எனக்கு அப்பாம்மாவால் இடப்பட்ட பெயர் கிருகலட்சுமி. நான் பிணம் – பிரியன், நொய்யனார், பாரு நந்திதா, சோ.பி. மாணக்யா, ச்சோவு சுந்தர், மறை கழன்றவன், மீ.ஜி. சுரேஷ் இவர்களையெல்லாம் வாசித்தபிற்பாடு என் பெயரை புகலி என்று மாற்றிவைத்துக்கொண்டேன். அந்தப் பெயர் எனக்குப் பொருத்தமாக இருப்பதாக காதல் பெருகிவழியும் மாலையொன்றில் என் மடியில் படுத்திருந்தபடி சத்தியன் சொன்னான். நாங்கள் எப்போதாவது பிசாசுகளின் வாயால் பேசமுற்படுகையில், எனது பெயரிலுள்ள ‘க’வைத் தூக்கிவிட்டு ‘புலி’என்றே சத்தியன் என்னை விளித்துப் பேசுவான். சத்தியன் சராசரித் தமிழன். அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவன்தான் இந்தக் கதையில் அதிகபட்சமான உரையாடலை நிகழ்த்திச் செல்கிறவன் (ஹா) என்றவகையில் அவனை அறிமுகப்படுத்தித் தொலைக்கிறேன். புத்தகம் வாசிப்பதும் அவ்வப்போது எழுதுவதும் தனக்கு எதிர் அரசியல் பேசும் நண்பர்களின் விவாதங்களைக் கட்டுடைப்பதுமாகிய (ஹா) வேலைகளைச் செவ்வனே செய்துவருகிறான். இவை கழிந்த நேரங்களில் நாங்கள் படுத்துக்கொள்வதுமுண்டு.
“தொன்மங்களிலிருந்து மிதந்துவந்த மலர்களின் வாசனையில் களியேறி உன்மத்தித்த அவன் அந்த வாசனை வரும் திசை தேடியலைந்து நெடுவழியில் தொலைந்துபோய்க்கொண்டிருக்கையில் சந்தித்த அநிருத்தாவின் விழிகளிலிருந்து வழிந்த ஆன்மநிவேதனத்தை அருந்தி அவளில் காமுற்று சுயமைதுனம் செய்துகொள்ளத் தனதிடம் திரும்பிச்சென்றான்…”என்ற வரிகளை நான் வாசித்த நாளிலிருந்து சத்தியனைத் தேடியலைந்து மூத்திரவாடையடிக்கும் அறைச்சுவரொன்றில் முட்டிநின்றேன். (மூத்திரம் என்ற சொல் வராவிட்டால் நொய்யனார் இந்தப் பிரதியை பின்னவீனத்துவம் இல்லையென்று நிராகரித்துவிடுவான்) அவன் எனக்கு வாங்கிக்கொடுத்த இரண்டு போத்தல் 70ரூபா கோல்கொண்டாவில் நான் கவிழ்ந்துபோனதுமன்றி, அன்றுமுதல் அவனது அறையில் வசிக்கலுற்றேன்.
சத்தியன் சிக்கலில்லாத அறைத்துணை.
ஒன்றுக்கடித்துவிட்டு கழிப்பிருக்கையின் மேல்மூடியைத் திரும்பவும் இறக்கிவிட மறந்துபோவதன்றி, உள்ளாடையை கால்வரை இறக்கிவிட்டு நின்றநிலையிலேயே ஒரு காலைத் தூக்கி அதை உத்தேசமாக அறையின் மூலையொன்றில் சுழற்றியெறிந்து- பின் தேவைப்படும் போது மட்டும் அதைக் கால்களால் கொழுவி இழுத்து அணிந்துகொள்ளுமளவு சுத்த நேசன் என்பதன்றி, அவனது காலுறைகளிலிருந்து கிளர்ந்தெழும் நாற்றம் செத்த எலிகளை நினைவுபடுத்தி எனது புத்தகங்களின் பாதுகாப்பைக் குறித்த மனத்தொந்தரவை எனக்குத் தருவதன்றி, நடுநிசியில் துர்க்கனவு கண்டு ‘புலி கொல்… புலி கொல்’என்று கத்துவதன்றி அவனால் எனக்கு எந்த உவத்திரமும் நேர்ந்ததில்லை.
நாங்கள் வோட்காவும் ஆரஞ்சுப் பழச்சாறும்போல அவ்வளவு நெருக்கமாக வாழ்ந்திருந்தோம். திரு.அல்பிரட் அவர்கள் எங்களது அறைக்கு வந்து அப்படியொரு விவாதத்தை ஆரம்பித்துவைத்திருக்காவிட்டால் இனிய வாழ்வு இவ்விதமே கழிந்திருக்கும். அவர் சிவந்த நிறமுடைய உயர்ந்த மனிதர். பெரும்பாலும் இயற்கை உபாதை அழைக்கும்போதும் உணவு உட்கொள்ளவும் மட்டுமே புத்தகங்களை விலக்கி எழுந்துபோகும் பழக்கமுடையவர். இருந்தும், சமகாலச் செய்திகளை அவர் தனது நாக்குநுனியில் சேகரித்துவைத்திருந்தார்.
காருண்யம் பெருகிவழியுமொரு நண்பனின் கடனுதவியால் அன்றைய மாலையைக் கொண்டாடிக்கொண்டிருந்தவேளையில் அல்பிரட் எங்களது அறையை நாடி வந்தார். ஐஸ் துண்டங்கள் மிதந்த மஞ்சள்நிறத் திரவக் கடவுளைப் பங்குபோடப் புதிதாக ஒருவர் முளைத்ததில் கலவரமுற்றது சத்தியனின் முகம். ஆனால், மரியாதை நிமித்தம் அவன் அவரைச் சகித்துக்கொள்ளவேண்டியிருந்தது. அல்பிரட் அருமையான சம்போகி என்பதை நான் எப்படியோ அறிந்துவைத்திருந்தேன். அதனால், அவரது பிரசன்னம் என் முகத்தில் காதலின் ஒளியைப் பூசியது என்பதை நான் உங்களிடம் இரகசியமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
பேச்சு வழக்கம்போல அரசியலை நோக்கித் திரும்பியது. அகதிமுகாமில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களைப் பற்றி துயரந்ததும்பிய குரலில் நெடுநேரம் சொல்லியழுதவாறிருந்தான் சத்தியன். அவனது துயரம் அறைச்சுவர்களை அழுக்கிலிருந்து மஞ்சள்நிறத்திற்கு மாற்றியது. இருந்தாற்போல அல்பிரட் அவர்கள் ஒரு கேள்வியை சத்தியனை நோக்கி எறிந்தார்.
“கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய போராளிகள் என்னவானார்கள் நண்பரே?”
அந்தக் கேள்வியால் சத்தியனின் முகம் துர்க்கனவு கண்டு விழித்தவனுடையதாயிற்று. பிறகு மெல்ல அவிழும் மலரினையொத்ததாகக் கனிந்தது.
“அவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுவிட்டார்கள். இத்தனை இலட்சம் மக்களின் வாழ்வைச் சீரழித்து அகதிமுகாம்களுக்குள் தள்ளியவர்களுக்குத் தக்க தண்டனை கிடைத்திருக்கிறது”ஏறக்குறைய அவன் கூவினான்.
சத்தியனின் முகம் அத்தனை விகசித்து நான் பார்த்ததே இல்லை. மலங்கழித்துவிட்டு கழிப்பறையிலிருந்து வெளியில் வரும்போதுகூட அத்தனை ஆசுவாசத்தை நான் அவனது முகத்தில் கண்டதில்லை. அல்பிரட் நெடியதொரு பெருமூச்சோடு என்னைப் பார்த்தார். ஐயமில்லாமல் அழகன்தான் இந்த மனிதன் என்று நான் நினைத்துக்கொண்டேன்.
“புலிகள் உருகுவேயிலிருந்து வந்தவர்களா?”
சத்தியனின் முகம் கெட்ட வார்த்தைகளாலான பின்னூட்டத்தை வாசித்ததுபோலாயிற்று. அவனது உதட்டுக்குள் எனக்கு மிகப் பரிச்சயமான அந்தத் தூஷணத்தை உணர்ந்தேன்.
“இல்லை”
“பீஜிங்கிலிருந்து வந்தவர்களா அவர்கள்?”
“இல்லை”
“அவர்களில் யாருடையவாவது அப்பாவின் பெயர் மிக்கெலாஸ்கி என்றிருக்கிறதா?”
“இல்லை”
“செனாற்றோ என்ற கடைசிப் பெயருடையவன் எவனாவது புலியெனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறானா?”
“சாத்தியமில்லை”சத்தியன் உரக்கக் கத்தினான்।
“சீ வான் குங் என்ற அப்பன் பெயரைக் கொண்டவன்?”
“இல்ல்ல்ல்லை”சத்தியனின் தாடி உரோமங்கள் சிலிர்த்துக்கொண்டன. அவனது கைகள் பக்கத்திலிருந்த செந்நிற கெட்டி அட்டைபோட்ட புத்தகத்தை வெறியோடு பற்றின.
“அப்படியானால் அவர்களையும் விடுவிக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் அழுத்தங்களைக் கொடுக்கவில்லை?”
திரு.அல்பிரட் தன் நீளமான விரல்களால் கழுத்தைச் சொறிந்தபடி கேட்டார்.
“அவர்கள் கொலைகாரர்கள்”சத்தியன் கத்தினான்.
“சகோதரனே! அவர்கள் உங்களுக்காகவும் போராடவில்லையா?”
“இல்லையென்று சொல்லமுடியாது… அதேசமயம் அவர்கள் சகோதரர்களையே கொன்றுகுவித்தவர்கள். அதிகம் ஏன்? கடைசி நேரங்களில் அவர்களை நம்பிய மக்களையே கொன்றழித்தவர்கள்… ஐயமிருந்தால் புகலியைக் கேட்டுப்பாருங்கள்”
திரு। அல்பிரட் தனது செம்பட்டை இமைகளை மலர்த்தி என்னைப் பார்த்தார். அந்தச் சமயத்தில் நான் அவரை முத்தமிட விரும்பினேன்.
“அப்படித்தான் அறிகிறோம். ஆனாலும், இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் அதே மக்களுக்காகத்தான் தம்முயிரை அர்ப்பணித்து மாய்ந்துபோனார்கள்” என்றேன்.
“நீயொரு துதிபாடி”கத்தினான் சத்தியன். என்னைக் குறிவைத்து அவனால் வீசியெறியப்பட்ட புத்தகம் குறிதவறி, வைன் குவளையைத் தள்ளிக்கொண்டுபோய் சுவரோடு சாத்திவைத்து நொருக்கியது.
“தலைவர்கள் தவறுசெய்தார்கள்... அவர்கள் அழிக்கப்பட்டார்கள் எனில், அவர்களால் வழிநடத்தப்பட்ட போராளிகள் என்ன செய்வார்கள்… பாவம்” அல்பிரட் மதுவாசனையுடைய பெருமூச்சொன்றினை வெளியேற்றினார்.
“சிறைகள் வதைக்கூடங்கள் அல்லவா? எனக்கு உங்கள் நாட்டின் சிறைக்கூடங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது”எனத்தொடர்ந்தார் மேலும்.
சத்தியனின் கண்கள் கனவுகாண்பதுபோன்ற கிறக்கத்திலாழ்ந்தன. கலவியின் உச்சத்தில் அவன் அப்படிக் கிறங்குவதைக் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.
“சப்பாத்துக் கால்களால் பலமாகத் தாக்குவார்கள். பிறகு தலைகீழாகக் கட்டித்தொங்கவிடுவார்கள். மிளகாய்த்தூள் நிரப்பப்பட்ட சாக்குப்பையால் முகத்தை மூடிக் கட்டுவார்கள். இடமிருந்தும் வலமிருந்தும் கனத்த இரும்புக்குழாய்களால் தாக்குவார்கள். மலங்கழிக்கும் இடத்தினுள் இரும்புக்குழாய்களைத் திணிப்பார்கள். கொழுவியிழுக்கக்கூடிய கம்பியை மலவாசலுக்குள்ளால் செலுத்திச் செலுத்தி இழுக்கும்போது கம்பிகளில் தசைகள் ஒட்டிக்கொண்டு வரும். முதுகுத்தோலை உரித்து அதனுள் மிளகாய்த்தூளை வைத்து மறுபடியும் தைத்துவிடுவார்கள். கால்களையும் கைகளையும் இருவர் பிடித்துக்கொள்ள குதிகால்களில் குண்டாந்தடிகளால் அடிப்பார்கள். நகக்கணுக்களுள் ஊசிகளைச் செலுத்துவார்கள். தேர்ந்த பல்வைத்தியரைப் போல பற்களைக் குறடுகளால் இழுப்பார்கள். பெண்களாயிருந்தால் பிறப்புறுப்பினுள் இரும்புக்குழாய்களையும் தங்களையும் உள்நுழைப்பார்கள்…”
அல்பிரட் பதைத்துப் போய் எழுந்து நின்றார். அவரது கன்னங்களில் கண்ணீர் வழியவாரம்பித்திருந்தது.
“வரலாறு உங்களை மன்னிக்காது”என்றார்.
“அவர்களும் உங்களவர்கள். வேற்றுக் கிரகவாசிகளல்ல. தமது மக்களுக்காகப் போராட அழைக்கப்பட்டவர்கள். அவர்களின் சிறையிருப்பை நீ கொண்டாடுகிறாயா?”
சத்தியனுக்குள் பேய் புகுந்துகொண்டுவிட்டது.
“தாம் செய்வது இன்னதென்று அறிந்துதான் செய்கிறது எங்கள் நாட்டு அரசாங்கம்... நீ உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ… இது எங்கள் உள்நாட்டு விவகாரம்”என்று கத்தினான்.
அல்பிரட் திடீரென முழங்காலிட்டு அமர்ந்து மஹ்மூத் தார்வீஷின் கவிதையொன்றைச் சொல்லவாரம்பித்தார்। துயரமும் போதையும் அவரது முகத்தை வைன் நிறத்திற்கு மாற்றியிருந்தன.
……………………
தீப்பொறி கனலும் விழிகளும்
இரத்தம் படிந்த கரங்களும் உடையவனே!
இரவு குறுகியது
சிறைச்சாலைகள் என்றென்றைக்கும் எஞ்சியிரா
சங்கிலிக் கணுக்களும் எஞ்சியிரா
நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்னும் இறக்கவில்லை
……………………………
கவிதையின் நான்காவது வரியில் நான் அல்பிரட்டோடு இணைந்துகொண்டேன். கவிதைப் பிரார்த்தனையின் இடையில் கடைக்கண்ணால் சத்தியனைப் பார்த்தபோது அவன் எனது புத்தகங்களையும் உடைகளையும் கூடத்தில் கொண்டுவந்து குவிக்கவாரம்பித்திருந்தான். அசதாவால் மொழிபெயர்க்கப்பட்ட ‘வீழ்த்தப்பட்டவர்கள்’ குப்புறக் கவிழ்ந்து இரங்கிய கண்களால் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது.
பிற்குறிப்பு: நீதி யாதெனில், வாடகை கொடுப்பவனோடு ஒண்டிக்கொண்டிருக்கிற ஆள் முரண்படக்கூடாது.