12.28.2007

வார்த்தைகளுடன் வாழ்தல்

சிறுவயதிலிருந்து நாம் எத்தனை ஆயிரம் வார்த்தைகளோடு பரிச்சயம் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப்பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறது. அவையெல்லாம் நாளாந்த வாழ்வில் பிரயோகிக்கப்படாமல் மனதின் ஆழத்தில் வாழ்ந்துகொண்டுதானிருக்கும். வாசிப்பவர்களின் மனம் என்பது ஏறக்குறைய ஒரு அகராதி போல. அல்லது சொற்களின் கிடங்கு எனலாம். யவனிகா ஸ்ரீராமின் வார்த்தைகளில் சொல்வதானால் மனமொரு ‘சொற்கள் உறங்கும் நூலகம்’என்றுகூடத் தோன்றுகிறது. சொற்களின் உறக்கத்தைக் கலைத்துப் பேசவைக்கிற உத்தி கைவரப்பெற்றவர்களே எழுத்தாளர்களாகக் கவனிக்கப்படுகிறார்கள்.

அண்மையில், அ.முத்துலிங்கம் அவர்களின் ‘வியத்தலும் இலமே’என்ற நேர்காணல் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நேர்காணல்கள் உள்ளடக்கப்பட்ட தொகுப்பு அது. அதில் இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாம் விரும்பி ‘வாசிப்பது’அகராதியையே என்று குறிப்பிட்டிருந்தார்கள். புதிய வார்த்தைகளோடு அறிமுகம் செய்துகொள்கிறவனால் (இந்த ‘ன்’ விகுதியை விலக்குவதெப்படி…? வாசகர்களுக்கு அதுவே பழகிப்போனதால் அந்த லயத்தைத் திசைமாற்றி குறுக்கீடு செய்ய விரும்பாது ‘ன்’ இலேயே தொடர்ந்து இந்த ‘ள்’ ஆனவள் எழுதிக்கொண்டு போகிறேன்.) தேய்ந்த வழக்காறுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புதியதோர் உலகத்தைத் தரிசிக்கவும், தான் கண்டுணர்ந்த பேரொளியை வாசகர்களின் மனங்களில் ஒரு சிறு சுடராகவேனும் ஏற்றவும் முடிகிறது.

‘எழுதிய மறுகணம் அந்தப் படைப்பு இறந்துவிடுகிறது’என்பது எத்தனை உண்மை. உள்ளுக்குள் ஊடாடிக்கொண்டிருக்கும்வரைதான் அதற்கு உயிர் இருக்கும். அதை இறக்கிவைத்தவுடன் எழுதியவனைப் பொறுத்தளவில் அந்த உன்னதம் அழிந்துபோகிறது. நேசத்திற்குரிய குழந்தையைப்போல எண்ணத்தைச் சுமந்துகொண்டிருக்கும்வரை அதனோடு எவ்வளவு பேசிக்கொண்டிருந்தோம். சரி, தவறு என விவாதித்துக்கொண்டிருந்தோம். படைப்பாக இறக்கிவைத்தவுடன் நேற்றின் துயர் போல அதுவும் கரைந்துபோய்விடுகிறது. அந்த வெற்றிடத்தை வேறொன்று இட்டு நிரப்புகிறது. தெளிந்த சிந்தனையுடைய எவராலும் தங்கள் எழுத்தை ‘நன்றாயிருக்கிறது’என்று கட்டித்தழுவிக்கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. எழுதியவனுக்கே பிடிக்காமற் போய்விடும் எழுத்தை மற்றவர்கள் கொண்டாடும்போது ‘ஏமாற்றுகிறோமே…’என்றொரு உறுத்தல் எழுதலே இயல்பு. ஒவ்வொரு எழுத்தாளனுமே ஒரு படைப்பை அதன் முழு உருவத்தோடும் வீச்சோடும் இறக்கிவைக்க முடியாமற் போகும் அயர்ச்சியோடும் ஆற்றாமையோடும்தான் இந்த வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொள்கிறான் என்று தோன்றுகிறது.

‘அது தன்னையே எழுதிக்கொண்டது. நான் அதற்கொரு கருவியாக இருந்தேன்’என்று சொல்வது மிகைப்படுத்தலல்ல. ஒப்பனை வார்த்தையுமல்ல. நாற்காலியை நோக்கித் தன்னை இழுத்துச் சென்று அதில் பொருத்திக்கொள்வதுதான்; எழுதுபவர்களுக்குக் கடினமானதெனத் தோன்றுகிறது. பேனாவால் எழுதுவதோ தட்டச்சுவதோ எதுவானாலும் உட்கார்ந்து கையை வைத்த சில நிமிடங்களுக்கு ‘விளையாடப் போகிறேன்’ என்று அடம்பிடிக்கும் குழந்தையைப் போல எழுத்து சிணுங்கிக்கொண்டிருக்கும். பிறகு நடப்பதுதான் விந்தை! பிறகு வேறொரு உலகம்… வேறு மனிதர்கள்… வேறு இசை…. அந்த மாயக்குழலோசையைத் தொடர்ந்து நாமறியாத வீதிகளில் நடந்துகொண்டிருப்போம். என்றோ நாம் சந்தித்த மனிதர்களுடன் பேசத் தொடங்குகிறோம். அவர்கள் பேசத் தவறியதைப் பேசத் தூண்டுகிறோம். அல்லது அவர்கள் வழியாக நாம் பேசுகிறோம். எம்முள் புதையுண்டிருக்கும் நகரங்கள் உயிர்க்கின்றன. உறைந்தவை யாவும் சலனமுறத் தொடங்குகின்றன. காட்டின் இருள், கடலின் ஆழம், இரவின் இரகசியம் போல அந்தக் குரல் நமக்கே புரிபடாத வசீகரத்துடன், புதியதொரு மொழியில் பேசுகிறது. அதை மொழிபெயர்த்து ஒரு சிலரால் எழுதிவிட முடிகிறது. ஒரு தியானத்தைப்போல அதை உணர்ந்துகொண்டிருக்கத்தான் சிலரால் முடிகிறது. என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று சொல்லவும் முடிவதில்லை. காலம் குறித்த பிரக்ஞை அற்றுப்போகிறது. பூட்டிய கதவுக்கப்பால் ஓருலகம் இயங்கிக்கொண்டிருப்பது மறந்துபோகிறது. இயற்கையை மனிதரால் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லையோ எழுத்தும் அத்தன்மையதே.

நதியை வகிர்ந்தொரு படகு போகிறது. போன மறு கணம் சுவடும் இல்லாமல் நீர் கூடிவிடுகிறது. எழுத்துக் கூடிவரும் லயமும் அப்படித்தான். அந்தக் கணத்திலிருந்து நாம் ஒன்றைப் பொறுக்கிக்கொள்கிறோம். கொடுத்துவிட்டு ஒரு துளியும் குறையாத முழுமையுடன் அழகுடன் பொலிவுடன் அது இருந்துகொண்டுதானிருக்கிறது. ‘இந்தக் கருவில் இதை எழுதிக்கொடுங்கள்’என்று யாராவது கேட்கும்போது, சாத்தியமற்றதெனத் தெரிந்தும் மறுக்கமுடிவதில்லை. ஒரு சட்டையைத் தைப்பதுபோலவோ ஒரு அலமாரியைச் செய்வதுபோலவோ அல்ல எழுதுவது. அது தன்னியல்பானது. ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் விதையைப் குப்பையில் வீசிவிடுகிறோம். மண்ணுக்குள் அது தன்னைத் தயார்ப்படுத்துகிறது. மழைக்காகக் காத்திருக்கிறது. வீரியமுள்ளது வேளை வரும்போது மண்ணை முட்டி மோதிக்கொண்டு முளைவிடுகிறது. நாமாக முனைந்து எழுதுவதும், கால நிபந்தனைகள் வழங்கி எவரும் எழுதக் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதுவதும் ‘பிளாஸ்டிக்’காலான செயற்கைத் தாவரம் மாதிரித்தான். அழகிருக்கும். வாசனை இருக்காது. பிறகு உயிரை எங்கேயென்று தேடுவது…? சொற்களைத் தேர்ந்து ஒப்பனை செய்து பார்வைக்கு விட்டுவிடலாம்.(அல்லது விற்றுவிடலாம்) அதற்கு வணிகனுக்குரிய தந்திரமும் சாதுரியமும் போதுமானது. உண்மை தேவையில்லை.

எழுத்தின் இதயம் எந்த மனிதரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சகமனிதர்கள் கைவிடும்போது எழுத்துத்தான் தாங்கிக்கொள்கிறது. ‘என்னை அடி, அணைத்துக்கொள், வதைசெய், வசம்செய், புறக்கணி, கொண்டாடு எதுசெய்தும் உன்னைத் துக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்’ என்று முழுவதுமாகத் தன்னைத் தருகிறது. அதன் தோள்களில் சாய்ந்துகொள்கிறோம். அதன் மடியில் படுத்துக்கொள்கிறோம். ‘என்னைக் கைவிட்டுவிடாதே’என்று கெஞ்சுகிறோம். மெல்லிதயம் கொண்ட அது புன்னகையோடு நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. எல்லாம் எல்லோரும் கைவிட்டுவிட்டபோது கடைசிப் பற்றுக்கோடாக எழுத்தைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை உலகம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று தூற்றுகிறது.

புறவுலகோடு சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களின் கடைசிப் புகலிடம் புத்தகங்கள் அல்லது மரணம் என்றே தோன்றுகிறது. புத்தகங்களை நேசிப்பவர்களை புத்தகங்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது. மனிதர்களை நேசிப்பவர்களை மரணம் மட்டுமே புரிந்துகொள்கிறது. ‘எழுத்து சோறு போடாது’என்று பலரும் சொல்கிறார்கள். அது பெரும்பாலும் உண்மையாகத்தானிருக்கிறது. சோறும் எழுத்தெனும் சொர்க்கமும் அருகருகில் இருப்பது சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர்கள் பாக்கியவான்கள். வேலை என்ற பெயரில் ஒரு நாற்காலியிடமோ அல்லது ஒரு இயந்திரத்திடமோ கையில் சாட்டையோடு உலவும் எசமானர்களிடமோ குறைந்தபட்சம் கடிகாரத்திடமோ நம்மை விட்டுக்கொடுத்துவிட்ட பாவிகளாகத்தான் பெரும்பாலும் உலவவேண்டியிருக்கிறது. ஒருவனின் படைப்புத்திறனை வேலை விழுங்கிவிடுகிறது. அவனுள் ஓடிக்கொண்டிருக்கும் நதி வற்றிப்போகிறது. அவன் காலத்தால் பின்தள்ளப்பட்டு கவனிக்கப்படாது போகிறான்.

“எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் பிளேட்டோ சொன்னதுதான் சரி. நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. அதை மீறி ஒன்றுமில்லை.”

என்று ‘கண்ணாடியாகும் கண்கள்’இல் நகுலன் சொல்லியிருப்பதுபோல கதைகளைத் தேவதைகள் (எனக்கு இந்தத் தேவதை என்ற சொல் பிடிக்கும்)கொண்டுவந்து நம்மிடையே எறிந்துவிட்டுப்போவதில்லை. அவை எமக்குள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்துப் பேச முடிந்தவர்கள் இருக்கிறார்கள். கண்டுபிடிக்கும் முயற்சியில் காணாமற் போனவர்களும் இருக்கிறார்கள். நாம் கண்டுபிடிப்பவர்களா தொலைந்துபோகிறவர்களா என்பதைக் காலம் தீர்மானிக்கும் என்று சொல்லிவிட்டுச் செல்லவே விருப்பம். ஆனால், சந்தர்ப்பங்களும் செல்வாக்கும் காழ்ப்புணர்வும் பக்கச்சார்பும் எழுத்துலகத்தையும் ஆக்கிரமித்திருக்கும் போது அவ்விதம் சொல்லிச் செல்வதில் தயக்கம் இருக்கவே செய்கிறது.

16 comments:

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

//இந்த ‘ன்’ விகுதியை விலக்குவதெப்படி…? வாசகர்களுக்கு அதுவே பழகிப்போனதால் அந்த லயத்தைத் திசைமாற்றி குறுக்கீடு செய்ய விரும்பாது ‘ன்’ இலேயே தொடர்ந்து இந்த ‘ள்’ ஆனவள் எழுதிக்கொண்டு போகிறேன்.//

ஆக, இந்த ஆண் மையச் சமூகத்துக்குப் பழகிப்போன மதிப்பீடுகளின் 'லய'த்தைக் குலைக்காமலேயே, குறுக்கீடு செய்யாமலேயே போவதில் உங்களுக்கு ஆட்சேபணை எதுவும் கிடையாது என்கிறீர்கள்...

Aruna said...

சோறும் எழுத்தெனும் சொர்க்கமும் அருகருகில் இருப்பது சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர்கள் பாக்கியவான்கள். வேலை என்ற பெயரில் ஒரு நாற்காலியிடமோ அல்லது ஒரு இயந்திரத்திடமோ கையில் சாட்டையோடு உலவும் எசமானர்களிடமோ குறைந்தபட்சம் கடிகாரத்திடமோ நம்மை விட்டுக்கொடுத்துவிட்ட பாவிகளாகத்தான் பெரும்பாலும் உலவவேண்டியிருக்கிறது.

எவ்வளவு உண்மை .....பாக்கியவான்கள் வெகு சிலரே ......கடிகாரத்திடம் கடிவாளமிட்டுக் கொண்டவர்கள்தான் நிறைய ..........
அருணா

soorya said...

தங்கள் பதிவு போன்று இதே விடயத்தைப் பலர் சொல்லியிருக்கிறார்கள்.லா.சா.ரா, நகுலன் போன்றோர் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள். சொற்கள், வார்த்தைகள் என்பது மாபெரும் மகத்தான விடயந்தான் நண்பி. அவற்றுடன் வாழ்தல் என்பது.......
ம்..ம்..சாத்தர் சொன்னார், தான் சொற்களின் உலகத்தில் பிறந்தேன் என்று.
வாழுங்கள்.
வாழ்த்துகள்.

தமிழ்நதி said...

வாருங்கள் வியாபகன்! எங்கடா ஆளைக் காணோமே என்று பார்த்தேன்:) ஆம்!ஆண் மையச் சமூகத்தின் மதிப்பீடுகளில் குறுக்கிட விரும்பாத ஒரு காலத்தில் இந்தக் கட்டுரையை எழுதினேன். இப்போதெனில் வேறு மாதிரியிருந்திருக்கும். அதற்கு எனது பஞ்சிதான் காரணமேயன்றி வேறல்ல. 'அஞ்சு நிமிசப் பஞ்சி... ஆறு மாசக் கஞ்சி'என்பார்கள். ஊத்திண்டு போச்சு. இனிப் புலம்பி என்ன?

அருணா!முதற்தடவையாக எனது பக்கம் வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி.

சூரியா!மனிதர்களின் உலகத்தில் வாழ்வதை விட சில சமயங்களில் சொற்களின் உலகத்தில் வாழ்வது எளிதாக இருக்கிறது. அந்தச் சொற்களில் காண்பதும் மனிதர்களேதான். ஆனால், அவர்கள் அச்சிலே இருக்கிறார்கள். அசைவதோ ஆய்க்கினை செய்வதோ கிடையாது:)

சூரியா!என்ன நீங்கள் கூட கண்டுபிடிக்கவில்லை..? இதுவொரு பழைய பதிவு. நட்சத்திர வாரத்தின்போது போட்டது. சிறுகதைகளை சில காலம் 'கண்மறைத்து'வைத்திருக்க வேண்டியேற்பட்டதால், பழையதை உருவி முன்பக்கத்தில் செருகினேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்றுதான் தமிழ்மணத்திற்குத் தொடுப்புக்கொடுத்தேன். வழமையான வருகையாளரின் கண்களையே ஏமாற்றிவிட்டேனா...?

ரசிகன் said...

// எழுதிய மறுகணம் அந்தப் படைப்பு இறந்துவிடுகிறது’என்பது எத்தனை உண்மை. உள்ளுக்குள் ஊடாடிக்கொண்டிருக்கும்வரைதான் அதற்கு உயிர் இருக்கும். அதை இறக்கிவைத்தவுடன் எழுதியவனைப் பொறுத்தளவில் அந்த உன்னதம் அழிந்துபோகிறது.///

அழமான சிந்தனை.. ஆனால் ஒரு மனதிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட சுடர் எத்தனை மனங்களில் சுடர்களை ஏற்றி வைக்கிறது என்பதை மறந்து விடலாகாதுல்லையா?..

ரசிகன் said...

அருமையான ஆய்வு.. நல்லாயிருக்கு..

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

LakshmanaRaja said...

//தெளிந்த சிந்தனையுடைய எவராலும் தங்கள் எழுத்தை ‘நன்றாயிருக்கிறது’என்று கட்டித்தழுவிக்கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. எழுதியவனுக்கே பிடிக்காமற் போய்விடும் எழுத்தை மற்றவர்கள் கொண்டாடும்போது ‘ஏமாற்றுகிறோமே…’என்றொரு உறுத்தல் எழுதலே இயல்பு//
மிக உண்மை .


//பூட்டிய கதவுக்கப்பால் ஓருலகம் இயங்கிக்கொண்டிருப்பது மறந்துபோகிறது

எழுத்தின் இதயம் எந்த மனிதரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சகமனிதர்கள் கைவிடும்போது எழுத்துத்தான் தாங்கிக்கொள்கிறது. ‘என்னை அடி, அணைத்துக்கொள், வதைசெய், வசம்செய், புறக்கணி, கொண்டாடு எதுசெய்தும் உன்னைத் துக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்’ என்று முழுவதுமாகத் தன்னைத் தருகிறது. அதன் தோள்களில் சாய்ந்துகொள்கிறோம். அதன் மடியில் படுத்துக்கொள்கிறோம். ‘என்னைக் கைவிட்டுவிடாதே’என்று கெஞ்சுகிறோம். மெல்லிதயம் கொண்ட அது புன்னகையோடு நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. எல்லாம் எல்லோரும் கைவிட்டுவிட்டபோது கடைசிப் பற்றுக்கோடாக எழுத்தைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை உலகம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று தூற்றுகிறது.

புறவுலகோடு சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களின் கடைசிப் புகலிடம் புத்தகங்கள் அல்லது மரணம் என்றே தோன்றுகிறது. புத்தகங்களை நேசிப்பவர்களை புத்தகங்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது. மனிதர்களை நேசிப்பவர்களை மரணம் மட்டுமே புரிந்துகொள்கிறது. ‘எழுத்து சோறு போடாது’என்று பலரும் சொல்கிறார்கள். அது பெரும்பாலும் உண்மையாகத்தானிருக்கிறது. சோறும் எழுத்தெனும் சொர்க்கமும் அருகருகில் இருப்பது சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர்கள் பாக்கியவான்கள். வேலை என்ற பெயரில் ஒரு நாற்காலியிடமோ அல்லது ஒரு இயந்திரத்திடமோ கையில் சாட்டையோடு உலவும் எசமானர்களிடமோ குறைந்தபட்சம் கடிகாரத்திடமோ நம்மை விட்டுக்கொடுத்துவிட்ட பாவிகளாகத்தான் பெரும்பாலும் உலவவேண்டியிருக்கிறது. ஒருவனின் படைப்புத்திறனை வேலை விழுங்கிவிடுகிறது. அவனுள் ஓடிக்கொண்டிருக்கும் நதி வற்றிப்போகிறது. அவன் காலத்தால் பின்தள்ளப்பட்டு கவனிக்கப்படாது போகிறான்.
///

ஒரு வார்தை விடாமல் உணர்கிறேன்.வாழ்கிறேன்.

விமலா said...

வாழ்வின் கசப்புகளிலிருந்து ஒடி ஒளிந்து கொள்ள,வார்த்தைகளால் எப்போதும் தயராகவே
இருக்கும் குகை..அதிலிருந்து வெளிவரும் கவிதைகள்/படைப்புகள்..இத்யாதி அல்லது அவ்வாறு சொல்லப்படுபவை..உன்னதம் என்று
கொண்டாடும் அதே வேளையில் அவை அபத்தம்
என்ற முகத்திலறையும் யதார்த்தம்..இதுதான்
மிகப்பெரிய irony.. இல்லையா! நதி

manjoorraja said...

தமிழ்,
பழைய பதிவு என்று நீங்கள் சொன்னாலும் பல வரிகள் உண்மையை உரைக்கின்றன. அருணா சொல்வது போல சோறும் எழுத்தெனும் சொர்க்கமும் அருகருகில் இருப்பது சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர்கள் பாக்கியவான்கள். வேலை என்ற பெயரில் ஒரு நாற்காலியிடமோ அல்லது ஒரு இயந்திரத்திடமோ கையில் சாட்டையோடு உலவும் எசமானர்களிடமோ குறைந்தபட்சம் கடிகாரத்திடமோ நம்மை விட்டுக்கொடுத்துவிட்ட பாவிகளாகத்தான் பெரும்பாலும் உலவவேண்டியிருக்கிறது.

எவ்வளவு உண்மை .....பாக்கியவான்கள் வெகு சிலரே ......கடிகாரத்திடம் கடிவாளமிட்டுக் கொண்டவர்கள்தான் நிறைய ..........

அவர்களில் ஒருவனாக

குட்டிபிசாசு said...

//எழுத்தின் இதயம் எந்த மனிதரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சகமனிதர்கள் கைவிடும்போது எழுத்துத்தான் தாங்கிக்கொள்கிறது.//

//புத்தகங்களை நேசிப்பவர்களை புத்தகங்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது. மனிதர்களை நேசிப்பவர்களை மரணம் மட்டுமே புரிந்துகொள்கிறது.//

உண்மையான வார்த்தைகள். புறக்கணிக்கப்பட்டவர்களின் புகலிடம் தான் புத்தகம் என்றால் அது மிகையாகாது. வாழ்த்துக்கள்!!

செல்வநாயகி said...

தமிழ்நதி,

இடைவிடாது வாசித்தாலும் அவ்வப்போதே பின்னூட்டுகிறேன். அதையும் அவ்வப்போது உங்களுக்குக் கொண்டுவந்து சேர்க்காது பிளாக்கர் விழுங்கியும் விடுது போலும்:))

நல்ல பதிவு.

Kasi Arumugam said...

எளிமையான, நேசமான நடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது.
//புதிய வார்த்தைகளோடு அறிமுகம் செய்துகொள்கிறவனால// என்றாலும் பயமுறுத்தாத எளிய சொற்களையே கையாண்டிருப்பது தெரிகிறது. நன்று.

தமிழ்நதி said...

'பொறுக்கி'யாக இருந்து பழகிப்போய்விட்டது. சில நாட்கள் ஊரில் இல்லை. அதனால் பின்னூட்டமிட்டவர்களுக்கு உடனடியாக மறுமொழி சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும்.

"ஆனால் ஒரு மனதிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட சுடர் எத்தனை மனங்களில் சுடர்களை ஏற்றி வைக்கிறது என்பதை மறந்து விடலாகாதுல்லையா?"

உண்மை ரசிகன்! நான் அவ்விதம் நிறைய இடங்களில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், நான் சுடர்களை ஏற்றுவதை விட இருளை மற்றவர்களுக்குள் கடத்துகிற வேலையைத்தான் செய்துகொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியிருக்கிறது. துயர இருள்.

லஷ்மணராஜா!என்னது... கட்டுரையை மீள்பதிவு செய்கிறாற்போலிருக்கிறது :) நன்றி.

விமலா!எழுத்து உன்னதம் என்று கொண்டாடிய காலங்கள் போயின. எல்லாம் அபத்தம் என்று உணர்கிற காலத்துள் வாழ்கிறேன். நமது கருத்தாக்கங்கள் எல்லாம் தனிப்பட்ட வாழ்வு சார்ந்ததுதான் இல்லையா?

மஞ்சூர் ராசா! "கடிகாரத்திடம் கடிவாளமிட்டுக் கொண்டவர்கள்தான் நிறைய ..........
அவர்களில் ஒருவனாக.." மிகக்கொடுமையானது அது. நானும் அனுபவித்திருக்கிறேன். ஒரு கவிதை வரிகூட எழுதவியலாது. மண்டைக்குள் கடிகாரத்தின் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். அதனால்தான் போலும் நம் இருவருக்கும் தெரிந்த ஒருவர் கடிகாரமே அணீவதில்லை:) 'நாம் காலத்தைக் கையில் கட்டிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்; ஆனால் நாம்தான் காலத்தின் கைகளில் கட்டுண்டு ஓடுகிறோம்'என்று யாரோ சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

குட்டிப் பிசாசு!அடிக்கடி வந்து போயிட்டிருங்க... இந்த மனிதர்களோட தொல்லை தாங்க முடியலை:)

"இடைவிடாது வாசித்தாலும் அவ்வப்போதே பின்னூட்டுகிறேன். அதையும் அவ்வப்போது உங்களுக்குக் கொண்டுவந்து சேர்க்காது பிளாக்கர் விழுங்கியும் விடுது போலும்:))"

உண்மையாகவா செல்வநாயகி:) அப்படி வேறு நடக்கிறதா...? சிலவேளை 'ஸ்பாம்'க்குள் கிடக்கும். போய்ப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி. நீங்கள் வருவதேயில்லையோ என்று நினைத்தேன்.

"எளிமையான, நேசமான நடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது."
-காசி ஆறுமுகம்
நன்றி. தன்யளானேன் என்றுதான் சொல்லவேண்டும். உங்கள் வாயால் கேட்பதற்கு.

நளாயினி said...

புறவுலகோடு சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களின் கடைசிப் புகலிடம் புத்தகங்கள் அல்லது மரணம் என்றே தோன்றுகிறது. புத்தகங்களை நேசிப்பவர்களை புத்தகங்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது. மனிதர்களை நேசிப்பவர்களை மரணம் மட்டுமே புரிந்துகொள்கிறது.

mmm..

நளாயினி said...

வீரியமுள்ளது வேளை வரும்போது மண்ணை முட்டி மோதிக்கொண்டு முளைவிடுகிறது. நாமாக முனைந்து எழுதுவதும், கால நிபந்தனைகள் வழங்கி எவரும் எழுதக் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதுவதும் ‘பிளாஸ்டிக்’காலான செயற்கைத் தாவரம் மாதிரித்தான். அழகிருக்கும். வாசனை இருக்காது. பிறகு உயிரை எங்கேயென்று தேடுவது…?

M.Rishan Shareef said...

//எழுத்தின் இதயம் எந்த மனிதரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சகமனிதர்கள் கைவிடும்போது எழுத்துத்தான் தாங்கிக்கொள்கிறது. ‘என்னை அடி, அணைத்துக்கொள், வதைசெய், வசம்செய், புறக்கணி, கொண்டாடு எதுசெய்தும் உன்னைத் துக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்’ என்று முழுவதுமாகத் தன்னைத் தருகிறது. அதன் தோள்களில் சாய்ந்துகொள்கிறோம். அதன் மடியில் படுத்துக்கொள்கிறோம். ‘என்னைக் கைவிட்டுவிடாதே’என்று கெஞ்சுகிறோம். மெல்லிதயம் கொண்ட அது புன்னகையோடு நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. எல்லாம் எல்லோரும் கைவிட்டுவிட்டபோது கடைசிப் பற்றுக்கோடாக எழுத்தைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை உலகம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று தூற்றுகிறது. //

உண்மை மிகச்செறிந்த கருத்தினை மிக எளிதாக,அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் தமிழ்நதி.
நம் தனிமைக்கு உண்மையான தோழனாக எழுத்தைக் கொண்டாடுகிறோம்.ஆனால் இந்தக் காலத்தில் மனிதர்களை நம்புவதை விட நமது எழுத்துக்களையே நம்மால் நம்பிவிட முடியாமலிருக்கிறது.
சில சமயங்களில் எதை எழுத எடுக்கிறோமோ,அல்லது எழுத்தின் மூலம் எதை விவரிக்க எண்ணுகிறோமோ அவையெல்லாவற்றையும் தவிர்த்து எழுத்து ஒரு காற்றைப்போல நம்மை விட்டும் பறந்து சென்று உலகைச் சுற்றிவரும்.பின் அந்த அனுபவங்களைக் கலந்து நாம் தயாராக வைத்திருக்கும் காகிதமோ,தட்டச்சோ எதுவானாலும் அதற்கு வசதியாகப் பதிந்துவிடும்.அவற்றைப் படிப்பவர்களுக்கு அவை மேலும் சுவையூட்டும்.ஆனால் எழுத்தின் சொந்தக்காரனுக்கு/சொந்தக்காரிக்கு 'தான் சொல்ல வந்தததை இன்னும் முழுமையாகச் சொல்லிமுடிக்கவில்லை' என்ற எண்ணமே மேலோங்கும்.
பொதுவாகவே எழுத்தாளர்களுக்கும்,எழுத்துக்கும் இடையிலான மாய உலகம் இப்படியே கடக்கிறது.எனவேதான் எழுத்து பயணிக்கும் திசையெல்லாம் எழுத்தாளர்களும் சென்றுகொண்டிருக்கிறார்கள் ஓர் இனம்புரியா வலியோடும்,சில வார்த்தைகளோடும்...!

விகடனில் உங்கள் வலைத்தளம் பற்றிப் படித்தேன்.மிக மகிழ்ச்சி சகோதரி.
வாழ்த்துக்கள்..!