5.05.2007

ஒரு பயணம்… சில குறிப்புகள்…


துப்பாக்கி முனைகளின் சூடு ஆறும்வரை (அது இப்போதைக்கு ஆறாது என்றறிந்தும்) இலங்கைக்குப் போவதில்லை என்ற தீர்மானத்தை ‘விசா’என்ற வில்லங்கம் தகர்த்தெறிந்தது. தெரிந்தே ஏதோவோர் தடயத்தை விட்டுச்செல்லும் திருடனைப்போல இந்த மனமும் விசித்திரமானதுதான். தீர்மானம் திரிந்துபோனதறிந்ததிலிருந்து மனசின் மற்றப் பக்கம் மத்தளம் கொட்டத்தொடங்கிவிட்டது. எப்போதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் பொறுப்புள்ள பக்கத்திற்குப் பழிப்புக் காட்டிவிட்டு, பழகிய வீதிகளில் இந்த நாடோடி மனம் நடக்க ஆரம்பித்துவிட்டது.

உயரம் மளமளவெனச் சரிந்து விமானம் தள்ளாடும்போது தெரியும் சாலைகளும் தென்னை மரச் செறிவும் எப்போதும்போல கிளர்ச்சியூட்டத் தவறவில்லை. பிறந்த பொன்னாடு, தவழ்ந்த மண் இன்னபிற மீதெல்லாம் கால இடைவெளியும் ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’என்ற பயமும் அயர்ச்சியைத் தந்துவிட்டபோதிலும், உள்ளுக்குள் ஒரு தந்தி அதிரத்தான் செய்தது. பறப்பின்போது தொற்றிய வானத்துக் குளிர் தோலில் எஞ்சியிருக்க வெளிவந்த உடலின் மீது அறைந்த வெம்மையுடன் உடனடி சமரசத்தில் இறங்கவேண்டியிருந்தது. வறுமையும் செழுமையும் இணைந்தே எழுதிய வீதிகளில் மாற்றங்கள் எதுவுமில்லை. வீதிகள் நெடுகிலும் மரப்பச்சை குளிர்ச்சி என்றால் இராணுவப் பச்சை அச்சமூட்டுகிறது. ஆங்காங்கே சோதனைச் சாவடிகளில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் என்று வரிசைகட்டி நின்றிருக்க அடையாள அட்டைகளை உற்று ‘வாசித்து’ சீருடையினர் ஏதோ ‘கண்டுபிடிக்க’ முயன்றுகொண்டிருந்தார்கள்.

புதுமையொன்றும் இல்லாத வார இறுதி நாட்களை விடுதியொன்றில் தூக்கத்திலும் ஞாபகங்களிலும் கழித்தபிறகு, திங்களன்று இந்தியத் தூதரகத்திற்குச் சென்றேன். காட்சிப்பிழை என்று கவிஞர் தாமரை எழுதியதுதான் எனக்கும் நிகழ்கிறதோ என்று வியந்து பார்க்கும்படியாக நீ…. ள….மா…மா….ன வரிசையொன்று தூதரகத்தின் முன் காத்திருந்தது. வளைந்து வளைந்து பல வரிசைகளாகியிருந்த அதை நீட்டி நேர்ப்படுத்தினால் காலிமுகத்திடலைத் தொடக்கூடும் என்பது மிகைப்படுத்தலன்று. உக்கிரத்தோடு எறித்த-எரித்த வெயில் உடலைக் கருக்கிக்கொண்டிருந்தது. குழந்தைகள் உரத்த குரலில் அழுதுகொண்டிருந்தார்கள். வெயிலில் முகம் சிவக்க நின்றிருந்த வெள்ளைத்தோல்காரரைக் கழித்துப் பார்த்தால், முன்னொருகாலம் ‘பாஸ்’வாங்க முத்திரைச் சந்தியில் வரிசையில் நின்ற காட்சியை அது நினைவுபடுத்தியது. நின்று கால் வலித்தவர்களிற் பலர் குடைகளைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்கள்.

கடந்த தடவை வந்திருந்தபோது வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்காரர்களுக்கு சிறப்புச் சலுகையாக தனி வரிசை இருந்தது. மண்ணிறத்தவர்களாகிய நாங்களும் வெள்ளைத்தோல் வரிசையில் இணைந்த ‘மிதப்புடன்’உள்ளே சென்று சுலபமாக விசா பெற்று வந்தோம். தனி வரிசை என்ற நினைப்பில் நின்று நிதானித்து இடியப்பமும் வடையும் சாப்பிட்டுவிட்டு பத்து மணி கடந்து இங்கு வந்தால்… அடிவயிற்றில் இடிவிழுந்து அத்தனையும் செரிமானம் ஆகிவிட்டது. ஏதோ மந்திரி பதவி பறிபோகும் விதமாக நின்ற இடத்தைத் தக்கவைக்க ஒரே தள்ளுமுள்ளு. உடல் தகித்து அனல் எறிகிறது. வியர்வை இன்றைக்கு விட்டால் இனியில்லை என்ற நினைப்பில் பெருக்கெடுக்கிறது. இதற்குள் பக்கத்தில் நின்ற பெண்மணியோடு ‘கூடைக்காரி’தரத்தில் சண்டையொன்றும் போடவேண்டியிருந்தது. (‘கூடைக்காரிகள் என்றால் குறைந்தவர்களா?’ என, விளிம்புநிலை மாந்தருக்குப் பரிந்துபேசுவோர் சண்டைக்கு வந்தால் கைகளை உயர்த்துமளவிற்கே இப்போது தெம்பு இருக்கிறது.)

“நீங்கள் இடையிலை வந்து புகுந்தா நாங்கள் என்ன செய்யிறது…?”

“நான் கடைசியிலைதான் வந்து சேந்தனான். அதுக்குள்ளை எனக்குப் பின்னாலை சனம் சேர்ந்திட்டுது. அது சரி நான் வந்து நிக்கேக்குள்ளை உங்களைக் காணேல்லையே”

“என்ரை ஹஸ்பன்ட் (?) எனக்காக நிண்டவர்”

“அப்ப என்னெண்டு நான் வரிசையிலை நிக்கேல்லை எண்டது உங்களுக்குத் தெரியும்… சும்மா ஏன் கொழுவுறீங்கள்”

இன்னவகையில் கதை வளர்ந்தது. ‘என்ரை தலையெழுத்தைப் பார்றா’என்று உள்ளுக்குள் வெட்கமும் துக்கமும் பொங்கியது. இதற்கிடையில், ‘பதினொரு மணிக்குப் பிறகு விண்ணப்பப் படிவங்கள் ஏற்கப்படமாட்டா’என எனக்கு அருகில் நின்றவர் சொன்னார். நேரமோ பத்தரையாகியிருந்தது. இந்நிலையில் கறுப்பு மோட்டார் சைக்கிளில் இராணுவச்சிப்பாய் ஒருவர் ஹெல்மெட் துப்பாக்கி சகிதம் விறைப்பாக வந்திறங்கினார். ‘உலக உருண்டையே எனது உள்ளங்கைக்குள்’ என்பதான விறைப்புடன் நடந்துசென்று, வரிசையை நெறிப்படுத்திக்கொண்டிருந்த பொலிஸ்காரரின் காதுக்குள் ஏதோ உரைக்க (உரத்துச் சொன்னாலும் சிங்களம் புரியாது) அந்த இடத்தை ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது. “யண்ட… யண்ட”என்று பொலிஸ்காரர் பக்கத்து வளவிற்குள் எங்களைப் போகப் பணித்தார் என்பது பொய்; விரட்டப்பட்டோம். அதுவரை நேரமும் பிடித்திருந்த இடம் பறிபோன துக்கம் பலரது முகத்தில் அப்பிக்கிடக்க ‘என்ன நடக்கிறது’என்ற கேள்விக்குப் பதிலற்றுக் கலைந்தோம். நாங்கள் அனுப்பப்பட்ட வளவின் கதவுகள் ஆரவாரமாகப் பூட்டப்பட்டன. அதன் முன் படபடவென்ற ஓசையுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்து நின்றன. ஆயத்த நிலையில் நிமிர்த்திய துப்பாக்கிகளும் சந்தேகப் பார்வையுமாக அவ்விரு இராணுவத்தினரும் எங்களைக் கண்ணும் கருத்துமாகக் ‘காவல்’காத்திருக்க, ‘ஜேம்ஸ் பொன்ட்’பாணியையொத்த காட்சிகள் நடந்தேறின. முன்னே தலைக்கவசமணிந்த மோட்டார் சைக்கிள் இராணுவத்தினர் சர் சர்ரென விரைய, அவற்றினைத் தொடர்ந்து கார்கள்,ஜீப்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. ‘எதுவும் நடந்துவிடக்கூடாதே’என்று என்னைப்போல வேறு சிலரும் வேண்டிக்கொண்டிருந்திருக்கலாம். சில நிமிடங்களின் பின் நாங்கள் திறந்துவிடப்பட்டபோது, எங்களோடு நின்றிருந்த வெள்ளைக்காரர்கள் முகத்தில் சிறுநகை இழையப் பார்த்தேன். அதன் பொருளென்னவென்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அன்றைய நாளின் இரண்டு மணித்தியாலங்களை வெயில் குடித்து அழித்தபின் ‘இனி நாளை வாருங்கள்’ என்ற குரலில் கலைந்து அவரவர் திசைகளில் துயர்பொங்க நடந்தோம். மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் அங்கிருந்தேன். எனக்கு முன்னால் முன்னூறு பேர் இருந்தார்கள். உங்களுக்குத் தெரியும்… பூதங்களைப் பற்றி… முன்னூறாவதாக நின்றிருந்த என்னை பதின்மூன்றாவது ஆளாக்க அதனால் முடிந்தது. “நாங்கள் விடியற்காலை நான்கு மணியிலிருந்து இங்கு நிற்கிறோம்”என்று எனக்குப் பின்னால் பதின்னான்காவதாக நின்றிருந்த பெண்மணி சொன்னார். ஆனால், அவருக்கு முன்னால் நின்று ‘இடம்பிடித்துத் தந்தவர்’மூன்று மணியிலிருந்தே அந்த இடத்தில் நின்றதாகச் சொல்லியிருந்தார். ஆக, நான்கு மணிநேரத் தூக்கத்தின் விலை எழுநூறு இலங்கை ரூபாய்கள் என்பதறிக. வெயிலில் மயங்கிவிழுந்தாலும் வரிசையைவிட்டு யாராவது வந்து தண்ணீர் தெளித்து எழுப்புவார்களா என்பது அன்றைய சூழ்நிலையில் ஐயமாகத்தான் இருந்தது. நீட்டி முழக்கியென்ன… விசா கிடைத்தது! வரிசையில் நின்றபோது ‘நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. என்றாலும், எந்த நாயும் உயிரைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு நாடு நாடாக ஓடியதாக, நான் வாசித்த எந்தவொரு சிறுவர் கதைப் புத்தகத்தில் தானும் எழுதப்பட்டிருக்கவில்லை.

கொழும்பு அதற்கேயுரிய சந்தடிகளோடும் வாகன நெரிசல்களோடும் வெளிக்கு பரபரப்பாக இயங்கினாலும், ஒரு பதட்டம்,பாதுகாப்பின்மை காற்றில் கலந்திருக்கிறது. “சிங்களவர்கள் என்றால் கொடியவர்கள்”என்ற பொதுப்புத்தி பரவலாக அநேகரிடையே இருக்கிறது. ஆனால், பல்லாண்டு வெளிநாடுகளில் வாழ்ந்தபிறகு கொழும்புக்கோ அதன் சுற்றுப்புறங்களுக்கோ செல்லும் தமிழர்களுக்கு ஒரு வினோதமான உணர்வு (ஒருவேளை வினோதமில்லையோ) ஏற்படும். அதாவது,வெறுக்கப்படவேண்டியது எல்லா மட்டங்களிலும் இருக்கின்ற அதிகாரங்கள்தானேயன்றி மனிதர்களல்லர் என்பதே அது. வெள்ளவத்தையில் வாழைப்பழம் விற்கும் சிங்கள இளைஞன் என்னை அடையாளம் கண்டு “ரொம்ப நாளா இந்தப் பக்கம் வரேல்ல… யாப்னா (யாழ்ப்பாணம்)போயிருந்தீங்களா…?”என்று கேட்டபோது நெகிழ்ந்துபோனேன். அறிமுகமற்றவர்களின் புன்னகையும் விசாரிப்பும் தரும் மலர்ச்சி தனியானதுதான். அந்த ‘அன்பில்’கனிந்து தெருவில் என்பாட்டில் சிரித்துக்கொண்டு போனதை சில நொடிகள் கழித்து கவனித்துத் திடுக்கிட்டேன்.

சென்னையில் உணவகங்களில் சாப்பிட உட்காரும்போது ‘காரமான உணவு எது…?’என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவதே வழக்கம். கொழும்பில் அந்தப் பிரச்சனையே இல்லை. வெள்ளவத்தையில் வீட்டுச் சாப்பாட்டை நெருங்கி வரும் வகையிலான ‘மயூரி’என்றொரு உணவகம் - இல்லை – சாப்பாட்டுக் கடை இருக்கிறது. மூக்கிலிருந்து சளி ஒழுக ஒழுகச் சாப்பிடலாம். அவ்வளவு உறைப்பு. விடுதியில் தங்கியிருந்த ஏழு நாட்களும் அதன் உபயத்தில் உண்டிக்கு ஒருவித கேடுமில்லாதிருந்தது.

இலங்கைத்தீவானது போர் நடந்துகொண்டிருக்குமொரு நாடு என்பது எல்லா இடங்களிலும் நினைவுபடுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. பயணச் சீட்டுப் பெறவெனக் கிளம்பியபோது காலி வீதியில் போனால் தாமதமாகுமென்று கடற்கரைச்சாலை வழியாகப் போனோம். திடீரென வாகனங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டன. ஒரு மணித்தியாலமாகியும் ஓரங்குலமும் அசையவில்லை. ‘தேடுதல்’நடப்பதாக வாகன ஓட்டுநர் சொன்னார். வாடகை வண்டிக்குக் கணக்கைத் தீர்த்துவிட்டு காலிவீதிக்கு நடந்துவர மறுபடி வாகனங்கள் அசையவாரம்பித்தன. போக்குவரத்து தடைப்பட்ட இந்த ஒருமணித்தியாலத்தில் விமானநிலையத்திற்குச் செல்லவேண்டியவர்கள்,வைத்தியசாலையில் அவசரமாக அனுமதிக்கப்பட வேண்டியவர்கள்… இவர்கள் நிலை என்ன…? என்ற கேள்வி எழுந்தது. காலிமுகத்திடலின் ஆரம்பத்திற்கும் முடிவெல்லைக்கும் இடையில் மட்டும் மூன்று தடவைகள் நான் சென்ற முச்சக்கரவண்டி நிறுத்திச் சோதனைக்காளாக்கப்பட்டது. கடவுச்சீட்டில் திருப்தியடையாத ஒரு சீருடையாளர் அடையாள அட்டையைக் காட்டும்படி கேட்டார். ‘என்னிடம் இல்லை’என்ற பதில் அவருக்குத் திருப்தியாக இல்லை. எனினும், தொடர்ந்து விசாரிக்கவொட்டாமல் மொழி தடைவிதிக்க மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டேன்.

தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு பயந்தருவதாயும் நெருங்கிப் பார்ப்பவர்களுக்கு சொந்தநாடெனும் இனிமை தருவதாகவும் சிலர் சொல்லக்கேட்டேன். அதில் ஓரளவு உண்மை உண்டெனினும், ஒரு குண்டில் அந்த இனிமை சிதறிக் கூடும்-சிதறக் கூடும் கணங்களில் வாழும் மனத்திண்மை எல்லோருக்கும் இருக்குமென்றில்லை.

இவ்வளவு தூரம் வந்துவிட்டு வீட்டை, பார்த்துப் பார்த்து உருவாக்கிய உலகமான எனதறையை, பூனைக்குட்டிகளை, மொட்டை மாடியில் அள்ளியெறியும் காற்றை, வேப்ப மரங்களை, கிணற்றடிக் குளிர்ச்சியை, தென்னங்கன்றுகள் மற்றும் பூச்செடிகளைப் பார்க்காமல், அனுபவிக்காமல் திரும்பிச் செல்கிறேனே என்ற துயரத்தை எழுத மொழியில்லை. ‘நாடு இருக்கிற இருப்பிலை நாய் நாலு நாள் லீவும் ஒரு நாள் போனசும் கேட்டதாம்’என்ற கதையாக ஊராசை எங்களளவில் பேராசையாகிவிட்டிருக்கிறது. போவதென்பது எனது விருப்பமெனினும், மீளத் திரும்பி வருவதென்பது வேறெவருடையவோ தெரிவாயும் முடிவாயும் இருக்கும் நிலையில், ஆசைகளை அள்ளி நெருப்பில் இடுவதே எங்கெங்கோ கொண்டலையும் இந்த உயிருக்குப் பாதுகாப்பு. உயிருக்கு அடுத்ததன்றோ எல்லா உன்னதமும்.
11 comments:

பங்காளி... said...

உங்களோடு வரிசையில் நின்ற அயர்வும்....மயூரியில் கண்ணில் நீர் வழிய சாப்பிட்ட உறைப்பும் தெரிகிறது...

ஆமா இப்படில்லாம் எழுத எங்க கத்துகிட்டீங்க...எனக்கும் சொல்லுங்க தாயே...நானும் தலைகீழா நின்னு பார்க்கிறேன்...பக்கத்துல கூட வரமுடியல...ம்ம்ம்ம்ம்

அற்புதன் said...

ஒ அதுதான் உங்களைக் காணவில்லை.
எங்களையும் கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு போனதற்கு நன்றி.
போய்ட்டு வாறதுக்கு உங்களுக்கு விமானமாவது இருந்ததே, இனி அதுவும் இருக்குமா? :-)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

எப்போதாவது சிலபொழுது தான் பொறுமையாய் உட்கார்ந்து படிக்க முடிகிறது. அப்போது கிட்டினால், உங்கள் பதிவை இரசித்துப் படிக்கிறேன். முன்பொரு முறை பின்னிரவு பல மணி நேரம் உங்களின் முந்தைய இடுகைகளை எல்லாம் உட்கார்ந்து படித்தேன். எல்லாம்... இல்லை. பலவற்றை. சொல்லவேண்டும் என்று எண்ணினேன். முன்பே சொன்னேனா தெரியவில்லை.

யதார்த்தமாய்ப் பெரும்பூச்சில்லாத உங்கள் நடை அழகு. இதம். அருமை. அதனூடே தெரியும் உங்கள் அனுபவங்களும், வலிகளும், உணர்ச்சிகளும் உள்ளத்தை அள்ளும். கூடவே 'நாய் கேட்ட நாலு நாள் லீவு போனஸ்' போன்ற நகை ததும்பும் இனிமை.

தொடர்ந்து எழுதுங்கள் தமிழ்நதி. வாழ்த்துக்கள்.

P said...

ஓ கொளும்புக்கு போனிங்களா..
நான் நினைச்சேன் ஆள் திரும்பி ரொறொந்ரோ வந்திட்டுதெண்டு..
எண்டாலும் உங்களுக்கு துணிவு கூடிபோச்சு. வானத்தால வான்புலிகள் குண்டுபோட்டு கொழும்பே கிலிபிடித்து போயுள்ள இந்த நேரத்தில் போய் இருக்கிறீர்கள். ஏன் தமிழகத்திலேயே விசா புதுப்பிக்கேலாதா.. கொழும்பு சென்றுதான் விசா எடுத்து மீண்டும் வரலாம் என்றொரு கட்டுப்பாடு எம்மவர்க்கு தமிழகத்தில் இருந்தால் அதை போலொரு வேதனையான விடயம் இல்லை.

மொக்குத்தனமா பிரச்சனையான நேரத்தில் அங்கு சென்ற தமிழ்நதிக்கு அன்பாக கண்டனங்கள்!

மவளே தப்பிட்டீர்..மகிந்து கொலைவெறியில பித்துப்பிடிச்சு திரியுது- தமிழ் பெட்டையொன்று கனடாவிலிருந்து வருதென்றறிந்து குலையா தூக்கி போய் இருப்பாங்கள். போனதும் இல்லாம ஆள் மயுரா கோட்டலில போய் நல்லா வெட்டியும் இருக்கு..grrrrrrrrrr

P said...

நதி,
இதோ நானும் தவள தொடங்கிட்டன்..தூக்கி நடக்க பழக்குவீங்களா?
http://amaidi.blogspot.com/

ஜோகன்

கதிர் said...

ஒரு பயணம் "பல" குறிப்புகள்,

அடுத்தடுத்த பயணங்கள் பலர் மேற்கொண்டாலும் இதே ரகமான பல குறிப்புகள் கிடைக்கப்பெறும் சாத்தியமே உள்ளது என என்னளவில் நினைக்கிறேன்.

அந்த நாய்மொழி கலக்கல்!

தமிழ்நதி said...

நன்றி பங்காளி,அற்புதன்,செல்வராஜ்,ஜோகன்,தம்பி.
\\ஆமா இப்படில்லாம் எழுத எங்க கத்துகிட்டீங்க...எனக்கும் சொல்லுங்க தாயே...நானும் தலைகீழா நின்னு பார்க்கிறேன்...\\

என்ன பங்காளி!பப்பாசியில்(பப்பாளி)ஏற்றுகிறீர்கள்.மளுக்கென்று முறிந்து விழட்டும் என்றா...? தலைகீழா நின்றா எழுத வருமா என்று யோகாசனம் செய்பவர்களிடம்தான் கேட்டுச் சொல்ல வேண்டும்:)

அற்புதன்!இனி வி'மானம்'இருக்காதென்றா சொல்கிறீர்கள்?:)

நன்றி செல்வராஜ்!இந்த புளொக்கில் எழுதுவதென்பது ஒருவகையில் நாட்குறிப்புப் போலத்தான். மனவுளைச்சல்களை இறக்கிவைக்க முடிகிறது. உங்களைப் போன்றவர்கள் இடும் பின்னூட்டங்கள்தான் மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகின்றன. நான் நன்றாக எழுதுவதாக நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ஆனால்,சில எழுத்துக்களை வாசிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. அந்தப் புள்ளியைத் தொடவேண்டும் என்ற ஆசை வளர்கிறது. ஆனால்,முயற்சி செய்யாமல் ஆசை மட்டுமிருந்து என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை.

ஜோகன்!தமிழகத்தில் 'மெடிக்கல் விசா'என்றால் புதுப்பிக்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்கான விசாதான் எனக்குக் கிடைத்திருந்தது. புதுப்பிக்க முடியவில்லை. இம்முறை 'மெடிக்கல்'தான்... பார்க்கலாம்.

\\மொக்குத்தனமா பிரச்சனையான நேரத்தில் அங்கு சென்ற தமிழ்நதிக்கு\\
கடைசியாக நான் 'மொக்கு'என்பதைக் கண்டறிந்துகொண்டதற்கு நன்றி.

\\தமிழ் பெட்டையொன்று\\
நான் அவனில்லை மாதிரி 'நான் பெட்டை இல்லை'என்று அறிக்கையொன்று விடவேண்டும்.:) இருபத்தைந்து வயதிற்கு உட்பட்டவர்களைத்தானே எங்கள் பக்கங்களில் 'பெட்டை' என்பார்கள்.

வலைப்பூவுக்கு நல்வரவு ஜோகன்

\\அந்த நாய்மொழி கலக்கல்\\

என் மொழியில்தான் என்னால் அருமையாகப் பேசமுடிகிறது. அது உங்களுக்கும் புரிந்திருக்கிறது; பிடித்திருக்கிறது என்றால்.... :)

கலை said...

வழக்கம் போலவே அருமையான உங்கள் நடையில் கொழும்பு போய் வந்தாச்சு. நானும் போக வேணும் என்றுதான் இருக்கிறன். பார்க்கலாம்.

தென்றல் said...

/அவருக்கு முன்னால் நின்று ‘இடம்பிடித்துத் தந்தவர். மூன்று மணியிலிருந்தே அந்த இடத்தில் நின்றதாகச் சொல்லியிருந்தார். ஆக, நான்கு மணிநேரத் தூக்கத்தின் விலை எழுநூறு இலங்கை ரூபாய்கள் என்பதறிக.
/
பத்து வருடங்களுக்கு முன்பு.. .. இப்படிதான் சென்னையில் அமெரிக்கா விசா வாங்குவற்கு "அந்த இடத்தில் நிற்பதற்கு" 300 அல்லது 400 ரூபாய் என்று விலை உண்டு...

நாங்கள் செய்தது வசதியை தேடி...
நீங்கள் சொல்வது வாழ்க்கையே தேடி.....ம்ம்ம்ம்....

P said...

//நான் நன்றாக எழுதுவதாக நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது//

நாம் நன்றாக உளதென்று கூற மகிழ்ந்தீர்களானால் இன்னொருவர் வந்து இது மோசம் என்றால் வருந்துவீர்களா...தனிய மகிழ்ச்சியை மட்டும் எடுத்துக்கொண்டு மோசத்தை விடமுடியாது, ஏனென்றால் அவை package ஆக இருப்பவை. அதுக்காக கருத்துக்களை எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை- எதுவா இருந்தாலும் indifference ஆக இருக்க வேண்டும் என்பதே!

தமிழ்நதி said...

கருத்துக்கு நன்றி கலை,தென்றல்...

\\நாம் நன்றாக உளதென்று கூற மகிழ்ந்தீர்களானால் இன்னொருவர் வந்து இது மோசம் என்றால் வருந்துவீர்களா...\\

ஆம் பேசும் அமைதி. நிச்சயமாக வருந்துவேன். ஆனால் அந்த வருத்தத்தில் அமிழ்ந்து சரிந்துபோய்விட மாட்டேன். அது 'மோசம்'ஆகியதற்கு அவர்களால் சொல்லப்பட்டிருக்கும் காரணங்களை ஆராய்ந்து, அது எனக்கும் 'மோசமாக'ப் பட்டால் மட்டும் மாற்றிக்கொள்வேன். வாழ்க்கையும் படைப்பும் நல்லது - கெட்டது இரண்டும் கலந்த package தான். அதிலென்ன சந்தேகம்...?