10.20.2008

இராமேஸ்வரமும் இனவுணர்வும்


அநேக வீட்டுக்கூடங்களைப் போல எங்கள் வீட்டுக் கூடத்திலும்(விறாந்தையிலும்) மாலையானதும் அழுகையும் விம்மலும் பொங்கி வழியும். தொலைக்காட்சியில் நெடுந்தொடரொன்றில் யாராவது ஒரு பெண் அழுகையையும் வசனத்தையும் சமஅளவில் கலந்து வழங்கிக்கொண்டிருப்பாள். தொலைக்காட்சியின் முன்னால் அதற்குச் சற்றும் குறைவிலாத சோகம் ததும்ப யாராவது அமர்ந்திருப்பார்கள். நேற்று எனது அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது (அவ்வப்போதுதான் வருவது:)) வழக்கத்திற்கு மாறாக குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் -நாய்க்குட்டியையும் சேர்த்து பத்துப்பேர்-(கண்ணைப் போட்டுறாதீங்க) தொலைக்காட்சியின் முன் அசையாது அமர்ந்திருந்தார்கள். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிக்கொண்டிருந்தார். “கவிஞர் வைரமுத்து என்ன மாதிரிப் பேசினார் தெரியுமா”என்று என்னையும் உள்ளே இழுத்துப்போட்டார்கள். வழக்கமான குசும்பால் ‘பகல் கனவில் கவிஞர் வைரமுத்து வரவில்லை’எனச் சொல்லிவிருந்தேன். நிகழ்ச்சியின் கனம் என் குசும்பில் கத்திவைத்தது.

"கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலை, வாக்குகளாக விழவேண்டுமா?" என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் உணர்வுபூர்வமாகக் கேட்டிருந்ததை பின்னால் இணையத்தளங்களில் வாசிக்கக் கிடைத்தது.


இலங்கைத் தமிழர்களும் தமிழக மீனவர்களும் சிங்கள அராஜக அரசினால் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து திரைத்துறையினர் இராமேஸ்வரம்வரை சென்று நடத்திய கூட்டத்தைப் பார்த்தபோது, கேட்டபோது ‘என்னடா நடக்குது இங்க…?’ என்ற வியப்புத் தாளவில்லை. கடந்த மாதம் வரை தமிழகம் இருந்த உறைநிலைக்கும் இன்றைய கரைதலுக்கும் இடையில் மலையளவு வித்தியாசம். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால் குற்றம், கூட்டம் நடத்தினால் கைது, ஈழத் தமிழர்களுக்கு வீடு கொடுக்கப் பயம் என வேற்றுக் கிரகவாசிகளென (சீமான், பழ.நெடுமாறன்,வைகோ,திருமாவளவன் போன்ற சிலரைத் தவிர்த்து) ஈழத்தமிழர்கள் மட்டில் பாராமுகமாயிருந்த தமிழகத்தில் இனவுணர்வு விழித்தெழுந்தது எப்படி? ‘நான் இந்தியன்’என்ற நிலைப்பாடு ‘நான் தமிழன்’எனக் கண்ணிமைக்குத் தருணத்தில் மாறியது எங்ஙனம்? ‘ராஜீவ் காந்தி கொலை’ என்ற பதினெட்டாண்டு கால இருட்திரை விலகி உண்மை கண்கூசும்படியான வெளிச்சத்துடன் அரங்கேற என்ன காரணம்?

ஆக,இனவுணர்வு என்பது தமிழர்களிடம் ஒளிந்திருந்திருக்கிறது. இருண்ட சிறைக்கூடங்கள் மற்றும் சித்திரவதைகளின் மீதான அச்சம்தான் அவர்களுக்கு வாய்ப்பூட்டுப் போட்டிருக்கிறது. அன்பு உலகைப் புரட்டிப்போடும் என்பதெல்லாம் வெறும்புரட்டு. அதிகாரம்தான் யாவற்றும் எசமானன்.


நடப்பவற்றையெல்லாம் பார்க்கும்போது“கலைஞர் எப்போதடா பேசுவார்” என்று காத்துக்கொண்டிருந்த மாதிரி இருக்கிறது. அவருடைய நீண்ட மௌனத்தின் விலை அதிகம். ஹிட்லரின் பேச்சு-யூதர்களை அழித்தது. கலைஞரின் மௌனம்…? அரசியல் சூத்திரங்கள், சதுரங்கக் காய்நகர்த்தல்கள், தொலைநோக்கு இலாபம் எனப் பல சொற்றொடர்கள் சமகால நிலையை விளக்குவதற்கான பிரயோகத்தில் உள்ளபோதிலும், நாற்காலிகளையே கரைத்தது ஒரு இறுவட்டில் இடம்பெற்ற இனவழிப்புக் காட்சிகள்தான் என்ற கதையும் உலவுகிறது. இருக்கலாம்! கலைஞர் வெறுமனே ஒரு அரசியல்வாதியாக மட்டும் இருந்திருந்தால் மேற்குறித்த கூற்றைப் புறங்கையால் புறந்தள்ளிவிடலாம். அவருடைய கலையுள்ளம், கவியுள்ளத்தை அக்காட்சிகள் ஏன் கரைத்திருக்கக்கூடாது? ‘நீயறியாய் நீராழம்’என்று இதை வாசிக்கும் எவரேனும் இந்நேரம் சிரித்துக்கொள்ளவும் கூடும்.


‘இந்த மலர் யாரால், எதனால் மலர்ந்தது?’என்ற கேள்விகள் வியர்த்த வியாக்கியானங்கள். மலர்ந்திருக்கிறது. அதுவொரு தேவமலரைப் போலிருக்கிறது. அதன் வாசனையூடே நடந்துபோகும்போது உண்டாகும் பரவசத்திற்கு இணையில்லை.


இராமேஸ்வரத்தில் திரைத்துறையினரால் நடத்தப்பட்ட கூட்டத்தைப் பார்த்தபோது, அவர்களெல்லாம் பேசியதைக் கேட்டபோது ‘‘இந்நிலை வந்தடைய எப்பாடுபட்டோம் எம் தேவா’ என்று நெகிழ்ந்துபோய் அழத் தோன்றியது. 'தமிழகம் விழித்துக்கொண்டதென மகிழாதீர். இந்திய இறையாண்மை அதன் கண்களை மறுபடியும் மூடிவிடும்'என்று யாரோ அசரீரியாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும், பதினெட்டு ஆண்டுகள் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் விலக்கப்பட்டவர்களாக வாழ்ந்திருந்த வலி கொடிதிலும் கொடிது. பதினாறு மைல் தொலைவில் ஒரே மொழி பேசுகிற சகோதரர்கள் இருந்தும் யாருமற்ற ஏதிலிகள் போல – ஒரு கை வெட்டப்பட்ட நிலையிலும் மறுகையால் எங்கள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தோம். எண்பதுகளுக்குப் பிற்பாடு தமிழகத்தில் இப்படியொரு இன அலை அடிப்பது இதுதான் முதற்தடவை. பேச்சு-அதிலும் திரைத்துறையினரின் பேச்சு அரிதாரம் கலைத்ததும் அதுவாக கரைந்துவிடும் என்பது சில ‘அறிவுஜீவி’களின் கணிப்பாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரிதாரர்கள்தான் அதிகாரர்களாக மாறியிருக்கிறார்கள். வரலாற்றை மாற்றியுமிருக்கிறார்கள். தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு துரும்பு கிடைத்தாலும் பற்றிக்கொள்ளவே துடிப்பான். நாங்களோ கண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறோம்.


இனி இராமேஸ்வரம் பேச்சு: திரு.டி.ராஜேந்தர் ‘நான் எப்பேர்ப்பட்டவன்’ என்று கொஞ்ச நேரம் எடுத்துரைத்துவிட்டு, வழக்கமான தன் பாணியில்…
“நாங்கள் மீனுக்குப் போடுவோம் வலை

உத்தரவு கொடுத்தால் எதிரிகளைச் செய்வோம் கொலை

தமிழன் உணரவேண்டும் தன் நிலைஎன்றார்.


இயக்குனர் கே. எஸ்.ரவிக்குமார் ஈழத்தமிழர்களாகிய உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையூட்டிப் பேசிவிட்டு “ஈழத்தமிழர்களுக்கு மேலும் இன்னல் நடந்தால் தமிழகம் இராமேஸ்வரக் கரையைத் தாண்டி வரத் தயங்காது”என்றார்.


இயக்னநர் சேரன் தன்னுடைய சினிமாவைப் போல யதார்த்தமாகவே பேசினார். “புரட்சி என்பது உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும். திரைத்துறையினர் செய்யட்டும்@ அரசியல்வாதிகள் செய்யட்டும்… என்று நீங்கள் கையைக் கட்டிக்கொண்டிருந்து ஆகாது. மக்களாகிய நீங்கள் உங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனையாக அதைக் கருதிப் பங்கேற்கவேண்டும்.”என்றார்.


இயக்குனர் சீமான் என்ன பேசியிருப்பார், எப்படிப் பேசியிருப்பார் என்பதை அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்குப் போனவர்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. ‘பேச்சில் அனல் பறந்தது’என்று எழுதுவதை வாசித்திருக்கிறோம். அதை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு இரண்டு முறை கிட்டியது. விஷயஞானம்,தனது பேச்சோடு பார்வையாளரைக் கட்டிப்போடும் திறன், உணர்வுப்பெருக்கு… (வியர்வைப் பெருக்கும்) உடல்மொழி… என அவர் பேச ஆரம்பித்தால் கூட்டம் காதைக் கொடுத்துவிட்டுக் கட்டுண்டு கிடக்கிறது.


“பர்மாவில் தமிழனை அடித்தார்கள். பம்பாயில் தமிழனை அடித்தார்கள். மலேசியாவில் தமிழனை அடித்தார்கள். கேரளா, கர்நாடகா,ஆந்திராவில் தமிழர்களை அடித்தார்கள். ஆனால், நம்மை அடித்தவர்களை திருப்பி அடித்த ஒரே இடம் தமிழீழ மண்தான்”என்றார். கைதட்டல் காது கிழிந்தது.

மேலும், ‘தமிழீழம் இன்னமும் கிடைக்கவில்லை என்று யாரும் நினைத்துக்கொண்டிருக்கவேண்டாம். அது எப்போதோ கிடைத்துவிட்டது. அங்கே இப்போது எல்லை விரிவாக்கம் நடந்துகொண்டிருக்கிறது. மேலும் சர்வதேச அங்கீகாரத்தை தமிழீழம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது”என்றார்.


இயக்குனர் அமீர் “தமிழ்நாட்டிலிருந்து எம்.பிக்கள் மத்திய அரசுக்கு வேண்டும். ஆனால், தமிழர்கள் வேண்டாமா?”என்று கேட்டார். அவருடைய பேச்சும் ஆழ்ந்த கருத்துடையதாகவும் உணர்வுபூர்வமாகவும் அமைந்திருந்தது.


நடிகர் லிவிங்டனின் பேச்சு ஒரு பிரார்த்தனைபோல உள்ளத்தைக் கரைக்கும்படியாக அமைந்திருந்தது. தானும் கண்கலங்கி கூட்டத்தையும் கலங்கவைத்தார்.


நடிகர் வடிவேலு ஈழத்தில் நடக்கும் இனவழிப்பை தான் இணையத்தளங்களில் பார்த்து ஆழ்ந்த துயரமடைந்ததாக கண்கலங்கிப் பேசினார். அங்கே அமைதி நிலவ இந்தியா அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார். ‘பெரியவங்க என்ன சொல்றாங்களோ அதுக்கு கட்டுப்பட்டு’என்ற வாக்கியத்தை அடிக்கடி பிரயோகித்தார்.


நான் சீமானை வியந்துகொண்டிருக்க, எங்கள் வீட்டு ‘குட்டி நட்டி’களின் வாக்குகளை அள்ளிக்கொண்டு போனவர் மன்சூர் அலிகான்தான். ஏனென்றால் அவர்தான் நிறைய கெட்டவார்த்தைகளால் மஹிந்த ராஜபக்சவைத் திட்டித் தீர்த்திருந்தார். ‘பிச்சைக்கார நாய்’, ‘மயிராண்டி’ ‘அவனுக்குத் திறந்து காட்டவா இங்க இருக்கோம்’ இன்னபிற வசவுகளும் அவற்றுள் அடக்கம்.


“ராஜ பக்சே! நீ ஒரு கோட்சே”
என்றார் இருந்தாற்போல. வில்லன் நடிகராகவே அவரைப் பார்த்திருந்தவர்கள் வியக்கும்படியாக திடீரென்று கதாநாயகனாகிவிட்டார். கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் யாரோ எழுந்துவந்து காதில் குசுகுசுக்க ‘எந்தச் சட்டத்தில உள்ள தூக்கிப் போடப் போறாங்க… 306 ஆ...----------- என்று கேட்டுத் தனது 'சிறையறிவை' நிரூபித்தார். ஆக, அஞ்சா நெஞ்சன் மன்சூர் அலிகானுக்கு உண்மையிலேயே ‘தில்’இருப்பதைக் கூட்டத்தில் பார்க்க முடிந்தது.


மன்சூர் அலிகான் கேட்ட அதே கேள்வியை சேரன் வேறு விதமாகக் கேட்டார். “மன்சூர் அலிகான் பேசிக்கொண்டிருக்கும்போது ‘அடக்கி வாசிங்க… பொலிஸ்காரங்க நிக்கிறாங்க’என்று குசுகுசுக்கிறார்களே… இங்கே காவலுக்கு நிக்கிற பொலிஸ்காரங்க என்ன மராட்டியங்களா… அவங்களும் தமிழங்கதானே… அப்படியானால் தமிழனுக்காகப் பேசவிடாமல் தடுப்பது யார்…? என்ன நடக்குது இங்க?”என்று குரலெழுப்பினார்.


கவிஞர் நா.முத்துக்குமாரின் கவிதையைக் கேட்டதும்… அழுததை இங்கே சொல்ல மாட்டோம். நல்லவேளை இரவாகியும் மின்விளக்குகள் அணைக்கப்பட்டே இருந்தன.


பேரணிக்குத் தலைமை தாங்கிய இயக்குனர் பாரதிராஜா தனது கரகரப்பும் கணீரும் கூடிய குரலில் இராமேஸ்வரத்தில் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும் காரணத்தைச் சொன்னார்.
“இது ஈழத்தமிழர்கள் அகதிகளாக வந்து கால் பதித்த இடம். கண்ணீர் விட்ட இடம். எனவேதான் இங்கு வந்தோம். சென்னையில் உட்கார்ந்துகொண்டு முதுகையா சொறிய முடியும்? சாவு வீடு என்றால் நாம்தான் அந்த வீட்டுக்குப் போகவேண்டும். அதை விட்டுவிட்டு ‘பிணத்தைத் தூக்கிக்கொண்டு என் வீட்டுக்கு வா’என்று கூறுவது சரியாக இருக்காது”என்றார். மேலும் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளது நிர்வாகத் திறனையும் அங்கு வாழும் மக்களின் தமிழ் பற்றினையும் வெகுவாகச் சிலாகித்துப் பேசினார்.


இவர்களைவிட நடிகர்கள் ஜீவா, பாண்டியராஜன், கருணாஸ், பார்த்திபன், இயக்குனர் வி.சி.குகநாதன், தயாரிப்பாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், மீனவ சங்கத் தலைவர்கள் இன்னும் பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.
“பேசமாட்டேம் பேசமாட்டேன்னு சொல்லிட்டுப் பேசிட்டுப் போய்ட்டாங்கய்யா” என்பதுபோல ‘இங்கு அரசியல் பேசவேண்டாம். எதிரிகளைச் சாடும் மேடை இதுவல்ல’என்ற தொனியில் எல்லோரும் சொன்னாலும் ஒரு வார்த்தையாவது ‘உள்குத்து’வைத்துச் சொல்லாமல் மேடையைவிட்டு இறங்கவில்லை என்பதைக் கவனித்தோம். பதில்குத்து அடுத்த பக்கத்தில் இந்நேரம் தயாராகிவிட்டிருக்கும்.


எல்லோரும் நன்றாகவே பேசினார்கள். ‘தமிழரைய்யா நாங்கள் தமிழர்’என்று பெருமிதம் பொங்கி வழிந்தது. “பேச்சுப் பேச்சாவே இருக்கட்டும். ஆம்மா…”என்று வடிவேலு பாணியில் இம்முறையும் சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எனினும்‘சொல்லில் விளையும் செயல்’என நம்பவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இம்முறையேனும் சொல் சொல்லாகவே உறையாதிருக்கட்டும். மேலும், வாராமல் வந்த இச்சாதகமான சூழ்நிலையை, விடுதலைப் புலிகள் பின்னடையும்போதெல்லாம் பட்டாசும் பலகாரமும் சுட்டுக் கொண்டாடும், அவர்கள் முன்னேறும்போதெல்லாம் புண்ணிலே புளிப்பற்றிக்கொண்டதுபோல பதறும், சுயலாபத்திற்காக ஒரு இனத்தையே இழிவுசெய்து அழிவுக்குத் துணைபோகும், சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு ஒத்தூதும் சில உள்ளுர் ஊதுகுழல்கள் தகிடுதத்தங்கள் செய்து கெடுக்காமலிருக்கவேண்டுமே என்பதே இப்போதைய முதன்மைப் பிரார்த்தனை.

22 comments:

இரவி சங்கர் said...

தமிழரய்யா நாங்களெல்லாம் தமிழர்!

கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரைக்கும் ஈழச் சகோதர, சகோதரிகளை நாங்கள் கை விட மாட்டோம் உறவுகளே. உங்கள் கண்ணீர் துடைக்க, உன் தோளோடு கை அனைத்து கூடவே நடக்க எங்கள் கை விலங்குகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. நன்றி.

RAGUNATHAN said...

காந்தியை கொன்றவன் தமிழனா? இந்திராவை கொன்றவன் தமிழனா? அந்த மொழி பேசும் பதர்கள் நாடாளலாம்... அந்த இனம் நன்றாக தின்று கொழிக்கலாம்....கொழுபெடுத்து பேசலாம்.....ஆனால் லட்சக் கணக்கில் எம் தமிழர் வீடிழந்து...சுற்றம், உறவு, தாய், தந்தை, சகோதர சகோதரிகளை இழந்து....கண் கானா தேசத்தில்....கேவலம் இந்த வயிற்றுப் பிழைப்புக்காக.....வாழ்நாள் முழுவதும் ஈழத்தை நினைத்து ஏங்கி சாக வேண்டுமா...
எங்கள் கைகள் கட்டப் பட்டுள்ளன சகோதரி...எங்களால் இபோதைக்கு பேசுவதை தவிர வேறென்ன செய்ய முடியும்...தேர்தல் வரட்டும்...ஆனா இதை தேர்தல் பிரச்னை ஆகினால் மட்டுமே ஒரு தெளிவான முடிவு இந்திய அரசின் கொள்கையில் ஏற்படும்...இல்லாவிடில் இந்த வெட்கங்கெட்ட அரசு வேடிக்கை மட்டுமே பார்பதோடு நில்லாமல் சிங்கள தே...யா பசங்களுக்கு உதவிக் கொண்டிருக்கும்....

ரகுநாதன்
தமிழ்நாடு

சந்தனமுல்லை said...

அதே பிரார்த்தனைகள் தான் தமிழ்நதி எங்களுக்கும்!!

Anonymous said...

//சுயலாபத்திற்காக ஒரு இனத்தையே இழிவுசெய்து அழிவுக்குத் துணைபோகும், சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு ஒத்தூதும் சில உள்ளுர் ஊதுகுழல்கள் தகிடுதத்தங்கள் செய்து கெடுக்காமலிருக்கவேண்டுமே //

தாங்கள் வருத்தம் புரிகிறது!ஆனால் அல்ரெடி சோ இராமசாமி+சு.சுப்பிரமணியசுவாமி+இந்து ராம்+மணிசங்கர அய்யர்+ஜே.ஜெயலலிதா+நாராயணன்+மேனன் கம்பனி அன்ட் லிமிட் களத்தில் இறங்கிவிட்டார்க்ள் இந்த முறை என்ன செய்கிறார்கள் என பார்ப்போம்!

Ken said...

ஒரு இனத்தையே இழிவுசெய்து அழிவுக்குத் துணைபோகும், சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு ஒத்தூதும் சில உள்ளுர் ஊதுகுழல்கள் தகிடுதத்தங்கள் செய்து கெடுக்காமலிருக்கவேண்டுமே என்பதே இப்போதைய முதன்மைப் பிரார்த்தனை.

மற்றபடி அகதிகளுக்கான அடிப்படை வசதிகளை கூட இன்றைய தமிழக அரசும் செய்து தந்திருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

அரசியல் பகடையாட்டங்களுக்கு ஈழத்தமிழர்களை பலிகொடுக்க காரணம் அவர்களுக்கு இங்கே ஓட்டுரிமை இல்லாததுதான்.


இன அழிவுப்படுகொலைகளை உடனே நிறுத்த ஆவண செய்ய வேண்டியதும் தமிழக முதல்வர்தான். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் எதிர்க்கதான் செய்வார்கள், முதலவர் இனியும் தாமதிக்காமல் மத்திய அரசுக்கு நெருக்குதலை தரவேண்டும்.

தமிழ்நதி said...

ரவி சங்கர்,

"மனுசங்கய்யா நாங்களும் மனுசங்கய்யா"என்பதை நினைவுபடுத்தினீர்கள். இப்போது வார்த்தைகள் கூட வாரா. செயலாற்றும் தருணம் இது. தமிழக அரசு மத்திய அரசுக்குக் கொடுக்கும் அழுத்தத்திலேயே இனி எல்லாம் தங்கியிருக்கிறது.

ரகுநாதன்,

தேர்தல் வரும். ஆனால், நாற்காலிகள் மீதான விருப்பு இருக்கும்வரைக்கும் ஈழத்தமிழர்களுக்கு விடிவு வருமா என்பது... பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். உங்கள் உணர்ச்சிமயமான கருத்துக்கு நன்றி.

சந்தனமுல்லை,

நான் இந்தியாவில் இருக்கும் ஊதுகுழல்களை மட்டும் குறிப்பிடவில்லை தோழி... ஈழத்தவர்களிலேயே ஒரு சிலர் தேசியத்திற்கெதிரான நிலைப்பாட்டுடன் இருக்கிறார்கள் (இரண்டு வீதத்திலும் குறைவு) அதற்கு அவர்களின் காழ்ப்புணர்வும் கயமைத்தனமும்தான் காரணம். 'செத்த வீட்டில் நானே பிணம்... கல்யாண வீட்டில் நானே மாப்பிள்ளை'என்றில்லாது போகும்போது ஏற்படும் வெப்பியாரத்தில் புழுங்குகிற மனம். காலத்திடம் இருக்கிறது எல்லாவற்றிற்குமான விடை.

தமிழ்ப்பிரியன்,

"அல்ரெடி சோ இராமசாமி+சு.சுப்பிரமணியசுவாமி+இந்து ராம்+மணிசங்கர அய்யர்+ஜே.ஜெயலலிதா+நாராயணன்+மேனன் கம்பனி அன்ட் லிமிட் களத்தில் இறங்கிவிட்டார்க்ள் இந்த முறை என்ன செய்கிறார்கள் என பார்ப்போம்!"

பார்ப்போம்... பார்ப்போம்...:)


கென்,
"இன அழிவுப்படுகொலைகளை உடனே நிறுத்த ஆவண செய்ய வேண்டியதும் தமிழக முதல்வர்தான். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் எதிர்க்கதான் செய்வார்கள், முதலவர் இனியும் தாமதிக்காமல் மத்திய அரசுக்கு நெருக்குதலை தரவேண்டும்."

என்றீர்கள். கலைஞரின் நெடிய மெளனம் இப்போதுதான் கலைந்திருக்கிறது. என்ன நடக்கப்போகிறதென்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இது முக்கியமான ஒரு திருப்புமுனை.

தென்றல் said...

பிரார்த்தனைகள்!
(இதைவிட வேற வழி தெரியவில்லை.)

sathiri said...

80 களில் ஈழத்தமிழர்மீதான அன்பையும் அக்றையையும் . பின்னர் 90 களில் கெடுபிடிகளையும் அவமானத்தையும் இரண்டையுமேஈழத்தமிழன் என்கிற முறையில் அனுபவித்தவன்.இப்பொழுது மீண்டும் பூத்திருக்கும் ஈழத்தமிழ் ஆதரவு வெறும் அரசியல் வாதிகளின் அரசியலாகிப்போய்விடாமல் உண்மையான உணர்வாக இருக்கவேண்டும் என்பதே எல்லா ஈழத்தமிழரையும் போல என்னுடையவேண்டுதலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

யட்சன்... said...

நெகிழ்வுடன் எழுதியிருப்பீர்கள் போலும்...வழமையான அடர்த்தியில்லாத நடையில் உங்களை வாசிப்பது இதுதான் முதல்முறை...

இப்போதெல்லாம் உங்கள் பதிவுகளில் நான் பின்னூட்டம் போடுவதேயில்லை, காரணம் இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறீர்கள்.....பின்னர் அது தரும் சிந்தனைகளில் பின்னூட்டமிட மறந்து விடுகிறது.

புழுங்கும் அறையின் சன்னல் திறந்தவுடன் குபீரென பாயும் குளிர்காற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்த உணர்வுகளை ராமேஸ்வரம் நிகழ்வுகள் உஙகளுக்கு தந்திருக்கிறது என நினைக்கிறேன்.

உங்கள் கனவுகள் நனவாகிட வாழ்த்துகள்....

சுரேஷ் ஜீவானந்தம் said...

வாழ்க தமிழர். வாழ்க தமிழீழம்.

உயிரைக் கொடுத்து விடுதலைக்காகப் போராடும் வீரர்களுக்குத் தலைவணங்குவோம்.

தமிழ்நதி said...

கோழைத்தனமான அனானிக்கு,

ஆம். நீங்கள் சொன்னபடி நான் உங்களது பின்னூட்டத்தைப் பிரசுரிக்கவில்லை. பிரசுரிக்கவும் மாட்டேன். பிறகு எதற்காகப் பின்னூட்டம் விடுகிறீர்கள்? முகம் காட்ட முடியாத கோழைக்கு கருத்துச் சொல்லும் உரிமை கிடையாது. தவிர, குத்திவிட்டுக் கூத்துப் பார்க்க முனைபவரையும் உண்மையான அக்கறையுள்ளவரையும் பிரித்தறிய எனக்குத் தெரியும். மேலும், நீங்கள் யார்... உங்கள் 'உணர்வு'என்ன என்பதை நான் அறிவேன்.

நன்றி தென்றல், வழக்கம்போல வருகைக்கும் வாஞ்சைக்கும்.

சாத்திரி,
"இப்பொழுது மீண்டும் பூத்திருக்கும் ஈழத்தமிழ் ஆதரவு வெறும் அரசியல் வாதிகளின் அரசியலாகிப்போய்விடாமல் உண்மையான உணர்வாக இருக்கவேண்டும்."

என்கிறீர்கள். மீண்டும் மீண்டும் நம்புகிறோம். இம்முறையும் ஏமாற்றமா அன்றேல் ஏதேனும் மாற்றம் வருமா என்பதற்கு காலமொன்றே பதில் சொல்லும்.

யட்சன்,

நீங்கள் எனது வலைப்பூ பக்கம் அடிக்கடி வந்துபோகிறவர் என்பதைக் கீழ்க்காணும் வார்த்தைகள் மூலம் அறியமுடிந்தது.

"நெகிழ்வுடன் எழுதியிருப்பீர்கள் போலும்...வழமையான அடர்த்தியில்லாத நடையில் உங்களை வாசிப்பது இதுதான் முதல்முறை...

அநேகர் எழுதிய விடயத்தை எழுதுகிறோம் என்ற எண்ணம் அடர்த்தியைக் குறைத்துவிடுகிறது போலும். மேலும், நீங்கள் சொன்னதுபோல நெகிழ்ந்துதான் போயிருந்தேன். இப்போது கொஞ்சம் தெளிந்திருக்கிறேன்:)

சுரேஷ் ஜீவானந்தம்,

நம்புவோம்... கோசங்களையல்ல... செயல்களை.

sukan said...

//சில உள்ளுர் ஊதுகுழல்கள் தகிடுதத்தங்கள் செய்து கெடுக்காமலிருக்கவேண்டுமே என்பதே இப்போதைய முதன்மைப் பிரார்த்தனை.//

பெருமளவு மக்களின் எதிர்பார்ப்பும் இதுவே, எங்கள் நாட்டு கோடாலிக்காம்புகள் இது அரசியல் நாடகம், அது இது என்று முணுமுணுத்துக்கொண்டிருக்கையில் இந்த இராமேஸ்வரம் பேரணி அதற்கு அப்பால் தமிழுணர்வை, இனப்பற்றை எழுச்சி கொள்ளச் செய்துள்ளது, இது முணுமுணுத்த சிலரின் வாயை அடைத்துள்ளது.

நிகழ்வு குறித்து உங்கள் தொகுப்பு நன்றாக உள்ளது.

Anonymous said...

அவங்க ...இராமேஸ்வரத்தில் தூள் பறக்க கலக்கினாங்கள் என்றால் . மறுபுறம் ..நீங்கள் இந்த பதிவில் எழுத்தில் முழங்கியிருக்கீங்க ... சுப்பருங்க... ..கவுஜை மட்டும் எழுதமால் ...இப்படி நாலு விசயங்கள் எழுதுங்க மெடம்.. -;))

கிருத்திகா ஸ்ரீதர் said...

செய்தி குறிப்புகளின் நடுவே காண்பிக்கப்படும் சிறு சிறு வீடியோ காட்சிகளை கானும்போதெல்லாம் அங்கமெல்லாம் பதறுகிறது துப்பாக்கி எடுத்து சுடும் நம்மவரை எங்கே மற்றவர்கள் துப்பாக்கி துளைத்து விடுமோ எனவும் அக்காட்சியனை தப்பித்தவறி கூட காண இயலாதே என நெஞ்சு பதறுகிறது. இதற்கும் ஒரு முடிவு உண்டு தோழி.. காலம் கனிந்து விட்டது என்றே தோன்றுகிறது.. கனிய வேண்டும் என்று மன்றாடுகிறது...

யூர்கன் க்ருகியர் said...

ராமேஷ்வரத்தின் "highlights" சிறப்பாக பதிந்துளீர்கள். நன்றிகள் பல.

Arun Kumar said...

உங்களின் கவிதைகள் படித்தது உண்டு. ஓர் முறை உங்களுக்கு சென்னையில் வீடு கிடைக்கவில்லை என்று பதிந்து இருந்தீர்கள். அன்று என் மனதுக்கு பாரமாக இருந்தது. இன்று சத்தியமாக இல்லை. உங்களுக்கு வீடு கொடுக்க மறுத்தவரை கண்டிப்பாக பாரட்ட வேண்டும்.

உங்களை போன்றவர்கள் அதாவது இந்தியாவை சேராதவர்கள் எங்கள் தலைவர்களை விமர்சிப்பது முற்றிலும் தகாதது. ஏன் நான் பிரபாகரனை விமர்சித்தால் அது உங்களின் தமிழ் தேசிய துரோகமாக மாறி விடும்.

ஏன் இந்த பாகுபாடு?

இதை நீங்கள் எங்கள் நாட்டில் இருங்கும் போதே செய்து இருந்தால் சரி.

முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு உங்களில் தனிபட்ட வாழ்க்கை பிரச்சனை , உங்களின் நாட்டு பிரச்சனை பின்னர் உங்கள் ஈழ பிரச்சனை

எங்களை போன்றவர்களுக்கும் அதே போலத்தான்.

உங்களின் இயக்கத்தை நியாயமான முறையில் விமர்சிப்பொருக்கு தமிழ் விரோதி பட்டம் கட்டுவதில் இருந்தே தெரிகிறது..??

தமிழ் இஸ்லாமியர்களை ஜாப்னாவை விட்டு விரட்டியவர்களை எல்லாம் என்னால் ஆதரிக்க முடியாது.விமர்சிப்பவர்களை எல்லாம் தமிழ் விரோதி என்று சொல்லும் உங்கள் கூற்றை வன்மையாக கண்டிக்கிறேன்

குட்டிபிசாசு said...

இப்பதான் எல்லாரும் கொஞ்சம் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். இது நல்ல தொடக்கம்.

தமிழ்நதி said...

நர்மதா,

நீங்கள் சொல்வதுபோல 'இதுவொரு அரசியல் நாடகம்'என்றுதான் பலரும் கூறுகிறார்கள். ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள்தான் முக்கியம் என்பதைக் கருத்திலெடுத்துக்கொள்ள வேண்டும். 'யார் குற்றினாலும் அரிசியானால் சரி'என்ற நிலைதான் இப்போது.

ஏன் மதராசிக்கு வலைப்பூ இல்லையா? வடிவமைப்பது சுலபம். வலைப்பூ வைத்திருந்து அதனூடாக வந்து பின்னூட்டம் பதியும்போது அதன் மதிப்பே தனி. முயற்சித்துப் பாருங்கள்.

"கவுஜை மட்டும் எழுதாமல் ...இப்படி நாலு விசயங்கள் எழுதுங்க"

எதையும் திட்டமிடுவதில்லை மதராசி. எதை எழுதத்தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன்.

கிருத்திகா,

'காலம் கனிந்துவிட்டது'என்கிறீர்கள். இதுவும் ஒரு அலையாக எழுந்து அடங்கிவிடுமோ என்ற அச்சமே மிகுதியாக உள்ளது. திருப்பு முனைகள் சறுக்கிவிடுவதும் உண்டு. பார்க்கலாம்.

க்ருகேர்,

பெயர்களைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்யலாம் போலிருக்கிறது. உங்களுக்கு உங்களது பெயரின் பொருள் தெரிந்திருக்கலாம். சொல்லுங்கள்.

இந்தப் பதிவை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். ஆனால், எல்லோரும் எழுதுவதைப் பற்றி எழுதும்போது ஒரு சலிப்பு வந்துவிடுகிறது.

நாகராஜ் இளஞ்செழியன்,

முதலில் உங்களுக்கு என்மேல் ஏன் இத்தனை கோபம் என்று தெரியவில்லை. முகம்தெரியாத மனிதர்கள் மீது இத்தனை வன்மம் பாராட்டுவதே ஒருவகையான நோய்க்கூறுதான்.

எனக்கு வீடு கிடைக்கவில்லை என்பதற்கு முதலில் வருந்தியதாகவும், இப்போது மகிழ்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போடுவதற்கு மன்னிக்கவும். எனக்கு வீடு கிடைத்து நான் நலமாகவே இருக்கிறேன்:)இப்போது நினைத்தாலும் என்னால் எத்தனையோ வீடுகளை வாடகைக்கு எடுக்க முடியும் நண்பரே!

"உங்களை போன்றவர்கள் அதாவது இந்தியாவை சேராதவர்கள் எங்கள் தலைவர்களை விமர்சிப்பது முற்றிலும் தகாதது."

ஒரு விடுதலைப் போராட்டத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், நான் எனது பதிவில் 'உங்கள்' தலைவர்களை எங்கே விமர்சித்திருக்கிறேன் என்று எனக்கு முதலில் சொல்லுங்கள். என்னோடு கருத்து மாறுபாடுடைய யாரோடோ பேசிய சூட்டோடு சூடாக சில முன்தீர்மானங்களோடு வந்திருப்பீர்கள் போலும். 'உங்கள் தலைவர்கள்'-'எங்கள் தலைவர்கள்'என்று பேசும் நீங்கள் இயக்குனர் சீமானின் பேச்சை ஒரு தடவை கேட்டுப் பாருங்கள். 'நமது'என்றுதான் அவர் பேசினார். நீங்கள் ஏன் கோடு கீறிப் பிரிக்கிறீர்கள்?

"இதை நீங்கள் எங்கள் நாட்டில் இருங்கும்போதே செய்து இருந்தால் சரி."

இப்போது எங்கே இருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்? திரிசங்கு சொர்க்கத்திலா?

தவிர, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. அது விடுதலைப் புலிகளுக்கும் பொருந்தும்.

"விமர்சிப்பவர்களை எல்லாம் தமிழ் விரோதி என்று சொல்லும் உங்கள் கூற்றை வன்மையாக கண்டிக்கிறேன்."

கண்டியுங்கள் ஐயா...! இப்படி எத்தனை கண்டனம் பார்த்தாயிற்று. விமர்சிப்பவர்களை நான் தமிழ் விரோதி என்று சொல்லவில்லை. தமிழர்களுக்கு இத்தனை இன்னல் இழைக்கும் அராஜக சிறிலங்கா அரசைக் கண்டிக்காமல் 'விடுதலைப் புலிகள் அதைச் செய்தார்கள். இதைச் செய்தார்கள்'என்று முட்டையில் மயிர் பிடுங்குபவர்களைத்தான் சொன்னேன். பூரணர்கள், மகா புனிதர்கள் என்று இங்கு யாருமில்லை. உலகெங்கிலும் நடந்த விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றிலுமே குறைகளும் இருக்கத்தான் செய்தன. அதற்காக எதிரியைக் கொண்டாட முடியாது.

இப்போது விடுதலைப் புலிகளைத் தவிர்த்து தமிழ் மக்களுக்கு என்னதான் தீர்வு என்று நீங்களே சொல்லுங்களேன். அது நடைமுறைச் சாத்தியமா என்று நாங்களும் பார்க்கிறோம்.

Anonymous said...

தமிழ்நதி,
பெருந்தாய் தமிழகத்து உறவுகளிடம் வேண்டுவதெல்லாம் 'எங்கள் தாயகமீட்பில் அர்ப்பணிப்பு எங்களதாய், அரவணைப்பு உங்களதாய் இத்தனை நாட்காத்திருந்து காலமகள் இணைத்துவிட்டாள்.' இது தொடரவேண்டும் என்பதே.
நீண்ட நாட்களின் பின் உங்கள் பதிவை இன்று வாசித்துள்ளேன். காலச்சக்கரம் தரித்து நின்று இளைப்பாற அனுமதி வழங்குகிறதாக இல்லை. மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் வலைகளூடே சந்திப்போம் தமிழ்நதி.

Anonymous said...

தமிழ்நதி,
ஈழத்து மண்ணில் விடுதலைக் காற்றை எமது தமிழர்கள் மிக விரைவிலேயே சுவாசிப்பார்கள்! தமிழர்களின் தமிழீழத் தாகம் தீர உலகத் தமிழர்கள் வேண்டிக்கொள்கிறோம்.

தமிழ் அமுதன் said...

'தமிழகம் விழித்துக்கொண்டதென மகிழாதீர். இந்திய இறையாண்மை அதன் கண்களை மறுபடியும் மூடிவிடும்

அப்படி யாரும் சொன்னால் நம்பிவிடாதீர்கள்!

தமிழ் மக்கள் எப்போதும் இலங்கை தமிழர்களை
தங்களது உறவாக நினைப்பவர்கள்தான் !
என்னதான் மக்கள் ஈழ தமிழருக்காக புரட்சி
செய்தாலும் அதற்க்கு ஒரு தலைமை
வேண்டுமில்லையா?அந்த தலைமை
இப்போது பல வடிவங்களில் கிடைத்துள்ளது
குறித்து தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி
இப்போது!

இங்கே ஒருவர் உங்களை இந்தியர்
அல்லாதவர்!எங்கள் தலைவரை
விமர்சனம் செய்ய தகுதி இல்லை என!

அவருடைய தலைவர் யார் ? இங்கே சில
விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை
தவிர அனைவருமே எங்கள் இலங்கை
சகோதரர்களுக்காக எதையும் செய்ய
கூடியவர்கள்தான்.

மேலும்!
நான் ஈழ போராளிகளை பற்றி
ஒரு பதிவு போட்டு இருந்தேன் அதற்கு
வந்த பின்னுட்டங்கள் சில போராளிகளுக்கு
எதிரான கருத்தினை கொண்டு இருந்தது!
போராளிகளை பற்றி இலங்கை தமிழர்கள்
எண்ண எண்ணம் கொண்டுள்ளார்கள் என்று
கொஞ்சம் தெரிய படுத்த வேண்டுகிறேன்!

Vikram's said...

தமிழ் இப்போதான் "இராமேஸ்வரமும் இனவுணர்வும்" படித்தேன் உங்கள் உணர்வும் எழுத்தும் என்னை மிகவும் கவர்ந்தது

உங்கள் எழுத்துக்கு என் வாழ்த்துக்கள் தமிழ்.


தமிழர்கள் ராஜீவ் படுகொலைக்கு பிறகு வாய் பூட்டு இட்டு இருக்கிறார்கள்
தமிழ் சகோதர உணர்வற்று போய்விடவில்லை.நாம் அடங்கி கிடப்பது வெட்கம் தான் , அதனால் தான் அங்க அடிப்பது அதிகமாகுது. இந்த சத்தம் அங்கே சண்டையை நிறுத்தனும் இல்லை நிறுத்த வைக்கணும் .
நாம் இருக்கும் உணர்வே அங்கே இருக்கும் நம் ஈழச் சகோதரர்களுக்கும் பலம் ஈழச் சகோதர, சகோதரிகளை நாங்கள் கை விட மாட்டோம்
உணர்வால் அதரவு தருவோம் ..... உலகை உம்பக்கம் திருப்புவோம்