10.13.2008

தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்

ஆயுதங்களைக் கைவிடும்படியாக
அறிவித்தல் கிடைத்தது.

நல்லது!

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்

எஞ்சிய வீடுகளை
நாங்களே தரைமட்டமாக்க...
சுவர்களில் மூளை சிதறி வழியும்
கனவுகளோடிருக்கும் உங்கள்
விழிகளை ஏமாற்றி
குழந்தைகளுக்கு முன்னதாகவே நஞ்சூட்டி விட…
அரச மரங்களை விடுத்து
கோயில்களைத் தகர்த்துவிட…
நீங்கள் வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
யோனிகளுடை பெண்களை
இழிவின்முன் கொல்லவும்

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

சுறுசுறுப்பாக இயங்கவிருக்கும்
உங்கள் வதைகூடங்களைச் சுத்திகரிக்க…
புகட்டுவதற்கென
மலமும் மூத்திரமும் குடுவைகளில் சேகரிக்க…
நகக்கண்களுக்கு ஊசிகள்...
குதிகால்களுக்கு குண்டாந்தடிகள்...
முகம் மூடச் சாக்குப்பைகள்…
மேலும்
கொஞ்சம் மிளகாய்ப்பொடி தயாரிக்க

உங்களுக்கும் அவகாசம் வேண்டுமல்லவா?

எங்களது பூர்வீக நிலங்களில் குடியமர்த்த
ஆட்களையும் அடியாட்களையும்
தயார்ப்படுத்தியாயிற்றெனில்
யாவும் நிறைவு.

பூரண (மயான) அமைதி பொலிக!

ஆயுதங்களைக் கைவிடுமுன்
அவகாசம் வழங்கி
தேவரீர்
கருணை பாலிக்க வேண்டுகிறோம்.

15 comments:

#BMN said...

மனச பாரமாக்கிடீங்க!

Unknown said...

நெஞ்சைப் பிளக்கிறது உங்கள் வரிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடவுளே!! :(

தமிழ்நதி said...

இன்றைய பத்திரிகையில் 'ஆயுதங்களைக் கைவிடவேண்டும்'என்ற செய்தியைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது இதுதான். நியாயமான தீர்விற்கு முன்னதாக தமிழர் தரப்பு நிராயுதபாணியாக்கப்பட்டால் நிச்சயமாக இவையெல்லாம் நடக்கும். அதில் துளியும் ஐயமில்லை. வருகைக்கு நன்றி நண்பர்கள் மித்ரா குட்டி, பின்னூட்டம் பெரியசாமி, முத்துலெட்சுமி.

ஸ்ரீராம் பொன்ஸ் said...

செந்நிற எழுத்துக்களில் கவிதை..மிகப் பொருத்தம்..

MSK / Saravana said...

சாட்டையடி..

//நியாயமான தீர்விற்கு முன்னதாக தமிழர் தரப்பு நிராயுதபாணியாக்கப்பட்டால் நிச்சயமாக இவையெல்லாம் நடக்கும். அதில் துளியும் ஐயமில்லை.//

உண்மைதான் தமிழ்..

தமிழ்நதி said...

நன்றி சிறீராம் பொன்ஸ், சரவணகுமார்.

VSK said...

//நியாயமான தீர்விற்கு முன்னதாக தமிழர் தரப்பு நிராயுதபாணியாக்கப்பட்டால் நிச்சயமாக இவையெல்லாம் நடக்கும். அதில் துளியும் ஐயமில்லை. //

ஒப்புக்கொள்கிறேன்.
உங்கள் அனுமதியுடன் இதனை உங்கள் பெயரிலேயே இன்னொரு குழுமத்தில் எடுத்து இட்டிருக்கிறேன். நன்றி. நல்லதே நடக்கட்டும்....விரைவில்.

த.அரவிந்தன் said...

வலுவான வலி ஆயுதம் இக்கவிதை

Anonymous said...

சில செய்திகள் கூறும் உண்மையும்--புரிந்தும் நடிக்கும் பொறம்போக்குகளின் அரசியலும்

1. இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதும் ஒரு வகை போர் கொள்கைதான். அதுமட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலில் ஆதிக்க சக்தியாகத் திகழ்வதற்கு ஈழ தமிழ் மக்களை அழிக்கும் இந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்.(அப்போ தமிழர்கள் மனிதர்கள் இல்லை எருமைகள்)

----மத்திய இராணுவ அரசாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜு

2.நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை .எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது
----காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி(அப்போ 40 எம்பி சீட்டு கொடுத்தாலும் நாங்க வேற நாடு தானே!)

ஆக இந்த செய்திகள் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் தமிழர்களை நாங்கள் எருமை மாடுகளிலும் கேவலமாகவே கருதுகிறோம்!.. ஆரிய 'இந்தி'யாவை எதிர்த்து எதுவும் உங்களால் செய்ய முடியாது!
நெய்வேலியில் இருந்து நிலக்கரியை திருடி அண்டை கருநாகத்தானுக்கும் கொலையாளிக்கும் மின்சாரம் என்ற பெயரில் எவன் கொடுப்பது?நரிமணத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை திருடுபவன் யார்? எல்லாம் 'இந்தி' அரசுதானே? சுனாமியால் தமிழகம் துயருற்ற போது 5 பைசா கூட கொடுக்காமல் வந்து உதவி செய்ய இருந்த நாடுகளையும் தடுத்து.. நேரடியாக 5 கப்பல்கள் மூலம் உங்கள் ஆரிய சகோதரனான சிங்களவனுக்கு உதவி பொருட்கள் அனுப்பியவர்தானே நீங்கள்!நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு குருவி போல சேர்த்த பொருட்கள் எல்லாம் இன்று குப்பையாக மாறிவிட்டன!தமிழனின் சொரனை எங்கே போனது?

உங்கள் வளத்துக்கு அப்துல் கலாம் தேவை படுக்கிறார் ,பாகிஷ்தானோடு சண்டை போட மேஜர் சரவணன் போன்ற ஆள்கள் தேவை படுகிறார்கள்,கொடி நாள் வசூலில் தமிழகம் முதலில் நிற்க ஆசைபடுகிறீர்கள்! ஆனால் நாங்கள் உங்களிடம் எதையும் கேட்க கூடாது!

ஆக இங்கு தமிழ்நாட்டில கட்சி நடத்தும் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எச்சில் இலைதான் என.
தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கைகூலிகள்தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த 'இந்தி'யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். 'இந்தி'யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு எம் தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்.

சிங்கின் தலைப்பாகை பிரச்சனைக்கு பிரான்சு அதிபரோடு கடிந்து கொண்ட மன்மோகன்'சிங்கு' தமிழனின் தலை போகும் பிரச்சனைக்கும் பம்மாத்து காட்டுவதன் நோக்கமேன்ன?ஆரியன் சிங்களவனின் பங்காளி! 6 1/2 கோடி மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துகிற ஒரு தேசத்தில் இன்னும் நாம் இருக்கத்தான் வேண்டுமா? தமிழன்னை நமக்கு எந்த குறையையும் வைக்கவில்லை பிறகு ஏன் நாம் இவர்களிடம் கை ஏந்தி கொண்டு? நம் உணர்வுக்கும் சிந்தனைக்கும் தடை போட இவர்கள் யார்?சுடு சொரனை உள்ள அனைத்து தமிழர்களும் சிந்திப்பீர்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அய்யோ

வேறொன்னும் சொல்ல நா எழவில்லை.

இதைப்படித்தபின்

தமிழ் said...

நல்லதே நடக்கட்டும்

Anonymous said...

//சிங்கின் தலைப்பாகை பிரச்சனைக்கு பிரான்சு அதிபரோடு கடிந்து கொண்ட மன்மோகன்'சிங்கு' தமிழனின் தலை போகும் பிரச்சனைக்கும் பம்மாத்து காட்டுவதன் நோக்கமேன்ன?//

அது!!!

தமிழ்நதி said...

இதற்குப் பிறகு இரண்டு பதிவுகள் போட்டேன். இப்போது எனது முகவரியைக் கிளிக்கினால் இந்தக் கவிதைக்குச் செல்கிறது. தவிர, புதிதாக இரண்டு பின்னூட்டங்கள் வேறு. என்ன நடக்கிறது இங்கே? எனக்கு யாராவது சொல்லுங்கள்.

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா, திகழ்மிளிர், அனானி நண்பர்.

Unknown said...

All tamilians wish the Eelam tamils to lead a normal life.We pray for that day to come.