Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

11.06.2009

நாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம்


ஆசிரியர்:நாகார்ஜூனன்
வெளியீடு: ஆழி பதிப்பகம்

‘திணை இசை சமிக்ஞை’என்ற பெயரிலான வலைத்தளத்தில் நாகார்ஜூனனால் எழுதப்பட்ட ஆக்கங்கள், அவரால் வழங்கப்பட்ட நேர்காணல்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புகள், ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் ‘ஆழி’பதிப்பகம் வெளியிட்டிருந்தது. பித்தான்களிலிருந்து பேரழிவுகள் வரை அந்நூலில் அலசப்பட்டிருந்தது. தேடலும் சோம்பேறித்தனமும் ஒன்றாக இயங்கும் மனநிலையுடைய வாசகருக்கு ‘நளிர்’பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தைத் தருகிறதெனில் மிகையில்லை. வரலாற்றில் நாமறியாத பக்கங்களை, மனதின் பித்தங்களை, அதிகாரச் சுழலை, அதில் சிக்கி அலைவுறும் சாதாரண மனிதர்களை, இசங்களை, இலக்கியத்தை கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறார். என்னளவில், ஒரே சரட்டில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் நாவலைக் காட்டிலும் சுவாரசியம் மிகுந்ததாக அந்த வாசிப்பு அனுபவம் அமைந்திருந்தது. எதைத் தேடுகிறோமோ அதையே கண்டடைகிறோம் என்பதற்கிணங்க, இலங்கையின் இனச்சிக்கல் குறித்து இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் நாகார்ஜூனனின் கருத்துக்கள் என்னை ஈர்த்தன. உடன்படலும் முரண்படலுமாக எழுத்துக்களினூடே பயணித்தேன். இலக்கியவாதி, விமர்சகர், ஊடகவியலாளர், அறிவியலாளர், ஆய்வாளர் ஆகிய பல்வகை ஆற்றல்களையும் அனுபவங்களையும் கொண்ட ஒருவரது பகிர்வுகள் சிந்தனைத் தளத்தை விரிவுசெய்ய வல்லன என்பதில் ஐயமில்லை.

இலங்கையின் பேரினவாத அரசாங்கம் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை நிகழ்த்தி, ஏறத்தாழ மூன்று இலட்சம் தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்துவைத்திருக்கும் இந்நிலையில், உணர்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டு அதுசார்ந்த எந்தவொரு எழுத்தையும் வாசிக்கமுடிவதில்லை. அவ்வப்போது கண்ணீரற்ற விசும்பலொன்று தொண்டைக்குள்ளிருந்து குமுறி எழுந்ததை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அதிலும், அதிகார வர்க்கத்தின் கொடுங்கரங்கள் சாதாரணர்களின் இருதயக்குலையைப் பிய்த்தெறிவதற்கிணையான குற்றங்களைக் கேட்பாரன்றி நிகழ்த்திக்கொண்டிருப்பதனை நாகார்ஜூனன் எழுதும்போது, கோபம் பெரும் சூறையென ஆக்கிரமிக்கிறது. எமது கோபத்தின்முன் ‘கையாலாகாத’என்ற வார்த்தையை அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஈழம் குறித்து நளிரில் பேசப்பட்டிருக்கும் விடயங்கள், குரூரப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட மே, 2009க்கு முந்தையவை என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மைப் பிரிந்துபோனவர்களின் முகச்சாயலுடைய யாரையாவது தெருவில் பார்க்க நேரும்போது, ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு ஏக்கம் வழியும் நெஞ்சத்துடன் போவதுபோல, இப்போது வாசிக்கும் எல்லா எழுத்துக்களிலும்-பேச்சுக்களிலும் நாடு பற்றிய ஞாபகமூட்டல்கள் வந்துபோகின்றன. ஒப்புவமைகளில் ஆழ்ந்து துயருறுகிறது மனம். நாகார்ஜூனனால் தேசம்.நெற் இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டிருந்த நேர்காணலில் மார்க்ஸியத்தின் தோல்வி பற்றிக் குறிப்பிடுகையில் இவ்வாறு சொல்கிறார்:

“அறிவுப்பரப்பின் அதிகார நாட்டம் வரலாற்றில் அடைந்த அறத்தோல்வி, கலைத்தோல்வி அதுன்னு சொல்லலாம். மார்க்ஸியத்துக்கு நாமறிந்தும் அறியாமலும் கிடைத்த வெற்றியும் தோல்வியும் மனிதகுல வரலாற்றில் எல்லா உயர்ந்த இலட்சியங்களுக்கும் கிடைத்ததே என்பது நமக்கு ஒருபுறம் ஆறுதலைத் தரலாம். மறுபுறம் பதற்றத்தையும் தரலாம்.”

இப்போது அதிகளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ‘அறிவற்ற அதிகாரம்’என்ற பதம் எனக்கு ஞாபகத்தில் வந்தது. அறிவும் அதிகாரமும் எதிரெதிர் திசைகளில் பயணிக்கும் தன்மையன போலும்.

ஒரு ஊடகத்தின் அரசியல்தன்மையும் சார்புநிலையும் எவ்விதமெல்லாம் கட்டமைக்கப்படுகிறது என்பதை, பி.பி.ஸி பற்றி அவர் சொல்லியிருப்பதிலிருந்து உணரக்கூடியதாக இருந்தது. ஒரு ஊடகவியலாளன் அதிகாரங்களுக்கெதிரான வார்த்தைகளைப் பேச முற்படுகையில் அவை கொதித்தெழுந்து உயிர் குடிக்கும் கொடுமையைக் குறித்து வருத்தப்பட்டிருக்கிறார். ஊடகவியலாளர்களான நிமலராஜன், அய்யாத்துரை நடேசன், தராக்கி சிவராம் போன்றவர்கள் இலங்கையில் பலிகொள்ளப்பட்டதை விசனத்தோடும் கசப்புணர்வோடும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார். கருத்துக்களுக்காகக் கொல்லப்பட்ட, நாட்டைவிட்டுத் தப்பியோடிய, சிறையிலடைக்கப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, வித்தியாதரன், யசிதரன் தம்பதிகள், திஸநாயகம், றிச்சர்ட் டீ சொய்சா, சுனந்த தேசப்பிரிய என நீண்ட பட்டியலொன்று மனதிலோடியது.

நடுநிலை என்ற சொல்லின் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்ட ஒரு சூழலில், நாகார்ஜூனன் பேசிச் செல்லும் சில விடயங்கள் ‘நடுநிலை’குறித்த மீள்சிந்தனையைக் கோரிநிற்கின்றன. இலங்கைப் பேரினவாத அரசின் கொடுமைகள் குறித்து கசந்துபேசும் அதே குரலில் விடுதலைப் புலிகளையும் சாட அவர் மறக்கவில்லை.
“பொதுவாக இலங்கையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர் தாயகம் வரணும்। அதுக்கு உலக அரங்கில் ஒரு ஜனநாயக அங்கீகாரம் வேண்டும். தமிழர்களின் வரப்போகும் சமுதாயம் ஜனநாயக, பன்முக அமைப்பில் இருக்கவேண்டும். அதில் இஸ்லாமியர் உள்ளிட்ட பல சிறுபான்மையினர் எல்லா உரிமைகளுடனும் வாழவேண்டும்ங்கறதை ஏற்ற மனநிலையில்தான் அன்றைக்கும் இருந்தேன். இன்னிக்கும் இருக்கிறேன். அந்தத் தீர்வு அமைப்பு பற்றி அறுதியாகத் தீர்மானிக்க வேண்டியது அங்குள்ள மக்கள்தான்னு உறுதியா நம்பறேன்.”


மேற்கண்டதிலுள்ள கடைசி வரியை அவர் சொல்லும்போதிருந்த நிலை வேறு। இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் அரங்கில் இருந்தபோதிருந்த அதிகாரச்சமநிலை அழிக்கப்பட்டுவிட்டது. ஈழத்திலுள்ள தமிழர்கள் கைதிகளாகவும், ஊமைகளாகவும் ஒருவேளைச் சோற்றுக்குக் கையேந்துகிறவர்களாகவும் கீழிறக்கப்பட்டுவிட்டார்கள். ஆக, இப்போது ஈழத்தில் வாழ்கிற தமிழர்களுக்காகப் பேசவல்ல குரல்களாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், தமிழ்நாடு உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் இருக்கிறார்கள். இதனோடுகூட கேந்திர முக்கியத்துவம், பிராந்திய நாட்டாமை போன்ற சுயஇலாபங்களுக்காகவோ சற்றேனும் மிஞ்சியிருக்கிற மனிதாபிமானத்தினாலோ திடீரென்று விழிப்பு வந்து குரல்கொடுக்க ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் சமரசங்களற்ற- இறுகிய- கருத்துநிலை மறுப்பின்மீதான நாகார்ஜூனனின் கசப்பானது பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. பி.பி.ஸி தமிழோசையின் முன்னைய (நாகார்ஜூனன் போன்றவர்கள் இணைவதற்கு) நிலைப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு சாடிச்சொல்கிறார்.

“தமிழோசையில் இருந்தவர்களுக்கு முன்னாடி ஒரு மரபு இருந்தது. அதாவது, களத்தில் இருக்கிற இயக்கத்தை – அதாவது விடுதலைப் புலிகளை விமர்சனமில்லாம பக்கச்சார்பா அப்படியே ஆதரித்துவிடுவதுன்னு ஒரு மரபு.”

அதனைத் தொடர்ந்து வந்த மாற்றங்களின் பிறகான காலகட்டம் பற்றிப் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“தமிழோசைங்கிறது ஒரு ஊடகம். அதில் தமிழ்பேசற, கேட்கற எல்லோருக்குமான செய்தியும் வரும். அதைத் தமிழர்களுக்கான உரிமைக்குரலாக இருக்கணும்னு நினைத்து, அதை ஓர் அமைப்பின் குரலாகச் சுருக்கியதை என்ன சொல்லுவது… சொல்லப்போனால் தமிழோசைன்னு பெயர் இருக்கறதுனாலேயே குறிப்பிட்ட அந்த இயக்கம் செய்யக்கூடிய, அது கூறக்கூடிய எல்லாத்தையும் கேள்வியில்லாம போடணும்னு எதிர்பார்த்து அது இல்லாமல் போகும்போது தமிழோசைமேல ஒருவித வெறுப்பும் கோபமும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. விடுதலைப் புலிகளை மிகத் தீவிரமாக ஆதரிப்பவர்களோட பிரச்னை இது”


‘பிரச்னை’என்ற சொல் என்னை உறுத்தியது. ஊடகங்கள் குறிப்பாக செய்தியூடகங்கள் உணர்வால் பேசுவதில்லை. அவை அறிவை வேண்டுபவை.(அவற்றின் சார்பு நிலைகளுக்கேற்ற திரிக்கப்பட்ட அறிவாக இருப்பினும்) அதுவே அவற்றின் அடிப்படைப் பண்பாகவும் இருக்கமுடியும். ஆகவே, அத்தகைய வரண்ட தன்மையைக் குறைசொல்வதற்கில்லை. ஆனால், மக்களிடம் - குறிப்பாக அழிவின் நிழலில், அராஜகத்தின் கோரப்பிடியில், நிலையற்று அலைதலில் நாளாந்தம் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களிடம் ‘தூய அறிவை’எதிர்பார்க்கவியலாது. மேலும், விரும்பியோ வேறு வழியற்றோ விடுதலைப் புலிகளைத் தவிர்த்து எங்களுக்கு மீட்சியளிக்க வல்லோர் வேறெவரும் இருக்கவில்லை. மேலும், விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டையோ விடுதலைப் புலிகளது உயிர்த்தியாகங்களையோ சந்தேகிப்பதற்கில்லை. இந்நிலையில், தமது தத்தளிப்பை அப்படியே ஊடகத்தின் உதடுகள் பேசவேண்டுமென எதிர்பார்த்தது எங்கள் மக்களின் தவறற்ற தவறெனவே கொள்ளப்படவேண்டும். வார்த்தைகள் எனப்படுபவை தனியே வார்த்தைகள் மட்டுமல்ல; சூழலையும் சேர்த்தே அவை உதிர்க்கின்றன.

இந்திய ஊடகங்களைப் பற்றிப் பேசும்போது நாகார்ஜூனன் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“இந்திய ஊடகங்களை எடுத்துக்கொண்டால், இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கைன்னு இருக்கிற நிருபர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் நீட்சியாக மாத்திரம் செயற்படுகிறார்கள். இதைத் தாண்டி ஒரு சிலர் மாத்திரம் செயற்பட்டிருக்கலாம்.”

‘த ஹிந்து’போன்ற பத்திரிகைகளின் தேசபக்தி கடல்தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவரை சென்று ஆக்கிரமிப்பாளர்களோடு கைகுலுக்கிக் குதூகலிப்பது நாமறிந்ததே. ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிகைகளின் ஊடக தர்மம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஊதுகுழலாக மாறி வெகுநாட்களாகிவிட்டன.

“இலங்கை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்குப் போறதுக்கு தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு என்ன தடை?”என்றொரு கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார். எழுத்தாளர்கள் மரணபயத்தை வென்றவர்களில்லை. அதிகாரங்களின் மீதான பயம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், படுகொலைகளைக் கண்ணால் பார்த்துத்தான் எழுதவேண்டுமென்றில்லை. ஈழத்துக்குப் போகாமலே, இனவழிப்பை எதிர்த்துக் குரலெழுப்பியிருக்க முடியும். அதைச் செய்தவர்கள் குறைவு என்று ‘கடவு’க் கூட்டத்தில் நான் சொல்லப்போய்த்தான் பெரிய சர்ச்சையாயிற்று. “நாங்கள் எழுதலையா என்ன?”என்று விசனப்பட்டவர்கள் சிலர். “ஏன் எழுதணும்? எங்கள் துயரங்களுக்காக நீங்கள் குரலெழுப்பினீர்களா?”என்ற ‘தார்மீகம்’ வழியும் கேள்வியின் வழியாகத் தனது நிலையை வெளிப்படுத்தினார் ஆதவன் தீட்சண்யா. உலகப் பொது இசமான மானுடநேயத்தை மார்க்ஸியம் படித்தவர்களும் மறந்து பேசுவதுதான் துயரம்.

நாகார்ஜூனன் ஒரு விடயத்தில் மிகத் தெளிவாக இருப்பது ஆறுதலளிக்கிறது. பல இடங்களில் ‘ஈழத்துக்கு, சிங்களத்துக்கு’என்றே குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆக, இன்றைய நிலையில் சிங்களத்துக்கு ஈழம் அடங்கினாலும், சிங்களத்துக்குள் ஈழம் அடங்கமுடியாது என்பதில் அவர்போன்ற அறிவுஜீவிகள் தெளிவாக இருக்கிறார்கள். இவ்விடயத்தை ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வு என்று வாய்கிழியப் பேசிக்கொண்டிருப்பவர்கள் கவனத்திலெடுத்துக்கொள்ளவேண்டும்.

முன்பே சொன்னதுபோல நடுநிலை என்ற சொல் மிகுந்த சலிப்பூட்டுகிறது. இருந்தபோதிலும் அறிவார்த்த தளத்தில் இயங்குபவர்கள் அதன் பொருளுணர்ந்து பேசும்போது நியாயமான அர்த்தம் கொள்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

“அனுராதபுரத்தில், பொலநறுவையில், கொழும்பில், காத்தான்குடியில் நடந்த கொலைகள் போன்ற எல்லாவற்றுக்கும் (விடுதலைப் புலிகள்) மன்னிப்புக் கேட்கவேண்டும். அதேபோல இந்திய அரசாங்கம் சார்பிலும் தமிழ்நாட்டு அரசாங்கம் சார்பிலும் ஈழத்தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருப்பது நிறையவே இருக்கு…”என்கிறார் நாகார்ஜூனன்.

இதை அவர் சொல்லியிருப்பது 2008ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில். தமிழர்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட- கைதுசெய்யப்பட்ட- பதுங்குகுழிகளே புதைகுழிகளாக மூடப்பட்ட – வைத்தியசாலைகள் பிணக்கிடங்குகளாக்கப்பட்ட பேரனர்த்தம் நிகழ்ந்தேறி முடிந்த மே மாதம் 18ஆம் திகதிக்குப் பின் மேற்சொன்ன வாசகங்கள் இன்னும் இறுக்கம் பெற்றதாகின்றன. இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு உறுதுணையாக நின்று போரை நடத்தி, தமிழ்மக்களையும் போராளிகளையும் கொன்றுமுடித்தும் முகாம்களுள் முடக்கியும் தின்று தீர்த்திருக்கும் நிலையில், குடும்ப மற்றும் கட்சி இலாபங்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டு அரசானது ஈழத்தமிழர்களின் படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்ட நிலையில், நாகார்ஜூனனின் வார்த்தைகளுக்குச் செறிவு கூடியிருக்கிறது. அவர் மேலும் சொல்கிறார்:

“ஆக, ஒரு சமுதாயத்தின் இழப்பை நாம் சாத்தியப்படுத்தி இருக்கோம்ன்னு மனத்தில் உறைக்கணும். அப்படிப்பட்ட ஒரு பெருங்கொடுமையை எல்லாத்தரப்பும் தமக்கு வேண்டியபோது செய்திருக்காங்க. ஈழத்தமிழர் சமுதாயத்தை நிலைகொள்ள முடியாதபடிக்கு இப்படி மாத்திய இந்தக் கொடுமைக்காக, அவர்களை ஆதரித்துக் கழுத்தறுத்தவங்க, எதிர்த்துச் சூனியத்தில் தள்ளியவங்க எல்லோருமே மன்னிப்புக் கேட்கவேண்டும்”

இந்தத் தார்மீகச் சீற்றம் தமிழ்நாட்டில் வாழும் பலருக்குள் இருக்கிறது। ஆனால், ஆட்சிபீடங்களில் உள்ள அதிகாரங்களிடம் இல்லை என்பதுதான் குரூரமான உண்மை. தவிர, மன்னிப்புக் கேட்பதானது மடிந்துபோனவர்களைத் திரும்பக் கொணராது என்பதை நாமறிவோம். தனது மக்களிடம் மனிதம் சார்ந்து குறைந்தபட்ச நாகரிகத்தைக் கோரும் நாகார்ஜூனனும் இதை அறிந்தவரே. அதிகாரங்களின் அறமும் மொழியும் ஆயுதங்களாகவே இருந்திருக்கின்றன. அங்கே மன்னிப்பு, பெருந்தன்மை, மனிதநேயம், ஜனநாயகம் என்ற வார்த்தைகளெல்லாம் பொருளற்றவை.

“சமுதாயம் என்பது அரசியலைவிடப் பெரியது என்கிற கண்ணோட்டம் தேவைன்னு நினைக்கிறேன் நான்”என்கிறார் நாகார்ஜூனன். ஈழத்தமிழர்களின் வாழ்வில் அரசியல், சமுதாயம் என்ற இரண்டும் தனித்தனிக் கூறுகள் இல்லை. பேரினவாத ‘அரசியலால்’ துன்புறுத்தப்படும் ‘சமுதாயமாகவே’ நாங்கள் தொடர்ந்து இருந்துவருகிறோம்.

‘வன்னியிலிருந்து வந்த பத்திரிகைக்காரரைச் சந்தித்தேன்’என்ற கட்டுரையில் பல இடங்கள் மனங்கலங்க வைப்பனவாக இருந்தன. வன்னிப்பகுதியில் நான்காண்டுகள் ஐ.நா.மன்ற சமூகப்பணியாளராக- பத்திரிகையாளராகக் கடமையாற்றியவரும், செப்டெம்பர் 16, 2008இல் அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் வெளியேற்றப்பட்ட பத்துப்பேர்களில் ஒருவருமாகிய திரு.டிக்ஸியுடனான சந்திப்பு பற்றி அந்தக் கட்டுரையில் விபரித்திருந்தார். போர் உக்கிரமடைந்துகொண்டிருந்த நேரத்தில் வன்னிவாழ் மக்களைக் கைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை டிக்ஸி சொல்லியிருந்த விதம் மனம் நெகிழவைப்பதாக இருந்தது.

“நாங்கள் வன்னியைவிட்டுக் கிளம்புமுன்பாக அங்குள்ள மக்கள் ‘எங்களை விட்டுப் போகவேண்டாம்’என்று இரண்டு நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் பாதுகாப்பு என்பதை எல்லாத் தரப்பிலிருந்தும் என்று பார்க்கவேண்டும் என்று என் அனுபவம் சொல்கிறது-அவர்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு வருகிறோமே என்று எங்கள் எல்லோர் நெஞ்சும் உருகிவிட்டது”என்று சொல்லியிருந்தார்.

எல்லோரும் சாட்சிகளை அகற்றிவிட்டே குற்றங்களைச் செய்கிறார்கள். தடயங்களையும் துடைத்தழித்துவிடுகிறார்கள். இவ்விடயத்தில் அரசாங்கங்கள் இன்னமும் கூர்ந்த மதிநுட்பத்துடன் நடந்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது. அதிலும், தமிழ்மக்கள் விடயத்தில் கருணை கிஞ்சித்துமற்று நடந்துகொள்வதென்ற முன்தீர்மானத்துடன் களத்திலிறங்கியிருந்த இலங்கை-இந்திய, சீன அரசுகளுக்கு உலகத்தின் கண்கள் முன் இயேசு கிறிஸ்துவாகவும் அன்னை தெரேசாவாகவும் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமிருந்தது. எனவே அவர்கள் சாட்சிகளை கொலைபடுகளத்திலிருந்து அகற்றினார்கள். தாண்டவக்கூத்தாடி முடித்தார்கள். திட்டமிட்டபடி துளிபிசகாமல் இனவழிப்பு சுலபமாக-சுபமாக நிறைவுற்றது.

‘இலங்கைப்போரும் தமிழ்நாட்டின் ஆதிச்சடங்கும்’என்ற கட்டுரையில், இலங்கைப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் ‘கையறு நிலை’ பற்றிப் பேசியிருக்கிறார் நாகார்ஜூனன். இந்த ‘கையறு நிலை’என்ற வார்த்தையின் பின் ஒளிந்திருக்கும் சுயநலம் ஈழத்தமிழர்கள் மற்றும் அவர்கள்பால் உணர்வுப் பற்றுடைய தமிழ்நாட்டு மக்களின் மனங்களைப் பற்றியெரியச் செய்யப் போதுமானதாக இருக்கிறது. ‘த ஹிந்து’போன்ற தேசாபிமானம் மிக்க- குருதி குடிக்கும் பத்திரிகா தர்மத்தைக் குறித்தும் கேள்வி எழுப்ப நாகார்ஜூனன் தவறவில்லை.

“வன்னியிலிருந்த ஐ.நா. மன்ற பன்னாட்டுப் பணியாளர்களை வெளியே போகச் சொன்னீர்களே ஏன்? விடுதலைப் புலிகள் அழிப்பு என்பதாகத் தொடங்கி இப்போது மூன்று இலட்சம் பேரை நிர்க்கதியாக்கியிருக்கிறீர்களே ஏன்? தமிழ்நாட்டு மீனவர்கள் இத்தனை பேரைச் சுட்டிருக்கிறீர்களே ஏன்? அதற்காக மன்னிப்புக் கேட்டீர்களா? என்றெல்லாம் ராஜபக்சே அவர்களை நீங்கள் கேட்கவில்லையே…!”என்று ஹிந்து ராமைச் சாடியிருக்கிறார். அதிகாரங்களின் கைப்பொம்மைகளாக இயங்குவோருக்கு அறிவுஜீவிகள் எனப்படுவோரின் சாடலானது உதிரும் ஒற்றை மயிருக்கும் சமானமாகாதென்பதை வரலாறு காட்டியிருக்கிறது. மேலும், ‘இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் அழிவின் விளிம்பை எட்டும்போதெல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தத்தம் வாழ்க்கையின் ஆதாரம் ஏதோ அசைக்கப்படுவதாக உணர்ந்திருக்கிறார்கள்’என்று அவர் எழுதியிருந்ததை வாசித்தபோது கசப்பான சில ஞாபகங்கள் கிளர்ந்தன. ஆறரைக் கோடி தமிழ் பேசும் மக்கள் அருகிலிருந்தும் நாங்கள் ஏதிலிகளாக்கப்பட்டோமே என்ற ஆற்றாமை மனதில் தீயெனப் படர்கிறது. ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய பெருமெண்ணிக்கையிலான மக்கள் தொகை இருந்தும் என்ன பயன்? மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கங்கள் மக்களைச் சிந்திக்க அனுமதிப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. மாயக்குழலோசையைத் தொடர்ந்து சென்று ஆற்றில் வீழும் எலிகளைப் போல அற்ப சலுகைகளில் மயங்கித் தமது அடிப்படை உரிமைகளை மக்கள் விட்டுக்கொடுக்கும் நிலை துர்ப்பாக்கியமானது. இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டிருப்பவர்கள் இதற்குள் அடங்கார். மக்களைச் சொல்லியென்ன… மகேசன்கள் சரியாயில்லை.

ஈழத்தமிழர்களின் துயரம் தன்னுடைய வாசிப்பில் எவ்விதமாக மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் இந்தக் கட்டுரையில் நாகார்ஜூனன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். கையாலாகாத குற்றவுணர்வு இட்டுச் சென்ற பித்தநிலையை வெளிப்படுத்தும் கதைகளை அக்காலத்தில் எழுதியதாகக் குறிப்பிடும் இவர், நகுலன்-மௌனி-எஸ்.சம்பத் ஆகியேரின் படைப்புகளையே தாம் அக்காலத்தில் விரும்பி வாசித்ததாகவும் சொல்கிறார்.

“இந்த வாசிப்பு-எழுத்து என் அகமாக இருக்க, புறத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை சிக்கலாகி அதில் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆற்றாமை நாடகீயமாக வெளிப்பட்டது என நினைக்கிறேன்”

இலக்கியம், சினிமாத்துறை, மனிதச்சங்கிலி இன்னபிற போராட்டங்களில்கூட இத்தகைய நாடகீயங்களைக் காணக்கூடியதாக இருந்ததாகச் சொல்லி, அவற்றை ஆற்றாமையின் நீட்சியான ஆதிச்சடங்கெனத் தொடர்புபடுத்துகிறார்.

அரசியலற்ற ஆயுதப்போராட்டத்தின் பின்னடைவுக்கு உதாரணமாக விடுதலைப் புலிகளைச் சொல்வது தற்போதைய ‘ட்ரென்ட்’ ஆகியிருக்கிறது. தத்தம் பாவங்களிலிருந்து கைகழுவித் தப்பித்துக்கொள்ளும் சமயோசிதத்தை அண்மைக்காலங்களில் கண்டுவருகிறோம். அரசியலின் புனிதக்குரலில் தடாலடியாகப் பேசமுற்பட்டுத் தம்மிருப்பைத் தக்கவைக்க முயன்றுவருகிறார்கள் சிலர். அதற்கு மறுவளமாக- அறிவினைப் புறந்தள்ளிய, சந்தேகித்த, விசாரணைக்குட்படுத்திய அதிகாரத் துஷ்பிரயோகத்தைப் பற்றி ‘காஃப்காவின் நிழலில் தமிழ் என்ற மொழிவழிச் சடங்கு’என்ற கட்டுரையில் நாகார்ஜூனன் எழுதியிருக்கிறார். 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈழத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர்களான சிவத்தம்பி, ஆ.வேலுப்பிள்ளை ஆகியோரை ‘விடுதலைப் புலிகளை ஆதரிப்போர்’என்று குற்றஞ்சாட்டி மாநாட்டிலிருந்து வெளியேற்றிய துர்ப்பாக்கிய சம்பவம் பற்றி அக்கட்டுரையில் அவர் விசனப்பட்டிருக்கிறார். அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசின் அந்த அதிகாரப் பாய்ச்சலைக் குறித்த செய்தியைப் பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் என்றவகையில் தானும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்திருந்தார். எவ்விடத்திலும், எந்தக் காலகட்டங்களிலும் அதிகாரங்களுக்கும் அறிவுக்கும் இடையில் இழுபறி நிலை இருந்துகொண்டேயிருக்கும் போலும். கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் கொல்லப்படவும் நாடுகடத்தப்படவும் கைதாகவும் காரணமாக இருப்பது, ஆட்சியாளர்கள் அன்றேல் அதிகாரத்தில் இருப்போர் தமது பொய்முகங்களை கருணை முகமூடிகளுள் ஒளித்துக்கொள்ளும் விழைவின் பொருட்டே. முகமூடிகள் கிழிந்தே போனாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை என்பது இரண்டாவது விடயம்.

‘நளிர்’அண்மைக்காலத்தில் வெளியாகியிருக்கும் புத்தகங்களுள் மிக முக்கியமானதாகும்। முன்பே குறிப்பிட்டதுபோல தேடலும் சோம்பேறித்தனமும் மிகுந்தவர்களது விருப்பத் தெரிவாக இந்நூல் இருக்கக்கூடும். ஈழத்தமிழர் பிரச்சனையைத் தொடர்ந்து கவனித்து வரும் நாகார்ஜூனன் போன்றவர்களின் கருத்துக்கள் அறிவார்த்த தளத்தில் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஆயுதப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்நிலையில் அறிவின் போராட்டம் இயங்கவாரம்பிக்கவேண்டும். ‘எல்லாம் முடிந்துவிட்டது’என்று நாம் அமர்ந்திருப்பது பொறுப்புகளிலிருந்து பின்வாங்குவதாகும். ‘இனித்தான் வாழ்க்கை’என்று எழுந்திருப்பதே இக்கொடுங்காலத்தில் நாம் செய்யவேண்டியது. இலைகள் எல்லாம் உதிர்ந்துபோனபிறகும் மரங்கள் நம்பிக்கையோடு காத்திருப்பதில்லையா அடுத்த இளவேனிலை எதிர்பார்த்து? நாம் தரையில் ஊற்றும் ஒரு குவளைத் தண்ணீரில் கூட்டமாக அழிந்துபோனாலும், மீண்டும் எறும்புகள் கூடி மழைக்காலத்திற்காகத் தானியங்களைச் சேமிக்கத்தானே செய்கின்றன? சூறாவளியும், ஆழிப்பேரலையும், பூகம்பமுமாகிய இயற்கைப் பேரழிவுகளின்பின்னும் மானுட இனம் நிமிர்ந்தெழவில்லையா இந்த மண்ணில்? இழப்புகள் கோடி வரலாம். அதன் பிறகும் எஞ்சியிருக்கவே செய்கிறது வாழ்க்கை.


நன்றி: அம்ருதா









1.21.2008

கவிதை நூலுக்கான கவிஞர் கருணாகரனின் விமர்சனம்


எனது பெருமதிப்பிற்குரிய கவிஞர் கருணாகரன் அவர்களால் எனது கவிதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்ட விமர்சனம் 'திண்ணை' இணையத்தளத்தில் கடந்த வாரம் வெளியாயிற்று. அதை இங்கு மீள்பிரசுரம் செய்வதில் மகிழ்வடைகிறேன்.


சூரியன் தனித்தலையும் பகல்

தமிழ்நதி கவிதைகள்
பனிக்குடம் பதிப்பகம்
விலை-40 இந்திய ரூபாய்

பத்தாண்டுகளாக தமிழ்நதி எழுதி வருகின்றபோதும் இப்போதுதான் அவருடைய கவிதைகளை படிக்கக் கிடைத்திருக்கிறது. இது வருத்தந் தருகிற தாமதம்தான். அவரிடம் இதைச் சொல்ல வெட்கமாகவும் இருக்கிறது. அதேவேளையில் இந்தத்தாமதத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு அவருடைய கவிதைகளே சாட்சி.

உலகம் சுருங்கி கிராமமாகிவிட்டது. தொடர்பாடலால் அது விரைவு கொண்டு விட்டது என்றே சொல்கிறோம். சுருங்கியிருக்கும் இந்தக்கிராமத்தில் எல்லாமே எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் கிராமத்திலிருக்கின்ற எல்லாவற்றையும் எல்லோருக்கும் தெரியும் நிலையுண்டு. ஆனால் இந்தக்கிராமத்தில் நாங்களிருக்கிறோமா என்று பார்க்க வேணும். அதாவது தொடர்பாடலால் சுருக்கி கிராமமாக வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் போரில் அகப்பட்டுச் சிக்கித்தவிக்கும் சமூகங்கள் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.

இது இன்று பொதுவாக போர்ச்சூழலில் வாழும் சமூகங்களுக்கு எழுந்துள்ளதொரு முக்கிய சவால். உலகத்தை பொதுமைப்படுத்த விளையும் பண்பார்ந்த செயலில் பலவிதமான தன்மைகளுண்டு. சிலர் மதத்தை வழிமுறையாகக் கொள்கின்றனர். சிலர் பொருளாதார மாற்றத்தை வலியுறுத்திச் செயற்படுகின்றனர். வேறு சிலர் அறிவியல் வளர்ச்சி மூலமாக மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று சிந்திக்கின்றனர். இன்னுஞ்சிலர் ஜனநாயக ரீதியான வளர்ச்சியும் பண்பும் பெருகும்போது மாற்றம் சாத்தியமாகும் என்று நம்புகின்றனர்.

ஆனால், இந்த எல்லா வழிகளுக்குள்ளும் இருக்கும் அதிகாரத்துவமும் குருட்டுத்தனங்களும் இடைவெளியின்மைகளும் எப்போதும் எதிர் நிலைகளை தோற்றுவித்துக் கொண்டேயிருக்கின்றன. இந்த எதிர்நிலைகள் நம்பிக்கைக்கு எதிரான கோட்டை அழுத்தமாக வரைகின்றன. உண்மையில் இந்த வழிகளை இவற்றுக்கான செயல்முறைகள் அடைத்து விடுகின்றன பெரும்பாலும். இதுவொரு மாபெரும் அவலம். இதுதான் தீராத கொடுமை. இதுவே நல்ல நகைமுரணும்கூட.

எந்தவொரு கோட்பாட்டுவாதமும் அதன் செயலால்தான் ஒளி பெற முடியும். அந்தச் செயலில் நிராகரிப்புக்கும் ஏற்றுக்கொள்ளலுக்குமான சமாந்தர விசையும் பயணப்பாதையும் உண்டு. அதாவது நெகிழ்ச்சியும் வெளியும் அவற்றில் இருக்கும். இருக்க வேணும். இல்லாதபோது அது எப்படியோ அடைபட்டுப்போகிறது. அல்லது எதிர் நிலைக்குப் போய்விடுகிறது.

என்னதானிருந்தாலும் மனிதன் ஒரு இயற்கை அம்சம் என்பதை வைத்தே எதையும் அணுகுதல் வேணும். மற்ற எல்லா அம்சங்களோடும் மனிதனை வைத்து நோக்க முடியாது. குறிப்பாக பொருளியல் அம்சங்களுடனும் இயந்திரங்களோடுமான கணிதத்தில் மனிதன் எப்போதும் சிக்காத ஒரு புள்ளியே.

ஆகவே மனித விவகாரத்தில் எப்போதும் பல்வகைத்தான அம்சங்களுக்கும் இயல்புக்கும் இடம் அவசியம். ஆனால், இந்த இடத்தை பகிர்வதிலும் அளிப்பதிலும் பெறுவதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகளும் முரண்களும் எப்போதும் தீராப்பிணியாவே உள்ளது. இது மனிதனைச் சுற்றியுள்ள சாப இருள். இந்தச் சாப இருளின் காரணமாக தமிழ்நதியின் கவிதைகளை இவ்வளவுகாலமும் காணாதிருந்து விட்டேன். அதேபோல இந்தச் சாப இருள்தான் அவருடைய கவிதைகளை மறைத்தும் வைத்திருந்திருந்தது. அதுமட்டுமல்ல தமிழ்நதியின் கவிதைகளும் இந்த இருளின் துயரமும் இதனால் ஏற்படும் அவலமும் அநீதியும் அவற்றுக்கெதிரான நிலைப்பட்டவையும்தான். ஆக இப்போது எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும் முடிச்சுகள், கோர்வைகளாக இருக்கின்றன. எனவே இந்தக்கவிதைகளைப் படிக்கும்போதும் இவற்றை அணுகும்போதும் இந்த அம்சங்கள் எல்லாம் சேர்ந்து கலவையாக கிளம்பி வருகின்றன.

சுருங்கியிருப்பதாகச் சொல்லப்படும் இந்த 'உலகக்கிராமத்தை' பொய்யென்கிறார் தமிழ்நதி. அப்படி தகவலாலும் தொடர்பாடலாலும் சுருங்கியிருக்குமாக இருந்தால் எப்படி எங்கள் அவலங்களை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமற்போயிருக்கும் என்பது இந்தக்கவிதைகளின் அடியொலியாகும். தமிழ்நதி இதை எந்தத்தூக்கலான குரலோடும் பேசவும் இல்லை. திட்டவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை. முறையிடவும் இல்லை. ஆனால் தன்னுடைய கேள்வியையும் நிராகரிப்பையும் சத்தமில்லாமல் அறிவார்ந்த முறையில் மெல்ல வைக்கிறார், நம் அருகில். அது எல்லோருடைய கண்ணிலும் மனதிலும் ஊசியைப்போல ஊடுருவிச் செல்லும் விதமாய்.

அதேவேளை, சக மனிதர்களால், அரசினால், இனரீதியாக இழைக்கப்படும் அநீதியை எப்படி இந்தத் தகவல் யுகமும் அறிவு உலகமும் ஜனநாயக அமைப்பும் கண்டு கொள்ளமுடியாதிருக்கிறது என்றும் எப்படி இதையெல்லாம் இவற்றால் அனுமதிக்க முடிகிறது என்றும் தன்னுடைய கவிதைகளின் வழியாக பல கேள்விகளைப் பரப்புகிறார் இந்த வெளியில்.

இதன் மூலம் தமிழ்நதி பெண் கவிதைப்பரப்பிலும் ஈழத்துக்கவிதை வெளியிலும் தமிழ்க்கவிதையின் தளத்திலும் தனித்துத் தெரியும் அடையாளங்கொண்டிருக்கிறார். குறிப்பாக சொல் முறையால்- மொழிதலால் அவர் வேறுபட்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கை அமைப்பு அல்லது அதன் அனுபவங்கள் அவரிடம் மிஞ்சியிருக்கும் அல்லது திரளும் எண்ணங்கள் எல்லாம் இங்கே உரையாடலாகியிருக்கின்றன.

குறிப்பாக ஈழத்துக் கவிஞர்கள் பலரதும் அண்மைய (அண்மைய என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளான) கவிதைகளில் இன வன்முறையின் கொடுவலியை யாரும் உணரமுடியும். சண்முகம் சிவலிங்கம், தா. இராமலிங்கம், சிவசேகரம், முருகையன், வ.ஐ.ச. ஜெயபாலன், அ.யேசுராசா, சேரன் போன்ற தலைமுறைகளின் கவிகள் தொடக்கம் இன்னும் இந்த வலியுடைய குரலையே ஒலிக்கிறார்கள். இதில் இடையில் வந்த தலைமுறையைச் சேர்ந்த ஊர்வசி, மைத்திரேயி, ஒளவை, சிவரமணி என்ற பெண் கவிஞர்களும் இத்தகைய தொனியிலும் வலியிலுமான கவிதைகளையே தந்தார்கள். அதிலும் போரும் வாழ்வு மறுப்பும் அகதி நிலையும் இதில் முக்கியமானவை.

இந்த அகதி நிலை இரண்டு வகைப்பட்டது. ஒன்று உள்ளுரில் இடம்பெயர்ந்து அலைதல். அருகில் வீடோ ஊரோ இருக்கும். ஆனால் அங்கே போக முடியாது. அதுவும் ஆண்டுக்கணக்கில் அங்கே போக முடியாது. அதெல்லாம் சனங்களைத் துரத்திவிட்டு படையினருக்காக அத்துமீறி அரசாங்கம் கைப்பற்றி வைத்திருக்கும் பிரதேசங்களாகும். அப்படிக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சரைவை மூலம் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரிலான சுவீகார சட்டம் வேறு. ஆனால் அப்படி கைப்பற்றிய பிரதேசத்துக்கான நட்ட ஈட்டைக்கூட அது கொடுக்கத்தயாரில்லை.

தவிர, போரில், படையெடுப்புகளின் போது நிகழும் அகதி நிலை. இடம் பெயர்வு. இதைவிடவும் புலம் பெயர் அகதி நிலை வேறு. இது வேரிழந்த நிலை. அந்நியச் சுழலில் அந்தரிக்கும் கொடுமையான அவலம். தமிழ்நதி இவை எல்லாவற்றையும் தன் மொழியில் பிரதியிடுகிறார். தமிழ்நதியின் பிரதியில் இனவன்முறைக்கெதிரான பிரக்ஞையும் அகதித்துயரும் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அவருடைய பிரக்ஞை இவற்றில்தான் திரண்டுள்ளது.

இது குறித்து அவருடைய சில அடையாளங்கள், அதாவது இத்தகைய வாழ்நிலையின் பின்னணியில் தமிழ்நதியின் கவிதைகள் இயங்குகின்றன. தமிழ்நதி அரசியற் கவிதைகளையே அதிகமாக எழுதியிருக்கிறார். இந்தத் தொகுதியின் முதற்கவிதையும் இறுதிக்கவிதையும்கூட அரசியற் கவிதைகள்தான். அதிலும் இந்த அரசியலைத் தீவிரமாகப் பேசும் கவிதைகள். முதற்கவிதையில் அவர் எழுதுகிறார்,

நேற்றிரவையும் குண்டு தின்றது
மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது
சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்
குழந்தைகளுக்குப் பாலுணவு தீர்ந்தது

………..……… ..
.........................

பூட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி
பசியோடு அலைந்து கொண்டிருக்கின்றன
வளர்ப்புப்பிராணிகள்
சோறு வைத்து அழைத்தாலும்
விழியுயர்த்திப் பார்த்துவிட்டுப் படுத்திருக்கும்
நாய்க்குட்டியிடம் எப்படிச் சொல்வது
திரும்ப மாட்டாத எசமானர்கள் மற்றும்
நெடியதும் கொடியதுமான போர் குறித்து

………..………..
.......................

ஒவ்வொரு வீடாய் இருள்கிறது
இந்தச் செங்கல்லுள் என் இரத்தம் ஓடுகிறது
இந்தக்கதவின் வழி
ஒவ்வொரு காலையும் துளிர்த்தது

………..……….
......................

மல்லிகையே உன்னை நான்
வாங்கிவரும்போது நீ சிறு தளிர்

இருப்பைச் சிறு பெட்டிக்குள் அடக்குகிறேன்
சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
எஞ்சிய மனிதரை
சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை
வேம்பை
அது அள்ளியெறியும் காற்றை
காலுரசும் என் பட்டுப் பூனைக்குட்டிகளை

என்று. அதைப்போல இறுதிக்கவிதையில்,

வேம்பின் பச்சை விழிநிரப்பும்
இந்த யன்னலருகும்
கடல் விரிப்பும்
வாய்க்காது போகும் நாளை
இருப்பின் உன்னதங்கள் ஏதுமற்றவளிடம்
விட்டுச் செல்வதற்கு
என்னதான் இருக்கிறது?

எனச்சொல்கிறார். இந்தக்கவிதை தாயகத்தின் இடம் பெயர்தலைச் சொல்கிறது. சொல்கிறது என்பதை விடவும் அதை அது பகிர்கிறது. அந்த நிலையை அது அப்படியே, அதுவாக, நிகழ்த்துகிறது எனலாம். அந்த அந்தரநிலையின் கொடுமுனைத் துயரிது.

முதற்கவிதையில் வரும்

இந்தக்கதவின் வழி
ஒவ்வொரு காலையும் துளிர்த்தது

மல்லிகையே உன்னை நான்
வாங்கிவரும்போது நீ சிறு தளிர்

இருப்பைச் சிறு பெட்டிக்குள் அடக்குகிறேன்
சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
எஞ்சிய மனிதரை
சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை
வேம்பை
அது அள்ளியெறியும் காற்றை
காலுரசும் என் பட்டுப் பூனைக்குட்டிகளை

என்ற இந்தவரிகள் இதுவரையான இடம் பெயர்வுக்கவிதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. அதேவேளை, சாதாரணமான வார்த்தைகளால் அசாதாரணமான பகிர்தலை ஏற்படுத்துவன. அகதியாதலின் புள்ளியில் திரளும் துயரத்துளி எப்படி என்பதற்கு, அந்தக்கணம், அந்த மையப்பொழுது, எப்படி வேர்கொண்டெழுகிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியமுண்டா...

நாடோடியின் பாடல் என்ற இன்னொரு கவிதையில் அவர் எழுதுகிறார்.

உயிராசையின் முன்
தோற்றுத்தான் போயிற்று ஊராசை
போர் துப்பிய எச்சிலாய்
போய்விழும் இடங்களெல்லாம்
இனிப் போர்க்களமே

நாடோடிகளின் துயர் செறிந்த பாடல்
ஏழுகடல்களிலும் அலைகிறது

எந்தத் தேவதைகளைக் கொன்றழித்தோம்
எல்லாத்திசைகளிலும் இருளின் ஆழத்தில்
'அம்மா ' என விம்மும் குரல் கேட்க.

இங்கே ஈழத்தமிழரின் அகதித்துயர் மட்டும் சொல்லப்படுவதாகக் கொள்ள முடியாது. அதற்குமப்பால் உலகமுழுவதுமிருக்கும் அரச பயங்கரவாதம், மதவாதம், இனவாதம், நிறவாதம் என்ற பெரும் 'பிடிவாத'ங்களால் அகதிகளாக்கப்பட்ட சனங்களின் துயரமும் அவலமுமே கூட்டிணைவாகியுள்ளது. தமிழ்நதி அகதிநிலையில் வெவ்வேறு கண்டங்களில் அலைந்தவர். அப்படி அலையும்போது அவர் கண்ட பல சமூகங்களின் நாடோடி வாழ்க்கை அவல முகம் இங்கே இப்படி வைக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு அஞ்சும்போது, அதற்கு ஆசைப்படும்போது ஊருடனான உறவு, சொந்த நிலத்துடனான உறவு துண்டிக்கப்படுகிறது. ஊரிலிருத்தல், சொந்த நிலத்தில் இருத்தல் மிகமிக ஆபத்தானதாக ஆகியிருக்கிறது, அது எந்தவகையிலும் உத்திரவாதமுமில்லாதது என்பதையிட்டே பெரும்பாலான நாடோடிகள் அப்படி அலைகிறார்கள் என்ற தொனியை இந்தக்கவிதையின் வழி தமிழ்நதி உணர்த்துகிறார்.

அரச பயங்கரவாதத்தையும் அகதி நிலையையும் பேசுவனவாகவே உள்ளன இந்தத் தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள். அதிலும் புலம்பெயரியின் அலைதலை இவை அழுத்தமான தொனியில் பதிவு செய்கின்றன. அதிகாரமும் தேவதைக்கதைகளும், விசாரணை, பிள்ளைகள் தூங்கும் பொழுது, எழுத்து: விடைபெற முடியாத தருணம், ஊருக்குத்திரும்புதல், திரும்பிச் செல்ல விரும்புகிறேன், இறந்த நகரத்தில் இருந்த நாள், அற்றைத்திங்கள் இப்படிப்பல. இதில் அதிகாரமும் தேவதைக்கதைகளும் என்ற கவிதை இந்தத் தொகுதியிலேயே நீண்ட கவிதையாக உள்ளது. ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, அரச பயங்கரவாதம், அதற்கெதிரான அவர்களின் போராட்டம், அவர்களுடைய இன்றைய நிலை, தொடரும் துயரம், இவை தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை நோக்கி விடப்படும் கோரிக்கை, போராளிகளின் வாழ்க்கை, இவற்றிலெல்லாம் தமிழர்களின் உணர்வுகள் … என எல்லாவற்றையும் இந்தக் கவிதை பேசுகிறது. ஈழத்தமிழர் அரசியலினதும் சமகால வாழ்வினதும் சரியான தரிசனம் இது.

துயரங்களிலேயே மிகவும் பெரியதும் கொடுமையானதும் அகதிநிலைதான். கொடுவதை அது. அவமானங்களும் புறக்கணிப்பும் அந்நியத்தன்மையும் திரண்டு பெருக்கும் வலி.

ஒரு சுதேசியை விடவும்
பொறுமையோடிருக்கப் பணித்துள்ளன
அந்நிய நிலங்கள்
………..………..
.......................

ரொறொன்ரோவின் நிலக்கீழ்
அறையொன்றின் குளிரில் காத்திருக்கின்றன
இன்னமும் வாசிக்கப்படாத புத்தகங்கள்.
நாடோடியொருத்தியால் வாங்கப்படும் அவை
கைவிடப்படலை அன்றேல்
அலைவுறுதலை அஞ்சுகின்றன

இதுதான் நிலைமை. இதுதான் கொடுமையும். இது இன்னொரு வகையில் மறைமுகமான அடிமை நிலைதான். எந்த உரிமையுமில்லாத இடத்தில் எப்படி நிமிர முடியும். ஆக அங்கே அப்போது எல்லோரிடமும் பணியத்தான் வேணும். அது அடிமை நிலையன்றி வேறென்ன.

தமிழ்நதியின் கவிதைகள் மூன்று விதமான விசயங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்று போரும் அதன் விளைவான அலைதலும். இதில் புலம் பெயர்தலும் அடங்கும். மற்றது, அவருடைய கவனம், ஈடுபாடு, இயல்பு என்பனவற்றைக் கொண்ட அவருடைய உலகம். அடுத்தது, பெண்ணாயிருத்தலின் போதான எண்ணங்களும் அநுபவங்களும். ஆக, இந்தத் தொகுதி, தமிழ்நதியின் அக்கறைகளும் அடையாளமும் என்ன என்பதைக் காட்டுகிறது. கடவுளும் நானும், முடிவற்ற வானைச் சலிக்கும் பறவை, நீ நான் இவ்வுலகம், ஒரு கவிதையை எழுதுதல், யசோதரா, எழுது இதற்கொரு பிரதி, துரோகத்தின் கொலைவாள், ஏழாம் அறிவு, மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு, சாயல் போன்றவை தமிழ்நதியின் இயல்பைக் காட்டும் கவிதைகள். அவருடைய மனவுலகத்தின் இயங்கு தளத்தையும் அதன் வர்ணங்களையும் திசைகளையும் இவற்றில் காணமுடியும். எதனிடத்திலும் அன்பாயிருத்தலும் அன்பாயிருக்க முடியாததும்தான் தமிழ்நதியின் இயல்பு. ஆனால் அதையெல்லாம் மூடிப் பெரும் கருந்திரையாக துயரம் படிகிறது அவருக்கு முன்னே.

தொலைபேசி வழியாக எறியப்பட்ட
வன்மத்தின் கற்களால்
கட்டப்படுகிறது எனது கல்லறை

எல்லாப்பரண்களிலும் இருக்கக்கூடும்
மன்னிக்கப்படாதவர்களின்
கண்ணீர் தெறித்துக்கலங்கிய
நாட்குறிப்புகளும் கவிதைகளும்

(மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு)

சாளரத்தின் ஊடே அனுப்பிய
யசோதரையின் விழிகள் திரும்பவேயில்லை
பௌர்ணமி நாளொன்றில்
அவன் புத்தனாகினான்
இவள் பிச்சியாகினாள்

"அன்பே என்னோடிரு அன்பே என்னொடிரு"
.........................
.........................

சுழலும் ஒளிவட்டங்களின் பின்னாலிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்.

(யசோதரா)

இந்தக்கவிதைகள் மிக முக்கியமானவை. அதிலும் யசோதரா கவிதை சித்தார்த்தரை விமர்சிக்கிறது. புத்தர் என்ற ஒளிவட்டத்தின் பின்னால் மறைக்கப்பட்ட அவலத்தையும் உண்மையின் இன்னொரு பாதியையும் கொடுமையையும் அது கடுந்தொனியில் விமர்சிக்கிறது.

யசோதரையையும் புத்தரையும் ஒன்றாகப்பார்க்க முடியுமா என்று யாரும் கேட்கலாம். சித்தார்த்தனின் ஞானத்துடன் எப்படி யசோதரையை கொள்ள முடியும் என்ற கேள்வியை விடவும் இருவருக்குமான உரிமை பற்றியதே இங்கே எழுப்பப்படும் பிரச்சினையாகும். யசோதரையை தனித்தலைய விட்டுவிட்டு புத்தன் ஞானம் பெறுதில் எந்தப் பெறுமானமும் இல்லை என்பது மட்டுமல்ல, அதுவொரு வன்முறையுமாகும் என இந்தக் கவிதை முன்வைக்கிறது தன் வாதத்தை.

வரலாற்றில் எப்போதும் பெண்ணினுடைய முகத்தையும் மனதையும் ஆணின் பிம்பம் மறைத்ததாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கு இன்னொரு ஆதாரமாக இந்தக்கவிதையை தமிழ்நதி முன்வைக்கிறார். எதிர் முகம் அல்லது மறுபக்கம் பற்றிய அக்கறையைக் கோரும் குரலிது. இது பெண்ணுக்கு மட்டுமல்ல தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் பொதுவானது.

இதைப்போல பெண்ணிலை சார்ந்து எழுதப்பட்ட கவிதைகளிலும் தமிழ்நதியின் அரசியல் பார்வையையும் மனவொழுங்கையும் காணலாம். ஆண்மை, சாத்தானின் கேள்வி, புதிர், நீரின் அழைப்பு, தண்டோராக்காரன், கடந்து போன மேகம், நினைவில் உதிக்கும் நிலவு போன்றவை பெண்ணரசியலின் கொதிப்பையுடையவை. பொதுவாக தமிழ்நதியின் கவிதைகள் துயர்மொழிதான் என்றாலும் அதை ஊடுருவியும் மேவியும் குழந்தைமை நிரம்பிய இயல்பும் நெகிழ்வும் இவற்றில் குவிந்திருக்கிறது. அவருள் எல்லையின்மையாக விரியும் உலகு இது. அன்பின் நிமித்தமாதல் என்று இதைச் சொல்லலாம். அல்லது எதனிலும் கரைதல்.

இந்தக்கவிதைகளைப்படிக்கும்போது தமிழ்நதியைப்பற்றிய சித்திரம் நமது மனதில் படிகிறது. விரிகிறது. எழுகிறது தெளிவான வரைபடமாக. இவை தவிர்ந்த பொதுவான கவிதைகளும் உண்டு. யன்னல், கலகக்காரன் போன்றவை இவ்வாறான கவிதைகளுக்கான அடையாளம். இதில் யன்னல் பசுவய்யாவின் ( சுந்தர ராமசாமியின்) 'கதவைத்திற' என்ற கவிதையின் இன்னொரு நிலை என்றே நினைக்கிறேன். பசுவய்யா கதவைத்திற, காற்று வரட்டும் என்று சொல்கிறார். தமிழ்நதியோ யன்னலை அடைப்பதன் மூலம் உலகத்தைத் துண்டிக்கிறாய் என்கிறார். பூட்டி வைக்கும் எதனுள்ளும் எவருள்ளும் புக முடியாது வெளிச்சம் என்று இந்தக்கவிதையின் இறுதிவரி, கவிதை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க நிறைவடைகிறது. இங்கே பசுவய்யாவினுடைய உலகமும் தமிழ்நதியின் உலகமும் சில புள்ளிகளில் ஒன்றிணைவதைக்காணலாம். தலைமுறை கடந்த பிறகும் அந்த உணர்வு, அந்த எண்ணம் ஒன்றான தன்மையில் பயணிக்கிறது சமாந்தரமாய்.

தமிழ்நதிக்கு நகுலனிடத்திலும் பிரமிளிடத்திலும் கூடுதல் பிரியமிருக்கிறது. அவருடைய சிறுகதைகளிலும் பத்திகளிலும் கூட இதைக்கவனிக்கலாம். ஆனால், இந்த இருவருடைய பாதிப்புகளை இவருடைய கவிதைகளில் காணவில்லை. பதிலாக பசுவய்யாவின் தன்மைகளே அதிகமாகவுண்டு. ஆனால், மாதிரியோ சாயலோ அல்ல. அவருடைய அணுகுமுறை தெரிகிறது. காற்றில் நடுங்கும் மெழுகுவர்த்தி, யன்னல், நினைவில் உதிக்கும் நிலவு, கூட்டத்தில் தனிமை போன்ற கவிதைகள் இதற்கு ஆதாரம். சொற்களை ஒழுங்கமைப்பதன் மூலம் தன்னிலையை ஸ்திரப்படுத்துவதில் ஒரு வகையான நுட்பத்தையும் வாசகருடனான உறவையும் உருவாக்கும் திறன் பசுவய்யாவிடம் உண்டு. அதன் இளநிலையில் தமிழ்நதி இருக்கிறார்.

தமிழ்நதியின் பொதுமைப்பட்ட பண்பு அவருடைய பன்மைத்தன்மையினூடானது. சமூக, அரசியல், பெண் அடையாளம் கொண்ட விரிதளம் இது. தன்னுடைய காலத்திலும் சூழலிலும் அவர் கொண்டுள்ள ஆழமான உறவும் கூர்மையான கவனமுமே இதற்குக் காரணம். இவற்றை வெளிப்படுத்துவதற்கான கவி மொழியை நுட்பமாக்கியிருக்கிறார் அவர். அதேவேளை இந்த மொழியை நுட்பமாகக் கையாள்வதிலும் கவனம் கொண்டுள்ளார். பெரும்பாலான கவிதைகள் காட்சிப்படிமமாயும் ஒலிப்படிமமாயுமுள்ளன. நுட்பமான சித்திரிப்பின் ஆற்றலினாலே இது சாத்தியமாகியுள்ளது. அவர் சொல்வதைப்போல மொழியின் அதியற்புதம் என்று கொள்ளத்தக்க வெளிப்பாட்டு வடிவமாகிய கவிதையைத் தேர்ந்தெடுக்க நேர்ந்த கணத்தை தமிழ்நதி அதிகம் விரும்புகிறார். அதனால் அவர் தன்னுடைய சித்திரிப்பில் இந்த நுட்பங்களை நோக்கிப்பயணிக்கும் சவாலை விரும்பிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நதியின் முதற் கவிதைத்தொகுதி இது. இதில் உள்ள நாற்பத்தியேழு கவிதைகளில் பெரும்பாலானவற்றில் அவர் தன்னடையாளத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார். இது அவருக்கும் வெற்றி. நமக்கும் வெற்றியே. இனிவரும் புதிய கவிதைகள் அவரையும் நம்மையும் புதிய பரப்புக்கு கொண்டு போகலாம்.


நன்றி:திண்ணை இணையத்தளம்
கவிஞர் கருணாகரன், அகிலன்

1.16.2008

‘குற்றவுணர்வின் மொழி’: ஒரு கவிதை அனுபவம்


ஒரு படைப்பை மதிப்பீடு செய்தல்,திறனாய்தல்,விமர்சித்தல்,பார்வை இப்படிப் பல பெயர்களாலாய செயல் எவ்வளவிற்குச் சாத்தியமுடையது என்பதில் எனக்குச் சந்தேகமிருக்கிறது. மேற்கண்ட வாக்கியம் கவிதையை முன்வைத்தே சொல்லப்பட்டது. ஏனெனில்,மிகவும் அகவயம்சார்ந்த மொழிவெளிப்பாடாகிய கவிதையை வாசித்து, அது நமக்குள் கடத்தும் அற்புதானுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன் நிறுத்திக்கொள்வதே அதற்கு நாம் செய்யும் நியாயமாக இருக்கமுடியும். தன்னை எழுதப் பணிக்கும் கவிதையின் குரலை, அதன் தொனியும் பொருளும் குறைவுபடாமல் பதிவுசெய்ய அதனோடு தொடர்புடைய படைப்பாளியே திணறும்போது வாசகனோ சகபடைப்பாளியோ அதை உள்வாங்கிக்கொள்வதும், அதன் சாரத்தை எழுத முற்படுவதும் வியர்த்தமே. அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த ‘குற்றவுணர்வின் மொழி’யைப் பற்றி எழுதவேண்டுமென்று தோன்றியபோது, ‘விமர்சனம்’, ‘மதிப்பீடு’போன்ற வார்த்தைகளைத் தள்ளிவைக்கவேண்டுமெனத் தோன்றியது அதனாலேயே. கவிதைகளை வாசித்ததும் எழுந்த உடனடி உணர்வுந்துதலே இக்கட்டுரையாகிறது.

‘ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது அதை எழுதியவனை அல்லது எழுதியவளை வாசிப்பதுபோலவே இருக்கிறது’என்பது நாவலுக்கும் சிறுகதைக்கும் பொருத்தமற்றதெனத் தோன்றலாம். ஆனால், கவிதைகளுக்கல்ல. கவிதைகள் பெரிதும் எழுதுபவனின்-எழுதுபவளின் வாக்குமூலமாக அமைந்துவிடுதலே இயல்பு. ‘குற்றவுணர்வின் மொழி’யைப் படித்தபோது, பாம்பாட்டிச்சித்தனின் அகநிலைச் சித்திரங்கள் வரைந்த சாலையினூடே நடப்பது போன்றே இருந்தது. தொகுப்பின் முன்னுரையில் சி.மோகன் அவர்களால் கூறப்பட்டிருப்பதுபோல, ‘கவிஞன் அடிப்படையில் ஒரு சுயசித்திரக்காரன்’தான். இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் தன்னனுபவ வெளிப்பாடாக இருத்தலுக்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. ‘நரபலியின் கூற்று’, ‘குற்றவுணர்வின் மொழி’, ‘வழித்துணையாய் வந்த கடவுள்’, ‘டிசம்பர் 13,2003’ ஆகிய நான்கு கவிதைகள் மட்டுமே புறவுலக அரசியல் சார் கவிதைகள் எனலாம்.

ஒற்றை வாசிப்பில் புரிந்துகொள்ளலாமென்ற எதிர்பார்ப்புடன் பக்கங்களைப் புரட்டிச் செல்ல முற்படும் வாசகனை தனது செறிவார்ந்த மொழிக் கட்டமைப்பால் ஏமாற்றிவிடுகிறார் கவிஞர். அவ்வகையில் ஆழ்ந்த வாசிப்பினை வேண்டி நிற்கின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள்.

தான் கண்ட காட்சியைத் தன் கற்பனைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப வார்த்தைகளில் ஏற்றிவிடும் கலை கவிஞனுக்கே வாய்த்திருக்கிறது. அக்கலை பாம்பாட்டிச் சித்தனுக்கு விரல்கூடியிருக்கிறது.

"தொலைபேசி ஒலிகள்
பிரவாகித்தபடி இருக்கும்
ஆளில்லாத வீட்டைச் சுற்றி
செழித்தடர்கிறது வேதனைப்புதர்"

எடுப்பாரில்லாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் தொலைபேசி மணியோசை, அந்த வீட்டைக் கடந்து செல்பவரிடை எத்தனை கேள்விகளை எழுப்பியிருக்கும்? நிச்சயமாக அது துயரத்தின் ஓசையாகத்தானிருந்திருக்க முடியும்.

-
"எலுமிச்சை மரயிடுக்குகளில் பொசிந்த
மஞ்சள் வெயில் சுவைத்து
வாய்கூசிக் கரையும் காகங்கள்"


எலுமிச்சையிலிருந்து பொசியும் வெயிலும் புளிக்குமோ…? இதுவரை எவரும் எடுத்தாளாத கற்பனை இது. ஆளரவமற்று அயர்ந்த நடுப்பொழுதில் வாய்கூசிக் குழறும் காகங்களின் கரைதல் கவிதையை வாசிக்கும்போது ஒலிப்பது போலிருந்தது.

தொகுப்பு முழுவதையும் ஒரே அமர்வில் வாசிக்கும்போது, கவிதைகளினூடே ஒரு குழந்தையின் சிறிய பாதங்கள் நடந்துதிரியும் மெல்லிய காலடியோசையைக் கேட்கமுடியும். பெரும்பாலான கவிதைகள் குழந்தைகளின் உலகம் குறித்ததாகவும், அந்த உலகத்தின் வினோதாதீதங்களினாலேற்பட்ட வியப்பில் விழியகன்ற ஒரு கவிஞனின் வரிகளாகவுமே இருக்கின்றன. ‘உயிர் வருகை’, ‘படைப்பின் இரகசியம்’, ‘வாழ்தலும் புரிதலும்’, ‘இருந்தும் இல்லாமல் போன இடத்தில்…’, ‘தனிச்சி’, ‘குழந்தையுடனான யாத்திரை’, ‘பிள்ளை விளையாட்டு’, ‘குணாதிசயம்’, ‘பனிமொழி’,’வனம் புகுதல்’, ‘நீர்க்கரை’ போன்ற கவிதைகளில் குழந்தைமையும் குழந்தைகளும் பாடுபொருளாகவோ அன்றேல் பக்கப்பொருளாகவோ இருக்கின்றன. குழந்தைகளுக்கான படைப்புகள் தமிழில் அருகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், குறைந்தபட்சம் அவர்களின் மனவுலகம் பற்றிய எழுத்துக்கள் வருவது நிறைவுதருகிறது. கவிஞர் உளவியல் துறை சார்ந்த பணியில் இருப்பதனாலும் இது சாத்தியப்பட்டிருக்கலாம்.

கவிஞருடைய பெயரின் விசித்திரம் போலவே மாயாவாத கனவொன்றினுள் வாசகரை இட்டுச்செல்லும் வரிகள் தொகுப்பெங்கிலும் விரவிக்கிடக்கின்றன.

“உயிர்விடும் முன் எழுதிய கடிதம்
சூனியத் தகடாக…”

“மந்திரித்த மரப்பாச்சி போல்
மடல் மேலமர்ந்து ரீங்கரித்த…”

“கருப்பு சூன்யத்தாலோ
மற்றதென் சகாயத்தாலோ…”

“சூத்திரப்பாவையின்
கயிறறுந்த விதம் பற்றிய…”

கவிதைகள் இப்போது சிறுகதைகளின் வேலையைச் செய்வதாக’கவிஞர் யவனிகா சிறீராம் ஓரிடத்தில் சொல்லியிருந்தார். அண்மைய நாட்களில் அக்கூற்றை உறுதிசெய்வதான கவிதைகள் நிறையவே வாசிக்கக் கிடைக்கின்றன. இத்தொகுப்பிலும் ‘பிரிவிற்கு முந்தைய கணங்கள்’, ‘வழித்துணையாய் வந்த கடவுள்’போன்ற கவிதைகள் சிறுகதையாக விரிக்கத்தக்க சம்பவ சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன.

கவிதைக்கு வடிவம் இன்னதுதான் என்றில்லை. அது ஊற்றப்படும் பாத்திரத்தில் தண்ணீராக தன்வடிவம் நிர்ணயிக்கும் தன்மையது. ஆனால், கட்டிறுக்க மொழியைக் கொண்டமைந்த கவிதைகளைக் காலம் பின்னிறுத்தாது, தன்னுடன் எடுத்துச்செல்லும் என்பது எழுதா விதி. பாம்பாட்டிச் சித்தனின் கவிதைகளில் அத்தகு சிறப்பினை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக,

“வார்த்தைகள் நிரப்பாத மௌனப் பெருங்குழி”

“சொல்வலைக்குள் சிக்காத சிறுபறவை”

போன்ற வரிகள் எந்தச் சாயலுமற்று வாசித்த கணத்தில் மனஆழத்தில் சென்று இறங்குபவை.

ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு சொல் பிடித்தமானதாக இருக்குமோ என்னமோ… எனக்குத் ‘தனிமை’என்ற சொல் தவிர்த்து எழுதவியலாது. ‘சொற்கள்’உம் எப்போதும் என்னைப் பிரிய மாட்டேனென அடம்பிடிப்பவை.(நல்லதுதானே) கூறியது கூறல் குற்றந்தான் எனினும், எப்போதும் கூடவே இருக்கும் ஞாபகங்களைப் போல சில சொற்களைப் பிரியவியலாது. ‘குற்றவுணர்வின் மொழி’யில் ‘வெளி’என்ற சொல் நட்சத்திரங்களைப் போல அநேக கவிதைகளில் சிதறிக்கிடக்கிறது.

‘சம்பாசணைப் பெருவெளிகளை’
‘மலர்தலுக்கும் உதிர்தலுக்குமான வெளியில்’
‘காலவெளியினுக்கு இரையாகி’
‘மாடியின் வெளி விடுத்து’
‘பாழ்வெளியலைந்து’
‘நீர்ச்சமவெளியை’
‘வளிவெளியில்’
பாழ்வெளித் தனிமையை’
‘பேதலித்த மனவெளியோடு’
‘வானமற்ற வெளியில்’
‘வெளியைப் புணர்ந்த வெக்கை’

‘வெளி’யில் எல்லோர்க்கும் விருப்பந்தான். சிறையிருத்தல் உவப்பில்லை. தனித்தனிக் கவிதைகளாகப் பார்க்கும்போது தோற்றாத இந்த மீள்கூறல், தொகுப்பாக அமையும்போது உறுத்துவதாகிவிடுகிறது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் சொற்தேர்வினாலும் கட்டிறுக்கத்தினாலும் சிறக்கின்றன. ஆனாலும், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக ஆரம்பித்த இடத்திலிருந்து முடிவினை நோக்கி மூச்சைப் பிடித்துக்கொண்டு நிறுத்தற்குறிகளற்று நகர்வதனால், இடைப்பட்ட பொருள் இழக்கப்படுகிறது. கவனம் முழுவதும் இறுதிப்புள்ளியில் குவிவதனால் சொல்நேர்த்தியை,பாடுபொருளை ஆசுவாசமாக முழுவதுமாக அனுபவிக்க இயலவில்லை.

"கருக்கலில் வரும்
கருத்தப் பால்காரியை
கூடும் புணர்ச்சியில் பூரணப்படுகிறது
என் புலரி"


போன்ற வரிகளில் கல்யாண்ஜி தொனிக்கிறார்.

கவிதையைச் சுமந்து அலைவது ஒரு வலியென்றால், நமக்குரிய வடிவத்தைக் கண்டடைவது மிகுவலி. அந்த அலைச்சலை, பரிதவிப்பை, தேடலை பாம்பாட்டிச்சித்தனின் கவிதைகளிலும் காணமுடிகிறது. திசைகளெங்ஙணும் சிறகடித்தபடி தன் கூட்டைத் தேடியலையும் ஒரு பறவையின் தவிப்பை, இவரைப்போலவே முதற்தொகுப்பை வெளியிட்ட அநேக கவிஞர்கள் அனுபவித்திருப்பார்கள். அந்த அலைதலின் நீட்சியாக ‘வழித்துணையாய் வந்த கடவுள்’என்ற கடைசிக்கவிதை அமைந்த வடிவத்தைக் கொள்ளலாம். ‘சொல்வலைக்குள் சிக்காத சிறுபறவை’ அந்த மரத்திலேயே தன் கூட்டைத் தொடர்ந்து இழைக்கவும் இசைக்கவும் கூடும்.

இத்தொகுப்பின் அட்டைப்படம் மற்றும் வடிவமைப்பு மிக நேர்த்தியாக அமையப்பெற்றிருந்ததை அவதானிக்கமுடிந்தது.

‘குற்றவுணர்வின் மொழி’ கவிஞரின் முதற்தொகுப்பென்பதை நம்புவதற்கரியதாக்குகிறது அதன் மொழியழகு. எனினும், எண்ணிக்கையில் இல்லை இலக்கியம்; அதனோடான படைப்பாளியின் தொடர்ந்த இருப்பில் இருக்கிறது என்பதன் அடிப்படையில், இது முதற்தொகுப்பென்பதை நம்பித்தானாக வேண்டியிருக்கிறது.


வெளியீடு: அன்னம்
கவிஞரின் மின்னஞ்சல் முகவரி:pampattisithan@gmail.com



2.22.2007

படம் காட்டுறாங்க…. படம்…!


ஒருவர் தீபாராதனை காட்ட சாமி முகம் தெரிகிறது. அதனையடுத்து ‘எல்லாம் நல்லபடி நடக்கும்’என்று யாரோ ஒருவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். ‘நைக்’ போட்ட ஒரு சப்பாத்துக் கால்… மன்னிக்கவும் இரண்டு கால்கள் தூசி பறக்க ஓடிவருகின்றன. கமெரா அங்குலம் அங்குலமாக மேலேற அது விஜயின், அஜித்தின், சிம்புவின், சூரியாவின், தனுஷின் அல்லது ஏறக்குறைய முழுவதும் புதரடர்ந்த ராஜேந்தரின் முகத்தில் வந்து முடிகிறது. அவர் சட்டைக் கொலரைப் பின்தள்ளிவிட்டுக்கொள்கிறார். புயலடிப்பது போல காற்று சுழற்றி அடிக்கிறது. அவர் தலையை அசைக்கிறார். பிரமாண்டமான விசிறி உபயத்தில் தலைமயிர் பறக்கிறது. அதுவரை முதுகின் பின்புறம் ஒளித்துவைத்திருந்த அரிவாளை அல்லது சைக்கிள் செயினைக் கையிலெடுக்கிறார். இப்போது திரை முழுவதும் வியாபித்து நிற்கிறது புனித பிம்பம். ‘உய்… உய்’எனும் விசில்களால் திரையரங்கம் அதிர்கிறது. உற்சாக மிகுதியால் கைக்குட்டைகள் தலைக்கு மேலால் உயர்ந்து அசைகின்றன. ‘தல’, ‘தளபதி’, ‘தெய்வமே’எனும் தழுதழுத்த குரல்களால் திரையரங்கு நனைகிறது.

இப்போது நாங்கள் இரண்டாம் காட்சிக்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக மென்மையான சங்கீதம் ஒலிக்கத் தொடங்குகிறது. இம்முறை கால்களில் இருந்தோ தலையில் இருந்தோ காட்சி தொடங்குமென்று உத்தரவாதம் தருவதற்கில்லை. எந்த அதிர்ச்சிக்கும் உங்களைத் தயாராக்கிக்கொண்டு காத்திருக்க அதிர்ஷ்டவசமாக (துரதிர்ஷ்டம்?) திரிஷாவின்,அசினின்,சிநேகாவின்,நமீதாவின் முகத்தில் கமெரா தரிக்கிறது. முகத்திலிருந்து கமெரா அங்குலம் அங்குலமாகக் கீழிறங்கி இந்தத் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாநாயகிக்கு எங்கெங்கே சதை போட்டிருக்கிறது, வற்றியிருக்கிறது இன்னோரன்ன விபரங்களை நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். ‘ஸ்லோ மோசனில்’கதாநாயகி ஒய்யாரமாக நடந்துவர மீண்டும் விசிறி உபயத்தில், படப்பிடிப்பிற்கென பளபளப்பாக்கப்பட்ட கூந்தல் அலையாடுகிறது. அடங்காத விருப்போடு மீண்டுமொரு முறை இடுப்பை கமெரா நெருங்கிப் பார்க்க ஒருவித பதட்டம் நமக்குள் தொற்றிக்கொள்கிறது. கதாநாயகியின் வயிறு இலேசாக மேடிட்டிருப்பதை எங்களுக்கு நிரூபித்துவிட்ட திருப்தியோடு கமெரா பின்னகர்ந்துகொள்கிறது.

இப்போது வில்லன்கள் கதாநாயகியைக் கிண்டல் அடிக்க வேண்டும். அல்லது கதாநாயகி கதாநாயகனின் மீது தெரியாத்தனமாக மோதிக்கொள்ள கையிலிருக்கும் புத்தகங்கள் விழவேண்டும் என்பதே விதிமுறை. நாங்கள் முன்னதைத் தேர்வோம். அவர்களில் ஒருவர் நேராக நடந்து சென்று கதாநாயகியை- (சரி ஒரு வசதிக்காக எனது நண்பர்களிலொருவருக்கு மிகப்பிடித்த அசின் என்று வைத்துக்கொள்வோம்.) அசினின் தோளை ஒரு காட்டெருமையைப் போல உரசுகிறார். அசின் பயத்தோடு தனது நீண்ட விழிகளால் வீதியை அலசுகிறார். பொதுமக்கள் என்ன செய்ய வேண்டுமோ அதிலிருந்து இம்மியளவும் பிசகாமல் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆம்! பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நனைந்த கோழிக்குஞ்சைப் போல அசின் நடுங்கிப் போகிறார் என்றுதான் நான் இப்போது எழுதவேண்டும். சரி ஒரு வித்தியாசத்திற்காக மிரண்ட மானைப்போல என்று எழுதுகிறேன். ராட்டின இருக்கைகள் அந்தரத்தில் மையத்தைச் சுற்றிவருவதைப் போல, தொந்தி பெருத்த, தலை வளர்த்த தடியன்கள் அசினைச் சுற்றி வருகிறார்கள்.

“பாவம்பா அந்தப் பொண்ணு… விட்டுடுங்கப்பா…. போட்டும்”

அட! பார்வையாளர்களினிடையிலிருந்து யாரோ பேசுகிறார்களே…! நீங்கள் நினைப்பது சரி… அவர் ஒரு ஆண்மகன்! மறுநொடியே ‘சொத்’தென ஒரு சத்தம். அவர் தரைக்கு ஐந்தடி மேலாகப் பறந்துசென்று கூட்டத்தினர் நடுவில் விழுகிறார். பார்வையாளர்கள் பயத்தோடு அவசர அவசரமாக விலகிக்கொள்கிறார்கள். நீங்கள்தான் எவ்வளவு கெட்டிக்காரராக இருக்கிறீர்கள்! இப்போது கதாநாயகன் வந்து அவரைத் தூக்கி நிறுத்தி சட்டையில் படிந்த புழுதியைத் தட்டிவிடவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இயக்குநர்கள் எப்போதும் உங்களை ஏமாற்றும் பாவத்தைச் செய்வதில்லை.

கதாநாயகன் முன்தயாரிக்கப்பட்ட, ஏற்கெனவே உங்களுக்குப் பரிச்சயமான வசனங்களைப் பேசுகிறார். அவர் சாம,பேத,தானங்களைக் கடந்து தண்டத்திற்குத் தயாராகும்போது உங்கள் நரம்புகள் முறுக்கேறிப் புடைக்கின்றன. உங்கள் மெலிந்த தேகங்களுள் இருக்கும் இரத்தம் உற்சாக நதியாக ஓடத்தொடங்குகிறது. ‘மூஞ்சிலயே போடு’உணர்ச்சி மிகுதியால் உங்களையறியாது நாற்காலியிலிருந்து எழுந்துவிடுகிறீர்கள். பின்னிருக்கையில் இருப்பவர் வயதானவராக இருக்கும் பட்சத்தில், உங்கள் கலாபிமானத்தின் முன் சற்று அடக்கியே வாசிப்பார். இளைஞராக இருந்தால் அவருக்கும் நரம்புகள் உண்டென்பதை நீங்கள் நினைவிற் கொள்ளல் நன்று.

மாயாஜாலங்கள், அம்புலிமாமாக் கதைகள், சின்ன வயதில் வாசித்த இரும்புக்கை மாயாவியின் வித்தைகள் ஆரம்பமாகிவிட்டன. அந்தோ! கதாநாயகனுக்குள் ஒரு டார்ஜான் புகுந்துவிட்டார். அவரது முதுகிலுள்ள கண்கள் திறந்துகொள்கின்றன. ஒரு கத்தியோடு பின்னாலிருந்து பாய்கிறவனைத் திரும்பாமலே அடித்து வீழ்த்துவதெனில் அவருக்கு முதுகில் கண்கள் இருப்பது அவசியம் என்பதைப் பார்வையாளர்களாகிய நீங்கள் எவ்வித தயக்கமுமின்றி ஒத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஒரு ராஜாளியைப் போல பறக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு காலால் முன்னே இருப்பவனையும் மறுகாலால் பக்கவாட்டில் இருப்பவனையும் பறந்து பறந்து உதைப்பதெனில் சாதாரணமானதல்ல. சண்டை நடப்பது வீதியெனில் அது சந்தையாக இருப்பதும் அவசியம். கதாநாயகன் அடித்துப் போடும் வில்லனின் அடியாட்கள் சென்று விழுவதற்கு தள்ளுவண்டிகளில் தக்காளிகள் தயாராக இருக்கின்றன. மடமடவெனச் சத்தமிட்டுக்கொண்டு சரியத்தக்க பீப்பாய்கள் இருப்பது இன்னும் சிறப்பு. குவித்து வைக்கப்பட்ட அரிசிகள்,அப்பிள் பழங்கள்,மீன்கள் சிதறுதலன்றி சண்டைக்காட்சிகளை எம்மால் ரசிக்க முடிவதில்லை. உங்களிடமும் என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது. ஒரே சமயத்தில் இந்த வில்லனின் அடியாட்கள் கதாநாயகன் மீது பாயாமல், ஏதோ பொதுஇடத்திலுள்ள கழிவறைக்குப் போவதுபோல முறைவைத்துப் பாய்வது எதனாலென்ற கேள்வி பதிலிறுக்கப்படாமலே இருக்கிறது. சரி! இப்போது அனைவரையும் வீழ்த்தியாகிவிட்டது. வலியில் முனகியபடி ஆங்காங்கே கிடக்கும் அவர்களில் ஒருவன் திடீரென எழுந்து கையில் ஒரு ஆயுதத்தோடு பாயாமலிருந்தால் சண்டை அத்துடன் அப்போதைக்கு நிறைவுற்றது.

இப்போது அசின் கதாநாயகனின் கையிலுள்ள கண்டுகொள்ளப்படாத ரத்தத்திற்குப் பதறிப் போகவேண்டும். அத்துடன் நன்றி சொல்லவும் வேண்டும். அதற்கு கதாநாயகன் ‘எனது கடமையைத்தானே செய்தேன்’என்ற வசனத்திற்கு வாயசைத்தால் போதுமானது. ஏனெனில், அந்தத் தேய்ந்த வசனத்தை நீங்கள் உச்சரித்துக்கொண்டிருக்கிறீர்கள். ‘என்னாச்சுடா…?’ என்று சண்டை முடிந்த பிற்பாடு பதறிவரும் கதாநாயகனின் நண்பர்களை இன்னும் காணோம். முன்பெனில் சின்னி ஜெயந்த் இருந்தார். பின்பொருகாலம் தாமுவும் வையாபுரியும் இருந்தார்கள். விவேக் கூட இருந்தார். இன்றைய நிலவரப்படி வடிவேல் இருந்தேயாக வேண்டும். அவரோடு மேலும் சிலர் இருக்கலாம். ம்… சரியான கணிப்புத்தான்! அவர்கள் வந்துவிட்டார்கள்.

“என்னாச்சுடா கையெல்லாம் ரத்தம்?”நண்பர்கள் விழி பிதுங்கக் கேட்கிறார்கள்.

“ச்சும்மாதான்”என்பதனோடு கதாநாயகனுக்கு அல்லது இயக்குநருக்கு விட மனதில்லை. அந்தப் பக்கத்தில் அசின் வேறு தனது அழகான கண்களால் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

“ஒரு தடவ தீர்மானிச்சுட்டா எம் பேச்சை நானே கேக்க மாட்டேன்”
“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி”
“தலகிட்ட மோதறவனுக்கு தலயே இருக்கக்கூடாது”
“நான் போலீஸ் இல்லடா பொறுக்கி”

மேற்குறிப்பிட்ட சாயலையொத்த இறவாப்புகழுடைய ‘பன்ச்’வசனம் ஒன்றைச் சொல்லிவிட்டுக் கதாநாயகன் கமெராவின் கண்களை உற்றுப்பார்ப்பார். அந்த வசனங்களை ஒப்புவிக்கும்போது கைகளால் ஏதாவது ஒரு முத்திரையைக் காட்ட வேண்டுமென நீங்கள் அதீதமாக எதிர்பார்க்கிறீர்கள். தலைமயிரைப் புறங்கையால் பின்னொதுக்குதல், தோள்களைக் குலுக்குதல் போன்ற வித்தைகளோடு விரல்களால் சிலம்பம் ஆடுவதில் சிம்பு ஏனையோரைப் பின்தள்ளிவிடுவாரென்பதில் ஐயமில்லை. கதாநாயகனை காதல் வழியப் பார்த்துவிட்டுப் இடுப்பசைத்துப் போகும் அசினைப் பின்தொடர்ந்து சில நொடிகள் செல்லவேண்டியது இப்போது கமெராவின் கடமையாகிறது.

அட!இப்போது தாரை தப்பட்டைகள் முழங்கத் தொடங்குகின்றனவே! நீங்கள் ஆச்சரிப்படவில்லை. சேலையணிந்த அல்லது தொப்பூளுக்குக் கீழ் ஜீன்ஸ் அணிந்த, கதாநாயகியை விட சற்று அழகு குறைந்த பெண்களுடன் அதே எண்ணிக்கையிலான ஆண்களும் இரண்டு மூலைகளிலும் இருந்து திடீரென ஓடிவர குத்துப்பாட்டொன்று தொடங்குகிறது. அது என்ன பாட்டு என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நீங்களே குணா ‘றேஞ்சில்’ ‘கண்மணி…பொன்மணி’ எல்லாம் போட்டுக்கொள்ளுங்கள். சரியா…?

அடுத்த காட்சியை நீங்கள் சொல்லப்போவதாக அடம்பிடிக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்ததுதான். உங்களுக்குத் தெரியுமென்று இயக்குநருக்கும் தெரியும். எதிர்பார்க்கும் காட்சியைக் கொடுக்காமல் விட்டால் எங்கே நீங்கள் திரையரங்கத்தை விட்டு வெளியேறிவிடுவீர்களோ என்ற பயம் அவர்களுக்கு. கதாநாயகன், வெயிலில் மயங்கிவிழுந்த கிழவியைத் தூக்கி நிழலில் இருத்துவதையோ, விழிப்புலனற்றவர் ஒருவர் வீதியைக் கடக்க உதவுவதையோ, அனாதை இல்லத்தில் உள்ள சிறுவர்களைப் பாட்டுப் பாடி மகிழ்விப்பதையோ அந்த வழியாகப் போகும் அசின் பார்த்துவிடுகிறார். (அவரன்றி யார் பார்ப்பார்…)காதலின் ரசவாதம் வேலை செய்யத் தொடங்குகிறது.

அசின் கண்ணை மூடிக்கொள்ள, அவரோடு நீங்கள் இப்போது சுவிற்சர்லாந்தில் நிற்கிறீர்கள். குளிர்கிறது. ஒரு சதம் கூடச் செலவில்லாமல் சுவிற்சர்லாந்தைக் காட்டும் இயக்குநரை நன்றியோடு விழிகசிய நினைத்துக்கொள்கிறீர்கள். (தகுந்த தயாரிப்பாளர் அகப்படாது போனால் உள்ளுருக்குள் ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ அழைத்துப் போவார்கள்) வாகனத் திருத்தகத்திலோ, திரையரங்கிலோ பணி புரியுமொருவன் இருந்தாற்போல ‘கோட்-சூட்’ சகிதம், அம்பானியின் மகனையொத்தவனாக ஆடுவதை ஒரு கேள்வியும் கேட்காமல் வாய்பிளந்து பார்க்கிறோம். ஆனால், கதாநாயகி ஏழை பாழைதான் என்பதை இயக்குநரோடு முரண்படாமல் நாங்களும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எலும்பைத் துளைக்கும் குளிரில், மேலே அரை அடியிலான ஆடையும் அதேவிதத்தில் கீழொன்றும் மட்டுமே அணிந்து ஆடும் அவர் பஞ்சத்தில்தான் இருக்கிறார் என்பதை எந்த அறிவுஜீவியாலும், பின்நவீனத்துவக்காரர்களாலும் மறுக்கவியலாது. திடீரென உங்கள் புலன்களுக்குச் சட்டென புரியாததொரு காட்சி திரையை நிறைக்கிறது. நிதானித்து(ஜே.ஜே. படம் பார்த்தபோது நான் பயந்த ஞாபகம்)யோசிக்க… குகையல்ல அது தொப்பூள்தான் என்பதை அறிந்து ஆசுவாசம் கொள்கிறீர்கள். ஒவ்வொரு தடவை விருது வழங்கப்படும்போதும் தொப்பூளுக்கு அநியாயம் இழைக்கப்படுவதாகவே நான் வருந்தியிருக்கிறேன். ஏனெனில் எத்தனை படங்களில் அது நடித்தாலும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை. பாரபட்சம் என்பது திரைத்துறையிலும் இருப்பது வருந்தத்தக்கதே.

அடுத்தடுத்த காட்சிகளில் அசின் நிறைய வெட்கப்பட வேண்டும். தலையணையைப் பஞ்சு வெளிக்கிளம்பாமல் பிய்த்துக்கொண்டு படுக்கையில் உருளவேண்டும். அசின் வில்லனின் மகளாய் இருப்பது தமிழ்ச்சினிமாவின் நீண்டநாள் பாரம்பரியத்தைச் சிதைக்காமலிருக்க உதவும். இதற்கிடையில் நமது கதாநாயகனின் நிழலெனத் தொடரும் நண்பர்களிலொருவர் அசினை எவ்விதமோ நெருங்கிவிடுவதையும், அசின் ஒரு நல்ல பண்பாடான, குடும்பப் பாங்கான பெண்ணென்பதையும் சாடைமாடையாகத் தொட்டுக் காட்டிவிடவேண்டும் (அசினைத் தொட்டல்ல. அது நட்புக்குத் துரோகம்!) அதைக் கதாநாயகனின் காதுகளில் போட வேண்டியது இப்போது நண்பரின் கடமைகளில் ஒன்றாகிறது. ஆயிற்றா…? இப்போது அசினின் காதல் நோய் குரங்குபோல கதாநாயகனைத் தொற்றிக்கொள்கிறது.

இப்போது பாடலாசிரியர் தனது வேலையைக் காட்ட வேண்டும். ‘நீ மலரா நிலவா… கனவா…. தளிரா…’என்ற பாடல் ஒலிக்கத் தொடங்க, கதாநாயகனும் அசினும் கட்டித் தழுவி உருண்டு புரண்டு ஆடுகிறார்கள். இடையிடையில் இடையைக் காட்டி தமிழ்ச்சினிமாவைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்துகிறார்கள். செடி மறைவில் உதட்டு முத்தமும், கதாநாயகியின் நாணமும், கதாநாயகன் ஏதோ வெட்டி வீழ்த்தியது போன்ற பெருமிதத்தோடு உதட்டை நாவால் நனைத்துக் கொண்டு கமெராவைப் பார்ப்பதும் நமது தலையில் எப்போதோ எழுதப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் பழைய பகையொன்று இருப்பது தெரியவர வேண்டும். அது கடைசிக் காட்சியை உக்கிரப்படுத்த உதவும். கதாநாயகனின் அக்காவைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திக் கொன்றவர்களில் ஒருவராக வில்லன் இருக்கலாம். அன்றேல், கதாநாயகனின் தந்தையைக் கொன்றவனாக இருக்கலாம். சிலசமயம் கதாநாயகனின் தாயை ஏமாற்றிச் சுகித்துவிட்டு வேறொருத்தியை மணந்துகொண்டு சுகவாழ்வு வாழும் ‘அப்பா’ வில்லனாகக் கூட இருக்கலாம்.

இனித்தான் கதை (பொலிஸ் நாயை அனுப்பியேனும் அப்படியொன்று கண்டுபிடிக்கப்பட்டால்) உச்சக் கட்டக் காட்சியை நோக்கி நகரப்போகிறது. வில்லனாகப்பட்டவர், பெரிய சரவிளக்குத் தொங்கும் பரந்த வெளி போன்ற மண்டபத்தில் தனது தொண்டரடிப்பொடிகளுடன் கதாநாயகனைக் கறுவிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். கதாநாயகனையும் அவரது குடும்பத்தையும் எப்படியாவது வேரறுக்க வேண்டுமென்று சூளுரைப்பதை நாங்கள் நாற்காலியின் நுனிக்கு நகர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். இச்சமயத்தில் விசுவாசமற்ற அடியாட்களில் ஒருவன் சட்டெனச் சுடப்பட்டு பொட்டெனப் போவதைக் காட்டி வில்லனை அதி வில்லனாக்கலாம். ஒரு வெள்ளை வாகனம் விரைந்துவந்து சரேலென்று நிறுத்தப்பட்டு, அதற்குள் அசினும் கதாநாயகனின் தாயாரும் தங்கையும் அள்ளிப் போடப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். வாகனத்துக்குள்ளிருந்து பயணிக்கும்போது தாங்கள் கதாநாயகனுக்கு என்ன உறவு முறையென்பதை அறிமுகப்படுத்திக்கொள்வார்களாயிருக்கும். இல்லையெனில், வில்லனின் இருப்பிடத்தில் ஒருவரையொருவர் வியப்பும் கேள்விகளும் ததும்பப் பார்த்துக்கொண்டிருக்கவல்லவா வேண்டும்?

இது வில்லன் வாயைத் திறந்து அடுக்கு வசனங்களை அள்ளியெறியும் நேரம். அவ்வளவு நாள் படப்பிடிப்புக்கு வந்து போன காரணத்தால் இயக்குநரும் அதை அனுமதித்திருக்கிறார். ‘உன்னுடைய மகன் இங்கே வந்து உங்களைக் காப்பாற்றுகிறானா பார்க்கலாம்’இன்னோரன்ன ரீதியில் வில்லன் வாயோயாமல் பேசிக்கொண்டிருக்க, கதாநாயகனுக்குத் தகவல் போய்விடுகிறது. கதாநாயகனின் உறவுகள் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தருணம் வடிவேலுவோ விவேக்கோ கண்டுவிட வேண்டுமே என்று நாங்கள் (குறிப்பாக அன்னையர்) நெஞ்சில் கைவைத்து வேண்டிக்கொண்டிருந்தது கடவுளின் செவிகளை எவ்வண்ணமோ தவறாமல் சென்றடைந்துவிடுகிறது.

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு(யதார்த்தத்தின்படி தூக்கித் தோளில் வைத்துக்கொண்டுதான் போகவேண்டும். பூட்டிச் சாவியைப் பையில் போடாமல் இங்கெவரும் போவதில்லை.) அதன் சொந்தக்காரரோ பொலிசாரோ பின்துரத்த கதாநாயகன் சீறிப்பறந்து போகிறார். இந்த உச்சக்கட்டக் காட்சியை நாங்கள் நாற்காலியிலிருந்து விழுந்துவிடப் போகிறவர்களைப் போல பார்த்துக்கொண்டிருக்கிறோம். வில்லனின் ஆட்களுடைய வாகனம் ‘மர்ம தேசம்’பாணியில் நெருங்குகிறது. அதை அவர் மயிரிழையில் தவிர்க்க, அது தரையிலிருந்து பதினைந்தடி உயரத்திற்கு எகிறிப் பின் ஆசையோடு தரையைத் தழுவி அப்பளமாக நொறுங்குகிறது. விழிகளுக்கு நல்ல விருந்தென மகிழ்கிறோம்.

வில்லனாகப்பட்டவர் தாயின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும்போது அல்லது நேரக்குண்டினை வெடிக்கவைக்கும் விசையை அழுத்த விரல் வைக்கும் அந்தக் கணத்திற்கு சற்று முன்னேயோ பின்னேயோ அல்லாமல் மிகச்சரியாக அந்நொடியில் கதாநாயகன் கண்ணாடியைப் பிய்த்தெறிந்துகொண்டு மோட்டார் சைக்கிள் சகிதம் அரங்கினுள் பிரவேசிக்கிறார். இப்போது மீண்டும் பீப்பாய்கள், பலகைகள், வெற்றுப்பெட்டிகளின் தேவையேற்பட்டுவிட்டது.இப்போது நீங்கள் விசிலடிக்க வேண்டும். வெட்கம் துக்கம் பார்க்காதவரெனில் ஓரிரண்டு கெட்டவார்த்தைகளைச் சொல்லி உற்சாகத்தை வெளிப்படுத்தலாம். இனி நடக்கப்போவதைச் சொல்ல இயக்குநர் தேவையில்லை. மூன்று வயதுக் குழந்தையைக் கொண்டு வந்து உட்கார்த்தி விட்டால் அது தன் மழலையில் அழகாகச் சொல்லிவிட்டு எழுந்து தன்பாட்டில் பாற்போத்தலைத் தேடிப் போய்விடும்.

வில்லனைக் கதாநாயகன் தனது கைகளால் கொல்வது அவ்வளவு வரவேற்கத்தக்கதல்ல. வில்லனாகப் போய் மின்சாரத்தில் விழுந்து கைகால்களை இழுத்துக்கொண்டு அடங்குவதோ, கூரிய கம்பியில் தன்னைத்தானே கழுவேற்றிக்கொள்வதோ… கதாநாயகன் கடைசியில் அசினோடு ஒரு தடையுமின்றி இணைந்து பாட்டுப்பாட உகந்தது.
எதிர்பார்த்ததே நடக்கிறது. நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறவரெனில் ஓரிரு கண்ணீர்த்துளிகளைத் தயாராக வைத்திருங்கள். கடைசிக் காட்சியில் இயக்குநர் அதை எப்படியும் உங்களிடமிருந்து கறந்துவிடவே பார்ப்பார். பார்த்தீர்களா…?’சென்டிமென்ற்’நெடியடிக்கும் வார்த்தைகள் உங்கள் மனதில் பாரத்தை ஏற்றுகின்றன. எதிர்பார்த்தபடி படம் முடிந்த திருப்தியில் எழுந்திருக்கிறீர்கள். விளக்குகள் எரிகின்றன. ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க அஞ்சி வேகவேகமாக உங்கள் உங்கள் பிரச்சனைகளை மீள்ஞாபகித்தபடி வெளியேறுகிறீர்கள்.
அநேகமாக படங்களைப் பார்த்துவிட்டு வீட்டிற்குப் போன வழியெல்லாம் துக்கமாகவே நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு வருடத்தில் எத்தனை ஏப்ரல் முதலாம் திகதிகள் வருகின்றன என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?

12.17.2006

பதிவர் வட்ட சந்திப்பு: ஒரு பார்வை

தி.நகர் பனகல் பூங்காவை நெருங்கும்போதுதான் அவ்வளவு நேரமும் கைத்தொலைபேசியை அணைத்து வைத்திருந்தது நினைவில் வந்தது. எடுத்து உயிர்கொடுத்ததும் காத்திருந்தாற்போல பொன்ஸின் அழைப்பு வந்தது. பனகல் பூங்கா சந்திப்புக்கு உகந்ததாக இல்லாமையால், அருகே இருக்கும் நடேசன் பூங்காவிற்கு வரும்படி அழைத்தார். அதற்குள் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வேறு அனுப்பியிருந்தார். பூங்காவிற்குள் வட்டமாக இருப்பவர்கள்தான் ‘பதிவர் வட்டம்’என்பது தொலைவிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. சப்பாணி கொட்டி அமர்ந்திருந்ததைப் பார்த்து “என்ன சோறு போடுறாங்களா…?”என்று வழக்கமான நமது பாணியில் கேட்டுக்கொண்டே ஜோதியில் கலந்துகொண்டேன்.

போகும்போதே ஏறக்குறைய பதினைந்து பேரளவில் கூடியிருந்தார்கள். வட்டம் பெரிதாகிக்கொண்டே வந்தது. கடந்த தடவை தமிழ்நதி என்கிற நானும் பொன்ஸ் உம்தான் பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் இந்த சமூகத்தில் ஓர் அங்கமாக்கும்?’ என்று சந்திப்பில் தலைகாட்டி பேர்பதிந்திருந்தோம். கடந்தமுறை சந்திப்பு பற்றி எழுதும்போது ‘தனித்துப்போனோம்’ என்று நிறையப் புலம்பியிருப்போம் போலும்… சற்றைக்கெல்லாம் சிவஞானம்ஜியோடு துளசி கோபால் வந்தார். (பெண்களுக்கும் மரியாதை கருதி ‘ர்’விகுதி போடலாமல்லவா…) “வாங்க ஹெட்மாஸ்டர்” என்று சிவஞானம்ஜிக்கு கூட்டுக்குரல் கொடுத்து வரவேற்றார்கள். அவரையடுத்து நிர்மலா வந்தார். ஆட்களும் மணியும் அதிகரித்ததன்றி இன்னதுதான் பேசப்போகிறோம் என்று யாரும் அறிவிப்பதாகத் தெரியவில்லை. கூடியிருந்தவர்களில் ஒருவர் எல்லோரையும் சுய அறிமுகம் செய்துகொள்ளும்படி கேட்டார். “இந்த முகத்துக்குரியவர் யாரு…? அவங்களுக்கு வலைப்பதிவில் என்ன பேரு…?” என்று ‘கிராண்ட் மாஸ்ரர்’பாணியில் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டோம். சந்திப்பின் பிரதான காரணராகிய ‘ஆலமரம் திரு’என்று அறியப்பட்டவரது முறை வந்தபோது இலங்கைத் தமிழ் கேட்கப்போகிறோம் என்று நான் எதிர்பார்த்திருக்க, அவர் இந்தியத் தமிழில் அறிமுகத்தோடு தனது செயற்பாடுகள் குறித்தும் பேசினார். ஒரு இலங்கைத் தமிழர்தான் இத்தனை முனைப்போடும் ஈடுபாட்டோடும் செயலூக்கத்தோடும் மானுட நேயத்தோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் தனது சகோதரர்களுக்காக கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார் என்று இதுநாள்வரை நினைத்திருந்த எனது புத்தியை (அதுக்குப் பேர் புத்தியா…ச்சே!)யாருமறியாமல் …… ஆல் அடித்துக்கொள்ளத் தோன்றியது.

ஞாபகத்தில் உள்ளவரை, சமூகமளித்திருந்தவர்களின் பெயர்கள்: பொன்ஸ், பாலபாரதி, மா.சிவகுமார், ப்ரியன், தமிழி, ஓகை, நிர்மலா, துளசி கோபால், சிவஞானம்ஜி, லக்கிலுக், சுந்தர், சுகுணா திவாகர், சா.சங்கர், வீ த பிப்பிள், விக்கி, த.அகிலன், பகுத்தறிவு, வீரமணி, அருள்குமார் மற்றும் பலர். பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்-இருண்டதும் ஞாபகசக்தி மங்கிவிட்டது.

இம்முறை அறிமுகம் என்பது ‘என்னோட பேர்’என்று பாலர்பள்ளி மாணவர் தரத்தில் இல்லாமல் சற்று விரிவானதாகவே இருந்தது. “நான்தான் ப்ரியன்”-என்றதும் “ஓ! அந்தக் காதல் கவிதைகள் எழுதுகிற ப்ரியனா…?” என்னைத்தவிர மேலும் இருவர் கேட்டது காதில் விழுந்தது. (எழுதக்கூடிய வயதுதான்) எந்த மையப்புள்ளியிலும் தரிக்காமல் கலந்துரையாடல் போல பேச்சு நெடுநேரமாக வளர்ந்துகொண்டிருந்தது.

திருமணத்துக்குப் போய் ‘மொய்’எழுதுவதனோடு பின்னூட்டம் இடுவதை “மொய் வைச்சா திரும்ப மொய் வைக்கணும்ல” ஒப்பிட்டுப் பேசியது ரசிக்கும்படியாக இருந்தது. பின்னூட்டக் கயமை பற்றி, தமிழ்மண அறிவிப்புகள் பற்றி, பின்னூட்டம் இடுபவர்கள் விமர்சனமாக இல்லாமல் ‘வந்தியா மச்சி வா’ என்று ‘கலாய்ப்பதற்காக’பயன்படுத்துவது பற்றி அங்கிங்கெனாதபடி பேச்சு அலைந்தது.

கடந்த தடவை எழுந்த சிறு (???) சர்ச்சைகளைக்கூட இம்முறை காணமுடியவில்லை. மிகுந்த புரிந்துணர்வு பொருந்திய நண்பர்கள் சந்தித்துப் பேசியதுபோல சந்திப்பு வெகு சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. பயனுள்ள ஒரு தளத்தை சண்டைக்களமாகப் பயன்படுத்தி வீணடிப்பதைக் குறித்த ஆதங்கமும் “அந்தப் பக்கம் வரவே பயமா இருக்குப்பா”என்பது போன்ற சலிப்பும் பெரும்பாலானோரின் குரல்களில் வெளிப்பட்டது.

சுற்றிச்சுழன்று பேச்சு ஒருவழியாக பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த திரு அவர்களால் முன்மொழியப்பட்ட ஈழத்தமிழர்களது பிரச்சனையில் வந்து நின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலே இருக்கும் ஆறு இலட்சம் தமிழர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் கூட அவர்களைச் சென்றடைய விடாமல் தடுத்து, அவர்களை பட்டினிச்சாவை நோக்கி விரட்டிக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தினது மனிதாபிமானமற்ற செயல் குறித்து திரு அவர்கள் எடுத்துரைத்தார். தனது கையெழுத்து இயக்கம் ஊடாக அந்தப் பேரவலத்தை ஐ.நா. சபை மற்றும் ஏனைய நாடுகளுக்கும் தெரியப்படுத்த முயற்சித்து வருவதைப் பற்றிக் கூறினார். மேலும், வாகரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாற்பதினாயிரம் மக்களுக்கு பாரஊர்திகள் மூலம் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இராணுவத்தினரால் திருப்பியனுப்பப்பட்ட கொடுமையைப் பற்றிச் சொன்னார். மொழியால், இனத்தால் ஒன்றுபட்ட நாம் அவர்களுக்காகச் செய்யக்கூடியது என்ன என்பதைப் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது.

“இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதனால் பாதுகாப்புப் பிரச்சனை ஏதாயினும் ஏற்படாதா…?”என்றொருவர் எழுப்பிய கேள்விக்கு, “இது விடுதலைப் புலிகளுக்குச் சார்பாகப் பேசுவது அல்லது இயங்குவதனோடு தொடர்புடையது அல்ல. எமது சகோதரர்களான ஈழத்தமிழ் மக்களது அத்தியாவசியத் தேவையான உணவு மறுக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உலகத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருக்கும் நிலையை வெளிக்கொணர்வதென்பது மனிதாபிமானத்தோடு தொடர்புடைய செயல். அவ்வாறு பாதிக்கப்படுகிற இனம் சிங்கள இனமாக இருந்திருந்தாலும் சகமனிதர்கள் என்ற வகையில் நாம் தட்டிக் கேட்டிருப்போம்”என்றார்.

தமிழ் மீதிருந்த பற்றுக் காரணமாக ‘தமிழி’என்ற பெயரில் வலையில் பதிந்து வருவதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நண்பர் ஒருவர், “எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக தமிழ்நாடே தஞ்சம் என்று வந்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை”என்ற விசனத்தைப் பகிர்ந்துகொண்டார். “சொந்த மக்களிற் சிலரே அகதிகளைவிட மோசமான நிலையில் வாழ விதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் வேறு எதைத்தான் எதிர்பார்க்க இயலும்…?”என்பது அதற்கான எதிர்வினையாக இருந்தது. மண்டபம் போன்ற முகாம்களுக்குச் சென்று அகதிகளைப் புகைப்படம் எடுப்பதென்பதும் அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வெளியிடுவதும் கூட ‘முயற்கொம்பு’தான் என்று அவர் மேலும் கூறினார்.

பதிவர்கள் வட்டத்திலிருந்து குழுவொன்றை உருவாக்கி அதனூடாக அல்லற்படும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஏதாவது வகையில் உதவலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டபோது, அதை யாரும் மறுத்துரைக்கவில்லை. எனினும் “நான் செய்கிறேன்”என்று யாரும் முன்வராததும் அந்த மௌனத்தின் பின்னாலிருந்த காரணங்களும் புரிந்துகொள்ளத்தக்கதே. அகிலனும் தமிழ்நதியாகிய நானும் மட்டுமே அங்கிருந்த ஈழத்தமிழர்கள் என்றபோதிலும், “நான் வாறேன்… நான் வாறேன்”என்று எமக்காக நாமே கைதூக்குவதிலுள்ள அபத்தத்தை உணர்ந்து மௌனித்திருக்க நேர்ந்தது. ஈழத்தமிழர்களின் கண்ணீரை ஊடகங்கள் வாயிலாக ஏனைய மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியதன் அவசியமே பெரும்பாலானோரால் பரிந்துரைக்கப்பட்டது. பதினைந்து ஆண்டுகளில் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பாக தமிழகத் தமிழர்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை பலரும் ஒப்புக்கொண்டனர்.

“பேசுவதனால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது…?”என்ற கேள்வி பலரது மனதையும் நெருடிக்கொண்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், ஊடகங்கள் தமது குரலால் பேசுவதென்பது தமிழகத் தமிழர்களிடையே ஈழத்தமிழர்களது நிலைப்பாடு தொடர்பான கூர்ந்த கவனத்தையும் அனுதாபத்தையும் கொண்டுவரும் என்பதில் ஓரிருவரைத் தவிர ஏனையோர் உடன்பட்டனர்.

கடந்த சந்திப்பில் சிவப்புச் சட்டையோடு வந்திருந்து கூட்டத்தை ஒழுங்கமைத்த பாலபாரதி இம்முறை ‘அல்லாரும் தலைவர்களே…’என்று கமுக்கமாக இருந்துவிட்டார். ‘நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க’என்று பொன்ஸ் எனக்குப் பக்கத்தில் இருந்து அடிக்கடி ஆதங்கப்பட்டார். ஆலமரத்தாருக்கு இந்தக் கையெழுத்து முயற்சியில் பொன்ஸ் உதவி செய்ததாக ஒரு உபரித் தகவல் எனக்குக் கிட்டவே, உதவி செய்து விட்டு ஒன்றுமே செய்யாதது போலிருந்த அந்த ‘பெருந்தன்மை’யால் எனக்கு அவவில் பாசம் பெருகியது. நடேசன் பூங்காவில்தான் பா.க.ச. முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது என்று பொன்ஸ் எனது காதோடு கூறியதை நான் யாருக்கும் சொல்லப்போவதில்லை.

“நாம பேசி என்ன ஆகப்போகிறது…?”என்று நிர்மலா திருவிடம் விடாமல் கேட்டுக்கொண்டேயிருந்தார். திருவும் விடாமல் பொறுமையாக விளக்கம் அளித்துக்கொண்டே இருந்தார்.

இறுதியாக, கடந்த சந்திப்பின்போது ‘இட்லி….. வடை….’என்று பெருத்த சர்ச்சையைக் கிளப்பிய, புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது. நிறையப் பேர் புகைப்படத்துக்கென உறைந்த புன்னகையோடு நிற்க மூன்று புகைப்படக் கருவிகள் கண்ணடித்தன.

அகிலனோடு கொஞ்சநேரம் ‘சொந்தக் கதை’பேசிவிட்டு, திரு. திருவிடமும் ஏனையோரிடமும் விடைபெற்றுக்கொண்டு வெளியேறினேன். பூங்காவிலிருந்து வெளியேறும் வழி தெரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல (சும்மா ஒரு பேச்சுக்கு) நின்றிருந்ததைப் பார்த்தோ என்னவோ பொன்ஸ் வாசல்வரை கொண்டுவந்து வழியனுப்பிவைத்துவிட்டுப் போனார். எங்கோ யாழ்ப்பாணத்திலும், வாகரையிலும், மண்டபம் போன்ற அகதி முகாம்களிலும் இருக்கிற முகம்தெரியாத உறவுகளுக்காக பேசுகிற திரு, தமிழி போன்ற ‘மனிதர்களை’நினைத்து வழியெல்லாம் மனசு நெகிழ்ந்துகொண்டே வீட்டிற்குப் போனேன்.

11.20.2006

வலைப்பதிவர் சந்திப்பு: பார்த்தது, கேட்டது, நெகிழ்ந்தது

நாங்கள் தமிழர் என்பதை நேர விடயத்திலும் நிரூபித்துக்கொண்டிருப்பது நியாயமில்லை என்று தோன்ற, ஒன்றுகூடல் நடைபெற்ற மண்டபத்தை சரியாக நான்கு மணிக்கே சென்றடைந்துவிட்டோம். (பன்மையில் கூறக் காரணம் இருக்கிறது. பெண்கள் அதிகம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிந்தமையால் தனியாகத் தெரிவதன் சங்கடத்தைத் தவிர்க்க அண்ணாவின் மகளை அழைத்துப்போயிருந்தேன்.) அதிகம் பெண்கள் வரமாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் பெயராய் அறிந்த முகங்களைப் பார்க்கும் ஆவலுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது.

யெஸ்.பாலபாரதி (யெஸ் என்றால் என்ன…?) கைகூப்பி வரவேற்றார். தொலைபேசியில் கேட்ட குரலைவிட நேரில் இளைஞர்தான். வழக்கம்போல பின்னிருக்கையைத் தேர்ந்து அமர்ந்துகொண்டோம்.

வலைதிரட்டிகளின் அடுத்த நகர்வு என்பது குறித்து மா.சிவகுமாரும் தொழில்நுட்பம் தொடர்பாக விக்கியும் பேசியதை கொஞ்சம் அசுவாரசியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால், கோவையாக சற்றும் பிசிறில்லாமல் எப்படிப் பேசுவதென்று மா.சிவகுமாரிடம் கற்றுக்கொள்ளலாமென்ற எண்ணம் வந்தது. ‘பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து புறப்பட்டு…’இப்படியான ரீதியில் அலுப்புத்தட்டாமல் ‘புளொக்குகிற’மா.சிவகுமார் இவர்தான்; என்பது பேச்சின் முடிவில்தான் இந்த மூளையில் பொறிதட்டியது.

த.அகிலனின் பேச்சு மீண்டும் ஊருக்கு அழைத்துப்போனது. ‘பிணங்கள் என்பது அங்கு சர்வசாதாரணம்’என்று அவர் சொன்னபோது குற்றவுணர்வாக இருந்தது. ஊராசையை விட உயிராசை பெரிதென்று ஓடிவந்த எங்களைப் போன்றவர்களுக்கு உறுத்தத்தானே செய்யும். தான் கண்டதை முன்னெப்போதும் காணாதவர்கள் முன் இயல்பாகப் பகிர்ந்துகொண்ட விதம் பிடித்திருந்தது. அதைவிட முக்கியமாக, எங்களது மக்களின் மரணம் சூழ்ந்த வாழ்வு குறித்த விடயங்களை அக்கறையோடும் ஆதூரத்தோடும் துயர் தோய்ந்த விழிகளுடனும் வந்திருந்த வலைப்பதிவர்கள் செவிமடுத்த காட்சி ஈழத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் மனம் நெகிழவைத்தது. கண்ணீர் வந்துவிடுவேன் வந்துவிடுவேன் என்று பயமுறுத்திக்கொண்டேயிருந்தது. மண்டபத்துக்குள் வரும்போது இருந்த சங்கடம் விலகி அங்கிருந்தோருடன் மிகுந்த நெருக்கத்தை உணரமுடிந்தது. ஹிட்லரின் கோயபல்ஸ்சை ‘பாவம்பா’என்று சொல்லிவிடக் கூடிய விதத்தில் பொய்யுரைத்துவரும் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஊடகங்களைப் பற்றி அகிலன் கூறியது ஆறுதலாக இருந்தது.

ஈழத்தைச் சேர்ந்த மற்றொரு வலைப்பதிவாளரான நிலவன் என்னைப்போல சிரித்துக்கொண்டேயிருந்தார். கடைசிவரை பேசவில்லை.

அடுத்து ‘வலைப்பூவில் சாதியம்’ பற்றி பாலபாரதி பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே துணைக்குரல்கள் பல எதிரொலித்தன. அதிலொருவர் “சாதியம் பற்றிப் பேசி என்ன செய்யப் போகிறோம்…?”என்றார். “அப்போ வாழ்ந்தென்னங்க பண்ணப் போறோம்”என்றொரு எதிர்க்குரல் கேட்டது. “நாம எழுதி என்ன பண்ணப் போறோம்…?”என்றொரு கேள்வி என்னிடம் இருந்தது. வழக்கம்போல கேட்கப்படாத கேள்வியாய் உள்ளேயே மடிந்துபோனது. “நான் இதுவரைக்கும் உருப்படியாக ஒரு பதிவும் போட்டதில்லை”என்ற பாலபாரதியின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

உலகெங்கிலும் பட்டினியால் நாளாந்தம் எத்தனையோ பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். போர் ஓரிடத்தில் இருக்கவிடாமல் இலட்சக்கணக்கானவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறது. உடுதுணிக்காகவும் ஒரு கூரைக்காகவும் எத்தனையோ உயிர்கள் ஏங்கிக் காத்திருக்கின்றன. இவ்வாறானதொரு உலகத்தில் நாமும் ஒரு அங்கமாக வாழ்ந்துகொண்டு சாதியம் பேசத்தான் வேண்டுமா என்ற அயர்ச்சி எழுந்தது.

பாலபாரதி பேசிக்கொண்டிருக்கும்போது குரல்கள் உயர்ந்து உயர்ந்து அமிழ்ந்தன. சண்டைதான் போடப்போகிறார்களோ என்று பயமாக இருந்தது என்று எழுதினால் அது பொய். (இதைவிடப் பெரிய சண்டையெல்லாம் பாத்திருக்கோமில்ல…) நிறையப் பேர் கதம்பமாகப் பேசியதில் ஒன்றும் புரியவில்லை.

வருவார் வருவார் என்று பாலபாரதியால் சொல்லப்பட்ட ‘பொன்ஸ்’ஒருவழியாக வந்துசேர்ந்தார். சத்தியமாக எனக்கு அவர் மூலம் ஆகவேண்டியது ஏதுமில்லை. உண்மையாகவே நல்ல அழகான சிரிப்பு. கனடாவிலிருந்து வலைபதியும் மதி பற்றிக் கேட்டார். நானும் எனது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டேன்.

ரொம்பப் புழுகிற அல்லது புகழுற மாதிரியான சில வரிகளை ‘பொன்ஸ்’இன் பதிவில் பார்த்தேன். சரி… சரி…“உங்க சிரிப்பு அழகாக இருந்தது” என்று கூறியதற்குப் பிரதியாக (நன்றிக்கடனாக) இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார். மன்னித்து மறந்துவிடுவோம்.
கனடாவில் வாழும் எனது நண்பர் டி.ஜே. என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். வலைப்பதிவு நண்பர்களிடையே ரோசாவசந்த்தைச் சந்தித்தால் என்னை ‘டி.ஜே‘யின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசும்படி. அந்த உரையாடல் இப்படித்தான் அமைந்தது.

“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்…?”

“திருவான்மியூரில்”

“நான் ஈ.சீ.ஆர். றோட்டில் இருக்கிறேன். நீங்கள்…?”

“நானுந்தான்…”

“நான் ஆர்.டீ.ஓ. ஆபீஸ் பக்கம்.. நீங்கள்”

“நானுந்தான்…”

எனக்கொரு சந்தேகம் வந்துவிட்டது. எந்நேரமும் பூட்டியபடியே இருக்கும் முன் வீட்டில்தான் அவர் இருக்கிறாரோ என்று. நல்லவேளை (அல்லது கெட்டவேளை) அவரது வீடு சற்று தள்ளி இருந்தது. ‘நீங்கள் ஒரு கலகக்காரரா?’என்ற எனது கேள்விக்கு ரோசாவசந்த் போனால் போகட்டுமென்று சிரித்துவைத்தார்.

சற்றைக்கெல்லாம் மையப் புள்ளியிலிருந்து விலகி பேச்சு அங்குமிங்கும் திரியத்தொடங்கியது. சின்னச் சின்னக் கும்பலாகக் கூடி அவரவர் ‘அலப்பறை’ஆரம்பமாயிற்று.

முத்து தமிழினி, பாலா, றோசாவசந்த், எஸ்.கே, பொன்ஸிடம் கொஞ்சம் பேசியபின் விடைபெற்றோம். அகிலனையும் நிலவனையும் தேடினால் காணோம்.

கிளம்பும்போதும் பாலபாரதி கைகூப்பி வழியனுப்பினார். ‘யெஸ்.’ என்பதன் பொருள் கொஞ்சம் புலனாகியது. இப்படி ஒரு சந்திப்பை ஒருங்கிணைப்பதென்பதும் அதை கைகலப்பின்றி கலகலப்பாக முடிப்பதென்பதும்… ‘யெஸ்’அசாத்தியம்தான்.

‘எள் ஏன் காயுது எண்ணெய்க்கு… எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்கு’என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதற்கிணங்க தனக்கு சம்பந்தமேயில்லாத பேச்சுக்களை ‘சிவனே’என்று ‘பார்த்துக்கொண்டிருந்த’ எனது மருமகளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். தேநீர், பிஸ்கெட்டுடன் ஒரு சமோசா அல்லது வடை தந்திருக்கலாமென்பதே இந்தச் சந்திப்பைப் பற்றிய அவளது மேலான அபிப்பிராயமாக இருந்தது. பாலபாரதியிடம் இத்தால் சொல்லிவைக்கிறேன்… அடுத்த சந்திப்பில் சீர்செய்வார் என்று நம்புகிறேன்.