5.03.2009

“இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது”கவிஞர் தாமரையின் அனல் பேச்சு

30-04-09 அன்று சென்னை சேப்பாக்கத்தில், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் உண்ணாநிலைப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய உணர்வாளர்களது உரைகளின் மூன்றாம் பகுதி இது.

இந்தக் காலகட்டத்தில் மக்களின் உணர்வுகள் என்னவாக இருந்தன என்ற வரலாற்றுப் பதிவுகள் அவசியம் என்ற காரணத்தால் இதைப் பதிவுசெய்கிறேன்.

கவிஞர் கருப்பண்ணல் (பெயர் சரியாக காதில் விழவில்லை)
“பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு”

கருணாநிதி செத்துபோனவர். அவரைப் பற்றி இங்கு எதற்குப் பேசுகிறீர்கள்? கலைஞர் மிக அழகான நாடகம் ஒன்றை ஆடியிருக்கிறார். அதுவும் எங்கே? அண்ணா சமாதியின் முன்னால்.

இதனிடையில் மின்சாரம் தடைப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்துக்கு எரிக்கும் வெயிலைப் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தோம். அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த பாதசாரிகளில் சிலர், எங்கள் கைகளில் இருந்த படங்களில் இரத்தமும் சதையுமாக தமிழர்கள் சிதறிக்கிடந்த காட்சிகளைக் கண்டு, முகம்பதறி வேகநடையெடுத்து அவ்விடத்தைக் கடந்தனர்.

கவிஞர் கருப்பண்ணல் தொடர்ந்தார்:

மெரினா கடற்கரையோரத்தில் கண்ணகிக்குச் சிலைவைத்து கற்புக்கரசி என்று கொண்டாடினீர்கள். சரிதான். இலங்கையிலே காமவெறி பிடித்த, வக்கிரம் பிடித்த இராணுவத்தினன் எங்கள் சகோதரிகளை நிர்வாணப்படுத்திக் கேவலப்படுத்துவதைத் தடுக்க என்ன செய்தீர்கள்?
‘கொத்துக் கொத்தாக எமது மக்கள் செத்து மடிகிறார்கள்’ என்று சொல்வது தவறு. ‘குவியல் குவியலாக’என்று சொல்வதே பொருந்தும். அந்தளவிற்கு அங்கே அழித்தொழிப்பு நடந்தேறிக்கொண்டிருக்கிறது.
இராமாயணத்திலே இராவணன் என்ற தமிழனை அழிக்க இங்கிருந்து அனுமான் என்பவனை அனுப்பி இலங்கையைத் தீமூட்டினீர்கள். இன்றைக்கும் அங்கே இருக்கும் எங்கள் தமிழர்களை அழிக்க இங்கிருந்துதான் படைபோகிறது.
‘அன்னை அன்னை’என்று ஏன் சோனியாவைச் விளிக்கிறீர்கள்? பெற்றெடுத்த தாயையே ‘அம்மா’என்றழைக்கப் பலர் தயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலே, எங்கிருந்தோ வந்த சோனியாவை ‘அன்னையே’என்றழைக்கிறீர்கள். இது அடுக்குமா?

வரும் தேர்தலில் அதிகாரத்தின் தலையில் ஆட்காட்டி விரலால் ஒரே அழுத்தாக அழுத்துங்கள். தமிழீழ மண்ணிலே தமிழர்களுக்கென்றொரு தாயகம் அமைவதற்கு ஏதுவாக இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு தற்போது உங்களுக்குக் கிட்டியிருக்கிறது. தமிழக தேர்தலில், நீங்கள் யார் என்பதை ஆளும் வர்க்கத்தினருக்கு நிரூபித்துக் காட்டுங்கள்.

உலகத் தமிழர்களின் தலைவன் பிரபாகரன் ஒருவனே!

ஒரு இனத்தின் மீது மற்றோர் இனம் படையெடுத்து வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை.

தமிழீழம் வெல்லும் - அதைத்
தடுக்கின்ற எவரையும்
தமிழகம் கொல்லும்!

அடுத்து தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தியாகு உரையாற்றினார்.

தமிழர்கள் போராடும் இனமாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வாழும் நாடுகளான பிரான்ஸ், கனடா, இலண்டன் இங்கெல்லாம் அவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அந்த நாடுகளுக்குக் கொடுத்த அழுத்தங்களைத் தொடர்ந்து, அந்நாடுகளின் பிரதிநிதிகள், போரை நிறுத்தும்படி கேட்பதற்காக இலங்கைக்குப் போயிருக்கிறார்கள். பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளை கொழும்புக்கு வர அனுமதித்த இலங்கை அரசு, ஸ்வீடனின் பிரதிநிதிக்கு அனுமதி மறுத்திருக்கிறது.

உடனடியாகப் போரை நிறுத்தவேண்டும், போர் நடக்கும் இடத்திற்குள் சிக்கியிருக்கும் மக்களைச் சந்திக்க பன்னாட்டுப் பிரதிநிதிகளுக்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் மேற்கண்ட நாடுகளின் சார்பில் விடுக்கப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள கொழும்பின் ஆட்சியதிகாரம் மறுத்திருக்கிறது. வெள்ளைக்காரன்கூட ‘போரை நிறுத்து’என்று கேட்கிறான். இத்தனை அருகிலிருக்கும் இந்தியா கேட்கவில்லை. நிலைமை இவ்விதமிருக்க, ‘அங்கே போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது’என்று இங்கு சிலர் பொய்சொல்லித் திரிகிறார்கள்.

தமிழுக்கு அமுதென்று பேர்… தமிழனுக்கு அகதி என்று பேரா? புலிகள் என்ற பெயரைப் பலரும் சூட்டிக்கொள்கிறார்கள். காரணம், புலிகள் என்றால், அடக்குமுறைக்கு எதிரானவர்கள் என்று பொருள். தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவதற்கு முழுத்தகுதியும்பெற்ற அமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கம்.

இலங்கையிலும் இந்தியாவிலும் இருக்கிற ஈழத்தமிழர்கள் மட்டும் அகதிகளல்ல; புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்கள்தாம் உண்மையான அகதிகள். தாயகமும் இல்லாமல் அதை மீட்கும் வழியும் தெரியாமல் உலகமெல்லாம் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தேறியிருக்கின்றன. எமது சகோதரர்களின்மீதான போரை நிறுத்தச்சொல்லி பலவழிகளிலும் கேட்டும் ஒரு பயனும் இல்லாதுபோயிற்று. எமக்கென்றொரு (தமிழகத்துக்கு) அயலுறவு அமைச்சு இருந்திருந்தால், ‘பிரணாப்பை அனுப்பு’என்று நான் ஏன் கெஞ்சிக்கொண்டிருக்கப்போகிறோம்? மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ தமிழகத்தார் வாழும் ஏனைய நாடுகளிலோ எம்முறவுகளுக்கு ஒரு இன்னல் விளைந்தால் தட்டிக்கேட்க எங்களுக்கென்றொரு அயலுறவு தொடர்பான அலுவலகம் இல்லை. ஆனால், விடுதலைப்புலிகளுக்கு என்றொரு சர்வதேச செயலகம் இருக்கிறது. நாங்கள் பத்துக்கோடி தமிழர்கள் உலகமெங்கும் வாழ்வதாகப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். பத்துக்கோடி தமிழருக்கும் ஒற்றைக்கொடி கிடையாது.

எத்தனையோ இழப்புகளை நாம் எதிர்கொள்ளலாம். ஆனால், எந்த இழப்புகளாலும் விடுதலைப்போரை நிறுத்தமுடியாது. விடுதலைப் பாதை என்பது மலர்களாலானது அல்ல; பஞ்சுமெத்தையன்று. அது வழுக்குப்பாறை, சறுக்கும் பாதை. அது விடுதலைக்காக பல ஈகங்களைக் கோரிநிற்கிறது. எந்நிலையிலும் நாம் நம்மை இழத்தலாகாது. ‘காற்று இல்லாதபோதும் விடும் மூச்சில் வாழும் சாதி எங்கள் சாதி’என்று கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதியதைப்போல நாங்கள் உயிர்ப்புடனிருப்போம்.

எல்லா நகரங்களையும் இழந்தோம். கிளிநொச்சி, பரந்தன், மாங்குளம்… என நிலம் சுருங்கிச்செல்கிறது. ஆனால், களம் நம்முன் விரிந்துசெல்கிறது. இப்போது இது உலகம் முழுவதும் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டமாகப் பரிணாமம் பெற்றிருக்கிறது. ஆறு கண்டங்களிலும் இப்போது ஈழத்திற்கான போர் நடந்துகொண்டிருக்கிறது. கரிய மேகங்கள் சூழலாம். ஆனால், கதிரவனை எப்போதைக்குமாக மறைத்துவிடமுடியாது.

இயக்குநர் புகழேந்தி (‘காற்றுக்கென்ன வேலி’ படம் மூலம் அறியப்பட்டவர்)

இரண்டு நாட்களுக்கு முன் உண்ணாவிரத நாடகக்காட்சி ஒன்று அரங்கேறியது. “இந்திய அரசே! கலைஞரின் உயிரைக் காப்பாற்று”என்று கூக்குரல்கள் வேறு.
இது ஒரு பாதுகாப்பான நாடு. நாங்கள் ஏழுகோடித் தமிழர்கள் இங்கே வாழ்கிறோம். ஆனால், இதுநாள்வரையில் தமிழன் என்றொரு இனத்தின் மகத்துவம் அறியப்படவில்லை. ஈழத்தமிழர்கள் முப்பத்தைந்து இலட்சம் பேரால்தான் ‘தமிழன்’என்ற சொல்லை இன்றைக்கு உலகம் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. இங்கே போராடும் உணர்வு இல்லை. வெளிநாட்டிலிருந்து வந்திருந்த எனது ஒரு நண்பர் சொன்னார். (அவருக்கு நாற்பத்தைந்து வயதுக்கு மேலிருக்கும்) ‘இந்த வயதிலேயே எங்களுக்கு களத்தில் இறங்கிப்போராட வேண்டும் போலிருக்கிறது.’என்று. இன்றைக்கு உலகம் முழுவதிலும் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக்கொண்டிருப்பவர்கள், ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களின் பிள்ளைகளான பத்தொன்பது, இருபது வயதான இளைஞர்கள்.

முத்துக்குமார் என்றொரு அற்புதமான இளைஞன். அவன் தனக்குத்தானே தீமூட்டி தற்கொடை செய்துகொண்டு இறந்துபோவதற்கு முன்னால் அவனிடம் கேட்டார்கள்: “இந்தக் கடிதத்தில் இவ்வளவு தெளிவாக எல்லாவற்றையும் எழுதியிருக்கிறாயே… இவ்வளவு அறிவுபூர்வமான ஒருவன் ஏன் வாழ்ந்திருக்கக்கூடாது?”என்று. அதற்கு அவன் சொன்னான்: “அங்கே ஈழத்திலே என்னைவிடப் புத்திசாலிகளான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் மண்ணுக்காக ஒவ்வொருநாளும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன் நான் எம்மாத்திரம்?”என்று. அறிவும் உணர்வும் ஒரே இடத்தில் சேர்ந்திருப்பது அரிது. முத்துக்குமாரிடத்தில் அவை இரண்டும் இருந்தன. அதனால்தான் “‘போரை நிறுத்து’என்று கேட்டு, அதற்குரிய வழிவகைகளைச் செய்யாமல் கள்ளமௌனம் சாதிக்கிறீர்கள்”என்றான்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் எங்கள் உணர்வுகளை முடக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.நாங்கள் அடிமைக்கூட்டமல்ல; ஆளப்பிறந்த கூட்டம் என்பது ஆதிக்க சக்திகளுக்குப் புரியவேண்டும். வரலாறு அடுத்த தலைமுறைக்கு எல்லாவற்றையும் எடுத்துச் செல்லும்; சொல்லும்.

இயக்குநர் வா.கௌதம்

இந்த இடம் நிறைந்திருக்கவேண்டும். நான் இன்னமும் அதிகளவிலான மக்களை எதிர்பார்த்தேன். பயமா? தயக்கமா? என்ன காரணமென்று தெரியவில்லை. நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். பேச்சில் நேரத்தை விரயம் செய்துகொண்டிருக்கிறோம். செயலாற்றவேண்டிய காலகட்டம் இது.
இப்போது நான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்திற்கான கதைவேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது பெரும் மனச்சிதைவை அடைந்தேன். அந்தளவுக்கு அது என்னைத் துன்புறுத்துவதாக இருந்தது.

(எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டுபேர் சளசளக்க ஆரம்பித்திருந்தார்கள். கௌதமின் பேச்சைச் சரியாகச் செவிமடுக்க இயலவில்லை)

வரலாற்றில் தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் அடிபட்டும் இன்னமும் எங்களுக்குப் போராட்ட குணம் வரவில்லை. நான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் வழியாக, படைப்பின் வழியாக எம்முறவுகள் அடைந்த இன்னல்களைக் காட்சியாகக் கொண்டுவந்திருக்கிறேன்.

ஈழத்திலே எமது சகோதரிகளை நிர்வாணப்படுத்தி கைகளை உயர்த்தியபடி நடந்துவரச் சொல்கிறான் இலங்கை இராணுவத்தான். அந்தப் பெண்கள் மனித வெடிகுண்டாக வரலாம் என்ற அச்சத்தினால் அப்படிச் செய்வதாகச் சொல்லப்படுகிறது. “நிர்வாணத்தைப் பாக்கணும்னா உன் அக்காவையோ அம்மாவையோ பாருங்களேண்டா சிங்கள வெறியர்களே!”என்று மனம் பதறுகிறது.

அங்கே அகதிகளாக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு உண்ண உணவில்லை. உடுக்க உடையில்லை. காயத்திற்குக் கட்டுப்போட்டு குருதியைக் கட்டப்படுத்தக்கூட துணியில்லை என்பது எவ்வளவு கொடுமை. நாம் எத்தனை காணொளிகளை இணையத்தில் காண்கிறோம். அதிலிருந்து ஒரு காட்சி… ஒரேயொரு துணியை வைத்துக்கொண்டு இரத்தம் வழிய இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். ‘அண்ணா இந்தத் துணியை நீ கட்டிக்கொள்’என்கிறான் தம்பி. ‘இல்லை நீ கட்டிக்கொள்ளடா தம்பி’என்கிறான் அண்ணன். இதுதான் ஈழத்தின் இன்றைய நிலை.

சில மானங்கெட்டவர்கள் சோனியாவை ‘அன்னையே… அன்னையே’என்று அழைக்கிறார்கள். எங்கள் சகோதரர்களை நாளாந்தம் பலிகொள்கிற போரை முதலில் நிறுத்தச் சொல்லுங்கள். நாங்களும் அவரை அன்னை என்று அழைத்துவிட்டுப் போகிறோம்.

உலகம் முழுவதும் மனிதர்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறார்கள். எங்கள் தமிழர்கள்தான் புலிக்குட்டிகளை ஈன்றுகொண்டிருக்கிறார்கள்.

வைத்திலிங்கம் -பா.ஜ.க. கட்சியைச் சார்ந்தவர்

உலகமெங்கிலும் தமிழுணர்வாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா ஒரு தேசம் என்கிறார்கள். இந்திய தேசத்தில் ஒரு பகுதியினராகிய தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், மராட்டியன், கன்னடன், கேரளாக்காரன் குரல் கொடுக்கும் நிலை வரவேண்டும். அப்படி அவர்கள் குரல்கொடுக்கமாட்டார்கள். பதிலாக பிரச்சனை கொடுப்பார்கள்.

புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல. பிரபாகரன் பயங்கரவாதியும் அல்ல. தமிழீழம்தான் தீர்வு என்று சொன்னால் அது தவறா? இந்தப் போரை நடத்திக்கொண்டிருக்கும் சோனியா அரசாங்கத்தின் கருத்துப்படி புலிகள் பயங்கரவாதிகள். பிரான்சில், கனடாவில், இலண்டனில் தமிழ்மக்களால் நடத்தப்படும் போராட்டங்களில் பிரபாகரனின் உருவப்படத்தை ஏந்தியபடி மக்கள் செல்கிறார்கள். அந்த நாட்டு அரசாங்கம் அதற்குத் தடைசொல்கிறதா? இல்லை!

ஒரு பிரபாகரனை முடித்துவிட்டால் இந்தப் போர் முடிந்துபோய்விடும் என்று இங்கு சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரபாகரனுக்குப் பதிலாக இலட்சோப இலட்சம் பிரபாகரன்கள் எழுவார்கள். அதற்கு இவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்?

கவிஞர் தாமரை பேச எழுந்தபோது பலத்த கையொலி எழுந்தது. அண்மையில் திரைத்துறையினர் நடத்திய கூட்டத்தில், அதிகாரங்களை எதிர்த்து அவர் ஆற்றிய அனல்பறக்கும் உரை, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் தாமரை:

இந்த உண்ணாவிரதம் வித்தியாசமானது. எத்தனையோ கூட்டங்களில் பேசினாலும் உங்கள் முன் பேசுவதுபோல ஆகாது. நாங்களெல்லாம் உங்களைவிட நன்றாக, மதிப்போடு வாழ்ந்துகொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். நீங்கள் நினைப்பது போலில்லை. நாங்களும் அடிமைகள்தான்! அதிலும், உங்களைவிடத் தரந்தாழ்ந்த அடிமைகள் என்று சொல்லவேண்டும். ஏனென்றால், உங்களுக்கென்றொரு உண்மையான தலைவர் இருக்கிறார். அவர் தமிழீழத் தலைவர் மட்டுமல்ல@ தமிழினத்தின் தலைவர். எங்களுக்கு அப்படிச் சொல்லிக்கொள்ளும்படியான தலைவன் இல்லை. அதனால்தான் கடல்கடந்து தலைவர்களைத் தேடவேண்டியிருக்கிறது.

இந்தியனாக இருப்பதற்கும் தமிழனாக இருப்பதற்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்கிறது. இந்தியனாக இருந்தால், ஆயுதம் கொடுத்து இலங்கையில் போரை நடத்துபவனாக இருப்பான். தமிழனாக இருந்தால், ‘போரை நிறுத்து’என்று துயரத்தோடு கதறுபவனாக இருப்பான். ஆக, தமிழனாக இருந்தால் நீங்கள் இந்தியனாக இருக்கமுடியாது. இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது.

கடைக்கோடித் தமிழனுக்கும் கலைஞர் ஆடிய நாடகம் புரிந்துபோய்விட்டது. கனரக ஆயுதங்களால் தாக்குவதை நிறுத்துவதற்குப் பெயர்தான் போர்நிறுத்தமா? ஆனால், இவர்கள் சொல்கிறபடி அங்கு அப்படி எந்த நிறுத்தமும் ஏற்படவில்லை. இப்போதும் எறிகணைகளுக்கும் விமானக்குண்டு வீச்சுக்களுக்கும் மக்கள் பலியாகிக்கொண்டுதானிருக்கிறார்கள்.
“நான் சொன்னதைக் கேட்கும் மத்திய அரசு அமையுமானால், இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழீழம் பெற்றுத்தர வழிவகை செய்வேன்”என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். எவ்வகையிலேனும் எங்கள் உறவுகள் இந்த இனவழிப்பினின்று காப்பாற்றப்பட்டால் சரி.


போராளிகள் எங்கள் சகோதரர்கள். அதை யார் சொன்னாலும் நாங்கள் மாற்றிச்சொல்வதாக இல்லை. கலைஞரின் நாடகங்கள் எல்லாம் தெரிந்துபோய்விட்டன. புனர்வாழ்வுக்காக 25 கோடி பணம் கொடுப்பார்களாம். அதை வாங்கி ராஜபக்சே ஆயுதம் வாங்குவான். வேறென்ன செய்வான் என்பது நமக்குத் தெரியாதா? போர்நடக்கும் பகுதிகளிலிருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட மக்களைக் காரணமாகக் காட்டி உலகநாடுகளிடம் பணம் வசூலிக்கும் வேலையை ராஜபக்சே அரசாங்கம் செய்ய நினைத்தது. ‘சித்திரவதை முகாம்களுக்கு பணம் கொடுக்கவேண்டாம்’ என்று புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அறிவுறுத்திவிட்டார்கள். எங்கள் மக்களை அடித்துவிரட்டிவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களவர்களைக் குடியேற்றும் கைங்கரியத்தைத்தான் ராஜபக்சே செய்ய நினைத்திருக்கிறான். அதற்கு நாம் ஒருபோதும் இடங்கொடுக்கக்கூடாது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். உங்கள் பிள்ளைகளைக் கல்வியினால் முன்னேற்றுங்கள். எமக்குமுன் மகத்தான கடமை ஒன்று காத்துக்கிடக்கிறது. ஹிட்லரால் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள், இலட்சக்கணக்கில் தமது உறவுகளை ஒரு போர்வெறியனிடம் பறிகொடுத்த யூதர்கள் எப்படிச் சாதித்துக் காட்டினார்களோ, அதைப்போல நீங்கள் சாதனையாளர்களாக, வரலாற்றை மாற்றி எழுதுபவர்களாக ஆகவேண்டும் என்பதே எனது விருப்பம்.

கவிஞர் தாமரை பேசி அமர்ந்ததும் பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சிகளிலிருந்து வந்திருந்தவர்களும் பேட்டிக்காக அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ‘ஆட்டோகிராப்’கேட்டு வந்துகொண்டேயிருந்தார்கள்.

திருச்சி வேலுச்சாமி: (இவர் யார் என்பதைச் சொல்லும்போது சாலைச் சத்தங்கள் அவ்விடத்தை மூழ்கடித்துவிட்டன.)

ஈழத்தமிழர்களால்தான் இன்றைக்கு நாங்கள் உலகத்தின் கண்களில் மதிப்பிற்குரியவர்காகப் பார்க்கப்படுகிறோம்.
முன்பெல்லாம் நான் காலை பதினொரு மணிக்குச் சாப்பிடுவேன். பிறகு இரவுணவு. இரண்டு வேளைதான் உண்பது வழக்கம். அண்மையிலே ஒன்றைத் தெரிந்துகொண்டேன். அதாவது, முப்பத்தேழு ஆண்டுகளாக நான் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். நான் சொல்வது புரிகிறதா? நான் அத்தனை ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன் என்று தனது உண்ணாவிரதத்தின் மூலமாக எனக்கு உணர்த்திக்காட்டியவர் கலைஞர்.


ராஜீவ் காந்தியின் மரணத்தை இத்தனை நாட்களாகக் காரணம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் காந்தியின் வழக்கு விசாரணை இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதை நீதிமன்றமே ஒத்துக்கொண்டிருக்கிறது. முடியாத ஒரு வழக்கின் தீர்ப்பை நீங்கள் ஏன் திரும்பத் திரும்பச் சொல்லி அவர்களை (விடுதலைப்புலிகளை) குற்றவாளிகளா(க்)கப் பார்க்கிறீர்கள்?

இன்னுமொரு கேள்வி ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கு விசாரணை 22ஆம் திகதி தொடங்கவிருக்க, 21ஆம் திகதியே ‘விடுதலைப் புலிகளே இதைச் செய்தார்கள்’என்று சுப்பிரமணியசுவாமி முண்டியடித்துக்கொண்டு பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்தது எப்படி? அந்த வழக்கினுள் மறைந்திருக்கும் பூடகந்தான் என்ன?

இலங்கையில் நடந்துகொண்டிருக்கிற பேரழிவை, அவலத்தை இன்னமும் கண்டுகொள்ளாமல், அதற்கு முண்டுகொடுத்துக்கொண்டு மத்திய, மாநில அரசாங்கங்கள் இருக்குமானால், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் மனித உருவில் வாழ்ந்த பேய்கள் என்று வரலாறு எழுதும் காலம்வரும்.

அந்தக் கூட்டத்தை ஒழுங்கமைத்த நேரு என்பவர் நன்றியுரை வழங்கினார்.

நாங்கள் எங்கள் சொந்த மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்டவர்கள். எங்களுக்காக இன்று தமிழகமே போராடி வருகிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்துவதற்கு பல போராட்டங்கள் நாங்கள் செய்யவேண்டியிருந்தது.

உதாரணமாக, கும்மிடிப்பூண்டி அகதி முகாமிலிருக்கும் அகதிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வதற்கு முதலில் வட்டாட்சியரால் அனுமதி வழங்கப்பட்டது. உண்ணாவிரதம் நடப்பதற்கு முதல்நாள் இரவு அந்த அனுமதி திருப்பிப்பெறப்பட்டது. நாங்கள் அண்ணன் ஒரு முகாமிலும், தங்கை ஒரு முகாமிலும் தங்கியிருக்கிறோம். இப்படியான இடங்களில்கூட நாங்கள் சந்திக்கமுடியாமல் போய்விட்டது. உரத்து அழக்கூட எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அவரது குரல் தளதளத்துவிட்டது. கூட்டத்திலும் பலர் கலங்கிப்போயிருந்ததைக் காணமுடிந்தது.

நாங்கள் இந்தக் கூட்டத்தை எந்த அரசியல் கட்சி சார்பிலும் நடத்தவில்லை. ஒட்டுமொத்த மக்களின் தலைவனின் பெயரால் கூடியிருக்கிறோம். நான் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. குறிப்பிட்டால் ஆபத்து.

இந்தப் போராட்டத்தின் மூலமாக சில கோரிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்களின் முன்வைக்கிறோம்.
-இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும்.
-அடிப்படை வசதிகளைச் செய்ய சர்வதேச தொண்டு நிறுவனங்களை போர் நடக்கும் பிரதேசத்தினுள் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
-பேச்சுவார்த்தை தொடங்க ஆவன செய்யப்பட வேண்டும்.


நாங்கள் சாவின் விளிம்பிலிருந்து வந்தவர்கள். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் இந்த மண்ணிலே உயிர்விட நாங்கள் தயார்.

பழ.நெடுமாறன் ஐயாவின் நிறைவுரையுடன் கூட்டம் கலைந்தது.

12 comments:

ttpian said...

மஞ்சல் துண்டு+சொக்கத்தங்கம்=தமிழர் தலைவாங்கி.

Anonymous said...

திருச்சி வேலுச்சாமி சுசுவாமியின் முன்னாள் உதவியாளர்

Voice on Wings said...

நெடுமாறனின் உரைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

தமிழ்நதி said...

ttpian,

இப்படியெல்லாம் வரைவிலக்கணம் கொடுக்கலாமா நீங்கள்:)

தகவலுக்கு நன்றி அனானி.

Voice on Wings,

நெடுமாறன் அவர்களின் உரையை ஏற்கெனவே பதிவில் இட்டுவிட்டேனே... இடப்பக்கம் இருக்கும் பதிவுத் தலைப்புகளில் 'எல்லாவற்றுக்கும் பணம்; அரசியலில் பிணம்'என்ற தலைப்பை அழுத்துங்கள். அவருடைய பேச்சை வாசிக்கலாம்.

ttpian said...

நர்ழ்:டாக்டர்,மஞ்சல் துண்டு,சொக்க தங்கம் என்று பினாத்திகிறார்..
டாக்டர்:எதுக்கும் இதாலி சூப் மட்டும் கொடு:
3 மணி நேரத்துக்கு பிறகுதான் எதயும் சொல்ல முடியும்!
நர்ழ்:மஞ்சல் துண்டை எடுது போத்தி விடட்டுமா?

Anonymous said...

ஈழப்பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து ஒத்த குரக் கொடுக்க தடையாய் இருந்தவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிட்டாரா தாமரை!

சவுக்கடி said...

வழக்கம் போல சிறப்பாகத் தொகுத்தளித்திருக்கிறீர்கள்.

சில விளக்கங்கள் அறியவும் சிலவற்றை வலைப்பதிவுலகிற்குத் தெளிவாக்கவும் மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ள விழைகிறேன். மின்-முகவரி தெரிவிக்க வேண்டுகிறேன்.
savuccadi@gmail.com

Anonymous said...

நன்றி..

Anonymous said...

நான் உங்கள் ரசிகன் உங்க வலைத்தளத்தில் எல்லாமே சூப்பரா இருக்கு & உங்க புத்தகங்களும் எனக்கு பிடிக்கும் .... இது போன்ற உங்கள் கருத்துக்கள் ஓங்கி ஒலிக்க என் வாழ்த்துக்கள்.. நானும் ஈழக் கிழக்கன்தன்.. மட்டகளப்பு மைந்தன் ... மனோ.....

அமிர்தவர்ஷினி அம்மா said...

:((

தமிழ்நதி said...

ttpian,

மஞ்சள் துண்டு, இத்தாலி சூப் எல்லாம் சரிதான். நர்ஸ் எப்படி நர்ழ் ஆனார்? எனக்கு முதலில் விளங்கவேயில்லை.:)

அனானி நண்பரே,

"ஈழப்பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து ஒத்த குரக் கொடுக்க தடையாய் இருந்தவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிட்டாரா தாமரை!"

என்று கேட்டிருந்தீர்கள். தாமரைக்கு நல்ல ஞாபகசக்தி இருக்கிறது. நிச்சயமாக மறந்திருக்கமாட்டார்.அதனால்தான் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தின்போது 'அம்மா'வை 'அமாவாசை'என்றார். ஆனால், இலட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற உண்மையிலேயே விரும்புகிற ஒருவர், அவர்களை முன்னிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும் எவரையும் நம்பவே விளைவர். 'எத்தைத் தின்றால் பித்தம் தணியும்', 'யார் குற்றினாலும் அரிசியானால் சரி'போன்ற உங்களுக்குத் தெரிந்த சிலவற்றை நினைவுபடுத்துகிறேன். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்தே இருக்கிறது. ஆனாலும், எல்லா சமயங்களில் எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டிருக்கவும் கூடாது. இந்தத் தத்துவம் சரியாக இருக்கிறதா:)

மன்னிக்கவும் சவுக்கடி, (பெயர்கள்.. பெயர்கள்)

உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி அனுப்பவேண்டுமென்று மறந்துவிட்டேன். ஏன் வலைப்பூவில் தோன்றவில்லையா?

அனானி,

நன்றி

மனோ,

'ரசிகன்' என்ற வார்த்தை கொஞ்சம் பெரிய விசயம் இல்லையா? இரண்டே இரண்டு புத்தகங்கள்தான் வெளிவந்திருக்கின்றன. அவை உங்களுக்கு வாசிக்கக் கிடைத்தனவா? கிடைக்காவிட்டாலும் ஒன்றையும் நீங்கள் இழந்துபோகவில்லை:) 'ஈழக்கிழக்கன்'என்ற வார்த்தை கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. வடக்கும் கிழக்கும் இணையவேண்டுமென்பதுதானே விருப்பம். அடிக்கடி வலைப்பக்கம் வாருங்கள். ஏதோ நீங்கள் கொஞ்சப்பேர் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் கிறுக்கிக்கொண்டிருக்கிறோம். இல்லையென்றால் நாங்களாக எழுதி நாங்களாக வாசித்துக்கொள்ளவேண்டியதுதான்.

அமர்தவர்ஷினி அம்மா,

:) என்ன வார்த்தைகளைக் காணவில்லை?

Anonymous said...

///'எத்தைத் தின்றால் பித்தம் தணியும்', 'யார் குற்றினாலும் அரிசியானால் சரி///


நம்புவோம்....