7.18.2007

கலகக்காரன்


கையிலொரு மதுக்குவளையுடன்
தாவரங்களுடனும்
தத்தும் அணில்களுடனும் பேசுகிறவன்
புனித பீடங்களின் மீதெல்லாம்
சிறுநீர் கழிக்கிறவன்
புனையப்படும் தேவதைகளில்
பச்சை இறைச்சி வாடையடிக்குதென
உரத்த சிரிப்புடனே எள்ளுபவன்
துணுக்குறும்படியான கெட்டவார்த்தைகளை
வாசிப்பிற்கிடையில் இயல்பேயெனப் போட்டு
அடுத்த வரியில்
அன்றைய காலநிலை குறித்துப் பேசிச்செல்பவன்
இன்னபிற விதங்களில்
கலகக்காரச் சட்டகத்துள் அடைபட்டிருந்தவனை
பன்றிகள் சேறுழன்று திரியும் தெருவொன்றில்
தற்செயலாகச் சந்தித்தேன்
குனிந்து தலையிடிபடாமல்
குடிசையினுள் வரச்சொன்னான்
தூளி நனைத்த மூத்திரம்
எங்களை நெருங்குவதற்கிடையில்
துடைத்துவிடும்படி
மற்றொரு மூலையில் சுருண்டிருந்த மனைவியை
கெட்டவார்த்தை இணைப்புடன் ஏவியபின்
இலக்கியம் பேசினான்
விடைபெறும்போது
தொய்ந்திருந்த சட்டைப்பையைத் தட்டி
பசிக்குதென்று இருநூறு ரூபா கடன்கேட்டுத் தாழ்ந்த
விரல்களைப் பார்த்தேன்
எரவாணத்தில் இடித்துக்கொள்ளாமலே
கண்கள் கலங்கிவிட்டதெனக்கு.

பிற்குறிப்பு: இப்படியொரு கவிதையை எங்கோ வாசித்த நினைவு... உங்களில் யாருக்காவது வேறேதாவது கவிதை ஞாபகம் வருகிறதா?

6 comments:

வரவனையான் said...

எங்கோ பார்த்த ஞாபகம் ! ஆனால் நிச்சயமாக அது ஒரு மதுக்கூடம்தான்.



கவிதை நன்று , வாழ்த்துக்கள்

மிதக்கும்வெளி said...

varukiratee, slviyakundalakesiyin thokuppilirunthuthane?

லக்கிலுக் said...

//varukiratee, slviyakundalakesiyin thokuppilirunthuthane? //

தோழரே! நீங்கள் தமிழில் எழுதினாலேயே எங்களுக்கெல்லாம் தாவு தீர்ந்துவிடும். தமிங்கிலீஷில் எழுதுகிறீர்களே... நாங்க எல்லாம் ஊரை விட்டு ஓடிவிடவேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா?

Mookku Sundar said...

அருமை...

வாழ்க்கையுடன் கலகம் செய்ய முடியாதோ..?? வயிறு இருக்கிறதே....!!!

மிதக்கும்வெளி said...

சோ கால்ட் கலகக்காரர்கள் இந்தப் பதிவில் கும்மியடிக்க அனுமதி உண்டா?

கோகுலன் said...

:((