வாசிக்கவெனப் புரட்டிய பக்கத்தினின்று
சிறகு தழைத்தெழும் விழிப்பறவை
முடிவற்ற வானில்
திசைதப்பியலைகிறது.
வரிகள் வழிந்தோடிவிடும் வெற்றிடங்களில்
ஞாபகக் கத்திகள் சுழல்கின்றன.
உபரியாய்
ஊளையிடுதலே ஒரே பொழுதுபோக்கான
கீழ்வீட்டு நாய்கள்…
சாணை தீட்டுபவனின் கூர்மைக் குரல்…
வெறுமையைத் தெளிக்கும் வெயிலை
விரட்டுவதாக
சதா தற்பெருமையடிக்கும் மின்விசிறி…
ஆளற்ற தெருவில் ஒலிப்பானின்
அநாவசிய அலறல்கள்…
கதவுக்கு வெளியில்
பஞ்சாயத்து வேண்டும் பல்குரல்கள்...
பலவீனமறிந்த பிச்சைக்காரி
கூடவே அழைத்துவரும் சிறுகுழந்தையின்
பாவனைப் பசிக்குரல்...
இவை தாண்டி
பனிக்கால மரங்களுள்
சிறைப்பட்ட துளிர்களாய்
காத்திருக்குமோ கவிதை?
19 comments:
வாசிக்கிறவர்களை வசீகரிக்கிறது உங்கள் எழுத்துகள்!!
நல்ல வரிகள்.."நதியறியும் கரை விரிவு" பதிவை ஏன் நீக்கி விட்டீர்கள்?
முதன்முதலாக வந்திருக்கிறீர்கள் சந்தனமுல்லை:) இந்தப் பெயரை எங்கே தேடிப் பிடித்தீர்கள். வாய்நிறைய அழைக்கத் தகுந்த பெயர். உங்கள் வலைப்பூ பக்கம் போய்ப் பார்த்தேன். எழுத்துக்கள் அவரவர் வாழ்வின் தெறிப்புகளே என்று மீண்டும் உணர்ந்தேன்.
சிறீராம் பொன்ஸ்! (உங்கள் பெயரின் முதல் எழுத்து தட்டச்சுப் பலகையில் எங்கிருக்கிறது?) 'நதியறியும் கரைவிரிவை'யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தேன்:) அது சற்று வெளிப்படையான, தனிப்பட்ட உணர்வைப் பேசுவது என்பதால் நீக்கிவிட்டேன். கூர்ந்த கவனிப்புக்கும் கருத்துக்கும் நன்றி.
aahaa arumaiyaaga ullathu ungal kavithai...vaazhthukkal nanbare!
"இவை தாண்டி
பனிக்கால மரங்களுள்
சிறைப்பட்ட துளிர்களாய்
காத்திருக்குமோ கவிதை?"
அங்கணம் காத்திருக்கும் கவிதைகள் தானே தங்களது...
போன பதிவைப்பற்றி நானும் கேட்க நினைத்து கிட்டத்தட்ட தாங்கள் சொன்னதை ஒட்டியே யோசித்து தவிர்த்துவிட்டேன்...:)
புதிய வடிவமைப்பு அருமையாக உள்ளது..
வாழ்க்கை என்பது நீள் சதுரமல்ல வட்டசுழல் பாதை மீண்டும் துவங்கிய இடத்திற்கு கொண்டுசெல்வது போல் இழந்த சந்தோஷங்களுக்கும்.....
தமிழ்நதி, உங்கள் எல்லா பதிவுகளையும் படித்து விடுபவள் நான். உங்கள் பக்கத்துக்கு தவறாது வந்துவிடுவேன், தங்கள் பெயரை தமிழ்மண முகப்பில் கண்டதும்! அதனால் இது முதல் வருகையல்ல..ஆனால் முதன்முறையாக மறுமொழி இட்டிருக்கிறேன். தங்களுக்கு சொல்லுமளாவிற்கு என்னிடம் என்ன இருக்கிறதென்றெண்ணி, படித்துவிட்டு போய்விடுவேன்..:-(
அப்புறம், பெயர், அது அப்பாவைத்தான் கேட்கவேண்டும். :-)
வைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதை தவிர என் பங்கு இதில ஒன்றுமில்லை!!
என் பக்கத்துக்கு வந்ததற்கு நன்றி!!:-)
தங்களது புதிய வடிவமைப்பு நன்றாக உள்ளது. பூனைகள் மிக பிடித்தமுங்களுக்கு எனத் தோன்றுகிறது..தங்களது கவிதைகளிலிருந்தும், தளத்திலிருந்தும்!!
நன்றி இனியா!-இப்போதெல்லாம் நல்ல நல்ல தமிழ் பெயர்களாக வருகின்றனவே:)
கிருத்திகா,
"வாழ்க்கை என்பது நீள் சதுரமல்ல வட்டசுழல் பாதை மீண்டும் துவங்கிய இடத்திற்கு கொண்டுசெல்வது போல் இழந்த சந்தோஷங்களுக்கும்....."என்றீர்கள்.
அப்படித்தான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எதனைக் காட்டிலும் காலத்தில் நம்பிக்கை உண்டு. அதுபோல் மருத்துவரில்லை.
புதிய வடிவமைப்பில் பூனைக்குட்டி இருந்தது. தூக்கிவைத்துக்கொண்டேன்:)
சந்தனமுல்லை,
"தங்களுக்கு சொல்லுமளவிற்கு என்னிடம் என்ன இருக்கிறதென்றெண்ணி, படித்துவிட்டு போய்விடுவேன்."
அது சரி! என் தலையைத் தடவிப் பார்த்தேன். இரண்டு கொம்புகள் முளைக்கவாரம்பித்திருக்கின்றன:) மேலும், யாராவது புகழக் கேட்டால் தோள்பட்டையின் பின்புறத்தில் லேசாக இரண்டு சிறகுகள் அரும்புவதாய் தோன்றுகிறது:)
உங்கள் அப்பாவுக்கு நல்ல ரசனை.
பூனைகள்... அவற்றைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் பெரிய புராணமாகிவிடும். இப்போது இங்கு சென்னையில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறோம். அது பூனைக்குட்டி போல மிருதுவானது. இப்போது ஆடு, மாடு, எருமையைக் கூட பிடிக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்:)
உங்கள் கவிதை றொம்ப பிடித்து போயிற்று. நல்ல கவிதை அல்லது நிகழ்வுகளுடன் கூடிச்செல்லும் உணர்வுத் தொகுப்பு.
//சிறைப்பட்ட துளிர்களாய்
காத்திருக்குமோ கவிதை?//
இல்லை.
இருந்தும் கவிதை வடிவம் பெறாத உணர்வுகள் துளிர்களாகவே மடிந்து விடுவதுண்டு, அதுவும் ஒரு சுகம் என்று என்னளவில் நினைப்பதுண்டு.
ம்ம்ம்...
//இவை தாண்டி
பனிக்கால மரங்களுள்
சிறைப்பட்ட துளிர்களாய்
காத்திருக்குமோ கவிதை?//
ம்ம்ம்.. புரிகிறது..
ரொம்ப நல்லா இருக்கு இந்த இளவேனில்.. முதல் முறை அவசரமாய் படித்தபோது எதுவும் மனதில் ஒட்டவில்லை.. நிதானமாக படித்த அடுத்தமுறைதான், ஒவ்வொருவரியும் அதற்கேயுரிய அழுத்தத்துடனும் பரிமாணத்துடனும் மனதுக்குள் காட்சியாயின.. வாழ்த்துகள்..
நதி புது வடிவோடு எழுதாத காரணத்தோடு வலைப்பூ வந்துள்ளீர்கள்.
"
பனிக்கால மரங்களுள்
சிறைப்பட்ட துளிர்களாய்
காத்திருக்குமோ கவிதை?"
பனிவரும் முன்னான ஒக்ரோபர் இலையுதிர்வு இங்கு ஆரம்பம்.
நதியின் கவிதைகள் சத்தமின்றி நதியாய் பாய்கிறது.
வாழ்த்துக்கள் நதி.
கலைவாணி,
என் பெயரை நானே எழுதும்போது வித்தியாசமாக உணர்கிறேன் கலைவாணி. ஏதேதோ கற்பனைகளோடு இந்தப் பெயரை வைத்திருப்பார்கள்போலும்... நான் பெயரை மாற்றி அவர்களை ஏமாற்றிவிட்டேன்.
கவிதை துளிராகவே மடிந்துவிடுவது சுகம் என்றா சொல்கிறீர்கள்....?
கிங்,
அந்தப் பெருமூச்சின் பொருள் என்ன...? இதெல்லாம் எழுதி என்ன.. எழுதாவிட்டால் என்ன என்பதா :) ஸ்மைலி உங்கள் கண்களுக்குத் தப்பாதல்லவா?
சரவணகுமார்,
நீங்களும் கவிதை எழுதுபவர் என்பதால் புரியும்... புரியும்.
bee' morgan
"நிதானமாக படித்த அடுத்தமுறைதான், ஒவ்வொருவரியும் அதற்கேயுரிய அழுத்தத்துடனும் பரிமாணத்துடனும் மனதுக்குள் காட்சியாயின.."
மற்றவர்களுடைய கவிதைகளையும் நான் பெரும்பாலும் காட்சியாகவே வாசிப்பேன். உங்கள் பெயரைத் தமிழில் எழுதி விளிக்கத்தான் முயன்றேன். முடியவில்லை:) வரவுக்கு நன்றி.
சாந்தி,
நீங்கள் வலைப்பூ ஒன்றை வடிவமைத்தால் பின்னூட்டமிட இன்னும் வசதியாக இருக்குமே.. பின்னூட்டத்தின்படி நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். அங்கு இலையுதிர்காலந்தான் மிக அழகியது இல்லையா...? வானவில் வானவில் என்கிறார்கள். வானவில்லும் தோற்குமிடம் மரங்களென அச்சமயம் தோன்றும்.
நதி சத்தமின்றிப் பாயும்
தனக்குள் துளி விழுத்தி அழும்
நதியொன்றே அறியுமதன் துயரம்
கரையோர நாணல்களும் அறியாது.
வணக்கம் தமிழ்நதி,
நான் கனடாவில் இல்லை யேர்மனியில் இருக்கிறேன். இங்கும் தற்போது இலயுதிர்காலம்தான் கனடாபோல. பனிகால வரவை எதிர்பார்த்து காலமும் நாங்களும்.
எனது வலைப்பதிவை இணைத்தேன் ஆனால் ஏனோ தெரியவில்லை. தங்கள் வலையில் பதிபடவில்லை.
சத்தமின்றிப் பாயும் நதி
சத்தமாய் அலையொதுக்கும்
கடலோடு சங்கமித்து
ஓங்கி அறையும் அலையோசையின்
அதிர்வும்தான் அமைதி.
நதி எப்போதும் அமைதிதான்
கடல் அதை காவாத வரை.
- சாந்தி -
// தமிழ்நதி said...
சரவணகுமார்,
நீங்களும் கவிதை எழுதுபவர் என்பதால் புரியும்... புரியும்.//
யாரோ உங்களுக்கு தப்பான இன்பர்மேஷன் கொடுத்துருக்காங்க தமிழ்.. நீங்களெல்லாம் எழுதறது கவிதை.. நான் கிறுக்குவது கிறுக்கல்.. :)
பலவீனமறிந்த பிச்சைக்காரிகூடவே அழைத்துவரும் சிறுகுழந்தையின்பாவனைப் பசிக்குரல்
வறுமையைக் கூட அழகான கவிதையாய் வார்ப்பித்துவிடுகிறீர்கள்.
சும்மா நாலு வரியில் பத்து கவிதையெழுதி விட்டு அதை ஒரு புத்தகமாக்கி விட்டு, அதற்கு புகழாரமாய் பத்தி பத்தியாய் எழுத ஒரு கூட்டம்.
அவையெல்லாம் வந்து படிக்கவேண்டும் உங்கள் பதிவுகளையும், கவிதையினையும்.
அன்புள்ள அமிர்தவர்ஷினி,
இது உங்கள் உண்மைப் பெயராயின் மிகப் பொருத்தமாக வைத்திருக்கிறார்கள். திடீரென எனது பல பதிவுகளில் உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கநேர்ந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நானும் இப்படித்தான் சிலவேளைகளில் எனக்குப் பிடித்தவர்களின் பக்கங்களில் பல மணிநேரங்கள் உலவித் திரிவேன்.
ம்ம்.ஏன் எழுதவில்லை என்று கேட்டவர் யார் .?பனிக்கால மரங்களில் சிறைப்பட்ட துளிர்கள் பகலவனின் கரங்கள் பட்டதும் துளிர்த்து எழுவதைப் போன்ற அழகான ஆக்கங்கள் உங்களுடையது.ஏன் இவளவு நாட்களாக உங்கள் வலைப்பூ பற்றிச் சொல்லவில்லை என்று இதயனைக் கோபித்தேன்
Post a Comment