சென்னை
பகல் 10:30
வெயிலும் இருபதின்ம பையன்களும்
படுத்திருக்கும் அறை வாசலில் நிற்கிறேன்
தரையதிர விழும் பாத்திரமாய்
என் குரலுயர்த்தி
கனவுகளின் இழை அறுக்கவே
முதலில் நினைத்தேன்
கடைவாயொழுகக் கிடக்கும் இளையவன்
காதலியின் பெயர் மாதுளா என்னும்போதில்
விழிகள் பூக்கின்றன அடர்சிவப்பில்
இலைகள் சிலிர்க்குமந்த
ஆலமர விழுதொன்றில்
அவள் அழுதிருக்கக்கூடுமென்றான்
காதல் பிரவகித்து வழியும்
பின்னேரப் பொழுதுகளில்
கடற்கரையோர கல்லிருக்கையில்
இருளும் அவனும் அமர்ந்திருப்பதை
காணாது கண்டதுண்டு
மற்றவனின் கண்களில்
புழுதிகிளர் ஒழுங்கைகள் எழுதப்பட்டிருக்கின்றன
நண்பர்கள் சைக்கிள்களை
உந்தி மிதித்துப் பறக்கிறார்கள்
நீச்சல் பழகிய நாட்களைச் சொன்னபோது
நீர்சுழித்தோடும் வாய்க்கால்களையும்
மீன்கொத்திகளையும் வயல்களையும்
நாங்கள் பார்த்தோம்
போகுமிடமெல்லாம் அவன்
நிலத்தைக் கொண்டு திரிகிறான்
கடந்த மாதம் வந்துசேர்ந்தவன்
மௌனம் பழகியவன்
‘அடித்தார்கள் அக்கா’என
கண்கள் தாழ்ந்திருக்கச் சொன்னான்
தன்னுடலில் ஒட்டிய சதைத்துணுக்கை
பதறிப்போய் பிய்த்தெறிந்த கணத்தை
பேச்சின்போது அவசரமாகக் கடந்தான்
என்னோடு அழைத்துவந்தவளிடம்
எழுதமுடியாமற்போன பரீட்சைத்தாள் மாதிரிகள்
நிறையவே இருந்தன
மரங்கள் அனுப்பும் காற்றினையொத்தவள்
சின்ன அன்புக்கும் கரைந்துவழிபவள்
இப்போதெல்லாம்
அனைவர் குரலையும் மூடுகிறது
அவள் கோபம்
கல்லூரிகளாலும் வேலைத்தளங்களாலும்
மறுதலிக்கப்பட்டவர்கள்
தூங்கும் பகற்பொழுது
பதட்டம் தருகிறது
திருவான்மியூர் கடற்கரையில்
அலைகள் கதைக்கின்றன
வேம்புகளும் குயில்களும் நிறைந்த
வீடுகளைப் பிரிந்து வந்த
பிள்ளைகளைப் பற்றி
என்னுடன் இப்போது
உயிருள்ள ஐந்து பிள்ளைகளும்
சில ஞாபகங்களும்
சொற்ப ரூபாய்களும் உள்ளன
இலங்கையில்தான் போர் நடப்பதாக
எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.