அந்நிய நிலத்திலிருந்து வந்தவர்களை
கண்ணியமாய் மறுதலித்த கனவானே நன்றி!
என்னிடம் துப்பாக்கி இல்லை என்பதை…
தடைசெய்யப்பட்ட பிரசுரங்களை
நான் கொண்டலைவதில்லை என்பதை…
விபரித்தல் வியர்த்தம்
இக்கொடுமதியம் சுடும் படிகளில்
நீண்டநேரம் நிற்கவியலாது இறங்கிச்செல்கிறேன்
வாழமுடியாமற் போன வீட்டை
சுமந்தலைதல் விதிக்கப்பட்டோம்
நெருஞ்சிமுட் காடு
கற்கள் அடுக்கிய கனவென நிமிர்ந்ததை
மரங்கள் சித்திரம் செதுக்கிய கதவானதை
பூக்குட்டி நான்காம் இலக்க செருப்பிற்குள்
அடங்கி உறங்குமளவு சிறிதாயிருந்ததை…
ஒரேயொரு சன்னத்தில்
குயில்களின் குரல்கள் அடங்கிடல் அஞ்சினேன்
இலைகளைத் தோற்கடித்து
இலைகளைத் தோற்கடித்து
செடியை ஆக்கிரமித்திருந்தன லசந்தரா மலர்கள்.
மோகங்கொண்டு வேம்பு அனுப்பிய காற்றில்
கிளர்ந்து கிழிபட்டிருந்தன வாழையிலைகள்
ஊற்றுவிழி திறந்தபடி
ஆழக்கனவொன்றில் கிடந்த கிணறும்
செவ்விளநீர் மரங்களும்
எழுதப்பட வேண்டிய கவிதைகளை
தம்முள் வைத்திருந்திருக்கலாம்
என் பட்டுக்குஞ்சே!
நீலவிழியுருட்டிப் படுத்திருந்த உன்னை
எடுத்தணைத்துக் கொஞ்சிப்பிரிந்தபோதில்
பால் மணத்தது.
தளம் இழைக்கையில்
இழந்த நகைகளின் நிறத்தில்
வெயில் அணைத்துக்கொண்டிருந்தது வீட்டை.
சில கடல்மைல்களுக்கப்பாலிருந்தபடி
போரோய்ந்து வீடு திரும்பக் காத்திருப்பது
நண்பர்களே! (எதிரிகளுக்கும்)
உங்களில் எவருக்கும் நேராதிருக்கட்டும்!
20 comments:
ஊர் நினைவைக் கிளறும் கவிதை
வழக்கம்போல் (நல்ல) கவிதை.
நல்லதொரு கவிதை
நன்றி அனானி நண்பர்,சுகுணா திவாகர்,அரவிந்தன்.
திவாகர்,பெரிய மனது பண்ணி இதையாவது கவிதை என்றீர்களே.. தன்யளானேன்:)
அன்பின் தமிழ்நதி
கவிதை மிகவும் நன்றாக உள்ளது
பஹீமாஜஹான்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பஹீமா. உங்கள் கவிதைத் தொகுப்பு விரைவில் வெளிவரவுள்ளதாக அறிந்தேன். மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை தமிழ்நதி. கவிதைகளை இனிமேல் சாய்வெழுத்தில் பதிவிடாதில்கள், படிக்க சிரமமாக இருக்கிறது. தமிழ்நதி என்றுகூட உங்கள் வலைப்பூவிற்குப் பெயர் வைத்திருக்கலாம், நன்றாகத்தானிருக்கிறது. சூர்யன் தனித்தலையும் பகல் தற்போதுதான் கைக்குக் கிடைத்தது, படித்துவிட்டு விரைவில் எழுதுகிறேன்.
ம்... யாருக்கும் நேராதிருக்கட்டும்...
//நெருஞ்சிமுட் காடு
கற்கள் அடுக்கிய கனவென நிமிர்ந்ததை
மரங்கள் சித்திரம் செதுக்கிய கதவானதை
பூக்குட்டி நான்காம் இலக்க செருப்பிற்குள்
அடங்கி உறங்குமளவு சிறிதாயிருந்ததை…
//
வார்த்தைகளுக்கு வருத்தங்களை
தேக்கி பாய்கிறது தமிழ் நதி
வாழ்த்துக்கள் தமிழ் -நதி
நீராலான அனைத்தும் பிடிக்கும் என்பதனால் ஊற்று என்ற பெயரும் பிடித்தது. கவிதைப் புத்தகத்தை எங்கு பெற்றுக்கொண்டீர்கள் என்பதை அறியலாமா...? ஒரு ஆர்வத்தினால் கேட்கிறேன். உங்கள் மதிப்புரையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
அகிலன்!அதிசயமாக நேரம் கிடைத்திருக்கிறது என நினைக்கிறேன். நன்றி.
//நெருஞ்சிமுட் காடுகற்கள் அடுக்கிய கனவென நிமிர்ந்ததைமரங்கள் சித்திரம் செதுக்கிய கதவானதைபூக்குட்டி நான்காம் இலக்க செருப்பிற்குள் அடங்கி உறங்குமளவு சிறிதாயிருந்ததை/// அழகு...
பூக்குட்டி??? பூனைக்குட்டியா?
//மோகங்கொண்டு வேம்பு அனுப்பிய காற்றில்கிளர்ந்து கிழிபட்டிருந்தன வாழையிலைகள் //
நல்ல கற்பனை
//தளம் இழைக்கையில் இழந்த நகைகளின் நிறத்தில்வெயில் அணைத்துக்கொண்டிருந்தது வீட்டை//
எதார்தம்
//கடல்மைல்களுக்கப்பாலிருந்தபடிபோரோய்ந்து வீடு திரும்பக் காத்திருப்பதுநண்பர்களே! (எதிரிகளுக்கும்)உங்களில் எவருக்கும் நேராதிருக்கட்டும்!
//
வலி
என் சொல்ல.மீண்டும் ஒரு தமிழ்நதி கவிதை.
வாழ்த்துக்கு நன்றி தியாகு...தமிழுக்கும் நதிக்கும் இடையில் அதென்ன அத்தனை இடைவெளி... தேங்கிவிட்டதைச் சுட்டுகிறீர்களோ :)
லக்ஷ்மணராஜா!எப்போதாவது யாராவது வந்து என்னை விலாவாரியாகப் பாராட்டினால் ஒரு பயம் வரும்:) என்னதிது செம சாத்துச் சாத்தப்போறாங்களோன்னு... அண்மைய நாட்களில் நீங்கள் இடும் பின்னூட்டங்கள் அதே பயத்தைத் தருகின்றன. தலையைத் தடவிப் பார்த்தேன். இலேசாக கொம்பு அரும்புகிறது:) தட்டி வைக்க வேண்டும். தட்டிக் கொடுத்தால் அவ்வளவுதான்... 'என்னைவிட்டால் ஆளில்லையாக்கும்'என்று கிளம்பினாலும் சொல்வதற்கில்லை. எது எவ்வாறு இருப்பினும் தொடரும் அன்பிற்கும் அபிமானத்துக்கும் மிக்க நன்றி.
வாழ முடியாது போன உங்களின் வீடு குறித்து படிக்கும் மூன்றாவது பதிவு இது என நினைக்கிறேன்.
சில வரிகள் என்று ஞாபகத்தில் இருப்பவை.
//இக்கொடுமதியம் சுடும் படிகளில்
நீண்டநேரம் நிற்கவியலாது இறங்கிச்செல்கிறேன்//
காலை வெயிலுக்கும் மாலை வெயிலுக்கும் அகப்படும் முன் பின் வாயில்களும், அதில் கோழி கலைத்தடியே இறங்கி ஏறும் அம்மாக்களும் நிறைந்த ஈழத்து வீடுகளை
இழந்து விட்ட எல்லா வீட்டின் பிள்ளைகளின் துயரத்தை சொல்ல முடிந்த இந்த வரி, படைப்பின் இறுதியில் உங்களுக்கு பெருமித்தை தந்திருக்கலாம்.
:-)..
உண்மையதானே சொன்னேன்..
மேலும்
"விலாவாரியாகப் பாராட்டினால்.."
இதில் இரண்டு வகை உளது..
அழகான தாஜ் மஹால் என்பதை
1. அடுக்கிவைக்க பட்ட கற்களை பற்றி விமர்சித்தல்
2. அடுக்கப்பட்ட கற்களில் ஆழமாக பதிந்து உணர மட்டுமே (கண்களால் பார்க்க இயலாத) முடிய கூடிய கட்டியவனின் வலி நிரம்பிய கைரேகைகள் பற்றி விமர்சித்தல்.
நான் எந்த வகை என்று உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்..
/திவாகர்,பெரிய மனது பண்ணி இதையாவது கவிதை என்றீர்களே.. தன்யளானேன்:)/
தமிழின் தலைசிறந்த படைப்பாளியான உங்களிடமிருந்து ஆகச்சிறந்த படைப்புகளையே எதிர்பார்த்துப் பாராட்டி சிற்சிலவேளைகளில் சாதாரணக்கவிதைகளாய் என்னால் கருதப்படும் கவிதைகளைக் காணும்போது வெதும்பி வருத்தம் தெரிவிப்பதேயல்லாது வேறொன்றுமறியேன் பராபரமே (ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா, இப்பவே கண்ணைக் கட்டுதே, முற்றுப்புள்ளியே இல்லாம கோணங்கி எப்படித்தான் எழுதறாரோ?)
பேனா/பிசாசு! இந்தப் பெயரின் விசித்திரத்தைத் தொடர்ந்து போய் நல்ல கவிதையொன்றை வாசிக்க முடிந்தது. நீங்கள் சொல்வது போல மாற்றினால் நன்றாக இருக்கிறாற்போலிருக்கிறது. ஆனால், முதலில் வந்த உணர்வே இருக்கட்டுமேயென்று விட்டுவிட்டேன். தொகுப்பு வெளிவரும்போது (வந்தால்) அதைக் குறித்து யோசிக்கலாம்.
லக்ஷ்மணராஜா!இதற்குமேல் என்ன விவாதிக்க...:)
சுகுணா திவாகர்!
"தலைசிறந்த படைப்பாளியான உங்களிடமிருந்து..."
என் தலையை எடுப்பதென்று தீர்மானித்தாயிற்றா என்ன...? இது எனக்கு ஓஓஓவராகத் தெரிகிறது. உங்களுக்கு ஏனில்லை? மண்டை கொதித்துப்போய்த் திரிகிற யாராவது இந்தப் பின்னூட்டத்தை வாசித்தார்களென்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்கள். ச்ச்சும்மா சும்மா புகழ்ந்தால் எனக்கும் சங்கடமாகத்தானிருக்கிறது.
//பேனா/பிசாசு! இந்தப் பெயரின் விசித்திரத்தைத் தொடர்ந்து போய் நல்ல கவிதையொன்றை வாசிக்க முடிந்தது.//
எனது பதிவில் உங்களது பின்னூட்டம் இருந்தது. நன்றி.
அன்பின் தமிழ் நதி
உங்கள் தொகுதியைப் பார்க்கும் ஆவல் நிறையவே உள்ளது.எப்படிப் பெற்றுக் கொள்வது என்பது தான் தெரியவில்லை.
எனது தொகுதி வெளிவந்துவிட்டது.
இன்னும் என்னை வந்தடையவில்லை.
அன்படன்
பஹீமாஜஹான்
பஹீமா!எனது மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரியைத் தனிமடல் மூலம் தெரிவியுங்கள். புத்தகத்தை உடனே அனுப்பிவைக்கிறேன். உங்கள் தொகுப்பை ஓரிரண்டு நாட்களுக்குள் பெற்றுக்கொண்டுவிடுவேன். வாசித்துவிட்டுக் கருத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். பதிப்பகத்தார் உங்களுக்கு உங்களது தொகுப்பை விரைவில் அனுப்பிவைப்பார்கள் என்றெண்ணுகிறேன்.
Great poetry.I am surprised at all times how is it possible for only eelam people to write so naturally in Tamil?
I love Tamil and I love your writings in Tamil.I can only feel for you and others who are directly disturbed by the ethnic war in SL.
Post a Comment