3.11.2007

சின்னச் சின்னத் தூறல்கள்வாசிப்பு
பூக்கள், மழைத்துளி கிளப்பும் மண் வாசனை, வாசனைத் திரவியங்கள் இவற்றிற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல புத்தகங்களின் வாசனை. அம்புலிமாமாவிலிருந்து அசோகமித்திரன் வரை பிடித்த எழுத்துக்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால், கிளர்ச்சியூட்டும் புதிய உறவைப்போன்று புத்தகங்கள் மீதான காதல் மட்டும் மாறுவதேயில்லை. அந்தப் பைத்தியம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. புத்தகக் கடைகளுக்குள் நுழைந்தால் புறவுலகம் மறந்து,மறைந்து போகிறது. முன்பெனில் ஒரு புத்தகத்தை வாசித்து ஆண்டுக்கணக்கானாலும் அந்தப் பாத்திரங்கள் மனதிலிருந்து இறங்குவதேயில்லை. அலையோசை சீதாவையும், மரப்பசு அம்மணியையும், சில நேரங்களில் சில மனிதர்கள் கங்காவையும் இன்றுவரை மறக்க முடியவில்லை. அந்தளவிற்கு கதையோடு ஒன்றித்திருந்தது வாசிப்பு. இன்று வெயிலில் தரிக்கமுடியாத பாதங்களைப்போல வரிகளுக்கிடையில் அலைந்துகொண்டிருக்கிறது மனசு. ஓரிடத்தில் நில்லென்றால் நிற்க முடியவில்லை அதற்கு. வாசிப்புக்குச் சமாந்தரமாக மற்றொரு துணை வாசிப்பு உள்ளுக்குள் நடந்துகொண்டிருப்பதை எவ்வளவு முயன்றும் விலக்கமுடிவதில்லை. தர்க்கங்கள்,முரண்கள்,உடன்பாடுகள், மனக்குரங்கின் கிளை தாவல்கள் இவற்றினிடையே ஊடாடிக்கொண்டிருக்க வாசிப்பு எங்கோ பின்தங்கிவிடுகிறது. எமது தீர்மானங்களுடன் தொடர்ந்து பொருத முடியாமற் தோற்றுப்போய் அலமாரியில் மீண்டும் சென்றமர்ந்து காத்திருக்கும் புத்தகங்களை நினைக்க வருத்தமாய்த்தானிருக்கிறது.

-----


கோவில்

‘நான் கடவுள் மறுப்பாளன்…’-‘கோவிலுக்கெல்லாம் போவதில்லை’என்று சொல்வது பெரும்பாலானோரிடையே புதிய கலாச்சாரமாக,நாகரிகமாக உருவெடுத்து வருகிறது. பெரியோர்கள் கற்பித்த, பெரும்பான்மையினரால் கைக்கொள்ளப்படும் ஒரு வழக்கத்தின் மீது,மரபின் மீது கேள்வி கேட்டுத் தெளிந்து தன்னை அதிலிருந்து விலக்கிக்கொள்வது வேறு. ‘எல்லா மாடும் ஓடுகிறது என்று சின்னான் வீட்டு செத்தல் மாடும் ஓடிய கதை’யாக இருக்கிறது சிலரின் பேச்சு.கோவில் என்பது வழிபடும் இடம் மட்டுமில்லை. நாத்திகர்களும் கோவிலுக்குப் போவதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. உலகமே அழிந்துகொண்டிருப்பதைப் போன்ற பேரிரைச்சல் நிறைந்த வீதிகள்,அங்காடிகள்,தொழிலகங்கள்,உறவுகளின் பிக்கல் பிடுங்கல்களால் நிறைந்த வீடுகள் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்ளக்கூடிய வெளிகளில் கோவிலும் ஒன்று. துக்கத்தை,ஆதங்கத்தை,பேராசையை,பிரிவின் வாதையை,இல்லாமையை,வேண்டுகோள்களை,கடவுளுடனான பேரங்களை எத்தனையை இறைத்தாலும் அந்த வெளியை அடைத்துவிட முடிவதில்லை.
பிரகாரத்தின் கருங்கற்களைத் தொடும்போது கடந்தகாலத்தைத் தொடுவதைப் போலிருக்கிறது. அங்கு செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைப் பார்க்கும்போது கலையின் பேரனுபவம் விளைகிறது. விழுந்து விழுந்து கும்பிடுபவர்களைப் பார்க்கும்போது அகங்காரம் மறைந்துபோகிறது. வாசலில் கையேந்தும் பிச்சைக்காரர்கள் வாழ்வு நம்மை இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதை உணர்த்துகிறார்கள். பாவாடை காலிடற ஓடித் திரியும் குழந்தைகளில், நாதஸ்வர இசையில்,மரங்களினிடையே தெரியும் பிறைத்துண்டில்,வன்னிமரத்தின் ஆழ்ந்த மௌனத்தில்,யாரையும் புண்படுத்த முடியாத அந்தச் சூழலில் இறைத்தன்மை இருக்கிறது. இறைத்தன்மை என்பது கல்லில் மட்டும் இருப்பதாக எவர் சொன்னது?

-----


இசை

செவிப்புலனற்றவர்கள் ஒருவகையில் கொடுத்துவைத்தவர்கள். சகமனிதர்களின் பொய்யில் தோய்த்தெடுத்த வார்த்தைகளிலிருந்து அவர்களுக்கு நிரந்தர விடுதலை. ஆனால், இசை என்ற அற்புத அனுபவத்தை இழந்தவர்கள் என்ற வகையில் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே. மனித மொழியிலான இசை வார்த்தைகளாலும் வாத்தியங்களாலும் கோர்க்கப்படுகிறது. அது மனிதனை உன்னதங்களை நோக்கி அழைத்துச்செல்கிறது. அழுக்கைக் கரைக்கிறது. அழுகையைத் துடைக்கிறது. கோபத்தை அணைக்கிறது. தாபத்தை வளர்க்கிறது. தனிமையில் துணையாகிறது. கனவுகளுக்குத் தூபமிடுகிறது. இசையற்ற உலகம் என்பது துணையற்ற வாழ்வினைப்போல் வெறுமையானது. (வெறுமையை விளைவிக்கும் துணைகளும் உண்டுதான்)

குளத்தங்கரைகளில் தேன்பிலிற்றும் மருதமர இலைகள் பாடும் பாட்டு, கற்களை மேவி நடக்கும் நதியின் சலசலப்பு,பறவைகளின் பள்ளியெழுச்சி,மாடுகளின் நடைக்கேற்ப அசையும் கழுத்துமணிச்சத்தம்,ஒரே வார்த்தையைச் சலிக்காமல் பாடும் அலையின் ஓசை இவற்றிலிருந்து இசையைப் பிரித்தெடுத்து ரசிக்கத் தெரிந்தவர்கள் வாழத் தகுதிபெற்றோர்.

-----


உடல்

கதவு அடைக்கப்பட்டிருக்கிறது. எம்மோடு பேசுவதற்காக உறவுகள் காத்திருக்கின்றன. பூட்டிய கதவினுள்ளிருந்து உலகத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் முகமறியாத எவருடனோ உரையாடிக்கொண்டிருக்கிறோம். எம்மோடிருக்கும் உறவுகளின் குரல்களை மட்டுமல்ல, உடலின் கெஞ்சுதலையும் நாம் செவிமடுப்பதில்லை. எம்மவரில் பெரும்பாலானோருக்கு உடல் வேண்டாதவற்றைக் கொட்டும் குப்பைக்கூடை. நாக்கின் பேச்சைக் கேட்டு உடலின் ஏனைய பாகங்கள் அத்தனையையும் கைவிட்டுவிடும் அதிபுத்திசாலிகள் நாங்கள். புகைபிடித்தல், மதுப்பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற எமது தாக்குதல்களிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள உடல் முடிந்தவரை போராடுகிறது. அடங்கிப்போகும் ஒரு இனத்தை மேலும் மேலும் வதைக்கிற சர்வாதிகாரிகள்போல நாம் எமது உடலளவில் கருணையற்றவர்களாக நடந்துகொள்கிறோம்.
கருணையற்றவர்களில் ஒருத்தியாகிய நான், கைகால்களை அசைக்காமல் ஓரிடத்தில் அமர்ந்திருந்து இதைத் தட்டச்சிக்கொண்டிருக்கிறேன். உறக்கத்திற்கு அழைக்கும் விழிகளின் மீது சிறிதும் கருணையற்றவர்களாக நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

-------


நட்பு

அப்போது எனக்குப் பத்து அல்லது பதினொரு வயது இருக்குமென்று நினைக்கிறேன். அப்பாவின் வேலை நிமித்தம் ஊர் மாறி பள்ளிக்கூடமும் மாறிய சிலநாட்களில் என்னை அந்தக் கடிதம் வந்தடைந்தது. அதுதான் எனது பெயருக்கு வந்த முதற் கடிதம். “எனது நண்பி ஒரு கறுப்புக் காரிலேறி எனது கண்களிலிருந்து மறைந்துவிட்டா. நான் அண்டைக்கு இரவு அம்மாவுக்குத் தெரியாமல் அழுதேன்”என்று விஜயமாலினி என்ற எனது பழைய வகுப்புத்தோழி எழுதியனுப்பியிருந்தாள். அதை வாசித்ததும் எனக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. எனது தோழியைப் பின்பற்றி நானும் அம்மாவுக்குத் தெரியாமல் அழுதுவைத்தேன். அந்த உணர்வின் முழு அர்த்தத்தையும் அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதன்பிறகு நான் நடந்த வழியெல்லாம் நட்பின் வாசனை வீசிக்கொண்டிருந்தது.
உண்மையான நட்புக்கு இணையான உறவு எதுவும் இல்லை என்று நிறையப்பேர் பேசி,எழுதி,படம் போட்டும் காட்டி விட்டார்கள். அதில் மாற்றுக்கருத்துடையவர்கள் நல்ல நட்பு வாய்க்கப்பெறாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
இனிக் கொஞ்சம் சுயபுராணம்: எனக்கு இருபது வயதாக இருக்கும்போது அந்த இனிய அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது அவள் அப்போதுதான் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தாள். என்னிலும் மூன்று வயது இளையவள். நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டிற்குப் பக்கத்து வீடு அவளுடையது. எல்லோரையும் போல பக்கத்து வீட்டோடு எங்கள் வீடு ஒட்டிக்கொண்டது. அதுவரை ஒழுங்காகவிருந்த வேலியில் சின்ன ‘பொட்டு’வைத்துப் போக்குவரத்தும் ஆரம்பித்தது. அது எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை. எனக்கு இந்தப் பூர்வ ஜென்மம் போன்ற பூச்சுற்றல்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தபோதிலும் அவளைப் பார்த்ததும் அதிலெல்லாம் நம்பிக்கை வந்துவிடுமோ என்று பயம் வந்துவிட்டது. அந்தளவிற்கு அவளை நானும் என்னை அவளும் ஈர்த்தோம். படிக்கும் காலத்தில் அவள் மிக அழகாக இருப்பாள். பெரிய கண்களை இன்னும் அகல விரித்து அவள் பேசும் அழகே தனி. அந்த வயதில் அழகானவர்களைப் பிடிக்குமென்பதும் அவள் என்னை ஈர்த்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாமல்லவா…?

பேசிப் பேசி அன்று மாலைதான் பிரிந்திருப்போம். இரவே ஒரு கடிதம் எழுதி மறுநாள் காலையில் கொடுத்துவிடுமளவிற்கு பைத்தியம் பிடித்திருந்தது. அந்தக் கடிதங்கள் வரி பிரித்து எழுதப்படாத கவிதைகளாக இன்னமும் என்னிடம் இருக்கின்றன. கைலாசபதி கலையரங்கின் பின்புறப் படிக்கட்டுகள்,நிழல் சடை விரித்த மரங்கள்,நூல்நிலையத்தின் முன்னாலுள்ள மரத்தடி,வெறுமையாகக் கிடக்கும் வகுப்பறைகள் எங்கெங்கும் எங்கள் இருவரையும் காணலாம் எனுமளவிற்கு நெருக்கம் வளர்ந்தது. அவளிடம் அற்புதமான எழுத்தாற்றல் இருந்தது. மென்மையாக மனதைத் தொடும், அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளின் அகராதி அவள். நான் ஏதோ எழுதுகிறேன் என்று பேர்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவள் தன்னை முடக்கிக்கொண்டுவிட்டாளே என்ற வருத்தம் எனக்குள் இப்போதும் எழுவதுண்டு. நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிவிட்டபின்னரும் கூட எனது சொந்த ஊரிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து அவளைச் சந்திப்பதற்காகப் போவேன். எங்கள் இருவர் வீட்டிலும் கேலி பேசுமளவிற்கு அன்பின் ஊற்று எங்கள் இருவரையும் நனைத்தது. பிறகொருகாலம் போர் சூழ்ந்தபோது அவளும் நானும் சந்திக்கும் நாட்களின் இடைவெளி அதிகரித்தது. கடிதத்தாலும் பேச முடியாது போயிற்று. அப்போது கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்து அவளோடு நான் கற்பனையில் பேசினேன். இப்போது நினைத்துப் பார்த்தால் எவ்வளவு பைத்தியம் பிடித்து அலைந்திருக்கிறோம் என்று சிரிப்பாகக்கூட இருக்கிறது. ஆனால், நான் அடிக்கடி சொல்வது போல ‘அந்தந்தக் கணங்கள் அற்புதமானவை’இப்போது அவை அர்த்தமற்றவையெனத் தோன்றலாம். அந்த அன்பும் நாட்களும் நெருக்கமும் பொய்யல்ல பழங்கதை அவ்வளவே.

இப்போது என் தோழி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில், காதலித்து மணந்த தனது இனிய துணையுடன், துறுதுறுவென்றலையும் இரண்டு அழகான பூக்களுக்குத் தாயாக இருக்கிறாள். நானும்- காலமும்,காதலும் எனக்களித்த அதியற்புதமான மனிதரான என் துணைவரும் அவர்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி போவோம். அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்களை அணைத்துக்கொள்ளும்போது எனது சதையிலிருந்து பிரிந்து உருவானவர்களாக உணர்கிறேன். எங்கள் பிள்ளைகள் நாங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளக்கூடியளவு வளர்ந்ததும் இருவருமாக அவர்களிடம் சொல்லுவோம் “நட்பைப் போல உன்னதமானது ஒன்றுமில்லை குழந்தைகளே… !”என்று.


----

வளர்ப்புப் பிராணிகள்

கடவுள், மேலான சக்தி அல்லது இந்த உலகத்தைப் படைத்தவன்-படைத்தவள் முட்டாளா என்ற எண்ணம் எனக்குள் அடிக்கடி எழுந்திருக்கிறது. இந்த நாய்,பூனை,பாம்பு இதையெல்லாம் எதைக் கருதிப் படைத்தார் என்ற சிந்தனை அவற்றின் நிராதரவான நிலையைப் பார்க்கும்போது எழுந்திருக்கிறது. குறிப்பாக இந்தப் ‘பெட்டை’நாய்,பூனைகள் குட்டி போட்டுப் பல்கிப் பெருகிவிடும் என்பதனால் யாரும் அண்டுவதில்லை. ஊரில் என்றால் பனைவடலிகளுக்குள் கொண்டுபோய் விட்டுவிடுவோம். அவை பசியோடு ‘மியாவ் மியாவ்’என்றபடி அலைவதான துக்கம் மனசுக்குள் இருந்துகொண்டேயிருக்கும். வீதிகளில்,குப்பைத்தொட்டிகளுள் காண நேர்கிற நீர் கோர்த்த பசியின் விழிகள் கடவுள் மீதான கோபத்தைக் கிளறிக்கொண்டேயிருக்கின்றன. நாய்,பூனைகள் பாடு பரவாயில்லை என்றாக்கிவிடுகின்றன பாம்புகள். நீண்டு பளபளவென்று நெளிந்தோடும் அவற்றின் தோற்றத்தின் மீதான அருவருப்புடன் பயமும் சேர்ந்துகொள்ள, பாம்புகள் மனிதர்களின் எதிரிகளாகிவிட்டன. பாம்பைக் குறித்த மனிதர்களின் பயத்திற்கும் மனிதர்களைப் பற்றிய பாம்பின் பயத்திற்கும் இடையிலான போராட்டத்தில் பெரும்பாலும் மனிதர்களே வெல்கிறார்கள். உயிரிழந்த அதன் கண்களைப் பார்க்கும்போது வாழ்வுரிமை என்பது மனிதர்க்கு மட்டுமானதா என்ற கேள்வி எழுகிறது. ஆறறிவு, வாசிப்பு, புத்தி இவையெல்லாம் படைத்தவர்கள் என்பதன் அடிப்படையில் அவர்கள் செய்வது சரியாகத்தானிருக்கும். தமது ஆயுளைத் தீர்மானிக்கவியலாத கோபத்தை விலங்குகள்,பிராணிகளின் மீது தீர்த்துக்கொள்கிறார்களோ என்றிருக்கிறது.


“இந்த நாய்,பூனைகள்…. இவை நாம்தான் தஞ்சம் என்று எங்களோடு ஒட்டிவாழும் வாய் பேசத் தெரியாத ஜீவன்கள். நாங்கள் அவைகளை வளர்த்திருக்கக்கூடாது. வளர்த்துவிட்டோம். நாளையைப் பற்றி அவற்றிற்கு எதுவும் தெரியாது. நாட்டில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி அவற்றிற்கு எதுவும் புரியாது. நாங்கள் எங்கள் உயிருக்குப் பயந்து ஓடிவிடலாம். ஆனால் எங்களோடு வளர்ந்த, நாங்கள் வளர்த்த இந்த உயிர்களும் உயிர்தானே…? மனிதர்களைவிட எங்களில் அன்பையும் நன்றியையும் வைத்திருக்கும் இந்த உயிர்களை விட்டுவிட்டு ஓடுவதில் எனக்கு விருப்பமில்லை.”


-கடந்த வாரம் ஊரிலிருந்து எனது தந்தையார் எழுதியனுப்பிய கடிதத்திலிருந்து மேற்குறித்த வரிகளை எடுத்துக்கொண்டேன்.

6 comments:

மிதக்கும்வெளி said...

/புகைபிடித்தல், மதுப்பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற எமது தாக்குதல்களிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள உடல் முடிந்தவரை போராடுகிறது/


((:-

வெற்றிகரமாக நட்சத்திர்வாரத்தைக் கடக்கிறீர்கள் போல. வழக்கம்போல உங்கள் எழுத்தாளுமையால் பலரின் மனசையும் கவர்ந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் தோழி.

பத்மா அர்விந்த் said...

தமிழ்நதி
உங்களுடையை எல்லாப்பதிவுகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். கண்கள் வார்த்தைகளை மூளைக்கு அனுப்பிக்கொண்டிருந்தாலும் படித்து முடித்த சில மணிநேரங்களில் என்ன என்று நினைவில் மேலோட்டமாகவே இருக்கும். ஆனால் சில பதிவுகள் இன்றைய பதிவு, நாங்களும் மனுசங்கதான் போன்ற பதிவு அப்படியே ஒட்டிக்கொண்டது. ஒருவேளை ஒருமித்த அனுபவம், அல்லது சிந்தனையை அப்படியே பிரதிபலிப்பதாலோ என்னவோ? உங்கள் மொழிவளம், எழுத்து நடை அருமை, ஆனாலும் மொழி அழகையும் தாண்டி இருக்கும் உண்மைக்கு (நிதர்சனத்திற்கு) அதைவிட அழகு. அந்த அழகை காணும்போது இன்னும் அதிகமாக அனுபவிக்கிறேன்.கோவிலைப்பற்றியும் உடலைப்பற்றியும் நட்பைப்பற்றியும் எழுதியதை படித்தபோது நான் எப்போது உங்களுடன் பேசினேன் என்ற ஆச்சரியமே வருகிறது.

கலை said...

தமிழ்நதி! உங்களது இந்த சின்ன சின்ன தூறல்கள் மிகவும் (வழமைபோலவே) பிடித்திருந்தது. பல இடங்களில் உடன்பட்டு இருந்தாலும், சில இடங்களில் முரண்பட வேண்டியும் இருந்தது.

நட்பு பற்றிய உங்களது தூறல், என்னுடைய சில பழைய நினைவுகளை நானே மீட்டிப் பார்த்தது போலிருந்தது. உண்மைதான் நட்பு உன்னதமானது. அந்த அன்பும் நாட்களும் நெருக்கமும் பொய்யல்ல பழங்கதை அவ்வளவே.
சத்தியமான வார்த்தைகள்.

கோவில்பற்றி நீங்கள் கூறியிருப்பதில்தான் சின்ன முரண்பாடு. ‘நான் கடவுள் மறுப்பாளன்…’-‘கோவிலுக்கெல்லாம் போவதில்லை’என்று சொல்வது பெரும்பாலானோரிடையே புதிய கலாச்சாரமாக,நாகரிகமாக உருவெடுத்து வருகிறது. பெரியோர்கள் கற்பித்த, பெரும்பான்மையினரால் கைக்கொள்ளப்படும் ஒரு வழக்கத்தின் மீது,மரபின் மீது கேள்வி கேட்டுத் தெளிந்து தன்னை அதிலிருந்து விலக்கிக்கொள்வது வேறு. ‘எல்லா மாடும் ஓடுகிறது என்று சின்னான் வீட்டு செத்தல் மாடும் ஓடிய கதை’யாக இருக்கிறது சிலரின் பேச்சு..
அப்படி சொல்பவர்கள் உண்மையில் தெளிந்து சொல்லவில்லை என்பதையும், வெற்று நாகரீகமாகச் சொல்கின்றார்கள் என்பதையும் நாம் எப்படி தீர்மானிப்பது? கோவில்பற்றிய உங்களது உணர்வு ஒரு வகையாக இருக்கலாம். பாவாடை காலிடற ஓடித் திரியும் குழந்தைகளில், நாதஸ்வர இசையில்,மரங்களினிடையே தெரியும் பிறைத்துண்டில்,வன்னிமரத்தின் ஆழ்ந்த மௌனத்தில்,யாரையும் புண்படுத்த முடியாத அந்தச் சூழலில் இறைத்தன்மை இருக்கிறது.
எனக்கோ, (கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்ற முரண்பாடுகளை எல்லாம் கடந்து) ஆளரவமே அற்ற, தனித்திருக்கும் கோவிலில், அது பூட்டியே இருந்தாலும், அங்கு போய் சில நிமிடங்கள் அமர்ந்திருந்து வருவது மட்டுமே அமைதியை கொடுப்பதாயிருக்கலாம். இன்னும் ஒருவருக்கு, கோவிலில் இருக்கும் இறைத்த்தன்மையை விட, அவரது பூஜை அறையிலேயே அந்த இறத்தன்மையோ, அது இல்லையென நினைக்குமிடத்து, அமைதியோ கிட்டலாம். எனவே நமது உணர்வுகளை மட்டும்தானே நாம் சரியாகச் சொல்ல முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

தமிழ்நதி said...

"வெற்றிகரமாக நட்சத்திர்வாரத்தைக் கடக்கிறீர்கள் போல"-மிதக்கும் வெளி

அப்படியா நண்பரே!உணர்ச்சிவசப்பட்டு இந்த 'வஷிஷ்டர் வாயால்' என்பதை அடிக்கடி சொல்லி அதன் கனத்தைக் குறைத்துவிடுவேன் போலிருக்கிறது. உண்மையான வஷிஷ்டர் இன்னும் வரவில்லை.'அவன் வரமாட்டான்'என்று தருமி தொனியில் சொல்லிக்கொள்ளவேண்டியதுதான். கருத்துக்கு நன்றி.

"கோவிலைப்பற்றியும் உடலைப்பற்றியும் நட்பைப்பற்றியும் எழுதியதை படித்தபோது நான் எப்போது உங்களுடன் பேசினேன் என்ற ஆச்சரியமே வருகிறது."-பத்மா அர்விந்த்

நானும் அதை உணர்ந்திருக்கிறேன். சிலசமயம் யாராவது பேசும்போது நாமே பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பதைப் போலிருக்கும். அதனாலேயே அவர்கள் மீது ஒரு பிரியம் வந்துவிடுகிறது.

"எனவே நமது உணர்வுகளை மட்டும்தானே நாம் சரியாகச் சொல்ல முடியும்."-கலை

நீங்கள் சொல்வது சரி கலை. ஆனால்,எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர் எத்தகைய ஆழமுடையவர் என்பதை ஓரளவுக்கேனும் இனங்காணமுடியுமென்றுதான் நினைக்கிறேன். 'நான் கோயிலுக்கெல்லாம் போறேல்லை'என்று தான் சொல்வதன் பொருளுணராமலே விட்டேற்றியாகச் சொல்லிக்கொண்டு போகிறவர்களை நான் கண்டிருக்கிறேன். இடைமறித்து விளக்கம் கேட்டால் அபத்தமான, மிக மேலோட்டமான பதில்கள்தான் வரும். பெல்பொட்டம் திரும்பி வந்ததைப்போல அதுவொரு fashion ஆகிக்கொண்டு வருகிறது. அத்தகையோரைத்தான் நான் குறிப்பிட்டேனேயன்றி, தமது உதடுகளிலிருந்து வார்த்தையொன்று புறப்படும் முன் நிதானித்து, அதன் பொருளுணர்ந்து தெளிவாகப் பேசுபவர்களையல்ல.

படியாதவன் said...

நட்பின் பிரிவால் நானும் அழுதிருக்கிறேன்..
95 ம் ஆண்டு ஒக்ரோபர் முப்பதாம் திகதி பின்னேரம்(ஞாபகமிருக்கிறதுதானே)., விதியில் அறிவித்துக்கொண்டு போகிறார்கள், எல்லோரையும் உடனடியாக இடம்பெயரச்சொல்லி,
பிறந்து தவழ்ந்து எழுந்து நடந்து வளர்ந்த வீட்டை முழுதும் விட்டு எங்கே போகிறோம் என்றே தெரியாமல் போகப்போகிறோம்,

நாமும் எங்கள் உந்துருளியில் சில பைகளில் தேவையானவற்றை வைத்துக்கட்டி விட்டு புறப்பட ஆயத்தம்..
நான் அப்ப சின்னப் பெடியன், 10 வயசு, என்ர நண்பனுக்கு என்னைவிட 3 வயது கூட.. ஆனால் வயதை கணக்கெடுக்காத நட்பு அது..

நண்பனின் பெயர் பிரதீபன், அருகில்தான் வீடு இருந்தது..
நான் வீதியில் நிற்க அந்த நேரம் பார்த்து என்னைப்பார்க்கிறதுக்கு தத்தி தத்தி பெரிய சைக்கிள் ஒண்டை ஓடிக்கொண்டு,ஒரு மூட்டையும் பின்னால, வந்து சேந்தான்..

கையப்பிடிச்சு கதைச்சுக்கொண்டு நிக்கிறம், எனக்கெண்டா கண்ணில கண்ணீர் முட்டி அடக்கேலாம வழிஞ்சு கொண்டிருக்குது,
கடைசியில சொன்னான், "சரிடா, வீட்டுக்காரர் வெளிக்கிடப்போயினம்.. உயிரோட இருந்தா வேற எங்கயாவது சந்திப்பம்"

அந்த வார்த்தைகளில் உள்ள வலியை அனுபவித்தால்தான் உணரமுடியும்..

இப்போதும் நினைக்க கண்ணீர் முட்டுகிறது. அந்த உணர்ச்சிகளை விபரிக்க வேறு வார்த்தைகளும் வருகிறதில்லை..

பிறகும் கன இடத்தில தொடர்ந்தும் சந்திச்சம்,
கடைசியா போனவருசமும் கொழும்பில வீடு தேடி வந்து பாத்திற்று போனவன்..
இப்ப ஆள் கனடாவில..

Anonymous said...

/வீதிகளில்,குப்பைத்தொட்டிகளுள் காண நேர்கிற நீர் கோர்த்த பசியின் விழிகள் /

/உயிரிழந்த அதன் கண்களைப் /

எத்தனை அழகான பார்வை!