5.03.2007

உடலின் அரசியல்சொற்களின் உடுக்கடிப்பில்
உடல் பூக்கிறது சணற்காடாய்
நரம்புகளுள் நதிகளின் பெருக்கெடுப்பு

முதலில் விலங்கின் கூரிய பற்களை
பறவைகளின் சிறகுகளுக்குள் பதுக்குகிறோம
எனதும் உனதும் மேன்மைகளை
பரஸ்பரம் காட்சிப்படுத்துகிறோம்
மேலும் தாவர உண்ணிகளாய்
இயற்கை எழில் மற்றும் பிரமிள்
‘சக்கரவாளத்தை’யும் பேசித் தொலைக்கிறோம்

வலிந்து இமை சாத்தியபடி
நடக்குமெல்லையில்
மிகுபசிகொண்ட உடல்கள் விழித்திருக்கின்றன

கரைந்தொரு வெளியில் தொலைந்து
ஈதின்பம் என நீலச்சுடர் கண்டு
முயங்கித் தெளியுமொருகாலை
நீயெழுந்து யன்னல் வழி வெறிப்பாய்

சொற்கள் தீர்ந்துவிட்ட அப்பொழுதில்
குற்றமற்ற குற்றத்தின் மடி சாய்ந்து
பெண் எனும் ஞாபகத்தொடு
நானும் விசும்பிக்கொண்டிருக்கலாம்.

15 comments:

Anonymous said...

/குற்றமற்ற குற்றத்தின் மடி சாய்ந்துபெண் எனும் ஞாபகத்தொடுநானும் விசும்பிக்கொண்டிருக்கலாம்./

குற்றமற்றதென அறிந்தபின் விசும்பல்கள் ஏன் தோழி ?

பங்காளி... said...

//கரைந்தொரு வெளியில் தொலைந்து
ஈதின்பம் என நீலச்சுடர் கண்டு
முயங்கித் தெளியுமொருகாலை
நீயெழுந்து யன்னல் வழி வெறிப்பாய்//

வர வர சித்தர் பாட்டு மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டீங்க....தாயே

நல்லா வந்திருக்கு....ம்ம்ம்ம்ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல் வரியே ஓடிக்கொண்டிருக்கிறது மனதுக்குள்...
சொற்களின் உடுக்கடிப்பு...ம்...
நல்லாருக்கு.

தென்றல் said...

வழக்கம் போல்... படம் அருமை! ;)

தென்றல் said...

தமிழ்நதி,

நீங்க அய்யனாரை சித்தர்-கிறீங்க...
பங்காளி உங்களை ...

எல்லாரும் 'ஒரு மார்க்கமா'தான் இருக்கீங்க...

எங்கிருந்தாலும் நல்லாயிருந்தா சரி..!

தமிழ்நதி said...

பின்னூட்டிய நண்பர்கள் அனானி,பங்காளி,முத்துலட்சுமி,தென்றல்.. நன்றி.

\\குற்றமற்றதென அறிந்தபின் விசும்பல்கள் ஏன் தோழி\\
மரபுக்கும் மீறலுக்கும் இடையில் நடக்கும் தர்க்கத்தின் வெளிப்பாடே கண்ணீர். அது தவிர்க்க முடியாதது.

\\வர வர சித்தர் பாட்டு மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டீங்க தாயே\\

பங்காளி!சித்தர்கள் புளொக் பக்கம் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நீங்கள் இப்படியெல்லாம் பின்னூட்டம் போடக்கூடாது சரியா..:)

முத்துலட்சுமி!சொற்களின் உடுக்கடிப்பில் உருவேறி ஆடும் வாழ்வல்லவோ நம்முடையது.

\\நீங்க அய்யனாரை சித்தர்-கிறீங்க...
பங்காளி உங்களை ...\\

தென்றல்!பொழுதுபோகாமல் அல்லது புகழ் தேடித்தானே எழுத வந்தோம். இதில் ஆளையாள் 'சித்தர்''பித்தர்'என்று சந்தோசப்படுத்தி மிதக்க விடுவதுதானே... காசா பணமா.. சித்தரெல்லாம் காட்டில்தான் இருப்பார்களாம். கணனியோடு இருக்கமாட்டார்கள். மேலும், நீங்க ஒண்ணும் உள்குத்து வைச்சு எழுதலியே.

தென்றல் said...

/சித்தரெல்லாம் காட்டில்தான் இருப்பார்களாம். கணனியோடு இருக்கமாட்டார்கள்./

அப்படியா....!? இப்பலாம் அவுங்களும் வேற வேற 'அவதாரங்களில்' இந்தப்பக்கம் வர ஆரம்பிச்சிட்டாங்களாம்..
சித்தர்.தமிழ்நதி,சித்தர்.அய்யனார் ...

/மேலும், நீங்க ஒண்ணும் உள்குத்து வைச்சு எழுதலியே.
/
இல்லை. இன்னும் 'அந்தளவு தெளிவு' வரலை!

Ayyanar Viswanath said...

/சித்தர்.தமிழ்நதி,சித்தர்.அய்யனார் /

மக்கா..ஒரு நாள் லீவு விட்டா என்னென்ன பேரோ வச்சிடுறிங்களே??
:(

தென்றல் கிடேசன் பார்க் வட்டாரங்களை கேட்டுப்பாருங்க சித்தர் வியாழக்கிழமை இரவெல்லாம் எப்படி சாமி கும்பிடுறார்னு தெரியும் :)

மஞ்சூர் ராசா said...

இயல்பாக வரும் வார்த்தைக்கோர்ப்புகளில் இழையோடும் மெல்லிய சோகம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது வற்றாத நதியாய்.
விசும்பிக்கொண்டிருப்பதாலோ?

தமிழ்நதி said...

\\இயல்பாக வரும் வார்த்தைக்கோர்ப்புகளில் இழையோடும் மெல்லிய சோகம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது வற்றாத நதியாய்.
விசும்பிக்கொண்டிருப்பதாலோ? \\

மஞ்சூர் ராசா!நதிகள் விசும்புவது வெளித்தெரிவதில்லை. எழுத்துக்களின் ஈரப்பிசுபிசுப்பு எப்படியோ காட்டிக்கொடுத்துவிடுகிறது. கடைசியில் கவிதை என்று ஏதாவது எழுதியிருக்கிறேனா என்று நற்றிணை படித்த நீங்கள்தான் சொல்லவேண்டும்:)

மஞ்சூர் ராசா said...

//என்று நற்றிணை படித்த நீங்கள்தான் சொல்லவேண்டும்:)//

சரி, சரி. புரிந்துக்கொண்டேன்.

கவிதை.....?
அதை சொல்லும் அளவிற்கு நான் வளர்ந்திருக்கிறேனா என தெரியவில்லை.

இருந்தாலும் மிகவும் ரசித்து படித்தேன் என்பதை ஒத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை தோழியே...

யாழினி அத்தன் said...

சில நேரம் உங்கள் கவிதைகளை படிக்கும் போது கல்லூரியில் Quantum Mechanics படிப்பது ஞாபகத்திற்கு வருகிறது. வீட்டுக்கு போய் ஒரு தடவை படிப்பேன். புரியாது. ரெண்டு தடவை, மூணு தடவை... என்று பல தடவை படித்துவிட்டு காலையில் கல்லூரிக்குச் செல்லும் போது கண்கள் வீங்கியிருந்தாலும், சற்று புரிந்துபோன பெருமிதம் முகத்தில் தெரியும். Quantum mechanics முழுவதுமாக புரிந்தவர்கள் உலகில் 12 பேர்கள் தானாம். ஆனால், இன்றைய உலகின் செயல்பாடுகளை விளக்கும் மாபெரும் கொள்கை அது.

உங்க கவிதையை படிக்கும் போது ஏறக்குறைய அந்த மாதிரி ஒரு சிற்றுணர்வு வருகிறது.

paradoxical கவிதைகள் அப்படித்தான் இருக்கும்.

பாம்பாட்டிச் சித்தன் said...

மிகவும் தற்செயலாக இந்த வலைப்பதிவை கண்ணுறவும் உள் நுழையவும் நேரிட்டது.

"காதல் கொண்டேன்" என்ற திரைப்படத்தில் பழனிபாரதி எழுதிய:
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

நரம்பில் ஒரு நதி பாயுதே
இது என்ன வேட்கை
காதல் வலி உடல் காயுதே
இது என்ன வாழ்க்கை

என்கிற பாடல் உங்களை மிகவும் பாதித்திருக்குமோ என்று ஒரு தோணல்.

கவிதைக்கு புரிதலின் அநிச்சயத்தை உணர்த்தியவர்களாக பிரமிள், நகுலன், பிரம்மராஜன், அபி ஆகியோரை சுட்டலாம்.
...?

வாழ்த்துக்கள்.

தமிழ்நதி said...

\\paradoxical கவிதைகள் அப்படித்தான் இருக்கும்.\\-யாழினி அத்தன்
paradoxical என்ற வார்த்தைக்கு எனக்குப் பொருள் தெரியவில்லை. அகராதியில் போய்த் தேடினேன். 'முரண்பட்டவைபோல் தோற்றமளிக்கும்'என்றிருந்தது. ம்... மனித மனமே முரண்களாலும் குழப்பங்களாலும் நிறைந்ததுதானே. இவன்,இவள் இப்படித்தான் என்று define பண்ணி விடுவதில் எனக்கு எப்போதும் ஒப்புதல் இருந்தது கிடையாது. மனமேயானாலும் ஒரே மாதிரிக் காட்சிகளாலும் நடத்தைகளாலும் எமக்கே சலித்துப்போய்விடும். மாறுதலே வாழ்வின் அழகும் பொருளும் இல்லையா நண்பரே.
மற்றது,நீங்கள் சொன்னதுபோல இந்தப் 'புரியாத கவிதை'களோடு எனக்கும் மல்லுக்கட்டிய அனுபவம் உண்டு. கடைசியில் ச்சே என்று தூக்கிப்போடும்போது தன்முகம் காட்டிச் சிரிக்கும். அந்த அனுபவம் நன்றாக இருக்கும். ஆனால், நான் புரியாத மாதிரியா எழுதுகிறேன்..? வாசகனைச் சென்றடையாத படைப்பினால் பயனில்லை என்று எண்ணும் அதேநேரம்,கவித்துவத்தைச் சற்றும் நெருங்காமல் உணர்ச்சிக்குவியலாகவும்,கோசமாகவும் முடிந்துவிடும் கவிதைகளையும் ஒப்புக்கொள்வதில்லை. என்னமோ.. கவிதை ஒரு பெரிய ஆசுவாசம் என்பதனால் எழுதுகிறோம். கருத்துக்கு நன்றி.

பாம்பாட்டிச்சித்தன்!
\\..............என்கிற பாடல் உங்களை மிகவும் பாதித்திருக்குமோ என்று ஒரு தோணல்\\

அந்தப் பாடலை நான் கேட்டதில்லை. ஆனால்,அதே போல வேறு பலவற்றை வாசித்தும் கேட்டும் இருக்கலாம். ஆனால்,அநேகருக்கு ஒரு மாதிரி அனுபவம் நேர்வதும் அது எழுத்தாக வெளிப்படுவதும் இயல்புதானே...இதைப் பற்றி கல்யாண்ஜி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதன் பொருள் மட்டும் மனசில் தங்கிவிட்டது. வரிகள் மறந்துபோய்விட்டன. 'இந்த நதி எத்தனை பேரைப் பார்த்திருக்கும்'இப்படி வரும். வாசித்து பின்னூட்டமிட நேரம் எடுத்துக்கொண்டதற்கு நன்றி.

மிதக்கும்வெளி said...

நல்ல கவிதை. '/இந்த நதி எத்தனை பேரைப் பார்த்திருக்கும்'இப்படி வரும்./

ஓடும் நதிநீரில் எது என்கைநீர் என்று நினைக்கிறேன். கல்யாண்ஜி அல்ல, சி.மணி என்று நினைக்கிறேன்.