5.10.2007

எழுது இதற்கொரு பிரதி


கறுப்பு மையால் அழித்த
உன் பெயரிலிருந்து
எழுத்துக்கள் எறும்புகளாய்
ஊர்ந்து வெளியேறிவிட
மை மட்டும் எஞ்சியிருக்கிறது

நெருப்பினையொத்து வெயிலின் நாக்கு
பொசுக்குமிக் கொடுங் கோடையில்
அடுப்பின் முன்னமர்ந்திருக்கிறேன்
நீயே சொல்
முதலில் எதைப் போடுவது…?


பொய்களால் கட்டமைக்கப்பட்ட
உன் புனித பிம்பத்தை…
காதலில் ஊறிய கவிதைப் பிரதிகளை…
தேவதைக் கதைகளை…
தொலைவை நொந்தழுத விழிகளை...
காமம் செப்பிக் கழிந்த மதியங்களை…
நம்பிக்கையில்
தனிமையில்
தோழமையில் நீ துப்பிய எச்சிலை…
கண்களை எதிர்கொள்ளப்
பயந்த உன் கயமையை…
வார்த்தைகள் சிதைத்த நரம்புகளிலிருந்து
பெருகும் குருதியை....
எதைப் போடுவது முதலில்...?

இந்தப் பின்நவீனத்துவம் போல
எழுது இதற்கொரு பிரதி
உயிரை அழிக்காமல்
ஒரு பெயரை அடிப்பதெப்படி என்று.

12 comments:

லக்ஷ்மி said...

நம்பிக்கை நசுங்கிப்போனதின் வலி நன்றாக வந்திருக்கிறது உங்கள் வார்த்தைகளில். படிக்கிற கவிதையில் தனக்கு நேர்ந்த அல்லது அருகிருந்து அறிந்த ஏதோவொன்றை பொருத்தி பார்க்க முடிகிற போதுதான் நம் மனதுக்குள் அக்கவிதை இடம் பிடிக்கிறது. உங்களது பெரும்பாலான கவிதைகளை என்னால் அப்படி உணர முடிகிறது. தொடருங்கள் தமிழ்நதி.

-ganeshkj said...

"நெருப்பினையொத்த வெயிலின் நாக்கு
பொசுக்குமிக் கொடுங் கோடையில்
அடுப்பின் முன்னமர்ந்திருக்கிறேன்"

வார்த்தைகள் சுடுகின்றன. இக்கவிதையின்பின் இழைந்தோடும் மனோநிலையை இவ்வரிகள் அழுத்தமாக உணர்த்துகின்றன.

on a side note, மிகுதியான சந்தோஷத்தை உங்கள் கவிதைகள் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவ்வப்போது அதையும் முயற்சி செய்யலாமே ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லக்ஷ்மி சொல்வது போலவே தான். ஒரு வரியேனும் பொருந்திப்போய்விடுகிறது தமிழ்நதி.

sooryakumar said...

ஆகா மிக அருமையான கவிதை தோழி.

இப்னு ஹம்துன் said...

நசுங்கிய நாளமொன்றிலிருந்து
கசியும் குருதியாய்
வழியும் கவிதை
என்னையும் நனைத்ததில்
காய்ந்து கிடக்கும் மனதில்
வெம்மையின் பிசுபிசுப்பு.

அவ்வப்போது
சொற்கள் பெருக்கெடுத்தோடும்
தமிழ்நதிக்கு நன்றி.

மஞ்சூர் ராசா said...

//நெருப்பினையொத்து வெயிலின் நாக்குபொசுக்குமிக் கொடுங் கோடையில்
அடுப்பின் முன்னமர்ந்திருக்கிறேன்//

அடுப்பின் முன்...... வெம்மையின் தாக்கம் இன்னும் அதிகம் என்பது அந்த மனதிலுள்ள வலியை நன்றாக வெளிப்படுத்துகிறது.


//இந்தப் பின்நவீனத்துவம் போல
எழுது இதற்கொரு பிரதி
உயிரை அழிக்காமல்
ஒரு பெயரை அடிப்பதெப்படி என்று.//


இந்த வரிகளை கொஞ்சம் மாற்றியிருக்கலாமோ என ஒரு தோணல்.

மஞ்சூர் ராசா said...

சொல்ல மறந்துவிட்டேன்.

ஓவியம் மிகவும் அருமையாக அற்புதமாக இருக்கிறது.

தமிழ்நதி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் லஷ்மி,கணேஷ்,முத்துலட்சுமி,சூரியகுமார்,இப்னு ஹம்துன்,மஞ்சூர் ராசா அனைவருக்கும் நன்றி.

\\படிக்கிற கவிதையில் தனக்கு நேர்ந்த அல்லது அருகிருந்து அறிந்த ஏதோவொன்றை பொருத்தி பார்க்க முடிகிற போதுதான் நம் மனதுக்குள் அக்கவிதை இடம் பிடிக்கிறது.\\

லஷ்மி!எனது வாசிப்பும் அப்படித்தான். முன்பெனில் எழுதியவரின் அனுபவமாக வரிகளைப் பார்க்கிற தன்மை இருந்தது. இப்போது அதனின்று சற்று விலகி வந்திருக்கிறேன்.

\\மிகுதியான சந்தோஷத்தை உங்கள் கவிதைகள் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.\\
கணேஷ்! சிரிப்பின் திவலைகளோடுதான் சிலசமயம் வருகிறேன். ஆனால்,எழுதும்போது அவை கண்ணீர்த்துளிகளாக மாறிவிடுகிற விந்தையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

முத்துலட்சுமி! விடுமுறை உங்களுக்கு மட்டுமல்ல எனக்குப் போடும் பின்னூட்டங்களுக்கும் என்றெண்ணும்போது கொஞ்சம் வருத்தமாகத்தானிருக்கிறது.

சூரியா!நீண்டநாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். நன்றி.

\\அவ்வப்போது
சொற்கள் பெருக்கெடுத்தோடும்
தமிழ்நதிக்கு நன்றி.\\

இப்னு ஹம்துன்!அடிக்கடி தேங்கியும் விடுகிறேன் கவனிக்கவில்லையா...:)

\\ஓவியம் மிகவும் அருமையாக அற்புதமாக இருக்கிறது.\\
மஞ்சூர் ராசா! அப்ப கவிதை...:( :)

Anonymous said...

//இந்தப் பின்நவீனத்துவம் போல
எழுது இதற்கொரு பிரதி
உயிரை அழிக்காமல்
ஒரு பெயரை அடிப்பதெப்படி என்று.//


நீங்களும் பின்நவீனத்துவம் எண்டு தொடங்கீட்டியளா?
விளிம்பை அழிக்காமல் எப்படி மையத்தை அழிக்கிறதெண்ட கேள்வி ஏற்கனவே நிலுவையில இருக்கிற நேரத்தில நீங்கள் அவையிட்ட திரும்ப இன்னொரு கேள்வி கேட்டிருக்கிறியள். பாப்பம் என்ன பதில் வருதெண்டு.

_____________________
என்ர பின்னூட்டம் உங்கட கவிதையக் கொச்சைப்படுத்திய மாதிரி இருக்கெல்லோ?
;-)

சுவாதி சுவாமி. said...

உங்கள் உள்ளிருந்து தமிழை இப்படி அருவியாக எது பெருக்கி வெளிப்படுத்துகிறதோ அந்த அமானுஷ்யத்தை நான் தலை குனிந்து வணங்குகிறேன்...

நந்தா said...

//எழுது இதற்கொரு பிரதி
உயிரை அழிக்காமல்
ஒரு பெயரை அடிப்பதெப்படி என்று. //

அப்பப்பா என்ன வரிகள் இது.

லக்ஷ்மி சொன்னது போல உங்களுடைய எல்லா கவிதைகளிலும், தன்னை பொருத்திப் பார்க்க முடிகிறது.

நீங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாலும் அதில் கண்ணீர்த் துளிகள் கலந்திருக்குமோ?

இன்னதென்று அறிய முடியாத ஒரு காரணத்தோடு உங்களுடைய ஒவ்வொரு கவிதையும் என்னுடைய தூக்கம் தொலைத்த இரவுக்கு சாட்சியாய் அமைந்து விடுகிறது.

தொடர்ந்து கலக்குங்கள்.

மிதக்கும்வெளி said...

படம் நல்லாயிருக்கு. (புரியுமென்று நம்புகிறேன்.)