3.09.2009

அனானியின் அடாவடித்தனம்

அன்பு நண்பர்களுக்கு,

‘நந்திதாவுக்கு ஒரு கடிதம்’ என்று நேற்று ஒரு பதிவை இட்டிருந்தேன். சில காரணங்களால் அதை எனது வலைப்பூவிலிருந்து நீக்கவேண்டியதாகிவிட்டது. யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. அதனால்தான் அந்தப் பதிவு நீக்கம்.

ஆனால், வேண்டுமென்றே சீண்டுகிறவர்களுக்குப் பயந்து ஒதுங்கிச் செல்வதும் எனது இயல்பன்று. நான் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான ஒரு பதிவை, அல்லது ஈழத்தைப் பற்றி ஒரு பதிவை இட்டவுடன் ‘பிரம்ம புத்திரன்’என்றொரு அனானி எங்கிருந்தோ தோன்றுவார். தான் களத்திலிருந்தே போராடுவது போலவும் நாங்கள் எல்லாம் ஒளிந்துவந்து புலத்திலிருந்து மக்களின் துயரங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருப்பதுபோலவும் ஒரு ‘மனிதநேய’பாசாங்கு பண்ணி, என்னைக் கடிந்து ஒரு பின்னூட்டத்தை இட்டுக் கடுப்பேற்றுவார்.

‘நீங்கள் துயரங்களை விற்கிறீர்கள்’என்பதே அவரது பிரதான குற்றச்சாட்டாக இருக்கும். அவரவர் மனதில் தோன்றுவதை எழுதுவதற்காகத்தான் நாங்களெல்லாம் வலைப்பூ என்ற ஒன்றைப் பயன்படுத்துகிறோம். ‘நீ இதை எழுது… இதை எழுதாதே’என்று சொல்லும் பிரம்ம புத்திரனுக்கு சுந்தர ராமசாமி அவர்களின் கவிதையை நினைவூட்ட விரும்புகிறேன். ‘உன் கவிதையை நீ எழுது… என் பதிவை நீ நோண்டுவதை நான் அனுமதிக்கமுடியாது’. பிரம்ம புத்திரனின் கடுப்பெல்லாம் அவர்களுக்குப் பிடிக்காத விடுதலைப் புலிகளை என் போன்றவர்கள் தூக்கிப்பிடிக்கிறார்கள் என்பதே. அவருடைய நோக்கத்தை அறிந்த நானும் அவரது பின்னூட்டங்களைப் பெரும்பாலும் பிரசுரிப்பதில்லை. பின்னூட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கும் நிராகரிப்பதற்குமான வசதி இவர்களைப் போன்றவர்களை மனதில் வைத்தே ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

நேற்று ‘நந்திதாவுக்கு ஒரு கடிதம்’ பதிவிலும் அனானியாக வந்து ஒரு பின்னூட்டமிட்டார். அது கவிதை வடிவில் இருந்தது. வழக்கமான ‘அறம்பாடல்’தான் அதுவும். அதில் பிரம்ம புத்திரன் என்ற பெயர்கூட இல்லை. ஆக, தனது பெயரைச் சொல்லும் துணிவில்லை. தனக்குத் தான் சூட்டிய பெயரைச் சொல்லும் துணிவுகூட அவருக்கு இல்லை. அனானியாய் இருப்பதில் அத்தனை பிரியம். ஏனென்றால், பதில் சொல்வதிலிருந்து தப்பித்துவிடலாம் பாருங்கள். அதை வேறு யாரோ எழுதியதாக நினைத்து நான் பின்னூட்டமிட்டதும், பதறியடித்துக்கொண்டு வந்து அதை எழுதியது தான்தான் என்று பிரகடனப்படுத்துகிறார். அதை ஏன் முன்னரே செய்யவில்லை திருவாளர் பிரம்ம புத்திரரே! அத்தனை பயமா உங்களுக்கு?

‘எனது பின்னூட்டத்தை ஏன் பிரசுரிக்கவில்லை’ என்று மீண்டும் வந்து கேட்கிறார். ‘உங்கள் முகங்களைத் தோலுரிக்கும் வரிகளை அனுமதியுங்கள்’ என்று புலம்புகிறார். முன்னர் சித்திரவதை முகாம்களில் தோலுரித்துப் பழக்கமுண்டு போலும். என் முகத்தில் நான் எந்தத் தோலையும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. எனது பெயரை இட்டு கூகுலில் தேடினால் முகம் வந்துவிட்டுப் போகிறது.

‘அனானியாக வந்து ஏன் அடையாளம் இல்லாமல் எழுதுகிறீர்கள்?’என்று எப்போதோ நான் கேட்டதை நினைவில் வைத்துக்கொண்டு ‘பிரம்ம புத்திரன்’என்ற பெயரில் வலைப்பூவொன்றை ஆரம்பித்திருக்கிறார். அதன் முக்கிய நோக்கம், ‘எங்களைப் போன்றவர்களை எழுதிக் கிழிப்பதாம்’. மிக நல்லது. எழுதிக் கிழியுங்கள். தனிப்பட்ட முறையில் என் பெயரை விளித்து எழுதினால் என்ன நடவடிக்கை எடுப்பதென்று எனக்கும் தெரியும். விடுதலைப் புலிகளைத் தூக்கிப் பிடிக்கும் யாவரும் இவரைப் போன்றவர்களுக்கு எதிரிகள். ஆகாதவர்கள்.
இப்போதும் பிரம்ம புத்திரன் என்ற பெயரில் மட்டுமே வெளிப்பட்டிருக்கிறார் இந்தத் தைரியசாலி. ‘நான் பிரான்சில் இருக்கிறேன், இலண்டனில் இருக்கிறேன்’ என்று தன் இருப்பிடத்தையே வெளிப்படுத்த எதனாலோ தயங்குகிறார்.

பிரம்ம புத்திரன்,

என் இயற்பெயர் கலைவாணி. இப்போது நான் தமிழகத்தில்தான் இருக்கிறேன். முறையான விசா இருக்கிறது. தமிழ்நதி என்ற பெயரில் எழுதுகிறேன். நீங்கள் என்னை எழுதிக் கிழிப்பதற்கு என்ன இருக்கிறதென்று நானும் பார்த்துவிடுகிறேன். நான் கொலை செய்துவிட்டு இங்கு வந்து தலைமறைவாக ஒளிந்திருக்கவில்லை. என்மீது எந்த நாட்டிலும் வழக்குகள் இல்லை. நான் திருடவில்லை. விபச்சார வழக்கில் கைது செய்யப்படவும் இல்லை. உங்களைப் போன்றவர்கள் என்னை ஒன்றும் ‘பிடுங்க’ முடியாது என்பதை இத்தால் தெரிவித்துக்கொள்கிறேன்.

22 comments:

Anonymous said...

தூரப் போ சனியனேன்னு விட்டுத் தள்ளுங்க.

நாமக்கல் சிபி said...

சகோதரி,

இதுபோன்ற புல்லுருவிகளுக்கு யாதொரு முக்கியத்துவமும் தரத் தேவையில்லை!

வீ ஆர் வித் யூ!

Anonymous said...

மெல்லெனப்பாயும் நதியின் மூலத்தை எங்கிருந்தோ ஒரு அனானி கிழிக்கிறேன் குதறுகிறேன் என எழுதினால் நீங்கள் பயந்து ஒதுங்குவதா கலைவாணி ?

சலசலப்புகளுக்காக பதிவிடுவதை இனிமேல் தவிருங்கள். நீங்கள் நினைப்பதை அப்படியே எழுதுங்கள். எந்தக்கொம்புக்கும் பதில் சொல்லத் தேவையில்லை.

ஏற்கனவே புலிக்காச்சலில் உழலும் சிலருக்கு இப்போதைய காலம் சாதகமாக இருக்கிறது. அதை நன்கே பயன்படுத்துகிறார்கள். விட்டுவிடுங்கள் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எண்ணங்களை.

-சாந்தி-

soorya said...

தோழி......,
அந்தப் பிரமபுத்ரனைக் கொஞ்சம் இனம் காட்டுங்களேன். புலி வீரங்காட்டி ரொம்பநாளாச்சு. தோள்கள் தினவெடுக்கின்றன. இவனுகளுக்கெல்லாம் எங்கே தெரியப்போகிறது எங்கள் நந்திதாக்களின் கண்ணீர்..?
விட்டுத்தள்ளுங்கள். உங்கள் படைப்புகளைக் காண ஆவலாய் உள்ளேன்.

தமிழ்நதி said...

நன்றி நந்தா,

அப்படித்தான் செய்வதாக உத்தேசம். எங்கோ இருந்து புலம்புகிறவனை நாம் ஏன் பொருட்படுத்தவேண்டும். இனிமேல் பின்னூட்டம் வந்தால் reject ஐ அழுத்தவேண்டியதுதான்.

நாமக்கல் சிபி,

அன்றெழுந்த கோபத்தில் பொருட்படுத்தி ஏதோ எழுதினேன். இனி அதைக் கணக்கெடுப்பதாக இல்லை.

சாந்தி,

ஆம் சிலருக்குப் புலிக்காய்ச்சலில் உதறல் எடுக்கிறது. பூனை படுத்தால் எலிகளுக்குக் கொண்டாட்டம்தானே..:) எப்போதும் தரும் ஆதரவுக்கு நன்றி சாந்தி.

சூரியா,

விட்டுத்தள்ளுங்கள். நாம் வேறு ஏதாவது பேசலாம்.

Anonymous said...

//் நாங்கள் எல்லாம் ஒளிந்துவந்து புலத்திலிருந்து மக்களின் துயரங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருப்பதுபோலவும் ஒரு ‘மனிதநேய’பாசாங்கு பண்ணி, என்னைக் கடிந்து ஒரு பின்னூட்டத்தை இட்டுக் கடுப்பேற்றுவார்.//

இது எனக்கும் அடிக்கடி வரும்..

அபி அப்பா said...

விட்டு தள்ளுங்க! இனி ரிஜக்ட் பட்டனை தட்டிவிடுங்க! அத்தனையே!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க பனங்காட்டு நரி
இதுபோல சல சலப்புக்கெல்லாம் அஞ்சாதீங்க.


நந்திதா பதிவை நேரமின்மையால் முழுதாய் படிக்க நேரவில்லை, பிறகு படிக்கலாம் என்று எண்ணி வைத்திருந்தேன். இப்படி டெலீட் செய்துட்டீங்களேப்பா....

sathiri said...

குலைக்கும்.. கடிக்காது..ஒரு எலும்பை எறிந்து விடுங்கள்..வரலை சுருட்டிக்கொண்டு மூலையில் சுருண்டிடும்......:):):):):):)

Anonymous said...

Sister,
Please ignore the comments of the people who pretend that they are true Tamils and protecting the rights of the Tamil. We know who are true Tamils are and what they are doing. Don't waste your valuable time to even read this type of people's comments. We appreciate your good work, which we are unable to do from here and expect more from you in the future.
- RB from Dubai

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர் என்றல்ல இன்னும் பலர் உள்ளார்கள். அவர்கள் நினைப்பதை எழுத வேண்டும். இல்லையோ
காலைத் தூக்கிப் பெய்வார்கள்....

சிவாஜி த பாஸ் said...

////// உங்களைப் போன்றவர்கள் என்னை ஒன்றும் ‘பிடுங்க’ முடியாது என்பதை இத்தால் தெரிவித்துக்கொள்கிறேன்./////////

தைரியம்தான்...! its good. Keep it up!

தமிழ்நதி said...

ஆம் தூயா. அவர்களது பக்கங்களில் சென்று நாம் அப்படி அடாவடித்தனம் செய்வதில்லை. 'நீ எப்படி இதை எழுதலாம்?'என்று கேட்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

நன்றி அபி அப்பா,

நீங்கள் சொன்னதே வழி. இல்லையென்றால் மனதில் வீணாக வலி. டி.ஆர். வசனம் மாதிரி இருக்கு:)

அமித்து அம்மா,

ஆமாம். நான் பனங்காட்டு நரிதான்:) எத்தனை சலசலப்புப் பார்த்திருப்போம்:)

"நந்திதா பதிவை நேரமின்மையால் முழுதாய் படிக்க நேரவில்லை, பிறகு படிக்கலாம் என்று எண்ணி வைத்திருந்தேன். இப்படி டெலீட் செய்துட்டீங்களேப்பா...."


அதற்கேன் கவலைப்படுகிறீர்கள்? (அதைப் படித்துவிட்டும் கவலைப்படத்தானே போகிறீர்கள்) உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கிறேனே:) என்னிடம் பிரதி இருக்கிறது.

சாத்திரி,

இது ஏன் குலைக்கிறது என்று எனக்குப் புரியாமலிருக்கிறது? சரி... நான் எனது அரசியல் நிலைப்பாட்டை எழுதுகிறேன்... இதில் இவரைப் போன்றவர்களுக்கு என்ன வந்தது? அது சரியோ பிழையோ அது எனது வலைப்பூவில் இருந்துவிட்டுப் போகிறது. இதுவும் ஒருவகையான அதிகாரந்தான். அவர்களுக்குப் பிடித்ததையே நாமும் எழுதவேண்டுமென்று எதிர்பார்ப்பது.

RB,

நன்றி. உண்மைத் தமிழர்கள் நிறையப் பேரைப் பார்த்தாகிவிட்டது. ஆரம்ப நாட்களில் எங்களுக்குப் பிடித்தவர்களைள அவர்கள் மீதான விமர்சனங்களோடும் சேர்த்து நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தவிர, வன்னியில் அல்லற்படும் மக்களைப் பற்றி ஒன்றும் எழுதாமலிருக்க முடியாது எழுதுகிறோம். மக்களின் துயரங்களையும் இவர்கள் வகுக்கும் தகுதிக்குள் அடங்குபவர்கள்தான் எழுதவேண்டும் என்பது மடத்தனமான வாதமாக இருக்கிறது. ஒரு ஈழத்தமிழச்சியாக எனக்கும் அந்தப் பிறப்புரிமை இருக்கிறது. நான் நிச்சயமாகத் தொடர்ந்து எழுதுவேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

யோகன்,

நானும் அவர்களை அறிவேன். நீங்கள் பாரிசில் வேறு இருப்பதால், நிச்சயமாக என்னைவிட நீங்கள் அவர்களை அதிகம் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஒருவரின் எழுத்துக்குள் பிரவேசிப்பதும் 'நீ எப்படி எழுதலாம்?'என அதட்டுவதும் உரிமை மீறல்தான் என்பது இத்தனை சித்தாந்தங்களைப் படித்துத் தொலைத்தவர்களுக்குத் தெரியவில்லையே என்பது... வியப்பாக இருக்கிறது.

மேலும், நான் ஈழ அரசியலைத் தொட்டு எழுதத் தகுதியற்றவளா இல்லையா என்பதை அறிந்தவர் அறிவர்.

வால்பையன் said...

அவர் எதுக்காக இப்பொழுது ஒரு ப்ளாக் ஆரம்பித்திருக்கிறார்!
அவரது கருத்தை சொல்ல தானே!
அதே போல் நீங்களும் உங்கள் கருத்துகளை கூறி வந்தீர்கள்.

இதில் அவருகென்ன வலித்ததாம்?

பதி said...

//ஒருவரின் எழுத்துக்குள் பிரவேசிப்பதும் 'நீ எப்படி எழுதலாம்?'என அதட்டுவதும் உரிமை மீறல்தான் என்பது இத்தனை சித்தாந்தங்களைப் படித்துத் தொலைத்தவர்களுக்குத் தெரியவில்லையே என்பது... வியப்பாக இருக்கிறது.//

ஏனெனில், இவர்கள் புலிப் பாசிசத்தை எதிர்க்கும் ஜனநாயக, சோசலிச வாதிகள் !!!!!! ;)

இன்னொன்று, இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் கருத்துக்களுக்கு வரும் எதிர் கருத்துகளை வெளியிடுவதில்லை... கருத்துரிமைக்கு மரியாதை தரும் லட்சணம் !!!!!!!

பதி said...

//சாத்திரி said...
குலைக்கும்.. கடிக்காது..ஒரு எலும்பை எறிந்து விடுங்கள்..வரலை சுருட்டிக்கொண்டு மூலையில் சுருண்டிடும்......:):):):):):)//

அனுபவம்????? ;)

Anonymous said...

எமக்கு நிறையப்பணிகள் இருக்கிறது,நாங்கள் கடந்து வந்தகாலத்தில் எதிர் கொண்டவற்றோடு ஒப்பிடுகையில் இது எதுவுமே இல்லை,மேனியா போன்ற மன வியாதிகளைச்சார்ந்தது,உங்களுக்கான பாதை கண் முன்னே நீண்டுகிடக்கிறது,சிதறிக்கிடக்கிற கிரவல்களுக்காக வினாடிகளை வீணாக்காமல்,தட்டிவிட்டு நடவுங்கள் இன்னும்நிறைய நடக்கவேண்டி இருக்கிறது. திரு

தமிழன்-கறுப்பி... said...

தேவையில்லாததைப் பற்றி சிந்திக்கவே கூடாது.

விடுங்க பிழைச்சுப்போகட்டும்...

தமிழன்-கறுப்பி... said...

நானும் அந்தப்பதிவை பின்னர் படிக்கலாம் என்றிருந்தேன் அழிச்சுட்டிங்களே?

தமிழன்-கறுப்பி... said...

\\
அன்றெழுந்த கோபத்தில் பொருட்படுத்தி ஏதோ எழுதினேன். இனி அதைக் கணக்கெடுப்பதாக இல்லை.
\\

இது சரி...

தமிழ்நதி said...

சிவாஜி த பாஸ்,

"தைரியம்தான்...!"

இருக்கக்கூடாதா:)

--
வால்பையன்,

அவருக்கு வலிக்கிறது. அவர் என்ன சொல்கிறாரென்றால் 'நீங்களெல்லாம் எப்படி ஈழத்தமிழர் பிரச்சனையை எழுதலாம். நீங்கள் வெளிநாட்டிலல்லவா இருக்கிறீர்கள்?'

அவரும் வெளிநாட்டில்தான் இருக்கிறார். ஆனால், அவருக்கு வலி தரும் விடயம் என்னவென்றால் எங்களைப் போன்றவர்கள் அவர்களுக்குப் பிடிக்காதவர்களைத் தூக்கிப் பிடிக்கிறோம் என்பதுதான். மக்களை இந்த அவலத்தில் தள்ளியிருக்கும் விடுதலைப்புலிகளை எப்படி நீங்கள் தூக்கிப் பிடிக்கலாம் என்று அவர் கேட்கிறார் போலிருக்கிறது. என்ன எழுதுவது என்பது எனதுரிமை. அதை யாருக்காகவும் என்னால் மாற்றிக்கொள்ள முடியாது.

---
பதி

"ஏனெனில், இவர்கள் புலிப் பாசிசத்தை எதிர்க்கும் ஜனநாயக, சோசலிச வாதிகள் !!!!!! ;)"

என்று சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். 'அவனைக் கொன்றார்கள். இவனைக் கொன்றார்கள்'என்பார்கள். கருத்தைக் கொல்வதும் கொலைதான் என்பதறியாதாரா இவர்? யாருடைய கருத்தையும் யாரும் வாதிட்டு மாற்றமுடியாது. அப்படியே மாறினாலும் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களாகச் சொன்னால்தான் உண்டு.

"இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் கருத்துக்களுக்கு வரும் எதிர் கருத்துகளை வெளியிடுவதில்லை... கருத்துரிமைக்கு மரியாதை தரும் லட்சணம் !!!!!!!"

அப்படியா? இதைத்தான் சொல்வார்கள் 'தன்னைத்தான் அறியாதாம் தென்னைமரத்துத் தேவாங்கு'என்று.

---

நன்றி திரு,

இத்தகையோரைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து எனது வழியில் செல்வதாகவே உத்தேசம். நான் மற்ற திருவோ என்று நினைத்தேன். அவர் வலைப்பூ வைத்திருக்கிறார். ஆலமரம் என்ற பெயரில். வலைப்பூ ஆரம்பிப்பதானால் அதில் வேறு பெயரில் எழுதுங்கள். இல்லையெனில் குழப்பமாகிவிடும்.

--

தமிழன் கறுப்பி,

"நானும் அந்தப்பதிவை பின்னர் படிக்கலாம் என்றிருந்தேன் அழிச்சுட்டிங்களே?"

நீங்களும் அதையே சொல்கிறீர்கள். என்ன வாசிப்பு ஒதுக்கீடா:)

அந்தப் பதிவைத் திரும்பவும் போடலாந்தான். அது தன்னைப் பற்றி எழுதியதுபோலிருக்கிறது என்று ஒருவர் சொன்னார். சரி.. வேண்டாம் என்று நீக்கிவிட்டேன். பதிவையும் மூன்று வருடத் தொடர்பையும்:(

Anonymous said...

விட்டுத் தள்ளுங்கள் சகோதரி...

இவர்களுக்காக, நீங்கள் பதிவை நீக்காதீர்கள்...