4.01.2009

யாழினி என்றொரு ‘சிலோன் பொண்ணு’வெயில் காங்கை விரட்ட, தலை கொதிக்க விரைந்து நடந்தாள் அமுதா. எட்டடிக்கு எட்டடி அறையினுள் தனியே நித்திரையாகக் கிடக்கும் குழந்தை எழுந்து அழுவாளோ.. என்ற நினைப்பில் மனம் பதைத்தது. பால் பவுடர் முடிந்துவிட்டிருக்காவிட்டால் இப்படி மண்டையைப் பாம்பாய் பிடுங்கும் வெயிலில் கடைக்குப் போயிருக்கமாட்டாள். வழக்கமாக யாழினி பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியதும் அவளை நிலாவுக்குப் பக்கத்தில் இருத்திவிட்டுத்தான் எங்கு போவதானாலும் போவாள். ஆறு வயது யாழினி ஒன்பது மாத நிலாவுக்குக் கதைசொல்வாள். நிலா வாய்க்குள் ஒற்றை மல்லிகை பூத்தாற்போல சிரித்தபடியிருக்கும். இடையிடையே ‘க்கு…க்கு’ என்று சத்தம் எழுப்பும்.

“நாங்கள் அம்மம்மாட்டப் போவம் வாறியா நிலாக்குட்டி?”
“ங்காவ்”
“பிள்ளைக்கு அம்மா பிக்கா வாங்கிக்கொண்டருவா”
“ம்ம்மா…”

யாழினிக்கு அந்த முகாம் பிடிக்கவேயில்லை. அங்கே எவ்வளவு பெரிய வளவு…அம்மம்மா, பெரியாச்சி, பெரியம்மா, சாந்தி அக்கா, கீதன் அண்ணா, மணி நாய்க்குட்டி, பள்ளிக்கூடத்தில் பிரியா, தமிழினி, உமாசுதன்… இங்கு வந்த புதிதில் பள்ளிக்கூடத்தில் இவள் கதைப்பதைக் கேட்டு வகுப்புப் பிள்ளைகள் பகிடி பண்ணினார்கள். அவளையொத்த ஏனைய ‘சிலோன்காரப் பசங்க’ளின் பேச்சுமொழி மாறிவிட்டிருந்தது.

“எப்பப்பாரு ஓம்ங்கிற… மந்திரஞ் சொல்றியா?”

அவர்கள் கதைப்பது யாழினிக்கு கொஞ்சம்தான் விளங்கியது. ‘ஆமா…ஆமா’என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்தாள். ‘அதுக்கு இன்னா இப்ப’என்று மிரட்டிப் பார்த்தாள்.

‘அப்பா இருந்திருந்தால் நாங்கள் இஞ்சை வந்திருக்க மாட்டம்’என்று நினைத்தாள். அப்பாவை நினைத்ததும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அப்பா உயிரோடு இருக்கும்போது யாழினி மட்டுந்தான். நிலாக்குட்டி அம்மாவின் வயிற்றுக்குள் இருந்தது. அப்பா வேலையால் வரும்போது யாழினிக்கு மறக்காமல் எள்ளுருண்டை வாங்கிவருவார். சிலவேளைகளில் வாழைப்பழமும் பிஸ்கட்டும் வரும். யாழினியை உயரே தூக்கிப்போட்டு கீழே வரும்போது டபக்கென்று பிடித்துக்கொள்வார். உயரே போகும்போது பயமாகவும் சந்தோசமாகவும் இருக்கும். கொஞ்சும்போது அப்பாவின் மீசை கன்னத்தில் குத்தும். யாழினியை நடுவில் போட்டுக்கொண்டு அப்பாவும் அம்மாவும் பக்கத்தில் பக்கத்தில் படுத்திருப்பார்கள். அம்மாவின் வயிற்றுக்குள் நிலா உருவானபிறகு யாழினி அப்பாவின் மேல் காலைத்தூக்கிப்போட்டுக்கொண்டு நித்திரை கொள்ளப்பழகினாள். அம்மாவுக்கு மேல் காலைத் தூக்கிப்போட்டால் வயிற்றுக்குள் இருக்கிற தம்பிக்கோ தங்கச்சிக்கோ நோகுமாம்.

அமுதாவின் பையை வாசலிலிருந்த காவலாளி குடைந்து குடைந்து பார்த்தான். வாங்கிவந்திருந்த மிளகாய்களைப் போல கடுகடுவென்றிருந்தான். அவன் தனக்குச் சம்பளம் கொடுப்பவர்களுக்கு மிக விசுவாசமான நாய்க்குட்டியாக இருந்தான். அவனை மீறி யாரும் முகாமுக்குள் நுழைந்துவிடமுடியாது என்று அவன் நினைத்தான். அது வெறும் நினைப்பாகவே இருந்தது. அவன் முகாமில் தங்கியிருப்பவர்களை ‘அகதி நாய்களா’என்பதுபோலத்தான் பார்ப்பான்.

“இந்த ஊர்ல வந்து ஒங்க வேலையெல்லாம் காட்டலாம்னு நெனைக்காதீங்க… தோலை உரிச்சுப்புடுவாங்க”

அவனைப் பொறுத்தளவில் அகதிகள் எனப்படுபவர்கள் தப்பித்து ஓடிவந்த குற்றவாளிகள். அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டு ஒரு சுற்றுச்சுவருக்குள் அடைத்து அரசாங்கம் கருணையோடு பராமரித்து வருகிறது. அதற்கு அகதிகள் நன்றிக்கடன்பட்டவர்கள். அமுதாவுக்கு அவனைப் பார்க்கப் பார்க்கப் பற்றியெரிவதற்கு மேலுமோர் காரணம் இருந்தது. அவன் ஒருபோதும் பெண்களின் கண்களைப் பார்த்துப் பேசுவதில்லை. மார்பு, இடுப்பு, உதட்டில் கண்கள் தாவித் தாவிப் போய்க்கொண்டிருக்கப் பேசுவான். அப்படிப் பார்ப்பது அவனது உரிமையே போன்ற தோரணையும் பேச்சுத்தொனியும் இருக்கும்.

“கண்ணைப் பார் கண்ணை… எரியிற விறகுக் கட்டையை எடுத்துச் சொருகவேணும்”

என்று அமுதா உள்ளுக்குள் கொதிப்பாள். அவள் நினைப்பதை வெளியில் சொல்லமுடியாது. முகாமின் நீதி அகதிகளுக்குச் சாதகமாக இருந்ததேயில்லை. கலெக்டர் மட்டும் கொஞ்சம் கருணையோடு இருந்தார். அகதிகளின் கதைகளை அக்கறையோடு செவிமடுப்பார். ஆனால், கனிந்து ஒரு வார்த்தை சொல்லமாட்டார். பிறப்பிக்கப்படும் கட்டளைகளில் அந்தக் கனிவு செறிந்திருக்கும். கலெக்டரிடம் விடயம் போவதற்கிடையில் இடையில் நிற்கும் பூசாரிகள் கதைகளைப் பாதகமாகத் திரித்துவிடுவார்கள். கலெக்டர் அலுவலகத்தின் சுவர்களுக்கும் காதுகள் இருந்தன.

நிலா அம்மாவை ஆய்க்கினைப்படுத்தாத பிள்ளை. பசி வந்தால் மட்டும் அழும். மற்றபடி எந்நேரமும் சிரிப்புத்தான். பரணியின் பெண் பதிப்பு அவள். குழந்தையைப் பக்கத்து அறை அக்காவிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கலாம். அந்த அக்கா எங்கேயோ வெளியில் போயிருந்தா. அமுதா யாரோடும் அதிகம் பழகுவதில்லை. பத்து வார்த்தைகள் கதைத்தால் அதிகம். அவளது கணவன் பரணியை நெஞ்செல்லாம் இரத்தம் கொளகொளக்க பிணமாகக் கொண்டுவந்து போட்ட அன்று எல்லோரும் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதார்கள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. குரலெடுத்து அழவேயில்லை. அமுதாவின் அம்மாகூடப் பயந்துபோனாள்.

“பிள்ளை! மனசுக்குள்ளை வைச்சுக்கொண்டிருக்காமல் அழுது துக்கத்தைக் கரைச்சுப்போடு பிள்ளை”

தாய் மன்றாடினாள். அவனுடைய முகத்தில் மொய்த்த ஈக்களை வேப்பிலையால் யாரோ விரட்டிக்கொண்டிருந்தார்கள். அமுதா கண்ணெடுக்காமல் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். சொல்லியழுவதற்கான வார்த்தைகள் அவனது உயிரோடு பிரிந்துவிட்டிருந்தன. அந்த உதடுகள் அவளிடம் எப்படியெல்லாம் காதல் வழியப் பேசியிருக்கின்றன! எத்தனை முத்தங்களைப் பொழிந்திருக்கின்றன!

“நீ எவ்வளவு வடிவெண்டு உனக்குத் தெரியுமோடி?”

அவள் வெட்கத்தோடு அவனது தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு சிரிப்பாள். வியர்வையும் புல்வாசனையும் கலந்ததொரு மணம் அவனில் வீசும்.

“உன்ரை பெரிய கண்ணும் நீட்டுத் தலைமயிரும்… எனக்கு வயலுக்கை நிக்கேக்குள்ளையும் உன்ரை ஞாபகந்தான். நீ சமைக்கிறது… உடுப்புத் தோய்க்கிறது எல்லாம் படம்மாதிரித் தெரியும். எப்ப வேலையை முடிச்சுப்போட்டு ஓடிவந்து…”

இறுகத் தழுவியபடி கூந்தலுக்குள் உதிர்ப்பான் கிசுகிசுப்பாய் முடியும் கடைசி வார்த்தைகளை. அவளுடைய பார்வை தன்னில் விழவேண்டுமென்பதற்காக அவன் பண்ணிய திருகுதாளங்களையெல்லாம் அப்படித் தனித்திருக்கும்போது கதைகதையாகச் சொல்வான். அவர்களது காதல் திருமணத்தின் பிறகும் வற்றாத நதியாக நுரைத்துப் பாய்ந்தது. அந்தக் கூரை வீட்டிற்குள் காதலும் காமமும் பெருகிவழிந்த பகல்பொழுதொன்றில்தான் நிலாவைச் சூலுற்றாள் அமுதா.

“வாயும் வயிறுமா நிக்கிற பிள்ளையின்ரை பூவையும் பொட்டையும் பறிச்சுப் போட்டாங்களே நாசமறுவார்”

ஊரே பதறி அழுதது. அவள் ஓசை எழுப்பவில்லை. கண்ணீர் மட்டும் கண்களிலிருந்து சொரிந்தது.

‘வயித்துப் பிள்ளைத்தாய்ச்சி ராவிருட்டி போகாதை பிள்ளை போகாதை பிள்ளை’என்று தாய் தடுக்கத் தடுக்க இரவு வேளைகளில் அந்த வயல்வெளியில் வந்து நிற்பாள். இராணுவத்தினர் கணவனைச் சுட்டுப்போட்ட அந்த இடம் அவள் மனதில் சட்டம் போட்டுவைத்த படமாயிருந்தது. ஈரக்களியும் புல்லுமாய் சொதசொதவென்றிருந்த அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாள். சிலசமயம் தொட்டுப் பார்ப்பாள்.

“என்னை ஏன் இப்பிடித் தனிய அந்தரிக்க விட்டிட்டுப் போனனீங்கள்…?”

இரவை நனைத்துப் பொழியும் நிலவும் அவளோடு சேர்ந்து அழும்.

தம்பி முகுந்தன் அவளுக்குக் காவலாய் தொலைவில் ஒரு வரப்பில் அமர்ந்திருப்பான். அவனது கோபம் கூடைக்குள் போடப்பட்ட சர்ப்பமெனச் சுருண்டு கிடந்தது.

அன்றொருநாள் எறிகணைகள் இடைவெளி விடாமல் வந்து விழுந்து வெடித்தபடியிருந்தன. வீட்டுக்கு மேலால் எரியும் அன்னாசி வடிவில் மரணம் பறந்தது. குண்டு வீச்சு விமானங்கள் இடைவிடாமல் சுற்றின. யாழினி பயத்தில் அழுதுகொண்டேயிருந்தாள். ஆறுமாத வயிற்றுப் பாரம் இழுக்க இழுக்க அமுதா பதுங்குகுழிக்குள் இறங்கினாள். மேலே நின்ற முகுந்தனை ‘நீயும் வாடா’என்று கையைப் பிடித்து இழுத்தாள்.

“நீ உள்ளை வா அமுதா… அவன் வருவான்தானே”
யாரோ உள்ளிருந்து அழைத்தார்கள். முகுந்தன் அம்மாவுக்கும் யாழினிக்கும் பதுங்குகுழிக்குள் இறங்கக் கைகொடுத்தான். பிறகு தானும் இறங்கி யாழினியைத் தூக்கிக் கொஞ்சினான். அம்மாவை அணைப்பது தெரியாமல் அணைத்தான். அவன் கண்கள் பதுங்குகுழியுள் வயிறு துருத்தி அமர்ந்திருந்த அமுதாவில் ஒரு கணம் படிந்து மீண்டன. கண்களுக்குள்ளிருந்த கோபநாகம் ஒருகணம் தலைதூக்கி படம் விரித்தாடியது. அதுதான் அவனை அவர்கள் கடைசியாகப் பார்த்தது. அவனது சைக்கிளையும் அவன் எழுதிய கடிதத்தையும் நண்பன் ஒருவன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனான். அம்மா இடிந்துபோனாள். காணும் போராளிகளிடமெல்லாம் அவன் பெயரைக் கேட்டுக் கேட்டு அலைந்து களைத்தாள். பிறகு தனக்குள் சுருங்கி ஓய்ந்துபோனாள்.

‘நீ இந்தியாவுக்குப் போயிடு பிள்ளை’என்று அம்மா முனகிக்கொண்டேயிருந்தாள். குண்டுகள் அமளிதுமளிப்பட்ட ஓரிரவில் யாழினி பயம் தாளாமல் கறுப்பு முழி மேலேற விறாந்தையில் தலை அடிபட விழுந்தாள். நல்லவேளையாக காயம் பலமில்லை.

“பயமாயிருக்கு… அம்மா பயமாயிருக்கு…. அப்பா… என்ரை அப்பா…” தண்ணீர் தெளித்ததும் கண்ணை விழித்துப் பார்த்துவிட்டுப் பிதற்றினாள். காய்ச்சல் அனல் பொரிந்தது.

“இந்தப் பிள்ளைக்காக எண்டாலும் போ அமுதா”

அமுதா வேறு வழியின்றிச் சம்மதித்தாள்.

“அம்மம்மா நீங்களும் எங்களோடை வாங்கோவன்”

“இல்லைக் குஞ்சு! நீங்கள் போய்ட்டு சண்டை முடிஞ்சதும் வாங்கோ… முகுந்தன் மாமா அம்மம்மாவைத் தேடி வருவான். இஞ்சை பெரியாச்சி இருக்கிறா. வீட்டைப் பாக்கவேணும். மணி நாய்க்குட்டி பாவம்”

“அங்கை நாங்க போற இடத்திலை இப்பிடிக் குண்டு போடமாட்டினம்தானே அம்மம்மா! பிளேனாலை வந்து சுடமாட்டினமே?”

“இல்லையடா… அங்கை உங்களுக்கு ஒரு பயமுமில்லை”

இருளில் கடல் கறுத்துக் கிடந்தது. படகு ஆடிய ஆட்டத்தில் யாழினி சத்தி எடுத்தாள். புரளும் வயிற்றுப் பிள்ளையைத் தடவிக் கொடுத்தபடி தொலைவில் தெரியும் வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அமுதா. அம்மா, முகுந்தன், உறவினர்களின் நினைவில் கண்கள் கரைந்தன.

முகாமுக்குள்ளேயே இருக்கும் பள்ளிக்கூடத்தில் யாழினியைச் சேர்த்தாள். அவள் ஒவ்வொரு நாட்களும் அழுதபடியே திரும்பிவந்தாள். ‘அம்மம்மாட்டைப் போவோம்’என்பதையே மாற்றி மாற்றி வேறு வேறு வார்த்தைகளில் சொல்லியபடியிருந்தாள்.

முகாமுக்கு வந்து சேர்ந்து மூன்று மாதங்களாவதற்குள்ளேயே நிலா வெளியில் வரத்துடித்தது. வலி தின்ற ஒரு இரவில் பக்கத்து அறைக் கதவைத் தட்டினாள் அமுதா.

“எனக்கு வயித்துக்குள்ளை குத்துது… டொக்ரரைக் கூட்டி…”அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள். யாழினி வலியில் துடிக்கும் தாயை ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றாள். அந்த அறைக்காரர்கள் அப்போதுதான் உறங்க ஆயத்தமாகியிருக்க வேண்டும். அந்த அக்காவின் கணவர் சேர்ட்டைப் போட்டுக்கொண்டு முகாமுக்குள்ளேயே இருந்த வைத்தியசாலைக்கு விரைந்தார்.

ஒரு மணி நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. அமுதா வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடித்தாள். கைகால்கள் முறுக்கிக்கொண்டு வந்தன. உதட்டைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொள்ள முயன்றாள். யாழினி அரைகுறை நித்திரையில் அம்மாவைப் பார்ப்பதும் பிறகு உறங்கித் தலை சரிவதுமாக இருந்தாள்.

ஈற்றில் அம்புலன்சோடு அந்த மனிதர் திரும்பிவந்தபோது அமுதாவின் ஆடைகள் நனைந்திருந்தன.

“டொக்ரர் ஆஸ்பத்திரியிலை இல்லை. அங்கை இங்கை போன் பண்ணி இப்பத்தான் ஆளைக் கண்டுபிடிக்க முடிஞ்சுது… அம்புலன்சுக்குக் காசு கேக்கிறாங்களப்பா”மனைவியிடம் மெதுவாகச் சொன்னார்.

“அது இலவசம் எல்லோ…”அமுதாவை மெதுவாகப் பிடித்து நடத்திக்கொண்டே அந்தப் பெண் புறுபுறுத்தாள்.

“முகாமிலையும் லஞ்சம்”என்ற வார்த்தைகளை அமுதா நினைவு அறுந்துபோகும்முன் கேட்டாள்.

நிலா கைகாலெல்லாம் முறிமுறியாக இருக்க நாலு கிலோ எடையில் பிறந்தாள். கதைபேச தனக்கொரு துணை கிடைத்ததில் யாழினிக்கு கொள்ளை மகிழ்ச்சி. நிலாவைத் தூக்கமுடியாமல் தூக்கித் திரிந்தாள்.

அமுதாவின் பையை வழியில் இருந்த பொலிஸ்காரர்கள் கிண்டினார்கள். வாசலில் காவலுக்கு இருப்பவன் கிளறியதை அவர்கள் பார்த்தபடிதானிருந்தார்கள். என்றாலும் அவனது கண்ணுக்கு ஏதாவது தப்பியிருக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.
இப்படித்தான் ஒரு தடவை ‘தணிக்கை’யின்போது நடந்தது. காவல்காரனின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு யாராவது புதிதாக வந்து ஒளிந்திருப்பதைத் தடுக்கவும், முகாமிலிருப்பவர்கள் வெளியில் சென்று தங்குவதைத் தடுப்பதற்காகவும் அதிரடியாக சோதனை நடத்துவதை அங்கே ‘தணிக்கை’என்று அழைத்தார்கள். பொலிஸ்காரர்களின் கையில் இருக்கும் பட்டியலோடு அறையிலிருப்பவர்களின் எண்ணிக்கையும் பெயர்களும் ஒத்துப்போகவேண்டும். இல்லையெனில் தொலைந்தது. தணிக்கைக்கு நேரமில்லை. உறங்கிக்கிடந்த யாழினியை எழுப்பி அணைத்தபடி அமுதா தணிக்கைக்காக வெளியில் வந்துநின்றாள்.

‘அமுதா பரணிதரன்….!’
‘யாழினி பரணிதரன்….!’

பெயர்களை வாசித்தவனின் கண்கள் அமுதாவின் வயிற்றில் நிலைத்தன.

“இன்னாம்மா… புள்ளைதானா இல்லக் குண்டா…? உங்களையெல்லாம் நம்ப முடியாது”

அமுதாவின் உதடுகள் துடித்தன. பக்கத்து அறை அக்கா ‘கதைக்காதே’ எனச் சைகை செய்தாள். அதற்குள் அந்தப் பொலிஸ்காரன் அடுத்த அறைக்கு நகர்ந்திருந்தான்.

“தங்கச்சி! இஞ்சை இவங்களோடை சும்மா வாயைக் காட்டிப் போடாதை… அதை இதைச் சொல்லி தாற காசையும் தராமல் நிப்பாட்டிப் போடுவாங்கள். தாறதே வாய்க்கும் வயித்துக்கும் பத்தாம இருக்குது. நாங்கள் நியாயம் கதைக்க வெளிக்கிட்டால் நீ என்ன எல்.டி.டி.யா எண்டு உள்ளுக்கை தள்ளிப்போடுவாங்கள்”

“நாங்கள் என்ன குற்றம் செய்தம் அக்கா! நாங்களும் அங்கை நல்லா வாழ்ந்த ஆக்கள்தானே… ஏதோ காலக்கொடுமையாலை இப்பிடி வந்து இருக்கவேண்டியதாக் கிடக்கு… கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாமல் கதைக்கிறாங்களே…”குமுறினாள் அமுதா.

“என்னம்மா செய்யிறது… அங்கை நடக்கிறதுகளைக் கேட்டால் இனித் திரும்பிப் போக முடியுமா எண்டு சந்தேகமாக் கிடக்கு… என்ரை அம்மாவும் தங்கச்சியும் அங்கை…”அந்தப் பெண் பேச்சை நிறுத்திவிட்டுத் தன் அறைக்குள் போனாள். அவள் கண்கள் கலங்கிக்கிடந்தன.

அமுதா கதவைத் திறந்து உள்ளே போனபோது எங்கிருந்தோ யாழினி ஓடிவந்தாள். சட்டையெல்லாம் புழுதி படிந்திருந்தது. நிலா கண்விழித்து பக்கத்திலிருந்த சேலையை எடுத்து வாயில் வைத்துச் சப்பிக்கொண்டிருந்தது. பயம் பறந்து நிம்மதி நிறைந்தது. அமுதா குழந்தையை அள்ளி முகத்தோடு சேர்த்துக்கொண்டாள். நிலா ‘ம்ம்மா’என்று சிரித்தது. அடுப்பைப் பற்றவைத்துக்கொண்டே யாழினியைக் கேட்டாள்.

“என்ன இண்டைக்கு நேரத்துக்கு வந்திட்டாய்…?”

யாழினியிடமிருந்து பதில் இல்லை.

திரும்பிப் பார்த்தாள். யாழினி கண்களைக் கசக்கி அழுதுகொண்டிருந்தாள்.

“பள்ளிக்கூடத்திலை ஒரு பெடியனை அடிச்சுப் போட்டன்… இடைவேளைக்கு அப்பிடியே வெளிக்கிட்டு ஓடியந்திட்டன்”

அமுதா அதிர்ந்துபோய் எழுந்து யாழினியருகில் வந்தாள்.

“ஏன் அடிச்சனி?”

“சிலோன்காரங்க பொல்லாத ஆளுங்க… துப்பாக்கியெல்லாம் வைச்சிருப்பாங்க… யாரும் இந்தப் பொண்ணை வெளையாட்டுல சேத்துக்காதீங்க எண்டு சொல்லுறானம்மா… எனக்குக் கோவம் வந்திட்டுது. அடிச்சுப் போட்டன். நாங்க எப்பம்மா எங்கடை ஊருக்குத் திரும்பிப் போறது…?” யாழினி பெருங்குரலெடுத்து அழவாரம்பித்தாள்.

“அம்மம்மாட்டைக் கூட்டிக்கொண்டு போங்கோ”என்று அவள் வெகுநேரம் விம்மிக்கொண்டிருந்தாள்.

அழும் பிள்ளையை அணைத்தபடி அமுதா நினைவு உறைந்தவளைப்போல அமர்ந்திருந்தாள். நிலா யாழினியின் சட்டையைப் பற்றி இழுத்து இன்னமும் வாராத பேச்சுக்கு முயன்றுகொண்டிருந்தது. அறை முழுவதும் இருள் அப்பிக்கிடந்தது.

“நாங்கள் எப்ப திரும்பிப் போறது?”

ஏக்கத்தின் வெப்ப மூச்சுப் பரவிய அந்தக் கேள்வியை அங்கே வீசிய காற்று ஏந்தித் திரிந்தது. நெடிதுயர்ந்த மரங்கள் கேட்டிருந்தன.
நன்றி: உயிரோசை


15 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

நேற்றே உயிரோசையில் படித்துவிட்டேன்.

மனதின் அடுக்குகளில் படிந்துவிட்ட இன்னுமோர் சிறுகதை.

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி,

உயிரோசையில் பார்க்கக் கிடைத்த அன்றே மனதினைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய சிறுகதையிது. கதையல்ல..ஒவ்வொரு வரிகளும் நிஜம். நிகழும் தளம்தான் புதிதாக இருக்கிறது. அடைக்கலம் தேடி வந்த இடத்திலும் இவ்வளவு தொந்தரவா? :(

selvan said...

மனதை நெகிழ வைத்த கதை, அல்ல நிஜம், கண்கள் பனிக்கிறது

தமிழ்நதி said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா,

உயிரோசையில் எழுதுவதை இங்கே கொண்டுவந்து போட்டுப் பக்கம் நிரப்புகிறேன். வலைப்பூவிற்கென்று தனியாக எழுத நேரம் இருப்பதில்லை. தவிர, வேறு சில எழுத்து வேலைகளும் இருக்கின்றன.

ரிஷான்,

'ஒவ்வொரு வரிகளும் நிஜம்'தான். கதைக்காக சில சோடனைகள் தவிர. அண்மையில் ஒரு முகாமுக்குப் போயிருந்தேன். அதன் விளைவே இந்தக் கதை.

தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வன்.

Unknown said...

உயிரோசையில் வாசித்தேன் தமிழ்.

கதையைப் படித்ததும் மனசு கனத்துப் போய்விட்டது தமிழ். இத்தனைக்கும் நீங்கள் மிகவும் எளிமையான வார்த்தைகளால்தான் அக்கதையை எழுதியிருக்கிறீர்கள்...ஆனால் அக்குழந்தையின் ஒற்றை வார்த்தைக்குள் ஓராயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது. நமது வீடு என்பது எவ்வளவு பாதுகாப்பானது, எங்கு அலைந்து திரிந்தாலும் வீட்டினுள் கிடக்கத்தானே எல்லோரும் விரும்புகிறோம். நாம் பிறந்த இடம் எவ்வளவு சிறிய ஊராக இருந்தாலும் நம் மனம் அங்குதானே சுற்றியலையும்? எத்தனை நிலாக்கள், யாழினிகள், எத்தனை எத்தனை அமுதாக்கள் - அவர்களின் கண்ணீர் அனலாய் கொட்டி அது அவர்களை இன்னும் எரித்துக் கொண்டிருக்கிறது...

நான் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கையில் ஒரு பாடம் வந்தது Refugee என்ற தலைப்பில், அர்த்தம் என்ன்வெண்டு மிஸ் சொன்னதும் முதன் முதலாய் அந்த வார்த்தையின் அர்த்தத்தை அன்று தெரிந்து கொண்டேன், இப்போது அதன் வலியை உணர்கிறேன்....

எல்லா நம்பிக்கைகளும் பொய்த்து போகுமா தமிழ்?

உங்கள் கதைகள் மூலமாக நீங்கள் செய்து கொண்டிருப்பது பெரிய விதயங்கள்...தொடர்ந்து எழுதுங்கள் தமிழ். உங்களுக்கு பக்க பலமாக நாங்கள் இருக்கிறோம்.

சந்தனமுல்லை said...

இவ்வளவு கொடுமையானதாக இருக்குமா வாழ்க்கை! யாழினியும் நிலாவும் சீக்கிரம் ஊர் திரும்பட்டும்!

soorya said...

தொடர்ந்து எழுதுங்கள். தங்கள் படைப்புகள் இப்போதைக்கு எனக்கு ஒத்தடங்கள்.

பதி said...

இதனை சிறுகதை என்று எழுத மனது ஒப்பவில்லை....

//“முகாமிலையும் லஞ்சம்”//

வேறொரு பதிவிலே சொன்னது போல, பிணத்தின் நெற்றியில் ஒட்டப்பட்டுள்ள காசையையும், அதான் வாயிலுள்ள அரிசியையும் எப்படி தனதாக்குவது என வித்தையறிந்தவர்கள் அரசு இயந்திரத்திலுள்ள "நல்லவர்களில் சிலர்". வேறொன்றும் சொல்வதற்கு இல்லை..

//“சிலோன்காரங்க பொல்லாத ஆளுங்க… துப்பாக்கியெல்லாம் வைச்சிருப்பாங்க… யாரும் இந்தப் பொண்ணை வெளையாட்டுல சேத்துக்காதீங்க எண்டு சொல்லுறானம்மா… எனக்குக் கோவம் வந்திட்டுது. அடிச்சுப் போட்டன். //

பெற்றோர்களின் அறியாமையை சிறுவர்களுக்கு புகுத்துவதாலும், அறியாப் பருவத்தினாலும் வரும் வார்த்தைகளும் செயல்களும் அவை. வயதுவரும் பொழுது இவர்கள் நிச்சயம் மாறிவிடுவர், அதே சமயம் தங்கள் செயலுக்கு வருந்துவர். அடிவாங்கியதற்கும் வருத்தப்பட மாட்டார்கள்!!!

ஏனெனில், இதே காரணத்திற்காக 1991ம் ஆண்டு மன்னார், யாழ் சிறுவர்களிடமும் (அதே காரணத்திற்காக ஆசிரியரிடமும்) பள்ளியில் அடிவாங்கிய தமிழகத்து சிறுவனொருவன் இந்நாளில், ஈழத்தின் உரிமைப் போருக்கு ஆதராவாக வெறும் பரப்புரைகளில் மட்டும் ஈடுபடாமல், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்க்கு இணையாக சகல போராட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டு இப்படி பின்னூட்டமும் இட்டுக் கொண்டுள்ளான் !!!!

அன்று, எங்களைப் போன்ற வண்டுசிண்டுகளின் அட்டகாசத்தினால், புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு தனிவகுப்பையே ஏற்படுத்தினர் நான் படித்த அரசுப் பள்ளியில். அதுவும் ஆரம்பத்தில் சில நாட்கள் தான். பிறகு, அவர்கள் ஏனைய மற்ற நண்பர்களைப் போலவாகினர். ஆனால், பெண்குழந்தைகளுக்கு யாரும் எந்த இடஞ்சலும் தரவில்லை. !!!!

எத்தனை சாந்தன்கள், கிருபாகரன்கள், சபா'க்கள். ம்ம்ம்ம்ம்

//சந்தனமுல்லை said...
இவ்வளவு கொடுமையானதாக இருக்குமா வாழ்க்கை!//

அரசுப்பள்ளிகளில் படித்துக் கொண்டும், காலணி கூட இல்லாமலும் சுற்றிக் கொண்டிருந்த (அந்த வயதில்) எங்கள் வாண்டுகள் கும்பலுக்கு, அந்த முகாமைப் பார்த்த பிறகு தான், சபிக்கப்பட்ட வாழ்வு என்றால் என்னவென்றும், கொடுமையான சூழ்நிலை என்னவென்றும் புரிந்தது. எங்கள் பகுதி கிராமப்புரங்களில் இருக்கும் எந்த பின்தங்கிய பகுதியைவிடவும் பல மடங்கு மோசமான (சுகாதாரம், இடவசதி, குடி நீர், சமுதாயக் கூடம்) ஒரு குடியிருப்பு பகுதியினை அன்று தான் நாங்கள் முதலில் கண்டோம்....

Anonymous said...

வணக்கம் தமிழ் நதி,

மனதை நெருடிய சிறுகதை.
எப்போதுதான் நாங்கள் ஊருக்குப் போவோம்?

-அருண்

Unknown said...

தமிழ்,

பெரும்பாலும் ஆன் கதைகளை படிப்பதில்லை, இந்த கதையை படிக்காமல் விட்டிருந்தால் வெதும்பி இருப்பேன்.

படித்த பின் கசிகிறேன். யாழினி அழகான பெயர்- அருமையான குழந்தைகள்-அகதி வாழ்க்கை. பெருந்துயர வாழ்க்கையில் பெயரில் மட்டுமே மிஞ்சிஇருக்கிறது அழகும், தமிழும்.

குற்றஉணர்ச்சி தான் மிஞ்சுகிறது. நமை நம்பி வந்தவர்களையும் மனிதராக நடத்தும் அருகதையில்லை. இதில் வந்தாரை வாழவைக்கும் தமிழகம். வெட்கக்கேடு.

தமிழன்-கறுப்பி... said...

கதை பழக்கப்பட்ட கதை(நிஜம்) என்றாலும் வார்த்தைகள்- உணர்வுகளை அதிக பட்சம் கடத்தி விடுகிறது உங்கள் வார்த்தைகள்...

இந்தக்கதையில் எனக்கு பிடித்த இன்னொரு விசயம் என்னுடைய மொழியில் எழுதப்பட்டிருந்த காதல் இந்த மொழியை படித்தும் கேட்டும் எவ்வளவு நாட்கள்...

சே...எப்படி இருக்க வேண்டிய இலங்கை தின்று விட்டார்கள்...

யாத்ரா said...

உயிரோசையிலேயே தங்களின் சிறுகதை வாசித்தேன், யாழினி, நிலா, அமுதா, பரணி என மனிதர்களும், காட்சிகளும், இடங்களும், உணர்வுகளும் தொடங்கிய முதல் புயலாய், இடியாய், முடித்தபின்னும் தீர்ந்த பாடில்லை அதிர்வலைகள்

நந்தா said...

உண்மையில் சொல்வதென்றால் தமிழ் நதி இப்போதெல்லாம் உங்களது, அகிலனுடையது பதிவுகள் உட்பட பலர் பதிவுகளை படிக்க மனது வர மறுக்கிறது.

கையாலாகத்தனத்தின் வெறுப்பு வர வர இயல்புக்கு மீறி கலவையான உணர்வுகளை வெளிப்படுத்துக்கிறது. அடுத்த அரை மணி நேரத்திற்கு ஏதேதோ எண்ணங்கள். என்னத்தை சொல்ல.

ச.முத்துவேல் said...

பொதுவாகவே, நான் இலங்கைப் பற்றிய செய்திகளை, இது தொடர்பாய் வரும் மின்னஞ்சல்களை, அவ்வளவு தீவிரமான சிரத்தை எடுத்துப் படிக்காமல் , புறக்கணித்துவிடுகிறேன். இதை நான் குற்றவுணர்வோடுதான் இங்கேப் பதிவிடுகிறேன். தவிர்ப்பதின் காரணம், இயலாமையின் சலிப்பும், விரக்தியும்தான்.

இன்றைய நிலயை, போரின் கொடூரச்சுவடுகளை, இக்கதை( அல்ல உண்மை), குறிப்பால் உணர்த்தி, விவரித்துவிடுகிறது.
நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள் என்பதை இவ்விடத்தில் குறிப்பிடாமல், வேறொரு சமயத்தில் சுட்டிக்காட்டுவது, இக்கதையின் நோக்கத்தைச் சிதைக்காமலிருக்க உதவும்.

முதல் வரியைப் படிக்கத் துவங்கியதுமே, திடுமென ஒரு பெரும்பாரம், வலி, நெஞ்சில் வந்து அமர்ந்துகொள்கிறது. போகப் போக அதன் எடைக் கூடிக்கொண்டே போகிறது.

படித்துக்கொண்டிருக்கும்போது என் கண்கள் தொடர்ச்சியாய் கண்ணீர் சொரிந்தது நிஜம். உடல் குலுங்க விசும்பியதும் நிஜம். அதை மடைமாற்ற நான் சற்று எழுந்துபோய்விட்டு, மீண்டும் வந்து படித்தது நிஜம். தொண்டையில் இருந்த சுமையை தண்ணீர் குடித்து விழுங்க முயன்றது நிஜம். அதேபோல, பின்னூட்டங்களைப் படிக்கும்போதும்,- குறிப்பாக பதியின் பின்னூட்டம்- நேர்ந்தது.

கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறெதுவும் செய்யாத , கையாலாகாத்தனம், உறுத்துகிறது சகோதரி.

தமிழ்நதி said...

அன்பு நண்பர்கள் உமா, சந்தனைமுல்லை, சூரியா, பதி, அருண், இசை, தமிழன் கறுப்பி, யாத்ரா, நந்தா,முத்துவேல் நன்றி.

ஓரிடத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன். சென்றுசேரவும் நிலைபெறவும் சிலநாட்கள் எடுக்கும். அதன்பிறகு உங்களோடு நிறையப் பேசுவேன். மீண்டும் நன்றி.