள் வேண்டும்.

நந்திதா:எல்லாவற்றிற்கும் காரணங்கள் தேவை. ஒரு இலை விழுவதற்கும், இருமுவதற்கும், ஒற்றைச் செருப்பை நாய் இழுத்துப் போனதற்கும், ஒரு கவிதையாகியிருக்க வேண்டியது வெறும் சொற்களாக உதிர்ந்துபோனதற்கும், ஒரு பெண் வேசியானதற்கும்.

நந்திதா 1:காரணங்கள் ஆசுவாசத்தைத் தருகின்றன. பதட்டத்தை நீக்கிவிடுகின்றன.

நந்திதா:இருப்பு மரணத்திற்கு ஈடாக இருக்கிறது. யாவும் யாவரும் சலித்துவிட்டன-விட்டனர். இந்த அறை முழுவதும் நிரம்பி வழிகிறது தனிமை. சுயநலத்திலிருந்து, குரூரத்திலிருந்து, கோழைத்தனத்திலிருந்து, குற்றவுணர்விலிருந்து, பொய்களிலிருந்து, பொறாமையிலிருந்து, பாசாங்குகளிலிருந்து, பயன்படுத்தப்படுதலிலிருந்து, துரோகத்திலிருந்து, ஆற்றாமையிலிருந்து, அறிவீனத்திலிருந்து… இன்னும் இன்னும் பலவற்றிலிருந்து நான் தப்பித்துச் செல்ல விரும்புகிறேன்.

நந்திதா 1: வாழ்வதற்கான காரணங்களைப் புதிதாகக் கண்டுபிடி அன்றேல் உருவாக்கு.

நந்திதா: எல்லாம் கைவிட்டபிறகு எழுத்து என்னை ஏந்திக்கொண்டிருப்பதாக உளறிக்கொட்டிக்கொண்டிருந்தேன். என்னை முன்னிலைப்படுத்த, அடையாளப்படுத்த, தூக்கிப்பிடிக்க எழுத்தை நான் துரோகித்தேன். விளையாட்டின் ஒரு கட்டத்திற்கப்பால் பாவனைச் சோறு மண்ணாக மெய்த்தோற்றம் காட்டுவதைப்போல், புத்தக மாந்தர்களும் சலித்துவிட்டார்கள். எழுத்து, பூனைக்குட்டி, காதல், மொழி, நண்பர்கள், வீடு, சுற்றம் என வாழ்தலுக்குக் கற்பித்த காரணங்கள் யாவும் தீர்ந்துபோய்விட்டன.

நந்திதா 1:வாக்குமூலமா?

நந்திதா: ஆம்! விட்டுச்செல்லவேண்டியிருக்கிறது காரணங்களை. வாழ்தலில் சலிப்பு என்பது பொருத்தமான அல்லது போதுமான காரணமாகாது இல்லையா நந்திதா!