Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

6.23.2014

மனக்கோலம்




விலங்கொன்று ஊளையிடுவது போலவேயிருந்தது அந்த ஓசை. கனவு காண்கிறோம் என்று உள்ளுணர்வுக்குத் தெரிந்து கண்டுகொண்டிருக்கும் கனவொன்றிலிருந்து அவ்வோசை மிதந்து வருவதாக முதலில் சாந்தன் எண்ணினான். மது அவனை மெதுவாகத் தொட்டு ‘என்னாலை நித்திரை கொள்ள முடியேல்லை’என்றதும்தான், அந்த ஓசை அக்காவின் அறையிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்தான்.

மது எழுந்து அமர்ந்து, “என்னாலை முடியேல்லை”என்று முனகியபடி மேடிட்டிருந்த வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். வயிற்றினுள்ளிருந்து பதட்டப்படும் குழந்தையை ஆசுவாசப்படுத்துமாப் போலிருந்தது அந்தத் தடவல். உயிரின் மூலத்தைத் தேடி உருக்கும் விசித்திரமான ஓசையை சற்றைக்கு நிறுத்திய ராசாத்தி இப்போது அனுங்கத் தொடங்கியிருந்தாள். தாங்கொணாத வேதனையை வேறுவழியின்றி தாங்கிக்கொண்டிருப்பதிலிருந்து பிறந்த அனத்தலாயிருந்தது அது. நிறைந்து சரிந்த வயிற்றைத் தூக்கிக்கொண்டு எழுந்திருக்க முயன்ற மதுவைக் கையமர்த்திவிட்டு எழுந்து வெளியில் போனான் சாந்தன். நிலாவெளிச்சம், அடைப்பற்ற யன்னல் வழியாகவும் இன்னமும் செப்பனிடப்படாத ஓடுகள் வழியாகவும் விறாந்தையில் இறங்கியிருந்தது. ஐப்பசி மாதத்துக் குளிரில் தரை சில்லிட்டிருந்தது. ராசாத்தியின் அறைக்கதவருகில் போய் நின்று கூப்பிட்டான்.

“அக்கா…!”

“ம்…..”

“நித்திரை கொள்ளேல்லையா?”

‘க்றும்… ரும்’என்று புரிபடாத ஓசையொன்று பதிலாக வந்தது.

மதுவும் எழுந்து வந்துவிட்டிருந்தாள். அவளது வயிற்றைப் பார்க்கும்போதெல்லாம் அபிக்குட்டி ஞாபகத்தில் வந்தாள். முள்ளிவாய்க்காலை நோக்கி நெருக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருந்த இறுதிநாட்களில், சாப்பாட்டுக்கு நின்ற சனங்களின் வரிசையில் ஷெல்விழுந்ததில் அபி செத்துப்போனாள். அப்போது அபிக்கு இரண்டரை வயது. மதுவின் இடதுதோள்பட்டையிலிருந்து முழங்கைவரை நீளமான சப்பாத்து வடிவில் சதை பிய்ந்த அடையாளம் இருக்கிறது. வெளியில் போகும்போது கையை மறைப்பதற்காக சேலையை இழுத்து இழுத்து விட்டுக்கொள்வாள். இந்த நான்கு ஆண்டுகளில் அவள் அபியை நினைத்து அழாத நாளே இல்லை. இப்போது நிறைமாதப் பிள்ளைத்தாய்ச்சி. இரத்த அழுத்தம் வேறு அதிகமாக இருந்தது. இந்நிலையில் இரவு தூக்கமில்லாதிருப்பது மதுவின் உடல் நலத்திற்குக் கேடானது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால், அக்கா எழுப்பும் அமானுஷ்ய ஓசைகளால் உறங்கமுடிவதில்லை.

“அக்கா…!”

“ம்…”

“நித்திரையைக் கொள்ளுங்கோ…”

“நித்திரைகொள்ள விடமாட்டாங்களாம்”

அவனுக்கு கதவை உடைத்துக்கொண்டு வெளியே ஓடி வானத்தை நோக்கிக் கதறியழவேண்டும் போலிருந்தது. மூச்சு விடச் சிரமப்பட்டான். மதுவின் கைகள் அவனது தோளைத் தடவின.

அக்கா திடீரென இரவைக் கிழித்துக்கொண்டு வீரிட்டுக் கத்தினாள்.

“அவளை விடுங்கோ….. பச்சைப் பாலன்…. அவளை விடுங்கோ…”

முன்புறத்தில் இறக்கப்பட்டிருந்த பத்திக்குள் படுத்திருந்த சிவலை திடுக்கிட்டு எழுந்து குரைக்கத் தொடங்கியது. யன்னலருகில்  மூக்கை வைத்து மூசித் தானும் விழித்திருப்பதாக அறிவித்தது. பின் ஒன்றும் நடவாததுபோல் மறுபடியும் உறக்கத்திலாழ்ந்துவிட்டது. ராசாத்தியின் அனுக்கத்திற்கும் அலறலுக்கும் அக்கம்பக்கத்தைப் போலவே சிவலையும் பழகிவிட்டிருந்தது. முன்னர் அவர்கள் வளர்த்த நாயின் பெயர் வீரன். இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து போன வழியில் வீரன் எங்கோ தொலைந்துவிட்டிருந்தது. வீரனின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சிரித்தபடியிருக்கும் அபியின் புகைப்படம் மட்டும் அழிவுக்குத் தப்பி எஞ்சிவிட்டிருக்கிறது.

மது குசினிக்குள் போய் விளக்கைக் கொளுத்திக்கொண்டு வந்தாள். வலிப்பு வந்தாற்போல ராசாத்தியின் உடல் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. கண்களும் உதடுகளும் துடித்துக்கொண்டிருந்தன. வாயிலிருந்து வீணீர் ஒழுகிக்கொண்டிருந்தது. கைகளை மார்புக்குக் குறுக்காக மறைப்புப்போல கட்டி, கால்களை இறுக்கி ஒடுக்கி தன்னைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தாள். மது அருகில் அமர்ந்து முதுகைத் தடவிக் கொடுத்தாள். விசும்பல் மெதுமெதுவாக அடங்கி ராசாத்தி உறங்கும்வரை தடவிக்கொண்டிருந்தாள். சாந்தனுக்கு மதுவைப் பார்க்கப் பாவமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. மதுவுக்கு வேறுவிதமாக இருக்கத் தெரியாது. அவளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து, அவளது அண்ணனிடம் அடிவாங்கி காதலித்துக் கலியாணம் கட்டியது அந்தக் குணத்திற்காகவுந்தான்.

“இப்பிடியே வீட்டிலை வைச்சுக்கொண்டிருந்து உபத்திரவந்தான். ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய்க் காட்டுங்கோ… உங்கடை அக்காவுக்கு மூளை பிசகிப் போச்சுதெண்டதை ஏன் மறைக்கிறீங்கள்?” என்று ஊரில் பலபேர் சாந்தனைக் கேட்டுவிட்டார்கள்.

தன் அக்காவுக்குப் பைத்தியம் என்பதை அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘தகப்பனைத்தின்னி’என்று பெயர் கேட்ட அவனது பத்தாவது வயதில் தாயையும் இந்திய இராணுவத்தின் ஷெல்லடிக்குப் பலிகொடுத்தான். அவனைவிட ஏழு வயது மூத்த ராசாத்தி இரண்டாந் தாயாகி அவனை வளர்த்தாள். மாமா வீட்டில் இடிசோறு கிடைத்தது; சீதனம் கிடைக்கவில்லை. ஊரில் ஒரு முதிர்கன்னிக்குரிய அத்தனை மரியாதைகளும் ராசாத்திக்கும் கிடைத்தன. ராசாத்திக்கு முப்பது வயதுக்குப் பிறகு, வயது நகர மறந்து நின்றுவிட்டாற்போலொரு தோற்றம். அதெல்லாம் பழைய கதை. 

திரும்பிவந்த புதிதில் தன்பாட்டில் சுருண்டு சுருண்டு படுத்திருப்பாள் சாப்பிடுவதையும் உறங்குவதையும் விட மற்றெல்லாவற்றையும் மறந்துவிட்டவளைப் போலிருந்தாள். ஏதாவது கேட்டால் தலையைக் குனிந்தபடி மௌனம் சாதித்தாள். அவள் யாரையும் பார்ப்பதில்லை என்பதை, குறிப்பாக கண்களைத் தவிர்த்தாள் என்பதை சாந்தன் பலநாட்கள் கடந்தபின்பு கண்டுபிடித்தான். அவள் அநிச்சையாகச் செய்த செயல் ஒன்றே ஒன்றுதான்: அந்த அறையின் யன்னலை எத்தனை தடவைகள் திறந்துவிட்டாலும் அவசர அவசரமாக எழுந்து அதை இறுகச் சாத்தினாள். வெளிச்சத்தைக் கண்டு நடுங்கினாள். ஆரம்பத்தில், மதுவோ சாந்தனோ அவள் இருந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்நுழைந்தால் அடிபட்ட மிருகம்போல கூச்சலிட்டாள். ஆகவே, அந்த அறையின் வாசலில் சாப்பாட்டை வைத்துவிட்டு குரல்கொடுக்கப் பழகினார்கள். விடிகாலையில் ஊர் விழித்தெழுவதற்குமுன் எழுந்து இயற்கைக் கடன்களையும் குளியலையும் முடித்துவிட்டு வந்து மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்டுவிடுவாள். இயல்புக்குத் திரும்பி கேட்ட கேள்விக்குப்பதிலளிக்கவே மூன்று மாதங்களுக்கு மேலாகின. அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தாம்.

சாந்தனும் மதுவும் செட்டிகுளம் முகாமிலிருந்து திரும்பிவந்தபோது பொட்டல்வெளியாகிப் போன வளவே அவர்களை எதிர்கொண்டது. தென்னைமரங்களை யானைகள் சு+றையாடியிருந்தன. கிணற்றடியினருகிலிருந்த பாக்குமரங்களும் பட்டுப்போயிருந்தன. பூச்செடிகள் இருந்தமைக்கான அடையாளமே இல்லை. அபிக்குட்டியின் ஞாபகத்தில் தின்னாமல் குடியாமல் கிடந்தாள் மது. சாந்தன்தான் சமையலிலிருந்து எல்லாம் செய்யவேண்டியிருந்தது.

விசாரணை நிலையத்திலிருந்து ராசாத்தியை யாரோ கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். அவள் நேராக, கீறிவைத்த கோட்டில் தடம்பிசகாமல் நடப்பதுபோல நடந்துவந்தாள். கண்கள் பிணத்தினுடையவை போல நிலைகுத்தி நின்றன. உடலில் சதை என்று சொல்வதற்கு ஏதுமில்லாதபடிக்கு இளைத்துப்போயிருந்தாள். அப்படியே போய்ப் படுத்து உறங்கிவிட்டாள். உறக்கம் என்றால் உறக்கமில்லை! திடீரென்று அமானுஷ்யமாக ஊளையிடுவாள். இருந்தாற்போல எழுந்து வெளியில் ஓடுவாள். பெரும்பாலும் இராணுவமுகாமை நோக்கியே அவள் ஓடுவாள். எலும்பினால் செய்யப்பட்டதுபோலிருந்த அந்த உடலுள் எவ்வளவு சக்தி அடைபட்டிருந்தது என்பதை, அவளை இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டுவந்து வீடு சேர்க்கும் நாட்களில் சாந்தனால் உணரமுடிந்தது.

பகலில் வேகம் தணிந்து வேறு மனுசியாயிருப்பாள். எவரும் சொல்லாமலே தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் இழுத்து இறைத்தாள். வளவைக் கூட்டி அள்ளினாள். நாய்க்குட்டிக்குச் சாப்பாடு வைத்தாள். அதைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அதன் கண்களை உற்றுப் பார்ப்பாள். அது அவளது முகத்தை நக்கிக் கொடுக்கும். மனிதர்களது அடையாளங்களும் பெயர்களும் அவளது மனதிலிருந்து அழிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது.
பறவைகளோடும் விலங்குகளோடும் செடிகொடிகளோடும் நெருக்கம் காட்டினாள்.

மதுவும் சாந்தனும் தங்களது அறைக்குள் போய்ப் படுத்துக்கொண்ட சில நிமிடங்களில் ராசாத்திக்கு விழிப்பு வந்துவிட்டது. கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

மூடிய விழிகளுக்குள் குறிகளாகத் தெரிந்தன. சமையலறையில் மரக்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியளவு நீண்ட, மெல்லிய, சதைப்பற்றான, தசையைத் துளைத்திறங்கும் கூரிய எலும்பு போன்ற குறிகள். இராணுவச் சீருடையினுள்ளிருந்து நீளும் குறிகள். சிலசமயங்களில் சிவில் உடையிலும் அவர்கள் வருவதுண்டு. விகாரமான இளிப்போடு, வாய்க்குள் திணிக்கப்படும் குறிகள். வியர்வை நாற்றமும் மூத்திரவாடையும் வீசும் குறிகள். தலையை ஆட்டி ஆட்டி அந்தக் குறிகளை நினைவிலிருந்து விலக்க முயன்றாள்.

“ராசாத்தி அக்கா! நான் செத்துப் போயிட்டனெண்டு அம்மாட்டைச் சொல்லுங்கோ.”

ராசாத்தி திடுக்கிட்டு விழித்து சுற்றுமுற்றும் பார்த்தாள். அறையின் மூலையில் துளசி நிற்பதை அவள் பார்த்தாள். துளசி பள்ளிக்கூடச் சீருடை அணிந்திருந்தாள். வெள்ளைநிறச் சீருடையில் அடர்ந்த செந்நிறக் குருதி திட்டுத்திட்டாகப் படிந்திருந்தது. நீளமான அவளது கண்களில் கண்ணீரும் கலவரமும் நிறைந்திருந்தன. அவள் நின்றிருந்த இடத்தில் காலருகில் குருதி கருநிறத்தில் தேங்கிநின்றது.

“என்னாலை நடக்கமுடியாமல் இருக்கு அக்கா!”அவள் அழுதாள்.

ராசாத்தி எழுந்து துளசியருகில் போனாள். துளசியின் தோள்பட்டையில் வைத்த கைகள் இருளுள் விழுந்தன. அவளைக் காணவில்லை. இப்போது அந்த அலைச்சத்தம் கேட்கத் தொடங்கியது. வர வர நெருங்கி வந்தது. கடலை அவள் கைவிரித்து வரவேற்றாள். அதனுள் புகுந்து தானுமொரு அலையாக மாறிவிட விரும்பினாள். அவள் நெருங்க நெருங்க கடலோ பின்வாங்கிச் சென்றது. இராட்சத நாகமொன்றின் படமென தலைவிரிந்து இடுப்பொடுங்கிய கரிய அலையொன்றின் நுனியில் நின்ற துளசி ‘அக்கா! நான் போறன்’என்றாள். அலையோசை அடங்கி றபான் ஒலிக்கத் தொடங்கியது.

ராசாத்தி செவிகளைப் பொத்திக்கொண்டாள். அவளது விரல்களையும் மீறி உள்நுழைந்தது பாட்டு. மதுவின் வாசனை வீசும் பாடல் நள்ளிரவு தாண்டியும் ஒலிக்கும். பிறகு, பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் அறைகளை நோக்கித் தள்ளாடியபடி வரும்.

வினோதினி தனது மார்புச் சட்டையை விலக்கிக் காட்டினாள். பல் ஆழப்புதைந்த தடயம். புத்தரின் பல்! புத்தர் கடிக்கமாட்டார் என்றுதான் ராசாத்தி அதுகாறும் நினைத்திருந்தாள்.

ஊர் உறங்கிக்கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் விழித்திருந்தன.

ராசாத்தி எழுந்து வெளியில் வந்தாள். ஓசையெழுப்பாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள். சிவலை ஒற்றைச் செவியை உயர்த்தி அவளைப் பார்த்தது. முன்னங்கால்களை நீட்டி நெட்டுயிர்த்திவிட்டு தலையை உடம்புக்குள் புதைத்துக்கொண்டு உறங்கிப்போனது.

முன்னரெல்லாம் கழிப்பறையில் அமரமுடியாது. கால்களை அகட்டி அமர்ந்தபோதெல்லாம் வலி உயிர்பிடுங்கியது. மலத்திலும் சிறுநீரிலும் இரத்தம் கலந்திருந்தது. அவளது அறைக்கதவின் இடுக்கினூடாக நாட்பட்ட குருதியின் நாற்றம் கிளம்பி முகத்திலறைந்தது. மதுதான் வைத்தியரிடம் அழைத்துப் போனாள். வைத்தியரது அறை வாசலில் காத்திருந்தபோது அங்கிருந்த பெண்களிலொருத்தி ராசாத்தியை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இவவுக்கு என்ன வருத்தம்?”

“காய்ச்சல்”என்றாள் மது.

அந்தப் பெண் ‘எனக்கு எல்லாம் தெரியும்’என்ற சிரிப்பைச் சிரித்தாள். அவள் ராசாத்தியைப் பார்த்த பார்வையில் அருவருப்பு தெரிந்தது.

ராசாத்தி கால்களை அகட்டிப் படுத்திருந்தபோது, வைத்தியர் அனிச்சையாகத் தன் மூக்கைத் தேய்த்தார். ஆனாலும் அவர் கருணையோடுதான் நடந்துகொண்டார். ஊரிலுள்ளவர்களைப்போல அவர் ஒதுங்கிப் போகவில்லை. அந்தப் பெண்போல விஷமூறிய கண்களால் சிரிக்கவில்லை.

ராசாத்தி வானத்தை உறுத்துப் பார்த்தாள். நிலவுக்குப் பெரிய வயிறு. மதுவைப்போல அதுவும் நிறைசு+லி. வயிற்றைக் கிழித்துக்கொண்டு சின்னஞ்சிறிய கையொன்று நீண்டது. அது அபிக்குட்டியின் கைகளைப் போல வெண்ணிறமான, குண்டுக்கை. இப்போது நிலவு செந்நிறமாகிவிட்டது. வெளிச்சம்போல இரத்தம் ஒழுகியது. இவள் தலையை ஆட்டினாள். பிறகு கடப்பைத் திறந்துகொண்டு வெளியில் ஓடினாள். அவள் ஓடிய திசையில் இராணுவ முகாம் இருந்தது.
…..

“மானம் போகுது”

சைக்கிளைப் பிடித்தபடி நின்ற மாமா உறுமினார். தேகம் கோபத்தில் நடுங்கியது.

“எதெண்டாலும் உள்ளுக்கை வந்திருந்து கதையுங்கோ மாமா”சாந்தன் அழைத்தான்.

அவரது கைகள் சைக்கிளின் மட்காட்டை இறுக்கிப்பிடித்திருந்தன. பெரிய பெரிய கறுத்த விரல்களில் உரோமம் அடர்ந்திருந்தது.

“நீ இவளைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய் விடு. இல்லையெண்டா நஞ்சைக் கிஞ்சைக் குடுத்து சாக்காட்டு. இப்பிடி வேசைப் பட்டம் கேக்கிறதிலும் சாகட்டும்.”

சாந்தன் அவரை முறைத்துப் பார்த்தான்.

“அவவுக்கு தான் எங்கை போறனெண்ட சுயநினைவு இல்லை”

“சுயநினைவு இல்லாதவள் அதெப்பிடியடா நேரா ஆமிக் காம்ப்புக்குள்ள போறாள்? ருசி கண்ட உடம்பு” மாமா காறித் துப்பினார்.

சாந்தன் மாமாவை சைக்கிளோடு தூக்கி வீதியில் எறிந்துவிடலாமா என்று நினைத்தான். அவரது சோற்றைத் தின்று வளர்ந்த நன்றி அவனது உடலில் மீதமிருந்தது. பிறகு பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னான்.

“நீங்க போங்கோ. அவ இனி எங்கையும் போகமாட்டா. அதுக்கு நான் பொறுப்பு”

“நல்லவேளையாக பற்குணம் தற்செயலாக் கண்டு பிடிச்சுக்கொண்டு வந்தான். இல்லையெண்டா நாறியிருப்பியள்”

மாமா கோபத்தோடு சைக்கிளை ஏறத்தாழத் தூக்கித் திருப்பினார். யாரையோ உழக்குவதுபோல உழக்கிக்கொண்டு வெகுவேகமாகப் போனார்.

மாமா கத்திவிட்டுப் போவதைப் பார்த்தபடி ராசாத்தி மாலுக்குள் அமர்ந்திருந்தாள்.

“அக்கா! ஏனிப்பிடிச் செய்யிறீங்கள்?”

அவள் சாந்தனை வெறுங்கண்களால் பார்த்தாள். பிறகு தலையைக் குனிந்துகொண்டாள்.

“ஊருக்கை எல்லாரும் என்னைத்தான் பேசுகினம் அக்கா”

நிமிர்ந்து பார்த்த விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது.

“எனக்கு…. தெரியாது தம்பி” குமுறிக்கொண்டு வந்து விழுந்தது பதில். கண்ணீர் தன்பாட்டில் வழிந்தது. அதைத் துடைப்பதற்கு அவள் முயற்சி எடுக்கவில்லை.

“இரவானதும்… இரவானதும்…”அவளால் முடிக்கமுடியவில்லை.

மது சாந்தனைப் பார்த்தாள். அவனது கண்கள் மகிழ்ச்சியில் மின்னிக்கொண்டிருந்தன. ‘தம்பி’என்ற வார்த்தை இத்தனை நாட்களுக்குப் பிறகு ராசாத்தியின் வாயிலிருந்து வந்ததைக் கேட்ட மகிழ்ச்சி அது.

“எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம்….”

ராசாத்தியின் கண்கள் வானத்திற்குப் போய்விட்டன. இறந்தகாலம் வானத்தில் இருந்தது. அங்கு துளசி இருந்தாள். வாணியும் தமிழ்ச்செல்வியும் இருந்தார்கள். விசாரணை என்ற பெயரில் அகதி முகாமிலிருந்து அவர்களை இழுத்துக்கொண்டு செல்லப்பட்டார்கள். அடைத்துவைக்கப்பட்ட இடத்தில் ஒவ்வொரு இரவும் ‘விசாரணை’ நடந்தது. நள்ளிரவு கடந்தபிறகு உடலில் உயிர் மட்டும் மிச்சமிருக்க திரும்பக் கொண்டுவந்து போட்டார்கள்.

“என்ரை கழுத்தை ஆராவது நெரிச்சுக் கொல்லமாட்டீங்களா? என்னாலை முடியேல்லை… என்னாலை முடியேல்லை…”வாணி இரவிரவாக அழுதாள். அவளது சின்ன உடலில் காய்ச்சல் பொழிந்துகொண்டிருந்தது.

ராசாத்தி சீற்றத்தோடு தரையை உதைத்தாள். சிவலை பயத்தோடு எழுந்து போய் வேறிடத்தில் படுத்துக்கொண்டது.

“அவங்களைக் கொல்லவேணும்”

மது பாய்ந்தோடி வந்து ராசாத்தியின் வாயைப் பொத்தினாள். அவளது உடல் பயத்தில் நடுங்கியது. சுற்றுமுற்றும் பார்த்தாள். காற்றுக்கும்கூட கண்களும் செவிகளும் இருந்தன. அவர்கள் எந்நேரமும் அவ்வழியாக வரக்கூடும். துப்பாக்கி முதுகுறுத்த கூட்டிச் செல்லப்படும் சாந்தனை மது மனக்கண்ணில் கண்டாள். சாந்தன் ராசாத்தியின் அருகில் வந்து அமர்ந்தான்.

“அக்கா! அபிக்குட்டி செத்துப்போச்சுது. நாங்கள்தான் மிச்சமிருக்கிறம்”மன்றாட்டத்தில் முடிந்த குரல் உடைந்துபோய் அழ ஆரம்பித்தான்.

“மதுவுக்குப் பிள்ளை பிறக்கப்போகுது. இந்நேரம் நீங்கள் இப்பிடி நடந்துகொண்டால் எங்களையெல்லாம் வந்து பிடிச்சுக்கொண்டு போயிடுவாங்கள்”குழந்தைக்குச் சொல்வதுபோல தொடர்ந்தான்.

ராசாத்தி தலையை ஆட்டினாள். ஓசையெழும்படியாக பற்களைக் கடித்தாள். அவளது தேகத்திற்குள் நான்கு குதிரைகள் புகுந்துகொண்டாற் போலிருந்தாள்.

“அக்கா!”

“ஹ்ம்…”

“இனிப் பட எங்களாலை ஏலாது அக்கா!”

ராசாத்தியின் இமைகள் அவசரகதியில் மூடித் திறந்தன. மூடிய கண்களுக்குள் தோன்றிய முகங்களை கைகளைக் கொண்டு விலக்கப் பார்த்தாள். அப்படி அவள் செய்யும்போது காற்றைக் கைகளால் அறைவதுபோலிருந்தது. றபான் சத்தம் வேறு காதைக் கிழித்தது. உரு வந்தாற்போல தலையை ஆட்டினாள். பிறகு மயங்கிச் சரிந்தாள். மது தண்ணீர் எடுத்து வருவதற்காக உள்ளே போனாள்.

அன்றிரவு மதுவும் சாந்தனும் நீண்ட நாட்களுக்குப் பின் ராசாத்தியின் அமானுஷ்ய ஓசைகளின்றி ஆழ்ந்து உறங்கினார்கள். ராசாத்தி காணாமற் போனதை அவர்கள் கண்டுபிடித்தபோது வெயில் விறாந்தையில் ஏறியிருந்தது.



நன்றி-“உரையாடல்“-கனடாவில் வெளியாகும் சஞ்சிகை

3.31.2014

நித்திலாவின் புத்தகங்கள்



நடப்பது இன்னதென்று அவளது மூளை கிரகித்துக்கொள்வதற்கிடையில் மீண்டும் சில பறந்துவந்தன. அவள் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் அதற்கு முந்தைய நொடிதான் ஒரு கொலை நடந்துமுடிந்து இரத்தம் கூழாகத் தரையில் பரவிக்கொண்டிருந்தது. கொலை செய்த காத்யா சாவதானமாக அந்த நொடிதான் வெளியேறிச் சென்றுகொண்டிருந்தாள்.
குழப்பத்தோடு நிமிர்ந்துபார்த்தபோது, கண்களில் அனல் தெறிக்க அம்மா நின்றுகொண்டிருந்தாள். “இந்தச் சனியன்களை விட்டொழிச்சாத்தான் நீ உருப்படுவாய்” என்று கத்தி அழுதபடியே அம்மாவால் வீசியெறியப்பட்ட புத்தகங்கள் நித்திலாவின் காலடியை அண்மித்தும் அவளுக்குப் பின்புறமாகவும் தாறுமாறாகச் சென்று விழுந்திருந்தன. நித்திலா அமைதியாக எழுந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டுபோய் அவை இருந்த இடத்தில் மறுபடியும் அடுக்கி வைத்தாள். பிறகு, அறைக்கதவைச் சாத்திக்கொண்டு படுத்துவிட்டாள். சாத்தப்பட்ட கதவுக்குப் பின்னால் அம்மா நின்றுகொண்டிருப்பதை அவளால் உணரமுடிந்தது.

அப்பா இறந்துபோனபோதுகூட அம்மா அப்படிக் கத்தியழுது அவள் பார்த்ததில்லை. அதற்கு அவர் எந்நேரமும் குடித்துக்கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். அண்ணா தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்து நின்றபோதும், அவன் சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் போனபோதும்கூட அம்மா தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொண்டதில்லை. இன்று கண்களில் நீர் பெருக்கெடுக்க உடலெல்லாம் பதறித் துடிக்க கத்துகிறாளென்றால், அந்தளவிற்கு உள்ளுக்குள் உடைந்து நொறுங்கிப் போயிருக்கவேண்டும் என்று நினைத்தாள்.

அம்மா புத்தகங்களைத் தூக்கியெறிந்ததைப் பார்த்த கணத்தில் கோபம் பொங்கியது. வேறு யாராவது அப்படிச் செய்திருந்தால் சன்னதம் ஆடித் தீர்த்திருப்பாள். ஆனால், அம்மாவை ஒன்றும் சொல்லமுடியவில்லை. தவறு இழைத்துவிட்டதான மனநிலை நித்திலாவை மௌனமாயிருக்கச் செய்தது. படுத்திருந்தபடி அறையைச் சுற்றி விழிகளை ஓட்டினாள். அன்றாட உபயோகத்தில் இல்லாத பொருட்களை வைப்பதற்கென உயரத்தில் கட்டப்பட்டிருந்த தட்டுக்களில், அலமாரிகளில், எழுதும் மேசையில், கணனி மேசையில், முகம் பார்க்கும் கண்ணாடி முன், கட்டிலில், நாற்காலியில், அதனருகில் தரையில் இவையெல்லாம் போதாதென்று கட்டிலுக்குக் கீழும் புத்தகங்கள் கிடந்தன. கழிப்பறையின் தண்ணீர்க்குழாயினுள் சிறிய புத்தகங்கள் செருகப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் எளிமையான வாசிப்பிற்குரிய ஜனரஞ்சக சஞ்சிகைகள். விடயத்திலும் பருமனிலும் கனத்த புத்தகங்கள் மலச்சிக்கலுக்கு இட்டுச்சென்றன.

அந்தச் சிறிய அறைக்குள் அவளோடு கடதாசியின் மட்கிய மணமும் தூசியும் இருட்டும் குடியிருந்தன. புதிதாக வாங்கி வரும் புத்தகங்கள் தமக்கான இடத்தை அடைவதற்கு முன்னம் சில காலம் முன்னறையில் அமர்ந்திருக்கும். அடிக்கடி அவற்றை எடுத்து மணந்துபார்ப்பாள். பெற்றோல் மணம், சிகரெட், விபூதி மற்றும் மழை கிளர்த்தும் வாசனை, மெழுகுவர்த்தி எரியும்போது எழும் வாசனை போலவே அதுவும் அவளுக்கு மிகப் பிடித்தமானதாயிருந்தது. ஆரம்பத்தில் அப்படி அவள் செய்யும்போது, ‘நீ திருந்தமாட்டாய்’என்ற பாவனையில் அம்மா தலையசைத்துச் சிரிப்பாள். பிறகு, வினோதமாகப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ளத் தொடங்கினாள். இப்போதெல்லாம், நித்திலா புத்தகங்களை மணந்து பார்ப்பதைப் பார்க்க நேரும் அம்மாவின் கண்களில் வேதனை குடிகொண்டிருப்பதை அவள் அவதானித்திருந்தாள்.

அவள் சிறுமியாயிருந்தபோது, விபரீதமெனச் சொல்லத்தக்க எதையும் அவளிடத்தில் கண்டார்களில்லை. அந்நாட்களில் அப்பா எப்போதாவதுதான் குடித்தார். அப்பாவும் அம்மாவும் பணத்தை முன்னிட்டு சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கியிருக்கவில்லை. வாசிக்கும் பழக்கம் ஆரோக்கியமானதென்ற எண்ணமே அப்போது அவர்களுக்கிருந்தது. ‘புத்திசாலி! இத்தனை சிறிய வயதில் இவ்வளவு பெரிய புத்தகம் படிக்கிறதே’என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில் பெருமை கலந்த ஆனந்தமிருந்தது. வீட்டிற்கு புதியவர்கள் வரக்கண்டால் ஓடிப்போய் ஒளிந்துகொள்வாள். வீட்டிற்கு வருபவர்களுக்குரித்தான சம்பிரதாயம் வழுவாமலிருக்க அவர்களும் இவளை இழுத்துப் பிடித்து வைத்து சில கேள்விகளைக் கேட்பார்கள். அந்நேரங்களில், ஒரு முயல்குட்டியைப் போல ஓடுவதற்கு ஆயத்தமாக கால்களைப் பெயர்த்துக்கொண்டு உள்ளறை நோக்கிக் கண்களைத் திருப்பியிருப்பாள்.

அவள் அறையைவிட்டு வெளியே வருவது மிகக் குறைவு என்பதையும் தவிர்க்கவியலாமல் போனாலொழிய எவருடனும் பேசுவதில்லை என்பதையும் அவர்கள் தாமதமாகவே உணரத்தொடங்கினார்கள். எப்போதாவது சடுதியாக அறைக்குள் நுழையும்போது வாசித்தபடியோ, கையில் புத்தகத்தோடு வேறோரு உலகத்தினுள் மூழ்கிவிட்டிருப்பதையோ புத்தகம் கையிலிருக்க உறங்கிவிட்டிருப்பதையோ கண்டார்கள். விளக்குகள் ஒளிர்ந்தபடியிருக்க உறக்கத்தில் ஆழ்ந்துபோயிருக்கும் தமது சின்ன மகளைக் குறித்து அவர்கள் கவலைகொள்ளத் தொடங்கினார்கள்.
அவளுடைய பதினாறாவது வயதிலிருந்து அம்மா அந்தக் கேள்வியை அவளிடம் கேட்கத் தொடங்கினாள். முதலில் வருத்தத்தோடும் பிறகு எரிச்சலோடும் நாளாக நாளாக கோபத்தோடும் அதே கேள்வியைக் கேட்டாள்.

“நீ ஏன் இப்பிடி இருக்கிறாய்?”

“எப்பிடி இருக்கிறேன்?”

“மற்றப் பொம்பிளைப் பிள்ளையளைப் போலை நீ ஏன் இருக்க மாட்டேனெண்டிறாய்?”

அம்மா அந்தக் கேள்வியைக் கேட்கும்போது பக்கத்துவீட்டு சுமதியை மனதில் வைத்துக்கொண்டுதான் கேட்கிறாள் என்பதை நித்திலா அறிவாள். சுமதி, அம்மாவின் நீரிழிவு நோய் பற்றி அக்கறையோடு கேட்பாள். அவளுக்குச் சமைக்கத் தெரிந்திருந்தது. குறிப்பாக, அவள் சுடும் தோசை வட்டாரியால் வரைந்ததைப் போல வட்டமாக இருந்தது. மேலும் அது தோசையைப் போலவே உருசித்தது. வீட்டைத் தூசி தும்பு இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளப் பழகியிருந்தாள். சுமதியின் வீட்டுக்கு யாராவது போனால் விழுந்து விழுந்து உபசரிப்பாள். அவர்கள் ‘செத்துப் போ’என்று சொன்னால், ‘எத்தனை மணிக்கு?’என்று கேட்டுக்கொண்டு செத்துப்போகிறவளைப் போல அத்தனை அனுசரணையோடு நடந்துகொள்வாள். எல்லாவற்றிலும் முக்கியமாக, புத்தகங்களைக் கட்டிக்கொண்டு விழுந்து புரள்வதில்லை. அவளைப் பார்த்துப் பார்த்து மனம் வெதும்புவாள் அம்மா.

“பிள்ளை என்று இருந்தால் சுமதியைப் போல இருக்கவேணும்”என்பாள் அம்மா.

நித்திலாவும் அம்மாவைச் சமாதானப்படுத்துவதற்காக ‘ஏதாவது உதவி செய்யவா?’என்று கேட்டபடி சிலசமயம் சமையலறைக்குள் வருவாள். வேலை எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்ற எச்சரிக்கையுடன் வெண்ணெயில் இறங்கும் கத்திபோல வழுக்கிச் செல்லும் அந்தக் கேள்வி. அம்மா வேலைகளை முடித்துக்கொண்டு சோபாவில் படுத்திருக்கும்போது ஏதாவது ஆறுதலாகக் கதைக்கவேண்டுமென்று நினைப்பாள். ஆனால், சொற்களைத் திரட்டிக்கொண்டு கதைப்பதென்பது சிரமமானதும் சோம்பல் மிகுந்ததுமான காரியமாயிருந்தது அவளுக்கு.
எப்போதாவது முன்னறைக்குள் வந்து அமர்ந்திருக்கும்போது, தலைக்கு மேல் மயிரிழையில் கட்டப்பட்ட கத்தியொன்று தொங்கிக்கொண்டிருப்பதேயான மனஅந்தரத்தோடு அப்படியும் இப்படியுமாக அசைந்தபடி அமர்ந்திருப்பாள். அந்தக் கண்ராவியைக் காணச் சகிக்காமல் அப்பாதான் சொல்வார்.

“நீ போறதெண்டாப் போ”

நித்திலா கதைக்காமலிருப்பதை விடவும்அப்படி நிர்ப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு அமர்ந்திருப்பதைப் பார்ப்பது இன்னும் மோசமாயிருந்தது.
வெளியாட்களோடு எப்படி நடந்துகொள்வது என்பதையும் அவள் அறியாதிருந்தாள். அப்படித் தவிர்க்கமுடியாமல் ஏதாவது கதைக்க நேர்ந்த சமயங்களில், அவர்கள் திடுக்கிடும்படியாக அசந்தர்ப்பமாக ஏதாவது சொல்லிவைத்தாள்.

“உனக்கு உன்ரை புத்தகங்களைத் தவிர்த்து வேறை ஒரு சிந்தனையுமில்லை”என்று அண்ணாகூடச் சொல்லியிருக்கிறான். ‘என்னைச் சொல்கிறாய்… நீயும் சுயநலவாதிதான்’என்று இடித்துரைப்பதன் மூலமாக தனது தவறுகளின் கனத்தைக் குறைக்க அவன் சந்தர்ப்பம் கிட்டியபோதெல்லாம் முயற்சித்திருக்கிறான்.

அவளுக்கு புத்தகங்களில் ஈடுபாடு ஏற்பட்டது எந்த வயதிலிருந்து என்று அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை. மதில்களில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்களை, அஞ்சலிக் கவிதைகளை, அரசியல் அறைகூவல்களை எதையும் அவள் விட்டுவைத்ததில்லை. மளிகைப் பொருட்களைச் சுற்றிவரும் காகிதங்களை சுருக்கம் நீக்கி எடுத்து வாசிப்பதற்கெனச் சேகரித்துவைப்பாள். சிகரெட் பெட்டியில் எழுதப்பட்டிருக்கும் ‘புகைத்தல் கொல்லும்’என்ற பயமுறுத்தலுக்குக் கீழேயுள்ள வாசகத்தைத் தவறாமல் அப்பாவுக்கு வாசித்துக் காட்டுவாள். பெரும்பாலும், அவளால் வாசிக்கப்பட்ட ஒரு சிகரெட் பெட்டியில் இருந்ததைப்போல மறு பெட்டியில் மரணம் எழுதப்பட்டிருப்பதில்லை.

குறைந்த மழைக்காலம், கூடிய வெயில்காலம் ஆகிய இரண்டு காலங்களில் மட்டும் வாழ்வதென்பது அவளுக்கு சலிப்பூட்டுவதாக இருந்தது. வெவ்வேறான நிலவெளிகளில் மானசீகமாகவேனும் வாழவிரும்பினாள். சுவாரசியமோ மர்மமோ திருப்பங்களோ அற்ற யதார்த்தத்தை விட்டு வெளியேறி அதியற்புதமான உலகமெனத் தன்னால் நம்பப்பட்ட ஒன்றினுள் நுழைந்துகொண்டாள்.

ஈரலிப்பான மழைக்காடுகளுள் நனைந்த குரல்களால் பறவைகள் ஒலியெழுப்புவதையும், இரவானதும் பெயர்தெரியாத பூச்சிகளும் வண்டுகளும் ரீங்கரிப்பதையும் கேட்டுக்கொண்டிருந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து விரிந்திருந்த புல்வெளிகளில் அலையும் தும்பிகளின் பின்னே, உடலெல்லாம் உற்சாகக் காற்று நிரம்பியிருக்க கைகளை விரித்தபடி ஓடினாள். மஞ்சள் முகங்களில் சிறிய உள்ளடங்கிய கண்களால் சிரிப்பவர்களோடு சிநேகம் கொண்டாள். பனிபொழியும் வீதிகளில் காதல் பித்துப் பிடித்து தனக்குத்தானே அரற்றிக்கொண்டு போனவனின் குளிராடையைத் தொட்டுப் பார்த்தாள். புகையைக் கக்கிக்கொண்டு விரைந்த புகையிரதத்தில் தொற்றி நின்றபடி தாயை நோக்கிக் கைகளை ஆட்டியவளின் கண்ணீரில் உருகினாள். இருந்தவர்களுள் நல்லவனாகத் தோன்றியவனும் அதிகாரமற்றவனுமான வெள்ளைக்காரத் துரையொருவனில் காதல் கொண்டாள். கால இயந்திரத்தின் முட்களைத் தான் விரும்பியபடி முன்பின்னாக நகர்த்தி நூற்றாண்டுகளில் அங்கிங்கென உலவித் திரிந்தாள்.

வகுப்பிலும் பாடத்தைக் கவனிக்காமல் பாடப்புத்தகங்களுக்குள் மறைத்துவைத்துக்கொண்டு வேறு எதையாவது படித்துக்கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி எப்போதும் தோழிகள் குழுமியிருந்தார்கள். சாமியாடிகளுள் கடவுளர்கள் புகுந்துகொள்வதுபோல, கதை சொல்லும்போது அவள் வேறொருத்தியாக மாறிவிடுவாள். தனக்குள் ஒடுங்கும் சுபாவமுடைய அந்தச் சிறுமியா இவள் என்று பார்ப்பவர்கள் ஐயுறும்படியான மாற்றமாயிருக்கும் அது. அந்நேரம், அவள் வாசித்த புத்தகங்களிலிருந்த மனிதர்கள் தரையிறங்கி அழுவார்கள். சிரிப்பார்கள். பித்தேறிப் பிதற்றுவார்கள். அவசரப்பட்டுக் கொலை செய்துவிட்டு ஆசுவாசமாகக் கவலைப்படுவார்கள். கண்களை அகலவிரித்தும் சுருக்கியும் கதையின் போக்கிற்கேற்ப காற்றில் கைகளை அலையவிட்டும் குரலில் ஏற்ற இறக்கங்களைக் காண்பித்தும் தனி நடிப்பு நாடகமே நிகழ்த்திக் காண்பிப்பாள். சிலசமயங்களில், வாசித்த கதைகளிலிருந்து புதிய கதைகளை இட்டுக் கட்டிச் சொல்வதுமுண்டு. அப்போது அவளது முகத்தில் இரகசியமான புன்னகை மலர்ந்திருக்கும். தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு இரகசியத்தின்பாலான குறுகுறுப்பில் திளைப்பாள்.
பள்ளிக்கூடம் விட்டதும் ஓட்டமாய் ஓடிப்போய் தன் புத்தகங்களிடம் புகுந்துகொள்வாள்.

“சாப்பிடு”அம்மா வெளியிலிருந்து குரல் கொடுப்பாள்.

“அஞ்சு நிமிசம்”

“சாப்பிட வா”

“ரெண்டு நிமிசம்”

“எவ்வளவு நேரம் கூப்பிடுறது?”

இவ்விதமாக நிமிடங்கள் மணித்தியாலங்களாகக் கரைந்துபோவது வழக்கமாயிருந்தது. கடைசியில் பொறுக்கமாட்டாமல் கடுகடுத்த முகத்தோடு அம்மா வந்து நிற்கும்போது வேறு வழியில்லாமல் எழுந்து செல்வாள். ஒரு கையில் புத்தகம் மறுகையால் சாப்பாடு என்னும்போது பல நாட்கள் என்ன சாப்பிட்டோம் என்பதே அவளுக்குத் தெரியாமலிருக்கும்.

ஒரு தடவை, நூலகத்திலிருந்து இரவல் எடுத்துவர இயலாத அரிதான புத்தகமொன்றின் பக்கங்களைக் கிழித்து எடுத்துவந்தாள். அன்றெல்லாம் அப்படிச் செய்திருக்க வேண்டாமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேயிருந்தாள். இரவில் எழுந்திருந்து அந்தப் பக்கங்களை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மென்சிறகுகளாலான பறவைக் குஞ்சொன்றின் இறந்த உடலைக் கையில் வைத்திருப்பதைப் போல உணர்ந்தாள். அதன்பிறகு கிழிப்பதை விட்டுவிட்டு முழுப்புத்தகங்களாகத் திருடவாரம்பித்தாள். கணிசமான அளவு புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. ஒருநாள் நூலகரிடம் கையுங்களவுமாகப் பிடிபட்டபோது பெரிய சத்தம்போட்டு அழ ஆரம்பித்துவிட்டாள். அவருக்கு அப்பாவைத் தெரிந்திருந்தது. “இனிமேல் அந்தப் பக்கம் வந்தால் பொலிசிடம் பிடித்துக்கொடுத்துவிடுவேன்” என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். பிறகு அந்த நூலகப் பக்கம் மறந்தும் போவதில்லை.

ஒருவழியாக பல்கலைக்கழகம்வரை படிப்பை ஒப்பேற்றினாள். அவளுடைய தோழிகளெல்லாம் வேலை தேடத் தொடங்கிய காலத்தில் அவள் நூலகம் நூலகமாகப் போய்க்கொண்டிருந்தாள். நூலகத்திலிருந்த புத்தகங்களில் இரவல் வாங்கக்கூடியவை எல்லாம் வாசித்துத் தீர்ந்தன. பக்கத்து ஊர்களிலும் அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ள நூலகங்களிலும்கூட. தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காகக் கொடுத்த பணத்தில் புத்தகம் வாங்கிக்கொண்டு வந்திறங்கியவளைப் பார்த்தபோதுதான் அவளில் ஏதோ கோளாறு இருப்பதாக அம்மாவுக்குத் தோன்றவாரம்பித்தது. அன்றைக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாள். நித்திலா விசும்பியபடியே சாப்பிடாமல் படுத்துவிட்டாள். ஏதாவது செய்துகொண்டுவிடுவாளோ என்ற பயத்தில் அம்மா நள்ளிரவில் எழுந்திருந்து பார்த்தபோது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் வாசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

கிடைக்கும் புத்தகங்களையெல்லாம் படித்துவிடுவாள் என்றில்லை. அவ்வளவு புத்தகங்கள் தன்னிடம் இருப்பதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. ஒரு பெரிய உலகமே தன் அலமாரிக்குள் அடைபட்டிருப்பதாக அவள் நம்பத்தொடங்கினாள். அந்த மனிதர்களோடு இரகசியமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டாள். இரவுகளில் அவளது அறைக்குள்ளிருந்து குரல்கள் கேட்கத் தொடங்கின.

கையில் ஒரு சதம்கூட இல்லாதபோதிலும் புத்தகக் கடைகளுக்குப் போவாள். புத்தகங்களின் முதுகைப் பார்த்துக்கொண்டு நிற்பதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அங்கு நிற்கும்போது காலம் புரவியின் கால்கள்கொண்டு பாய்ந்தோடியது. சுற்றவர இருக்கும் பொருட்கள்,மனிதர்கள், ஓசைகள் எல்லாம் அந்நேரங்களில் மறந்து மறைந்துபோயின.

திடீரென்று ஒருநாள் அவளது திருமணத்திற்கென்று சேர்த்து வைத்திருந்த நகைகளில் ஒரு சங்கிலியைக் காணவில்லை. முற்றத்து மணலை அரித்துக்கூடத் தேடியாயிற்று. கிடைக்கவேயில்லை. நித்திலாவின் கட்டிலுக்கு அடியில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த மைமணம் மாறாத புத்தகங்களைப் பார்த்த அன்றைக்குத்தான் ஏதோ விபரீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது அம்மாவுக்கு உறைத்தது.
அழுது அடம்பிடித்து திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தாள் அம்மா. நித்திலா அப்படிச் சம்மதித்ததுகூட ஏதோவொரு குற்றவுணர்வினாலும் அடிக்கடி அவளது கனவுகளில் தோன்றும் இராஜகுமாரன் இவனாயிருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பினாலுந்தான்.

புகார் கவிந்து மூடிய மழைமாலைப்பொழுதுகளில் அந்த இராஜகுமாரனோடு ஒரே குடையினுள் முன்னொருபோதும் அறிந்திராத தெருக்களில் அவள் நடந்து போயிருக்கிறாள். ஒரு தடவை அவர்கள் பீட்டர்ஸ்பேர்க்கில் புகையிரதத்துக்காகக் காத்திருந்தார்கள். அவளது தலையில் தூவப்பட்டிருந்த பனித்துகள்களை அவன் விரல்களால் தட்டிவிட்டான். அன்றைக்கு அவன் சாம்பல் நிறத்தில் கனத்த குளிராடையொன்றை அணிந்திருந்தான். நித்திலாவை அவன் ‘நாஸ்தென்கா’’வென்று அழைத்தான். முகமெல்லாம் களிப்பேருவகை பொங்கத் திரும்பிய கணத்தில் அவள்தான் எத்தனை அழகாயிருந்தாள்!
முதலிரவில், ‘உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?’என்று கணவனானவன் கேட்டபோது, ஒரு நொடியும் தாமதிக்காமல் ‘புத்தகங்கள்’என்றாள். அரையிருளில் அவனது முகம் புலப்படவில்லை. எனினும், அந்தப் பதிலால் அவன் திருப்தியடையவில்லை என்பதைத் தொடுதலில் உணர்ந்தாள். அவனோடு நிறையக் கதைக்க விரும்பினாள். அவனோ வார்த்தைகளைக் காட்டிலும் செயலையே விரும்பினான். தன்னைத் தின்னக் கொடுத்து முகட்டைப் பார்த்துக்கொண்டு அவள் படுத்திருந்தாள். முகட்டைப் பிரித்துக்கொண்டு தன் குதிரையோடு இராஜகுமாரன் வெளியேறிப் போனான். வருத்தமாக இருந்தது.

மாமியார் அவளது புத்தகங்களை எடுத்துவரக்கூடாதென்று சொன்னபோது திரும்பி கணவனின் கண்களைப் பார்த்தாள். அவனோ அதைக் கவனிக்காததுபோல மறுபுறம் திரும்பிக்கொண்டான். அப்போதிருந்தே அவனைப் பிடிக்காமலாயிற்று.

புகுந்த வீட்டில் மாடுகளும் மனிதர்களும் நிறைந்திருந்தார்கள். அவளுக்கு ஒரு நிமிடந்தானும் ஓய்வில்லை. இரவுகளில் கணவன் படுக்கைக்கு அழைத்தால் சுவரில் நகரும் பல்லியையோ இருளையும் ஒளியையும் மாறி மாறிப் படர்த்தும் வாகனங்களின் நிழல்களையோ பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள். அவன் அவளை ‘மரக்கட்டை’ என்று திட்டும்போது மரத்த விழிகளால் அவனைப் பார்த்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொள்வாள். அவனும் நாளடைவில் சலித்துப்போனவனாக பக்கத்து ஊரிலுள்ள ஒரு பெண் வீட்டிற்குப் போய்த் தங்கத் தொடங்கினான். முதலில் தயங்கித் தயங்கிப் பகலிலும் பிறகு தயங்காமல் இரவிலும் போகத் தொடங்கினான். இவளோ வீட்டுக்குப் போகவேண்டும் என்று நச்சரித்துக்கொண்டேயிருந்தாள். மாமியாரும் ‘இந்தச் சனியனைக் கொண்டுபோய் விட்டுத்தொலை’என்று சொல்லத்தொடங்கினாள். அவன் ஆற்றமாட்டாமல் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தான்.

அவள் வீட்டுக்குத் திரும்பிச் சென்ற அன்று அவளிடமிருந்து மாட்டுச் சாணி வாடையடிப்பதாக அம்மா சொன்னாள். நீண்ட காலத்திற்குப் பிறகு அவள் புத்தகங்களோடு படுத்துறங்கினாள். நடுஇரவில் கண்விழித்துப் பார்த்தபோது ஆழ்கடலின் பேரமைதி தன்னுள் இறங்கியிருக்கக் கண்டாள்.

முதலில், அவள் தற்காலிகமாகத்தான் அங்கு வந்திருப்பதாக அம்மா நினைத்தாள். பிறகு உண்மையறிந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிந்தாள். இவளோ திருமணம் என்ற ஒன்று தனக்கு நடக்கவேயில்லை என்பதாக நடந்துகொண்டாள். போதாக்குறைக்கு, ஒரு சோடிக் காப்பை விற்று புத்தகங்கள் வேறு வாங்கி வந்திருந்தாள். அம்மா எடுத்ததற்கெல்லாம் கோபப்படத் தொடங்கியது அப்போதிருந்துதான். என்றாலும் புத்தகங்களைத் தூக்கியெறியுமளவிற்கு மனதில் கோபம் அடர்ந்திருக்கும் என்பதை நித்திலா அறிந்திருக்கவில்லை. அம்மா சலிக்காது கேட்டுக்கொண்டிருந்தாள்.

“நீ ஏன் இப்பிடி இருக்கிறாய்?”

வயோதிபத்தில் சுருங்கியிருந்த அம்மாவின் முகம் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது துயரத்தால் மேலும் சிறுத்துவிடும். கண்கள் உள்ளாழத்தில் புதைந்துகொண்டன போலிருக்கும். அவளுக்கோ பதிலற்ற கேள்விகளைக் கேட்கும் அம்மா அங்கிருந்து அகன்றால் போதுமென்றிருக்கும்.

“மருமகன் எவ்வளவு நல்லவர். அவரோடை நீ ஏன் ஒத்துப்போயிருக்கக்கூடாது?”

இவளோ கடைசியாக வாசித்த வரியில் அகலாது நின்றுகொண்டிருப்பாள். அடுத்த வரியானது எதிர்பாராத திசையில் அவளை அழைத்துச் செல்வதற்குக் காத்திருப்பதான பதட்டம் உள்ளோடும்.

“உன்ரை வாழ்நாளிலை இதையெல்லாம் நீ வாசிச்சு முடிக்கப்போறேல்லை”அம்மாவின் குரல் சாபமிடுவதைப் போல ஒலித்தது.
அது நித்திலாவுக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் அவள் மழைக்காலத்திற்கென எறும்புகள் தானியங்களைச் சேமிப்பதைப்போல, விவசாயி விதைநெல்லைச் சேமிப்பதைப்போல, குழந்தைகள் பிரியமான தின்பண்டங்களைப் பொதிந்து வைத்திருப்பதைப்போல புத்தகங்களைச் சேகரித்தாள். வீட்டிற்கு வரும் யாராவது அவளது புத்தகங்களுக்கருகில் செல்கிறார்களென்று உணரும் தருணம் தற்காப்புக்குத் தயாராகும் விலங்கு போலாகிவிடுவாள். இரவல் கொடுப்பதென்பது இழப்பதே என்பதை அனுபவம் அவளுக்குக் கற்பித்திருந்தது. அவள் சந்தித்த சொற்பமான மனிதர்களில் விதிவிலக்கானவர்கள் மிகக்குறைவு. இரவல் கொடுக்கப்பட்டு திரும்பிவராத புத்தகங்களை மீண்டும் வாங்கி இலக்கம் ஒட்டி பத்திரப்படுத்துவாள்.

கடைசியில் அம்மா சலித்த கண்களோடு கதவைச் சாத்திவிட்டுப் போவாள். அந்த மூடலில் கோபமும் வருத்தமும் கலந்திருக்கும்.
சேமிப்பு கரைந்துகொண்டே போய் இறுதியில் வீட்டை விற்கவேண்டிய நிலை வந்தபோது அவள் அந்த பல்கனியை, அதையொட்டி வளர்ந்திருந்த இலையடர்ந்த மரத்தை அதில் மாலையானதும் வந்தமரும் பறவைகளை துல்லியமான வானத்தை வெளிச்சத்தை இழந்தாள்.

புதிதாகக் குடிபோன வாடகை வீடு பகலிலும் இருண்டிருந்தது. பெயருக்கு சன்னல்கள் இருந்தன. ஆனால், அவற்றைத் திறக்கவொட்டாமல் பக்கத்து வீட்டுச் சுவர் தடுத்துநிறுத்தியிருந்தது. வீடு மாறுவதற்கு முன்பாக புத்தகங்களில் சிலவற்றை பக்கத்திலிருந்த நூலகத்திற்கு மனமில்லாமல் கொடுக்கவேண்டியிருந்தது. அப்படியிருந்தும் இடம் போதவில்லை. அம்மா சின்னஞ்சிறிய கூடத்தில் உடலைக் குறுக்கியபடி படுத்துக்கொண்டாள். கோடைகாலத்தில் வெப்பம் தகித்தது. குகையொன்றில் இருப்பதான மனநிலையில் மூச்சுத் திணறியது. மேலும், இரவு பத்துமணிக்கு மேல் விளக்குகளை எரிப்பதற்கு அனுமதியில்லை. ஆறுமாதத்திற்கு மேல் அந்த அனலைத் தாங்கவியலாமற்போக மறுபடியும் வீடு மாறவேண்டியதாயிற்று.

வீடு மாறிச் செல்ல வேண்டியேற்பட்ட ஒவ்வொரு தடவையும் அம்மா புத்தகங்களில் கோபங்காட்டினாள். தனக்குப் பிரியமற்ற மனிதர்களைப் பார்க்கும் கண்களால் அவற்றைப் பார்த்தாள்.

“இதையெல்லாம் என்ன செய்யப்போறாய்?”

நித்திலா மௌனமாக அமர்ந்து சின்னச் சின்ன அட்டைப் பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருப்பாள்.

வீடு மாற்றித் தர வந்திருந்த வேலையாட்களில் ஒருவன் அந்தக் கனமான அட்டைப் பெட்டிகளில் ஒன்றைத் தூக்கிச் செல்லும்போது கீழே போட்டுவிட்டான்.

“இதுக்குள்ளை என்ன பிணமா இருக்குது?”என்று கேட்டான் உடனடி விளைவான எரிச்சலோடு.

“ஓமோம்… உங்கடை பிணம்!”என்று சொன்னபிறகுதான் அப்படிச் சொல்லியிருக்கவேண்டாமே என்று தோன்றியது. அவன் முகம் இருண்டவனாக படியிறங்கிச் சென்றுவிட்டான்.

இது கொஞ்சம் விசாலமான வீடு. ஓவென்றிரைந்தபடியிருக்கும் வீதிக்கருகில் இருந்தது. கண்கள் கூசும்படியான வெளிச்சம். வெட்டவெளியில் நிற்பதுபோலிருந்தது. அவள் சன்னல்களை அடைத்து இருண்ட நிறத்திலான திரைச்சீலைகளைத் தொங்கவிட்டாள். பிறகு பிரிக்கப்படாத பெட்டிகளுக்கு நடுவில் அமர்ந்து வாசிக்கத்தொடங்கினாள். அம்மாவுக்கு அவளை என்ன செய்வதென்றே புரியவில்லை. குனிந்து வாசித்துக்கொண்டிருந்த அந்த மெல்லிய உருவத்தை சில விநாடிகள் உறுத்துப்பார்த்தாள். அவளது துயரம் ஒரு விம்மலெனப் புறப்பட்டது.

“என்ரை காலத்துக்குப் பிறகு நீ தனிச்சுத்தான் போகப்போகிறாய்”

அந்தத் தாய் விழிகளில் துளிர்த்த நீரைச் சுண்டியெறிந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துபோனாள். எப்படியாவது யதார்த்த உலகினுள் நித்திலாவை இழுத்துப்போட்டுவிடவேண்டும். அதைச் செய்வதற்கு அப்போதைக்கு அவளுக்குத் தோன்றிய ஒரே வழி நித்திலாவை வேலைக்கு அனுப்புவதுதான். அப்படியாவது அவளை வெளியாட்களோடு பழகச் செய்யலாமென்று அம்மா நம்பினாள். ஆதங்கத்தோடு அந்தக் கேள்வியைக் கேட்கத் தொடங்கினாள். 

“நீ ஏன் வேலைக்குப் போகக்கூடாது?”

நித்திலா திகைத்துப்போனாள். வேலைக்குப் போவதென்பது அவளளவில் செத்துப்போவதுதான்; அதற்குச் சற்றும் குறைந்ததில்லை அது! அம்மாவால் இதுநாள்வரையில் கேட்கப்பட்ட கேள்விகளில் இதுதான் அதிகமும் அச்சுறுத்துவதாக இருந்தது. அலாரம் உச்சிமண்டையில் ஓங்கி அடிக்க அதிகாலையில் பதறித் துடித்து எழுந்து வேலைக்கு ஓடிய அண்ணா நினைவில் வந்தான். ஒரு கோப்பிடமோ கணனியிடமோ இயந்திரத்திடமோ கையில் மறைமுகச் சாட்டையேந்திய எந்த மனிதனிடமோ தனது நாட்களைக் கையளித்துவிட்டு உயிருள்ள பிணமாக உலவுவதென்பது அவளளவில் அசாத்தியமே. ஆனாலும், அம்மா வேலைக்குப் போகச்சொல்கிறாள். நாளாக நாளாக தள்ளவும் கொள்ளவும் முடியாத ஆளாக அம்மா மாறிவருவதாக அவளுக்குத் தோன்றியது. ஆனாலும், நோய்க்கிருமியென கவலை அவளை அரித்துக்கொண்டிருப்பதை நித்திலாவால் உணரமுடிந்தது. எல்லோராலும் வெறுக்கத்தக்க ஒரு ஆளாகத் தான் மாறிவிட்டேனோ என்ற முதற்றடவையாக அவள் யோசிக்கத் தொடங்கினாள். அம்மாவாலும் வெறுக்கப்பட்டுவிடுவேன் என்ற நினைவு தாங்கவியலாத துன்பத்தைத் தந்தது. ஆனாலும் தயங்கியபடியே கேட்டாள்.

“புத்தகக் கடையிலோ லைப்ரரியிலோ எனக்கு வேலை கிடைக்குமா?”
அம்மா ஆயாசம் நிறைந்த கண்களால் அவளைப் பார்த்தாள்.  அங்கேயே விழுந்து செத்துப்போகலாம் போன்ற களைப்பு அவளை மூடியது.

“ஊருலகத்திலை உன்னைப் போல ஒரு பொம்பிளைப் பிள்ளை இருக்காது”என்றாள் கசப்போடு.

இதைச் சொல்லும்போது அவளது குரல் இற்றுப்போயிருந்தது. அதன்பிறகு நித்திலா அம்மாவின் கண்களுக்கு அஞ்சத் தொடங்கினாள். அம்மா உறங்கிய பிறகு மெழுகுவர்த்தியின் ஒளியில் வாசிக்கப் பழகினாள். கிடைக்கக்கூடாதென்ற பிரார்த்தனையுடன் வேலைகளுக்கு விண்ணப்பம் அனுப்பவாரம்பித்தாள். நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும்படியாக வந்த கடிதங்களைக் கிழித்துப் போடவும் புத்தகங்களுக்கு அடியில் மறைக்கவும் செய்தாள். எவ்வளவோ கவனமாக இருந்தும் அந்தக் கடிதங்களில் ஒன்று அம்மாவின் கைகளில் சிக்கிவிட்டது.

“இந்தப் புத்தகங்களை விட்டெறிஞ்சுபோட்டு வேலைக்குப் போ”என்றாள்.
“சாப்பிடவும் வாடகைக்கும் காசிருந்தால் போதாதா அம்மா?”

வீடு விற்ற பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு அந்த வட்டியில் சீவனம் போய்க்கொண்டிருந்ததை நித்திலா அறிந்திருந்தாள்.

அம்மாவின் முகம் கடுகடுத்தது. அவள் பல ஆண்டுகளை ஒரு நொடியில் கடந்துவந்திருக்க வேண்டும். பிறகு அறையை நோக்கிப் பாய்ந்தோடினாள். திரும்பி வரும்போது அவளது கையில் புத்தகங்கள் இருந்தன. அவற்றை நித்திலாவின் காலடியில் விசிறியெறிந்தாள்.

“இந்தச் சனியன்களை விட்டொழிச்சாத்தான் நீ உருப்படுவாய்”என்று கத்தியழுதாள். பிறகு கதவைத் தடாலென்று அடித்துச் சாத்திவிட்டு வெளியில் போய்விட்டாள்.

நித்திலா காத்திருந்தாள். மாலையாகிற்று. இருண்டது. கடிகாரத்தின் ஓசை அப்படியொருநாளும் பூதாகரமாகக் கேட்டதில்லை. அம்மா அண்ணா வீட்டுக்குப் போயிருப்பாள் என்று தற்சமாதானம் செய்துகொண்டாள். தனிமை கொடிய நகங்களோடும் பற்களோடும் அருகிருந்தது. இரவு பத்துமணியளவில் அம்மா வீட்டினுள் நுழையும் காலடியோசை கேட்டது.
“நான் வேலைக்குப் போறன் அம்மா”என்று எழுந்திருந்து சொல்ல நினைத்தாள். பிறகு அந்த நாளின் கலவரத்தில் அயர்ந்து கண்ணுறங்கிப்போனாள்.

எழுந்து பார்த்தபோது விடிந்திருந்தது. வாகனங்களின் இரைச்சல் அமுங்கலாகக் கேட்டது. அருகிலிருந்த பெருமரத்திலிருந்து பறவையொன்று இடைவிடாமல் கூவியது. சமையலறையில் பாத்திரங்களின் ஓசை கேட்கவில்லை. எட்டு மணி வரை காத்திருந்தாள். வழக்கமாக தேநீர் கொண்டுவரும் அம்மா வரவேயில்லை. மெதுவாக எழுந்து வெளியில் வந்தாள். அம்மா கூடத்தில் துண்டை விரித்துப் போட்டுப் படுத்திருந்தாள். தலையணை கூட வைத்துக்கொள்ளவில்லை.
“அம்மா…”அழைத்துப் பார்த்தாள்.

இப்படியொரு கோபத்தை அம்மா அவளிடம் காண்பித்ததேயில்லை.
“உங்களுக்கு நான் வேலைக்குப் போகோணும்… அவ்வளவுதானே…?”
அம்மா சலனமற்றுக் கிடந்தாள்.

வயிற்றில் கலவரத்தின் கனத்தை உணர்ந்தாள். அருகமர்ந்து உலுப்பினாள். அம்மா அசைவற்றுக் கிடந்தாள். மெதுவாக விசும்பியழத் தொடங்கினாள். விசும்பல் கதறலாக மாறியது. யாரோ படியேறி வரும் காலடியோசை கேட்டது. சற்றைக்கெல்லாம் கூடம் ஆட்களால் நிறைந்துவிட்டது.

அவள் யாருடையவோ தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தாள். அவ்வளவு துயரத்திற்கிடையிலும், வேலைக்குப் போக வேண்டியதில்லை என்று நினைக்க உள்ளுக்குள் சந்தோசமாகத்தான் இருந்தது.

நன்றி- “காலம்” மார்ச் 2014, இதழ்



5.11.2013

தாழம்பூ






இடத்தை மாற்றிக்கொண்டால் துக்கமும் ஆறக்கூடும் என்ற நப்பாசையே, மது தன்னுடைய ஊருக்கு வரும்படி என்னை அழைத்தபோது அவளது வேண்டுகோளை ஏற்கச்செய்தது. ஆனால், எங்குபோனாலும் காயம்பட்ட மனத்தையும் கூட்டிக்கொண்டுதான் போகமுடிகிறது. புதிய இடத்தில் சற்று தணிந்தாற்போலிருந்த ஞாபகங்கள் ஓரிரு நாட்களிலேயே உள்ளுக்குள் குமுழியிடத் தொடங்கிவிட்டன. வாழ்வதான பாவனையை மற்றவர்களின் கண்களுக்கு அளிக்க முயன்று களைத்துப்போனதொரு நாளில் வெளியில் சென்றுவரலாமென்று என்னை வற்புறுத்தி அழைத்துப்போனாள் அவள்.

தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கியதுமே இனம்புரியாத அந்தரவுணர்வினால் மறுபடியும் வீட்டுக்குத் திரும்பிவிட என் மனம் அவாவியது. அவ்வூரின் குச்சொழுங்கைகள் கூட வழக்கமான வீதிகளை விட அகலமாக இருந்ததை அச்சோர்வினுக்கிடையிலும் கவனித்தேன்.  சில நூற்றாண்டுகளுக்கு முன் எவனோ ஒரு குறுநில மன்னனின் காதலி அங்கு வாழ்ந்ததாக மது சொன்னாள்.

குடிமனைகளுக்குச் சற்று தொலைவில் எந்தக் காலத்திலோ ஆறு ஓடிய தடம் வெள்ளைவெளேரென மணல்வெளியாய் நீண்டு கிடந்தது. வழியில் இருந்த கோவிலில் நித்திய பூசை நடப்பதன் சாயல்கள் இல்லை. கருங்கற் சுவர்களில் வெளவால்கள் முட்டிமோதித் திரிந்தன. கோபுரக்கூண்டுக்குள்ளிருந்த புறாக்கள் உக்கும் உக்கும் என்றன. ஆங்காங்கே நீளமும் அகலமுமான திண்ணைகளுடன்கூடிய, கூரை தாழ்ந்த வீடுகள் இடிந்து கிடந்தன. வயதானவர்களில் சிலர் கோடையின் வெம்மைக்கஞ்சி திண்ணைகளில் அமர்ந்திருந்தார்கள். இளைஞர்கள் அவ்வூரில் வாழ்வதற்கான அடையாளங்களே இல்லை. இறந்தகாலத்தின் கண்களால் உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சிறிய ஊர், புழுங்கிக்கொண்டிருந்த மனதின் வெறுமையை இன்னுமின்னும் விசிறியது. அந்த அனுபவத்திற்குப் பிறகு வெளியில் செல்ல மது என்னை அழைத்தபோதெல்லாம் மறுத்துவந்தேன்.

தனித்து விடப்பட்ட பொழுதுகளில் ‘நான் ஒரு முட்டாள்’என்ற நினைவு அடியாழத்தில் இருந்து மேலெழுந்து வந்து வதைத்தது. கடந்த நாற்பத்தெட்டு நாட்களில் பல நூறு தடவைகள் அப்படி நினைத்தாயிற்று. அவனுடைய நினைவு வந்தபோதெல்லாம் கண்களில் நீர் தளம்பிற்று. நாட்பட்டானபிறகு அந்தக் கண்ணீரின் ஊற்று, துயரமாக இருக்கவில்லை; அவமானமாக இருந்தது. ‘இப்படிப் போய் ஏமாறுவாயா…?’என்று கண்ணாடியைப் பார்த்துக் கேட்டேன். ஒரு தடவை கண்ணாடியை கைகளால் குத்தவும் செய்தேன்.

மது வெளியே போயிருந்தாள். தனது தோழியொருத்தியின் வீட்டிற்குச் சென்று வரலாமென்று என்னை அவள் அழைத்தபோது மறுத்துவிட்டேன். தனித்திருப்பதற்கான விருப்பமும் தனிமை அளிக்கும் நிராதரவான மனநிலையும் எனக்குள் ஒருசேர இயங்கின. முன்பெனில் தனிமையென்பது அவனது ஞாபகங்களை மீட்டுவதாக இருந்தது. பைத்தியக்காரத்தனமான சுகம். அல்லது, காதலிக்கும் பெண்களாலும் ஆண்களாலும் சுகமென்று நம்பப்படுவது. முன்பே சொன்னதுபோல, அவனுக்கும் எனக்குமான உறவு அறுந்துபோய் நாற்பத்தெட்டு நாட்களாகிவிட்டன. தனது அழைப்புகள் துண்டிக்கப்படுமென்று தெரிந்தே தொலைபேசியில் கூப்பிட்டான். அதையொரு சடங்குபோல வெகு கிரமமாகவும் நேர்த்தியாகவும் முன்பே திட்டமிட்டிருந்ததுபோலவும் செய்தான். அவனுடைய குற்றவுணர்வுக்குப் போடும் தீனியே அதுவென அறிந்திருந்தேன். தொலைபேசி அழைப்புகளால் என்னுடனான உறவை முடிவுக்குக் கொண்டுவரமுடியாத நிலையில் களைத்துப்போனவனாக நேரில் வந்தான். துயரப்படுவதான பாவனையோடு தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தான். ஏமாற்றத் துணிபவர்களுக்கு துயரப்படத் தெரியாதென்று சொல்லி அனுப்பிவிட்டேன். நூலிலிருந்து விடுபட்ட பட்டம்போல அவன் அன்று தன்னை உணர்ந்திருக்கலாம்.

நானோ உறங்கிக்கொண்டிருந்தபோதும் மனவலியோடு இருந்தேன் என்பதை கண்விழித்து எழுந்தபோதெல்லாம் உணர்ந்தேன். காலத்தை நகர்த்துவது ஒன்றே உடனே செய்யக்கூடியதாகத் தோன்றியது. வாகைப்பட்டியிலோ காலம் ஆமையென ஊர்ந்துகொண்டிருந்தது.

மதுவின் தாயார் உள்ளறையில் வெறுந்தரையில் சேலையை விரித்துப்போட்டு உறங்கிக்கொண்டிருந்தார். மதியத்தின் வெக்கை அவரை அசந்து தூங்கப் பண்ணியிருந்தது. வேம்புகளைச் சுற்றி கிளிகள்  கீச்சிட்டுக்கொண்டிருந்தன. மற்றபடி அமைதி. முன் திண்ணையில் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியொரு ஊரில் அப்படியொரு ஆளற்ற வேனல் தெருவை முன்னொருகாலம் பார்த்துக்கொண்டிருந்ததான ஞாபகம் ஓடியது. சில நாட்களாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துண்டு துண்டான எண்ணங்கள் மனதுள் சுழன்றுகொண்டிருந்தன. அப்படி நான் சிந்திக்கிறேன் என்று அறிந்திருந்தது மேலும் அச்சத்தை அளித்தது.

நீரடியில் கிடக்கும் பொருட்களாய் எண்ணற்ற பிம்பங்கள் உள்ளுக்குள் அசைந்தன. சோம்பிக் கிடந்த தெருவில் இறங்கினேன். காற்றில் அனல் இருந்தது. வெயில் மேகங்களுக்குள் மறைந்தும் தோன்றியும் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. கோடை மழையொன்று தரையிறங்குவதன் முன்னான சாயலைக் கொண்டிருந்தது தெரு. வழியில், தெற்கு நோக்கி உள்ளிறங்கிய கருங்கற்தளம் பாவிய சாலையைப் பார்த்தேன். இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்தன. அதை நோக்கி  ஈர்க்கப்படுவதை உணர்ந்தபோது அந்தச் சாலையில்  நடந்துகொண்டிருந்தேன்.

ஒரே சாயலைக் கொண்ட நான்கைந்து சிறிய வீடுகளைத் தாண்டியதும் அந்த மதிற்சுவர் தொடங்கியது. வழக்கத்தைவிட உயரமான அந்த மதிலின் மேல் கூரிய முனையுடைய கம்பிகள் செருகப்பட்டிருந்தன. நடக்க நடக்க முடிவுறாமல் நீண்டுகொண்டிருந்த அந்தச் சுவர் பெரிய இரும்புக் கதவொன்றில் முடிந்து மறுபுறமாக நீண்டு சென்று எங்கோ கண்ணுக்கெட்டாத தொலைவில் முடிந்தது. கதவுக்குள் இரும்பினால் வனையப்பட்டிருந்தன யானைகள். அவற்றின் தும்பிக்கைகள் பல்திசைகளிலும் பரந்து இரும்புச் சதுரத்தை அடைத்துக்கொண்டிருந்தன. இரட்டைக் கதவுகள் பிணைக்கப்பட்டிருந்த தூண்கள் ஒவ்வொன்றும் மூன்றடிக்குக் குறையாத அகலம். இடதுபக்கத் தூணுக்கும் மதிற்சுவருக்குமிடையிலிருந்த வெடிப்பில் எந்தப் பறவையின் எச்சமோ செடியாகத் துளிர்விட்டிருந்தது. உயிர்ப்பின் மினுமினுப்போடு அசைந்துகொண்டிருந்த அந்தத் துளிருக்கும் மழைப்பாசி படிந்து காலத்திற்கு இரையாகிக்கொண்டிருந்த மதிலுக்கும் இடையில் முரணின் அழகு கூடியிருந்தது. இரட்டைக் கதவுகளை துருவேறிய பூட்டொன்று இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தது. ஆனால், அது பூட்டப்பட்டிருக்கவில்லை. பேராவல் உந்த அதை விடுவித்தேன். மெல்லிய ஓசையெழ ஓராள் நுழையும்படியாக இரும்புக்கதவு திறந்துகொண்டது. அந்தச் சிறிய இடைவெளிக்குள் என்னை நுழைத்தபோது திரும்பிப் போய்விடும்படியாக மனக்குறளி எச்சரித்தது. நானோ மரணம் வந்து அழைத்தாலும் அதன் விரல்களைப் பிடித்துக்கொண்டு போய்விட ஆயத்தமாயிருந்தேன். அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருந்தேன். என் கசப்பே என்னைச் செலுத்தியது.

உள்நுழைந்ததும் திகைத்துப் போய் நின்றுவிட்டேன். பெருமரங்கள் நிறைந்த காட்டினை ஒத்திருந்தது அந்த இடம். ஏதோவொரு பறவை விட்டுவிட்டு வினோதமான ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தது. பிராணிகளின் மெல்லிய அரவங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. முன்பொருகாலம் இருபுறமும் மரங்களடர்ந்த பாதையொன்று நடுவில் இருந்திருக்கவேண்டும். பாதை சிறுத்து ஒற்றையடிப்பாதையாகி அதுவும் மெலிந்து புற்களால் மூடுண்டிருந்தது. அதன் முடிவில் காலம் விட்டுச் சென்ற ஞாபகமாய் அந்த அரண்மனை உயர்ந்து நின்றது. உயிர்ப்பின் அசைவுகள் அற்ற கற்கூடமாயிருந்த அதை நோக்கி யாராலோ செலுத்தப்படுபவள் போல போனேன். அரண்மனையை நெருங்கியதும் ஒருகாலத்தில் தோட்டமாயிருந்ததென ஊகிக்கும்படியான முற்பகுதி புதர்மண்டிக் கிடந்ததைக் கவனிக்க முடிந்தது. மேலும் முன்னோக்கி நகர்ந்தபோது நீண்டு பருத்த பாம்பொன்று அடர்ந்த புதர்களுக்குள் வழிந்தோடி மறைந்தது. அப்படியொன்றும் மரணத்தை நான் விளைந்திருக்கவில்லை என்பதை அந்தக் கணம் உணர்ந்தேன். அங்கு நிற்பதன் விபரீதம் உறைக்க, திரும்பிச் செல்லக் காலெடுத்தேன். அப்போது அந்தக் குரலைக் கேட்டேன். முதலில் மெல்லிய கமகமாகச் சுழன்று வந்தது. பிறகு வார்த்தைகள். அந்த மொழி புரியவில்லை. ஆனால்… அந்தக் குரல்.. உயிரைத் திருகித் திருகிப் பிடுங்குகிற குரல். விம்மி விம்மி அழத் தூண்டுகிற தாபம் பொருந்திய குரல். குரல் வந்த திசையில் திரும்பியபோது, செடிகொடிகளுக்கு நடுவில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்.

முதலில், அந்தப் பெண்ணின் இடுப்பைத் தாண்டி நீண்டு அடர்ந்திருந்த கூந்தலில் இருந்த தாழம்பூக் காட்டைப் பார்த்தேன். அவ்வளவு மலர்களை அவள் அள்ளிச் சூடியிருந்தாள். என்னை நோக்கித் திரும்பியவளின் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துபோனேன். அப்படியொரு பெண்ணை என் வாழ்நாளில் சந்தித்திருக்கச் சாத்தியமேயில்லை. ஆனால், அவள் யாரையோ எனக்கு ஞாபகப்படுத்தினாள். மாநிறமாயிருந்தாள். ஒரு துளிச் சதை உபரி இல்லா தேகத்தில் சிலைகளில் மட்டும் பார்க்கக்கூடிய நேர்த்தி. எத்தனை முழச்சேலையோ அவளைச் சுற்றிச் சுற்றிப் படர்ந்திருந்தது. மார்க்கச்சை மேலுடலை இறுக்கிப்பிடித்திருந்தது. கண்கள் தெளிந்த வானத்தின் நிறம்… கருவிழிகளிலோ துயரம் படிந்திருந்தது. பார்க்கப் பார்க்கச் சலிக்காத பெண்ணாயிருந்தாள் அவள். அவள் கன்னங்களில் கண்ணீர்த்துளிகள்…பாறையிலிருந்து நதி சரிந்தோடி வருவதைப் போலிருந்தது. நான் ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறேன் என்று அந்நேரம் தோன்றியது. கண்களைத் துடைத்துக்கொண்டு என்னைப் பார்த்தாள்.

“ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?”

வழக்கமான பேச்சுவழக்கு எனக்கு மறந்துபோய்விட்டது. இன்றைக்கு எல்லாமே அதிசயமாக இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.

தாழம்பூவும் உழுந்தும் கலந்த மணம் அவளிலிருந்து கமழ்ந்துகொண்டிருந்தது. அந்தக் கணம் எனக்குள் ஒரு வினோதமான ஆசை கிளர்ந்தது. அவளைக் கட்டியணைத்து முத்தமிட விரும்பினேன். ஏதோவொரு ஜென்மத்தில் தீராத காதல் என்னை அங்கு அழைத்து வந்ததாக நான் நம்பத்தொடங்கினேன். ஆனால்… நான் ஒரு பெண்…

“உன்னைக் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்கள்”என்றாள் அவள்.

நல்லவேளையாக அவள் தமிழில் பேசினாள். ஆனால்… வேறொரு மொழியில் பாடிக்கொண்டிருந்தாளே…
ஆக, அவளுக்கு என் மனதில் ஓடும் எண்ணங்களைப் படிக்க முடிகிறது. இன்றைய நாளை அதிசயத்திடம் ஒப்படைத்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். சாதாரண வாழ்வின் ஏமாற்றத்திலிருந்து தப்பிக்க ஒரு கொலையை அல்லது தற்கொலையைச் செய்யும் நிலையில் இருந்த எனக்கு, இந்த அசாதாரணப் பெண் உதவக்கூடும்.

“நீ எப்படி உள்ளே வந்தாய்?”

 “கதவு திறந்திருந்தது…”

அவள் சிரித்தாள். அவள் சிரித்தபோது செடிகொடிகள் மாயம்போல அசைந்தன. ஆனால், அந்தச் சிரிப்பின் பொருளை என்னால் உணரமுடிந்தது. ‘திறந்திருக்கும் வீடுகளினுள்ளெல்லாம் நுழைந்துவிடுவாயா?’என்பதன்றி அந்தச் சிரிப்புக்கு வேறென்ன பொருளிருக்க முடியும்?

“இது உன்னுடைய இருப்பிடமா? எவ்வளவு பெரிது!”என்றேன்.

“ஆம்…. இந்த அரண்மனையை நீ பார்க்க விரும்புகிறாயா?”என்று கேட்டாள் சிரித்தபடி. அவள் சிரிக்கும்போதெல்லாம் தாழம்பூ வாசனை எழுந்தடங்கியது. என் கண்களிலிருந்த வியப்பு அந்தக் கேள்விக்கு அவளைத் தூண்டியிருக்கவேண்டும்.

அந்தக் கணம் அவள் எங்கே அழைத்தாலும் போகத் தயாராக இருந்தேன். எனக்கு அவளது அருகாமையில் இருந்தாலே போதுமென்றிருந்தது. பதிலேதும் சொல்லாமல் அவளைப் பின்தொடர்ந்தேன். புதர்களுக்குள் சரசரவென்று ஊரும் சத்தம் கேட்டது. அங்கு பாம்புகளாலும் விஷஜந்துகளாலுமான ஓருலகம் இயங்கிக்கொண்டிருந்தது. ஒருகணம் என்னுடைய பைத்தியக்காரத்தனத்தைக் குறித்து அஞ்சினேன். விசித்திரங்களையும் மாயங்களையும் உள்ளடக்கிய நெடிய மதிற்சுவர்… அதனிலும் மாயவசீகரத்தோடு தோன்றுகிற இந்தப் பெண்… நான் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என் முட்டாள்த்தனத்தை மேலுமொரு முறை நிரூபித்துக்கொண்டிருக்கிறேனா…?

தரையிலிருந்து சில அடிகள் உயரத்திலிருந்தது அந்த அரண்மனையின் நுழைவாயில். படிகளில் ஏறி அகல் விளக்கினைத் தாங்கிய பதுமைகள் செதுக்கப்பட்ட கனத்த கதவுகளினூடே என்னை அழைத்துச் சென்றாள். அங்கு மனிதர்கள் வசிப்பதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லை. சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே செப்புப் பதுமைகள் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி நின்றிருந்தன. அவற்றில் காலம் பச்சைக் களிம்பை ஏற்றியிருந்தது. உத்தரத்திலும் சுவர்மூலைகளிலும் ஒட்டடை படிந்து போயிருந்தது. காலடி பட்டு தூசி கலைந்த இடங்களில், தரை செஞ்சாந்தால் மெழுகப்பட்டு வழுவழுவென்றிருந்ததைக் காணமுடிந்தது. கன்னத்தை தரையில் அழுத்தி வைத்துக்கொண்டு அங்கேயே படுத்துவிடத் தூண்டியது குளிர்ச்சி. வெளியில் அனலெறிந்துகொண்டிருக்கையில் இந்த இடம் மட்டும் நதியின் மேலிருப்பது போல குளிர்ந்தது. அந்த அரண்மனையின் மனிதர்களுக்கு வேட்டையின்பாலிருந்த காதலை வெளிப்படுத்தின சுவர்களில் அச்சுறுத்தியபடி தொங்கிய மிருகங்களின் தலைகள்.

“எத்தகைய வாழ்வு!!!”வியந்தபடி நடந்தேன்.

நடக்கும்போது ஒன்றைக் கவனித்தேன். அந்தப் பெண்ணின் நிழல் தரையில் விழவேயில்லை. என்னுருவம் மட்டும் தலைகீழாக நடந்துகொண்டிருந்தது. முதல்முறையாக அவளை அஞ்சினேன். ஒரேசமயத்தில் என்னை ஈர்க்கவும் அச்சுறுத்தவும் செய்பவளின் பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். கேட்கலாமென்றால், வழியிலிருந்த ஊஞ்சலில் தாவியேறிவிட்டிருந்தாள். தரையை உந்திப் பறந்தாள். நிமிர்ந்து பார்த்தபோது வெறும் ஊஞ்சல் அந்தரத்தில் நின்றது. அவளைக் காணவில்லை. பதறிப் போனேன். அங்கிருந்து வெளியேறினால் போதுமென்று தோன்ற, சுற்றுமுற்றும் பார்த்தேன். கதவு எங்கேயுமில்லை. அந்தக் கூடம் சுற்றவர சுவர்களால் மூடப்பட்டிருந்தது. மெதுவாக மிக மெதுவாக சுவர்கள் என்னை நெருங்கி வருவதை உணர்ந்து அலறினேன். சதைகள் நசுங்கி எலும்புகள் நொறுங்கி குருதி வெளியேறி மூச்சுத்திணறி இறந்துபோகவா இங்கு வந்தேன்… பிரார்த்தனையைப் பிதற்றத் தொடங்கியபோது அவள் மீண்டும் அங்கு தோன்றினாள்.

“நான் போக வேண்டும்”ஏறத்தாழ மன்றாடினேன்.

அவளோ சிரித்தாள். எனது இறைஞ்சுதல் அவளது செவிகளை அடையவேயில்லை. அந்த அரண்மனையின் அறைகள் சமதளத்தில் இருக்கவில்லை. எனது கைகளைப் பற்றி சற்றே உயரத்திலிருந்த கூடத்திற்கு அழைத்துப்போனாள். அந்தத் தொடுகையில் எனது பயம் அழிந்தது. அவளுடைய கைகள் மார்கழி விடிகாலையில் தண்ணீரைத் தொடுவதைப் போல குளிர்ந்திருந்தன. அவள் என்னை அழைத்துச் சென்ற திசையில் கதவு இருந்தது.

“உன் பெயர் என்ன…?”

“தாழம்பூ”

அந்தப் பெயரைக் கேட்டு வியப்படையவில்லை. ஏற்கெனவே அறிந்து, காலநீட்சியில் மறந்திருந்த பெயரை ஞாபகப்படுத்திக்கொள்வதுபோலவே தோன்றிற்று.

அவள் என்னைக் கூட்டிச் சென்ற கூடத்தின் சுவரில் மூன்று ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. முதலாவது ஓவியத்திலிருந்தவர் பெரிய மீசையும் உறுத்துப் பார்க்கும் விழிகளும் அரசர்களுக்கேயுரிய உடையலங்காரத்தோடும் இருந்தார். இடுப்பிலிருந்து தொங்கிய வாள் பாதம் வரை நீண்டிருந்தது. அவர் நின்றிருந்த தோரணையில் அச்சமின்மையும் அதிகாரமும் வெளிப்பட்டது. இரண்டாமவருக்கு பெண்மையின் சாயல் மிளிரும் முகம். மெல்லிய மீசை. உதடுகளும் மெல்லியவையே. அரச வஸ்திராபரணங்களைக் கழற்றிவிட்டால் அவர் அன்றாடம் தெருவில் காணும் மனிதர்களில் ஒருவராகிவிடுவார். ஆனாலும், அவரது விழிகளில் இறுமாப்பு குடிகொண்டிருந்தது. மூன்றாவது ஓவியத்தில் இருந்த இளைஞனின் விழிகளில் எவரையும் ஈர்க்கக்கூடிய சாந்தமும் தெளிவும் துலங்கின. அவன் தாத்தாவின் கம்பீரத்தையும் கூடுதல் வசீகரத்தையும் கொண்டிருந்தான். அவன் கண்கள் என்னைப் பார்த்தன. இமைத்து ஒரு கணம் புன்னகைத்தாற் போல தோன்றியது.

“அழகாயிருக்கிறார்”என்றேன்.

தாழம்பூ விருட்டென்று என்னை நோக்கித் திரும்பினாள். இருண்டிருந்த அந்தக் கூடத்தில் அவளுடைய கண்கள் நெருப்புத் தணலென ஒளிர்ந்தன. கோபமிகுதியால் அவை பச்சையாக மாறியிருந்தன. அக்கணம் நானொரு பாம்பின் அருகில் நின்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன். என் உடல் நடுங்கத் தொடங்கிவிட்டிருந்தது. அங்கிருந்து ஓடிவிடுவதே புத்திசாலித்தனம் என்று என் உள்ளுணர்வுக்குத் தோன்றியது. என் முகத்தைப் பார்த்ததும் அவள் கண்களிலிருந்த கனல் மறைந்தது. என் அச்சத்தைப் போக்கடித்து நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் மீண்டும் என் கைகளைப் பற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றாள். அந்த விரல்களில் மார்கழியின் குளிர்ச்சி அகன்றிருந்ததை உணர்ந்தேன். அரண்மனையெங்கும் புறாக்களின் அமுங்கிய குரல் கேட்டுக்கொண்டிருந்தது.

தாழிடப்பட்டிருந்த அறையொன்றின் கதவை அரையடிக்குக் குறையாத நீளமுடைய திறவுகோலால் திறந்தாள் தாழம்பூ. அதுவரை அவளிடம் இல்லாதிருந்த அந்தத் திறவுகோல் திடீரென எங்கிருந்து தோன்றியது என்ற கேள்வி எனக்குள் எழுந்து அடங்கிற்று. அகலமான பஞ்சணையுடன் கூடிய கட்டில் ஒன்று அந்த அறையினுள் கிடந்தது. விதிவிலக்காக அந்த அறை மட்டும் சிறுதூசியும் படியாமல் சுத்தமாக இருந்தது. படுக்கை விரிப்பிலிருந்து, அப்போதுதான் துவைக்கப்பட்டதான சுகந்தம் வீசிற்று. ஐந்தாறு பேர் சேர்ந்தாலும் நகர்த்த முடியாத கனமுடைய தேக்குமர எழுதுபலகையில் சுவடிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதில் சுவடியொன்று விரித்த நிலையில் கிடக்கக் கண்டேன். யாரோ ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தபோது அவசர வேலையாக பாதியில் விட்டுச் சென்றதுபோலிருந்தது அந்தக் காட்சி. ஆவல் தாளாமல் அருகில் சென்று வாசித்தேன்.

“கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதல ரகலக் கல்லென் றவ்வே”


 “குறுந்தொகை”என்றாள் தாழம்பூ.

அவளை நிமிர்ந்து பார்த்தேன். நான் நினைத்துக்கொண்டிருந்த பெண்ணில்லை இவள் என்ற எண்ணம் உள்ளுக்குள் தோன்றி மறைந்தது.

 “நிறையப் படிப்பாயா…?”

ஆமெனத் தலையசைத்து கூச்சத்துடன் புன்னகைத்தாள். எதிர்பாராத காட்சிகளால் எனக்குள் தணிந்திருந்த காய்ச்சல் அந்தத் தலையசைப்பிலும் புன்னகையிலும் மீண்டும் அனலெறியத் தொடங்கிற்று. அவளை நெருங்கி அணைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் முன்னிலும் அதிகமாய்க் கிளர்ந்தது. எனக்குள் புயலென அடித்துக்கொண்டிருக்கும் அந்த உணர்வின் பெயரறியாது அதில் சிக்குண்டு கிழிபடுபவளாக இருந்தேன்.

தாழம்பூ அந்தப் பஞ்சணையில் சென்று அமர்ந்தாள். அப்போது அவள் கண்களில் நீர் துளிர்த்திருந்தது. விசித்திரங்களுக்கு முடிவேயில்லை என்று நினைத்துக்கொண்டேன். படுக்கை விரிப்புகளை தன் நீண்ட விரல்களால் நீவியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தாள். அங்கிருந்த பாத்திரத்தில் தண்ணீர் நிறைந்திருக்கிறதா எனக் குலுக்கிப் பார்த்தாள். இருந்தது போலும். பிறகு அறையைப் பூட்டிவிட்டு என்னையும் தன்னையும் மறந்தவளாக அந்த அறையிலிருந்து வெளியேறி வேகவேகமாக நடந்துபோனாள். அவளுடைய மூச்சு பாம்பின் சீறலாக மாறியிருந்தது. அவளை நெருங்குவதற்கு நான் ஓடவேண்டியிருந்தது. எந்நேரமும் விபரீதத்திற்குக் காத்திருந்தாலும், ஏதோவொரு காரணத்தினால் அவள் எனக்குத் தீங்கிழைக்க மாட்டாள் என்று உள்ளுணர்வு நம்பியது. அந்த நம்பிக்கையில் தயங்கித் தயங்கி எனது கேள்விகளை உதிர்க்கவாரம்பித்தேன்.

“அந்த அறையில்தான் நீங்கள் உறங்குவீர்களா?”

“ஆம்…”

“நீ அவரைக் காதலித்தாயா?”

அவள் நடப்பதை நிறுத்தி என்னைப் பார்த்துச் சிரித்தாள். உலகத்தின் கசப்பையெல்லாம் உருத்திரட்டி வழிந்த புன்னகை!  ‘இவ்வளவும் பார்த்தபிற்பாடு இது என்ன கேள்வி’என்பதுபோல என்னை உறுத்து நோக்கினாள். பிறகு, அயர்ச்சியோடு ஆமென்பதாகத் தலையசைத்தாள்.

“அவருடைய குதிரையின் குழம்படி ஓசை கேட்டதுமே எனது இதயம் தரையில் விழுந்து துடிக்க ஆரம்பித்துவிடும்.”

“அவரும் உன்னை....?”

“ஆமாம். நேசிக்காமலா என்னை இப்படியொரு அரண்மனையில் கொண்டுவந்து சேர்த்தார்?”

இதைச் சொல்லிவிட்டு உரத்துச் சிரித்தாள். சிரிப்பொலியில் அதிர்ந்த புறாக்கள் சிறகடித்துப் பறந்தன. ஏதேதோ நினைவுகள் அலைபுரளும் முகத்தோடு சில நிமிடம் கழிந்தது.

பிற்பாடு அவள் என்னை அழைத்துச் சென்ற இடம் ஒரு கலைக்கூடம். அதன் மூலையில் யாழொன்று சாத்தி வைக்கப்பட்டிருந்தது. அருகில்போய் அதன் தந்திகளை வருடினாள். சாத்தப்பட்டிருந்த நிலையிலும் அதிலிருந்து எழுந்த சுநாதம் தாழம்பூவுக்கு அதிலிருந்த தேர்ச்சியை உணர்த்திற்று. விசாலமான அந்தக் கூடத்தை கலைஞர்களின் ஓவியங்களும் சிற்பங்களும் அலங்கரித்தன. அவள் அங்கிருந்த இருக்கையொன்றில் அமர்ந்தாள். அவளது தோரணை அந்த அரண்மனையின் மகாராணி தான்தான் என அறிவித்தது. அவளுடைய அழகே அந்தச் செருக்குத்தான் எனத் தோன்றியது. என் வயதொத்தவள்தான். ஆனால், முன்னர் பார்த்த, பழகிய எந்தவொரு மானுடத்தியின் சாயலோ நடத்தையோ அவளிடமிருக்கவில்லை.

இறந்தகாலத்துள் மூழ்கின அவள் விழிகள்.

“அந்நாட்களில் இந்த இடம் எப்படி இருந்ததென்கிறாய்… நீ வரும் வழியில் பார்த்தாயே சிறிய வீடுகள்… அவற்றிலும் இந்த அரண்மனையின் பின்புறத்திலுள்ள வீடுகளிலும் பணியாட்கள் தங்கியிருந்தார்கள். அவர் இங்கு வரும் நாட்களில் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு இந்த அரண்மனை ஒளிபொருந்தியதாக மாறிவிடும். பாடல்கள் ஒலிக்கும். சதங்கைகள் கலீர்கலீரென்கும். நான் பாடவாரம்பித்தால்… இதோ இந்த இருக்கையில் சாய்ந்து நீள்விழிகளை மூடிக்கொண்டுவிடுவார். என் பாடலே அவரை இங்கு அழைத்துவந்தது. ஈற்றில்…”

சில நிமிடங்கள் இறந்தகாலத்துள் முழுமையாக அமிழ்ந்துபோனாள்.

“நீ அழகாகப் பேசுகிறாய். ஈற்றில் என்னவாயிற்று?”

“எதிர்காலம் குறித்த எங்களுடைய கனவுகளைக் கேட்டிருந்த இந்த அரண்மனையின் சுவர்களில் செவிகளைப் பதித்துக் கேள். என்னைக் காட்டிலும் அவை அழகாகப் பேசக்கூடும்.”

மதியம் சரிந்து மாலையாகிவிட்டிருந்தது. மதுமிதா என்னைத் தேடிக்கொண்டிருப்பாள் என்ற எண்ணம் எழுந்தது.

“என்னைத் தேடுவார்கள். நான் போகவேண்டும்”என்றேன் மெதுவாக.

“போகத்தான் வேண்டுமா…?”அது தனிமையின் குரலாக ஒலித்தது. என்னால் அந்தக் குரலை மிதித்துவிட்டுச் செல்லமுடியவில்லை.

“உனக்கு ஒரு இடத்தைக் காட்டுகிறேன். என் பின்னே வா…”

அவள் துள்ளியெழுந்தாள். விரித்த கருங்கூந்தல் பின்புறங்களில் படிந்தசைய நடந்தவளைப் பின்தொடர்ந்தேன். அவளைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை என்னுள் மிகுந்து வந்தது. ஒரேயொரு தடவை அந்தத் தாழம்பூ வாசனையை நெருங்கி உள்ளிழுத்து எனக்குள் நிறைத்துக்கொள்ள வேண்டும். காலாகாலங்களுக்கும் நான் அதனுடன் வாழ்ந்துவிடுவேன். அந்த உதடுகளில் ஒரேயொரு முத்தம்… அதன் வெம்மை போதும் என் ஞாபகங்களைக் குளிர்த்த.

நீண்ட தூரம் அவளோடு நடந்தபிறகு அரண்மனையின் பின்பகுதியை வந்தடைந்திருப்பதை உணர்ந்தேன். கீழிறங்கப் படிகள் இருந்தன. அவை பின்புறத்தில் அமைந்திருந்த தோட்டத்திற்கு இட்டுச்சென்றன. இருள் சூழவாரம்பித்திருந்தது. ‘எங்கே அழைத்துச் செல்கிறாள்?’என்ற கேள்வியுடன் அவளைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். அச்சம் அகன்றுவிட்டிருந்தது. அதனிடத்தில் வியப்பும் திகைப்பும் காதல் போல ஓருணர்வும் நிறைந்திருந்தன. வானத்து நிலவு, வெள்ளியிலிருந்து தங்கமாக உருமாறியிருந்தது. அந்த மெல்லிய இருளும் காற்றும் நிலவொளியும் அவளது அருகாமையும் என்னை வேறொருத்தியாக மாற்றியிருந்தன. அந்நேரம் யாராவது பாடிக் கேட்கவேண்டும் போலிருந்தது. புற்களால் மூடப்பட்டிருந்த பாதையில் அநாயாசமாக அவள் நடந்துபோனாள்.

செடிகொடிகள் மீது நிலவினொளி படர்ந்து இலைகள் பளீரிட்டுக்கொண்டிருந்தன. இயற்கையின் வாசனையை காற்று அள்ளிவந்தது.

தாழம்பூ ஓரிடத்தை அடைந்ததும் நின்றாள். அதுவொரு கேணி. குறுக்கு விட்டம் முப்பதடிக்குக் குறையாது. உள்ளிறங்க நாற்புறமும் படிகள் இருந்தன. கரைகளில் நீர்ப்பாசி பயிரெனப் படர்ந்திருந்தது. எட்டிப் பார்த்தேன். ஆழமறியாதபடிக்கு இருளின் கருமையில் உறங்கிக்கொண்டிருந்தது கேணி. நீரைக் குறுக்கறுத்து நீந்திய சிறுமீன் கூட்டங்கள் அவ்விரவில் நில வெள்ளிகளென மினுங்கின. அடங்கியிருந்த அச்சம் மேலெழ ஆரம்பித்தது. கடைசியில் இந்த மாயப்பெண்ணின் கைகளால் நீர்நிலையில் தள்ளப்பட்டு அநாதரவாக இறந்துபோவதுதான் என் விதியோ என்று துக்கித்தேன்.

“அன்று இறுதியாக நாங்கள் சந்தித்துக்கொண்டோம்”கேணியின் கரைக் கட்டில் அமர்ந்தபடி சொன்னாள்.

“இறுதியாகவா…?”

“ஆம்… இந்த உலகத்தைப் பொறுத்தளவில் இறுதி. எனக்கு முடிவற்றது.”சிரித்தாள். அது சிரிப்புப் போலவே இல்லை.

“அரயத்தி அம்மன் சந்நிதியில் பெண் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்தார். என்னைப் போல சாதாரண பெண்ணில்லை அவள்… குறுநில மன்னனொருவனின் மகள்… அன்று அவர் குதிரைகூட பட்டுக் குஞ்சம் கட்டியிருந்தது.”

கசப்பும் ஏமாற்றமும் நிறைந்து வழிந்தன வார்த்தைகளில். நிலவை நிமிர்ந்து பார்த்துப் பெருமூச்செறிந்தாள். அந்தப் பெருமூச்சு என் நெஞ்சைச் சுட்டது.

இப்படி எத்தனை இரவுகளை நான் கழித்திருந்தேன்! தென்னோலைக் கீற்றுக்கள் அசைவதை விடிய விடியப் பார்த்துக்கொண்டிருந்து கழித்த அவ்விரவு… தூரத்தில் கடலலைகள் வாவாவென இரைந்து என்னை அழைத்தபடியிருக்க விடிகாலையில் கண்ணயர்ந்தது…

“என் விழிகளை எதிர்கொள்ளக் கூசினார். அடிக்கடி இமை தாழ்ந்த அவருடைய விழிகள் என்னிடம் மன்னிப்பை யாசித்தன. திரும்பிச் செல்வதற்கு அவசரப்பட்டார். அன்றிரவு மட்டும் அங்கு தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக் கேட்டுக்கொண்டேன்.”

“தங்கினாரா? நீ அவரை மன்னித்தாயா?”

“ஆம். அன்றிரவு பிறைநிலவு சுடர்ந்துகொண்டிருந்தது. அவர் தன் தந்தையைத் தன்னால் எதிர்க்க முடியாதென்றார். நான் அவருடைய காதலியாக நீடித்திருக்கலாம் என்றார். மன்னிப்புக் கேட்டு மன்றாடிய உதடுகளை என் உதடுகளால் மூடினேன். இனிமேல் தூலமாக அடையவே முடியாத அந்த உடலை நான் அடைந்தேன். எந்தக் கண்களைப் பார்க்கவியலாமல் பகலில் வெட்கம் பிடுங்கித் தின்றதோ அந்தக் கண்களை வெறியோடு முத்தமிட்டேன்.”

அந்த வார்த்தைகளை நான்தான் உச்சரித்துக்கொண்டிருந்தேன். அவனுடைய திருமணப் பத்திரிகையில் இருந்த பெண்ணின் பெயர் ஞாபகம் வந்தது.

இருள் முற்றாக மூடிவிட்டது. இருளில் தாழம்பூவின் கண்கள் மினுமினுத்துக்கொண்டிருந்தன. மது என்னைக் காணாமல் பதைத்துப்போயிருப்பாள் என்ற கவலை அடியாழத்திலிருந்து மிதந்து வந்தது.

“பிறகுகொருநாளும் நீ அவரைப் பார்க்கவேயில்லையா…?”

“பார்த்தேன். பார்த்துக்கொண்டிருக்கிறேன்..”என்று சொல்லியபடி கேணியின் இருளாழத்தை நோக்கிப் புன்னகைத்தாள். என்னுடல் சில்லிடுவதை நான் உணர்ந்தேன். இப்போது அங்கிருந்து தப்பித்துச் செல்லும்படி ஒரு குரல் காதுக்குள் ஒலிக்கக் கேட்டேன். அது ஒரு ஆணின் குரல்.

“ஓடிவிடு… ஓடிவிடு…”அந்தக் குரல் என் செவிகளில் நடுக்கத்தோடு கரகரத்தது.

“ஆழத்தை நோக்கிச் சரிந்துசெல்வது இனிய அனுபவம்”என்றாள். நான் அச்சத்தோடு அவள் கண்களை நோக்கினேன். அவளுடைய கண்களிலிருந்த துயரம் கரைந்திருந்தது. அவள் பின்னாலிருந்த செவ்வரளியைப் பார்த்தேன். அவளுடைய உடலினூடாக செந்நிற அரவத்தின் தலையென அம்மலர் அசைந்துகொண்டிருந்தது.

“எத்தனை தடவைதான் என்னை நீ கொல்வாய்?”என்றேன்.

அந்தக் கேள்வி என்னிலிருந்து புறப்பட்டதை உணர்ந்தபோது திடுக்கிட்டேன். என்ன அதிசயம்! அந்தக் கேள்வியை உதிர்த்தது என் உதடுகள்தாம்!

தாழம்பூ விசும்பி விசும்பி அழுதாள். அந்த இரவுக்கு மட்டும் இதயம் இருந்திருந்தால் அது கிழிந்து குருதி கொட்டியிருக்கும்.

நான் வெளிவாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். என்னை அவள் தடுத்து நிறுத்தவில்லை. தாளவியலாத வேதனையொன்று திடீரெனக் கிளம்பி என்னை வாட்டியது. அங்கே அவளைத் தனியாக விட்டுவிட்டுப் போக என்னால் முடியவில்லை. சில நிமிடங்கள் முன்னகர்வதும் பின்னோக்கிச் செல்வதுமாகக் கழிந்தன. ஈற்றில் நான் ஆற்றாமையின் கண்ணீரோடு அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வெளியேறினேன். இருளில் அவள் ஒரு சிலையென நின்றிருந்தாள்.

வெளிவாயிற் கதவைக் கண்டுபிடித்து வெளியேறியபோது மதுவைப் போலொரு பெண் வந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். மதுவேதான்! எனது உடல் நடுங்கிக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது.

“உன்னைத் தேடியே வந்தேன்”என்றாள்.

“என்ன இது? இவளும் இன்று இயல்பில் இல்லை”என்று நினைத்தேன்.

பிறகு, அரண்மனையை நோக்கித் தயங்கியபடியே ‘தாழம்பூ’ என்றேன். கண்களிலிருந்து உதிர்ந்த நீர்த்துளிகள் அக்கருங்கற் தளத்தில் விழுந்து சிதறின.

“நான்தான் அவள்”என்றாள் மது.

நான் அவநம்பிக்கையோடு மதுவைப் பார்த்தேன். அவள் எனது கையைப் பற்றி என்னை இறுக்கிக்கொண்டபோது அவள் மீது தாழம்பூ வாசனையடித்தது.

நாங்கள் அவ்விடத்திலிருந்து வேகவேகமாக அகன்றோம். சற்று தொலைவில் போனதும் மெல்லத் திரும்பிப் பார்த்தேன். சிறிய படைவீடுகளும் அரண்மனை மதிலும் சுவடில்லாமல் மறைந்திருந்தன. பெருங்காடொன்று கருங்கற் சாலையை மூடியபடி சரசரவென நகர்ந்துவந்துகொண்டிருந்தது.


நன்றி: காலம் (கனடாவில் வெளிவரும் இலக்கிய சஞ்சிகை)