6.19.2010

கவிஞர் கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்களை’முன்வைத்து…

எழுத நினைத்ததற்கும் எழுதிமுடித்ததற்கும் இடையில் நிற்கிறது எவராலும் அவிழ்க்கமுடியாத எழுத்தின் புதிர். எழுதுபவர் தெரிந்தே இழக்கும், ஆனால் நினைத்தாலும் கையகப்படுத்தவியலாத இடம் அது. இந்த அழகிய தோல்வியை வாசிப்பவர் உணர்ந்திடா வண்ணம் நீரோட்டத்தை வகிர்ந்துவலிக்கும் துடுப்பாய் செலுத்திச் செல்வது அற்புதமானதொரு கலை. அந்தக் கலையை கலாப்ரியாநினைவின் தாழ்வாரங்கள்இல் வெளிப்படுத்தியிருக்கிறார். பால்யம் மற்றும் விருத்தெரிந்த இளம்வயது ஞாபகங்களின் தொகுப்பே இந்நூல். உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய விருதுகளில், இந்நூல் இவ்வாண்டின் உரைநடைக்கான விருதினைப் பெற்றிருக்கிறது. இந்நூலைப் பரிந்துரைத்த பிரபஞ்சன் அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘அன்பின் ஈரம் படரும் தமிழ் வசனம் கலாப்ரியாவுடையது’.

பாராட்டை மட்டுமே விரும்புகிற சாதாரணனாகிய நான்என்று தனது முன்னுரையில் கலாப்ரியா குறிப்பிட்டிருப்பது நினைவிலிருக்கிறபோதிலும், ஓருண்மையைச் சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு கவிஞராக கலாப்ரியாவைப் பிடித்ததைவிடநினைவின் தாழ்வாரங்கள்இல் உரைநடையாளராக அதிகமும் பிடித்தது. ஐந்தாறு புத்தகங்களை ஒரே நேரத்தில் வாசித்துக்கொண்டிருக்கிற பலரில் நானும் ஒருத்தி. நடைவரண்ட, ஆனால் படித்தேயாகவேண்டுமென என்னை நானே நிர்ப்பந்திக்கிற புத்தகங்களை வாசித்து முடிக்க மாதக்கணக்காகும். நாவல்களோவெனில் அவற்றின் பருமன்பொறுத்து சில வாரங்கள் எடுக்கும். கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்களைக் கையில் எடுத்தபிறகு, போகும் வரும் இடமெல்லாம் அந்த நினைவன்றி வேறில்லை. அதுவொரு புதினம் இல்லை; அறிவியல், அரசியல் கட்டுரையும் இல்லை; இருந்தும் அது என்னைத் தொடர்ந்தது. அன்றேல் அதை நான் தொடர்ந்துகொண்டிருந்தேன். ‘கவிதைகளின் வழி நாமறிந்த ஒருவரின், அறியக்கிடைக்காத தனிப்பட்ட வாழ்வினைப் பேசும் எழுத்துஎனும் ஈர்ப்பினால், நினைவின் தாழ்வாரங்களைத் தொடர்;ந்திருக்கக்கூடும். மனிதமனம் அப்படித்தான் அவாவும்போலும். மேலுக்கு எளிய சொல்முறைபோல் தோற்றமளிப்பினும் துயரமும் எள்ளலும் தூவிய வசீகர நடை அது. வியப்பென்னவெனில், எள்ளலுக்கு நகைத்துவிடமுடியாதபடி அதன் பின்னொளிந்திருக்கும் துயரமும் - துயரத்தில் ஒரேயடியாக மூழ்கிவிடமுடியாதபடி முன்னகர்த்திச்செல்லும் பகிடியும் இணைந்த சீர்சரடாய்ப் போய்க்கொண்டிருந்ததுதான். தன்வரலாறும் அக்காலகட்டத்தின் சமூகவரலாறும் ஒருங்கிணைந்து வெளிப்பட்ட எழுத்து அது. இன்னொருவகையில் கூறினால், கலாப்ரியா என்ற தனிமனிதரின் கண்களினூடாக சுற்றவரவுள்ள சமூகத்தைக் காட்சிப்படுத்தும் கலையென்றும் சொல்லலாம்.

ஒரு குடும்பத்தின் கடைசிப்பிள்ளை, எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகன், தி.மு..வின் ஆதரவாளன், விடலைப்பருவம் கொண்டலைக்கிற சேட்டைக்காரன், அழகிய பெண்களின் மகாரசிகன், குற்றவுணர்வும் கர்வமும் இரக்கமும் சமவிகிதத்தில் கலந்த சகோதரன், அத்யந்த தோழன் அனைத்திற்கும் மேலாக பின்னெழுதவிருந்த கவிதைகளுக்கான காட்சிகளை முன்னரே மனசுள் சேமித்துவைத்திருந்த மென்மனசுக்காரன் எனப் பல முகங்கொண்ட சோமுவாகிய கலாப்ரியா எங்கேயும் தன்னைத் துருத்திக்கொள்ளாதவராக, பிரசங்கிக்காதவராயிருந்தது தனிச்சிறப்பு. கனவான்களாக எந்நிலையிலும் தம்மைக் காண்பித்துக்கொள்ளாதவர்களே உண்மையான கனவான்களாகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் கதையேநினைவின் தாழ்வாரங்கள்’. சேரகுளம் சின்னப்பண்ணையாரின்(கலாப்ரியாவின் அப்பா) குடும்பம் பெரிய வீட்டிலிருந்து சின்னவீட்டுக்குப் பெயர்ந்து (இந்நூலில்சின்னவீடுகள் நிறையவே இடம்பெற்றிருக்கிறபோதிலும், இது உண்மையாலுமே சின்னவீடு), அண்டாக்கள், ஜாடிகள், படங்கள், கண்ணாடிகள், ரேடியோ, சட்டகங்கள், இரும்புப்பெட்டி எல்லாமும் விற்றுச் சாப்பிட்டுத் தீர்க்கும் நிலைக்குக் கீழிறங்குவதே சாரம். ‘காலமாற்றத்தில், நிலவுடைமைசார்ந்த, செல்வவளமுள்ள ஒரு குடும்பத்தின் சிதைவே இந்நூலின் மையப்படிமம்என்கிறார் தன்னுரையில் ஷங்கர்ராமசுப்ரமணியன்.

நிலங்களை மையங்கொண்டமைந்த கதைகள் மனதில் நிலைத்துவிடுகின்றன. திருநெல்வேலியில் புதுமைப்பித்தன் இருந்தார். வண்ணநிலவனும் வண்ணதாசனும் விக்ரமாதித்தனும் தமயந்தியும் கலாப்ரியாவும் இன்னும் பலரும் இருக்கிறார்கள். நாம் கண்ணால் பார்த்திராத நெல்லையப்பர் கோவிலின் பிரகாரத்தில் அவர்கள் நம்மை நடத்திச் செல்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரின் குளிர்ச்சியை நம்மீது அள்ளித் தெளிக்கிறார்கள். அமர்ந்து அமர்ந்து வழுவழுப்பாகிவிட்ட திண்ணைகளைப் போல, எழுதி எழுதி மேலும் மெருகேறிவிட்டிருக்கக்கூடும் திருநெல்வேலிக்கு. தி.ஜா.காட்டிய கும்பகோணத்திலும் வண்ணநிலவன், வண்ணதாசன் காட்டுகிற திருநெல்வேலியிலும் இன்னுந்தான் கால்பதிக்க இயலவில்லை என்ற குறை எப்போதும் உளது.

அநேகமாக படிக்கிற புத்தகங்களில் எல்லாம் நம்மைத்தான் தேடுகிறோம் என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் நம்மில் ஒரு கூறையேனும் கண்டடைய முடிகிற பிரதிகள் நமக்கு நெருக்கமாக அமைந்துவிடுகின்றன. நினைவின் தாழ்வாரங்களில் நான் நெகிழ்ந்து மனங்கரைந்த இடங்களில் பெண்களே இருக்கிறார்கள்.

பால்வற்றிப்போன தாய்மாரின் குழந்தைகளுக்கு அலட்டிக்கொள்ளாமல் முலையூட்டும்- சேலைக் கனமா அழுக்குக் கனமா என்று யோசிக்கத் தூண்டும், மகேந்திரனின் தாய்- தன் கணவனும் வேறொரு பெண்ணும் அவளது கணவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கணவன் இறந்தபிற்பாடு அவரது பெட்டியில் கண்டு கண்கலங்கும் அம்மா- எவனோ ஒரு பெட்டிக்கடைக்காரனால் வல்லுறவுக்காளாக்கப்பட்ட காரணத்தால் கணவனால் தள்ளிவைக்கப்பட்டு, பிள்ளைப்பாசத்துக்காக ஏங்கும் தாய்- தங்கையின் கல்யாணத்துக்காக காசுசேர்த்து முடிந்ததும் கன்னியாஸ்திரியாகப் போய்விடுவதாகச்சொன்ன ஜெசிந்தா- எதிர்மாறாக, ஜெசிந்தாவுக்குக் கல்யாணமாகிவிட, வாழ்வின் குரூரமான அலைக்கழிப்பில் கன்னியாஸ்திரியாகக் கரையொதுங்கிவிட நேரும் அதே தங்கை மெர்வின்- வெள்ளத்தோடு அள்ளுண்டுபோகவிருந்த பசுவைக் காப்பாற்றிக் கரைசேர்த்த, பசுவின் பின்கால் பருமன்கூட இல்லாத சருகுக்கிழவி- அத்தை மகன் வந்துபோவதை அனுமதிப்பதற்காக கணவனிடம் கயிற்றால் அடித்தண்டம் பெறும் பத்மா- செக்கச்சிவந்த சிறுபெண்ணாகப் பார்த்த சில ஆண்டுகளின் பின் அதிபோகத்தால் தேமல் விழுந்து உருச்சிதைந்து போதையில் தள்ளாடியபடிகாசு போட்டுண்டி தேவடியாளேஎன்று மூக்கம்மாளிடம் கத்தும் பொன்னம்மே- கையில் ஆலங்கட்டியும் கண்ணில் நிறைவேறவியலாத கனவுமாய் நின்ற ரேவதி- கனத்த சங்கிலிகளும் மூக்குத்தியுமாய் நின்ற கோலம் போய் வீடு வீடாக அப்பளம் விற்றுப் பிழைக்குமளவு வக்கற்றுப்போய், ‘நீராவது ஆத்துப்பக்கம் வாருமே..’என்று வறுமைக்குரலில் அழைத்த காமாட்சியாரையும் மறக்க முடியவில்லை. அந்தப் பெண்கள் அக்காலச் சமூகத்தைக் கண்ணாடிகளாகப் பிரதிபலித்த உயிர்ச்சாட்சியங்கள். ஒவ்வொரு பெண்ணும் மனசைக் கலங்கடிக்கவல்ல அவலச் சிறுகதைகளுக்கு நாயகியராகக் கூடிய பாத்திரவார்ப்புகள். வாழ்வியந்திரமும் ஆண்களும் சப்பித் துப்பிய சக்கைகள்.

ஒரு குடும்பத்தின் சரிவு வழி நொருங்கும் சார்புமனிதர்களையும் நினைவின் தாழ்வாரங்களில் காணமுடிகிறது. எண்ணெய்ச் செட்டியார், பாத்திரத்தில் பெயர்பொறிப்பவன், கண்ணாடிக்கு ரசம் பூசுகிற குறவர்கள்கொஞ்சநாட்களுக்கு நினைவின் பாதைகளில் அலைந்து திரிந்துகொண்டிருப்பார்கள்.

இதைப் படிக்கிறபோது எப்போதுமுள்ள ஏக்கம் எழுந்தடங்கியது. ஆண்களின் உலகம் ஒப்பீட்டளவில் மிக விரிந்ததென்று தோன்றியது. திருமணம் முடிந்து போகும்வரையிலான கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையில் என்ன அற்புதங்கள் நிகழ்ந்துவிடல் கூடும்? மரப்பாச்சி பொம்மைகள், கூட்டாஞ்சோறு, சில்லுக்கோடு, கோவில், கொஞ்சம் பார்வைகள், மிஞ்சி மிஞ்சிப் போனால் தோழிகளோடு எப்போதாவது போகக்கிடைக்கும் திரையரங்குஅவ்வளவுதான்!

கவிஞர் கலாப்ரியாவுக்குள் இத்தனை குசும்பு இருக்குமென்று முன்னர் அறிந்திருக்கவில்லை.

நாம ரயில்ல ஏறினா, நம்ம விதி இஞ்ஜின்ல ஏறி நமக்கு முன்னேயே ப்ளாட்பாரத்தில இறங்கி நிக்கிது

புள்ளை முழிக்கிறது பேளறதுக்குத்தாண்டோய்

என்றெல்லாம் வாசிப்பின் இடையில் சிரிப்பைத் தூவி வைத்திருக்கிறார் கலாப்ரியா. லாரி விபத்தில் இறந்துபோன அண்ணனை எரியூட்டித் திரும்பும்போது எதை அவர் நேசித்தாரோ அதன்வழியே மரணத்தையும் நினைத்துப் பார்க்கிறார்.

ஆழி அலையாழி, பனி தீராத வீடு என்று மலையாளப் படங்களாக நினைவுக்கு வந்தன. ‘ஓரிடத்து ஜனனம், ஓரிடத்து மரணம்என்று ஜேசுதாஸ் குரல் கேட்டது. ‘துலாபாரம்நினைவுக்கு வந்தது.”

வாழ்வும் சிதைவும் ஆறும் ஊரும் ஜனனமும் மரணமும் நட்பும் பிரிவும் எழுதிய விரல்களால் காதலை எழுத இயலவில்லை. நினைவின் தாழ்வாரத்தில் ஓரிரு வரிகளில் முகங்காட்டியதன்றி, மழைக்கோ வெயிலுக்கோ ஒதுங்கவில்லை சசி.

எல்லாவற்றையும் எழுதமுடிந்த விரல்களை, எழுதமுடியாதபடிக்கு நடுக்குற வைக்கும் தீராத்தாபமோ இழந்த காதல்?

நன்றி: அம்ருதா

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

தமிழ் அக்கா நீங்கள் நெல்லை பார்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன், இல்லையெனில் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய மாவட்டங்கள் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் .

கண்டிப்பாக நெல்லை நகரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கி நகரை, மக்களை, நீரை, உணவை உணர்து பாருங்கள்.

பதிவு மிக அருமை.

Unknown said...

வாங்கி வைத்திருக்கும் புத்தகத்தை உடனே படிக்கச் சொல்கிறது உங்களின் இந்தப் பதிவு தமிழ்நதி. நன்றி.

Dhanaraj said...

Already read it in Amrudha.
I have bought the book. I have not started reading it.

ராஜா சந்திரசேகர் said...

தமிழ்நதி
நெகிழ்வான உங்கள் பதிவு புத்தகத்தின் மீது ஒரு அன்பை உருவாக்கி விடுகிறது.உடனே வாங்கி படித்துவிட வேண்டும்.நேர்த்தியான உங்கள் எழுத்துக்கு நன்றி.

senthil said...

இம் அருமையான விமர்சனம் அக்கா ,,,.... கஊடியவிரைவில் பாருங்கோல் அனைவரும் தங்களுடைய படைப்புகளை எடுத்துக்கொண்டு தங்களிடம் வரிசையில் வந்து நிற்க போகிறார்கள் ,... படித்து விமர்சனம் எழுதுமாறு .....
படிப்பது ., எழுதுவது தவிர வேற என்ன என்ன வேலை செய்வீர்கள் வீட்டில் ?

சின்னப்பயல் said...

"எங்கேயும் தன்னைத் துருத்திக்கொள்ளாதவராக, பிரசங்கிக்காதவராயிருந்தது தனிச்சிறப்பு." நல்லாருக்கு,,,:-)