4.28.2009

கேக்கிறவன் கேனையன்னா எருதுகூட ஏரோப்ளேன் ஓட்டும்கிறது இதுதானா?


தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல்வாதிகள் காட்டும் செப்படிவித்தைகள் தாங்கமுடியவில்லை. கரணம் அடிக்கிறார்கள். கயிற்றில் நடக்கிறார்கள். நெருப்பு வளையத்துக்குள் பாய்கிறார்கள். சித்திரக்குள்ளர்களாகி சிரிப்பு மூட்டுகிறார்கள். காற்றில் கைவீசி பூ வரவழைத்துக் கொடுக்கிறார்கள். கட்டப்பொம்மனாகி மீசை துடிக்கப் பேசுகிறார்கள். ஜான்சிராணியாகி வாளை வீசுகிறார்கள். பவிலியனில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் வளர்ந்த குழந்தைகள் கைதட்டிக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதறியாமல் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த உச்சக்கட்ட நிகழ்ச்சி நேற்று அரங்கேறி முடிந்தது. ‘உலகத் தமிழர்களின் உன்னதத் தலைவர்’கலைஞர் கருணாநிதி அவர்கள், இலங்கைத் தமிழருக்காக ‘உண்ணாவிரதம்’ இருந்ததுதான் கலையிரவிற்கே மகுடம் வைத்த நிகழ்ச்சி. ‘ஓட்டுக்காக உடம்பிலிருக்கும் கடைசித் துணிவரை கழற்றிப்போடுவதென்று சங்கற்பம் செய்துவிட்டார்களா என்ன!’ என்று வியக்கத் தோன்றுகிறது.

ஈழத்தில் எத்தனை எத்தனை குழந்தைகள் சிதறு தேங்காய்போல தலைசிதறிச் செத்தார்கள். கர்ப்பத்தினுள்ளிருந்த குழந்தைகூட காயப்பட்டது. பசியில் சிறிது சிறிதாக மாண்டுமடிந்தவர்கள் எத்தனை பேர். எலும்பும் தசையும் குருதியுமாய் பிரிந்து கூழாகித் தரையோடு தரையாக வழிந்தோடிய உடல்கள் எத்தனை. ‘ஐயோ ஐயோ’வென்று உயிர்பதறி காடுகளில் அலைந்து பித்தாகிப் பிதற்றியழுதன எமது சொந்தங்கள். கட்டிடங்களின் இடிபாடுகளுள் கிடந்து ‘காப்பாற்றுங்கள்’என்று கத்தி கடைசிநம்பிக்கையும் வற்றி வான்பார்த்து உறைந்த கண்கள் எத்தனை.. சொல்லொணா, எழுதவொண்ணாக் கொடுமைகளை எங்கள் சகோதரர்கள் அனுபவித்தபோதெல்லாம், கண்ணப்ப நாயனார் சிவபெருமானைக் கட்டிக்கொண்டிருந்ததைப் போல இரவும் பகலும் நாற்காலியைக் இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கிறார்களாம்! கொன்று பாடையேற்றிவிட்டு ஊர்வலத்தில் மலர்தூவுவதுபோலிருக்கிறது இந்தப் படுபாதகச் செயல்!

இன்று தினந்தந்தியில் வெளியாகியிருக்கும் தலைப்புச் செய்தி இதுதான்: “மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார் . கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அறிவிப்பு”

போதாக்குறைக்கு, ‘இலங்கையைப் பணியவைத்த உண்ணாவிரதம்’என்ற தலைப்புடன் கலைஞர் களைத்துப்போய் படுத்திருப்பதான ‘பரிதாபகரமான’புகைப்படங்கள் ஒரு முழுப்பக்கத்தில் வெளியாகியிருந்தன.

இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நாடகமாக இது அறிவிக்கப்படவேண்டும். இலங்கை அரசு - இந்திய மத்திய அரசு – தமிழக மாநில அரசு என்ற மூன்று அரசுகள் இணைந்து நடத்திய நாடகம் நன்றாகத்தானிருக்கிறது. ‘நான் அடிக்கிறது போல அடிக்கிறேன்.. நீ ங்கா ங்கா என்று சத்தமிட்டு அழு’என்று சொல்லிவைத்து எல்லாம் நடப்பதை அறிந்தவர் அறிவர். இந்திய அரசு ஆயுதமும் ஆட்படையும் கொடுத்து இலங்கையில் போரை நடத்துகிறது. அதே இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்லி ராஜபக்சேயைக் கேட்பதற்காக கொழும்புக்குத் தன் பிரதிநிதிகளை அனுப்புகிறது. ‘நான் ஒரு விசயம் தீர்மானிச்சுட்டா அப்புறம் என் பேச்சையே நான் கேக்க மாட்டேன்’என்று போக்கிரியில் விஜய் வசனம் பேசியது நினைவில் வந்து தொலைத்தது. தானே நடத்தும் போரை நிறுத்த, தானே கொழும்புக்குப் போகும் வேடிக்கை வேறெங்கும் நடப்பதற்குச் சாத்தியமில்லை. இதைத்தான் ‘கேக்கிறவன் கேனையனாக இருந்தால் எருது ஏரோப்ளேன் ஓட்டுமாம்’என்று சொல்வார்கள். மக்களெல்லாம் முட்டாள்கள், வடிகட்டிய அசடுகள், மகா மறதிக்காரர்கள் என்ற நம்பிக்கையில்லாமலா இதுவெல்லாம் நடக்கிறது?

தேர்தல் குறிகாட்டி அ.தி.மு.க.பக்கம் திரும்பவாரம்பித்துவிட்டது என்ற பயத்தின் விளைவே உண்ணாவிரதம் என்ற உச்சக்கட்டக் காட்சிக்குக் கலைஞரை உந்தித்தள்ளியது. கடைசி ஆட்டத்தையும் ஆடிப்பார்த்தாகிவிட்டது. (இவர்களைச் சொல்லமுடியாது. இதற்கு மேல்கூட நகைச்சுவைக் காட்சிகள் இருக்கக்கூடும்.) மாநில அரசாங்கத்தின் முண்டுகொடுப்பு இல்லாமல் போனால் மத்திய அரசு கவலைக்கிடமாகிவிடும் என்பது யாவரும் அறிந்ததே. இவர் அவர்களைக் கிண்டினார். ‘அன்னை’சோனியாவும், மதிப்பிற்குரிய மன்மோகன்சிங்கும் ராஜபக்சேவைக் கூப்பிட்டு ‘நிறுத்துகிற மாதிரி நடி. தேர்தலுக்குப் பிறகு அடி’என்றார்கள். ‘அப்படியே ஆகட்டும். கனரக ஆயுதங்களால் அடிக்கவில்லை. சுட்டே கொன்றுவிடுகிறேன்’என்றிருக்கிறார் ராஜபக்சே. அதாவது, ‘கத்தியால் குத்தினால்தானே காயம் வரும்; நஞ்சுவைத்துக் கொல்கிறேன்’ என்று ஒப்புதல் அளித்திருக்கிறார் இலங்கையின் அதிமேன்மை பொருந்திய ஜனாதிபதி அவர்கள். (துப்பினால் எச்சில் வீணாகிவிடும்)

நேற்று ‘கலைஞர்’செய்தியில் அருமையான காட்சிகளைக் காணமுடிந்தது. பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைக்கிறார் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, கவிஞர் கனிமொழியும், தளபதி ஸ்டாலினும் கவலையோடு தந்தையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜாத்தி அம்மாளும் தயாளு அம்மாளும் அருகிலிருக்கிறார்கள். கலாநிதி, தயாநிதி மாறன்கள் ‘இந்த மட்டில் பிழைத்தீர்களே’என்று ஆற்றாமை பொங்க அருகில் நிற்கிறார்கள். இயக்குநர் பாலச்சந்தர், கவிஞர் வாலி கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். ‘எங்க குல சாமி நீங்க’என்று வழக்கம்போல வைரமுத்து வந்து நிற்கிறார். சுப.வீரபாண்டியன் (நீங்களுமா…?) ‘சாதித்துவிட்டீர்கள் ஐயா’என்பதான புன்னகையோடு ஓரத்தில் நிற்கிறார். ‘எங்களையெல்லாம் பார்த்தால் அவ்வளவு கேனையன்களாகவா தெரிகிறது?’என்று கேட்கவேண்டிய மக்களில் ஒரு பகுதி கலைஞரைப் பார்க்க அலைமோதுகிறது.

ஆக, கலைஞரின் உண்ணாவிரதத்தினால் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றொரு பிம்பத்தை மக்கள் மனதில் ஓரளவிற்கேனும் கட்டமைப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆட்சியிலிருப்பவரின் அரைநாள் பட்டினிக்கே இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்துமளவிற்கு வலிமை இருக்கிறதென்றால் அதை ஏன் முன்னமே செய்யவில்லை? ஆயிரக்கணக்கான மக்கள் செத்துமடிந்தபின், இலட்சக்கணக்கானவர்கள் கண்ணீர் சிந்திச் சாபமிட்டதன் பின் உண்ணாவிரதம் இருக்கவேண்டியதன் அவசியந்தான் என்ன? அப்படியென்றால் ஈழத்தமிழர்களின் இனவழிப்பில் கலைஞருக்கும் பங்கிருக்கிறது. கொலைகளைத் தடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தும், கைகட்டி, கால்பிடித்துப் பார்த்திருப்பதும் கொலைசெய்தலுக்கு ஈடான குற்றந்தான்.

அமெரிக்கா மறைமுகமாக அச்சுறுத்திவிட்டது. ஐரோப்பிய நாடுகள் இனவழிப்பைக் கண்டித்து தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பவாரம்பித்திருக்கின்றன. மத்தியில் அரசு சரிந்துவிடும் என்பதோடு, இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்கா மூக்கை நுழைத்தால் இந்தியாவின் இறைமை என்னாவது? என்ற கிலி இந்தியாவைச் சூழவாரம்பித்திருக்கிறது. ‘இந்த அடி அடிக்கிறான் என்னய்யா பாத்துக்கிட்டிருக்கே’என்று அமெரிக்கா புருவம் தூக்குவது இந்தியாவின் இந்துசமுத்திரப் பொலிஸ்காரன் சீருடைக்கு ஏற்புடையதன்று.

‘கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததாம்’, ‘குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை’போன்ற பழமொழிகளை இங்கே நினைவுகூர்தல் நன்று.
பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் பல்வேறு வகையான போராட்டங்களை ஈழத்தில் போரை நிறுத்தும்படியாகக் கேட்டு நடத்திவருகிறது. சூழ்ச்சிக்கு அஞ்சி கட்சிமாறிய வைக்கோ அன்றிலிருந்து இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, ஈழத்திற்கு ஆதரவாகவே பேசிவருகிறார். மத்தியும் மாநிலமும் ஆட்டம் காணும் என்றறிந்ததும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட மருத்துவர் ராமதாஸ் சுயநலத்துடன்கூடிய பொதுநலவாதியாக மாறியிருப்பதும் மகிழ்ச்சியே. ஓட்டுக்காக என்றாலும், ‘சாமியா பேசுவது’என்று யாவரும் வியந்து பார்க்கும்படியாக ஈழ ஆதரவுக் கருத்துக்களை நாளாந்தம் உதிர்த்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா அவர்களின் குரலுக்கு இன்றைய சூழலில் மரியாதை இருக்கவே இருக்கிறது. தன்னுடலில் மூட்டிய தீயால் இலட்சக்கணக்கான தமிழகத்தாரின் இதயங்களில் விழிப்பு என்ற சுடரை ஏற்றிவைத்துப்போன முத்துக்குமார், அவன் வழியில் தம்முயிரை ஈகம் செய்த ஏனையோர், ‘எங்கள் இரத்தமய்யா… எங்கள் இரத்தம்…’ என்று ஊர்வலங்களையும் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடத்திக்கொண்டிருக்கும் தமிழக சகோதரர்கள், உண்ணாவிரதம் இருக்க அரசு இடமளிக்காதபோது அலைந்து திரிந்து, ‘தாயகத்தில்’பதினொரு நாட்கள் பசித்துக் கிடந்த பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட மனிதாபிமானமுள்ள பெண்கள், எப்போதும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் கவிஞர்கள் தாமரை, அறிவுமதி, சிறைசென்ற சீமான், அமீர், கொளத்தூர் மணி, சம்பத், விருதைத் திருப்பியளித்த பாரதிராஜா, திரைத்துறையினர், பிரான்ஸ், கனடா, இலண்டன் எனத் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் ‘எங்கள் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள்’என்று அவ்வந் நாடுகளின் ஆட்சியலுவலகங்களின் முன் தொடர்போராட்டங்களை நடத்திவந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோருடைய உணர்வுகளின் மீதும், தியாகங்களின் மீதும் மலத்தில் தோய்த்தெடுத்த செருப்பால் அடித்தது போலிருக்கிறது ‘கலைஞரின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிப்பு’என்ற செய்தி.

மேலே பட்டியலிடப்பட்டிருப்பவர்கள் ஒன்றுமே செய்யவில்லை; கலைஞரின் அரைநாள் பட்டினிதான் அவ்வளவு பெரிய விடயத்தைச் சாதித்திருக்கிறது என்பது எத்தனை பெரிய கயமைத்தனமானது. இப்படியெல்லாம் நடக்கக்கூடுமெனில், எருது ஏரோப்ளேன் ஓட்டுவதொன்றும் ஆச்சரியமில்லை.

வெயிலைவிடக் கொடுமையாக எரிக்கிறது பிணங்களின் மீது அரசியல் செய்பவர்களின் வார்த்தைகள். ‘மக்கள் இனியும் முட்டாள்கள் இல்லை’என்பதைத் தேர்தல்முடிவுகள்தான் தெளிவுபடுத்தவேண்டும். எல்லா அற்பத்தனங்களையும், கயமைகளையும், தகிடுதத்தங்களையும் பார்த்துக்கொண்டிருக்கும் வரலாறு பாடம் கற்பிக்கிறதோ இல்லையோ, மத்திய, மாநில அரசுகளுக்கு ராஜபக்சே பாடம் கற்பிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.


4.07.2009

கவிஞர் சுகுமாரனின் ‘வெளிச்சம் தனிமையானது’


கற்பனைக் கதைகள் காலாவதியாகிக்கொண்டிருக்கின்றனவோ என்ற எண்ணத்தை இலக்கிய நடப்புகள் தோற்றுவிக்கின்றன. ‘எனது கற்பனையைத் தொட்டு நான் எழுதுகிறேன்’என்று பேசிக்கொண்டிருந்த காலங்கள் பின்னழிந்தன. கட்டுரையின் உண்மையும் கதையின் ஈரமும் சுயசரிதைத் தன்மையும் கலந்த அபுனைவுகளே தமிழிலக்கிய வாசகர்கள் அநேகருடைய விருப்பத் தெரிவாகியிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்புவரை நான்கூட‘கட்டுரை என்பது வரட்சியானது’என்ற ஒவ்வாமையுடன் இருந்தேன். கதையின் கனவுக் கம்பளங்கள் தரையை அவ்வளவிற்கு மறக்கடித்திருந்தன. சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், ச.தமிழ்ச்செல்வன் போன்றோரின் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்த பிறகு, நாவல்களும் சிறுகதைகளும் மூன்றாம் இடத்திற்கு நகர்ந்துவிட்டன. கவிதை எப்போதும் பெருமிதம் வழியத் தூக்கி உச்சிமுகர விரும்பும் செல்லப்பிள்ளையாக முதலிடத்திலேயே இருந்து வருகிறது.

நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவில், உயிர்மை ‘ஸ்டால்’இற்கு அடிக்கடி போய், ‘வந்துவிட்டதா? வந்துவிட்டதா?’என்று நச்சரித்துப் பெற்றுக்கொள்ளுமளவிற்கு சுகுமாரனின் கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டிருந்தேன். (புத்தகம் பற்றிய அறிவித்தல் முன்னமே உயிர்மையில் வெளிவந்துவிட்டிருந்தது) கண்காட்சி முடிவதற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’கையில் கிடைத்தது. அந்தத் தொகுப்புடன் ஒரு புகையிரதப் பயணத்தின்போது உரையாட முடிந்தது. தொடர்ந்த பிரயத்தனத்தின் பின் கிடைத்த கட்டுரைத் தொகுப்பு ‘வெளிச்சம் தனிமையானது’. கட்டுரையின் சுருக்க வசதி கருதி ‘வெளிச்சம் தனிமையானது’தந்த அனுபவம் பற்றி மட்டும் பேச முற்படுகிறேன்.
கட்டுரைகளைத் தொகுப்பாகப் படிக்கும்போது ஒரு இழை இருக்கும். தனிக்கட்டுரை வாசிப்பில் ஆசிரியரின் தேடலையும் தெரிவையும் முழுமையாக அடையாளங்காண இயலாது. சுகுமாரனை ஈர்த்தவர்கள் தனிமையானவர்கள், கலகக்காரர்கள், இலக்கியத்தை-ஓவியத்தை-இசையை-நடிப்பை-கவிதையை-கதையை அதன் மென்மையான ஆன்மாவுக்காகவே நேசித்தவர்கள். அவர்களது உலகம் தனிமையின் கேவல்கள் நிரம்பி வழிவது. உதாசீனத்தின் வெப்பியாரம் பொங்குவது.

தொகுப்பின் தலைப்பு கவித்துவமானது. கேள்விகளைத் தூண்டுவது. ‘வெளிச்சம் எப்படித் தனிமையானதாக இருக்க முடியும்?’, ‘இருளன்றோ தனிமையின் தோழி!’. அந்தப் பெயரைக் கேட்டதும் எனது தோழிகளில் ஒருத்தி சொன்னார்‘அது கட்டுரையாளரின் சுபாவத்தைச் சுட்டுவதாக இருக்கிறது’என்று.

ஒரு நல்ல படைப்பென்பது ஆத்மார்த்தமாக நம்மோடு உரையாடியபடி நடந்துவரும் நண்பனைப் போன்றது. விடைபெறும் தருணத்தில் பிரிவு விழுத்தும் துக்கத்தின் நிழல் நம்மீது சாய்ந்துவிடுகிறது. கைகளை அழுந்தப் பற்றிக்கொள்கிறோம்; கண்களுக்குள் பார்த்துக் கொள்கிறோம்; மெதுவாகச் சிரிக்கவும் சிரிக்கிறோம். சுகுமாரனின் கட்டுரை இறுதி வரிகள் ஒரு கவித்துவமான பிரிவினையொத்தவை. சட்டென அது தரும் உணர்விலிருந்து விடுபட்டுவிட இயலாது. சில சமயங்களில் முழுக் கட்டுரையுமே அந்த ஓரிரண்டு வரிகளை நோக்கிய நகர்வாகவே தோன்றியிருக்கிறது.
‘நிழலற்றவனின் அலறல்’என்ற கட்டுரையில் மலையாளக் கவிஞர் அய்யப்பனைக் குறித்து இப்படி எழுதுகிறார்:

“பேதலிப்பின் தடுமாற்றங்களுக்கும் தெளிவின் பரவசத்துக்கும் இடையில் உருவாகிறவை அவரது கவி வெளிகள். கண்ணீர்த்துளியின் விசும்பலிலிருந்தும் குருதியோட்டத்தின் மௌனத்திலிருந்தும் உயர்கிறது அவரது மொழி”

ஒரு படைப்பை, எழுதப்பட்ட வரிகளினூடு மட்டும் பார்க்காமல் எழுதாமல் விடப்பட்ட அகச்சரட்டைத் தொடர்வது கவிஞர்களுக்கே சாத்தியம். எழுதுபவரின் அந்தரவெளியை உணர்வது சிறந்த வாசகனுக்கே சாத்தியம். தாங்கள் எழுதியதையே மீண்டும் மீண்டும் வாசித்து புளகாங்கிதமடையும் சுயமோகிகளுக்கு அந்தச் சுகானுபவம் கிட்டுவதில்லை. சுகுமாரன் தேர்ந்த வாசகனுமாயிருக்கிறார்.

வாசிக்கப்படாத புத்தகங்கள் நீர்நிறைந்த கண்களுடன் நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதுபோன்ற கற்பனை(?) நிறையத் தடவை வந்திருக்கிறது. தமிழ்ப் புத்தகங்களுக்கே இந்த நிலை எனில், பிறமொழி வாசிப்பு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதிலும் ஆரம்ப வாசகர்களுக்கு நல்ல வழிகாட்டுதல்கள் அவசியமாயிருக்கின்றன. அதை ‘வெளிச்சம் தனிமையானது’ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்திருக்கிறது.

புறம், அயல் என இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் ‘வெளிச்சம் தனிமையானது’வின் முதல் பகுதியாகிய ‘புறம்’முழுவதும் மலையாள இலக்கியம் சார்ந்தது. இரண்டாவது பகுதி மேலைத்தேய கலைஞர்களைப் பற்றியது.

‘ஒரு விசாரணையின் நூற்றாண்டு’ என்ற கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிற குறியேடத்து தாத்ரி, வாசித்து முடிந்தபிறகும் நீண்டநாள் என் நினைவில் இரவெல்லாம் விம்மியழுதுகொண்டிருந்தாள். மேல்சாதி மற்றும் ஆணாதிக்கத் திமிரால் சீரழிக்கப்பட்ட ஒரு பெண், தன்னுடலை ஆயுதமாக்கி எவ்வாறு திருப்பித் தாக்கினாள்; காலமாற்றங்களுக்கியைபுற மாறும் சிந்தனைகளில் அவள் எவ்விதமெல்லாம் ஞாபகங்கொள்ளப்படுகிறாள் என்ற வலிநிரம்பிய வரலாற்றை சுகுமாரன் அந்தக் கட்டுரையில் பகிர்ந்துகொண்டிருந்தார். ஒரு வேசியாக, வஞ்சிக்கப்பட்ட அபலையாக, கலகக்காரியாக, பெண்ணியக் குறியீடாக அவள் பன்முகத் தோற்றம் கொள்கிறாள். குறியேடத்து தாத்ரி ஏதோவொரு வகையில் அனைத்துக் காலங்களிலும் வாழ்ந்த, வாழும் பெண்களின் வார்ப்பாயிருக்கிறாள்.

சில எழுத்தாளர்கள் அவர்களால் எழுதப்படும் கதைகளிலும் பார்க்க சுவாரசியமானவர்கள். சிலரை நெருங்கும்போதோ, அவர்களது நடவடிக்கைகளால், அதுவரை கட்டமைக்கப்பட்டிருந்த மகோன்னத பிம்பத்தைத் தகர்த்தெறிந்து விடுவார்கள். கேரளத்தில் வாழ்வாலும் எழுத்தாலும் வியந்து, விதந்து பேசப்பட்ட, சனங்களின் எழுத்தாளராகிய வைக்கம் முகம்மது பஷீரைப் பற்றியும் சுகுமாரன் எழுதியிருக்கிறார்.

“நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களே அவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லோரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள். அந்தப் பாத்திரங்கள் மீது வாசகனும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி”

மேலுக்குக் கனவான்போலத் (பெண்பால் தட்டுப்பாடு அடிக்கடி நிகழ்வது) மினுக்கும் ஒவ்வொருவரதும் இருண்ட பக்கங்கள் அவரவர்க்கே வெளிச்சம். அதனால்தான் பஷீர் படைக்கும் பாத்திரங்களில் தங்களைப் பொருத்திப் பார்த்து, அப்பாத்திரங்களை நேசித்தலும் கொண்டாடலும் சாத்தியமாகிறது. பஷீரைப் போல மலையாள இலக்கியத்திற்குச் செழுமை தந்த சக்கரியா, தகழி ஆகியோரைப் பற்றியும் சுகுமாரன் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். சிறந்த படைப்புகளை அது பிறந்த மூலமொழியிலேயே வாசிக்கக் கிடைக்கும் பேறுபெற்றவர்கள் பாக்கியவான்கள் என்பர். ஏனெனில், இன்னொரு மொழிக்கு அது பெயர்க்கப்படும்போது இழக்கப்படுபவை அநேகம். தமிழும் மலையாளமும் நன்கறிந்த சுகுமாரன் அவர்கள் இருமொழிகளிலுமுள்ள படைப்புகள் மற்றும் படைப்பாளிகளைப் பற்றிப் பேச கூடுதல் தகுதிபெற்றவரே.

ஆனால், கட்டுரைகளில் சில இடங்களில், தமிழில் நல்ல இலக்கியங்கள் பெருவாரியாக வரவில்லை என்ற இளக்காரம் மலையாளிகளுக்கு இருக்கிறது (‘சிவகாமி அம்மாள் தனது சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா…?’ நினைவில் வருகிறது இல்லையா?) என்ற வருத்தம் தொனிக்கவே செய்கிறது.

‘ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்’என்ற கட்டுரை வாயிலாக, அரச இயந்திரமானது, சட்டம் என்ற பெயரில், சாதாரண மக்களது அடிப்படை உரிமை மற்றும் உணர்வுகளை எவ்வாறு சிதைத்துப்போடுகிறது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். 1976ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதியன்று கோழிக்கோடு என்ற இடத்திலுள்ள மாணவர் விடுதியொன்றிலிருந்து காவற்துறையினரால் கைதுசெய்து கொண்டுசெல்லப்பட்டு காணாமலடிக்கப்பட்ட ராஜன் என்ற இறுதியாண்டு பொறியியல் மாணவனது தந்தை ஈச்சரவாரியர் தனது மகனைத் தேடி அலைந்த அலைச்சல்கள், கடைசியில் தனது மகன் காவல்துறையினரால் கொல்லப்பட்டான் என்பதைக் கண்டறிந்தது போன்ற விடயங்களை இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.

கவிஞர்களான அய்யப்ப பணிக்கர், கடம்பனிட்ட ராமகிருஷ்ணன், சமூகப்போராளி மயிலம்மா, இசைக்கலைஞர் நெய்யாற்றின்கரை வாசுதேவன் ஆகியோரும் ‘வெளிச்சம் தனிமையானது’வில் பேசப்பட்டிருக்கிறார்கள்.

தொகுப்பின் அடுத்த பகுதியான ‘அயல்’பெரும்பாலும் ஐரோப்பியப் படைப்பாளிகள், கலைஞர்களைப் பற்றியது. ‘எதைத் தேடுகிறீர்களோ… அதையே கண்டடைவீர்கள்’என்பதற்கிணங்க சுகுமாரனின் பேனா நகர்ந்துசெல்கிறது. வாசிப்பின்வழி, கலைகள் வழி அவர் கண்டடைகிற மனிதர்கள் தம்மளவில் தனித்தவர்கள். தீவிர, சமரசங்களற்ற ரசனைகளைக் கொண்டவர்கள். மரபுகளுக்கெதிரான கேள்விகளுக்கு எப்போதும் தயங்காதவர்கள்.

‘ஒரு தேடல்… ஓர் அறிமுகம்… சில கவிதைகள்’ என்ற கட்டுரையின் மூலம் அல்பேனியக் கவிஞரான மிமோஸா அஹ்மதியை சுகுமாரன் அறிமுகப்படுத்துகிறார். மிமோஸா அஹ்மதியின் கவிதை வரிகள், அடக்குமுறையாளர்கள் மீதான கனல், எல்லா நிலங்களிலும் இலக்கியத்தில் ஒன்றேபோல் வீசிக்கொண்டிருப்பதை உணர்த்துகின்றன. ‘அம்மாவுக்குக் கடிதம்’என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்:

அம்மா,
என்னவோ நடக்கப்போகிறது என்று உணர்கிறேன்
அரசாங்கம் மக்களுக்கு இவ்வளவு எதிரானதாக
ஒருபோதும் இருந்ததில்லை.
வஞ்சகம் மனிதர்களிடையே இவ்வளவு மோகத்துக்குரியதாக
எப்போதும் இருந்ததில்லை.
ஆழ்ந்த தூக்கத்தில் கசிந்து மறைவது போல
இவ்வளவு பெண்கள்
காணாமலோ காலியாகவோ போனதில்லை.”

பல கட்டுரைகளை வாசிக்கும்போது நமது வாசிப்பின் போதாமை தெரியவருகிறது. தண்ணீர்த்தொட்டியை கடல் என்று நினைத்து நீச்சலடிக்கும் மீன்குஞ்சுகளைப் போன்றவர்களே நாங்களும்.

சூஸன் சாண்டாக் கவிஞரின் பிரியத்துக்கும் நன்றிக்குமுரியவராக இருக்கிறார். அவரால் தூண்டப்பட்டு வாய்த்த ‘பாதென் பாதெனில் கோடைக்காலம்' என்ற நாவலையும் அதை எழுதிய லியோனித் சைப்கினையும் பற்றி ‘தாஸ்தயேவ்ஸ்கியை நேசித்தல்’என்ற கட்டுரையில் சொல்லியிருக்கிறார். கட்டுரையின் நெடுகிலும் வழியும் தாஸ்தயேவ்ஸ்கியின் மீதான வாஞ்சையை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று-தனது கதையின் நாயகனாக தாஸ்தயேவ்ஸ்கியையே வரித்த லியோனித் சைப்கினுக்கு தாஸ்தயேவ்ஸ்கி மீது இருக்கும் வாஞ்சை. இரண்டு-சைப்கினை முன்வைத்து, தாஸ்தயேவ்ஸ்கி மீதான தனது வாஞ்சையை எழுதிச்செல்லும் சுகுமாரனின் பெருமிதம். அது அவரறியாமல்(அன்றேல் அறிந்து)ஓரிடத்தில் வெளிப்பட்டுவிடுகிறது.

“தாஸ்தயேவ்ஸ்கியை மையப் பாத்திரமாகக் கொண்ட நாவல் என்பது என்னை இன்னும் ஆவேசப்படுத்தியது.”

நூலின் தலைப்பாயமைந்த ‘வெளிச்சம் தனிமையானது’என்ற கட்டுரையில் பேசப்படும் கவிஞர் ஃபரூக் ஃபரோக்சாத் ஆச்சரியங்களைத் தூண்டும் பெண்ணாயிருக்கிறார். ஆணாதிக்கத்தாலும் மதத்தின் பெயராலும் பெண்கள் இரண்டாம் பாலினத்திற்கும் கீழாக நடத்தப்படும் ஈரானிய சமூகத்தில், நமது காலத்திற்கு ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு பெண்ணின் தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்வின் துணிச்சல் வியப்பிலாழ்த்துகிறது. அவர் எழுதுகிறார்:

“நகரத்தின் மெலிந்த நீதியின் கயிறுகளில்
எனது நம்பிக்கை தொங்கவிடப்பட்டபோது….
தெருக்களில் அவர்கள்
எனது தீப்பந்தத்தின் தலையை வெட்டியபோது…
அவர்கள் எனது காதலின் அப்பாவிக் கண்களை
இறுகக் கட்டியபோது..…
எனது நடுங்கும் கனவுகளின் எல்லா நாளங்களிலும்
புது உதிரம் ஊற்றெடுத்தபோது…
பழைய கடிகாரத்தின் வாடிக்கைப் பாடலன்றி
வேறல்ல எனது வாழ்க்கை என்றானபோது…

நான் உணர்ந்தேன்…
நான் காதலிக்க வேண்டும்…
நான் பித்தேறிக் காதலிக்க வேண்டும்.”

சுகுமாரன் சிறந்ததொரு மொழிபெயர்ப்பாளரும்கூட. மேற்கண்ட வரிகளை மீறிய பொருளை அக்கவிதை கொண்டிராது என்றே நம்புகிறேன்.

இசைக்கலைஞர் லூசியானா சோஸாவைப் பற்றிய கட்டுரையை நான் உயிர்மையிலேயே வாசித்திருந்தேன். அதில் இடம்பெற்ற வரிகளை எங்காவது குறித்துவைக்க வேண்டுமென்றும் எண்ணியிருந்தேன். லூசியானாவின் பாடல்களைக் கேட்ட அனுபவம் தனக்கு எப்படி இருந்தது என்பதை ‘பாப்லோ நெரூதா… லூசியானா சோஸா… எலிசபெத் பிஷப்’என்ற கட்டுரையில் விபரிக்கிறார் (புளகாங்கிதமடைகிறார் என்றும் சொல்லலாம்) சுகுமாரன்.

“மனிதப் பிரக்ஞையில் இசை உருவாக்கக்கூடிய படிமங்கள் ஒவ்வொன்றாகத் திரளத் தொடங்கின.

இதுவரை பார்த்திராத சமவெளிகள். அதன் ஓரங்களில் வரிசையாக நின்று அசையும் பெயர் தெரியாத மரங்கள். அவற்றின் கிளைகளிலிருந்து விடுபட்டு காற்றில் மிதந்து இறங்கும் வண்ண இலைகள், வேகமாகப் பாயும் ராட்சத வாகனங்கள், ஊர்வலமாகப் போகிற மக்கள் கூட்டம், தனிமையில் இருக்கும் பெண்ணின் நீர்த்திரைக் கண்கள், முடிவில்லாத நெடுஞ்சாலையில் தனியாக நடந்து போகும் மனிதன், பழங்கால தேவாலய கோபுரத்தில் அசையும் பெரிய மணி, பிரமாண்டமான கட்டடங்கள், சரிகைப் பெருக்காக பாலத்துக்குக் கீழே புரளும் நதி, அரண்ட வெளிச்சத்தில் திரியும் உருவம் புலப்படாத விலங்குகள், பாடகியின் மேல் மட்டுமாக வெளிச்சம் அலையும் இசையரங்கு என்று படிமங்கள் தொடரும்.”

எழுத்தும் இசையாகும் அபூர்வ தருணங்கள் உண்டு என்பதற்கு மேற்கண்ட பந்தியே சான்று. செர்வாண்டிஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘டான்குவிக்ஸோட்’என்ற புனைவைப் பற்றி எழுதப்பட்ட ‘நிரந்தரமான சமகாலத்தன்மை’ என்ற சொற்றொடர் சுகுமாரனுக்கும் பொருந்தும். அவர் தனது மொழிநடையைக் காலந்தோறும் புதுப்பித்து வருவதை அவரது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவர்களால் உணரமுடியும்.

ஒற்றைச் சரடுள்ள நாவலுக்கும், பல ஆளுமைகளை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கட்டுரைத் தொகுப்பைப் பற்றி எழுதுவது ஒரு சவால் என்பதை இந்தப் பயிற்சியின் வழியாக நான் கற்றுக்கொண்டேன்.


நன்றி: உயிரோசை


4.03.2009

மலைகளுக்குச் செவிகள் இல்லை

மேடைகளில்
கனன்ற சொற்பொறிகள்
நேரே உங்கள் இதயத்துள்
இரத்தம் கண்ணீராய் திரிந்தது.

நம்பித்தானிருந்தோம்!

பேசிய நாக்குகளைக் கைதுசெய்தார்கள்
விரல்களையும்.
சிறையிருளைக் கிழித்திறங்கும்
ஒற்றைச் சூரியவிரல்
இரத்தக்கறை படிந்த சுவர்களில் எழுதுகிறது
உங்களில் இரக்கமுள்ளோரின் பெயர்களை.

ஊர்வலங்களில் சீரான காலசைவில்
எழுச்சியுற்று நடந்தீர்கள்
பட்டொளிப் பதாகைகள்
காக்கிகளால் சுருட்டப்பட்டன
அதிகார நகங்களில்
உங்களது சதைத்துணுக்குகள்
நீதியின் உதடுகள்
லத்திகளால் அடித்துச் சாத்தப்பட்டன.

முத்துக்குமாரிலிருந்து
தீப்பந்தமாகிய உடல்களால்
சற்றைக்குப் பாதை ஒளிர்ந்தது
பிறகு கும்மிருள்.

எனினும் நம்பித்தானிருந்தோம்!

நாங்களும் நீங்களும்
செவிட்டு மலைகளிடம்
வியர்த்த வார்த்தைகளால்
உரையாடினோம்.
அதிகாரங்களின் பள்ளத்தாக்குகளில்
எங்களால் இசைக்கப்பட்ட துயரத்தின் பாடல்கள்
கையேந்தித் திரிகின்றன.

வரும் எல்லாச் செய்திகளிலும் குருதி
எதிர்ப்படும் எல்லா மனிதரிலும் கண்ணீர்
நாங்கள் இரண்டு வேளை பல்துலக்குகிறோம்
மூன்று வேளை அழுகிறோம்.

கேவலத்தில் கேவலமாய்
இன்னமும் வயிறு பசிக்கிறது.
ஒருபக்கக் கன்னம் கருகி
வலியில் துடித்த குழந்தையை
பலவந்தமாய் மறந்து எப்போதாவது
சிரிக்கவும் செய்கிறோம்.

நாடற்று அலைபவர்கள்
ஒவ்வொருவருள்ளும்
எரிமலை புகைகிறது
புயல் சீறுகிறது
பூகம்பம் குமுறுகிறது.

ஒரு குருவி சிறகசைக்கும் ஓசைக்கும்
பதறியழும் பைத்தியங்களாய்
எங்கள் மனிதர்களைச் சிதைத்தாயிற்று.

இந்தக் களரியின் பின்
குழந்தைமையற்ற குழந்தைகள்
எவரேனும் எஞ்சக்கூடுமெனில்
செடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே
பதுங்குகுழிக்குள் பாய்ந்தோடி இறங்குவர்.

இறந்தவர்களின் நினைவுகளோடு எனினும்
ஊர் திரும்பும் கனவை
இடிபாடுகளுக்குள்ளிருந்து
இனி மீட்டெடுக்கவே முடியாது.

ஒருவழியாய் நண்பர்களே!
உங்கள் கவனத்தை
சவப்பெட்டிகளிலிருந்து
வாக்குப்பெட்டிகளுக்குக் கடத்திவிட்டார்கள்.

நன்றி: சமூக விழிப்புணர்வு

4.01.2009

யாழினி என்றொரு ‘சிலோன் பொண்ணு’வெயில் காங்கை விரட்ட, தலை கொதிக்க விரைந்து நடந்தாள் அமுதா. எட்டடிக்கு எட்டடி அறையினுள் தனியே நித்திரையாகக் கிடக்கும் குழந்தை எழுந்து அழுவாளோ.. என்ற நினைப்பில் மனம் பதைத்தது. பால் பவுடர் முடிந்துவிட்டிருக்காவிட்டால் இப்படி மண்டையைப் பாம்பாய் பிடுங்கும் வெயிலில் கடைக்குப் போயிருக்கமாட்டாள். வழக்கமாக யாழினி பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியதும் அவளை நிலாவுக்குப் பக்கத்தில் இருத்திவிட்டுத்தான் எங்கு போவதானாலும் போவாள். ஆறு வயது யாழினி ஒன்பது மாத நிலாவுக்குக் கதைசொல்வாள். நிலா வாய்க்குள் ஒற்றை மல்லிகை பூத்தாற்போல சிரித்தபடியிருக்கும். இடையிடையே ‘க்கு…க்கு’ என்று சத்தம் எழுப்பும்.

“நாங்கள் அம்மம்மாட்டப் போவம் வாறியா நிலாக்குட்டி?”
“ங்காவ்”
“பிள்ளைக்கு அம்மா பிக்கா வாங்கிக்கொண்டருவா”
“ம்ம்மா…”

யாழினிக்கு அந்த முகாம் பிடிக்கவேயில்லை. அங்கே எவ்வளவு பெரிய வளவு…அம்மம்மா, பெரியாச்சி, பெரியம்மா, சாந்தி அக்கா, கீதன் அண்ணா, மணி நாய்க்குட்டி, பள்ளிக்கூடத்தில் பிரியா, தமிழினி, உமாசுதன்… இங்கு வந்த புதிதில் பள்ளிக்கூடத்தில் இவள் கதைப்பதைக் கேட்டு வகுப்புப் பிள்ளைகள் பகிடி பண்ணினார்கள். அவளையொத்த ஏனைய ‘சிலோன்காரப் பசங்க’ளின் பேச்சுமொழி மாறிவிட்டிருந்தது.

“எப்பப்பாரு ஓம்ங்கிற… மந்திரஞ் சொல்றியா?”

அவர்கள் கதைப்பது யாழினிக்கு கொஞ்சம்தான் விளங்கியது. ‘ஆமா…ஆமா’என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்தாள். ‘அதுக்கு இன்னா இப்ப’என்று மிரட்டிப் பார்த்தாள்.

‘அப்பா இருந்திருந்தால் நாங்கள் இஞ்சை வந்திருக்க மாட்டம்’என்று நினைத்தாள். அப்பாவை நினைத்ததும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அப்பா உயிரோடு இருக்கும்போது யாழினி மட்டுந்தான். நிலாக்குட்டி அம்மாவின் வயிற்றுக்குள் இருந்தது. அப்பா வேலையால் வரும்போது யாழினிக்கு மறக்காமல் எள்ளுருண்டை வாங்கிவருவார். சிலவேளைகளில் வாழைப்பழமும் பிஸ்கட்டும் வரும். யாழினியை உயரே தூக்கிப்போட்டு கீழே வரும்போது டபக்கென்று பிடித்துக்கொள்வார். உயரே போகும்போது பயமாகவும் சந்தோசமாகவும் இருக்கும். கொஞ்சும்போது அப்பாவின் மீசை கன்னத்தில் குத்தும். யாழினியை நடுவில் போட்டுக்கொண்டு அப்பாவும் அம்மாவும் பக்கத்தில் பக்கத்தில் படுத்திருப்பார்கள். அம்மாவின் வயிற்றுக்குள் நிலா உருவானபிறகு யாழினி அப்பாவின் மேல் காலைத்தூக்கிப்போட்டுக்கொண்டு நித்திரை கொள்ளப்பழகினாள். அம்மாவுக்கு மேல் காலைத் தூக்கிப்போட்டால் வயிற்றுக்குள் இருக்கிற தம்பிக்கோ தங்கச்சிக்கோ நோகுமாம்.

அமுதாவின் பையை வாசலிலிருந்த காவலாளி குடைந்து குடைந்து பார்த்தான். வாங்கிவந்திருந்த மிளகாய்களைப் போல கடுகடுவென்றிருந்தான். அவன் தனக்குச் சம்பளம் கொடுப்பவர்களுக்கு மிக விசுவாசமான நாய்க்குட்டியாக இருந்தான். அவனை மீறி யாரும் முகாமுக்குள் நுழைந்துவிடமுடியாது என்று அவன் நினைத்தான். அது வெறும் நினைப்பாகவே இருந்தது. அவன் முகாமில் தங்கியிருப்பவர்களை ‘அகதி நாய்களா’என்பதுபோலத்தான் பார்ப்பான்.

“இந்த ஊர்ல வந்து ஒங்க வேலையெல்லாம் காட்டலாம்னு நெனைக்காதீங்க… தோலை உரிச்சுப்புடுவாங்க”

அவனைப் பொறுத்தளவில் அகதிகள் எனப்படுபவர்கள் தப்பித்து ஓடிவந்த குற்றவாளிகள். அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டு ஒரு சுற்றுச்சுவருக்குள் அடைத்து அரசாங்கம் கருணையோடு பராமரித்து வருகிறது. அதற்கு அகதிகள் நன்றிக்கடன்பட்டவர்கள். அமுதாவுக்கு அவனைப் பார்க்கப் பார்க்கப் பற்றியெரிவதற்கு மேலுமோர் காரணம் இருந்தது. அவன் ஒருபோதும் பெண்களின் கண்களைப் பார்த்துப் பேசுவதில்லை. மார்பு, இடுப்பு, உதட்டில் கண்கள் தாவித் தாவிப் போய்க்கொண்டிருக்கப் பேசுவான். அப்படிப் பார்ப்பது அவனது உரிமையே போன்ற தோரணையும் பேச்சுத்தொனியும் இருக்கும்.

“கண்ணைப் பார் கண்ணை… எரியிற விறகுக் கட்டையை எடுத்துச் சொருகவேணும்”

என்று அமுதா உள்ளுக்குள் கொதிப்பாள். அவள் நினைப்பதை வெளியில் சொல்லமுடியாது. முகாமின் நீதி அகதிகளுக்குச் சாதகமாக இருந்ததேயில்லை. கலெக்டர் மட்டும் கொஞ்சம் கருணையோடு இருந்தார். அகதிகளின் கதைகளை அக்கறையோடு செவிமடுப்பார். ஆனால், கனிந்து ஒரு வார்த்தை சொல்லமாட்டார். பிறப்பிக்கப்படும் கட்டளைகளில் அந்தக் கனிவு செறிந்திருக்கும். கலெக்டரிடம் விடயம் போவதற்கிடையில் இடையில் நிற்கும் பூசாரிகள் கதைகளைப் பாதகமாகத் திரித்துவிடுவார்கள். கலெக்டர் அலுவலகத்தின் சுவர்களுக்கும் காதுகள் இருந்தன.

நிலா அம்மாவை ஆய்க்கினைப்படுத்தாத பிள்ளை. பசி வந்தால் மட்டும் அழும். மற்றபடி எந்நேரமும் சிரிப்புத்தான். பரணியின் பெண் பதிப்பு அவள். குழந்தையைப் பக்கத்து அறை அக்காவிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கலாம். அந்த அக்கா எங்கேயோ வெளியில் போயிருந்தா. அமுதா யாரோடும் அதிகம் பழகுவதில்லை. பத்து வார்த்தைகள் கதைத்தால் அதிகம். அவளது கணவன் பரணியை நெஞ்செல்லாம் இரத்தம் கொளகொளக்க பிணமாகக் கொண்டுவந்து போட்ட அன்று எல்லோரும் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதார்கள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. குரலெடுத்து அழவேயில்லை. அமுதாவின் அம்மாகூடப் பயந்துபோனாள்.

“பிள்ளை! மனசுக்குள்ளை வைச்சுக்கொண்டிருக்காமல் அழுது துக்கத்தைக் கரைச்சுப்போடு பிள்ளை”

தாய் மன்றாடினாள். அவனுடைய முகத்தில் மொய்த்த ஈக்களை வேப்பிலையால் யாரோ விரட்டிக்கொண்டிருந்தார்கள். அமுதா கண்ணெடுக்காமல் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். சொல்லியழுவதற்கான வார்த்தைகள் அவனது உயிரோடு பிரிந்துவிட்டிருந்தன. அந்த உதடுகள் அவளிடம் எப்படியெல்லாம் காதல் வழியப் பேசியிருக்கின்றன! எத்தனை முத்தங்களைப் பொழிந்திருக்கின்றன!

“நீ எவ்வளவு வடிவெண்டு உனக்குத் தெரியுமோடி?”

அவள் வெட்கத்தோடு அவனது தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு சிரிப்பாள். வியர்வையும் புல்வாசனையும் கலந்ததொரு மணம் அவனில் வீசும்.

“உன்ரை பெரிய கண்ணும் நீட்டுத் தலைமயிரும்… எனக்கு வயலுக்கை நிக்கேக்குள்ளையும் உன்ரை ஞாபகந்தான். நீ சமைக்கிறது… உடுப்புத் தோய்க்கிறது எல்லாம் படம்மாதிரித் தெரியும். எப்ப வேலையை முடிச்சுப்போட்டு ஓடிவந்து…”

இறுகத் தழுவியபடி கூந்தலுக்குள் உதிர்ப்பான் கிசுகிசுப்பாய் முடியும் கடைசி வார்த்தைகளை. அவளுடைய பார்வை தன்னில் விழவேண்டுமென்பதற்காக அவன் பண்ணிய திருகுதாளங்களையெல்லாம் அப்படித் தனித்திருக்கும்போது கதைகதையாகச் சொல்வான். அவர்களது காதல் திருமணத்தின் பிறகும் வற்றாத நதியாக நுரைத்துப் பாய்ந்தது. அந்தக் கூரை வீட்டிற்குள் காதலும் காமமும் பெருகிவழிந்த பகல்பொழுதொன்றில்தான் நிலாவைச் சூலுற்றாள் அமுதா.

“வாயும் வயிறுமா நிக்கிற பிள்ளையின்ரை பூவையும் பொட்டையும் பறிச்சுப் போட்டாங்களே நாசமறுவார்”

ஊரே பதறி அழுதது. அவள் ஓசை எழுப்பவில்லை. கண்ணீர் மட்டும் கண்களிலிருந்து சொரிந்தது.

‘வயித்துப் பிள்ளைத்தாய்ச்சி ராவிருட்டி போகாதை பிள்ளை போகாதை பிள்ளை’என்று தாய் தடுக்கத் தடுக்க இரவு வேளைகளில் அந்த வயல்வெளியில் வந்து நிற்பாள். இராணுவத்தினர் கணவனைச் சுட்டுப்போட்ட அந்த இடம் அவள் மனதில் சட்டம் போட்டுவைத்த படமாயிருந்தது. ஈரக்களியும் புல்லுமாய் சொதசொதவென்றிருந்த அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாள். சிலசமயம் தொட்டுப் பார்ப்பாள்.

“என்னை ஏன் இப்பிடித் தனிய அந்தரிக்க விட்டிட்டுப் போனனீங்கள்…?”

இரவை நனைத்துப் பொழியும் நிலவும் அவளோடு சேர்ந்து அழும்.

தம்பி முகுந்தன் அவளுக்குக் காவலாய் தொலைவில் ஒரு வரப்பில் அமர்ந்திருப்பான். அவனது கோபம் கூடைக்குள் போடப்பட்ட சர்ப்பமெனச் சுருண்டு கிடந்தது.

அன்றொருநாள் எறிகணைகள் இடைவெளி விடாமல் வந்து விழுந்து வெடித்தபடியிருந்தன. வீட்டுக்கு மேலால் எரியும் அன்னாசி வடிவில் மரணம் பறந்தது. குண்டு வீச்சு விமானங்கள் இடைவிடாமல் சுற்றின. யாழினி பயத்தில் அழுதுகொண்டேயிருந்தாள். ஆறுமாத வயிற்றுப் பாரம் இழுக்க இழுக்க அமுதா பதுங்குகுழிக்குள் இறங்கினாள். மேலே நின்ற முகுந்தனை ‘நீயும் வாடா’என்று கையைப் பிடித்து இழுத்தாள்.

“நீ உள்ளை வா அமுதா… அவன் வருவான்தானே”
யாரோ உள்ளிருந்து அழைத்தார்கள். முகுந்தன் அம்மாவுக்கும் யாழினிக்கும் பதுங்குகுழிக்குள் இறங்கக் கைகொடுத்தான். பிறகு தானும் இறங்கி யாழினியைத் தூக்கிக் கொஞ்சினான். அம்மாவை அணைப்பது தெரியாமல் அணைத்தான். அவன் கண்கள் பதுங்குகுழியுள் வயிறு துருத்தி அமர்ந்திருந்த அமுதாவில் ஒரு கணம் படிந்து மீண்டன. கண்களுக்குள்ளிருந்த கோபநாகம் ஒருகணம் தலைதூக்கி படம் விரித்தாடியது. அதுதான் அவனை அவர்கள் கடைசியாகப் பார்த்தது. அவனது சைக்கிளையும் அவன் எழுதிய கடிதத்தையும் நண்பன் ஒருவன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனான். அம்மா இடிந்துபோனாள். காணும் போராளிகளிடமெல்லாம் அவன் பெயரைக் கேட்டுக் கேட்டு அலைந்து களைத்தாள். பிறகு தனக்குள் சுருங்கி ஓய்ந்துபோனாள்.

‘நீ இந்தியாவுக்குப் போயிடு பிள்ளை’என்று அம்மா முனகிக்கொண்டேயிருந்தாள். குண்டுகள் அமளிதுமளிப்பட்ட ஓரிரவில் யாழினி பயம் தாளாமல் கறுப்பு முழி மேலேற விறாந்தையில் தலை அடிபட விழுந்தாள். நல்லவேளையாக காயம் பலமில்லை.

“பயமாயிருக்கு… அம்மா பயமாயிருக்கு…. அப்பா… என்ரை அப்பா…” தண்ணீர் தெளித்ததும் கண்ணை விழித்துப் பார்த்துவிட்டுப் பிதற்றினாள். காய்ச்சல் அனல் பொரிந்தது.

“இந்தப் பிள்ளைக்காக எண்டாலும் போ அமுதா”

அமுதா வேறு வழியின்றிச் சம்மதித்தாள்.

“அம்மம்மா நீங்களும் எங்களோடை வாங்கோவன்”

“இல்லைக் குஞ்சு! நீங்கள் போய்ட்டு சண்டை முடிஞ்சதும் வாங்கோ… முகுந்தன் மாமா அம்மம்மாவைத் தேடி வருவான். இஞ்சை பெரியாச்சி இருக்கிறா. வீட்டைப் பாக்கவேணும். மணி நாய்க்குட்டி பாவம்”

“அங்கை நாங்க போற இடத்திலை இப்பிடிக் குண்டு போடமாட்டினம்தானே அம்மம்மா! பிளேனாலை வந்து சுடமாட்டினமே?”

“இல்லையடா… அங்கை உங்களுக்கு ஒரு பயமுமில்லை”

இருளில் கடல் கறுத்துக் கிடந்தது. படகு ஆடிய ஆட்டத்தில் யாழினி சத்தி எடுத்தாள். புரளும் வயிற்றுப் பிள்ளையைத் தடவிக் கொடுத்தபடி தொலைவில் தெரியும் வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அமுதா. அம்மா, முகுந்தன், உறவினர்களின் நினைவில் கண்கள் கரைந்தன.

முகாமுக்குள்ளேயே இருக்கும் பள்ளிக்கூடத்தில் யாழினியைச் சேர்த்தாள். அவள் ஒவ்வொரு நாட்களும் அழுதபடியே திரும்பிவந்தாள். ‘அம்மம்மாட்டைப் போவோம்’என்பதையே மாற்றி மாற்றி வேறு வேறு வார்த்தைகளில் சொல்லியபடியிருந்தாள்.

முகாமுக்கு வந்து சேர்ந்து மூன்று மாதங்களாவதற்குள்ளேயே நிலா வெளியில் வரத்துடித்தது. வலி தின்ற ஒரு இரவில் பக்கத்து அறைக் கதவைத் தட்டினாள் அமுதா.

“எனக்கு வயித்துக்குள்ளை குத்துது… டொக்ரரைக் கூட்டி…”அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள். யாழினி வலியில் துடிக்கும் தாயை ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றாள். அந்த அறைக்காரர்கள் அப்போதுதான் உறங்க ஆயத்தமாகியிருக்க வேண்டும். அந்த அக்காவின் கணவர் சேர்ட்டைப் போட்டுக்கொண்டு முகாமுக்குள்ளேயே இருந்த வைத்தியசாலைக்கு விரைந்தார்.

ஒரு மணி நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. அமுதா வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடித்தாள். கைகால்கள் முறுக்கிக்கொண்டு வந்தன. உதட்டைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொள்ள முயன்றாள். யாழினி அரைகுறை நித்திரையில் அம்மாவைப் பார்ப்பதும் பிறகு உறங்கித் தலை சரிவதுமாக இருந்தாள்.

ஈற்றில் அம்புலன்சோடு அந்த மனிதர் திரும்பிவந்தபோது அமுதாவின் ஆடைகள் நனைந்திருந்தன.

“டொக்ரர் ஆஸ்பத்திரியிலை இல்லை. அங்கை இங்கை போன் பண்ணி இப்பத்தான் ஆளைக் கண்டுபிடிக்க முடிஞ்சுது… அம்புலன்சுக்குக் காசு கேக்கிறாங்களப்பா”மனைவியிடம் மெதுவாகச் சொன்னார்.

“அது இலவசம் எல்லோ…”அமுதாவை மெதுவாகப் பிடித்து நடத்திக்கொண்டே அந்தப் பெண் புறுபுறுத்தாள்.

“முகாமிலையும் லஞ்சம்”என்ற வார்த்தைகளை அமுதா நினைவு அறுந்துபோகும்முன் கேட்டாள்.

நிலா கைகாலெல்லாம் முறிமுறியாக இருக்க நாலு கிலோ எடையில் பிறந்தாள். கதைபேச தனக்கொரு துணை கிடைத்ததில் யாழினிக்கு கொள்ளை மகிழ்ச்சி. நிலாவைத் தூக்கமுடியாமல் தூக்கித் திரிந்தாள்.

அமுதாவின் பையை வழியில் இருந்த பொலிஸ்காரர்கள் கிண்டினார்கள். வாசலில் காவலுக்கு இருப்பவன் கிளறியதை அவர்கள் பார்த்தபடிதானிருந்தார்கள். என்றாலும் அவனது கண்ணுக்கு ஏதாவது தப்பியிருக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.
இப்படித்தான் ஒரு தடவை ‘தணிக்கை’யின்போது நடந்தது. காவல்காரனின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு யாராவது புதிதாக வந்து ஒளிந்திருப்பதைத் தடுக்கவும், முகாமிலிருப்பவர்கள் வெளியில் சென்று தங்குவதைத் தடுப்பதற்காகவும் அதிரடியாக சோதனை நடத்துவதை அங்கே ‘தணிக்கை’என்று அழைத்தார்கள். பொலிஸ்காரர்களின் கையில் இருக்கும் பட்டியலோடு அறையிலிருப்பவர்களின் எண்ணிக்கையும் பெயர்களும் ஒத்துப்போகவேண்டும். இல்லையெனில் தொலைந்தது. தணிக்கைக்கு நேரமில்லை. உறங்கிக்கிடந்த யாழினியை எழுப்பி அணைத்தபடி அமுதா தணிக்கைக்காக வெளியில் வந்துநின்றாள்.

‘அமுதா பரணிதரன்….!’
‘யாழினி பரணிதரன்….!’

பெயர்களை வாசித்தவனின் கண்கள் அமுதாவின் வயிற்றில் நிலைத்தன.

“இன்னாம்மா… புள்ளைதானா இல்லக் குண்டா…? உங்களையெல்லாம் நம்ப முடியாது”

அமுதாவின் உதடுகள் துடித்தன. பக்கத்து அறை அக்கா ‘கதைக்காதே’ எனச் சைகை செய்தாள். அதற்குள் அந்தப் பொலிஸ்காரன் அடுத்த அறைக்கு நகர்ந்திருந்தான்.

“தங்கச்சி! இஞ்சை இவங்களோடை சும்மா வாயைக் காட்டிப் போடாதை… அதை இதைச் சொல்லி தாற காசையும் தராமல் நிப்பாட்டிப் போடுவாங்கள். தாறதே வாய்க்கும் வயித்துக்கும் பத்தாம இருக்குது. நாங்கள் நியாயம் கதைக்க வெளிக்கிட்டால் நீ என்ன எல்.டி.டி.யா எண்டு உள்ளுக்கை தள்ளிப்போடுவாங்கள்”

“நாங்கள் என்ன குற்றம் செய்தம் அக்கா! நாங்களும் அங்கை நல்லா வாழ்ந்த ஆக்கள்தானே… ஏதோ காலக்கொடுமையாலை இப்பிடி வந்து இருக்கவேண்டியதாக் கிடக்கு… கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாமல் கதைக்கிறாங்களே…”குமுறினாள் அமுதா.

“என்னம்மா செய்யிறது… அங்கை நடக்கிறதுகளைக் கேட்டால் இனித் திரும்பிப் போக முடியுமா எண்டு சந்தேகமாக் கிடக்கு… என்ரை அம்மாவும் தங்கச்சியும் அங்கை…”அந்தப் பெண் பேச்சை நிறுத்திவிட்டுத் தன் அறைக்குள் போனாள். அவள் கண்கள் கலங்கிக்கிடந்தன.

அமுதா கதவைத் திறந்து உள்ளே போனபோது எங்கிருந்தோ யாழினி ஓடிவந்தாள். சட்டையெல்லாம் புழுதி படிந்திருந்தது. நிலா கண்விழித்து பக்கத்திலிருந்த சேலையை எடுத்து வாயில் வைத்துச் சப்பிக்கொண்டிருந்தது. பயம் பறந்து நிம்மதி நிறைந்தது. அமுதா குழந்தையை அள்ளி முகத்தோடு சேர்த்துக்கொண்டாள். நிலா ‘ம்ம்மா’என்று சிரித்தது. அடுப்பைப் பற்றவைத்துக்கொண்டே யாழினியைக் கேட்டாள்.

“என்ன இண்டைக்கு நேரத்துக்கு வந்திட்டாய்…?”

யாழினியிடமிருந்து பதில் இல்லை.

திரும்பிப் பார்த்தாள். யாழினி கண்களைக் கசக்கி அழுதுகொண்டிருந்தாள்.

“பள்ளிக்கூடத்திலை ஒரு பெடியனை அடிச்சுப் போட்டன்… இடைவேளைக்கு அப்பிடியே வெளிக்கிட்டு ஓடியந்திட்டன்”

அமுதா அதிர்ந்துபோய் எழுந்து யாழினியருகில் வந்தாள்.

“ஏன் அடிச்சனி?”

“சிலோன்காரங்க பொல்லாத ஆளுங்க… துப்பாக்கியெல்லாம் வைச்சிருப்பாங்க… யாரும் இந்தப் பொண்ணை வெளையாட்டுல சேத்துக்காதீங்க எண்டு சொல்லுறானம்மா… எனக்குக் கோவம் வந்திட்டுது. அடிச்சுப் போட்டன். நாங்க எப்பம்மா எங்கடை ஊருக்குத் திரும்பிப் போறது…?” யாழினி பெருங்குரலெடுத்து அழவாரம்பித்தாள்.

“அம்மம்மாட்டைக் கூட்டிக்கொண்டு போங்கோ”என்று அவள் வெகுநேரம் விம்மிக்கொண்டிருந்தாள்.

அழும் பிள்ளையை அணைத்தபடி அமுதா நினைவு உறைந்தவளைப்போல அமர்ந்திருந்தாள். நிலா யாழினியின் சட்டையைப் பற்றி இழுத்து இன்னமும் வாராத பேச்சுக்கு முயன்றுகொண்டிருந்தது. அறை முழுவதும் இருள் அப்பிக்கிடந்தது.

“நாங்கள் எப்ப திரும்பிப் போறது?”

ஏக்கத்தின் வெப்ப மூச்சுப் பரவிய அந்தக் கேள்வியை அங்கே வீசிய காற்று ஏந்தித் திரிந்தது. நெடிதுயர்ந்த மரங்கள் கேட்டிருந்தன.
நன்றி: உயிரோசை