9.17.2007

பரவாயில்லை


பசியில் சுருண்ட ஒரு மனிதனின்
கடைசி உயிர்த்துளி சொட்டும் ஓசைக்காக மலைமுகடுகளில் காத்திருக்கின்றன
வல்லூறுகள்

வன்புணரப்பட்ட சிறுமியின்
கால் வழி பெருக்கெடுக்கும் குருதியை
இரகசியமாகத் துடைத்துக்கொண்டிருக்கிறாள்
எங்கோ ஓர் தாய்

காதலனின் மார்பு மயிரளைந்தபடி
கணவனின் நெஞ்சுவலி குறித்து விசனித்துக்கொண்டிருக்கிறாள்
தொலைபேசியில் ஒருத்தி

வீடு திரும்பச்சொல்லி இறைஞ்சும்
முதியதாயின் நெஞ்சில் கால்பதித்து
சாக்கடையில் தள்ளுகிறான்
ஒரு குடிகாரன்

பனங்கூடல்களுக்கிடையிலிருந்து
ஒலி்த்துக்கொண்டிருக்கிறது
இன்னமும் கண்திறக்காத பூனைக்குட்டிகள்
கத்தியலையும் சத்தம்

பாரவண்டிச் சாரதியிடம் திருட்டுக்கொடுத்த
அம்பது ரூபாவை நினைத்து விசும்பியபடி
வீடு திரும்பிக்கொண்டிருக்கிறாள்
நடுநிசி மல்லிகைப் பூக்காரியொருத்தி

இந்தக் குரூர உலகில்
நீயும் விடைசொல்லிப் பிரிகிறாய்
அதனாலென்ன…
பரவாயில்லை!

16 செப்டெம்பர் 2007


14 comments:

லக்கிலுக் said...

//இந்தக் குரூர உலகில்
நீயும் விடைசொல்லிப் பிரிகிறாய்
அதனாலென்ன…
பரவாயில்லை! //

:-((((

Anonymous said...

கவிதைக்கான களத்தினைனையும்,கருவினையும் தேர்ந்தெடுத்து பின்னர் அதை வார்த்தைகளை கொண்டு போர்த்துகிறீர்களா....

இப்படி நெருடலில்லாமல் வார்த்தைகள் ஒன்றோடுடொன்று இழைவதும் குழைவதும்....எனக்கு சாத்தியமில்லை.

எப்படீன்னு சொல்லிக் குடுத்தீகன்னா...ஹி..ஹி..நாங்களும் பின்னி பெடலெடுக்கப் பார்ப்போம்.

ஸ்டூடண்ட்டுகளை உருவாக்குங்கள்...தாயே...!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இந்தக் குரூர உலகில்
நீயும் விடைசொல்லிப் பிரிகிறாய்
அதனாலென்ன…
பரவாயில்லை!//

சரக்கென்று ஊசி ஏத்துகிறீர்கள்.

குரூர உலகின் சில உதாரணங்களையே தாங்க முடியவில்லை நதி...

செல்வநாயகி said...

//இந்தக் குரூர உலகில்
நீயும் விடைசொல்லிப் பிரிகிறாய்
அதனாலென்ன…
பரவாயில்லை! //

:-((((

விஜே said...

அன்பின் அக்கா!
உங்கள் எண்ணங்களை ஒரு உயிரோட்டமாக கலிதை வடிவில் தவண்டு வருவதில் பெருமை அடைகிறேன்.அக்கா இந்தப் படைப்பில் ஈழத்து வரிதனை ஆழமாக சேர்த்து இருக்கலாமே.
ஏங்கும் தம்பி
விஜே

பங்காளி... said...

திரு.விஜே யின் கோரிக்கை ஏற்கதக்கதல்ல

அதெல்லாம் தானாக வருவது...வரும்...

வலிந்து திணிக்கக் கூடாது....இதில் எனக்கு உடன்பாடு இல்லை

LakshmanaRaja said...

மிகுவலி மிகுந்த கவிதை.
வார்த்தைகள் அனைத்தையும் அனுபவித்துணர்கிறேன்.

இராம்/Raam said...

அருமை.....

சுகுணாதிவாகர் said...

ஏன் இப்படிச் சின்னப்பிள்ளைத்தனமாய்...?

தமிழ்நதி said...

"ஏன் இப்படிச் சின்னப்பிள்ளைத்தனமாய்...."-சுகுணா திவாகர்

நீங்கள் உண்மையோ போலியோ தெரியாது. எவராக இருப்பினும் எனது பதில் இதுவாகத்தானிருக்கும். வேலைவெட்டி இல்லாமல் கவிதை எழுதுவதே சின்னப்பிள்ளைத்தனங்களில் ஒன்றுதான். எழுதும் கவிதையும் சின்னப்பிள்ளைத்தனத்தோடிருந்தால் நான் என்ன செய்யவியலும்... சில 'பெரிய மனிதர்கள்' செய்யும் வேலைகளை விட இதுவொன்றும் பாரதூரமானதல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து.

PPattian said...

நெஞ்சை தைக்கும் வார்த்தைகள். அருமை.

//நீங்கள் உண்மையோ போலியோ தெரியாது.//

:))))))))))))

நளாயினி said...

வலிநிறைந்த கவிதை.

சுகுணாதிவாகர் said...

தமிழ்,

நான் தான் அந்தப் பின்னூட்டத்தைப் போட்டேன். கவிதை மிகச் சாதரணமாக இருப்பதாக உணர்ந்தேன். உங்களிடமிருந்து வீரியமிக்க படைப்புகளை எதிர்பார்ப்பதனாலோ என்னவோ அப்படித் தோன்றியிருக்கலாம். ஜாலியாக எடுத்துக்கொள்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் கோவித்துவிட்டீர்கள். என் வார்த்தைகள் மனதைப் புண்படுத்தியிருந்தால் சொரி.. (சரிதானே?)

கோகுலன் said...

நல்லாருக்குங்க தமிழ்நதி..

இறுதிவரிகள் என்னை மிகவும் கவர்ந்தன..