
மாபெரிய பால்வெளி. அதில் சூரியனைச் சுற்றியும் சுழன்றும் செல்லும் பூமியென்ற சிறு கிரகம். அகன்ற நிலப்பரப்பில் ஒரு நாடு. அதிலொரு நகரம். அங்கே குட்டியூண்டு பகுதி. அந்தக் குட்டியூண்டு பகுதியிலொரு குட்டியூண்டு அறையில் ஒரு சதுர அடிக்கும் குறைவான ஒரு பெட்டியின் முன்னமர்ந்து நாங்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறோம். பால்வெளியையும் இந்தப் பெட்டியையும் இணைத்தும் நினைத்தும் பார்க்க கொஞ்சம் நகைப்பாகத்தான் இருக்கிறது. வேலிச்சண்டை, கோழிச்சண்டையிலிருந்து இணையச் சண்டைக்கு நாங்கள் பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பதை எண்ணித் திருப்தியுற வேண்டியதுதான்.
களைப்பு, அயர்ச்சி, ஆற்றாமை, மனவுளைச்சல், துக்கம் எல்லாம் கலந்த மனநிலையொன்றிலிருந்து உற்சாகத்திற்கு மீட்டிருக்கிறது இடமாற்றம். சனங்களும் வாகனங்களும் நெருநெருக்கும் தெருக்களிலிருந்து தப்பித்து வந்துவிட்டதாய் தற்காலிக மகிழ்வொன்று ஊற்றெடுக்கிறது. எத்தனை சுத்தம் இந்த வீதிகள், எத்தனை நாசூக்கு இந்த மனிதர்கள் என்று வியக்கும் மனதிற்கு ‘புது விளக்குமாறு நன்றாகக் கூட்டும்’என்பதும் புரியாமலில்லை. மேலும், மாநகரங்களில் தரியாத கிராமத்தவளின் மனம் இருக்கும்வரை மேலைத்தேயங்களில் நிலைக்காமல் பெயர்ந்தோடும் கால்களை நானறிவேன். இந்த மாதத்தில் இலண்டனில் வெயிலும் குளிரும் கைதேர்ந்த பரிசாரகனால் கலக்கப்பட்ட ‘காக்டெய்ல்’போல கூடியிருக்கின்றன. செழிசெழியென்று செழித்தடர்ந்த மரங்கள் நிறைந்த பூங்காவில் கைவீசி நடக்கும்போது கசடுகள் பின்னழிந்து மறையக் காண்கிறேன். நம்மைக் கட்டிவைத்திருக்கும் அன்றேல் நாம் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் கணனியை முதலில் விட்டுத்தொலைய வேண்டுமென்று தோன்றிக்கொண்டேயிருக்கிறது. அப்படி விடுவதென்பது அடையாளத்தைத் தொலைப்பது மாதிரியும் அறிமுகமற்ற மனிதர்கள் நடுவில் தொலைந்து போவது போன்ற திகைப்பிருளினுள் ஆழ்த்துவதையும் சொல்லித்தானாக வேண்டும்.
சில விடயங்களில் பைத்தியக்காரர்கள் நம்மைவிடத் தெளிவானவர்கள் என்றும் தோன்றுகிறது. (அனானிக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறேன்) களத்தில் யாரோ சண்டை பிடித்தார்கள்; யாரோ செத்துப்போனார்கள்; யாரோ சிறைப்பட்டார்கள்; யாரோ அங்கவீனர்களாக்கப்பட்டார்கள்; யாரோ பசித்திருக்கிறார்கள்; ஒரு உணவுப்பொட்டலத்துக்காக யார் யாரோ வரிசையில் நிற்கிறார்கள்; யாரோ வன்கலவப்பட்டார்கள்; யாரோ வாழ்ந்த வீட்டிலேயே புதைந்துபோனார்கள்; யார் யாரோ இரவுகளில் விம்மி வெடித்து அழுதுகொண்டிருக்கிறார்கள்; யாரோ காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்; யாரோவின் குழந்தை தரையிலடித்துக் கொல்லப்பட்டது; யாரோ… யாரோ… நாம் இணையத்தில் பம்மாத்துக் காட்டிக்கொண்டிருக்கிறோம். முன்னமே ஒத்திகை பார்த்துக் காயப்படாமல் பொருதும் குத்துச்சண்டை வீரர்களினுடையதைப் போன்ற பொய்மை நம்மிலும் இருக்கிறது. ஆதவனோடு முரண். ஷோபா சக்தியோடு சண்டை. குணாளனோடு முறுகல். அவர்களுக்கெல்லாம் நான் ஆகாதவள். புலியெதிர்ப்பாளர்களுக்கெல்லாம் புலி ஆதரவாளர்கள் வெத்துவேட்டுக்கள். வெண்ணை வெட்டிகள். புலி ஆதரவாளர்களுக்கோ புலியெதிர்ப்பாளர்கள் துரோகிகள். கத்தியினால் கீறிப் பிளக்கும் வலியை விட அதிகமாகத்தான் இருக்கிறது வார்த்தைகளால் கீறுவதும் கீறப்படுவதும். எத்தனை இலகுவாகக் கட்சி பிரிகிறோம். எத்தனை இலகுவாக குத்தி முறிகிறோம். கோடை மண்டைக்குள் அனலை ஊற்றுகிறது. சொற்களில் நெருப்புத் தெறிக்கிறது. ஆளற்ற வீட்டில் பெருகும் விஷ ஜந்துகள் போல வன்மம் வளர்கிறது.
எல்லோருக்கும் ஏதோவொன்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. எழுத்து, இசை, காதல், காமம், பணம், இசம்… ஏதோவொரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடத் தோன்றுகிறது. ஒரு தேசாந்திரியாக எங்கோ ஒரு கிராமத்தில் பசுங்கதிர்கள் அசையும் அழகைப் பார்த்துக்கொண்டு வரம்பில் அமர்ந்திருக்கும்போது, ‘தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது?’என்ற கேள்வி எழப்போகிறதா என்ன?
தமிழில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு இருநூறு பேர் எழுதுகிறோம். அதிகபட்சமாக ஒரு பத்தாயிரம் பேர் படிப்பார்களாயிருக்கும். அதிலும் கவிதை படிப்பவர்கள் ஆயிரத்துக்கும் குறைவு. ஐந்நூறு பிரதிகள் போட்டால் இழுத்துப் பறித்துத் தீர்வதிலிருந்து தெரிகிறது கவிதையின் ‘சீத்துவம்’ அந்த இருநூறு பேருக்குள் எத்தனை குழுக்கள். போட்டா போட்டிகள். வட்டங்கள், சதுரங்கள், முக்கோணங்கள். ‘அவன் அவளோடு படுத்த கதை’கள். ‘அவள் அவனோடு குடித்த கதை’கள். ‘பிடித்து ஆடிய இடுப்பில் இருக்கிறதா கட்டுடைப்பு’என்ற நையாண்டிகள்.
இதையெல்லாம் தாண்டி வாழ்க்கை இருக்கிறது. தெருவில் நடந்துபோகும் ஒருவனை நிறுத்தி “நீ சூரியன் தனித்தலையும் பகல் வாசித்திருக்கிறாயா?”என்றால், ‘தப்பி வந்துட்டியா’என்பதுபோலத்தான் பார்ப்பான். வாழ்நாளில் ஒரு கவிதைகூட வாசித்திராமல், ஒரு எழுத்தாளப் பெருமக்களின் பெயரும் பரிச்சயமில்லாமல், அரசியலே பேசாமல் கோடானுகோடிப் பேரின் வாழ்க்கை நகர்ந்துகொண்டுதானிருக்கிறது. அவர்களுக்கு அடையாளங்கள் வேண்டியிருக்கவில்லை. சாமரங்கள், பல்லக்குகள், வாரிசு அறிவித்தல் தடாலடிகள் அவசியமாகவில்லை.
ஓட்டங்கள் எல்லாம் சூனியத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டன. விவாதங்கள் பொருளற்றுக் கரைவதைப் பார்க்கமுடிகிறது. இப்போது வேண்டியது சுயவிமர்சனமன்றி வேறில்லை. நிலவெறிக்கும் ஒரு இரவில் தனித்த கரையில் கட்டப்பட்டிருக்கும் ஓடம்போல சின்னத் தளம்பலாகத் தளம்பிக்கொண்டிருக்கிறது மனம். அது ஓயவேண்டும். ஒரு பளிங்குபோல துலங்கவேண்டும். அதுவரையில் உலகத்தை வேடிக்கை பார்க்கலாம்; ஒரு குழந்தையின் விழிகளோடு.