12.14.2008

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தகவல் தொழில்நுட்பவியலாளர்களின் உண்ணாநிலைப் போராட்டம்


ஈழத்தமிழர்கள் துயர்ப்பட மட்டுமே பிறந்தவர்களன்று; பெருமிதப்படவும் தகுந்தவர்கள் என்ற எண்ணத்தை யாராவது இருந்திருந்துவிட்டு விசிறிச் செல்வதுண்டு. நேற்று சனிக்கிழமை கோயம்பேட்டில் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் மனம் நெகிழ்வும் நிறைவும் அடைந்திருக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால சென்னை வாசத்தில் கலந்துகொண்ட எந்தவொரு நிகழ்வும் இத்தகு மனவெழுச்சியைத் தந்ததில்லை.

“துப்பாக்கிகளுக்கு இதயம் இல்லை... உங்களுக்கு?’ – ‘போரை நிறுத்து’ஆகிய வாசகங்களைக் கொண்ட ‘ரீ சேர்ட்’டுகளை அணிந்த இளைஞர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த அரங்கினுள் நுழைந்தபோது நீண்ட சொற்பொழிவுகளில் செவிகள் களைத்துப்போய்விடும்… விரைவில் எழுந்து வேறு வேலை பார்க்கச் சென்றுவிடலாமென்றே நினைத்திருந்தேன். ஆனால், பேச்சு என்பது எப்போதும் பேச்சு அல்ல… பேசுகிற விதத்தில், சென்றடையும் இடத்தில் பேசினால் அதுவொரு விளக்கை ஏற்றிவிடும் என்பதைக் கண்கூடாகக் கண்டேன். வார்த்தைப் பொறியொன்றால் எத்தனை சுடர்களை ஏற்றமுடியும் என்பதை அனுபவபூர்வமாக உணரமுடிந்தது. அத்தனை இளைஞர்கள் கூடியிருந்த அரங்கில் தேவையற்ற பேச்சு இல்லை; கைத்தொலைபேசிகள் விதவிதமாகப் பாடவில்லை; அவசியமற்று எழுந்து ஓடித் திரிந்து யாரும் தங்கள் இருப்பைத் துருத்திக் காண்பிக்கவுமில்லை. கவனச்சிதறலற்று, கூடியிருக்கும் நோக்கத்தில் குவிந்திருந்தன எல்லா மனங்களும்.

எங்களில் அநேகர் பொதுப்புத்தி சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறோமென்பதை அங்கே பேசியவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அதாவது, ‘தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்கள் கட்டுப்பாடற்றவர்கள்; வேலை நேரம் போக களியாட்டங்களில் திளைக்கிறவர்கள்; பணத்தைத் துரத்துவதில் வாழ்க்கையை இழக்கிறவர்கள் என்றெல்லாம் நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். இத்தகைய சமூகப் பொறுப்புணர்வு உங்களிடம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’என்ற வியப்பை அங்கு உரையாற்றிய அநேகர் வெளிப்படுத்தினார்கள்.

பழ.நெடுமாறன், எழுத்தாளர் ராசேந்திரசோழன், சி.மகேந்திரன் (கம்யூனிஸ்ட் கட்சி) பேராசிரியர் கல்யாணி, சுப.வீரபாண்டியன், விடுதலை ராசேந்திரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், வைகோ, இயக்குநர் சீமான், தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, ஓவியா, கவிஞர் அறிவுமதி, வழக்கறிஞர் அருள்மொழி, ஜெகத் கஸ்பர்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்கள்.

வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள், பேரினவாதத்தின் வெறியாட்டங்கள், அதற்கு ஒத்தூதும் ஊதுகுழல்கள், தமிழர்களின் அவலநிலை, அதன் மீதான பாராமுகங்கள், போராட்டத்தின் நியாயம், அதனை இழிவுபடுத்துவோரின் ஈனச் சுயநலம் என பல்வேறுபட்ட விடயங்கள் அங்கு பேசப்பட்டன.

கேட்டுக்கொண்டிருந்தவர்களின் முகங்களைத் திரும்பிப் பார்த்தேன். ஒவ்வொருவரும் சொற்களைத் துளி சிந்திவிடாமல் அருந்திக்கொண்டிருந்தார்கள். அது பேசியவர்களின் ஆற்றலா… மழைக்காக ஏங்கிக் கிடந்த மண்ணின் உறிஞ்சலா...? பேச்சுக்கேற்ப அந்த முகங்கள் மாறியதைப் பார்க்கும்போதில் ‘இந்தக் கூட்டத்தில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்களோ’என்ற நினைவு எழுந்தது. அண்மையில்தான் மு.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’என்ற நூலை வாசிக்கப் பொழுது வாய்த்தது. அன்றைக்கு மாணவர் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் அநேகர் மகத்தான அரசியலாளர்களாக உருவானதுபோல, நேற்றைய கூட்டமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே தோன்றியது. அவர்கள் கண்களைப் பார்க்க நேர்ந்திருப்பின் நான் மிகைப்படுத்தவில்லை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

பழ. நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலியும் ‘கீற்று’இணையத்தள அமைப்பாளர் ரமேசும் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து வழங்கிக்கொண்டிருந்தார்கள். சக பதிவரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவருமான லஷ்மணராஜா அங்கு நடைபெற்ற நிகழ்வுகளைத் தனது புகைப்படக்கருவியினுள் பதிவுசெய்துகொண்டிருந்தார். என்னாரெஸ் பிரின்ஸ் உடனிருந்தார். எத்தனையோ நாள் உழைப்பின் விளைவு அற்புதமான ஒழுங்கமைப்பில் தெரிந்தது.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்கள் கலந்துகொண்டதானது உறுத்தலாக இருந்தது. பொது நிகழ்வுகளில் எப்போதும் பெண்களின் எண்ணிக்கை பாயாசத்தில் முந்திரி மாதிரி அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருப்பது (புதுசாக ஏதாவது யோசிக்க வேண்டும்) எப்போதும் அயர்ச்சியூட்டுவதாகும். அதற்கான நதிமூலம் தேடினால், ‘சமூகம், ‘அதன் கட்டமைப்பு’ 'குடும்பம்' என்ற சலிப்பூட்டும் பழக்கப்பட்ட பதில்களையே வந்தடைய வேண்டியதாய் இருக்கும்.


ஈழப்போராட்டத்தை ஒரு கருவியாகக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன். ஊடகக்காரர்களைக் கண்டால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் தலையைக் காட்டுபவர்களைப் பார்த்து வெறுத்திருந்தேன். ஒரு புல்லையும் தூக்கிப் போடாமல் சொல்லையுண்டு செழிப்பவர்களைக் காணநேர்ந்திருக்கிறது. இந்நிகழ்வு நெஞ்சார்ந்த நிறைவு. உணர்வாளர்களின் ஒன்றுகூடல். தகவல் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு ஈழத்தின் வரலாற்றுத் தகவல்களை வழங்கிய காலப்பதிவு. வார்த்தைகள், கூடியிருந்த எல்லா மனங்களுக்கும் விளக்கினை எடுத்துச்சென்றன.

அடுத்த தலைமுறையிலும் பற்றிக்கொண்ட பொறி பற்றிப் படரும் என்ற நம்பிக்கையுடன் எழுந்து வெளியில் வரும்போது, அந்த நாளின் நிறைவு தந்த நெகிழ்வில் பாடல் வரிகள் உள்ளே ஓடுகின்றன.

‘குறை ஒன்றும் இல்லை
மறைமூர்த்தி கண்ணா…’

நாம் முணுமுணுக்கும் பாடலாவது அவ்விதம் இருந்துவிட்டுப் போகட்டுமே...!

பிற்குறிப்பு: உண்ணாநிலைப் போராட்டம் இன்றைக்கும் தொடர்கிறது. நாளையும் தொடரும். மாணவர்கள் சோர்ந்துபோய் படுத்திருப்பதாக நண்பர் ஒருவர் கூறினார். நேரம் அனுமதித்தால் இன்றைக்கும் கலந்துகொள்ள வேண்டும்.