12.24.2009

ஆனந்தவிகடனில் எனது கவிதைகள்

குறுக்கித் தறித்து
இதை எழுதிக்கொண்டிருக்கிறபோது
‘காட்டுப்பூ போல மலரவேண்டும் கவிதை’
என்ற வரி உள்ளோடிச் சுடுகிறது
காற்றில் தனித்தசையும் காட்டுப்பூவை
நின்று கவனிக்க எவருமில்லை
எல்லோருக்கும்
வேண்டித்தானிருக்கிறது வெளிச்சம்!
--

புளியமரங்கள் கிளையுடல் வளைத்து
கூடல் நிகழ்த்தும் சாலையின் வழியே
மிதந்துசெல்கிறார்கள்
கார்காலத்தில் மானசியும் ஜான்சனும்
இளவேனிலில் மானசியும் மௌலியும்
ஆகஸ்டின் கொதிவெயிலில்
மானசியும் தாமோதரனும்
ஒன்றிற்கொன்று குறைவிலாத
புதிர்ப்பெண்ணின் காதலின்மேல்
படர்ந்துகொண்டிருக்கிறது வெயில்
பொழிந்துகொண்டிருக்கிறது மழை.
--

ஊழல்சாந்து குழைத்த கட்டிட இடிபாடுகளினின்று
தப்பிப்பிழைத்த பால்புட்டியைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாள் தாயொருத்தி.
சட்டத்தில் ஒரு கொலையின் விலை
ஒரு மாத வாடகையிலும்
மலிவானதெனச் சொல்லியபடி
காற்சட்டைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டிருக்கிறான்
பதினெட்டு வயதுப் பையனொருவன்
எப்போதும்
வெட்டரிவாள் சின்னத்துக்கே
விழுந்துகொண்டிருக்கிறது ஓட்டு

நீங்கள் விரைந்துகொண்டிருக்கிறீர்கள்
வண்ணத்தொலைக்காட்சியை வாங்க.
---

‘உன்னை மறந்தால் இறப்பேன்’என்றவனை
நீண்ட நாட்களின் பின்
நேற்றொரு கூட்டத்தில் பார்த்தேன்
கருநீலமும் சிவப்பும்
அழுத்தமாய் மேலும் கீழும் ஓடும் மேற்சட்டையும்
காக்கிக் கலர் காற்சட்டையும்
தோள்தொங்கும் ஜோல்னாப்பையுமாய்
அழகாகத்தானிருந்தது
ஆவி!
--

ஒரு சொல் உதிர்க்கும்வரை தேவதை
கண்ணிறங்கிக் கலந்தால் மானுடத்தி
முயங்கிக் களித்துச் சலித்தபின்னே ராட்சசி
தாபித்துத் தொடர்ந்தாலும்
காதலித்துக் கரைந்தாலும்
மணந்து புணர்ந்தாலும்
உனக்கென்ன
நீ மட்டும் எப்போதும் தேவகணம்!

----
கொலைகாரர்கள் நீதிமான்களாக இருக்கும் தேசத்திலும்
அடித்துப் பொழிகிறது மழை
பட்டாம்பூச்சிகள் வண்ணங்களை உதிர்த்துவிடவில்லை
குழந்தைகள் சீவிக்கிறார்கள்
உனது காதல் ஆன்மாவிலிருந்து புறப்பட்டு வருவதாக
நீ கண்ணீர் வழியச்சொல்லிக்கொண்டிருக்கிறாய்.
---

கணவனைப் பின்னிருத்தி
இருசக்கர வண்டியை ஓட்டிச்செல்லும்
தாட்டியான பெண்ணை
வினோதரசம் மிதக்கும் விழிகளால் ஏறிடுகிறீர்கள்.
மதுவிடுதிக்குள் சுவாதீனமாக நுழையும்
இளம்பெண் குறித்த சித்திரமும் உவப்பானதாக இல்லை.
‘அவள்’ எழுதும் கெட்டவார்த்தைகளை மட்டும்
அவளை மறந்துவிட்டு வாசிக்கமுடிவதில்லை.
நண்பரின் வீட்டில்
அதிசயமாக அரசியல் பேசுகிற பெண்
சமையலறைக்குள் எழுந்துபோகும்வரை
மனஅவச மௌனம் காத்துப்
பின் விட்ட இழையிலிருந்து
விவாதத்தைத் தொடர்கிறீர்கள்.

அடைபடலுக்குப் பழக்கப்பட்ட விலங்குகள்
கைமறதியில் திறந்திருக்கும் கூண்டுக் கதவை
விசித்திரம் படர்ந்த கண்களால்
வெறித்துக்கொண்டிருக்கின்றன.
----

அவசரமாய் கவிதையொன்றைத் தயாரிக்க வேண்டியிருக்கிறது
அனுப்பிவைக்கக் கேட்டவரின் அனுக்கமுகம்…
வாசிப்பவள்-ன்
கைவண்டி இழுத்துக் களைத்தவனா
சமையல் விடுமுறையில்
கூடத்தில் குப்புறக் கவிழ்ந்திருந்து படிப்பவளா
இலக்கிய நுணுக்குக்காட்டி அணிந்தவனா
சன்னல்களும் பூட்டப்பட்ட அறையினுள்
புத்தகங்களோடு மட்டும் வசிப்பவனா
இக்கவிதை
திறந்த இடுப்பருகில் இடம்பெறுமா
கொலைபடுகளத்தைச் சித்தரிக்கும் கட்டுரைக்கு
எதிர்ப்பக்கத்தில் வெளிவருமா
இறக்குவதா ஏற்றுவதா
இருண்மைசெய்வதா
வெளிச்சம் விழுத்துவதா
ஏதேதோ கேள்விக்கொக்கி பிடித்திழுக்கப் பிடித்திழுக்க
பொறாமல் முகம்சிணுங்கி
தெருவிறங்கிப் போகிறதே என் கவிதை
என் செய்வேன்
இல்லாத என் தெய்வமே!
----

வாக்குப்பெட்டிகளுக்காக
பணப்பெட்டிகள்
பணப்பெட்டிகளிலிருந்து
ஆயுதப்பெட்டிகள்
ஆயுதப்பெட்டிகளிலிருந்து
சவப்பெட்டிகள்
சவப்பெட்டிகளிலிருந்து……...
எந்தப் பெட்டியை
எந்தப் பெட்டி
முதலில் குட்டி போட்டதென்று
உங்களுள் எவராவது
சொல்லமுடியுமா நண்பர்களே?
--

மாடியை ஒட்டிய புத்தக அறையினுள்
எப்படியோ சேர்ந்துவிடுகின்றன சருகுகள்…
வாசிப்பினிடை தலைதூக்கினேன்
செல்லமாய் சிணுங்கி
ஒன்றையொன்று துரத்திச் சரசரத்தன
கட்டிலுக்கடியில் பதுங்கின மேலும் சில
பெருக்க மனதின்றி விட்டுவைக்கிறேன்
ஈரமனைத்தும் உறிஞ்ச
வெயில் வெறிகொண்ட இக்கொடுங்கோடையில்
எந்த வடிவிலேனும்
இந்த மாநகர வீட்டினுள் இருந்துவிட்டுப்போகட்டுமே
மரம்.

நன்றி: ஆனந்தவிகடன்

உயிர்மையின் புத்தக வெளியீட்டு விழாக்கள்


இன்று டிசம்பர் 25ஆம் திகதி மாலை ஐந்தரை மணிக்கு சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் (எல். எல்.ஏ. நூலகம்), 12 புத்தகங்கள் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்படுகின்றன.அவற்றுள் எனது குறுநாவலான 'கானல் வரி்'யும் ஒன்றாகும்.தனித்தனியாக அழைப்பு அனுப்பமுடியவில்லை।நண்பர்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ளும்படி அன்போடு கேட்டுககொள்கிறேன்।
சனிக்கிழமை २६ 12. 2009 மாலை ரவிக்குமாரின் நான்கு புத்தகங்களையும் உயிர்மை வெளியிடுகிறது.
ஞாயிற்றுகிழமை மாலை (27டிசம்பர்) கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை நூலானது குமாரராஜா முத்தையா அரங்கம் ((செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி) எம்.ஆர்।சி.நகர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது.
12.20.2009

போதிமரம்
என்னை விறுக்கென்று கடந்த
உன் விழிகளில்
முன்னரிலும் முள்ளடர்ந்திருந்தது
உன் உதட்டினுள்
துருதுருக்கும் கத்திமுனை
என் தொண்டைக்குழியை வேட்கிறது.

மாறிவிட்டன நமதிடங்கள்
துடிப்படங்கும் மீனாக நான் தரையில்
துள்ளி நீர் கிழித்தபடி நீ கடலில்.
துரோகி-தியாகிச் சட்டைகள் அவிழ்ந்துவிழ
சற்றுமுன்பேஅம்மணமானோம்.
இடுகாட்டில் குளிர்காயும் குற்றவுணர்வில்
எரிகிறது எரிகிறது தேகம்

நம் அட்டைக்கத்திகளில்
எவரெவரின் குருதியோ வழிகிறது
நாம் இசைத்த பாடல்களைப் பிரித்துப் பார்த்தேன்
ஒழுகிற்று
ஊரும் உயிரும் இழந்த
பல்லாயிரவரின் ஒப்பாரிகள்

வன்மம் உதிர்த்து
வந்தொருக்கால் அணைத்துவிட்டுப் போய்த்தொலையேன்
மரணம் என்ற போதிமரத்தின் கீழ்
நிழலில்லை நீயுமில்லை நானுமில்லை
வதைமுகாம் மனிதர்களின்
கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்கிறது

தோற்றவரின் வேதம் என்பாய்
சரணாகதி என்பாய்
போடீ போ!
இனி இழக்க எவரிடமும் எந்த மயிருமில்லை!


நன்றி: காலம் (கனடா)

12.16.2009

உடல்


ஏழு மணிக்கே தெரு ஓய்ந்துவிட்டிருந்தது. திறந்திருந்த பல்கனிக் கதவின் வழியாக குளிர்காற்று சிலுசிலுவென்று உள்ளே வந்தது. மரங்களில் மிச்சமிருந்த மழை தெருவிளக்கின் ஒளியில் வெள்ளிமணிகளாக மினுங்கியது. அவ்வப்போது கிளர்ந்து அடங்கும் காற்றில் சிணுங்கி உதிரும் மழைத்துளிகளைப் பார்த்தபடியிருந்தாள். மாலையானதும் கவியும் தனிமைமூட்டம் அவளை மிகமெதுவாய் மூடவாரம்பித்தது.
உறவுக்காரக் கல்யாணம் ஒன்றுக்கு அவளைத்தவிர எல்லோரும் திருப்பதிக்குக் கிளம்பிப் போயிருந்தார்கள்.

“நீயும் வாயேன்”

அவள் மறுத்துவிட்டாள். அம்மா அழைத்ததும்கூட ஒப்புக்குத்தான். விசேட நிகழ்வுகளில் இயல்பாக உலவ அவளால் முடிவதில்லை. எதிர்பாராத தருணத்தில் யாருடையவோ வார்த்தை முள் நெருக்கென்று மனசில் ஏறிவிடும். முதுகில் கண்கள் தைப்பதாய் உணர்வாள். போகும் இடங்களில் எல்லாம் பதில் தெரிந்த கேள்விகளாய்த்தான் கேட்கிறார்கள்.

“கொஞ்சம் அனுசரிச்சுப் போயிருக்கலாமில்ல?”

“போன்லயாவது பேசுறாரா?”

“பிரிஞ்சு ரெண்டு வருசத்துக்கு அதிகமாயிருக்கும் போலிருக்கே?”

அவள் மௌனமாகப் புன்னகைப்பாள். உள்ளுக்குள் நெருப்பின் தழல் அசையும். கன்னம் காதெல்லாம் சுடும். கேள்வி கேட்டுக்கொண்டிருப்பவரைத் தாண்டி கூட்டத்தினுள் புகுந்து செருகிக்கொண்டுவிடும் கண்கள். உதட்டுக்குள் சொற்கள் துடிதுடிக்கும். ‘உங்க வீட்டுக்காரர் கூட அன்னிக்கு ஆட்டோவில யாரோ ஒரு பொண்ணோட நெருக்கமா உட்கார்ந்து போனாரே’என்று ஒரு தடவை உறவுக்காரப் பெண்ணொருத்தியைப் பட்டென்று கன்னத்திலடித்தாற்போலக் கேட்டுத் திணறடித்திருக்கிறாள். கூட்டத்தில் எங்கிருந்தாலும் அம்மாவின் கண்கள் அவள்மீதே பதிந்திருக்கும். அதில் கொஞ்சம் பதட்டத்தின்; சாயல் கலந்திருக்கும். பெரும்பாலும் அவள்தான் வந்து மதுவை மீட்டுக்கொண்டு போவாள்.
“இனிமே என்னை எங்கயும் கூப்பிட வேணாம். நான் வரலைன்னா வரலை” வீட்டுக்கு வந்ததும் கத்துவாள்.

அறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொள்வாள்। அறை என்பது அவளளவில் மிகப்பெரிய விடுதலை. அதனுள் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றினுள் கேள்வி கேட்காத மனிதர்கள் இருக்கிறார்கள். அவனைப் பிரிந்துவந்ததற்காக அவள் என்றுமே வருந்தியதில்லை. நிதானமாக எடுத்த முடிவுதான் அது. விழுந்துவிடாமல், தட்டுப்படும் யாவற்றின்மீதும் நெருடிக்கொண்டிருந்த தோலை வெட்டியகற்றிய நிம்மதி. சிதைந்து இரத்தமும் சதையுமாய்த் தொங்கும் காலை முழங்காலோடு அளவாகத் துணித்துக் கட்டுப்போட்ட ஆசுவாசம். காலின் கீழ் கொஞ்சநாள் காற்றுலவும். மருகி மருகி கைதடவும். பிறகு பழகிவிடும். அம்மாவின் கண்ணீர், அவளை மீள வரவழைக்கும் அவனுடைய தந்திரங்கள், தம்பியின் முகத்தொங்கல் எதுவும் அவளை அசைக்கவில்லை. ஒன்றும் கேட்காமலே அப்பா புரிந்துகொண்டார். அவருக்கு அவளைத் தெரியும்.

“நான் சம்பாதிக்கிறேன். சாப்பிடுறேன். நான் இங்க தங்கிக்கிறது உங்களுக்குக் கஷ்டமாயிருந்தா சொல்லுங்க. ஹாஸ்டல் பார்த்துப் போயிடுறேன்”

விளக்கு அணைத்ததும் அப்பிக்கொள்ளும் இருள் போன்றதே தனிமை. பழக்கப்படுத்திக்கொண்டால் பயமில்லை என்பதை அவள் நாளாக நாளாக உணர்ந்தாள். காலையில் எழுந்திருந்து காப்பியோடு சேர்த்து வேம்பின் பசுமையையும் பருகும் சுவையை புகுந்த வீடு அவளுக்குத் தந்ததேயில்லை. கிச்கிச்சென்று பறவைகள் சப்திக்கும் ஓசையைக் கேட்டபடி விடிகாலையில் படுத்திருக்க முடிந்ததில்லை. ஐந்து மணிக்கெல்லாம் மாமனார் சுப்ரபாதத்தை அலறவிட்டுவிடுவார். அவருக்கு விழிப்பு வந்துவிட்டால் வீடு மொத்தமும் விழித்துக்கொண்டுவிடவேண்டும். அப்படியொரு ஆங்காரம். மதுமிதா அங்கு வாசுதேவனின் மனைவி. அறைக்குள் இருக்கும்வரைதான் வாசுதேவன் மதுமிதாவின் கணவன். அறையை விட்டு வெளியில் வரும்போது புதிதாக ஒரு முகமூடி முளைத்திருக்கும். ஒருவேளை அதுவே சொந்த முகமாக இருக்கலாம்.

யாராவது வந்தால் பேசிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. கீழ்வீட்டில் குடியிருக்கும் பாரதி… அவளின் குழந்தை மிருதுளா… ஷாம்சன்....

அப்பா-அம்மா தம்பியுடன் திருப்பதி போயிருப்பது ஷாம்சனுக்குத் தெரிந்திருக்கும். ஷாம்சன் தம்பி நரேனின் சிநேகிதன். தம்பியைவிட இரண்டு வயது பெரியவன்.

“ஏண்டா வயசுப் பசங்களையெல்லாம் வீட்டுக்குக் கூட்டிட்டு வர்ரே?”ஷாம்சனைக் கூட்டிவந்த அன்று சமையலறைக்குள் வைத்து அம்மா கிசுகிசுத்து முறைத்தாள்.

“அவன் நல்ல பையன். அவனுக்கே மூணு அக்கா இருக்கு”தம்பியின் குரலில் எரிச்சல் வெடித்தது. ‘அவங்க வீட்டுக் கொல்லையிலேயே மூணு பசு இருக்கு’என்ற தொனி அதில் இருந்ததாக நினைத்துச் சிரித்துக்கொண்டாள். அம்மாவிடம் சொன்னால் முறைப்பாள். ‘எடுத்ததற்கெல்லாம் குதர்க்கம்’என்பாள்.

“கிறிஸ்டியனா?”
“ஆமாம்மா…எதுக்கு இவ்ளோ கேள்வி?”

ஷாம்சனுக்குப் புத்தகப் பைத்தியம்। மதுவிடம் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அவன் கேட்கும் ஆங்கிலப் பாடல்களை அவளிடம் கொடுத்துக் கேட்கச்சொல்வான். முதலில் அந்த உச்சரிப்பு பிடிபடவில்லை. வாத்தியங்கள் அலற ஒரு குரலும் பல்குரலுமாய் கூடச்சேர்ந்து அலறுகிறாற் போலிருந்தது. அதன் பின்னிருந்த விம்மலுக்குப் பழகினாள். எப்படிப் பாடுகிறாள்கள்… ன்கள்… நரம்புகளுக்குள் இசை துடிதுடித்து நகர்வதுமாதிரி…

இசை. புறவுலகின் கயமைகளை அழித்துவிடுவதாக அவள் உணர்ந்தாள். அந்தக் குரல்களுக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து கரைந்துபோய்விட ஏங்கினாள். தேம்பியழத் தோன்றும் சிலசமயங்களில். உலகத்தையே விட்டெறிந்து வானத்தில் ஏறிக் கலந்துவிட வேண்டும் போலிருக்கும். ஒரு இசைக்குறிப்பாக, பறவையாக, மேகங்களுள் தேங்கியிருக்கும் மழையினுள் கண்ணீர்த்துளியாக…

“நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக்கூடாது மது?”ஷாம்சன் ஒருநாள் கேட்டான்.

“எனக்கு சுதந்திரமா இருக்கணும்”

“அப்படி ஒருத்தரைப் பண்ணிக்கிறது…”

“இழுக்கும்வரை காலறியாது புதைகுழி… கல்யாணமும் அப்பிடித்தான்”அவள் சிரித்தாள்.
அவள் சிரித்தால் பூ உதிர்வது மாதிரி இருப்பதாக நினைத்தான். மிக மென்மையாக அளவெடுத்துத் தொடுத்தாற்போல எப்போதும் சிரிப்பாள். குறைவதுமில்லை. கூடுவதுமில்லை. அவளை இழந்து வாழ முடியுமென்றால் அவன் மூடனாகத்தான் இருக்கவேண்டுமென்று தோன்றியிருக்கிறது. சிநேகிதனின் அக்கா என்பதைக் கண்களுக்குச் சொல்லிக்கொடுத்தும் அவை புரிந்துகொள்வதாக இல்லை. செழுமை பூசிய கன்னங்கள், உயிர்ப்பின் ஒளி சிந்தும் கண்கள், சற்றே பெரிதான, சுருக்கங்கள் நிறைந்த கீழுதடு, ஒரே சீராக இறங்கும் நைட்டியினுள் அனுமானிக்கத் தேவைகளற்ற வளைவுகள், இழுத்துக் கட்டியது போலிருந்த தோலின் இறுக்கத்தில் ஆரோக்கியம் பளபளத்தது.

ஆனால், ஷாம்சனுக்கு மூன்று சகோதரிகள் இருந்தார்கள்। அவனுடைய திருமணம் மூன்று உடன்பிறந்தாள்களின் தலைவிதியை நிர்ணயிப்பதாக மட்டுமே இருக்கமுடியும். நூறு பவுன் நகை ஐம்பது இலட்சம் ரூபா ரொக்கம் என்பது ஷாம்சனின் அம்மாவுடைய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு என்று அவளிடமே சொல்லியிருக்கிறான். அந்தச் சமயத்தில் அவன் முகத்தில் ஆற்றாமை பொங்குவதை அவதானித்திருக்கிறாள். நரேனுடன் வீட்டுக்குள் நுழைந்ததும் மேசையில் சாப்பாட்டைத்தான் தேடுவான். அம்மா கையில் வேலையாக இருந்தால் தானாகவே எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுவான். அவனுக்குச் சொந்த ஊர் பாலக்காட்டுக்கு அருகில் ஒரு கிராமம். வேலைக்காக சென்னையில் அலுவலக நண்பர்களோடு அறை எடுத்துத் தங்கியிருந்தான். நாளாக நாளாக ‘அப்பா அம்மாவை பிரிந்து வந்திருக்கிற பிள்ளை’என்பதில் அம்மாவுக்கும் வாஞ்சை பெருகத்தான் செய்தது. விசேடமாக என்ன செய்தாலும் அவனுக்கென்று தனிக் கிண்ணத்தில் எடுத்துவைப்பாள்.

மழை மீண்டும் பெய்யவாரம்பித்தத. கல்யாணத்துக்குப் போனவர்கள் எத்தனை மணிக்குத் திரும்பிவருவார்கள் என்று தெரியவில்லை. தெருவை அவள் வெற்றுப்பார்வையாகப் பார்த்துக்கொண்டு நின்றாள். இம்மாதிரி மழை மாலைகளில் ஏதோவொன்று குறைவதுபோல தோன்றும். தவறவிடப்பட்ட குழந்தைபோல மனம் அந்தரித்து அலையும். படுத்திருக்கும்போது கடைவிழியோரம் கண்ணீரின் சில்லிப்பை திடீரென உணர்ந்து திடுக்கிடுவாள். அம்மாதிரி சமயங்களில் புத்தகத்தைக் கையிலெடுத்துவைத்துக்கொண்டு அதனோடு மல்லுக்கட்டிக்கொண்டிருப்பாள்.

ஷாம்சனின் மோட்டார்சைக்கிள் படபடத்து வந்து கதவருகில் ஒதுங்குவது தெரிந்தது। ஹெல்மெட்டைக் கையில் எடுத்துச் சுழற்றியபடி படியேறி வந்தான். அவள் அலுவலகத்தில்கூட அநேக ஆண்கள் அப்படிச் செய்வதை அவள் பார்த்திருக்கிறாள். ஒன்றேபோல செயல்களையுடைய ஆண்கள்… ஏன் பெண்களுந்தான்.

அவளுக்குள் சின்னதாய் மகிழ்ச்சி போல ஒன்று எட்டிப்பார்த்தது. வயிற்றுக்குள் இருள் திரவம் சுரந்தாற்போலுமிருந்தது. ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள். அவன் வெகு சுவாதீனமாக உள்ளே வந்தான்.
“இன்னும் வரலையா?”கேட்டான்.
“இல்லைடா”
“சாப்பிட்டாச்சா?”
“ம்….”
அவன் சாப்பாட்டு மேசையை ஆராய்ந்துவிட்டு ஃபிரிட்ஜைத் திறந்துகொண்டிருந்தான்। பரந்த அவனது முதுகை முதன்முறையாகப் பார்ப்பதுபோல பார்த்தாள். பின்னாலிருந்து அணைத்துக்கொள்ள வேண்டும்போலிருந்தது. அவன் ஒரு பழத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கத்தியைத் தேடிச் சமையலறைக்குப் போனான்.

‘வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்டு வேண்டுமென்றே வந்திருக்கிறானா?’என்ற கேள்வி ஓடியது.

அவன் பழமும் கத்தியுமாக சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்தான். அவள் யன்னல் வழியாக மழையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முன்வீட்டுக் குழந்தைகள் மழையில் நனைந்தபடி கப்பல் விட்டுக்கொண்டிருந்தார்கள். அது தள்ளாடித் தள்ளாடி நகர்ந்து படக்கென்று கவிழ்ந்தது. தாய் உள்ளேயிருந்து அழைத்தபடி இருந்தாள். இறங்கமுடியாத மழை அவள் கண்களில் மின்னியது.


“இங்க வந்து உட்காரேன்”கூப்பிட்டான். அவன் அவ்வளவு சுவாதீனமாக ஒருமையில் அழைத்தது அவளுக்குச் சந்தோசமாக இருந்தது.
அருகில் அமர்ந்து பார்க்கும்போது அவன் இன்னும் பெரியவனாகத் தோற்றமளித்தான். நீண்ட கழுத்தில் தொண்டை முடிச்சு சின்னப் புடைப்பாய் தெரிந்தது. அவனது நீளமான விரல்களில் நகங்கள் அளவாகக் கத்தரிக்கப்பட்டிருந்தன. அவை இளஞ்சிவப்பு நிறத்தில் பளபளவென்றிருந்தன. கழுத்தை அடுத்து உரோமங்கள் சுருண்டிருந்த மார்பு தெரிந்தது. கண்கள்… அவன் ஏன் இப்படிக் கண்களுக்குள் பார்க்கிறான்?
அவன் தொண்டையைச் செருமிக்கொண்டான்.
“சளி பிடிச்சிருக்கா?”
ஆமாமென்பதாய் தலையசைத்து மெலிதாகப் புன்னகைத்தான். பெரிய உதடுகள். அவளுக்குள் மழை சூடாகப் பெய்துகொண்டிருந்தது. உடல் கொதித்தது. உடலில் தண்ணீர் மொத்தமும் வற்றிவிட்டாற்போல தொண்டை காய்ந்து கிடந்தது.
‘இவன் ஏன் இங்கு வந்தான்?’என்று எரிச்சலாகவும் இருந்தது.
அவன் தன்னை இழுத்துச் சுவரோடு சாய்த்து வைத்து முத்தமிடுவதாக ஒரு கற்பனை ஓடியது. முரட்டுத்தனமாக அவளது கழுத்தில் பதியும் ஷாம்சனின் பெரிய உதடுகள்… தலை கலைந்து கண்கிறங்கித் தவிக்கும் அவள்…
‘போயிடு! போயிடு!’உள்ளுக்குள் அவள் அலறினாள்.
மார்புகள் அழுத்தும் கைகளுக்கு யாசித்தன। தன்மேல் படர்ந்து பரவும் உடலின் மூர்க்கத்துக்குத் தவித்தாள். அழுத்தி அழுத்தி யாராவது தன்னைக் கரைத்துவிட மாட்டார்களா என்றிருந்தது. இந்த உடலே வேண்டாம். போதும். போதும். நினைவின் ஆழத்திலிருந்து உடல்கள் மிதந்து மேலேறி வந்தன. அம்மணமான உடல்கள்… மூச்சடைப்பது போலிருந்தது. உணர்வுகள் எல்லாம் கால்களுக்கு நடுவில் ஒருங்குவிந்து வருவதாய்…

ஷாம்சன் கைகளை அவளுடையதை நோக்கி நகர்த்தியிருந்தான். அவனது கண்கள் திறந்திருந்த அவளுடைய அறைக் கதவைப் பார்த்துக்கொண்டிருந்தன. அவன் மூச்சு விடும் ஒலி அவளுக்குக் கேட்டது. அவனது உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தன. தாபம் சொட்டும் விழிகள்…
இப்போது அவன் அவளுடைய விரல்களைப் பற்றி நெரித்துக்கொண்டிருந்தான்.
“எவ்வளவு நாள் மது!”என்றான்.
“வேண்டாம் ஷாம்சன்… அவங்கல்லாம் வந்துடுவாங்க”
“இல்லை… இன்னும் அங்கேர்ந்து கிளம்பலை”
மது அவனது கண்களை நேரடியாகப் பார்த்தாள். தெருவிளக்கின் ஒளியில் பளபளத்தபடி இறங்கிக்கொண்டிருந்த மழையைப் பார்த்தாள். அவனது கைகளுக்குள் கதகதவென்று அடங்கியிருந்த தன் விரல்களைப் பார்த்தாள்.
அழவேண்டும் போலிருந்தது. உடம்பே இல்லாமல் அரூபமாகிவிட ஏங்கினாள்.
“போயிடு ஷாம்சன்”
அவன் அந்தத் தருணத்தைத் தவறவிட்டுவிடுவேனோ என்ற பதைப்போடு ஆவேசங்கொண்டவனாய் எழுந்திருந்து அவளை அணைத்தான். முகத்தை நிமிர்த்தி உதடுகளைத் தன் உதடுகளால் இறுக்கினான். அவளது மார்பில் அலைந்தது ஒரு கை.
மழை… மழை… மழை ஏன் இத்தனை சுடுகிறது?
எத்தனை கணங்கள்… யுகங்கள்… மைக்கேல் ஜோர்ஜின் ‘ஜீசஸ் ரூ எ சைல்ட்’பாடலை காதருகில் பாடுவது யார்?
“அம்மா என்ன நினைப்பாள்? தம்பி என்ன சொல்வான்? அப்பா…?”
‘தேவடியா… இதுக்குத்தானாடி?’மாமியார் கோபவெறியோடு காதருகில் கிசுகிசுத்தாள்.
மது ஷாம்சனை உதறி எறிந்தாள். அவன் அலமலந்து திகைத்தான். அவளைப் பற்ற மீண்டும் மீண்டும் நீட்டிய கைகளை அவள் தள்ளித்தள்ளி விட்டாள்.
“போயிடு”
“இது தப்பில்லை”
அவளுக்கு அழுகை வரும்போலிருந்தது.
“போயிடுங்கிறேன்ல…”அதட்டினாள்.
“இவ்வளவு படிக்கிற… இதெல்லாம் தப்பில்லை மது…”அவனது வார்த்தைகள் அந்தச் சந்தர்ப்பத்தோடு ஒட்டாமல் கேவலமாகத் தரையில் உதிர்ந்தன.
“அதனால என்னடா? நான் இங்கதான வாழ்ந்தாகணும்”
அவன் ஹெல்மெட்டைக் கையில் எடுத்தபடி கடைசி முறையாக இறைஞ்சும் பார்வையை எறிந்தான்.
“நான் கதவைப் பூட்டணும்”
“பூட்டிக்கோடி…”அவன் கதவை உதைத்து வெளியேறினான்। மழைத்துளிகளைக் கிழித்துக்கொண்டு சாலையில் சீறி மறைந்தான்.
அவள் தன்னறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்.யாரையோ பழிவாங்குவதுபோல விரல்களுள் நினைவைச் செலுத்தி ஆவேசத்தோடு இயக்கவாரம்பித்தாள். மது அயர்ந்து உறங்க ஆரம்பித்தபோது மழை நின்றிருந்தது.


நன்றி:உயிரெழுத்து

12.10.2009

தாய்நாட்டிலிருந்து தப்பிவருவது…


இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்களின் புகைப்படங்களை (சஞ்சிகையொன்றில் கட்டுரை எழுதுவதற்கென சேமிக்கப்பட்டது) முதல் வேலையாக மடிக்கணினியிலிருந்து அழித்தேன். தலை சிதைந்து, கழுத்தின் கீழான உடற்கூழ் மட்டும் எஞ்சிய குழந்தையின் புகைப்படத்தையும், சிதறுண்ட மேலும் பல உடல்களையும் அழித்தேன். சில நிமிடங்கள் தயங்கியபிறகு, குறிப்புப் புத்தகத்தைப் பயணப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியில் வைத்தேன். மொஹம்மூத் தார்வீஷ், அஸ்வகோஸ், சேரன் முதலானோரின் கவிதைத் தொகுப்புகளை எடுத்துச் செல்வதும் உகந்ததாகத் தோன்றவில்லை. கசப்போடு அவற்றைத் தூக்கிப் போட்டேன். மேற்குறித்த வேலைகளின் பின், இலங்கைக்குப் பயணப்பட ஓரளவு தகுதியுள்ளவளாக என்னை ஆக்கிக்கொண்டுவிட்டதாக உணர்ந்தேன். இலங்கை அரசினால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஊடக சுதந்திரத்தில் அவ்வளவு நம்பிக்கை!

விமானம் தரையிறங்கிக்கொண்டிருந்தபோது, என்றுமில்லாத பயமும் துயரமும் மனதைத் தின்னத்தொடங்கின. மூண்டெரியும் தீயிலிருந்து இலட்சக்கணக்கான குரல்கள் வெடித்துக் கிளம்பி வானத்தை நோக்கிப் பிரலாபிப்பதான கால மயக்கம் சூழ்ந்தது. ‘எங்களது… எங்களதும்…’என்ற உரிமை தளர்ந்து, இராணுவ ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் அந்நிய நாடொன்றினுள் பிரவேசிப்பதான கலக்கத்தோடு உள்நுழைந்தேன். விடுதலைப் புலிகள் அகற்றப்பட்ட (பேரினவாதத்தின் வார்த்தைகளின்படி) நிலத்தில் பிரவேசிக்கிறோம் என்பதானது, நிராதரவான தனிமையை மனதளவில் தோற்றுவித்திருந்தது. அகதி முகாம்களுள் அடைபட்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களது- பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் காணக்கிடைத்த- புகைப்படங்கள் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. முள்வேலிக்கு அப்பால், துயரம்-ஏக்கம்-கோபம்-பயத்தில் இறுகிய விழிகளுடன் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், இழப்புகளில் தரித்துவிட்டாற்போன்ற விழிகளுடன் முதியவர்கள் அக்கணத்தில் நினைவில் மின்னி மறைந்தார்கள். விமான நிலையத்தினுள் அடையாள அட்டைகளுடனும், சந்தேகக் கண்களுடனும் தங்களை இனங்காட்டிக்கொள்ளாமலே - இனங்காட்டிக் கொடுக்க அலைந்த சிலரைக் காணமுடிந்தது.

ஜேர்மனியில் எங்களோடு விமானமேறிய சுற்றுலாப் பயணிகளில் அநேகரை குடிவரவு-குடியகல்வு வரிசையில் காணவில்லை. இலங்கையின் ‘மயான அமைதி’யை அவர்கள் நம்பத் தயாராகவில்லை. இலங்கை விமான நிலையம் இடைமாறு தளமாக இயங்குவதைக் காணமுடிந்தது.

‘பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த’ மகோன்னதர்-மகாவீரர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ‘சல்யூட்’அடிக்கும் பென்னாம்பெரிய ‘கட்-அவுட்’கள் எங்களை வரவேற்க, நகரை நோக்கி விரைந்தோம். இராணுவப் படை-புடை சூழ அவர் பெருமிதம் வழிய நின்றிருந்தார். கோத்தபாய, பசில் சகோதரர்களும் அழிவில் பங்கெடுத்த மகிழ்வில் பேருருக்களாக நின்றிருந்தனர். சென்ற வழிகளில் எங்களை ‘புலிகளல்லாத தமிழர்’என்று, கடவுச்சீட்டைக் காட்டி நிரூபிக்க வேண்டியிருந்தது. நான் என்ன வேலை செய்கிறேன் என்பதில், எனது கணவர் எங்கிருக்கிறார் என்பதில், நான் எங்கே தங்கப் போகிறேன் என்பதில், எனக்கு எத்தனை குழந்தைகள் என்பதில் இராணுவத்தினர் அக்கறையோடிருந்தார்கள். “சிங்களம் தெரியுமா?”என்ற கேள்விக்கு, “தெரியும்” பதில் அவர்களுக்கு மிகத் திருப்திகரமாக இருந்திருக்கக்கூடும். “தெரியாது”என்ற பதிலை உள்ளடங்கிய மகிழ்ச்சியோடு சொன்னேன். ஆங்கிலம், அவர்களை அறியாமையின் பின்வாங்கலுள் தள்ளுவதை உணரமுடிந்தது. பிரயோகிக்கக்கூடாத இடத்தில் மந்திரத்தைப் பிரயோகித்து மாண்டவர்களைப்போல, கணப் பெருமைக்காகப் ‘படம் காட்டும்’ கடவுச்சீட்டுக்களே மரணத்திற்கான அழைப்பிதழாகவும் ஆகிவிடுவதுமுண்டு என்பதனால், எல்லா இடங்களிலும் கடவுச்சீட்டைப் பிரயோகிக்கவில்லை. இலங்கைக்குப் போகும்போது பழைய, ஓரம் நைந்துபோன தேசிய அடையாள அட்டைகளைத் தேடி எடுத்துவைத்துக்கொள்வது மிக நன்று। கொழும்பு போன்ற இடங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் அவர்களது கண்களில் கொஞ்சூண்டு போலி மரியாதையைக் கொணர, ‘ஒழி’என்ற பாவனையோடு அனுப்பிவைக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் வைத்திருந்தோரே கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அசாத்திய சாத்தியங்கள் இலங்கையில் மிகச்சாதாரணம்.

கொழும்பு மாநகரத்தில், பெரும்பாலான தமிழர்கள் வாழும் பகுதியான வெள்ளவத்தையில் துப்பாக்கி ஏந்திய பொலிசார் எந்நேரமும் காவலுக்கு இருக்கிறார்கள். எப்போதாவது இராணுவத்தினரையும் காணமுடிகிறது. அவர்களது கரும்பச்சை நிறச் சீருடையை, ஆட்கொல்லித் துப்பாக்கியை, கனத்த காலணிகளை, தொப்பிகளுக்கு அடியில் அச்சுறுத்தும் கண்களைக் கடந்து செல்கையில் ஒரு இருட்டுப் பந்து வயிற்றுக்குள் உருள்வதை உணரமுடிகிறது. அது காரணமற்ற அச்சம் போல மேலுக்குத் தோன்றினாலும், வன்னியின் குரூர நிகழ்வுகளுக்குப் பிறகு அதை காரணத்தோடு கூடிய அச்சமாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. வீதியில் செல்வோரைத் தடுத்து நிறுத்தி நெற்றிப்பொட்டை அன்றேல் இதயத்தைச் சிதறடிக்கக்கூடிய சர்வவல்லமை பொருந்திய எமதூதர்களாகவே அவர்கள் தோற்றமளித்தார்கள். அந்நிலத்தில் கொல்வதற்கான-கொன்றதற்கான காரணங்கள் வேண்டியிருக்கவில்லை. சிறு சலனத்திற்கும் விழித்துக்கொள்ளக்கூடிய மரணம், துப்பாக்கிகளின் நிழலில் அங்கே தூங்கிக்கொண்டிருக்கிறது.

இராணுவத்தினரைத் தவிர்த்து சாதாரண சிங்கள சனங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த நெகிழ்ச்சியை எப்படி விளக்குவதெனத் தெரியவில்லை. பல நாடுகளில் பல இனங்களுக்கிடையில் பல மொழி பேசும் மக்களுக்கிடையில் வாழ்ந்து நாடு திரும்புமொருவராலேயே அந்த உணர்வை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். நான் உண்மையில் அவர்களை எனது சகோதரர்களாகவே உணர்ந்தேன். அவர்களை நோக்கிப் புன்னகைக்கவும் உரையாடவும் விரும்பினேன். ‘எங்களுக்காக உங்கள் குரல்கள் ஏன் உயரவில்லை?’ என்ற கேள்வி உதடுகளில் துருத்திக்கொண்டிருந்தது. அதே சமயம், அவர்களின் கண்களில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாகத் தோன்றுகிறோமோ என்ற ஐயமும் மறுவளமாக எழவே செய்தது. ஒரு கவளம் சோற்றுக்குக் கையேந்தும் ஒரு இனமாக மாற்றப்பட்டுவிட்ட அவமானம் உள்ளுக்குள் சுட்டுக்கொண்டிருக்கவே இருக்கிறது.

கனடா, இலண்டன், இந்தியா இங்கெல்லாம் ஈழத்திலிருந்து பெயர்ந்து வந்த உறவுகள், நண்பர்கள் வாழ்ந்தாலும், அவர்களோடு பேசிப் பழகிக்கொண்டிருந்தாலும்- பிறந்த மண்ணின் வீதிகளில் நானறியாத எனது தேசத்து மக்கள் ஈழத் தமிழ் பேசிக் கடந்து செல்கையில் அதைக் கேட்கப் பேரானந்தமாக இருந்தது. சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் நெகிழ்வது எனக்கே பிறழ்நடத்தையாகத் தோன்றினும், அதிலிருந்து என்னை விலக்கிக்கொள்ள முடியவில்லை. இறுகினாற்போலும் துயருற்ற முகத்தோடு கடந்துசெல்வோருள் என்னென்ன கதைகள் புதைந்திருக்கக்கூடுமோ என அஞ்சினேன். அப்படிச் செல்லும் பெண்களின்-ஆண்களின் மகனோ மகளோ கணவனோ மனைவியோஅன்றேல் அனைவருமே போரில் இறந்திருக்கக்கூடுமென நானாகவே நினைத்துக்கொண்டேன்.

கொழும்பில் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடுகிறது। பெரும்பாலான கடைகள் எட்டு மணிக்கே அடைக்கப்பட்டுவிடுகின்றன. சில கடைகள் நிரந்தரமாகவே பூட்டப்பட்டு, நாட்டின் பொருளாதார நிலையைப் பறையறிவித்துக் கொண்டிருந்தன. இல்லாமற் போனவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் மீது அரசாங்கத்துக்கு இருக்கின்ற அச்சமோ அளவிடற்கரியது.

எங்கோ தொலைவிலிருந்தபடி அழைத்துக்கொண்டிருந்த வீட்டின் குரலை மறுபடி மறுபடி மறுதலிக்க வேண்டியவளானேன்.வன்னியிலிருந்து தப்பி- அதிசயமாக வதைமுகாமிலிருந்து மீண்ட உறவினர்கள் வீட்டுக்கு வந்து போவதும், வாழைகள் குலைதள்ளியதும், தென்னைகள் காய்த்துத் தொங்குவதும், மல்லிகை பூத்துச் சொரிவதும், பூனை மூன்றாம் தடவை கருவுற்றிருப்பதும் எல்லாம் எல்லாம் தொலைபேசி சொன்னது.

கொழும்பில் விசாரணைச் சாவடிகள் நெருங்கும்போதெல்லாம் அச்சம் எனக்கு முன்னால் போனது. ஒரு கவிதையில் எழுதியிருப்பதுபோல அவர்கள்முன் ‘கேவலமாக’ப் புன்னகைக்க வேண்டியிருந்தது. கொழும்பிலிருந்து சென்னை செல்வதற்கான விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்திற்குச் சென்ற வழியெங்கும் ஆசுவாசமாக உணர்ந்தேன். விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக அமைந்திருந்த விசாரணைச் சாவடியில் பயணப்பொதிகள் இறக்கப்பட்டு கிளறப்பட்டுவிடக்கூடாதே என்ற எனது பிரார்த்தனைக்கு, இல்லாத கடவுள் செவிமடுத்தார். பிறந்த நாட்டிலிருந்து ‘தப்பிச் செல்லும்’இழிவு, எங்கள் சகோதர்களாகிய சிங்களவர்களுக்கும் நேராதிருக்கட்டும்.
---
விசாரணைச் சாவடி

எப்போதும் நானெழுதும் கடல்போல
விரிந்த அதிகாரத்தின் பெயரால்
தெருவொன்றில் என்னை நிறுத்துகிறாய்
“உனது பெயர் என்ன…?”
எனது கடவுச்சீட்டு உனது கையிலிருக்கிறது
‘ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்’
நகுலனை நினைத்தபடி
உச்சரிக்கும் எனது பெயர்
யாருடையதோ போலிருக்கிறது

உன்னிடத்தில் துப்பாக்கி இருக்கிறது

“இங்கெதற்கு வந்தாய்?”
எனது பூர்வீகக் கிராமத்து வீட்டில்
பாக்கு மரங்கள் நிழல்விழுத்தி
குளிர்ச்சியுற்ற கிணறுளது
அதில் எனது பாட்டனின் காலடித் தடமுளதை
1914 எனும் ஆண்டுப் பதிவுளதை
பகிர்ந்துகொள்ள அஞ்சுகிறேன்

உன் சீருடை அச்சுறுத்துகிறது

கைவிரல் மடித்து எனது வயதெண்ணும்
உன்னைக் குறித்தெழும் வசவு
உதடுகளில் கத்தியெனத் துருத்துகிறது
நான் பணிவானவள்
நகங்களும் விழிகளும் பிடுங்கப்படுவதில்
எனக்கும் ஒப்புதலில்லை

“உனக்கு சிங்களம் தெரியுமா…?”‘
'சிங்களம் மட்டும்’தெரியாமற் போனதற்காக
வருத்தத்தில் தோய்த்தெடுத்த புன்னகையோடு
தாழும் தலையை இடம் வலதசைக்கிறேன்
மேலும் பெண்ணுக்குரிய நளினம் மிளிர
கேவலமாகப் புன்னகைக்கிறேன்
எனக்கு அவசரமாகப் போகவேண்டும்

நீ கேள்விகளாலானவன்
நான் இணக்கமான பதில்களாலானவள்
நன்றி சொல்லிப் பிரியும்போது
இருவருக்கும் மகிழ்ச்சியே!

ஈற்றில் எஞ்சியிருக்கின்றன
இறுகிவிட்ட சில வார்த்தைகள் என்னிடத்திலும்
வெடித்திருக்கக்கூடிய குண்டொன்று உன்னிடத்திலும்.

-தமிழ்நதி
நன்றி: அம்ருதா


11.25.2009

கார்த்திகை 26 – தேசியத்தலைவருக்கு வயது 55


வழிகள் தொலைந்துபோவதில்லை. அவை அங்கேதான் இருக்கின்றன. மனிதர்கள்தான் தொலைந்துபோகிறார்கள். அதுபோலவே வார்த்தைகளும் எடுத்துக் கோர்க்கப்படக் காத்திருக்கின்றன. நமக்குத்தான் அவற்றைச் சரிவரத் தேர்ந்தெடுக்கவும் கையாளவும் தெரிவதில்லை. மனஅவசம் புழுங்கும் இந்நாளில், தலைவர் பிரபாகரனைப் பற்றி ஏதாவது கதைக்கவேண்டுமென நினைக்கிறேன். உள்ளுக்குள் துயரப்பந்து ஒன்று உருண்டுகொண்டேயிருக்கிறது. ஏற்கவும் மறுக்கவும் முடியாத செய்தியொன்றைக் காவியபடி மனம் அந்தரித்து அலைகிறது. அதை மற்றவர்களுடன் பகிர்ந்து இறக்கிவைத்துவிட நினைக்கிறேன். கண்ணீரைச் சொற்களுக்குக் கடத்துவது அசாத்தியமாக இருக்கிறது. தொடர்ச்சியான வெறுமையின் அதலபாதாளத்துள் வார்த்தைகள் சரிந்துவிழுந்துவிட்டாற்போலிருக்கிறது.

அவர் வருடத்தின் ஒவ்வொரு நாட்களும் பேசப்படத் தகுதிவாய்ந்த மனிதரே। எனினும், இன்று அவருடைய பிறந்தநாள் என்பதனால் நான் இன்னும் அதிகமாக உந்தப்பட்டிருக்கலாம். இப்படியொன்றை எழுதுவதன் வழியாக, நான் அவரை மறந்துபோகவில்லை என்று எனக்கே நிரூபித்து எனது குற்றவுணர்விலிருந்து தப்பிக்கப் பார்க்கிறேனோ என்றுகூட எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. உண்மை யாதெனில், இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற எல்லோரைக் காட்டிலும் அவரை, நானும் என் போன்றவர்களும் நேசிக்கிறோம் என்பதுதான். ஆனால், அந்த நேசம் என் உயிரைக் காட்டிலும் சற்று குறைந்ததாக இருந்திருக்கவேண்டும். இல்லையெனில், மரங்களைக் காற்று மலர்த்திக்கொண்டிருக்கும் ஆட்களற்ற வெளியொன்றில் மண்ணிலிருந்து நிமிர்ந்த (இப்போது சிதைக்கப்பட்டிருக்கும்) கல்லறைகளின் அடியில் இப்போது நான் உறங்கிக்கொண்டிருந்திருக்க மாட்டேனா?

அழிவெல்லாம் அறியப்பட்டவையே. எழுதியும் பேசியும் விவாதித்தும் தேய்ந்தவையே. தமிழர்களின் வாழ்விடங்களைப் போலவே நம்பிக்கைகள் மண்ணோடு மண்ணாகச் சரிந்துவிட்டன. முட்கம்பி வேலிக்குள் விடுதலை முடக்கப்பட்டுவிட்டது. பெரும்பான்மை அதிகாரங்களிடம் சிறுபான்மைச் சமூகம் பிச்சையெடுக்கத் தள்ளப்பட்டுவிட்டது. வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் தொங்கிக்கொண்டிருக்கிறது ஏதிலிகளாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை. எல்லாம் தெரிந்தும், ஈழத்தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கின்றனர் சில சூதாடிகள். தலைவரின் மரணச்செய்தி உறுதிப்படுத்தப்படுவதன் முன்னதாகவே ‘பிரபாகரனின் வாழ்வும் மரணமும்’என்று புத்தகம் வெளியிட்டு வரலாற்றுச் சாதனை படைத்தது ஒரு பதிப்பகம். ஈழத்தமிழர்களின் கண்ணீரையும் குருதியையும் தங்கள் தங்கள் வீட்டுச் சோற்றில் இரசமாக்கி ஊற்றிவிடுவதில் அத்தனை அவசரம்! (டிசம்பர் கடைசியில் ஆரம்பமாகவிருக்கும் புத்தகத் திருவிழாவில் இன்னும் எத்தனை பேர் அவரது ‘மரணத்தை’க் கூவிக் கூவி விற்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்துவிடும்) ‘இதோ பிரபாகரனின் இரத்தம்… இதை வாங்கி அருந்துங்கள்; இதோ பிரபாகரனின் சரீரம் இதை வாங்கி உண்ணுங்கள்’என்ற அழைப்புகளுக்குக் காதைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ‘மௌனத்தின் வலி’என்ற பெயரில் மாபெரும் கூத்தொன்று நடந்தேறியதாக இணையச்சந்தியில் ஒரு விவகாரம் இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கிறது. கொன்றுவிட்டு அழும் ‘கொற்றவன்’களுக்கும், தன் பிழை மறைக்க, தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தித் திசைதிருப்பி வார்த்தையாடும் தில்லாலங்கடி வேலைகளுக்கும் குறைவில்லை.

மனச்சாட்சி என்றொரு சொல் இருப்பது மறந்துபோய்க்கொண்டிருக்கிறது. அறம் என்பது அழிந்துகொண்டிருக்கிறது. தார்மீகம் என்பதெல்லாம் அகராதியோடு நின்றுவிட்டது. ஒரு பொய் நெஞ்சினுள்ளிருந்து அன்றேல் மூளையிலிருந்து புறப்பட்டு தொண்டைக்குழி வழியாகப் பயணிக்கும்போதே சுடவேண்டும். அப்படிப் பார்த்தால், குருதிச் சோறு தின்னும் அரசியல்வாதிகளும், சொந்த நலன்களுக்காக இனத்தைக் காட்டி-கூட்டிக் கொடுக்கிறவர்களும், புலிகளின் கல்லறைகள் மீது நின்றபடி, ‘புலிகளால்தான் இந்தக் கதி’எனப் புலம்பும்-புதிதாகப் பரிநிர்வாணம் அடைந்த சில ஈழத்து மகாத்துமாக்களும் எப்போதோ எரிந்து கரிந்து மண்ணோடு மண்ணாகியிருக்க வேண்டும்.

நான் அவரைப் பற்றித்தான் கதைக்க நினைக்கிறேன்.ஆனால், கோபம் ஏனையவர்களைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறது. எழுதி எழுதித் தேய்ந்த வார்த்தைகளால்தான் அவரைப் பற்றியும் சொல்லவேண்டியிருக்கிறது। “அவர் மகோன்னதர். மாமனிதர். மகாவீரன். சமரசங்களுக்கு விலைபோகாதவர். களத்தில் வீழ்ந்துபோனாலும் எங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருப்பவர்.”என்பவை சாதாரண வார்த்தைகள்தாம். ஆனால், அதனுள்ளிருக்கும் நெகிழ்ச்சியும் துயரமும் எழுத்தில் கொணர்ந்துவிட முடியாத அளவு அசாதாரணமானது.

மரணம் என்பது மறக்கப்படக்கூடியதே. துயரார்ந்த ஞாபகங்களிலிருந்து கண்ணீரைப் பிழிவதே. ஆனால், தேசியத்தலைவர் ‘இல்லாமல்போனதை’ நினைக்குந்தோறும் கண்ணீரைவிட அரசதிகாரங்களின் துரோகமே நினைவில் முந்தியெழுகிறது. அதிலிருந்து பிறந்த கோபத்தைக் காலம் ஒன்றும் செய்வதற்கில்லை. வரலாற்றை மாற்றி எழுதும் பொய்மை வாசகங்களினாலோ, கிளிசரின் கண்ணீரினாலோ, மினுங்கும் திரைகளை மக்களின் கண்களின் முன்னால் இறக்குவதனாலோ வரலாற்றின் வரிகளை அழித்து எழுதிவிடமுடியாது. அது காலக் கல்வெட்டு.
நத்திப் பிழைக்கும் நாய்களுக்கு வேண்டுமானால் நாளுக்கொரு தலைவர் மாறலாம். சலுகைகளுக்காக சாக்கடைகளை ‘சரித்திரமே’ என்று கொண்டாடலாம். வாய்ப்புகளுக்காக வஞ்சகர்களை ‘வரலாறே’என்று வாழ்த்துப் பாடலாம். பிழைப்புக்காக பிணந்தின்னிப் பேய்களை ‘பெருமகனே’என்று போற்றலாம். தமிழர்களாகிய எங்களளவில் ஒரே தலைவர்தான். அவர் எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே.

எங்கள் கண்காண நீங்கள் ‘இல்லாமல்’போனாலும், இருந்துகொண்டுதானிருக்கிறீர்கள் என்றென்றைக்குமாக.

11.06.2009

நாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம்


ஆசிரியர்:நாகார்ஜூனன்
வெளியீடு: ஆழி பதிப்பகம்

‘திணை இசை சமிக்ஞை’என்ற பெயரிலான வலைத்தளத்தில் நாகார்ஜூனனால் எழுதப்பட்ட ஆக்கங்கள், அவரால் வழங்கப்பட்ட நேர்காணல்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புகள், ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் ‘ஆழி’பதிப்பகம் வெளியிட்டிருந்தது. பித்தான்களிலிருந்து பேரழிவுகள் வரை அந்நூலில் அலசப்பட்டிருந்தது. தேடலும் சோம்பேறித்தனமும் ஒன்றாக இயங்கும் மனநிலையுடைய வாசகருக்கு ‘நளிர்’பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தைத் தருகிறதெனில் மிகையில்லை. வரலாற்றில் நாமறியாத பக்கங்களை, மனதின் பித்தங்களை, அதிகாரச் சுழலை, அதில் சிக்கி அலைவுறும் சாதாரண மனிதர்களை, இசங்களை, இலக்கியத்தை கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறார். என்னளவில், ஒரே சரட்டில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் நாவலைக் காட்டிலும் சுவாரசியம் மிகுந்ததாக அந்த வாசிப்பு அனுபவம் அமைந்திருந்தது. எதைத் தேடுகிறோமோ அதையே கண்டடைகிறோம் என்பதற்கிணங்க, இலங்கையின் இனச்சிக்கல் குறித்து இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் நாகார்ஜூனனின் கருத்துக்கள் என்னை ஈர்த்தன. உடன்படலும் முரண்படலுமாக எழுத்துக்களினூடே பயணித்தேன். இலக்கியவாதி, விமர்சகர், ஊடகவியலாளர், அறிவியலாளர், ஆய்வாளர் ஆகிய பல்வகை ஆற்றல்களையும் அனுபவங்களையும் கொண்ட ஒருவரது பகிர்வுகள் சிந்தனைத் தளத்தை விரிவுசெய்ய வல்லன என்பதில் ஐயமில்லை.

இலங்கையின் பேரினவாத அரசாங்கம் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை நிகழ்த்தி, ஏறத்தாழ மூன்று இலட்சம் தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்துவைத்திருக்கும் இந்நிலையில், உணர்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டு அதுசார்ந்த எந்தவொரு எழுத்தையும் வாசிக்கமுடிவதில்லை. அவ்வப்போது கண்ணீரற்ற விசும்பலொன்று தொண்டைக்குள்ளிருந்து குமுறி எழுந்ததை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அதிலும், அதிகார வர்க்கத்தின் கொடுங்கரங்கள் சாதாரணர்களின் இருதயக்குலையைப் பிய்த்தெறிவதற்கிணையான குற்றங்களைக் கேட்பாரன்றி நிகழ்த்திக்கொண்டிருப்பதனை நாகார்ஜூனன் எழுதும்போது, கோபம் பெரும் சூறையென ஆக்கிரமிக்கிறது. எமது கோபத்தின்முன் ‘கையாலாகாத’என்ற வார்த்தையை அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஈழம் குறித்து நளிரில் பேசப்பட்டிருக்கும் விடயங்கள், குரூரப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட மே, 2009க்கு முந்தையவை என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மைப் பிரிந்துபோனவர்களின் முகச்சாயலுடைய யாரையாவது தெருவில் பார்க்க நேரும்போது, ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு ஏக்கம் வழியும் நெஞ்சத்துடன் போவதுபோல, இப்போது வாசிக்கும் எல்லா எழுத்துக்களிலும்-பேச்சுக்களிலும் நாடு பற்றிய ஞாபகமூட்டல்கள் வந்துபோகின்றன. ஒப்புவமைகளில் ஆழ்ந்து துயருறுகிறது மனம். நாகார்ஜூனனால் தேசம்.நெற் இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டிருந்த நேர்காணலில் மார்க்ஸியத்தின் தோல்வி பற்றிக் குறிப்பிடுகையில் இவ்வாறு சொல்கிறார்:

“அறிவுப்பரப்பின் அதிகார நாட்டம் வரலாற்றில் அடைந்த அறத்தோல்வி, கலைத்தோல்வி அதுன்னு சொல்லலாம். மார்க்ஸியத்துக்கு நாமறிந்தும் அறியாமலும் கிடைத்த வெற்றியும் தோல்வியும் மனிதகுல வரலாற்றில் எல்லா உயர்ந்த இலட்சியங்களுக்கும் கிடைத்ததே என்பது நமக்கு ஒருபுறம் ஆறுதலைத் தரலாம். மறுபுறம் பதற்றத்தையும் தரலாம்.”

இப்போது அதிகளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ‘அறிவற்ற அதிகாரம்’என்ற பதம் எனக்கு ஞாபகத்தில் வந்தது. அறிவும் அதிகாரமும் எதிரெதிர் திசைகளில் பயணிக்கும் தன்மையன போலும்.

ஒரு ஊடகத்தின் அரசியல்தன்மையும் சார்புநிலையும் எவ்விதமெல்லாம் கட்டமைக்கப்படுகிறது என்பதை, பி.பி.ஸி பற்றி அவர் சொல்லியிருப்பதிலிருந்து உணரக்கூடியதாக இருந்தது. ஒரு ஊடகவியலாளன் அதிகாரங்களுக்கெதிரான வார்த்தைகளைப் பேச முற்படுகையில் அவை கொதித்தெழுந்து உயிர் குடிக்கும் கொடுமையைக் குறித்து வருத்தப்பட்டிருக்கிறார். ஊடகவியலாளர்களான நிமலராஜன், அய்யாத்துரை நடேசன், தராக்கி சிவராம் போன்றவர்கள் இலங்கையில் பலிகொள்ளப்பட்டதை விசனத்தோடும் கசப்புணர்வோடும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார். கருத்துக்களுக்காகக் கொல்லப்பட்ட, நாட்டைவிட்டுத் தப்பியோடிய, சிறையிலடைக்கப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, வித்தியாதரன், யசிதரன் தம்பதிகள், திஸநாயகம், றிச்சர்ட் டீ சொய்சா, சுனந்த தேசப்பிரிய என நீண்ட பட்டியலொன்று மனதிலோடியது.

நடுநிலை என்ற சொல்லின் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்ட ஒரு சூழலில், நாகார்ஜூனன் பேசிச் செல்லும் சில விடயங்கள் ‘நடுநிலை’குறித்த மீள்சிந்தனையைக் கோரிநிற்கின்றன. இலங்கைப் பேரினவாத அரசின் கொடுமைகள் குறித்து கசந்துபேசும் அதே குரலில் விடுதலைப் புலிகளையும் சாட அவர் மறக்கவில்லை.
“பொதுவாக இலங்கையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர் தாயகம் வரணும்। அதுக்கு உலக அரங்கில் ஒரு ஜனநாயக அங்கீகாரம் வேண்டும். தமிழர்களின் வரப்போகும் சமுதாயம் ஜனநாயக, பன்முக அமைப்பில் இருக்கவேண்டும். அதில் இஸ்லாமியர் உள்ளிட்ட பல சிறுபான்மையினர் எல்லா உரிமைகளுடனும் வாழவேண்டும்ங்கறதை ஏற்ற மனநிலையில்தான் அன்றைக்கும் இருந்தேன். இன்னிக்கும் இருக்கிறேன். அந்தத் தீர்வு அமைப்பு பற்றி அறுதியாகத் தீர்மானிக்க வேண்டியது அங்குள்ள மக்கள்தான்னு உறுதியா நம்பறேன்.”


மேற்கண்டதிலுள்ள கடைசி வரியை அவர் சொல்லும்போதிருந்த நிலை வேறு। இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் அரங்கில் இருந்தபோதிருந்த அதிகாரச்சமநிலை அழிக்கப்பட்டுவிட்டது. ஈழத்திலுள்ள தமிழர்கள் கைதிகளாகவும், ஊமைகளாகவும் ஒருவேளைச் சோற்றுக்குக் கையேந்துகிறவர்களாகவும் கீழிறக்கப்பட்டுவிட்டார்கள். ஆக, இப்போது ஈழத்தில் வாழ்கிற தமிழர்களுக்காகப் பேசவல்ல குரல்களாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், தமிழ்நாடு உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் இருக்கிறார்கள். இதனோடுகூட கேந்திர முக்கியத்துவம், பிராந்திய நாட்டாமை போன்ற சுயஇலாபங்களுக்காகவோ சற்றேனும் மிஞ்சியிருக்கிற மனிதாபிமானத்தினாலோ திடீரென்று விழிப்பு வந்து குரல்கொடுக்க ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் சமரசங்களற்ற- இறுகிய- கருத்துநிலை மறுப்பின்மீதான நாகார்ஜூனனின் கசப்பானது பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. பி.பி.ஸி தமிழோசையின் முன்னைய (நாகார்ஜூனன் போன்றவர்கள் இணைவதற்கு) நிலைப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு சாடிச்சொல்கிறார்.

“தமிழோசையில் இருந்தவர்களுக்கு முன்னாடி ஒரு மரபு இருந்தது. அதாவது, களத்தில் இருக்கிற இயக்கத்தை – அதாவது விடுதலைப் புலிகளை விமர்சனமில்லாம பக்கச்சார்பா அப்படியே ஆதரித்துவிடுவதுன்னு ஒரு மரபு.”

அதனைத் தொடர்ந்து வந்த மாற்றங்களின் பிறகான காலகட்டம் பற்றிப் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“தமிழோசைங்கிறது ஒரு ஊடகம். அதில் தமிழ்பேசற, கேட்கற எல்லோருக்குமான செய்தியும் வரும். அதைத் தமிழர்களுக்கான உரிமைக்குரலாக இருக்கணும்னு நினைத்து, அதை ஓர் அமைப்பின் குரலாகச் சுருக்கியதை என்ன சொல்லுவது… சொல்லப்போனால் தமிழோசைன்னு பெயர் இருக்கறதுனாலேயே குறிப்பிட்ட அந்த இயக்கம் செய்யக்கூடிய, அது கூறக்கூடிய எல்லாத்தையும் கேள்வியில்லாம போடணும்னு எதிர்பார்த்து அது இல்லாமல் போகும்போது தமிழோசைமேல ஒருவித வெறுப்பும் கோபமும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. விடுதலைப் புலிகளை மிகத் தீவிரமாக ஆதரிப்பவர்களோட பிரச்னை இது”


‘பிரச்னை’என்ற சொல் என்னை உறுத்தியது. ஊடகங்கள் குறிப்பாக செய்தியூடகங்கள் உணர்வால் பேசுவதில்லை. அவை அறிவை வேண்டுபவை.(அவற்றின் சார்பு நிலைகளுக்கேற்ற திரிக்கப்பட்ட அறிவாக இருப்பினும்) அதுவே அவற்றின் அடிப்படைப் பண்பாகவும் இருக்கமுடியும். ஆகவே, அத்தகைய வரண்ட தன்மையைக் குறைசொல்வதற்கில்லை. ஆனால், மக்களிடம் - குறிப்பாக அழிவின் நிழலில், அராஜகத்தின் கோரப்பிடியில், நிலையற்று அலைதலில் நாளாந்தம் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களிடம் ‘தூய அறிவை’எதிர்பார்க்கவியலாது. மேலும், விரும்பியோ வேறு வழியற்றோ விடுதலைப் புலிகளைத் தவிர்த்து எங்களுக்கு மீட்சியளிக்க வல்லோர் வேறெவரும் இருக்கவில்லை. மேலும், விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டையோ விடுதலைப் புலிகளது உயிர்த்தியாகங்களையோ சந்தேகிப்பதற்கில்லை. இந்நிலையில், தமது தத்தளிப்பை அப்படியே ஊடகத்தின் உதடுகள் பேசவேண்டுமென எதிர்பார்த்தது எங்கள் மக்களின் தவறற்ற தவறெனவே கொள்ளப்படவேண்டும். வார்த்தைகள் எனப்படுபவை தனியே வார்த்தைகள் மட்டுமல்ல; சூழலையும் சேர்த்தே அவை உதிர்க்கின்றன.

இந்திய ஊடகங்களைப் பற்றிப் பேசும்போது நாகார்ஜூனன் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“இந்திய ஊடகங்களை எடுத்துக்கொண்டால், இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கைன்னு இருக்கிற நிருபர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் நீட்சியாக மாத்திரம் செயற்படுகிறார்கள். இதைத் தாண்டி ஒரு சிலர் மாத்திரம் செயற்பட்டிருக்கலாம்.”

‘த ஹிந்து’போன்ற பத்திரிகைகளின் தேசபக்தி கடல்தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவரை சென்று ஆக்கிரமிப்பாளர்களோடு கைகுலுக்கிக் குதூகலிப்பது நாமறிந்ததே. ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிகைகளின் ஊடக தர்மம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஊதுகுழலாக மாறி வெகுநாட்களாகிவிட்டன.

“இலங்கை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்குப் போறதுக்கு தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு என்ன தடை?”என்றொரு கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார். எழுத்தாளர்கள் மரணபயத்தை வென்றவர்களில்லை. அதிகாரங்களின் மீதான பயம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், படுகொலைகளைக் கண்ணால் பார்த்துத்தான் எழுதவேண்டுமென்றில்லை. ஈழத்துக்குப் போகாமலே, இனவழிப்பை எதிர்த்துக் குரலெழுப்பியிருக்க முடியும். அதைச் செய்தவர்கள் குறைவு என்று ‘கடவு’க் கூட்டத்தில் நான் சொல்லப்போய்த்தான் பெரிய சர்ச்சையாயிற்று. “நாங்கள் எழுதலையா என்ன?”என்று விசனப்பட்டவர்கள் சிலர். “ஏன் எழுதணும்? எங்கள் துயரங்களுக்காக நீங்கள் குரலெழுப்பினீர்களா?”என்ற ‘தார்மீகம்’ வழியும் கேள்வியின் வழியாகத் தனது நிலையை வெளிப்படுத்தினார் ஆதவன் தீட்சண்யா. உலகப் பொது இசமான மானுடநேயத்தை மார்க்ஸியம் படித்தவர்களும் மறந்து பேசுவதுதான் துயரம்.

நாகார்ஜூனன் ஒரு விடயத்தில் மிகத் தெளிவாக இருப்பது ஆறுதலளிக்கிறது. பல இடங்களில் ‘ஈழத்துக்கு, சிங்களத்துக்கு’என்றே குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆக, இன்றைய நிலையில் சிங்களத்துக்கு ஈழம் அடங்கினாலும், சிங்களத்துக்குள் ஈழம் அடங்கமுடியாது என்பதில் அவர்போன்ற அறிவுஜீவிகள் தெளிவாக இருக்கிறார்கள். இவ்விடயத்தை ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வு என்று வாய்கிழியப் பேசிக்கொண்டிருப்பவர்கள் கவனத்திலெடுத்துக்கொள்ளவேண்டும்.

முன்பே சொன்னதுபோல நடுநிலை என்ற சொல் மிகுந்த சலிப்பூட்டுகிறது. இருந்தபோதிலும் அறிவார்த்த தளத்தில் இயங்குபவர்கள் அதன் பொருளுணர்ந்து பேசும்போது நியாயமான அர்த்தம் கொள்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

“அனுராதபுரத்தில், பொலநறுவையில், கொழும்பில், காத்தான்குடியில் நடந்த கொலைகள் போன்ற எல்லாவற்றுக்கும் (விடுதலைப் புலிகள்) மன்னிப்புக் கேட்கவேண்டும். அதேபோல இந்திய அரசாங்கம் சார்பிலும் தமிழ்நாட்டு அரசாங்கம் சார்பிலும் ஈழத்தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருப்பது நிறையவே இருக்கு…”என்கிறார் நாகார்ஜூனன்.

இதை அவர் சொல்லியிருப்பது 2008ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில். தமிழர்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட- கைதுசெய்யப்பட்ட- பதுங்குகுழிகளே புதைகுழிகளாக மூடப்பட்ட – வைத்தியசாலைகள் பிணக்கிடங்குகளாக்கப்பட்ட பேரனர்த்தம் நிகழ்ந்தேறி முடிந்த மே மாதம் 18ஆம் திகதிக்குப் பின் மேற்சொன்ன வாசகங்கள் இன்னும் இறுக்கம் பெற்றதாகின்றன. இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு உறுதுணையாக நின்று போரை நடத்தி, தமிழ்மக்களையும் போராளிகளையும் கொன்றுமுடித்தும் முகாம்களுள் முடக்கியும் தின்று தீர்த்திருக்கும் நிலையில், குடும்ப மற்றும் கட்சி இலாபங்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டு அரசானது ஈழத்தமிழர்களின் படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்ட நிலையில், நாகார்ஜூனனின் வார்த்தைகளுக்குச் செறிவு கூடியிருக்கிறது. அவர் மேலும் சொல்கிறார்:

“ஆக, ஒரு சமுதாயத்தின் இழப்பை நாம் சாத்தியப்படுத்தி இருக்கோம்ன்னு மனத்தில் உறைக்கணும். அப்படிப்பட்ட ஒரு பெருங்கொடுமையை எல்லாத்தரப்பும் தமக்கு வேண்டியபோது செய்திருக்காங்க. ஈழத்தமிழர் சமுதாயத்தை நிலைகொள்ள முடியாதபடிக்கு இப்படி மாத்திய இந்தக் கொடுமைக்காக, அவர்களை ஆதரித்துக் கழுத்தறுத்தவங்க, எதிர்த்துச் சூனியத்தில் தள்ளியவங்க எல்லோருமே மன்னிப்புக் கேட்கவேண்டும்”

இந்தத் தார்மீகச் சீற்றம் தமிழ்நாட்டில் வாழும் பலருக்குள் இருக்கிறது। ஆனால், ஆட்சிபீடங்களில் உள்ள அதிகாரங்களிடம் இல்லை என்பதுதான் குரூரமான உண்மை. தவிர, மன்னிப்புக் கேட்பதானது மடிந்துபோனவர்களைத் திரும்பக் கொணராது என்பதை நாமறிவோம். தனது மக்களிடம் மனிதம் சார்ந்து குறைந்தபட்ச நாகரிகத்தைக் கோரும் நாகார்ஜூனனும் இதை அறிந்தவரே. அதிகாரங்களின் அறமும் மொழியும் ஆயுதங்களாகவே இருந்திருக்கின்றன. அங்கே மன்னிப்பு, பெருந்தன்மை, மனிதநேயம், ஜனநாயகம் என்ற வார்த்தைகளெல்லாம் பொருளற்றவை.

“சமுதாயம் என்பது அரசியலைவிடப் பெரியது என்கிற கண்ணோட்டம் தேவைன்னு நினைக்கிறேன் நான்”என்கிறார் நாகார்ஜூனன். ஈழத்தமிழர்களின் வாழ்வில் அரசியல், சமுதாயம் என்ற இரண்டும் தனித்தனிக் கூறுகள் இல்லை. பேரினவாத ‘அரசியலால்’ துன்புறுத்தப்படும் ‘சமுதாயமாகவே’ நாங்கள் தொடர்ந்து இருந்துவருகிறோம்.

‘வன்னியிலிருந்து வந்த பத்திரிகைக்காரரைச் சந்தித்தேன்’என்ற கட்டுரையில் பல இடங்கள் மனங்கலங்க வைப்பனவாக இருந்தன. வன்னிப்பகுதியில் நான்காண்டுகள் ஐ.நா.மன்ற சமூகப்பணியாளராக- பத்திரிகையாளராகக் கடமையாற்றியவரும், செப்டெம்பர் 16, 2008இல் அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் வெளியேற்றப்பட்ட பத்துப்பேர்களில் ஒருவருமாகிய திரு.டிக்ஸியுடனான சந்திப்பு பற்றி அந்தக் கட்டுரையில் விபரித்திருந்தார். போர் உக்கிரமடைந்துகொண்டிருந்த நேரத்தில் வன்னிவாழ் மக்களைக் கைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை டிக்ஸி சொல்லியிருந்த விதம் மனம் நெகிழவைப்பதாக இருந்தது.

“நாங்கள் வன்னியைவிட்டுக் கிளம்புமுன்பாக அங்குள்ள மக்கள் ‘எங்களை விட்டுப் போகவேண்டாம்’என்று இரண்டு நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் பாதுகாப்பு என்பதை எல்லாத் தரப்பிலிருந்தும் என்று பார்க்கவேண்டும் என்று என் அனுபவம் சொல்கிறது-அவர்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு வருகிறோமே என்று எங்கள் எல்லோர் நெஞ்சும் உருகிவிட்டது”என்று சொல்லியிருந்தார்.

எல்லோரும் சாட்சிகளை அகற்றிவிட்டே குற்றங்களைச் செய்கிறார்கள். தடயங்களையும் துடைத்தழித்துவிடுகிறார்கள். இவ்விடயத்தில் அரசாங்கங்கள் இன்னமும் கூர்ந்த மதிநுட்பத்துடன் நடந்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது. அதிலும், தமிழ்மக்கள் விடயத்தில் கருணை கிஞ்சித்துமற்று நடந்துகொள்வதென்ற முன்தீர்மானத்துடன் களத்திலிறங்கியிருந்த இலங்கை-இந்திய, சீன அரசுகளுக்கு உலகத்தின் கண்கள் முன் இயேசு கிறிஸ்துவாகவும் அன்னை தெரேசாவாகவும் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமிருந்தது. எனவே அவர்கள் சாட்சிகளை கொலைபடுகளத்திலிருந்து அகற்றினார்கள். தாண்டவக்கூத்தாடி முடித்தார்கள். திட்டமிட்டபடி துளிபிசகாமல் இனவழிப்பு சுலபமாக-சுபமாக நிறைவுற்றது.

‘இலங்கைப்போரும் தமிழ்நாட்டின் ஆதிச்சடங்கும்’என்ற கட்டுரையில், இலங்கைப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் ‘கையறு நிலை’ பற்றிப் பேசியிருக்கிறார் நாகார்ஜூனன். இந்த ‘கையறு நிலை’என்ற வார்த்தையின் பின் ஒளிந்திருக்கும் சுயநலம் ஈழத்தமிழர்கள் மற்றும் அவர்கள்பால் உணர்வுப் பற்றுடைய தமிழ்நாட்டு மக்களின் மனங்களைப் பற்றியெரியச் செய்யப் போதுமானதாக இருக்கிறது. ‘த ஹிந்து’போன்ற தேசாபிமானம் மிக்க- குருதி குடிக்கும் பத்திரிகா தர்மத்தைக் குறித்தும் கேள்வி எழுப்ப நாகார்ஜூனன் தவறவில்லை.

“வன்னியிலிருந்த ஐ.நா. மன்ற பன்னாட்டுப் பணியாளர்களை வெளியே போகச் சொன்னீர்களே ஏன்? விடுதலைப் புலிகள் அழிப்பு என்பதாகத் தொடங்கி இப்போது மூன்று இலட்சம் பேரை நிர்க்கதியாக்கியிருக்கிறீர்களே ஏன்? தமிழ்நாட்டு மீனவர்கள் இத்தனை பேரைச் சுட்டிருக்கிறீர்களே ஏன்? அதற்காக மன்னிப்புக் கேட்டீர்களா? என்றெல்லாம் ராஜபக்சே அவர்களை நீங்கள் கேட்கவில்லையே…!”என்று ஹிந்து ராமைச் சாடியிருக்கிறார். அதிகாரங்களின் கைப்பொம்மைகளாக இயங்குவோருக்கு அறிவுஜீவிகள் எனப்படுவோரின் சாடலானது உதிரும் ஒற்றை மயிருக்கும் சமானமாகாதென்பதை வரலாறு காட்டியிருக்கிறது. மேலும், ‘இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் அழிவின் விளிம்பை எட்டும்போதெல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தத்தம் வாழ்க்கையின் ஆதாரம் ஏதோ அசைக்கப்படுவதாக உணர்ந்திருக்கிறார்கள்’என்று அவர் எழுதியிருந்ததை வாசித்தபோது கசப்பான சில ஞாபகங்கள் கிளர்ந்தன. ஆறரைக் கோடி தமிழ் பேசும் மக்கள் அருகிலிருந்தும் நாங்கள் ஏதிலிகளாக்கப்பட்டோமே என்ற ஆற்றாமை மனதில் தீயெனப் படர்கிறது. ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய பெருமெண்ணிக்கையிலான மக்கள் தொகை இருந்தும் என்ன பயன்? மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கங்கள் மக்களைச் சிந்திக்க அனுமதிப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. மாயக்குழலோசையைத் தொடர்ந்து சென்று ஆற்றில் வீழும் எலிகளைப் போல அற்ப சலுகைகளில் மயங்கித் தமது அடிப்படை உரிமைகளை மக்கள் விட்டுக்கொடுக்கும் நிலை துர்ப்பாக்கியமானது. இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டிருப்பவர்கள் இதற்குள் அடங்கார். மக்களைச் சொல்லியென்ன… மகேசன்கள் சரியாயில்லை.

ஈழத்தமிழர்களின் துயரம் தன்னுடைய வாசிப்பில் எவ்விதமாக மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் இந்தக் கட்டுரையில் நாகார்ஜூனன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். கையாலாகாத குற்றவுணர்வு இட்டுச் சென்ற பித்தநிலையை வெளிப்படுத்தும் கதைகளை அக்காலத்தில் எழுதியதாகக் குறிப்பிடும் இவர், நகுலன்-மௌனி-எஸ்.சம்பத் ஆகியேரின் படைப்புகளையே தாம் அக்காலத்தில் விரும்பி வாசித்ததாகவும் சொல்கிறார்.

“இந்த வாசிப்பு-எழுத்து என் அகமாக இருக்க, புறத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை சிக்கலாகி அதில் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆற்றாமை நாடகீயமாக வெளிப்பட்டது என நினைக்கிறேன்”

இலக்கியம், சினிமாத்துறை, மனிதச்சங்கிலி இன்னபிற போராட்டங்களில்கூட இத்தகைய நாடகீயங்களைக் காணக்கூடியதாக இருந்ததாகச் சொல்லி, அவற்றை ஆற்றாமையின் நீட்சியான ஆதிச்சடங்கெனத் தொடர்புபடுத்துகிறார்.

அரசியலற்ற ஆயுதப்போராட்டத்தின் பின்னடைவுக்கு உதாரணமாக விடுதலைப் புலிகளைச் சொல்வது தற்போதைய ‘ட்ரென்ட்’ ஆகியிருக்கிறது. தத்தம் பாவங்களிலிருந்து கைகழுவித் தப்பித்துக்கொள்ளும் சமயோசிதத்தை அண்மைக்காலங்களில் கண்டுவருகிறோம். அரசியலின் புனிதக்குரலில் தடாலடியாகப் பேசமுற்பட்டுத் தம்மிருப்பைத் தக்கவைக்க முயன்றுவருகிறார்கள் சிலர். அதற்கு மறுவளமாக- அறிவினைப் புறந்தள்ளிய, சந்தேகித்த, விசாரணைக்குட்படுத்திய அதிகாரத் துஷ்பிரயோகத்தைப் பற்றி ‘காஃப்காவின் நிழலில் தமிழ் என்ற மொழிவழிச் சடங்கு’என்ற கட்டுரையில் நாகார்ஜூனன் எழுதியிருக்கிறார். 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈழத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர்களான சிவத்தம்பி, ஆ.வேலுப்பிள்ளை ஆகியோரை ‘விடுதலைப் புலிகளை ஆதரிப்போர்’என்று குற்றஞ்சாட்டி மாநாட்டிலிருந்து வெளியேற்றிய துர்ப்பாக்கிய சம்பவம் பற்றி அக்கட்டுரையில் அவர் விசனப்பட்டிருக்கிறார். அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசின் அந்த அதிகாரப் பாய்ச்சலைக் குறித்த செய்தியைப் பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் என்றவகையில் தானும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்திருந்தார். எவ்விடத்திலும், எந்தக் காலகட்டங்களிலும் அதிகாரங்களுக்கும் அறிவுக்கும் இடையில் இழுபறி நிலை இருந்துகொண்டேயிருக்கும் போலும். கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் கொல்லப்படவும் நாடுகடத்தப்படவும் கைதாகவும் காரணமாக இருப்பது, ஆட்சியாளர்கள் அன்றேல் அதிகாரத்தில் இருப்போர் தமது பொய்முகங்களை கருணை முகமூடிகளுள் ஒளித்துக்கொள்ளும் விழைவின் பொருட்டே. முகமூடிகள் கிழிந்தே போனாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை என்பது இரண்டாவது விடயம்.

‘நளிர்’அண்மைக்காலத்தில் வெளியாகியிருக்கும் புத்தகங்களுள் மிக முக்கியமானதாகும்। முன்பே குறிப்பிட்டதுபோல தேடலும் சோம்பேறித்தனமும் மிகுந்தவர்களது விருப்பத் தெரிவாக இந்நூல் இருக்கக்கூடும். ஈழத்தமிழர் பிரச்சனையைத் தொடர்ந்து கவனித்து வரும் நாகார்ஜூனன் போன்றவர்களின் கருத்துக்கள் அறிவார்த்த தளத்தில் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஆயுதப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்நிலையில் அறிவின் போராட்டம் இயங்கவாரம்பிக்கவேண்டும். ‘எல்லாம் முடிந்துவிட்டது’என்று நாம் அமர்ந்திருப்பது பொறுப்புகளிலிருந்து பின்வாங்குவதாகும். ‘இனித்தான் வாழ்க்கை’என்று எழுந்திருப்பதே இக்கொடுங்காலத்தில் நாம் செய்யவேண்டியது. இலைகள் எல்லாம் உதிர்ந்துபோனபிறகும் மரங்கள் நம்பிக்கையோடு காத்திருப்பதில்லையா அடுத்த இளவேனிலை எதிர்பார்த்து? நாம் தரையில் ஊற்றும் ஒரு குவளைத் தண்ணீரில் கூட்டமாக அழிந்துபோனாலும், மீண்டும் எறும்புகள் கூடி மழைக்காலத்திற்காகத் தானியங்களைச் சேமிக்கத்தானே செய்கின்றன? சூறாவளியும், ஆழிப்பேரலையும், பூகம்பமுமாகிய இயற்கைப் பேரழிவுகளின்பின்னும் மானுட இனம் நிமிர்ந்தெழவில்லையா இந்த மண்ணில்? இழப்புகள் கோடி வரலாம். அதன் பிறகும் எஞ்சியிருக்கவே செய்கிறது வாழ்க்கை.


நன்றி: அம்ருதா

10.26.2009

எழுத்தும் வாசிப்பும்…


புத்தகங்களை உயிர்மூச்சென்று சொல்வது மிகைப்படுத்தலாகத் தோன்றினும், அதனோடு தொடர்புடையவர்களுக்கு சற்றேறக்குறைய அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அவை இருந்துவருகின்றன. சிலருடைய அறைகளில் புத்தகங்கள் இருக்கின்றன. சிலர் புத்தகங்களின் அறைகளில் வசிக்கிறார்கள். மேசையில், கட்டிலுக்கு மேல், கட்டிலின் கீழ், பரண்களிலுள்ள அட்டைப்பெட்டிகளில், வரவேற்பறையின் இருக்கைகளில், குளியலறையில்… எங்கெங்கு திரும்பினும் புத்தகங்களாக இருக்கும் வாழ்விடங்களை நான் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெல்லாம், ‘இவ்வளவையுமா வாசித்திருப்பார்கள்?’என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வாசிப்பின் அளவிற்கேற்ப மௌனம் அவர்கள் மீது கவிந்துவிடுவதையும் அவதானித்திருக்கிறேன். (இதற்கு முரணான விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்) நிறையப் படிக்கிறவர்கள் தங்களை சாமான்ய உலகத்திலிருந்து விலக்கிக்கொண்டவர்களாக அன்றேல் விடுவித்துக்கொண்டுவிட்டவர்களாக, சாதாரண உரையாடல்களில் பங்கேற்காதவர்களாக இருப்பதையும் கவனிக்க முடிந்திருக்கிறது.
நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளின் மாயவசீகரம் இன்னதென்று இன்னுந்தான் புலப்படவில்லை। காலச்சக்கரம் அந்நேரங்களில் மட்டும் கடகடவென்று சுற்றுமாயிருக்கும். புத்தகத்தைக் கையிலெடுத்து புரட்டவோ ஒரு வரி வாசிக்கவோ கூட வேண்டியதில்லை. மின்விசிறிகள் மட்டும் அனத்திக்கொண்டிருக்கும் நூலகங்களின் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித் திரிதலே போதுமாயிருக்கும்.

அந்தக் கிறக்கம் குறைந்துவருவதுபோன்றதொரு கலக்கம். பிரபஞ்சன் அவர்களின் வார்த்தைகளின்படி ‘ஜீவித நியாயமாகிய’எழுத்தை சமகாலத்தில் ஆத்மார்த்தமாக நேசிக்கிறவர்கள் அருகிவருகிறார்களோ என்று தோன்றுகிறது. தொழில்நுட்ப விருத்தியின் நீட்சியென விரிந்த உலகமயமாக்கல் உலகை அதகளம் செய்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மனிதர்களின் அகவுலகு சுருங்கி, புறவுலகு விரிந்துவருகிறது. நுகர்வுப்பைத்தியத்தில் தலை கிறுகிறுத்து நாம் அலைந்துகொண்டிருக்கிறோம். அச்சு ஊடகங்களின் இடத்தை கணினி விழுங்கிவிடுமோ என்ற கவலை மனதை மலைப்பாம்பைப்போல வளைக்கவாரம்பித்திருக்கிறது. இருந்தும் அச்சு ஊடகங்களின் இடம் அசைக்கப்படக்கூடியதல்ல என்று ஆறுதல் கூறுவாருமுளர்.

தமிழிலக்கியத்தில் அதிசயங்கள் நிகழ்ந்தாலொழிய ஒரு நூல் மறுபதிப்புக் காண்பது அரிதாகவே இருக்கிறது. கவிதைத்தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் ஐந்நூறு அன்றேல் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் பதிப்பாவதில்லை. சில நூறு பிரதிகள் இழுத்துப் பறித்து விற்பனையாக, மிகுதி பதிப்பகங்களில் இடத்தை அடைத்துக்கொண்டு கிடப்பதைக் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் நெஞ்சைக் குளிர்விக்கும் ஒரே விடயம் அவனுடைய-அவளுடைய நூல் மறுபதிப்புக் காண்பதாகவே இருக்கமுடியும். தன்னுடைய எழுத்து அநாதரவாகக் கிடப்பதைக் காண்பதைப் போன்ற துயரம் எழுத்தாளனுக்கு வேறில்லை. ‘எனக்காகவே எழுதுகிறேன்’என்ற பெரும்போக்காளர்கள் இதற்குள் அடங்கார்.

எழுத்தாளர்களே வாசகர்களாக இருக்கும் பேறுபெற்றதாக இருக்கிறது சமகாலத் தமிழிலக்கியம். மறுவளமாக, யாரோ சொன்னதுபோல எழுத்தாளரல்லாத வாசகரைக் காண்பது அரிதாகி வருகிறது. அவ்விதம் இருக்கையில், எழுத்தின் மீதான மதிப்பும் வியப்பும் பிரமிப்பும் பெரிதாக எதிர்பார்ப்பதற்கில்லை. எழுத்தாளனே வாசிப்பவனாகவும் இருக்கும் பட்சத்தில் வாசிப்பிற்கு இணையான தர்க்கச்சரடு ஒன்று மனதினுள் ஓடிக்கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம். வாசிப்புடன் தர்க்கிக்கும் தன்மை சிறுவயதில் குறைவாக இருந்ததனாலேயே நிறைய வாசிக்க முடிந்திருக்கிறது. அறியாமை அறிவுக்கு இட்டுச்சென்றது. மேலும், மனிதர்களின் குணாதிசயங்களை அது கட்டமைக்கவும் செய்தது. பொய்யே பேசாத, இரக்கமே உருவான, அறிவின் சுடரொளி கண்கூசவைக்குமொரு மனிதர்களாய் நம்மை நாம் கற்பனிக்கவும் அந்த அறியாமை வழிவகுத்தது. இப்போது ஒப்பீட்டின் மமதையால், ‘நான் அறியாததா?’என்ற தன்னுயர்ச்சியில் அன்றேல் பெருமிதத்தின் காரணமாகவும் புரட்டப்படாமல் தூசிபடிகின்றன புத்தகங்கள். நாம் நிறைய இழந்துகொண்டிருக்கிறோம். ஒரு எழுத்தாளனின் ஒரேயொரு புத்தகத்தைப் படித்துவிட்டு, குறிப்பிட்டவரைக் ‘கரைத்துக் குடித்ததாக’ப் பாவனை பண்ணுகிறவர்களையும் நாம் பார்க்கத்தான் பார்க்கிறோம். எழுத்தாளரின் பின்புலமும் வாசிக்கும் கண்களில் படிந்திருக்கிறது. அதற்கியைபுற எழுத்து கொண்டாடப்படவும் பின்தள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கழிந்துபோன ஆண்டுகளில் வாழ்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது நாவல்கள், சிறுகதைகள், வரிகள் பற்றிய சிலாகிப்புகளை வாசிக்கும்போது அந்த மகோன்னதக் காலங்களுக்கு ஏங்குகிறது மனம். அண்மையில் சந்தித்த ஒரு நண்பர் மஹாகவியின் கவிதை வரிகளை கடகடவென்று சொல்லிக்கொண்டே வந்தார். சமகால வாசிப்பு இத்தனை ஆழம்போகாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. பூரணி-அரவிந்தனும்(குறிஞ்சி மலர்) வந்தியதேவன்-குந்தவையும் (பொன்னியின் செல்வன்), வேதா-நச்சியும் (ஜீவகீதம்), தாரணி-சூர்யாவும்(அலையோசை) இன்னமும் என் நினைவில் இருக்கிறார்கள்.

புதுமைப்பித்தன் ‘இதுதானையா பொன்னகரம்’என்று கசப்பு வழிய எத்தனை காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். தி.ஜானகிராமனின் யமுனா ‘இதற்குத்தானா பாபு?’என்ற வார்த்தைகளை குறுஞ்சிரிப்போடு நம்மைப் பார்த்து இன்னமும் உதிர்க்கவே செய்கிறாள். ஜெயகாந்தனின் கங்கா இத்தனை காலங்கழித்தும் நுரைசுழித்தபடி நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறாள். பாலமனோகரனின் பதஞ்சலி தண்ணீரூற்றில் வெள்ளந்தியாய் சிரித்தபடி இன்னமும் உலவித்திரிகிறாள். அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’நாற்காலிகளில் ஏறி உங்களுக்குள் குதிக்கவில்லையா? லா.ச.ரா.வின் அபிதா இப்போதும் பல விழிகளில் சுடரேற்றுகிறாள். ‘கங்கா! நான் உன்னை இழந்து போனேனேடி!’என்று கங்கைக்கரை ஓரத்தில்…. கலங்கியழுத செங்கை ஆழியானை ஒருபோதும் மறக்கமுடிவதில்லை. ஜனரஞ்சக எழுத்தென்றும் ஆன்மீகத்தில் இறங்கித் தொலைந்தார் என்றும் வர்ணிக்கப்படுகிற பாலகுமாரனின் ஸ்வப்னாவும் காயத்ரியும்கூட அவரவர் கம்பீரத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள்! இப்போது உதிரியாக நிறையப் பேர் எழுதிக்கொண்டிருக்கிறபோதிலும், எஸ்.பொ. அம்பை, பிரபஞ்சன், ஜெயமோகன், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், வண்ணநிலவன்… இவர்களுக்குப் பிறகான பட்டியலில் ஒரு தேக்கம் வந்து சேர்கிறது. எதிரிடும் வெறுமை திடுக்கிட வைக்கிறது. ஆக, கதைகளின் வரிகளை அருந்திக் கிறங்கியிருந்த வாசகன் இனி காலமூட்டத்தில் மறைந்துபோவானா என்று அச்சமாக இருக்கிறது.

இருந்தும், சென்னை போன்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சிகளில் கூட்டம் அலைமோதுகிறது। அந்தக் கூட்டத்தை எப்படிப் பொருள்கொள்வதென்று தெரியவில்லை. கடற்கரையையும் சினிமாவையும் தவிர்த்து சொல்லும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் அற்றதாக இருப்பதனால் வாராமல் வந்த கண்காட்சிகளில் கூட்டம் அள்ளுகிறதா? அன்றேல், நாம் நினைப்பது போலன்றி சனங்கள் இன்னமும் புத்தகங்களை நேசிக்கிறார்களா? ‘எப்படி எப்படி’களில் சனங்களுக்கு இன்னும் மயக்கம் இருக்கத்தான் செய்கிறது. மற்றும் பக்தி ஸ்டால்களையும் குறைசொல்வதற்கில்லை.

எது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது. காலம் தன்னுணர்வற்றுக் கழிந்துபோகும் உன்னத தருணங்கள் புத்தகக் கண்காட்சிகளில்தான் வாய்க்கின்றன. தவிர, எழுத்தாளர்களின் முகதரிசனங்களுக்கும் குறைவில்லை. கடந்த தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் ஈரவிழிகளுடன் வாசிப்புக்காக ஏங்கிக் கிடக்கும்போது, புதிய வெளியீடுகளையும் அள்ளிவருகிறோம்.

வாசிக்கப்படாத புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி பொங்குகிறது. ஒருநாள்… ஒருநாள்…. என்று காத்திருக்கிறோம். வாசிக்க ஆரம்பித்து முடிக்காமல் மூலை மடித்த புத்தகங்களும் நம்மோடு சேர்ந்து காத்திருக்கின்றன.

"மோகித்து ஒருதடவை சுகித்தபின்
முகம் திருப்பிக் கடக்கிற
நெஞ்சின் அதிர்வை நினைவுறுத்துகின்றன
கட்டிலில் காத்திருக்கும் புத்தகங்கள்…"

என்ற வரிகள் உண்மையிலேயே உணர்ந்து எழுதப்பட்டவை. நடைமுறை வாழ்வு நம்மைத் தின்று செரிக்கிறது. சிக்கல்கள் வண்டுகளாகித் தலைகுடைகின்றன. வியர்த்த விவாதங்கள் சிருஷ்டியின் தவனத்தைக் கலைக்கின்றன. நமக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்வு அற்புதமானது; கண்டெடுக்கப்படவேண்டியவற்றின் கருவூலம் இதுவென்ற ‘ஞானோதயம்’ பளிச்சிடும் தருணங்களில் நாம் செய்யவேண்டியதைப் பட்டியலிடுகிறோம். ஆனால், வாழ்வின் குரூரங்களின் முன் மண்டியிட்டுத் தலைகவிழ்ந்து உன்னதங்களை இழந்துபோவதன்றோ நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது?


நன்றி: அம்ருதா
(அம்ருதாவில் தொடராக ஒரு பத்தி எழுதிவருகிறேன்)


10.11.2009

ஒரு குடிமகனின் சரித்திரம்


நமக்குத் தெரிந்தவர்களின், உறவினர்களின் பெயர்களைச் சொல்லி ‘எங்கே…? எங்கே…?’என்று தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்காலத்தில், ‘அவர் கனடாவிலை’, ‘அவ கலியாணம் கட்டி கொழும்பிலை’என்பதையொத்த பதில்கள் ஆசுவாசம் அளிப்பனவாக இருக்கின்றன. ஷெல்லடியில் சிதைந்துபோன, காணாமல் போன, அங்கவீனர்களாகிய, சிறைப்படுத்தப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, முகாமில் இருக்கிற வகையிலான பதில்கள் வரக்கூடாதென்பதே எங்களது பிரார்த்தனையாக இருக்கிறது. அண்மையில் குருட்டு யோசனையோடு ‘அஸ்பெஸ்டாஸ்’ கூரையில் பல்லி பார்த்துக்கொண்டு சோபாவில் படுத்திருந்தபோது, ‘மணியம் மாமா என்னவாகியிருப்பார்?’ என்ற கேள்வி திடுதிப்பென்று எழுந்தது.

மணியம் மாமா எங்களுர் விதானையார் இல்லை. தபாற்காரர் இல்லை. விரல்களில் மினுங்கும் மோதிரங்களைக் காட்டவென்றே கைகளை வீசிக் கதையளக்கிற பணக்காரரும் இல்லை. என்றாலும் குழந்தைகளுக்குக்கூட அவரைத் தெரிந்திருந்தது. சாப்பாடு தீத்தும்போது- நிலவுக்கும் பிள்ளைபிடிகாரனுக்கும் மசியாத குழந்தைகள்கூட மணியம் மாமாவின் பெயரைக் கேட்டால் பெரிய வட்டக் கண்களை இன்னும் பெரிதாக்கி முழுசியடித்துக்கொண்டு, அம்மாமார் உருட்டித் தீத்தும் உருண்டைகளை வேண்டாவெறுப்பாக விழுங்கித் தீர்க்கத் தலைப்படும் அளவுக்கு மணியம் மாமாவின் பெயர் அவர்களுக்கு அதிபயங்கரமூட்டுவது.

அவர் ஒரு அருமையான குடிகாரர். அப்படித்தான் அவரைச் சொல்லமுடியும். நான் அவரைக் கவனிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, ஊரை விட்டுப் பின்னங்கால் பிடரியில்பட ஓடிவரும்வரை, அவர் ஒரேமாதிரியான தோற்றத்தோடும் நடத்தைகளோடும்தானிருந்தார். சுகாதாரத் திணைக்களத்தில் வேலைபார்த்து ‘கட்டாய’ஓய்வு பெற்றிருந்த அவர், பகல் முழுவதும் தோட்டத்தில் எதையாவது கொத்திக்கொண்டும் கிளறிக்கொண்டும் குந்தியிருப்பார். இல்லையென்றால் அன்னபாக்கியம் மாமிக்குப் பக்கத்தில் அமர்ந்து ‘எணேய்… எணேய்…’என்று கூப்பிட்டு ஏதாவது கதைசொல்லிக்கொண்டோ கீரை ஆய்ந்து கொடுத்துக்கொண்டோ இருப்பார். அப்படியொரு புருசனை அயலுக்குள் காணமுடியாது. அவர் வைக்கும் பிலாக்காய்க்கறி அக்கம்பக்கத்தில் பிரசித்தம். குசினிக்குள் சர்வசதாகாலமும் எதையாவது அடுப்பில் வைத்துக் கிண்டிக்கொட்டிக்கொண்டிருக்கிற பெண்களது கைக்குக்கூட அந்த உருசியைக் கொணரத் தெரியாது. அவ்வளவு கைப்பக்குவம். மணியம் மாமா சமைக்கும் நாட்களில் ஏலமும் கராம்பும் வறுபடும் மணம் அயலெல்லாம் பரவும்.

பின்னேரம் ஐந்து மணியானதும் அவர் வேறொரு ஆளாகிவிடுவார். கண்கள் பரக்குப்பரக்கென்று விழிக்கவாரம்பித்துவிடும். மேளச்சத்தத்திற்கு உருவேறி ஆடுபவரின் முகபாவம் தொற்றிவிடும். அள்ளிக் குளித்துவிட்டு மொட்டைத் தலையுட்பட உடல் முழுவதும் பவுடரை அப்பிப் பூசியபடி சைக்கிளையும் எடுத்துக்கொண்டு கனசுதியாய் வெளிக்கிட்டாரென்றால், கவர்னரே வீட்டுக்கு வந்தாலும் கால்தரித்து நிற்கமாட்டார். அப்படியொரு வேகம். கேற்றுக்கு வெளியில் நின்று சிநேகிதப்பேய் கூப்பிடுமாப்போல ஒரே பார்வையோடு ஒரே இலக்கை நோக்கிப் போவார். போகும்போது அவர்தான் சைக்கிளைக் கொண்டுபோவார். திரும்பி வரும்போது சைக்கிள் அவரைக் கொண்டுவரும். ஆகிலும் கைவறண்டு போகிற நாட்களில் சைக்கிள் சாராயக்கடைக்காரரின் வீட்டில் சார்த்திவைக்கப்பட்டிருக்கும். சைக்கிள் அடைவில் இருக்கும் இரண்டு நாட்களும் அன்னபாக்கியம் மாமியின் முறைப்புக்குப் பயந்து தோட்டத்துக்குள்ளேயே நாள் முழுவதும் குந்திக்கொண்டிருப்பார். இரண்டொரு நாட்களில் மாமி கத்திக் குளறி சண்டை பிடித்து யாரிடமாவது காசு கொடுத்தனுப்பி சைக்கிளை மீட்டுவரச் செய்வா.

மணியம் மாமா குடிக்கப் போகும்போது அவரது வீட்டுப் பூனைகூட அவரைக் கவனியாது. குடித்துவிட்டுத் திரும்பிவரும்போது ஊரே அமர்க்களப்படும். தெரு நாய்களெல்லாம் சேர்ந்து கோரஸாகப் பாடும். இவர் ‘அடிக்… அடிக்…’என்று அடிக்கொரு தடவை நாய்களை வெருட்டியபடி தெருவெல்லாம் காறித்துப்பிக்கொண்டே வருவார். பத்தாததற்குப் பாட்டு வேறு. பெரும்பாலும் ‘பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக… நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக’என்ற பாட்டு கதறிக் கதறி ஓடக்கூடிய அளவுக்கு அதைக் ‘கதைத்துக் கதைத்து’தேய்த்துவிட்டார். வேலிகளும் அவரும் கடுஞ் சிநேகிதம். எங்கள் ஊர் ஒழுங்கைகள் அகலம் குறைந்தவை. இந்த வேலியில் முட்டி அந்த வேலியில் கொஞ்சி கனகுதூகலத்தோடு வெகுநேரமாக வீடுதிரும்பிக்கொண்டிருப்பார். தெருநாய்களுக்கு அவரது பாட்டுப் பிடிப்பதில்லை. அதனால், அவை குரோதத்தோடு எதிர்ப்பாட்டுப் பாடுவது வழக்கம். சிலவேளை அவர் தேய்ந்துபோன ‘ரெகார்ட்’ போல ஒரே பாட்டைத் திருப்பித் திருப்பிப் பாடியது பிடிக்காமலிருந்திருக்கும்.

மணியம் மாமா மிதமாகக் குடித்திருக்கும்போது ஒருமாதிரியும் அதிகமாகக் கவிழ்த்து ஊற்றியிருந்தால் வேறொரு மாதிரியும் நடந்துகொள்வார். அவரது உடலுக்குள் அன்றைக்கு எவ்வளவு சாராயம் ஊற்றப்பட்டிருக்கிறதென்பதைப் பொறுத்து அன்னபாக்கியம் மாமியின் இரவுகள் அமையும். நீங்கள் கனக்க கற்பனை செய்யக்கூடாது. அளவாகக் குடித்திருந்தால் அன்னபாக்கியம் மாமி தெய்வமாகிவிடுவா. ‘நீ என்ரை தெய்வம்’என்பார். ‘நீ இல்லாட்டி நான் எப்பவோ செத்துப்போயிருப்பன்’என்று வாய்கோணி அழுவார். குடிவெறியில் அழும்போது மூக்கு இன்னும் பெரிதாக விடைத்துவிடும். கடைவாயால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ‘சரியப்பா… சாப்பிட்டிட்டுப் படுங்கோ… படுங்கோ…’என்று மாமி எழுபத்தேழாவது தடவையாகச் சொல்வது அந்த இரவில் எங்கள் வீடுவரைக்கும் கேட்கும்.

மணியம் மாமாவைச் சாராயம் குடித்திருக்கும் நாட்களில் அவர் கொம்பேறிமூர்க்கனாகிவிடுவார். வஞ்சகமில்லாமல் அன்னபாக்கியம் மாமியையும் பிசாசாக்கிவிடுவார். ‘எடியேய்….’என்று அழைத்து தூஷணங்களை ‘இந்தா பிடி’என்பதாய் அள்ளிச்சொரிவார்.

“நீ அண்டைக்கு என்ன சொன்னனீ…” திடீரென்று ஞாபகம் வந்தாற்போல கேட்பார்.

“என்ன சொன்னனான்?”-இது மாமி

“என்ன சொன்னனி எண்டதுகூட மறந்துபோச்சோ… அவ்வளவு கொழுப்பாடி உனக்கு”

கடைசிவரையில் மாமி என்ன சொன்னவா என்பதை அவருஞ் சொல்லமாட்டார். மாமியும் கேட்கமாட்டா.

‘இண்டைக்கு என்ன கிழமை?’என்று பதினைந்து தடவையாகிலும் கேட்பார். அப்படிக் கேட்பதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ‘இவர் நாளைக்கு விடிய வேலைக்கு எழும்ப வேண்டிய ஆள்’என்று நிச்சயம் நினைக்கத்தோன்றும். மாமி மூன்று தடவைக்கு மேல் பதில் சொல்ல மாட்டா. அவரது கேள்வி இடுப்பிலிருக்கும் சறத்தைப் போல அனாதையாகக் கிடக்கும். “பொக்கற்றுக்குள்ள அறுபத்தாறு ரூபா முப்பத்தைஞ்சு சதம் இருக்கு”என்பார் கவனமாக. எண்ணிப்பார்த்தால் சரியாகத்தானிருக்கும். அதிலெல்லாம் ஆள் வலுநிதானம்.

மாமா ஊருக்கு வெளியில் தீர்த்தமாடப் போகும் நாட்களில் பெரும்பாலும் அவர் குழந்தையாகிவிடுவார். யாராவது போய்த் தூக்கிக் கொண்டுதான் வரவேண்டும். தூக்கிக்கொண்டு வந்து விறாந்தையில் கிடத்தும்வரை கண்ணை மூடிக்கொண்டிருப்பார். தனது விறாந்தைச் சூடு தனியாக அவருக்குத் தெரியும் போலும். கிடத்தியவுடன் கண்ணைத் திறந்து மாமியைப் பார்த்து குழந்தைகளுக்கேயுரிய தெய்வீகப் புன்னகை ஒன்றை வழியவிடுவார். மாமி தனது தலையெழுத்தை நொந்து தலையிலடித்துக்கொள்வா.

அவருக்கு எப்போதோ செத்துப்போன தனது தாயின் ஞாபகம் திடீரென வந்துவிடும். விம்மி விம்மி அழுவார். தங்கச்சிமார் ஞாபகம் பொங்கிப் பொங்கி வரும். ‘உன்னைப் போய்க் கட்டினன் நாயே…நாயே’என்று வீட்டுக்குள்ளேயே காறித்துப்புவார். வாசலில் படுத்திருக்கும் சீசர் நாய்க்குத் தெரியும்… அவர் தன்னைச் சொல்லவில்லையென்று. அதனால், அது மாமியை ஒரு கண்ணை உயர்த்திப் பார்த்துவிட்டுப் பேசாமல் (குரைக்காமல்) படுத்திருக்கும். முப்பது கிலோவுக்கு மேலிருக்கும் சீசரைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சுவார். ‘என்னை யாராவது விடுவிக்கமாட்டீர்களா?’என்பதான பரிதாபப் பார்வையோடு சீசர் அவரது மடியில் பொதுக்கென்று அமர்ந்திருக்கும். மாமிக்குத் தன்னை அவர் ‘நாய்’என்று விளிப்பது பிடிக்காது. வாயை வைத்துக்கொண்டிராமல் பதிலுக்கு ஏதாவது சொல்லிவிடுவா. பிறகென்ன… மணியம் மாமா கெம்பிக் கிளம்பிவிடுவார். தும்புத்தடியை எடுத்துக்கொண்டு அடிக்க ஓடுவார். பிள்ளைகள் இப்போது அரங்கத்திற்கு வந்தாகவேண்டும். அவர் அடிக்கத் தூக்கிக்கொண்டு போகும் பொருட்களை அவர்கள் வாங்கி வாங்கி ஓரிடத்தில் வைப்பார்கள். இவரும் கொடுத்துக்கொண்டேயிருப்பார். செருப்பு, தும்புத்தடி, கதிரை, கோப்பை, ஈசிச்செயார் தடி இப்படிச் சில ஆயுதங்கள் விறாந்தையில் ஓரிடத்தில் குவிந்து கிடக்கும். பாசுபதாஸ்திரத்தை ஒருமுறைக்குமேல் பிரயோகிக்க மாட்டேன் என்று யாருக்கோ யாரோ சத்தியம் செய்துகொடுத்ததுபோல இரண்டாந் தடவை அவர் அந்தப் பொருட்களை அடிப்பதற்காகப் பிரயோகிக்கமாட்டார். மணியம் மாமா வீட்டு அமளிகளை றேடியோவில் ‘இரவின் முடிவு’ பாடல்களைக் கேட்பதுபோல நாங்கள் கேட்டுக்கொண்டு படுத்திருப்போம். அவர் சன்னதம் முற்றி அந்த இரவில் வீட்டை விட்டு வெளிக்கிட்டு வீதிக்கு ஓடமுயலும் தருணங்களில் மட்டும் எங்களது வீட்டிலிருந்து யாராவது ஒரு ‘ஆம்பிளை’ மணியம் மாமாவைப் பிடித்துவரப் போகும் பிள்ளைகளுக்குத் துணையாக, ‘இந்தாளுக்கு வேறை வேலையில்லை’என்று புறுபுறுத்துக்கொண்டு வெளியே போவார்.

விடிந்ததும், ‘இந்த மனிதரா இரவு இப்படிச் சன்னதமாடியது?’என்று வியக்கும்படியாக முன் விறாந்தையில் அமர்ந்து ஆங்கிலப் புத்தகங்களிலொன்றை ஏந்திப் படித்துக்கொண்டிருப்பார். உண்மையிலேயே அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். ஊரிலுள்ளவர்களுக்கு காசு வாங்காத மொழிபெயர்ப்பாளராகவும் அவரே இருந்துவந்தார். அப்படியான நாட்களில் நாங்கள் பச்சை மிளகாய், வெங்காயம் கேட்டு வேண்டுமென்றே மணியம் மாமா வீட்டுக்குப் போவோம். போர்க்களம் முடிந்த அடுத்தநாள் மாமாவின் முகத்தைப் பார்க்காமல் தேத்தண்ணிக் கோப்பையைக் கொண்டுவந்து டங்கென்று ஓசையெழ வைத்துவிட்டு மாமி விறுக்கென்று போவா. மணியம் மாமா கண்சிமிட்டிக்கொண்டே எங்களிடம் கேட்பார்:

“தேத்தண்ணி ஏன் பிள்ளை இப்பிடிக் கொதிக்குது”

நாங்கள் மாமியைப் பார்த்துச் சிரிப்போம். அவவுக்கும் கொடுப்புக்குள் சிரிப்பு பொத்துக்கொண்டு வருவது தெரியும். எங்களுக்கு மட்டும் தெரியும்படியாக இரகசியமாக ஒரு புன்னகையை வீசுவா. மாமாவின் பக்கம் திரும்பும்போது மட்டும் கெருடன் பார்வையை எறிந்துவிட்டுப் போவா. மணியம் மாமா மிகுந்த நகைச்சுவை உணர்ச்சி உடையவர். அது அவ்வப்போது வெளிப்படும். அதிலும் மாமி கோபமாக இருக்கும்போது கிண்டுவதென்றால் அவருக்கு தொதல் சாப்பிடுவதுமாதிரி.

“இந்த மணிக்கூடு இண்டைக்கு ஒரே சத்தமாக் கிடக்கு. பற்றியைக் கழட்டி வைக்கவேணும்”

திருகோணமலையில் இருந்த தனது சொந்தக்காரர் ஒருவரைப் பார்க்கப் போன மாமா சில நாள் கழித்து அம்மன் கோயிலடிக் கிணற்றுக்குள்ளிருந்து வெளிப்பட்ட கதை ஊருக்குள் பிரசித்தம். இரவு நேரம் கிணற்றுக்குள் யாரோ விழுந்த சத்தம் கேட்டு வயலுக்குள் நின்ற சில பெடியள் ஓடிப்போய்ப் பார்த்தார்கள். யாரோ தண்ணீருக்குள் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருந்தது தெரிய குதித்து மீட்டிருக்கிறார்கள். மேலே கொண்டு வந்து பார்த்தால்…. அது மணியம் மாமா.

“மணியத்தார் நீங்கள் திருகோணமலைக்கெல்லோ போனனீங்கள்… திடீரெண்டு கிணத்துக்குள்ளாலை இருந்து வாறியள்?”என்று தூக்கிய பெடியங்களில் ஒருவன் கேட்டிருக்கிறான்.

“திருகோணமலையிலை தொடங்கிற குறுக்கு வழி இஞ்சைதான் வந்து முடியுது”என்று அவர் ஈரம் சொட்டச் சொட்ட நின்ற நிலையில் சொல்லியிருக்கிறார். தூக்கிவிட்ட பெடியங்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டார்களாம்.

“என்ன நடந்தது மாமா?”நாங்கள் கேட்டோம்.

“லேற்றாத்தான் பஸ் கிடைச்சுது. வழியிலை இறங்கித் ‘தேத்தண்ணி’குடிச்சனான். சந்தியிலை இறங்கி குறுக்குவழியாலை வீட்டை போவமெண்டு வந்தால் இருந்தாப்போலை ‘பாக்’தோளிலை கொழுவினபடி இருக்க தண்ணிக்குள்ளை போய்க்கொண்டிருக்கிறன். இருட்டு.. வழியிலை கொஞ்சம் மாட்டி வேற போட்டன்… அறுவார் கிணத்துக்கு கட்டும் கட்டேல்லைப் பிள்ளை”

“மாமியைக் காதலிச்சா கலியாணம் கட்டினனீங்கள்?”ஒருநாள் கேட்டுவைத்தோம்.

“அதையேன் கேக்கிறாய் பிள்ளை…”என்று ஆரம்பித்து கதைகதையாகச் சொன்னார்.

“நான் ஒருநாள் இரவு இவையின்ரை வீட்டு ஓட்டைப் பிரிச்சு இவ படுத்திருந்த அறைக்குள்ளை இறங்கீட்டனெல்லோ…” சாகசம் செய்துவிட்ட பெருமிதம் விழிகளில் மிளிரச் சொன்னார்.

“மாமி பயந்துபோய்க் கத்தேல்லையா?”

“அவவேன் கத்திறா… சத்தம் போடப் போன தங்கச்சியாரையும் ‘அது கொத்தானடி’எண்டு சொல்லி அடக்கின ஆளெல்லோ”

மாமியின் சுருக்கம் விழுந்த முகத்தில் அப்படியொரு வெட்கம் வந்துவிடும். முகம் கனிந்த பழம் போலாகிவிடும். அத்தகைய பொன் பொழுதுகளில் மாமியைப் பார்க்கும் மாமாவின் கண்களில் காதலானது ‘பென்சன்’ நாளன்றைய சாராயம்போல பெருக்கெடுத்தோடும். அந்த வயதான காலத்திலும் அவர்கள் ஒருவர் மீதொருவர் அவ்வளவு காதலோடிருந்தார்கள். மாமா அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டுச் சாப்பிடாமல் படுக்கும் நாட்களில் மாமி அவருக்கு அருகில் அமர்ந்திருந்து பச்சை முட்டையை உடைத்து உடைத்து மாமாவின் வாயில் ஊற்றிக்கொண்டிருப்பாவாம்… கடைவாயால் முட்டை வழிய அவர் அடுத்த நாளுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருப்பாராம் என்று அவர்களது பிள்ளைகள் சிரித்தபடி சொல்வார்கள்.

இழந்துபோனோம். எல்லாவற்றையும்… எல்லோரையும்… ஞாபகங்கள் மட்டுந்தான் மிச்சம்.

பெயர்ந்து பெயர்ந்து பெயர்ந்து இடைத்தங்கிய ஊரொன்றின் வீட்டில், கண்ணிக்குத் தப்பி விதை பொறுக்கும் பறவையென இரகசியமாகப் போய் நிற்கும் நாட்களில் இரவுகளில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்கும். இராணுவம் ரோந்து போவது மனக்கண்ணில் தெரியும். மணியம் மாமா நினைவில் வருவார். இருளடர்ந்த வீதிகளில் அவரது சைக்கிள் அந்த வேலிக்கும் இந்த வேலிக்குமாக உலாஞ்சுகிற காட்சி விரியும். கதைப்பதுபோல கரகரத்த குரலில் அவர் பாடுவது கேட்கும்.

“பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக
பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக”

பல்லாக்குகளெல்லாம் பாடையில் போகுமென்று யார் கண்டது?


ஈழநேசனுக்காக எழுதியது…

நன்றி:eelanesan.com


9.29.2009

ஈழம் குறித்த பிஞ்ஞவீனத்துவக் கதை அல்லது உரையாடல்


எனக்கு அப்பாம்மாவால் இடப்பட்ட பெயர் கிருகலட்சுமி. நான் பிணம் – பிரியன், நொய்யனார், பாரு நந்திதா, சோ.பி. மாணக்யா, ச்சோவு சுந்தர், மறை கழன்றவன், மீ.ஜி. சுரேஷ் இவர்களையெல்லாம் வாசித்தபிற்பாடு என் பெயரை புகலி என்று மாற்றிவைத்துக்கொண்டேன். அந்தப் பெயர் எனக்குப் பொருத்தமாக இருப்பதாக காதல் பெருகிவழியும் மாலையொன்றில் என் மடியில் படுத்திருந்தபடி சத்தியன் சொன்னான். நாங்கள் எப்போதாவது பிசாசுகளின் வாயால் பேசமுற்படுகையில், எனது பெயரிலுள்ள ‘க’வைத் தூக்கிவிட்டு ‘புலி’என்றே சத்தியன் என்னை விளித்துப் பேசுவான். சத்தியன் சராசரித் தமிழன். அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவன்தான் இந்தக் கதையில் அதிகபட்சமான உரையாடலை நிகழ்த்திச் செல்கிறவன் (ஹா) என்றவகையில் அவனை அறிமுகப்படுத்தித் தொலைக்கிறேன். புத்தகம் வாசிப்பதும் அவ்வப்போது எழுதுவதும் தனக்கு எதிர் அரசியல் பேசும் நண்பர்களின் விவாதங்களைக் கட்டுடைப்பதுமாகிய (ஹா) வேலைகளைச் செவ்வனே செய்துவருகிறான். இவை கழிந்த நேரங்களில் நாங்கள் படுத்துக்கொள்வதுமுண்டு.

“தொன்மங்களிலிருந்து மிதந்துவந்த மலர்களின் வாசனையில் களியேறி உன்மத்தித்த அவன் அந்த வாசனை வரும் திசை தேடியலைந்து நெடுவழியில் தொலைந்துபோய்க்கொண்டிருக்கையில் சந்தித்த அநிருத்தாவின் விழிகளிலிருந்து வழிந்த ஆன்மநிவேதனத்தை அருந்தி அவளில் காமுற்று சுயமைதுனம் செய்துகொள்ளத் தனதிடம் திரும்பிச்சென்றான்…”என்ற வரிகளை நான் வாசித்த நாளிலிருந்து சத்தியனைத் தேடியலைந்து மூத்திரவாடையடிக்கும் அறைச்சுவரொன்றில் முட்டிநின்றேன். (மூத்திரம் என்ற சொல் வராவிட்டால் நொய்யனார் இந்தப் பிரதியை பின்னவீனத்துவம் இல்லையென்று நிராகரித்துவிடுவான்) அவன் எனக்கு வாங்கிக்கொடுத்த இரண்டு போத்தல் 70ரூபா கோல்கொண்டாவில் நான் கவிழ்ந்துபோனதுமன்றி, அன்றுமுதல் அவனது அறையில் வசிக்கலுற்றேன்.
சத்தியன் சிக்கலில்லாத அறைத்துணை.
ஒன்றுக்கடித்துவிட்டு கழிப்பிருக்கையின் மேல்மூடியைத் திரும்பவும் இறக்கிவிட மறந்துபோவதன்றி, உள்ளாடையை கால்வரை இறக்கிவிட்டு நின்றநிலையிலேயே ஒரு காலைத் தூக்கி அதை உத்தேசமாக அறையின் மூலையொன்றில் சுழற்றியெறிந்து- பின் தேவைப்படும் போது மட்டும் அதைக் கால்களால் கொழுவி இழுத்து அணிந்துகொள்ளுமளவு சுத்த நேசன் என்பதன்றி, அவனது காலுறைகளிலிருந்து கிளர்ந்தெழும் நாற்றம் செத்த எலிகளை நினைவுபடுத்தி எனது புத்தகங்களின் பாதுகாப்பைக் குறித்த மனத்தொந்தரவை எனக்குத் தருவதன்றி, நடுநிசியில் துர்க்கனவு கண்டு ‘புலி கொல்… புலி கொல்’என்று கத்துவதன்றி அவனால் எனக்கு எந்த உவத்திரமும் நேர்ந்ததில்லை.
நாங்கள் வோட்காவும் ஆரஞ்சுப் பழச்சாறும்போல அவ்வளவு நெருக்கமாக வாழ்ந்திருந்தோம். திரு.அல்பிரட் அவர்கள் எங்களது அறைக்கு வந்து அப்படியொரு விவாதத்தை ஆரம்பித்துவைத்திருக்காவிட்டால் இனிய வாழ்வு இவ்விதமே கழிந்திருக்கும். அவர் சிவந்த நிறமுடைய உயர்ந்த மனிதர். பெரும்பாலும் இயற்கை உபாதை அழைக்கும்போதும் உணவு உட்கொள்ளவும் மட்டுமே புத்தகங்களை விலக்கி எழுந்துபோகும் பழக்கமுடையவர். இருந்தும், சமகாலச் செய்திகளை அவர் தனது நாக்குநுனியில் சேகரித்துவைத்திருந்தார்.

காருண்யம் பெருகிவழியுமொரு நண்பனின் கடனுதவியால் அன்றைய மாலையைக் கொண்டாடிக்கொண்டிருந்தவேளையில் அல்பிரட் எங்களது அறையை நாடி வந்தார். ஐஸ் துண்டங்கள் மிதந்த மஞ்சள்நிறத் திரவக் கடவுளைப் பங்குபோடப் புதிதாக ஒருவர் முளைத்ததில் கலவரமுற்றது சத்தியனின் முகம். ஆனால், மரியாதை நிமித்தம் அவன் அவரைச் சகித்துக்கொள்ளவேண்டியிருந்தது. அல்பிரட் அருமையான சம்போகி என்பதை நான் எப்படியோ அறிந்துவைத்திருந்தேன். அதனால், அவரது பிரசன்னம் என் முகத்தில் காதலின் ஒளியைப் பூசியது என்பதை நான் உங்களிடம் இரகசியமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

பேச்சு வழக்கம்போல அரசியலை நோக்கித் திரும்பியது. அகதிமுகாமில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களைப் பற்றி துயரந்ததும்பிய குரலில் நெடுநேரம் சொல்லியழுதவாறிருந்தான் சத்தியன். அவனது துயரம் அறைச்சுவர்களை அழுக்கிலிருந்து மஞ்சள்நிறத்திற்கு மாற்றியது. இருந்தாற்போல அல்பிரட் அவர்கள் ஒரு கேள்வியை சத்தியனை நோக்கி எறிந்தார்.

“கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய போராளிகள் என்னவானார்கள் நண்பரே?”

அந்தக் கேள்வியால் சத்தியனின் முகம் துர்க்கனவு கண்டு விழித்தவனுடையதாயிற்று. பிறகு மெல்ல அவிழும் மலரினையொத்ததாகக் கனிந்தது.

“அவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுவிட்டார்கள். இத்தனை இலட்சம் மக்களின் வாழ்வைச் சீரழித்து அகதிமுகாம்களுக்குள் தள்ளியவர்களுக்குத் தக்க தண்டனை கிடைத்திருக்கிறது”ஏறக்குறைய அவன் கூவினான்.

சத்தியனின் முகம் அத்தனை விகசித்து நான் பார்த்ததே இல்லை. மலங்கழித்துவிட்டு கழிப்பறையிலிருந்து வெளியில் வரும்போதுகூட அத்தனை ஆசுவாசத்தை நான் அவனது முகத்தில் கண்டதில்லை. அல்பிரட் நெடியதொரு பெருமூச்சோடு என்னைப் பார்த்தார். ஐயமில்லாமல் அழகன்தான் இந்த மனிதன் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

“புலிகள் உருகுவேயிலிருந்து வந்தவர்களா?”

சத்தியனின் முகம் கெட்ட வார்த்தைகளாலான பின்னூட்டத்தை வாசித்ததுபோலாயிற்று. அவனது உதட்டுக்குள் எனக்கு மிகப் பரிச்சயமான அந்தத் தூஷணத்தை உணர்ந்தேன்.

“இல்லை”

“பீஜிங்கிலிருந்து வந்தவர்களா அவர்கள்?”

“இல்லை”

“அவர்களில் யாருடையவாவது அப்பாவின் பெயர் மிக்கெலாஸ்கி என்றிருக்கிறதா?”

“இல்லை”

“செனாற்றோ என்ற கடைசிப் பெயருடையவன் எவனாவது புலியெனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறானா?”

“சாத்தியமில்லை”சத்தியன் உரக்கக் கத்தினான்।

“சீ வான் குங் என்ற அப்பன் பெயரைக் கொண்டவன்?”

“இல்ல்ல்ல்லை”சத்தியனின் தாடி உரோமங்கள் சிலிர்த்துக்கொண்டன. அவனது கைகள் பக்கத்திலிருந்த செந்நிற கெட்டி அட்டைபோட்ட புத்தகத்தை வெறியோடு பற்றின.

“அப்படியானால் அவர்களையும் விடுவிக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் அழுத்தங்களைக் கொடுக்கவில்லை?”

திரு.அல்பிரட் தன் நீளமான விரல்களால் கழுத்தைச் சொறிந்தபடி கேட்டார்.

“அவர்கள் கொலைகாரர்கள்”சத்தியன் கத்தினான்.

“சகோதரனே! அவர்கள் உங்களுக்காகவும் போராடவில்லையா?”

“இல்லையென்று சொல்லமுடியாது… அதேசமயம் அவர்கள் சகோதரர்களையே கொன்றுகுவித்தவர்கள். அதிகம் ஏன்? கடைசி நேரங்களில் அவர்களை நம்பிய மக்களையே கொன்றழித்தவர்கள்… ஐயமிருந்தால் புகலியைக் கேட்டுப்பாருங்கள்”

திரு। அல்பிரட் தனது செம்பட்டை இமைகளை மலர்த்தி என்னைப் பார்த்தார். அந்தச் சமயத்தில் நான் அவரை முத்தமிட விரும்பினேன்.

“அப்படித்தான் அறிகிறோம். ஆனாலும், இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் அதே மக்களுக்காகத்தான் தம்முயிரை அர்ப்பணித்து மாய்ந்துபோனார்கள்” என்றேன்.

“நீயொரு துதிபாடி”கத்தினான் சத்தியன். என்னைக் குறிவைத்து அவனால் வீசியெறியப்பட்ட புத்தகம் குறிதவறி, வைன் குவளையைத் தள்ளிக்கொண்டுபோய் சுவரோடு சாத்திவைத்து நொருக்கியது.

“தலைவர்கள் தவறுசெய்தார்கள்... அவர்கள் அழிக்கப்பட்டார்கள் எனில், அவர்களால் வழிநடத்தப்பட்ட போராளிகள் என்ன செய்வார்கள்… பாவம்” அல்பிரட் மதுவாசனையுடைய பெருமூச்சொன்றினை வெளியேற்றினார்.

“சிறைகள் வதைக்கூடங்கள் அல்லவா? எனக்கு உங்கள் நாட்டின் சிறைக்கூடங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது”எனத்தொடர்ந்தார் மேலும்.

சத்தியனின் கண்கள் கனவுகாண்பதுபோன்ற கிறக்கத்திலாழ்ந்தன. கலவியின் உச்சத்தில் அவன் அப்படிக் கிறங்குவதைக் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.

“சப்பாத்துக் கால்களால் பலமாகத் தாக்குவார்கள். பிறகு தலைகீழாகக் கட்டித்தொங்கவிடுவார்கள். மிளகாய்த்தூள் நிரப்பப்பட்ட சாக்குப்பையால் முகத்தை மூடிக் கட்டுவார்கள். இடமிருந்தும் வலமிருந்தும் கனத்த இரும்புக்குழாய்களால் தாக்குவார்கள். மலங்கழிக்கும் இடத்தினுள் இரும்புக்குழாய்களைத் திணிப்பார்கள். கொழுவியிழுக்கக்கூடிய கம்பியை மலவாசலுக்குள்ளால் செலுத்திச் செலுத்தி இழுக்கும்போது கம்பிகளில் தசைகள் ஒட்டிக்கொண்டு வரும். முதுகுத்தோலை உரித்து அதனுள் மிளகாய்த்தூளை வைத்து மறுபடியும் தைத்துவிடுவார்கள். கால்களையும் கைகளையும் இருவர் பிடித்துக்கொள்ள குதிகால்களில் குண்டாந்தடிகளால் அடிப்பார்கள். நகக்கணுக்களுள் ஊசிகளைச் செலுத்துவார்கள். தேர்ந்த பல்வைத்தியரைப் போல பற்களைக் குறடுகளால் இழுப்பார்கள். பெண்களாயிருந்தால் பிறப்புறுப்பினுள் இரும்புக்குழாய்களையும் தங்களையும் உள்நுழைப்பார்கள்…”
அல்பிரட் பதைத்துப் போய் எழுந்து நின்றார். அவரது கன்னங்களில் கண்ணீர் வழியவாரம்பித்திருந்தது.

“வரலாறு உங்களை மன்னிக்காது”என்றார்.

“அவர்களும் உங்களவர்கள். வேற்றுக் கிரகவாசிகளல்ல. தமது மக்களுக்காகப் போராட அழைக்கப்பட்டவர்கள். அவர்களின் சிறையிருப்பை நீ கொண்டாடுகிறாயா?”

சத்தியனுக்குள் பேய் புகுந்துகொண்டுவிட்டது.

“தாம் செய்வது இன்னதென்று அறிந்துதான் செய்கிறது எங்கள் நாட்டு அரசாங்கம்... நீ உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ… இது எங்கள் உள்நாட்டு விவகாரம்”என்று கத்தினான்.

அல்பிரட் திடீரென முழங்காலிட்டு அமர்ந்து மஹ்மூத் தார்வீஷின் கவிதையொன்றைச் சொல்லவாரம்பித்தார்। துயரமும் போதையும் அவரது முகத்தை வைன் நிறத்திற்கு மாற்றியிருந்தன.

……………………
தீப்பொறி கனலும் விழிகளும்
இரத்தம் படிந்த கரங்களும் உடையவனே!
இரவு குறுகியது
சிறைச்சாலைகள் என்றென்றைக்கும் எஞ்சியிரா
சங்கிலிக் கணுக்களும் எஞ்சியிரா
நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்னும் இறக்கவில்லை
……………………………

கவிதையின் நான்காவது வரியில் நான் அல்பிரட்டோடு இணைந்துகொண்டேன். கவிதைப் பிரார்த்தனையின் இடையில் கடைக்கண்ணால் சத்தியனைப் பார்த்தபோது அவன் எனது புத்தகங்களையும் உடைகளையும் கூடத்தில் கொண்டுவந்து குவிக்கவாரம்பித்திருந்தான். அசதாவால் மொழிபெயர்க்கப்பட்ட ‘வீழ்த்தப்பட்டவர்கள்’ குப்புறக் கவிழ்ந்து இரங்கிய கண்களால் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது.

பிற்குறிப்பு: நீதி யாதெனில், வாடகை கொடுப்பவனோடு ஒண்டிக்கொண்டிருக்கிற ஆள் முரண்படக்கூடாது.9.16.2009

திஸநாயகத்தின் தவறுகள்


தானியக் களஞ்சியங்களை
போர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்
சகோதரனே!
உண்பதற்கு மட்டுமே
நீ வாயைத் திறந்திருக்க வேண்டும்।

உனது எழுதுகோலுள்
குருதியையும் கண்ணீரையும்
ஊற்றியது யார் தவறு?

உடற்சாற்றில் வழுக்கி
ஊடகதர்மம்
அலமலந்து விழுந்துகிடக்கும் மண்ணில்
உண்மையன்று;
நமக்கெல்லாம்
உயிரே வெல்லம் என்பதறியாயோ?

'ஜனநாயகம்' என்ற சொல்
பைத்தியம் பிடித்து
மலங்க மலங்க விழித்தபடி
தன் கண்களை ஒளித்துக்கொள்ள
இடம்தேடியலையும் தெருவொன்றிலிருந்து
நீ உச்சரித்திருக்கக்கூடாது
அந்த இற்றுப்புழுத்த வார்த்தையை...

மனிதவுரிமையாளர்களின்
குறிப்புகளைப் பிடுங்கிக்கொண்டு
தரதரவென்று இழுத்துப்போய்
விமானமேற்றும் நாட்டிலிருந்தபடி
என்ன துணிச்சலில் நீ எழுதினாய்
எரிதழல் சொற்களை?

அகதிமுகாமொன்றின்
மலக்குழியின் பக்கப்பலகைகள் இற்றுவிழுந்து
புழுக்களுள் புதையுண்டு
செத்தொழிந்த சிறுவர்கள் கேட்டார்களா
நாற்றமடிக்கும் சமவுரிமையை
எழுதக்கூடாதா என்றுன்னை?

போர்க்குற்றங்களை எழுதுவது
மாபெரிய போர்க்குற்றம்!!!

எனினும்
எமதினிய சகோதரா!
'அவர்கள்’ விடுவிக்காதுபோனாலும்
வரலாறு உன்னை விடுவிக்கும்.

9.14.2009

பதிவெழுத வந்த கதை

தொடர்பதிவெனப்படுவனவெல்லாம் பெரும்பாலும் நமது தனிப்பட்ட வாழ்வைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்வனவாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். அதைச் ‘சுயபுராணம்’என்று சுருக்க மனம் வருவதில்லை. பார்க்கப்போனால் எல்லாப் புனைவுகளிலும் சுயம் கலந்திருக்கவே செய்கிறது. நாம் எழுதும் எல்லாக் கதைகளிலும், கவிதைகளிலும் ஏதோவொரு வடிவில் நாம் இருந்துகொண்டுதானிருக்கிறோம். ஆயாசம் மிக்கதென எப்போதும் குறைப்பட்டுக்கொள்ளும் இந்த வாழ்வில் இவ்வகையான பகிர்தலும் ஆசுவாசமும் வேண்டித்தானிருக்கின்றன. ‘பதிவெழுத வந்த கதை’யைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லி சிநேகிதி அழைத்திருந்தார். பிறகு அய்யனார்… இருவருக்கும் நன்றி.

பதினொரு ஆண்டுகாலம் வாழ்ந்தபிற்பாடும், புலம்பெயர்ந்த நாடான கனடாவோடு ஒட்டமுடியாமல்போக, 2003ஆம் ஆண்டு ஈழத்துக்குத் திரும்பிப்போனேன். அப்போது அங்கே போர்நிறுத்தம் அமுலில் இருந்தது. எனினும், நிழல்யுத்தம் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தது. ஆனால், அது பொதுமக்களின் இயல்புவாழ்வைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. வெளிநாடுகளிலிருந்து நிறையப்பேர் திரும்பிவந்திருந்தார்கள். ஆம்… அவர்களால் (எங்களால்) நிலங்கள் விலையேறின. வீடுகள் உப்பரிகைகளோடு உயர்ந்தன. அதுவொரு கனாக்காலம். நாங்கள் மகிழ்ச்சியோடு அந்நாட்களில் அங்கு வாழ்ந்திருந்தோம் என்பதை ஞாபகங்கொள்கிறேன். அந்த அழகிய கிராமத்தில் எங்கள் வீடு அன்பின் கூடு. அந்த வீட்டில் நாங்கள் பதின்மூன்று பேர் ஒன்றாக வாழ்ந்திருந்தோம். யுத்தநிறுத்த முறிவினைத் தொடர்ந்து பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரவுகள் எங்களுடையதாக இருக்கவில்லை. சில பகல்களும் அவ்வண்ணமே. யமன்கள் மோட்டார்சைக்கிளில் வந்துபோயின. நாய்கள் குரைக்கும் ஓசையைக் கேட்டபடி மரணபயத்தோடு எங்கள் சுவாசம் எங்களுக்கே இடியென முழங்கப் படுத்திருந்த இரவுகளை மறக்கமுடியாது. அங்கு தொடர்ந்தும் வாழமுடியாத சூழலில், 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊரையும் உறவுகளையும் விட்டுத் தமிழ்நாட்டுக்குப் பெயர்ந்து வந்தோம்.

உயிர்ப்பயத்திலிருந்து தப்பித்து அந்நியத்தினுள் விழுந்தோம்। சென்னையில் எங்களுக்கு யாரையும் தெரியாது. ஒரு நண்பர்தானும் இல்லை. உறவினர்களும் இல்லை. எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது… அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கல்லிருக்கையில் அமர்ந்து போவோர் வருவோரையெல்லாம் ஏங்கிய கண்களால் பார்த்துக்கொண்டிருப்போம். ஒரு புன்னகைதானும் இல்லை. சென்னையில் நாங்கள் அநாதைகளாக, அடையாளமற்றவர்களாக வாழ்ந்தோம். நினைக்குந்தோறும் துயரம் பெருக்கும் நாட்கள் அவை. தன்னிரக்கத்தில் கரையவைக்கும் ஞாபகங்கள் அவை.

உறவினைத் தொடுக்கும் ஒரே சரடாக இணையமே இருந்தது. அப்போது நான் அறிந்திருந்த தளங்கள் நான்கைந்துதான். ஆறாம் திணை, திண்ணை, தமிழ்நாதம், தமிழ்நெற். ஹொட்மெயிலிலிருந்து ஜிமெயிலுக்கு மாறி இணைய அரட்டையைத் தொடங்கியதும் பிரமாண்டமான கதவுகள் திறந்துகொண்டதைப் போல இருந்தது. மயங்கி மூச்சடைக்கும்போதில் காற்றுவெளியில் தூக்கியெறியப்பட்டதைப் போன்றதொரு ஆசுவாசம். அதன் வழியாக புதிது புதிதாக நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். கனடாவிலிருக்கும் எனது தோழி பிரதீபா ஒருநாள் கேட்டார் “நீங்கள் ஏன் வலைப்பதிவொன்றை ஆரம்பித்து எழுதக்கூடாது?”- “எழுதலாமே… ஆனால், வலைப்பதிவு என்றால் என்ன? இணையத்தில் தமிழில் எழுதுவது நம்மைப்போன்ற சாதாரணர்களுக்குச் சாத்தியமா?”

‘இளவேனில்’என்ற சொல் எனக்கு எப்போதும் பிடிக்கும். அது மலர்களின் வாசனையை, இலைகளின் பசுமையை, தென்றலின் பாரபட்சமற்ற நேசத்தை நினைவூட்டுவது. மேலும், அந்தப் பெயரில் எனக்குள் நிறைவேறிய கனவொன்றும், உதிர்ந்துபோன கனவொன்றும் இருக்கின்றன. அதையே எனது வலைப்பூவிற்குப் பெயராகச் சூட்டினேன். பிரதீபா மட்டும் அன்றைக்கு வலைப்பூ பற்றிக் குறிப்பிடவில்லையெனில், இப்போதும் எங்காவது கடற்கரையில் அமர்ந்து, திரும்பிச் செல்லமுடியாத அக்கரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பேனாயிருக்கும்! கவிதைகள், கதைகள், அனுபவப் பகிர்வுகள் எனத் தொடங்கி, அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள் என்று கடந்தோடி இணையத்தில் எதிர்க்கருத்தாளர்களுடன் குடுமிப்பிடிச்சண்டை போடுமளவிற்கு நான் வளர்ந்திருக்கிறேன். (காம்ப்ளான்) இதை எழுதும்போது மெல்லிய புன்னகை ஓடுகிறது. அண்மையில் என்னோடு பேசிய ஒரு நண்பர் கேட்டார்: “ஏங்க தமிழ்நதி உங்க வலைத்தளத்தில ஒரே பிணங்களாக விழுந்துகிடக்குதே…”என்று. “ஏன்?”என்று வினவினேன். சில பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லிச் சிரித்தார். “என் நண்பர்களிடம் கேட்டால் தெரியும். நான் எவ்வளவு அப்பாவி என்பது…”என்று அவருக்கு விளையாட்டாகப் பதிலளித்தேன். அப்புறாணிகளை உசுப்பேற்றினால் அதுகளுந்தான் பாவம் என்ன செய்வது? ‘மௌனம் கலகநாஸ்தி’ என்பதெல்லாம் என் அகராதியில் இல்லை. ‘கலகமில்லையேல் நியாயமில்லை’ என்பதுதான் என் வேதம். தனிப்பட்ட விடயங்களுக்காக நான் சண்டையிட்டது… ம்… இல்லையெனலாம். பொதுவான விடயங்கள், அரசியல் என்று வந்தால் கொம்பு சீவிய காளை… (இதிலும் பாருங்கள்… பசு இல்லை. மொழியிலும் வஞ்சகம்) இல்லை… கொம்பு சீவிய பசுவேதான். சின்னக் கொம்பாயிருந்தா சீவக்கூடாதா என்ன?

வலைப்பதிவு எழுதவந்து சம்பாதித்தது, எதிரிகளை மட்டுமன்று; நூற்றுக்கணக்கான நண்பர்களையுந்தான். எனக்கு வரும் அனானி அஞ்சல்களிலிருந்து அகராதிகளில் இல்லாத கெட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறேன். என்றைக்காவது தேவைப்படும். பெண் என்பதும் வேற்று நிலத்திலிருந்து வந்தவள் என்பதும் திட்டுவதற்கு மேலதிக சொற்பிரயோக வசதிசெய்துகொடுக்கின்றன. (இதை எழுதும்போது கழிவிரக்கம் என்ற சொல்லோடு சேர்த்து ஆதவன் தீட்சண்யா நினைவில் வந்துபோகிறார்) இப்போதெல்லாம் எங்காவது இலக்கியக் கூட்டங்களுக்குப் போனால், யாராவது அடையாளங்கண்டு வந்து பேசுகிறார்கள். வலைப்பூவில் நான் பண்ணுகிற அக்கப்போர்கள், அதகளங்கள், தர்க்கங்கள் வெளியில் நிறையப்பேருக்குத் தெரிந்திருந்திருக்கிறது. அந்நேரங்களில், யாருக்கும் தெரியாமல் எழுதிய இரகசியக் குறிப்புகளை சபையில் வாசிக்கக் கேட்பது போல கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கும்.

கனடாவில் இருந்தபோது நிறையப் பத்திரிகைகளில் (நிறைய விளம்பரங்களுக்கிடையில்) எழுதிக்கொண்டிருந்தேன். அது சிலகாலம் விட்டுப்போயிருந்தது. வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதிய கைப்பழக்கத்தால் ஓரளவு எழுத்து வசப்பட இப்போது கதை, கவிதை என வகைக்கொன்றாய் இரண்டு தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. மேலுமொரு கவிதைத் தொகுப்பு அச்சுக்குப் போயிருக்கிறது. குறுநாவலொன்றும் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னதான் சொன்னாலும், நமக்கென்றொரு ‘அடையாளம்’இருப்பது மகிழ்வளிப்பதாகவே இருக்கிறது. எனது வீட்டு முகவரிக்கு நிறையப் புத்தகங்கள் ‘கவிஞர்’என்ற அடைமொழியோடு வந்து பரவசப்படுத்துகின்றன. அங்கீகாரம் என்பது பெரிய கொடை. எழுத்தாளர்கள் பலர் நண்பர்களாக இருக்கிறார்கள். பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கு அருகில் நின்று பேசும் பெருமிதம் கூடியிருக்கிறது. (‘அவங்கல்லாம் யாரு?’என்ற பதிலளிக்கச் சங்கடமான கேள்விகளைக் கேட்கக்கூடாது) இதையெல்லாம் தந்தது இளவேனிலும் தமிழ்மணமும்தான் என்பதை நெகிழ்ந்து சொல்கிறேன். எனது தோழியும் கவிஞருமாகிய குட்டி ரேவதி சிலசமயம் வேடிக்கையாகச் சொல்வதுண்டு… “நீங்கள் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை… எவ்வளவு பேர் உங்களில் பிரியமாயிருக்கிறார்கள்”என்று. தமிழ்நாட்டு மக்கள் எங்களில் எப்போதும் பிரியமாய்த்தானிருக்கிறார்கள். தேர்தல்களின்போதும் தீர்மானங்களின்போதும் மட்டும் அந்தப் பிரியம் காவியுடுத்திக்கொண்டு தூரதேசம் போய்விடுகிறது. அல்லது கைமறைவாய் அளிக்கப்படும் காகித உறைகளுள் அடங்கிவிடுகிறது.

“நீ இந்தக் கட்டுரையிலும் அரசியல் கதைக்க வேண்டாம்”என்று அங்கே அதட்டுவது யார்? நானேதான்!

எழுத்து என்பது அற்புதம். மகோன்னதம். ஆன்மாவை வருடும் மயிலிறகு. என் தாய்மடி. நான் வணங்கும் ஒரே கடவுள். எழுத்து என் தோழி. அதுவே என் காதலனும். எழுத்தே இயற்கை. எழுத்தே வாழ்க்கை. வாழ்வதன் ஒரே பொருளாகிய அதற்கென் நன்றியில் தோய்த்தெடுத்த முத்தங்கள்.

இந்தத் தொடர்விளையாட்டில் கலந்துகொள்ள யாரை அழைப்பதென்று தெரியவில்லை। யாராவது யாரையாவது அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் விதிகளை மீறமுடியாது. ‘வலைப்பதிவெழுத வந்த கதையெழுத’ நான் அழைக்கும் நண்பர்கள்:

மாதவராஜ்
காமராஜ்
தீபா
விஷ்ணுபுரம் சரவணன்
இசை (கோவை)

இவர்களெல்லாம் ஏற்கெனவே எழுதியிருக்கவும் கூடும்:)


9.02.2009

‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்


ஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள்.
முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்கிறோம்.


“தலைவர் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்”

“அவர் இல்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்”

“இராணுவப் பக்கத்தில் கவனம் செலுத்திய அளவு அரசியலிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்”

“முகாம்களுக்குள் இருக்கும் சனங்களை நினைத்தால்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை”

மேற்கண்ட ஒரே சாயலுடைய உரையாடல்களிலிருந்து தப்பித்து ஓடிவிட மனம் அவாவுகிறது. ஏனென்றால், அவை வந்துசேருமிடம் காற்றில்லாத வெளி. திசையழிந்த பனிமூட்டம்.

“முஸ்லிம்களை விரட்டாதிருந்திருக்கலாம்”

“அவ்வப்போது முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுகளில் ஒன்றைத் தேர்ந்திருக்கலாம்”

“அவர் முன்னரே வெளியேறியிருந்திருக்கலாம்”

“இத்தனை சனங்களைச் சாகக் கொடுக்காதிருந்திருக்கலாம்”

எத்தனை ‘லாம்’கள்!

அரங்கில் இல்லாதவர்களை காலம் எப்படிக் கபளீகரம் செய்கிறது என்பதைக் கண்ணெதிரே காண்கிறோம். ‘சீ-சோர்’ விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது எல்லாம். கரையில் இருந்தவர்கள் கடலுக்கும் கடலில் இருந்தவர்கள் கரைக்கும் இடம்மாறிவிட்டார்கள். விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியானது, இதுநாள்வரை தியாகிகள் எனப்பட்டோரை ‘மக்களைச் சாகக்கொடுத்த, அடிமைகளாக்கிய துரோகிகள்’ஆகவும், துரோகிகள் எனப்பட்டோரை மீட்பர்களின் சட்டகத்தினுள்ளும் இடம்மாற்றி அடைத்திருக்கிறது. அன்றேல் அவ்வாறு மாயத்தோற்றம் காட்டுகிறது. (தியாகி, துரோகி வரைவிலக்கண விவாதங்களைப் பிறகொருநாள் முழுக்கட்டுரையொன்றில் பேசலாம்) பிரபாகரனை இன்னொரு சதாம் ஹுசைனாக வரலாற்றிலிருந்து அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்। பல புலி ஆதரவாளர்கள் (முன்னாள்) புனுகுப்பூனைகளாக மாறி ‘மியாவ்’எனக் கத்தி இணையத்தளங்களில் அவலச்சுவை கூட்டுகிறார்கள். ஏற்கெனவே புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கெதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கோ ‘குண்டியிலடித்த புழுகம்’. ‘புலிகளின் வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வெற்றி’என்பதாகப் பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

இதற்குள் காலச்சுவடு அநாமதேயக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு, விடுதலைப் புலிகளை அழிவின் சூத்திரதாரிகளாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறது। ‘வன்னியில் நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகளால் மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது’என்று திருவாய்மொழிந்த ஜேர்மன் சுசீந்திரனின் நேர்காணலை அடுத்து- பேராசிரியர் அ।மார்க்ஸ் அவர்களின், தமிழக எழுத்தாளர்களின் பொது அறிவினைக் குறித்துக் கேள்வி எழுப்பும், புலியெதிர்ப்புக் (அது இல்லாமலா?) கட்டுரையொன்றை வெளியிட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறது ஆதவன் தீட்சண்யாவின் புதுவிசை சஞ்சிகை. கவிஞர் லீனா மணிமேகலையால் ஒழுங்கமைக்கப்பட்ட- ஈழத்தமிழ்க் கவிஞர்களின் கவிதை நூல் விமர்சனக் கூட்டத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை பயபக்தியோடு எழுந்து நின்று பாடிய பௌத்த நெறியாளர் சுகன் கீற்று இணையத்தளத்திலே, கொழும்புவாழ் கோமான் கருணாவை ‘வாழ்க நீ எம்மான்’என்று வியந்து குழைந்திருக்கிறார். ‘நீ இன்றி இன்றளவும் போர் நின்றிருக்க வாய்ப்பில்லை’என்று அவர் விசர்வாதம் அன்றேல் விதண்டாவாதம் பேசியிருக்கிறார். நமது சகபதிவரான த.அகிலனின் இணையத்தளத்திலே வெளியாகியிருக்கும் - அகதிமுகாம் தறப்பாழின் கீழிருந்து எழுதப்பட்ட கட்டுரையிலே ‘விடுதலைப் புலிகளின் கறுப்பு-வெள்ளை அரசியல்’சாடப்பட்டு, சாம்பல் ஓரங்களைக் குறித்துப் பேசவேண்டுமென்று கேட்கப்பட்டிருக்கிறது. அண்மையில் கனடாவில் நடந்த புத்தக விமர்சனக் கூட்டமொன்றிற்குச் சென்றிருந்தேன். (கவிஞர் கருணாகரனின் ‘பலியாடு’, த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை) அங்கு சமூகமளித்திருந்த எழுத்தாளர் சுமதி ரூபன் சொன்னார் “எனது உழைப்பிலிருந்து ஒரு சதம்கூடப் போராட்டத்திற்குச் சென்றுசேரக்கூடாது என்பதில் கவனமாயிருந்தேன்”. ஆனால், அதே சுமதி ரூபன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்ட, ஆதரித்த ரி.வி.ஐ. தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைசெய்ததை (கவிஞர் சேரன் என்னை நேர்காணல் செய்தபோது) நான் பார்த்திருக்கிறேன் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். அந்த ஊதியம் அவரில் எப்படிச் சுவறாமல் போகும், அல்லது அவருக்கு மாற்றான அரசியல் கருத்துக்கொண்ட நிறுவனத்தில் அவர் எப்படி நீடித்திருந்தார் என்பது எனக்குப் புரியத்தானில்லை. போராட்டத்திற்கு ஆதரவில்லை; எந்த அடக்குமுறைகளுக்கெதிராக அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதோ, அந்த அரச பயங்கரவாதத்திற்கெதிராக அவரிடமிருந்து ஒருபோதும் ஒரு எதிர்ப்புக்குரலும் எழுந்ததில்லை. இன்றைய நிலையில் அங்குமில்லை; இங்குமில்லை என்பவர்கள் அங்கிடுதத்திகள். ‘நடுநிலைமை’என்ற சொல்லின் பின் பதுங்கிக்கொள்ளும் வேடதாரிகள்.அந்நிலைப்பாடானது பொதுச்சுமைகளிலிருந்து உங்களை விடுவித்து தனிப்பட்ட வாழ்வினில் குற்றவுணர்வின்றி உழல வசதிசெய்கிறது. மேலும், தோல்வியில் உங்களுக்குப் பங்கில்லை என்றால், எப்போதுமே, எந்தக் காலத்திலும் கிட்டப்போகும் வெற்றிகளிலும் உங்களுக்குப் பங்கில்லை என்பது நினைவிருக்கட்டும்.

அதிசயத்தில் பேரதிசயமாக, தனது இணையத்தளத்தின் வார்ப்புருவில் இடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு அமைவுற ‘அதிகாரங்களுக்கெதிராக உண்மையைப் பேச’முதன்முறையாக முயன்றிருக்கிறார் ஷோபா சக்தி। ‘பிறழ் சாட்சியம்’என்ற தனது கட்டுரையை அவர் கீழ்க்கண்டவாறு நிறைவுசெய்திருக்கிறார்:

“இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி ‘தேனி’போன் அரச சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிஸத்தின் ஊடக முகங்கள்। அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானுட நேயத்தையும் (கொக்கமக்கா-இது என் எதிர்வினை) கொலைமறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திசாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால், அந்தச் சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.”

உண்மையாக நெகிழ்ந்துபோனேன். விழிக்கடையில் கண்ணீர் திரண்டுவிட்டது. கடைசியில் மண்டைதீவு அந்தோனியார் கண்திறந்துவிட்டார்.:)

“தவறான வழிநடத்தலால் பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்து, மூன்று இலட்சம் தமிழ்மக்களை ஏதிலிகளாக்கி முகாம்களுள் முடக்கிய பிரபாகரனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்”என்பதே அண்மைக்காலங்களில் மேற்குறிப்பிட்டவர்களின் தரப்பு வாதமாக இருந்துவருகிறது. ‘இந்தப் பாவத்தில் எனக்குப் பங்கில்லை’என்று சந்தர்ப்பம் பார்த்துக் கைகழுவுகிற புதிய பிலாத்துக்களையும் பார்க்கமுடிகிறது. ‘நீரோ ஆண்டவர்!’என்று பழித்துக் களிக்கிற எத்துவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ‘போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் அது ஒட்டுமொத்தத் தமிழனுக்குச் சொந்தம். வீழ்ச்சியுற்றிருப்பதால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனுக்கு மட்டுமே சொந்தம்’என்பது அபத்தாபத்தமாக இல்லையா? ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டபோது, புளகாங்கிதமடைந்தவர்கள் நாங்கள்தான். ‘ஈழத்தமிழர்களது போராட்டத்தால் தமிழினத்தை உலகமே அறிந்திருக்கிறது’என்றபோது பெருமிதத்தோடு பல்லிளித்தவர்களும் நாங்கள்தான். ‘விடுதலைப்புலிகள் கட்டுப்பாடும் வீரமும் நிறைந்த கெரில்லா வீரர்கள்’என்று மேற்கத்தேயம் வர்ணித்தபோது நம்மில் யாருமே புளகாங்கிதமடையவில்லை என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா? வெற்றிகளின்போது புல்லரித்ததெல்லாம், இப்போது செல்லரித்துப்போய்விட்டதா?

தோல்வி பெற்ற பக்கத்தை நிராகரிப்போரின், கைவிடுவோரின் தனிப்பட்ட உளச்சுத்தியைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஆம் பல்லாயிரவர் அழிந்துபோனார்கள். ஆம் மூன்று இலட்சம் பேர் முகாமுக்குள் இருக்கிறார்கள். ஆம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறைக்கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆம் இருபத்துநான்காயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இதனாலெல்லாம் போராட்டத்தின் நோக்கம் நியாயமற்றதென்று கூறமுடியுமா? விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்தோடு இயங்கியதை, சக போராளிக்குழுக்களைக் கொன்றுபோட்டதை, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை, உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளைத் தேராததை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். ஆனால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் நோக்கம் தவறில்லை. பேரினவாதத்தின் பாரபட்சங்களால் அவர்கள் போராட்டத்தை நோக்கி வலிந்து செலுத்தப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் முன்னெடுத்து நடத்திய போரின் பங்காளிகளாக நாம் அனைவரும் இருந்தோம். ஆக, இங்கே வீழ்ச்சியடைந்தது (பின்னடைவு என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது) விடுதலைப் புலிகள் மட்டுமன்று; நாம் எல்லோருந்தான்। வெற்றியடைந்தால் பல்லைக் காட்டுவதும் வீழ்ச்சியுற்றால் பின்புறத்தைக் காட்டுவதும் கேவலமாக இருக்கிறது.

இதைத்தான் பிழைப்புவாதம் என்பது. இதைத்தான் சந்தர்ப்பவாதம் என்பது. இதைத்தான் அப்பட்டமான சுயநலம் என்பது. கயவாளித்தனம் என்பது. ஒட்டுண்ணித்தனம் என்பது.

அரசியலில் அதிகாரந்தான் தெய்வம். போரில் வெற்றிதான் தெய்வம். இந்த ‘தெய்வம் நின்று பழி தீர்க்கும்’, பாவம், புண்ணியம், பைசாசம் இன்னபிற தவிர்த்து கொஞ்சம் பகுத்தறிவு, யதார்த்தம், குரூரத்தோடும் சிந்தித்துப் பார்த்தால், விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… இவையெல்லாம்தான் ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணங்கள். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’என்றால், முதலில் செத்துப்போயிருக்கவேண்டியது அமெரிக்காதான்.

பிரபாகரன் அவர்கள் உலக ஒழுங்கோடு ஒத்துப்போயிருந்தால், அதிகாரத்தின் இசைக்கேற்ப நடனமாடியிருந்தால், அவ்வப்போது ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் நீட்டிய எலும்புத் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டு மலினமாக விலைபோயிருந்தால்… தென்னிலங்கையில் பிழைப்புவாத அரசியல் நடத்தும் கருணா வகையறாக்களைப்போல சப்பர மஞ்சத்தில் சாமரம் வீசிக்கொண்டிருக்கப் படுத்திருக்கலாம். ‘பயங்கரவாதம்’ ‘புரட்சி’யாகியிருக்கும். தமிழ் மக்களும் பிழைத்திருப்பர்.

தலைவர் பிரபாகரன் இழைத்த ஒரே தவறு, வாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாததுதான். இந்தத் ‘தூய்மைவாதம்’ போரில் உதவாது என்பதை அவர் உணர்ந்துகொண்டபோது, காலம் கடந்துவிட்டிருந்தது. நாங்கள் வீழ்ச்சியுற்றோம். போராட்டத்திற்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் படுகேவலமான நிலைமைக்குக் கீழிறக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், அவரைக் குற்றம் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா? வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.

அவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? தனிப்பட்ட வாழ்வில் மூழ்கிக் கிடந்தோம். வயிறு புடைக்க உணவருந்தினோம். குடித்தோம். படம் பார்த்தோம். நண்பர்களோடு சுற்றுலா போனோம். படுத்து பிள்ளை பெற்றுக்கொண்டோம். காதலித்தோம். உழைத்துச் சேமித்தோம். மேடைகளில் கவிதை வாசித்தோம். கைதட்டல்களை அள்ளிக்கொண்டோம். எப்போதாவது எதையாவது எழுதிக் கிழித்து ‘ஐயகோ நம்மினம் அழிகிறதே’என்று ஒப்பாரி பாடினோம். ஏதேதோ வழிகளில் நம் அடையாளங்களைப் பெருக்கப் பிரயத்தனப்பட்டோம். இன்று கூசாமல் குற்றம் சொல்கிறோம்.

தோற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வென்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். இது பொதுநியதி. ‘சத்தியம் வெல்லும்’என்பதெல்லாம் சும்மா. அப்படிப் பார்த்தால் இஸ்ரேல் சத்தியவந்தர்களின் பூமியாக இருக்கவேண்டும். இன்று வலிமையே பிழைக்கிறது; நீதியன்று. அதிகாரந்தான் விரோதி ஆண்டின் அறமாகியிருக்கிறது.

இதுவரையில் விடுதலைப் புலிகளைத் தூற்றிவந்த இணையத்தளங்களும் பத்திரிகைகளும் இப்போது செய்வதென்ன? வீழ்ச்சியின் காரணங்களை அடுக்கிக்கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்புப் பட்டை கட்டப்பட்ட குதிரைகளுக்கு ஒரே பார்வையன்றி வேறில்லை. பேரினவாதம் தமிழ்மக்களை தடுப்புமுகாம்கள் என்ற வதைமுகாம்களில் வைத்து இழிவுசெய்துகொண்டிருப்பதை அவர்கள் ஏன் எழுதுவதில்லை? திஸநாயகம் போன்ற பத்திரிகையாளர்கள்மீது பேரினவாதத்தின் கொடூர நகங்கள் ஆழப் பதிவதை ஏன் எழுதுவதில்லை? மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஆயுததாரிகளாகத் திரிந்து மக்களை அச்சுறுத்தும் குழுக்களின் அராஜகங்கள் பற்றி இவர்கள் ஏன் வாயே திறப்பதில்லை? நிர்வாணமாக்கப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்டு ‘அடுத்த சூடு என் தலையிலா?’என்று ஏங்கி, சுடப்படுவதன் முன்பே செத்துக் கரிந்த அந்த மனிதர்களைப் பற்றி இவர்களால் ஏன் பேசமுடியவில்லை?

‘பேசவிடுகிறார்களில்லை… பேசவிடுகிறார்களில்லை’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் மௌனமாக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது யாருக்கு அஞ்சுகிறீர்கள்? ஒருவேளை அடக்குமுறைக்கெதிராகப் பேசுவது என்பதன் பொருள் உங்கள் அளவில் ‘விடுதலைப்புலிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான பேச்சு’என்ற புனிதக் கோட்டைத் தாண்டாததா? இதன் வழியாக, புலிகளைக் காட்டிலும் அச்சங்கொள்ளத்தகு பயங்கரவாதிகளே இலங்கை அரச கட்டிலில் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்களா? ஒருவேளை புத்திஜீவித்தனம், மனிதாபிமானம், பேச்சுரிமை, சுதந்திரம் இன்னபிற பதங்களெல்லாம் எதிராளியின் அதிகாரத்திற்கும் தங்கள் இருப்பிற்குமேற்ப மாறுபடுமோ? ஆக, புலிகள் இல்லையென்றால் நீங்களும் அரங்கத்தில் இல்லை. உங்களது அரசியலும் அந்திமத்திற்கு வந்துவிட்டது. புலிகள் முடிந்துபோனார்கள் என்றால், புலிகளுக்கெதிரான முறைப்பாட்டோலங்களை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருந்த உங்கள் கதி இனி அதோ கதிதான். பேசச் சரக்குத் (புலிகள்) தீர்ந்துபோயிற்றென்றால் என்றால் இனி ஈயாடிக் கிடக்கவேண்டியதுதானே?

அதை விடுத்து, ‘பிரபாகரன் குற்றவாளி’, ‘பாவத்திற்குத் தண்டனை’என்று எத்தனை காலந்தான் அரற்றிக்கொண்டிருப்பீர்கள்? முதலில் குற்றப்பட்டியல்; இப்போது காரணப்பட்டியலா? நீங்களும் நாங்களும் (அப்படி ஒரு கோடு இருந்தால்) இனிப் பேசவேண்டியது பொதுவான ஆதிக்க சக்திகளுக்கெதிராகவே.

‘பிரபாகரன்’என்ற மனிதரின் தனிப்பட்ட-பொது வாழ்வின் தூய்மை, நேர்மை குறித்துப் பேசுவதற்கு இங்கு எந்தப் புழுவுக்கும் அருகதை கிடையாது. சுயநல, சந்தர்ப்பவாத, பிழைப்புவாத, ஒட்டுண்ணி-சலுகை அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் எவருக்கும் அந்தத் தகுதி இல்லை. நாக்குகள் நியாயத்தைப் புரட்டிப் போட்டாலும் இதயங்கள் அறியும் அவரவர் தூய்மை. அவர் உலக ஒழுங்கிற்கமைவுற பிழைக்கத் தெரியாதவராயிருந்தார். அவரது அரசியல் பிழைத்துப் போயிற்று. அதன் விலை பல்லாயிரம் உயிர்கள், உடமைகள், ஆண்டுகள், அகதிமுகாமுக்குள் அடக்கப்பட்ட அவல வாழ்வு. அவ்வளவு வீரமும், மதிநுட்பமும், தொலைநோக்கும் வாய்ந்த அவர் ஏன் கடைசி நிமிடங்களில் தன் மக்களை அழியவிட்டு தானும் அழிந்துபோனார் என்பதே இன்று எல்லோர் மனதிலும் உழன்றபடியிருக்கும் கேள்வி.

அந்தக் கேள்விக்கான பதிலைக் காலம் சொல்லும். தான்தோன்றித்தனமான ஊகங்களை முன்வைத்து கயவர்கள் சொல்லக்கூடாது.