1.26.2010

வீடு


சிறுவயதில் வீடு என்பதன் பொருள் உறவுகளாகவே இருந்திருக்கிறது. அதற்கொரு பெறுமதி உண்டென்பதையோ, சமூக மதிப்பீட்டின் அளவுகோலாக வீடுகள் இருக்கக்கூடுமென்பதையோ அறியாதிருந்தேன். பெரிய இரும்புக் கதவுகளையும் உயரமான சுற்றுமதில்களையுமுடைய விசாலமான வீடுகளின் உள்ளறைகளில் யாரெல்லாம் வசிப்பார்கள் என்று, அந்த வழிகளால் கடைதெருவுக்குப் போகும்போது யோசித்துக்கொண்டே போவேன். அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறவர்களின் வீடுகளும் பாடசாலைகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பன. தோழர்களும்கூட.

அதற்கிணங்க, அப்பா வேலை இடமாற்றம் பெற்றுப் போகும் இடங்களுக்கு எங்களது பாடசாலையும் வீடும் பெயர்ந்துகொண்டே இருந்தன. அந்தப் புதிய இடத்துக்கு அப்பாதான் முதலில் போவார். திரும்பிவந்து அவ்வூருக்குப் போவதன் அனுகூல-பிரதிகூலங்களைப் பற்றி இரவுகளில் அம்மாவோடு கதைப்பதைக் கேட்டபடி மெல்ல மெல்ல உறக்கத்திலாழ்வது நினைவிலிருக்கிறது. அதன்பிறகு வீட்டுத் தளபாடங்கள், ட்ரங்குப்பெட்டிகள், அப்பாவின் புத்தகங்கள் அடங்கிய மலத்தியோன் பெட்டிகள், பாய்கள், வாளிகள், தும்புத்தடி இன்னபிற சாமான்கள் பயணப்படும். கடைசியாக அம்மாவும் நாங்களும் அப்போது வளர்த்துக்கொண்டிருக்கும் பூனை அல்லது நாயும் போய்ச்சேர்வோம். புதிய வீடு பற்றிய எனது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏறி விளையாடுவதற்கும் ஒளிந்துகொள்வதற்கும் மரங்கள் இருக்க வேண்டுமென்பதற்கப்பால் சென்றதில்லை. வளர்ந்த பிறகு, மரங்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பு மாறியிருந்தது. மழை பொழியும் மாலைகளில் யன்னல் வழியாகத் தெரியும் மரங்கள் இனம்புரியாத கிளர்ச்சியைத் தூண்டுவனவாக, சிருஷ்டித்துக்கொண்ட கற்பனாவுலகில் சஞ்சாரம் செய்ய உதவுவனவாக இருந்தன.

வாழ்ந்த வீடுகளில் எப்போதும் மறக்கமுடியாத பசுமையோடிருப்பது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள திருவையாறு என்ற கிராமத்தில் வயல்நடுவில் அமைந்திருந்த ஒரு குடிசை. நினைக்கும்போதெல்லாம் அந்த வயல்கள் மனதுள் சிலிர்த்து அடங்குகின்றன. பிலாக்கொட்டைக் குருவிகளும் புளினிகளும் செம்போத்தும் இன்னுமின்னும் பெயர்தெரியாத பறவைகளும் பறக்கின்றன. பன்றிகள் கிழங்கு தேடிக் கிளறிய வேர்களின் வாசனை காற்றில் மிதந்துவருகிறது. நீலமும் பச்சையும் அளவெடுத்துக் கலந்த நிறத்தில் அள்ளித்தெளித்த புள்ளிகளையுடைய தோகைமயிலொன்று வந்து காலெடுத்து ஆடிச்சுழன்றுவிட்டு, எறியும் தானியங்களை ஒயிலாகத் தலைதாழ்த்திக் கொத்தித்தின்கிறது. அன்றைக்கு வெளியிலும் குடிசையினுள்ளும் பெய்த மழை இன்னமும் நின்றபாடில்லை. அந்த இளம் வயதில், பொத்தல்கள் விழுந்த கூரையினூடே மினுங்கிக்கொண்டிருந்த நிலவு கிளர்த்திய துயரத்தின் பாடல் இடையறாது இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

சொந்தவீடு வேண்டுமென்ற ஏக்கத்தை வெறியாக மாற்றியவர் இப்போது இந்த உலகத்தில் இல்லை. அவர் அன்று கொட்டிய வார்த்தைகளோவெனில் சாகாவரம் பெற்றவை. நினைக்கும்போதெல்லாம் சுயவிரக்கத்தைத் தூண்டுபவை. பணக்காரர்-ஏழைகள் என்ற இரண்டு வர்க்கங்கள் உலகில் இருப்பதை, அறியாச்சிறுமியொருத்தி அறிந்துகொண்ட நாளது. அப்போது இந்திய அமைதி காக்கும் படையினர் (?) ஈழத்தில் நிலைகொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கும் அமைதி காக்கும் படையினருக்கும் இடையில் போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. யாழ்ப்பாண நகரப் பகுதியை விட்டுப் பெயர்ந்து சொந்தக் கிராமத்திலுள்ள உறவினர் வீடொன்றின் வாசற்படியில் கால்வைத்தபோது, “ஹவுஸ் புல்”என்றொரு கொடிய வார்த்தை எங்களை ஓடஓட விரட்டியது. திரையரங்குகளில் பாவிக்கப்படும் ‘ஹவுஸ் புல்’என்ற வார்த்தையை வீடொன்றில் கேட்டது அன்றுதான் முதற்தடவை. அன்று நானும் எனது பெற்றோரும் கண்ணீர் வழியப் படியிறங்கி வேறிடம் தேடிப் போனோம்.

“அம்மா! எங்களுடைய ஊரில் எங்களுக்கு மட்டுமேன் சொந்தவீடில்லை?”என்ற என் கேள்விக்கு அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தா. அவவின் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் சிதறிவிழுந்தன.

ஏழைகள் அகதிகளும் ஆவதைப் போன்ற கொடுமைக்கு இணையான துயரம் வேறில்லை. அந்நாட்களில் பணக்காரர்கள் கையில் காசோடும் நகைகளோடும் தற்காலிக தங்குமிடங்களை நாடிப்போகக்கூடிய அளவுக்காவது போரின் முன்னிமித்தங்களை ஊகிக்க முடிந்தது. இப்போதோவெனில் போர் சமரசம் உலாவும் இடமொன்றை உற்பத்தி செய்திருக்கிறது.

இன்று வன்னியிலிருந்து பலவந்தமாகப் பெயர்க்கப்பட்டிருக்கும் மக்களின் நினைவில் இனி ‘வீடு’என்ற பதத்தின் பொருள் எதுவாக இருக்கும்? வீடு என்று அவர்கள் எதை அழைத்தல் கூடும்? எஞ்சியிருக்கும் சுவரையா? முற்றமென அடையாளம் கண்டுகொண்ட இடத்தில் மிஞ்சியிருக்கும் ஒற்றை மரத்தையா? சுவரும் மரமும்கூட இல்லாத வெளியையா? காணிகளைப் பிரிக்கும் எல்லைக் கல்லையா? அவசரத்திற்குப் பிணங்களைப் புதைத்து வந்த இடத்தில் பின்னாளில் அடையாளம் கண்டுபிடிக்கவென நாட்டி வைத்துவிட்டு வந்த கல்லையா? வெங்காயப் பாத்திகளென உப்பி சிதைந்த உடல்களை உள்ளடக்கியிருக்கும் மண்மேடுகளையா? அகதிமுகாம்களில் விளையாடும் குழந்தைகளின் மனதில் வீடு என்னவாக இருந்துகொண்டிருக்கிறது?

உலகமெல்லாம் அகதிகளாக அலைந்து திரிபவர்களின் வீடு உண்மையில் எங்கே இருக்கிறது? புகலிட தேசங்களில் வங்கிக் கடனில் வாங்கி தவணைமுறையில் செலுத்தும் கட்டுப்பணத்தில் சிறுகச்சிறுக நமதாகிக்கொண்டிருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் வீடுகள் உண்மையில் நமதேதானா?

ஐந்தாண்டுகளுக்கு முன் நான் அற்புதமான கனவொன்றைக் கண்டேன். பேருந்தில் தொலைநகரங்களுக்குப் பயணப்படும் வழிகளில் எதிர்ப்பட்ட வீடுகளையெல்லாம் கண்களுக்குள் தேக்கிவைத்துக்கொண்டேன். கொஞ்சநாட்களுக்கு கூரைகளும் முகப்புகளும் பளிங்குக்கற்கள் பதிக்கப்பட்ட அறைகளும் மட்டுமே எனது கனவில் வந்தன. ‘சொந்த ஊர்’என நாம் நினைத்திருந்த ஊர்கள் பேரினவாதத்தினால் சீட்டுக் கட்டுக்களைப் போல கலைத்துப்போடப்பட்ட பிற்பாடு, சொந்த ஊர் என வரித்துக்கொண்ட ஓரிடத்தில் வீடு கட்டும் வேலை ஆரம்பித்தது. அந்நாட்களில் சரியாக உறங்குவதில்லை. நள்ளிரவில் எழுந்திருந்து போய் “இந்த இடத்தில் கழிப்பறைப் பீங்கான் வரும். இந்த இடத்தில் தண்ணீர்க்குழாய் வரும். இந்த இடத்தில் படிகள் வரும். இந்த இடத்தில் சாமி மாடம் வரும்”என்று கற்பனித்தபடி அமர்ந்திருப்பேன். காற்றும் காலுரசும் பூனைக்குட்டியும் மட்டுமே அந்த இரவுகளில் எனக்குத் துணையிருந்தன. ஈற்றில் அந்தந்த இடத்தில் எல்லாம் அமைந்தன. மல்லிகையும் லசந்தராவும் தேமாவும் மாவும் பலாவும் செவ்விளநீரும் நெல்லியும் அம்பறலங்காய் மரமும் துளிர்த்தும் பூத்தும் காய்த்தும் சிரித்தன. ‘படியேறாதே’என்று ஒருகாலத்தில் விரட்டப்பட்ட ஏழை இளவரசி கண்ட கனவு கண்ணெதிரில் கல்லடுக்காய் நிமிர்ந்தது.
பிறகு மீண்டும் போர் வந்தது. துப்பாக்கிகள் துரத்தும் கனவுகள் வந்தன. கனரக டாங்கிகள் வந்தன. பேரிரைச்சலோடு நிலம்நோக்கித் தலைகுப்புறத் தாவி உயிர்கொத்தும் விமானங்கள் வானத்தில் திடும்மென்று முளைத்தன. நாங்கள் மீண்டும் தூரதேசங்களுக்குப் போனோம்.

எங்கோ வெகுதொலைவில் இப்போதும் இருக்கின்றன எங்களது வீடுகள். நாடேயற்றவர்களுக்கு வீடுகள் இருப்பது ஒருவகையில் முரண்நகையாகவே தோன்றுகிறது. அந்தரத்தில் தொங்கும் வீடுகள் அவை. பிரிந்துபோனவர்களின் நினைவிலூறிய கண்களைக் கொண்ட வீடுகள் வாசலை வெறித்துக்கொண்டிருப்பதாக, ஊருக்குப் போய் உயிரோடு திரும்பி வரமுடிகிறவர்கள் கதைகதையாகச் சொல்கிறார்கள். ஐதீகக் கதைகளைப் போல ஆகிக்கொண்டிருக்கின்றன மீள்திரும்ப முடியாத வீடுகளைப் பற்றிய கதைகள்.

--
குறிப்பு: இந்தக் கட்டுரையை http://ponguthamil.com/ என்ற இணையத்தளத்திற்கே எழுதிக்கொடுத்தேன்.இக்கட்டுரை ஏற்கெனவே பொங்குதமிழில் பிரசுரமாகியிருந்தது.எனது வலைப்பூவில் மீள்பிரசுரம் செய்வதற்காகத் தேடியபோது சரியான முகவரி கிடைக்கவில்லை. கூகுலில் தேடியபோது http://eelam.net/ என்ற இணையத்தளத்தில் இக்கட்டுரை இடம்பெற்றிருக்கக் கண்டேன்.நான் அதை எப்படிப் புரிந்துகொண்டேனென்றால், 'பொங்குதமிழ்'என்ற பெயரில் ஏதோ சிக்கல் இருந்த காரணத்தால் இணையத்தளத்தின் பெயரை மாற்றிவிட்டார்கள் என்று. பொங்குதமிழ் இணையகாரர்கள் எனக்குத் தனிப்பட்ட முறையில் மடல் அனுப்பியபிறகுதான் எனது தவறு புரிந்தது.தவறான இணையத்தளத்திற்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டமைக்காக பொங்குதமிழிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

வருத்தங்களுடன்
தமிழ்நதி

10 comments:

Unknown said...

தமிழ், //புதிய வீடு பற்றிய எனது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏறி விளையாடுவதற்கும் ஒளிந்துகொள்வதற்கும் மரங்கள் இருக்க வேண்டுமென்பதற்கப்பால் சென்றதில்லை. வளர்ந்த பிறகு, மரங்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பு மாறியிருந்தது. மழை பொழியும் மாலைகளில் யன்னல் வழியாகத் தெரியும் மரங்கள் இனம்புரியாத கிளர்ச்சியைத் தூண்டுவனவாக, சிருஷ்டித்துக்கொண்ட கற்பனாவுலகில் சஞ்சாரம் செய்ய உதவுவனவாக இருந்தன.//
ரசனையுடன் ஆரம்பித்த இக்கட்டுரையை வாசித்து முடித்ததும் மனதை கனக்கச் செய்துவிட்டது. உன் வீட்டைப் பற்றிய கனவு ஈடேறிவிட்டதைப் போல நாட்டைப் பற்றிய கனவும் நிச்சயம் நனவாகிவிடும் தமிழ். உன் வீட்டில், உனதாய் எப்போதும் இருக்கும் உன் நாட்டில் நாமெல்லாம் ஒன்றாய் அமர்ந்து நிலா சோறு சாப்பிடலாம், இது என் கனவும் கூட. கைவிடாமல் அவற்றை நினைவில் நிறுத்திக் கொண்டேயிருப்போம் எனில், கனவுகள் வசப்படும் தமிழ்.

சமீபத்திய உன் கட்டுரைகள் யாவும் செறிவானதும் வாசிக்க வாசிக்க உணர்வெழுச்சியடையச் செய்வதுமாய் இருக்கின்றது தமிழ். தொடர்ந்து எழுது. எழுத்தின் மூலம் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்துவோம்.

Sai Ram said...

வீடுகள் என்பது எப்போதும் ஒரு கனவு போல தான். ஒன்று கடந்த காலத்தை கொண்டிருக்கும். அல்லது எதிர்கால எதிர்பார்ப்பாக இருக்கும். நிகழ்கால வீடுகள் வாழும் காலத்திலே திருப்தியை தருவது சற்று அரிது தான் என்று நினைக்கிறேன்.

ஹவுஸ் புல் என்று வீட்டிற்கும் சொல்ல வைத்த மனித மனங்களை அப்படி குரூரமாய் மாற்றிய போரினை என்ன வார்த்தைகளால் திட்டுவது என தெரியவில்லை.

போர் என்பது மேல்தோலை பிரித்தெடுத்து உள்ளே உள்ள விகாரத்தை வெளியே காட்டும் கொடூரம் என மட்டும் புரிகிறது.

*இயற்கை ராஜி* said...

//ஓரிடத்தில் வீடு கட்டும் வேலை ஆரம்பித்தது. அந்நாட்களில் சரியாக உறங்குவதில்லை. நள்ளிரவில் எழுந்திருந்து போய் “இந்த இடத்தில் கழிப்பறைப் பீங்கான் வரும். இந்த இடத்தில் தண்ணீர்க்குழாய் வரும். இந்த இடத்தில் படிகள் வரும். இந்த இடத்தில் சாமி மாடம் வரும்”என்று கற்பனித்தபடி அமர்ந்திருப்பேன்//


மனதைப் படம் பிடித்திருக்கிறது இவ்வரிகள்:-(

*இயற்கை ராஜி* said...

அருமை

ஈரோடு கதிர் said...

வாசித்து விட்டேன்.... கனத்த மனதோடு

KarthigaVasudevan said...

//திரையரங்குகளில் பாவிக்கப்படும் ‘ஹவுஸ் புல்’என்ற வார்த்தையை வீடொன்றில் கேட்டது அன்றுதான் முதற்தடவை. அன்று நானும் எனது பெற்றோரும் கண்ணீர் வழியப் படியிறங்கி வேறிடம் தேடிப் போனோம். //

சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று அச்சப்படும் சூழல்களில் இதுவும் ஒன்று.

//புகலிட தேசங்களில் வங்கிக் கடனில் வாங்கி தவணைமுறையில் செலுத்தும் கட்டுப்பணத்தில் சிறுகச்சிறுக நமதாகிக்கொண்டிருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் வீடுகள் உண்மையில் நமதேதானா? //

புகலிடம் தேடி வந்தவர்கள் என்றில்லை ... இதே கேள்விகளை வங்கிக்கடன் மூலம் தவணை முறையில் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக் கொண்ட மக்கள் அநேகம் பேரிடமும் கேட்கலாம் தமிழ்நதி.'எல்லாம் எனதே' எனும் பிடிவாதம் ஒரு புறம் 'எதுவும் உனக்கில்லை ' எனும் நிர்தாட்சண்யம் மறுபுறம்,வாழ்ந்த அடையாளங்களை மிச்சப் படுத்த எதையேனும் விட்டுச் செல்ல வேண்டும் என்னும் மனதின் ஆற்றாமை தான் வீடோ!!!

அதென்னவோ எப்படியிருப்பினும் வீடு என்பது 'பிரியம் சமைக்கும் கூடு' என்று யாரோ பாடியதைப் போல வீடு சார்ந்த நம் நினைவுகள் எப்போதுமே உணர்வு வயப்பட்டவை.'மாற்றம்' மட்டுமே நிலை எனில் சொந்த நாட்டில் சொந்த ஊரில் நிம்மதியாய் வாழ்தல் என்பதும் நிகழும்.நம்பலாம்.

Anonymous said...

யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் 'வீடு' என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. அத்தொகுப்பின் பெயர்கொண்ட சிறுகதை பிடித்திருந்தது. ஆசிரியர் பெயர் சரியாய் ஞாபகமில்லை.

-----------------

உங்கள் இடுகை அருமை.

-வசந்தன்.

Unknown said...

அம்மா, யதார்த்தமான நடை, கண்கள் பணித்து விட்டன, நண்பர்கள் கூறுவதைப்போல் எப்போதும் நான் விரைந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவதும் உண்மை, சிலகாலமாக ஈழம் பற்றி படிப்பதையே நிறுத்தி விட்டேன், இன்றோ முழுமையாக முடிக்காமல் இருக்க இயலவில்லை.

தமிழ்நதி said...

உமா,

"உன் வீட்டைப் பற்றிய கனவு ஈடேறிவிட்டதைப் போல நாட்டைப் பற்றிய கனவும் நிச்சயம் நனவாகிவிடும்" என்று சொல்லியிருந்தாய். அதெல்லாம் ஆவுற மாதிரி இல்லை என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். நம் காலத்தில் அது நடக்காது என்றே தோன்றுகிறது.

"சமீபத்திய உன் கட்டுரைகள் யாவும் செறிவானதும் வாசிக்க வாசிக்க உணர்வெழுச்சியடையச் செய்வதுமாய் இருக்கின்றது தமிழ்."

அப்படியா? (இதை பிதாமகனில் சூரியா கேட்ட விதத்திலும் வாசிக்கலாம்) எல்லாம் சகவாசந்தான் தாயி:)

சிறீராம்,

நீங்கள் சொன்னது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. வீடுகள் என்பவை இறந்தகாலத்தோடு அல்லது எதிர்காலத்தோடு தொடர்புடையவை என்பதைத்தான் சொல்கிறேன். ஆம் நாம் வாழ்ந்த வீடுகள் அன்றேல் வாழப்போகும் வீடுகள் பற்றிய ஞாபகங்கள் மற்றும் கனவுகளில் வாழ்கிறோம். நிகழ்காலத்தில் வாழ மறுப்பது ஒருவகையில் திருப்தியற்ற மனதின் வெளிப்பாடே.

நன்றி இயற்கை.(உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது. பின்னூட்டமிட்டதற்கான ஐஸ் இல்லை)

நன்றி ஈரோடு கதிர். மனதைக் கனக்க வைக்கக்கூடாதென்றே நானும் நினைக்கிறேன். ஆனால், சந்தோஷிக்கவைக்கும்படியாக எழுதமுடியவில்லை.

கார்த்திகா,

"வாழ்ந்த அடையாளங்களை மிச்சப் படுத்த எதையேனும் விட்டுச் செல்ல வேண்டும் என்னும் மனதின் ஆற்றாமை தான் வீடோ!!!"

ம்.. எல்லாம் அப்படித்தான் கார்த்திகா. நாம் தனித்த அடையாளங்களுடன் வாழ விரும்புகிறோம். இந்த உலகத்தில் எம்மைப் பற்றி எதையாவது விட்டுச் செல்ல விரும்புகிறோம். எல்லாம் 'நான்'இன் வேலைதான்:)எழுதுவதும்கூட.

நன்றி வசந்தன்.

'தோழர்'என்ற சொல் பற்றிய உங்கள் மடலுக்கு இன்னும் பதில் எழுதவில்லை. உறுத்தலாகவே இருக்கிறது. வீடு என்பது வீடு மட்டுமில்லைத்தானே...

சுபதினம் ஈஸ்வர்,

நன்றி. முதன்முதலில் எனது வலைப்பூவிற்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஈழம்... பொய்யாய் பழங்கனவாய் போனது காண் என்று பெருமூச்செறிந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

சின்னப்பயல் said...

ராஜா சார் இசையில பாலுமகேந்திராவோட 'வீடு'பார்த்தா மாதிரி இருக்கு...அருமை...