10.19.2013

எழுத்தெனும் குற்றமும் கருத்துக் கொலையாளிகளும்...


ஒளி புகாதபடி
எல்லாச் சாளரங்களையும் அடைத்தாயிற்று
கதவிடுக்குகளிலும் கறுப்பு நாடாக்கள்
நாட்பட்ட பிணங்களின் துர்க்கந்தத்தை
சுழன்று மூடுகிறது சாம்பிராணிப் புகை
எஞ்சிய மனிதரின்
கண்களிலிருந்து காட்சிகளும்
உதடுகளிலிருந்து சாட்சிகளும்
உருவப்பட்டுவிட்டன

இருளின் ஒளியில் எல்லாம் படு சுத்தம்!
ஒரேயொருவன் மட்டும்
ஓலங்கள் நிறைந்து வழியும் தோள்பையோடு
தப்பித்துப் போயிருக்கிறான்

மார்ச் 09, 1933, ஜேர்மனி- ‘நேர் வழி(The Straight Path) என்ற பத்திரிகை அலுவலகத்தினுள் ஹிட்லரின் நாஜிக் கும்பல் புயல்வேகத்தில் நுழைகிறது. பத்திரிகை ஆசிரியர் பிரிட்ஸ் கேர்லிச் இன்கடைசி எழுத்தைஅச்சியந்திரத்திலிருந்து பிடுங்கியெறிகிறது. கண்மண் தெரியாமல் அவரை அடித்துத் துவம்சம் செய்கிறது. பிறகு அங்கிருந்து அவரை இழுத்துச் செல்கிறது. அரசியற் கைதிகளுக்கான கடூழியத் தடுப்பு முகாமொன்றில் அவர் ஓராண்டுக்கும் மேலாக அடைத்துவைக்கப்படுகிறார்.   ஜூலை 30, 1934அன்று, நூற்றுக்கணக்கான அரசியற் கைதிகளுடன் அவரும் படுகொலை செய்யப்படுகிறார். அவர் கொல்லப்பட்டுவிட்ட செய்தியை பிரிட்ஸ் கேர்லிச்சின் மனைவி ஷோபிக்கு நாஜிக்கள் புதுமையான முறையில் அறிவிக்கிறார்கள். அதாவது, அந்தப் பத்திரிகை ஆசிரியரின் இரத்தம் தோய்ந்த மூக்குக் கண்ணாடி (சிறப்பாக இரும்பு விளிம்புகளையுடையது.) கொல்லப்பட்டவரின் மனைவிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
அவர் செய்த குற்றம், ஹிட்லரையும் அவரது அட்டூழியம் நிறைந்த நாஜி விசுவாசிகளையும் விமர்சித்து தனது பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்ததேயாகும்.

சற்றேறக்குறைய
எழுபத்தாறு ஆண்டுகள் கழித்து, 2009 ஜனவரி 08ஆம் திகதி காலை 10:30. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த கொழும்பின் புறநகர்ச் சாலையொன்றில் அந்த மனிதர் தனது வாகனத்தில் அலுவலகம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். கறுப்பு நிறத்தில் உடையணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் அவரை வழிமறித்து குண்டுகளைத் தீர்க்கிறார்கள். பிறகு நிதானமாக திரும்பிச் சென்று சாலையின் கூட்டத்துள் கலந்து மறைகிறார்கள். எவ்வளவு நேர்த்தியாக, பாதுகாப்பாக, எளிதாக அந்தக் கொலையை அவர்கள் செய்தார்கள்! பாதுகாப்பின் கயிறு இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்டிருந்த கொழும்பு மாநகரின் இராணுவச் சாவடிகள் ஏதொன்றிலும் அந்தக் கொலைஞர்கள் வழிமறிக்கப்படவில்லை. ‘எழுதினால் கொல்லப்படுவாய்என்ற எச்சரிக்கை வாசகத்தோடு மலர்வளையத்தையும் சில நாட்கள் முன்னதாக லசந்தவுக்கு வழங்கிச் சென்றவர்கள் சொன்னபடியே செய்து முடித்தார்கள். ‘சன்டே லீடர்பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் பிரபலமான ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான லசந்த விக்கிரமதுங்கவால் எழுதப்பட்டு, அவர் கொலையுண்ட பின் வெளியாகிய ஆசிரியர் தலையங்கமானது ஒரு மரணசாசனத்தின் வரிகளைக் கொண்டிருந்தது. “இறுதியாக நான் கொல்லப்படுவேனாகில், அரசே அந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கும். லசந்தவைப் போன்று இலங்கை அரசின் எண்ணவோட்டத்தை மிகத்துல்லியமாகக் கணித்திருந்த ஊடகவியலாளன் வேறெவரும் இருக்கமுடியாது. அந்த ஆசிரியர் தலையங்கமானது, ஹிட்லரின் அட்டூழியங்களுக்கெதிராகக் கருத்துக்கூறிய காரணத்திற்காக நாஜிப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு எட்டாண்டுகள் கடுஞ்சித்திரவதைக்காளாக்கப்பட்ட, மார்ட்டின் நேய்மொல்லரின் மிகப் பிரபலமானமுதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்என்ற கவிதையோடு முடிந்திருந்தது. 
கருத்தின் குரல்வளையை கரகரவென்று ஈவிரக்கமற்று அறுக்கும் கொலைப்பாரம்பரியத்தின் ஆயுள் நீண்டது. மனித வரலாற்றில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் கழுத்தில் கத்தியாக விழுந்திருக்கிறது அதிகாரங்களுக்கு அஞ்சாத எழுத்தும் பேச்சும்.

ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறையின் தோற்றுவாய்:
இலங்கையின் ஆட்சியதிகாரம் ஆங்கிலேயரின் கைகளிலிருந்து பெரும்பான்மை சுதேசிகளின் கைகளுக்கு மாற்றிக்கொடுக்கப்பட்ட 1948ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மையினர் திட்டமிட்ட ஒடுக்குமுறைக்கு ஆளாகிவந்துள்ளனர். சிறுபான்மையினர் மட்டுமல்லாது ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த, எதிர்ப்புக் குரலெழுப்பிய பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களும் அதிகாரத்தின் கைகளில் பலியுயிர்களாக்கப்பட்டே வந்துள்ளனர். ஆகவே, சுதந்திர இலங்கைக்கும் ஊடக ஒடுக்குமுறைக்கும் வயது ஒன்றெனலாம்.  சிங்களப் பேரினவாதமானது சிறுபான்மைத் தமிழர்களை 1958,1977,1983எனத் தொடர்ந்து இனக்கலவரங்களுடாக  அழித்தொழித்து வந்திருக்கிறது. அடக்குமுறைக்கு வலுச்சேர்ப்பதற்காக அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை அக்காலகட்டங்களில் ஆட்சியிலிருந்த அரசுகள் கொண்டுவந்தன. 1971 மற்றும் 1988-1989 காலகட்டங்களில் இடம்பெற்ற ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சியின்போது அந்த ஒடுக்குமுறைக்கு பெரும்பான்மை சிங்களவர்களும் தப்பவில்லை. ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சியை நசுக்குவதற்கென்றே பிரேமதாச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டஒப்பரேசன் கம்பைன்ஸ்என்ற இராணுவ உட்பிரிவின் மூலமாக பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கான சடலங்கள் மிதந்தன. மன்னம்பெரி போன்ற பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டார்கள். சோசலிச புரட்சிகர சிந்தனைகளை முன்வைத்து அதிகாரத்திற்கெதிராகப் போராடக் கிளம்பிய ஜே.வி.பி.யானது இன்று பாராளுமன்ற அரசியலில் பிரவேசித்து குறிப்பிடத்தக்க அரசியல் சக்திகளுள் ஒன்றாக வளர்ச்சியடைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2009 மே மாதத்தில் இந்த நூற்றாண்டின் மனிதப் பேரவலம் என்று சொல்லப்படுகிற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையானது இந்தியசீன உதவியுடன் மகிந்த ராஜபக்ஷ அரசினால் நிகழ்த்தி முடிக்கப்பட்டது. ஏறத்தாழ 1,50,000 தமிழர்கள் கொல்லப்பட்டும் காணாமற்போயும் சிறைப்படுத்தப்பட்டும் இனக்கபளீகரம் செய்யப்பட்டனர். தமிழ்மக்களின் ஒரே அரணாக அதுகாறும் இருந்துவந்த விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வாளேந்திய சிங்கக்கொடி தகத்தகாயமாய் பறந்துகொண்டிருக்கிறது.
ஆக, ‘சுதந்திர’த்திற்குப் பிறகான இலங்கைத்தீவின் வரலாறானது ஒடுக்குமுறையின், படுகொலையின் வரலாறாகவே எழுதப்பட்டிருக்கிறது. அவ்வகையில், ஐக்கிய தேசியக் கட்சியாயினும் சரி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாயினும் சரி மக்கள்விரோத சக்திகளாகவே செயற்பட்டுவந்திருக்கின்றன. சிறுபான்மை இனச்சிக்கலைப் பொறுத்தளவிலோ ஆட்சி மாற்றங்கள் அடிப்படை மாற்றங்களுக்கு இட்டுச்சென்றதேயில்லை. படுகொலைகள் மிக வெளிப்படையாகவே நடந்தேறிய போதிலும், ஒப்புக்கு எனினும் உலகின் கண்களில் தன்னையொரு ஜனநாயக நாடாக, புத்தனின் நெறிமுறைகளைப் பின்பற்றுமொரு நாடாகக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம்  நடப்பு அரசுக்கு இருக்கிறது. கொலைபடாது எஞ்சிய தமிழர்களை அச்சுறுத்தலின் மூலமும், பெரும்பான்மை சிங்களவர்களைஐக்கிய இலங்கைமற்றும் வெற்றிபெற்ற இனம் என்ற பெருமிதத்தின் மூலமும் கையாண்டுவரும் அரசைப் பெரிதும் உறுத்துவது, சில ஊடகங்களில் வெளியிடப்படும் உண்மைகளேயாகும். ‘போர் நடக்கும் பிரதேசங்களில் முதலில் கொல்லப்படுவது உண்மையே’என்பது இலங்கை விடயத்திலும் சரியாகவே பொருந்திவருகிறது.

“2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மகிந்த, தனது முதலாவது உரையில், ‘ஊடகங்கள் போருக்கு எதிராக என்ற பெயரில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால், அரசாங்கம் அதற்கான சந்தர்ப்பத்தினை ஒருபோதும் வழங்காது’என்றார். அவரது குரல் தரும் செய்தி மிகத் தெளிவானது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒரேயொரு உண்மை மட்டுமே உண்டு. அதாவது, தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அல்லது அதற்கு இணையான தரப்பிலிருந்து வரும் செய்தி மட்டுமே உண்மையானது என்பதே அது.”என்று இலங்கையின் தற்போதைய நிலையை விளக்கியுள்ளார் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பின் ஆரம்ப கர்த்தாவும் செயற்பாட்டாளருமான சுனந்த தேசப்பிரிய.

ஆக, ஆட்சியமைத்த காலத்திலிருந்து ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறையானது அரசின் முதன்மைத்திட்டங்களில் ஒன்றாக அமைந்திருப்பது புலனாகிறது.

செய்திகளைக் கண்காணிக்கும் ‘பெரியண்ணன்’கள்:
 சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்கு காட்டும்.”என்று, லசந்த விக்கிரமதுங்க தனது இறுதிக் கடிதத்தில் எழுதினார். ஆனால், இலங்கையைப் பொறுத்தளவில் ஊடகவியலாளர்கள் அரசைத் திருப்திப்படுத்தும் செய்திகளை மட்டுமே எழுத முடிந்தவர்களாக, சுயதணிக்கைக்குத் தம்மை உட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள்.  இவர்கள் தவிர்த்து அரசோடு ஒத்தோடக்கூடிய கூட்டமொன்று உண்டு. அத்தகையோர்  இந்தவணிகத்தின் வழி தம்மைச் செழுமைப்படுத்துபவர்களாக நீடித்திருக்கிறார்கள். இலங்கை பொருளாதார சுபிட்சத்தில் கொழிக்கிறது என்றும், அங்கு சிறுபான்மை இனத்தவர்கள் சரிசமமாக நிறைந்து வழியும் உரிமைகளோடு நடத்தப்படுகிறார்கள் என்றும், முள்ளிவாய்க்காலிலோ அதற்கு முந்தைய காலங்களிலோ ஒரு கொலைதானும் அந்த மண்ணில் நிகழ்த்தப்படவில்லை என்றும் செய்திகளை அள்ளி வீசுபவர்கள் அத்தகையோரே!

இலட்சியவாதத்தினை
அடிப்படையாகக் கொண்டியங்கவேண்டிய பத்திரிகைத் துறையானது குற்றவுணர்வின்றி சர்வாதிகாரத்திற்குத் துணைபோகும் துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறது.  இத்தகு கீழ்நிலையில், உயிராபத்தை உணர்ந்தும் உண்மைக்காகப் போராடக்கூடிய ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையானது விரல்விட்டு எண்ணிவிடத்தக்க அளவுக்குச் சொற்பமானது.

சிங்கள ராவயபத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணிபுரியும் லசந்த ருகுனுகே சொல்கிறார்:
சரியான தகவல்களை வெளியிடுவதென்பது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது

லசந்த
பலிகொள்ளப்பட்ட பிற்பாடுசன்டே லீடர்இன் ஆசிரியப் பொறுப்பை ஏற்றிருந்த பிரெட்ரிகா ஜான்சும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டோரின் நேரடி அச்சுறுத்தல்களாலும் அநாமதேயமான கொலைமிரட்டல்களாலும் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்திருக்கிறார். அண்மையில் அவர் அமெரிக்காவைச் சென்றடைந்து அங்கு தஞ்சம் கோரியிருப்பதாக, செய்திகளிலிருந்து அறியமுடிகிறது.  மகிந்த சாம்ராஜ்ஜியத்தின் மனிதவுரிமை மீறல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டார் என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். குறிப்பாக, இறுதிப்போரின்போது வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக்கொல்லுமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய உத்தரவிட்டதாக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேர்காணலொன்றின்போது தன்னிடம் தெரிவித்ததாக தலைப்புச் செய்தியொன்றை வெளியிட்ட காரணத்திற்காக அரசின் கடுங்கோபத்தை இவர் சம்பாதித்துக்கொண்டார்.

புலம்பெயர்ந்த
பிற்பாடுஎல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்புக்கு  வழங்கிய செவ்வியில் அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை விலைக்கு வாங்குகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரெட்ரிகா ஜான்ஸ் அவரது செவ்வியில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.“90 வீதமான இலங்கை மக்கள் நான் இறந்துபோவதையோ கொல்லப்படுவதையோ விரும்புகிறார்கள் என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய என்னிடம் கூறினார்.”
 பதிப்பாசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகையாசிரியர்களாகிய எங்களைப் போன்றோர் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரசன்னமாகியிருக்கும்காலையுணவு கூட்டம்என்று விளிக்கப்படும் ஒன்றுக்கு அழைக்கப்படுவது வழக்கமாயிருந்தது. அங்கு சனாதிபதியானவர் போதைப்பொருள் தாதா (Drug Lord) போல அமர்ந்திருந்து சொல்லும் வார்த்தைகள் மிகுந்த அபத்தமும் அநியாயமும் நிறைந்தவை. என்போன்ற ஓரிருவர் தவிர்த்து அங்கு சமூகமளிக்கும் ஊடகவியலாளர்களும் பதிப்பாளர்களும் பத்திரிகையாசிரியர்களும் சனாதிபதியை கேள்விகள் கேட்கத் துணிவற்றவர்களாக ஊமைகள் போல வாய்மூடியிருப்பதை அவதானித்திருக்கிறேன். கூட்டத்தின் முடிவில் அவர்கள் தமதுசன் சைன் ரிப்போர்ட்களை எழுதுவதற்காகப் புறப்பட்டுப் போவார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செய்திகளின் மீதான இருட்டடிப்பு இலங்கையில் நிலவுகிறது

ஆக
, ஆட்சியாளர்களாக மட்டுமல்லாது, ஊடகங்களுக்கான செய்தித் தயாரிப்பாளர்களாகவும் மகிந்த சகோதரர்களே இருந்துவருகிறார்கள். பெரியண்ணன்களாகிய மகிந்த சகோதரர்களின் கண்காணிப்பிலிருந்து எந்தவொரு செய்தியும், நிகழ்வும் தப்பித்துவிட முடியாது. அவர்களுடைய பிரசன்னம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. போதாக்குறைக்கு வீதிகளில் சுவரொட்டிகளிலும், பிரம்மாண்டமான விளம்பரத் தட்டிகளிலும் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கூவியழைத்தபடி நின்று அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இவர்களது விசுவாசிகள் தேசத்துரோகிகளையும் தேசப்பற்றாளர்களையும் வகைப்படுத்தும் வேலையைச் செவ்வனே செய்துவருகிறார்கள்.

‘தேசத்துரோகி’களும் ‘தேசப்பற்றாளர்’களும்
மகிந்த ராஜபக்ஷ சகோதரர்களின் அடக்குமுறை ஆட்சி குறித்து எழுதுவதும் பேசுவதும் தண்டனைக்குரிய, உயிராபத்து மிக்க செயலென்பதை அனுபவபூர்வமாகக் கண்டபின்னர், அறிந்த உண்மைகளை எழுதுவதற்கு ஊடகவியலாளர்கள் பின்னிற்கிறார்கள். வெளிப்படுத்தக் களம் மறுக்கப்பட்ட உண்மைகள் துருவேறிய கத்தியென மனச்சாட்சியுள்ளவர்களின் இதயங்களில் கிடந்து உறுத்திக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தென்பகுதியிலிருந்து நாட்டை விட்டு வெளியேறிய, வெளியேற்றப்பட்ட பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் அந்தப் பொறுப்பில் பெரும்பகுதியைக் கையேற்றிருக்கிறார்கள்.  அத்துடன், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஜெனீவா பிரகடனத்திற்கமைய, இனப்படுகொலை அடங்கலாக தமிழர்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காகவும் இயங்கி வரும்இனப்படுகொலைக்கெதிரான தமிழர் அமைப்பு’ம் பெருந் தொகையான ஆதாரங்களைச் சேகரித்துத் தொகுத்துள்ளார்கள்.

இறுதிப்
போரின்போது இலங்கை இராணுவத்தரப்பால் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, ஈவிரக்கமற்ற படுகொலைகளை, மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களை பெருமளவில் உலகறியச் செய்த- ‘சாட்சிகள் அற்ற போர்இன் சாட்சியாயமைந்த, ‘சானல் 4’ வின்இலங்கையின் கொலைக்களம், ‘மோதல் தவிர்ப்பு வலயம்ஆகிய காணொளிகளில் பயன்படுத்தப்பட்ட தகவல்கள், ஒளியிழை நாடாக்கள், நேர்காணல்கள், புகைப்படங்களைக் கொடுத்துதவியதில் மேற்குறித்தோரின் பங்கு (குறிப்பாக, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு) அபரிமிதமானது. இனம், மொழி கடந்து மனிதாபிமானத்தோடு இயங்கும் அவர்தம் பணி  நன்றியறிதலோடு போற்றுதற்குரியது.

சட்டத்தரணியும்
இனவெறிக்கும் பாகுபாடுகளுக்கும் எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரும் இலங்கையில் அமைதிக்கான மகளிர் அமைப்பின் தலைவருமான  நிமல்கா பெர்னாண்டோ,  ஊடகவியலாளர்களுக்கான ஊடக ஒழுக்கக் கோவையின் உருவாக்கத்திற்கும் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் உழைத்தவரும் இலங்கையில் ஜனநாயத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவருமாகிய சுனந்த தேசப்பிரிய, மனித உரிமைச் செயற்பாட்டாளரும் பெண்ணியவாதியும் சிறுபான்மைத் தமிழர்களது உரிமைக்காகக் குரல்கொடுத்துவருபவருமாகிய சுனிலா அபேசேகர, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பிவரும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன  ஆகியோர், .நா.வின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் மற்றும் இலங்கையின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் உலகளாவிய அளவில் நடத்தப்படும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உண்மையை வெளியுலகு அறியச்செய்துவருகிறார்கள்.

இலங்கையின் இன்றைய நிலையை சுனிலா அபேசேகர அவர்களின் வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.  ‘அமைதியாக இருப்பவர்களே சிறந்த மக்கள் என்பது அவர்கள் (பெரும்பான்மையினத்தவர்) மனதில் ஊட்டப்பட்டிருக்கிறது. ஆகவே மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்.”
 நேர்காணலொன்றில் அவர் மேலும் கூறுகிறார்:

“அங்கு
சட்டத்தின் ஆட்சியோ, ஜனநாயகத்தின் வேறு கூறுகளான  நீதித்துறைச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் போன்ற எந்தவொரு அம்சமும்  நடைமுறையில் இல்லை என்பதைத்தான் கடந்த மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஆக, இலங்கையில் இன்று ஜனநாயகம் இல்லை என்று ஒருவரால் மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடியுமான அதேவேளை,  நாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை என்றும் ஒருவரால் கூறிவிட முடியும்.”
மேலும், கவிஞர்-ஊடகவியலாளர்-ஊடகச் செயற்பாட்டாளர் மஞ்சுள வெடிவர்த்தனவின் எழுத்துக்களுக்கு, தமிழ் மக்கள் எவ்விதம் இனரீதியாக ஒடுக்கப்பட்டுவருகிறார்கள் என்பதை பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதில் பிரதான இடமுண்டு.அவரது கவிதைகள் சிங்கள சமூகத்தில் மனச்சாட்சியுள்ளவர்களின் குரலாக ஒலிக்கின்றன. 

தொடரும்....

நன்றி: தீராநதி (செப்டெம்பர் மாத இதழ்)

No comments: