எல்லா நாட்களும் ஒன்றுபோலில்லை. கடந்த வாரம், மனசில் விழுந்த நெருப்புக்கங்காய் கனன்றுகொண்டேயிருந்தது. ஆதங்கம், பரபரப்பு, ஆற்றாமை, வஞ்சிக்கப்பட்ட துக்கம், பேசப்படுவதனாலாய சிறுபிள்ளைத்தனமான உள்ளார்ந்த கிளர்ச்சி, மின்னஞ்சல் ஆறுதல்கள், ஆலோசனைகள், அனானிகளின் மிரட்டல்கள் எல்லாம் ஏறக்குறைய இன்று ஓய்ந்துவிட்டன. அடிக்கடி உயிர்த்துயிர்த்து அழைத்துக்கொண்டிருந்த தொலைபேசி மறுபடி சடப்பொருளாகிக் கிடக்கிறது. என் பெயரில் அதிகப்பிரசங்கித்து சர்ச்சை வழி அடையாளப்படுத்திய நண்பருக்கும், எனது மறுப்பினை வெளியிட்டு ‘மீள் கருணை’ காட்டிய ஆனந்த விகடனுக்கும் (குறிப்பாக கண்ணனுக்கு) பெயர் குறிப்பிட முடியாத சில நண்பர்களுக்கும், வீழ்ந்துவிடுவேனோ என்று அஞ்சுகிற போதெல்லாம் தாங்கிப்பிடித்து தலைகோதி, தொடர்ந்து எழுதத் தூண்டும் என் சக பதிவர்களுக்கும் நன்றி.
பரபரப்பிற்காளாக்கியவர் தவிர்த்து வேறெவரையும் இழக்காமல் இக்கோடையைக் கடந்தேன் என்பதே எஞ்சியிருக்கக்கூடிய மிகப்பெரிய ஆறுதல். அந்த நேர்காணலை காலம் தாழ்த்தி வாசித்து, விளக்கத்தை அறியாத ஒரு சிலர் இன்னமும் மின்னஞ்சல் வழியாக ‘ஏன் நாயே இப்படிச் சொன்னாய்?’என்ற தொனிப்படக் கேட்கும்போது மட்டும் ரணம் வாய்பிளந்து மூடுகிறது.
பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லைத்தான். எனது பெயருக்கு அருகில் புதிதாக அடைமொழி சேர்ந்திருக்கக்கூடும். ஏதோவொரு மதுச்சாலையில் எல்லா அரசியலும் பேசி ஓய்ந்த கணமொன்றில் யாரோவொருவரால் எனது பெயர் குறிப்பிடப்பட்டு ஆரம்பிக்கப்படும் உரையாடலில் ‘ஆனந்த விகடன்’என்ற பத்திரிகை குறிப்பிடப்படுவதற்கான சாத்தியங்கள் அநேகம். நியாயம்-அநியாயம், அறம்-கயமை, சுதந்திரம்-வன்முறை என்பதன் பொருளெல்லாம் அவரவர் அளவுகோல்களின்படி மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஓங்கியிருக்கும் கையின் அளவினதாயிருக்கிறது அறம்.
16.04.08 திகதியிடப்பட்ட விகடனில் 177ஆம் பக்கத்தில் ‘நான் என்ன சொன்னேன்’என்ற தலைப்பின் கீழ் எனது விளக்கம் வெளியாகியிருக்கிறது. விகடன் அதைப்பற்றி என்ன நினைக்கிறது என்பதையும் தெரியப்படுத்தினால் நன்று என நினைத்தேன். ஆனால்,எனது மறுப்பைப் பிரசுரிப்பதே விகடனின் பெருந்தன்மையையும், வருத்தத்தையும் உணர்த்துவதற்குப் போதுமானதாயிருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’, ‘இந்தளவில் திருப்தி கொள்’, ‘மற்றவர்களுக்கு இதுகூடக் கிடைக்கவில்லை’என்றெல்லாம் சொல்லப்பட்டன. சரிதான்!ஓரளவு நீதி கிடைத்தது என்று ஒதுங்கவேண்டியதுதான். ‘அதுவுமில்லை’ என்று கைவிரித்தாலும் மேற்கொண்டு செய்வதற்கொன்றுமில்லை. பல சமயங்களில் வாளாதிருக்க விதிக்கப்பட்ட வாழ்வெமது.
நேர்காணல் வெளியாகியதும் இரண்டு நிலைப்பாட்டுடன் தொலைபேசி அழைப்புகள் வந்தன. “நன்று சொன்னீர்கள்”என்றவர்கள் ஒருபுறம். “எப்படி இப்படிச் சொல்லப்போயிற்று?”என்றவர்கள் மறுபுறம். “நான் சொல்லவில்லை”என்ற சுயபுராணம் கேட்டதும் “அதுதானே நீங்கள் அப்படிச் சொல்லக்கூடியவரில்லையே….”என்றார்கள்.
விகடன்.காம் இல் வந்து கருத்துத் தெரிவித்த சிலர் “நீங்கள் சென்னையிலேயே வாழ்ந்துகொண்டு எப்படிச் சென்னையைப் பற்றி குறைத்துச் சொல்லலாம்?”என்று கேட்டிருந்தார்கள். இன்று காலையில் வந்த மின்னஞ்சலில்கூட
I WOULD APPRECIATE IF YOU CAN ATLEAST CLARIFY YOUR POINT OF VIEW WITHOUT AFFECTING OR OFFENDING TAMIL WRITERS AND CHENNAI.
என்றும்
BEING IN CHENNAI AND TALKING ILL OF CHENNAI IS NOT GOOD COURTESY.
என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தவிர,அனானியாக நிறைய மிரட்டல்கள் வந்தன. அதன் சாரமானது "அகதி நாயே! உன் ஊருக்கு ஓடிப்போ"என்பதாக அமைந்திருந்தது. அவற்றை நண்பர்கள் கேட்கும் பட்சத்தில் பிரசுரிக்கவியலும். இதற்கெல்லாம் நான் மிரண்டு போய்விடவில்லை. என்றாலும், சுகதுக்கம் கடந்த பரமாத்மாவில்லை இது. அதை வாசிக்கும் கணத்தில் காரணமற்றுப் பாதிக்கப்படும் வேதனை பொங்கியது. என்னை இவ்வாறான இக்கட்டில் சிக்கவைத்து ஏதோவொரு இலாபம் தேடவிளைந்த நபரின் கண்களைப் பார்த்து 'திருப்தியா?'என்று கேட்கத் தோன்றுகிறது.
"சென்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?"என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் “நிம்மதியான உறக்கம், உணவு, அமைதியாக எழுதக்கூடிய சூழல். ஆனால், சென்னை என்பதும் ஒரு வேடந்தாங்கல்தான். எங்கோ தொலைவில் இருக்கும் வீட்டிற்குத் திரும்புவதற்கான காத்திருப்பு, ஏக்கம் மனதுள் எப்போதுமிருக்கிறது.”என்ற எனது பதிலை, இக்கோடை விழுங்கித் தொலைத்ததா நானறியேன். எனது வலைப்பூவில் இடப்பட்டிருந்த 'சென்னை என்றொரு வேடந்தாங்கல்'என்ற கட்டுரையிலிருந்து உருவியெடுக்கப்பட்ட ஒரு சில வாக்கியங்களே விடையாக அமைந்திருக்கக் கண்டேன். "அவளது கணவன் இறந்துபோய்விட்டான். பிள்ளைகள் பசியில் கதறின. வேறு வழியின்றி அவள் திருட வேண்டியதாயிற்று. அவள் இப்படித்தான் திருடியானாள்"என்றொரு பந்தியின் முதற்பகுதியை நீக்கிவிட்டு கடைசி வார்த்தையை எடுத்துக்கொண்டால் "அவள் திருடி"என்றே வரும். இத்தகைய கைங்கரியத்தைத்தான் என்னை நேர்கண்டவர் செய்திருக்கிறார்.
"நான் பாதிக்கப்பட்டேன்", "மன உளைச்சலுக்குள்ளானேன்", "திரிக்கப்பட்ட வார்த்தைகளால் விரோதிகளைப் பெற்றுக்கொண்டேன்"என்றெல்லாம் புலம்புவது வெறுத்து, சலித்துப் போய்விட்டது. சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான்.
எல்லாப் புனிதங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றபோதிலும், எழுத்தின் மீது இன்னமும் மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அது கண்ணுக்குப் புலப்படாத அறத்தின் இழையால் இயக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். தொழில் என்று பார்த்தால்-கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் காட்டிலும், கடத்தல் செய்வதைப் பார்க்கிலும் எழுதுவது ஏதோவொரு வகையில் பெருமிதந் தரத்தக்கதே. எழுத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் பத்திரிகையாளர்கள் தங்கள் வயிற்றையும் வசதிகளையும் மட்டும் கருத்திற்கெடாது, சக மனிதர்களின் இதயங்களையும்(மனசு இதயத்தில் இருக்கிறதெனில்)கவனத்திற் கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம்;வேண்டுகோள். செவ்வி வழங்குபவர்களும் இனி கூடுதல் அவதானத்தோடு இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
பிற்குறிப்பு: பதிவின் நீளம் கருதி, வாசிப்பவர்களை சலிப்பிற்காட்படுத்த மனமின்றி என்னால் தட்டச்சி அளிக்கப்பட்ட ‘உண்மையான’செவ்வியையும், விகடனில் வெளியாகியிருந்த எனது மறுப்பையும் இதில் போடவில்லை.