சி.எஸ்.லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை அவர்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தன் எழுத்துக்களின் மூலமாக தமிழிலக்கியத்தில் பெண்ணிய சிந்தனைகளைத் தோற்றுவித்த முன்னோடிகளுள் ஒருவராவார். நந்திமலைச் சாரலிலே (குழந்தைகள் நாவல்-1962), அந்திமாலை (நாவல்-1966), சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1987), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள் (2007), ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு (2013) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், The Singer and the Song (இசைத்துறையைச் சார்ந்த பெண்களுடனான உரையாடல்-2000), Mirrors and the Gestures (நடனத்துறை சார்ந்த பெண்களுடனான உரையாடல்-2003) ஆகியவற்றோடு இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகளும் நாடகங்களும் எழுதியிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்துவரும் அம்பை, ‘ஸ்பாரோ’என்ற பெயரிலான, பெண்களது வாழ்வியல் தொடர்பான வரலாற்று ஆவணக் காப்பகத்தின் நிறுவனர்களுள் ஒருவரும் அதன் இயக்குநருமாவார். ‘அந்திமாலை’க்கு நாராயணசாமி ஐயர் விருது (கலைமகள் சஞ்சிகையால் வழங்கப்பட்டது), 2006இல் அமெரிக்காவாழ் தமிழர்களால் வழங்கப்பட்ட விளக்கு விருது, 2008 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது, 2011இல் கலைஞர் பொற்கிழி விருது (சிறுகதைகளுக்காக வழங்கப்பட்டது) ஆகிய விருதுகளைப் பெற்றவர். ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழியல் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த அம்பை அவர்களை தாய்வீடு பத்திரிகைக்காகச் சந்தித்தோம்.
*******
ஆணாதிக்கம் வேரோடிப் போயிருக்கும் சமூகமனமானது பொதுவெளியில் இயங்குகிற பெண்களை வேறு கண்களால் பார்க்கிறது. நீங்கள் எழுத வந்த காலகட்டமாகிய அறுபதுகளில் நிலைமை இன்னமும் மோசமாக இருந்திருக்கும். ஒரு பெண்ணாக நீங்கள் அனுபவித்த சிக்கல்கள் எதிர்கொண்ட விமர்சனங்கள் பற்றிச் சொல்லமுடியுமா?
அந்த அனுபவங்களைக் குறித்துப் பெரிதாக நான் பேசுவதில்லை. காரணம், அவை கசப்பான அனுபவங்களாக இருந்தமைதான். ‘சிறகுகள் முறியும்’ 1976இல் வெளிவந்த பத்து ஆண்டுகளில் ஒரேயொரு விமர்சனக் கட்டுரை வந்திருந்தது…அதுவொரு ஆண் எழுத்தாளரால் எழுதப்பட்டது…. பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. “சில கதைகளைப் படிக்கிறபொழுது நாம் இந்தக் கதைகளை எழுதியிருக்கக்கூடாதா என்று தோன்றும்; சில கதைகளைப் படிக்கிறபொழுது நல்லவேளை நாம் இந்தக் கதைகளை எழுதவில்லை என்று தோன்றும். அம்பையின் கதைகளைப் படிக்கிறபொழுது நல்லவேளை நாம் இந்தக் கதைகளை எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது” என்று எழுதியிருந்தார். இந்த விமர்சனக் கட்டுரையை ‘சதங்கை’பத்திரிகை முதற்பக்கத்தில் பிரிசுரித்திருந்தது. யாருமே முதற்பக்கத்தில் புத்தக விமர்சனக் கட்டுரையைப் பிரசுரிக்கிற வழக்கமில்லை.
‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’வெளிவந்தபிற்பாடு, தான் அதற்கொரு விமர்சனம் எழுதவிருப்பதாக மங்கை சொன்னபோது “சிறகுகள் முறியும்“க்கே இன்னும் யாரும் விமர்சனம் எழுதவில்லை”என்று வேடிக்கையாகச் சொன்னேன். அதை நான் ஒருவகையான பெண்வெறுப்பாகத்தான் பார்க்கிறேன். பெண்ணானவள் இன்னின்னவற்றைப் பற்றித்தான் எழுதலாம் என்று இவர்கள் ஒரு வரையறை வைத்திருந்தார்கள். ஆனால், அந்த வரையறையை முறியடித்த பல பெண்கள் முன்னாடியும் இருந்தார்கள். கௌரி அம்மாளால் எழுதப்பட்ட ‘கடிவாளம்’என்ற நாவலை எடுத்துக்கொண்டீர்களானால், அதில் தாயில்லாத ஒரு குடும்பம் உறவுமுறையில் எப்படிச் சிதிலமடைந்துபோகிறது என்பதை எழுதியிருப்பார். தாயில்லாத காரணத்தால் அந்தக் குடும்பம் எப்படிச் சிதிலமடைந்தது என்று வெளிப்படையாகக் குறிப்பிடாமல் அவ்வளவு நுணுக்கமாக எழுதப்பட்ட நாவல் அது. சரஸ்வதி அம்மாள் ‘கன்றின் குரல்’என்றொரு நாவல் எழுதியிருந்தார். அதில் ஒரு சின்னப் பையன், மணமான ஒரு பெண்ணை அட்மைர் பண்ணியிருப்பான்…. ஆனா அவன் என்ன நினைச்சுப்பான்னா தான் அவளைக் காதலிக்கிறதா நினைச்சுப்பான். மனோதத்துவ நோக்கோடு அந்த நாவல் எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் பெண்களெல்லாம் ‘குடும்பப் பெண்கள்’என்ற நிலையில் குடும்பத்தை நடத்திக்கொண்டே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டிருந்தார்கள்.. எழுதினார்கள்… இலக்கியப் பத்திரிகைகள்; நடத்தினார்கள். ஆனால், நான் அந்த வரையறைக்குள் வரவில்லை. அந்தச் சட்டகத்தினுள் என்னை நுழைக்க முடியவில்லை.
நான் அப்போது படித்துக்கொண்டிருந்தேன்… எனக்குத் திருமணமாகியிருக்கவில்லை… தனியாக இருந்தேன்… ஆகவே, எனது எழுத்தை அவர்கள் வேறு கண்ணோட்டத்தோடு பார்த்தார்கள். நான் சென்னையில் தங்கியிருந்து முறையாகத் தமிழ் பயிலாமல், பெங்களுரில் தங்கி தமிழை இரண்டாம் மொழியாகப் படித்துக்கொண்டிருந்தேன். மேலும், எனக்கு கன்னடம், ஹிந்தி போன்ற வேறு சில மொழிகளிலும் வாசிப்புப் பரிச்சயம் இருந்தது. வீட்டில் இசை பயின்ற காரணத்தால் - தியாகராஜ கீர்த்தனைகள் தெலுங்கில்தான் இருக்கும் - தெலுங்கிலும் பரிச்சயம் இருந்தது. நான் ஒரு மொழியில் எழுதினாலும் பல மொழிகளது செல்வாக்கும் உணர்வும் அதில் கலந்திருந்தது. ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கியச் சரித்திரத்தைத் தொடர்ந்து படித்து அதைத் தொடர்ந்து எழுதவில்லை. ஆக, பெண்-ஆண் உறவுச் சிக்கல்கள் பற்றி அதற்கு முன்னால் வேறு பலரும் எழுதியிருந்தாலும், மேற்குறித்த காரணங்களால் எனது மொழிநடை அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது. அந்த வயதில் நான் அதைப் பெண்ணிய மொழி என்றெல்லாம் நினைக்கக்கூட இல்லை. எனக்கு அந்தச் சட்டகங்கள், வரையறைகள் தெரிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
பெங்களுரிலிருந்து வந்து சென்னை
கிறிஸ்துவக் கல்லூரியில் வரலாறு முதுகலை படித்துமுடித்தேன். பொதுவாக
முதுகலையில் நல்ல புள்ளிகள் பெற்றவர்கள் கல்லூரிப் பேராசிரியராகப்
போவார்கள். அல்லது ஐ.ஏ.எஸ். ஆவதற்கான படிப்புப் படிப்பார்கள். எங்கள்
வீட்டிலும் அப்படித்தான் விரும்பினார்கள். ஆனால், நான் காந்தியவாதியாக
இருந்தேன்… ஏதாவது ஒரு சின்ன ஊருக்குப் போய் அங்கே ஒரு பள்ளிக்கூடத்தில்
ஆசிரியராக வேண்டும் என்று எனக்கொரு இலட்சியம் இருந்தது. என்னுடைய முதுகலைப்
பரீட்சை முடிவு வெளியாவதற்கு முன்பாகவே ஒரு சின்ன ஊரில் ஆசிரியப்பணியில்
அமர்ந்துவிட்டேன். அங்கே எட்டு மாதங்கள்தான் பணியில் இருக்கமுடிந்தது.
என்னுடைய கருத்துக்கள் எல்லாம் மிகவும் புரட்சிகரமாக இருப்பதாகவும் அந்தக்
கருத்துக்களை நான் மாணவர்களிடத்தில் போதித்து அவர்களுடைய எதிர்காலத்தைப்
பாழ்பண்ணிவிடுவேன் என்றும் பள்ளிநிர்வாகம் கருதியது. மேலும், ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் பள்ளிக்கூடத்தில் பூசை நடக்கும். அதில் கலந்துகொள்ள
விரும்பாமல் நான் காரணங்கள் சொல்லி மறுத்துவந்தேன். அந்தப் பள்ளிக்கூடத்தை
நடத்தியது ஒரு செட்டியாரம்மா. அவருடைய மகள் திருமணமான பத்து நாட்களிலேயே
குருவாயூர் கோவிலுக்குப் போனபோது குளத்தில் விழுந்து இறந்திட்டாங்க.
அந்தம்மா என்ன நினைத்தாரென்றால் தன்னுடைய மகள் ஒரு தேவதையாகப் போய்விட்டதாக
நினைச்சாங்க. தன்னுடைய மகள் மாதிரியே ஒரு சிலை செய்து அதற்கு நகையெல்லாம்
போட்டு கண்ணாடிப் பெட்டியொன்றுக்குள் வைத்து, அதற்கு வெள்ளிக்கிழமைதோறும்
பூசை நடத்திவந்தார். மாணவர்கள் கேள்விகளே கேட்கக்கூடாது என்று பள்ளி
நிர்வாகம் எதிர்பார்த்தது. நான் என்னுடைய மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டுமென
விரும்பினேன்.
ஒருநாள் எனது மாணவிகளில் ஒருத்தி எழுந்து, “டீச்சர் உங்களுக்கு தேவதைகளில் எல்லாம் நம்பிக்கை இருக்கா?”என்று கேட்டாள். “தேவதைகளும் கிடையாது… பூதங்களும் கிடையாது”என்று நான் பதிலளித்தேன். மாணவர்களுடைய மனங்களில் அந்தப் பதில் பதிந்துவிட்டது. அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை எனது மாணவர்கள் பூசைக்குப் போகவில்லை. நான் வழக்கத்திலேயே போவதில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் பிள்ளைகளைத் தவறாக வழிநடத்துவதாக என்னைக் குறைப்படத் தொடங்கினார்கள். அதைவிட, பள்ளிக்கூடம் விடுமுறை விட்டால் நாங்கள் எங்கே போகிறோம் என்று வீட்டு முகவரியெல்லாம் எழுதிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். விடுமுறை விட்டால் வீட்டிற்கல்லாமல் நாங்கள் எங்கே போகமுடியும்? அவ்வளவு தூரம் ஆசிரியர்களின் நடத்தை பற்றியெல்லாம்கூடச் சந்தேகப்பட்டார்கள். ஒருதடவை, என்னுடன் பணியாற்றிக்கொண்டிருந்த இன்னொரு ஆசிரியரை விடுமுறைக்கு பெங்களுரிலுள்ள எனது வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டேன். நாங்கள் திரும்பிவந்ததும் ‘எங்களுடைய அனுமதியில்லாமல் அவரை எப்படி நீங்கள் உங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகமுடியும்?’என்று கேள்வி எழுப்பினார்கள். “என்னுடைய வீட்டிற்கு நான் அவரைக் கூட்டிக்கொண்டு போவதற்கு யாரிடம் அனுமதி கேட்கவேண்டும்? இது ஜனநாயகமல்ல! இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடியாது”என்று நான் பதிலளித்தேன். அந்தப் பள்ளிக்கூட ஆசிரியர்களுள்ளேயே நான்தான் வயதிற் குறைந்தவளாக - இருபத்தொரு வயது என்று எண்ணுகிறேன் - இருந்தேன். இப்படியாகக் கேள்வி மேல் கேள்விகள் எழுப்பிய காரணத்தினாலேயே அந்தப் பள்ளியிலிருந்து என்னைத் துரத்திவிட்டார்கள் (சிரிக்கிறார்).
இடைப்பட்ட காலத்தில் - அதாவது நான் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலத்தில் கலைமகள் நடத்திய நாவல் போட்டியிற் பங்கேற்றேன். ‘அந்திமாலை’என்ற அந்த நாவலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. உடல் சம்பந்தப்படாத காதல், அதாவது “பிளாட்டோனிக் லவ்“ பற்றிய நாவல் அது. ஒரு நடுத்தரக் குடும்பத்திலே இருக்கக்கூடிய பெண்ணுக்கு காதலைப் பற்றியோ உடம்பைப் பற்றியோ என்ன தெரிந்திருக்கமுடியும்? உடலே இல்லாத ஒரு வெளியில்தானே மிதந்துகொண்டிருப்போம்? வீட்டில் உடலைப் பற்றி, வயதுக்கு வருவதற்கு முன்னால் வயதுக்கு வருவது என்றால் என்னவென்பது பற்றி, மாதவிடாய் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதனால், அந்த வயதில் நான் ஒரு காதல் நாவல் எழுதினால் அப்படித்தானே இருக்கும்? உடல் இல்லாத காதல்தான் உயர்ந்த காதல் என்று அப்போது மனதில் ஒரு எண்ணம்… அதில் வரும் கதாநாயகி “அழியப் போகும் எனது உடலை விட அழியாத என் ஆன்மாவை உனக்குத் தருகிறேன்”என்றெல்லாம் வசனம் பேசுவாள். அதற்குப் பரிசு வேறு கிடைத்துவிட்டது (சிரிக்கிறார்). நான் எம்.ஏ. முடித்துவிட்டு அந்த ஊரில் ஆசிரியராக இருந்தபோது இந்த நாவல் கலைமகளில் தொடராக வருகிறது. அதை வாசித்தபோது வேறு யாராலோ எழுதப்பட்டது போல உணர்ந்தேன். அதோடு என்னைத் தொடர்புபடுத்திக்கொள்ளவே முடியவில்லை.
ஒருநாள் எனது மாணவிகளில் ஒருத்தி எழுந்து, “டீச்சர் உங்களுக்கு தேவதைகளில் எல்லாம் நம்பிக்கை இருக்கா?”என்று கேட்டாள். “தேவதைகளும் கிடையாது… பூதங்களும் கிடையாது”என்று நான் பதிலளித்தேன். மாணவர்களுடைய மனங்களில் அந்தப் பதில் பதிந்துவிட்டது. அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை எனது மாணவர்கள் பூசைக்குப் போகவில்லை. நான் வழக்கத்திலேயே போவதில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் பிள்ளைகளைத் தவறாக வழிநடத்துவதாக என்னைக் குறைப்படத் தொடங்கினார்கள். அதைவிட, பள்ளிக்கூடம் விடுமுறை விட்டால் நாங்கள் எங்கே போகிறோம் என்று வீட்டு முகவரியெல்லாம் எழுதிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். விடுமுறை விட்டால் வீட்டிற்கல்லாமல் நாங்கள் எங்கே போகமுடியும்? அவ்வளவு தூரம் ஆசிரியர்களின் நடத்தை பற்றியெல்லாம்கூடச் சந்தேகப்பட்டார்கள். ஒருதடவை, என்னுடன் பணியாற்றிக்கொண்டிருந்த இன்னொரு ஆசிரியரை விடுமுறைக்கு பெங்களுரிலுள்ள எனது வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டேன். நாங்கள் திரும்பிவந்ததும் ‘எங்களுடைய அனுமதியில்லாமல் அவரை எப்படி நீங்கள் உங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகமுடியும்?’என்று கேள்வி எழுப்பினார்கள். “என்னுடைய வீட்டிற்கு நான் அவரைக் கூட்டிக்கொண்டு போவதற்கு யாரிடம் அனுமதி கேட்கவேண்டும்? இது ஜனநாயகமல்ல! இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடியாது”என்று நான் பதிலளித்தேன். அந்தப் பள்ளிக்கூட ஆசிரியர்களுள்ளேயே நான்தான் வயதிற் குறைந்தவளாக - இருபத்தொரு வயது என்று எண்ணுகிறேன் - இருந்தேன். இப்படியாகக் கேள்வி மேல் கேள்விகள் எழுப்பிய காரணத்தினாலேயே அந்தப் பள்ளியிலிருந்து என்னைத் துரத்திவிட்டார்கள் (சிரிக்கிறார்).
இடைப்பட்ட காலத்தில் - அதாவது நான் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலத்தில் கலைமகள் நடத்திய நாவல் போட்டியிற் பங்கேற்றேன். ‘அந்திமாலை’என்ற அந்த நாவலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. உடல் சம்பந்தப்படாத காதல், அதாவது “பிளாட்டோனிக் லவ்“ பற்றிய நாவல் அது. ஒரு நடுத்தரக் குடும்பத்திலே இருக்கக்கூடிய பெண்ணுக்கு காதலைப் பற்றியோ உடம்பைப் பற்றியோ என்ன தெரிந்திருக்கமுடியும்? உடலே இல்லாத ஒரு வெளியில்தானே மிதந்துகொண்டிருப்போம்? வீட்டில் உடலைப் பற்றி, வயதுக்கு வருவதற்கு முன்னால் வயதுக்கு வருவது என்றால் என்னவென்பது பற்றி, மாதவிடாய் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதனால், அந்த வயதில் நான் ஒரு காதல் நாவல் எழுதினால் அப்படித்தானே இருக்கும்? உடல் இல்லாத காதல்தான் உயர்ந்த காதல் என்று அப்போது மனதில் ஒரு எண்ணம்… அதில் வரும் கதாநாயகி “அழியப் போகும் எனது உடலை விட அழியாத என் ஆன்மாவை உனக்குத் தருகிறேன்”என்றெல்லாம் வசனம் பேசுவாள். அதற்குப் பரிசு வேறு கிடைத்துவிட்டது (சிரிக்கிறார்). நான் எம்.ஏ. முடித்துவிட்டு அந்த ஊரில் ஆசிரியராக இருந்தபோது இந்த நாவல் கலைமகளில் தொடராக வருகிறது. அதை வாசித்தபோது வேறு யாராலோ எழுதப்பட்டது போல உணர்ந்தேன். அதோடு என்னைத் தொடர்புபடுத்திக்கொள்ளவே முடியவில்லை.
பள்ளிக்கூட வேலையை விட்டு பெங்களுருக்குப் போகாமல் நேரே சென்னைக்கு வந்தேன். காரணம்,“நான் முன்னமே சொன்னேனல்லவா இது நடக்காதென்று?”என்று எனது தந்தையார் சொல்வாரென்று பயம். சென்னையில் ஒரு கல்லூரியில் ஆங்கிலம் கற்பிக்கும் பணியில் சேர்ந்தேன். தூரத்து உறவினர் வீட்டில் ஒரு அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தேன். அப்போது எழுதப்பட்டதுதான் ‘சிறகுகள் முறியும்’. அதை எழுதிவிட்டு கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். எல்லோரும் அதைத் திருப்பியனுப்பினார்கள். 1967 ஆரம்பத்தில் அது எழுதப்பட்டது… 1967 அக்டோபர் வரை பிரசுரமாகாமல் இருந்த அந்தக் கதையை, பி.எச்.டி. பண்ணுவதற்காக நான் டெல்லிக்குப் போனபோது என்னோடு எடுத்துப்போனேன். கணையாழி ஆசிரியருக்கு அதை அனுப்பி, “இதில் ஏதாவது தவறு இருக்கிறதா?”என்று கேட்டேன். அவர் என்னை வந்து பார்த்தார்… “இது நல்ல கணையாழிக் கதைதான். அதை நீங்கள் அனுப்பிவைத்த பத்திரிகைகள்தான் சரியில்லை… உங்கள் மொழிநடை மாறியிருக்கிறதே உங்களுக்குத் தெரியவில்லையா?”என்று கேட்டார். “எனக்குத் தெரியவில்லை”என்று சொன்னேன். நான் என்ன நினைக்கிறேனென்றால், மொழி என்பது நம்முடைய வாழ்க்கையையொட்டி, நமது உடல் எந்தெந்தத் தளங்களில் இயங்குகிறதோ அந்த அனுபவத்தையொட்டி மொழி அமைந்துவிடுகிறது. அது இயற்கையாக நிகழ்ந்த காரணத்தால் எனது மொழி மாறியது எனக்குத் தெரியவில்லை. பிறகு நான் கணையாழியில் நிறையக் கதைகள் எழுதினேன். ஆனாலும், எந்தக் கதைக்கும் பெரிய வரவேற்பு இருந்ததாக நினைவில்லை. வெங்கட் சாமிநாதன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர்தான் தொடர்ந்து எழுதும்படியாக ஊக்குவித்துக்கொண்டிருந்தார்கள்
ஒரு கதை எழுதுகிறபோது ‘இது வெளியாகுமா?’என்று நினைக்கவே மாட்டேன். ஆகவே, இதையெல்லாம் எழுதலாமா கூடாதா என்ற மனத்தடைகள் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனக்கு எழுதணும்; அதனால் எழுதினேன். டெல்லியில் இருந்தபடி எழுதிய காரணத்தால் இங்கு (சென்னையில்) தொடர்ந்து எதிர்ப்பு இருந்தது எனக்குத் தெரியவில்லை. நான் சென்னைக்கு இரண்டொருமுறை வந்து, எனது வாழ்க்கையைப் பற்றிச் சில நயமில்லாத கேள்விகளை எதிர்கொண்டபோது, சில எழுத்தாளர்கள் நடந்துகொண்ட முறைகளைப் பார்த்தபோதுதான் இங்கு ஒருவித பெண்வெறுப்பு இருப்பதை நான் அறிந்துகொண்டேன். தற்காலத் தமிழிலக்கியச் சரித்திரம் எழுதும்போது அதில் ஒரு பெண்ணுடைய பெயர்கூட இருக்காது. எனது நண்பர்களுள் ஒருவரேகூட அப்படித் தவிர்த்திருந்தார். அப்போது அவரிடம் நான் “இங்கு எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்களே… நாற்பதுகளிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்ததோ பிடிக்கவில்லையோ ராஜம் கிருஷ்ணன், சூடாமணி… அதற்கு முன்னாலும் குமுதினி, குகப்பிரியை, கௌரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், சாவித்திரி அம்மாள் இப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மொழிபெயர்ப்புக்கூடச் செய்திருக்கிறார்கள்.. அவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையே…”என்று கேட்டால், “இது இலக்கியச் சரித்திரம்; இது பெண்களைப் பற்றிய சரித்திரம் இல்லை”என்று பதிலளித்தார். நாங்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறதுபோலவும் சரித்திரத்தில் எங்களுக்குப் பங்கில்லைப் போலவும் அந்தப் பதில் அமைந்திருந்தது.
அதேசமயம், தமிழ் எழுத்தாளர்களுக்குள்ளேயே வண்ணதாசன், வண்ணநிலவன், க்ரியா ராமகிருஷ்ணன், சுந்தரராமசாமி என்று மிகவும் நல்ல நண்பர்கள் இருந்தார்கள். திருநெல்வேலி எல்லாம் போய் வண்ணதாசன் வீட்டில் இருந்திருக்கிறேன். சென்னையில் வண்ணநிலவனும் நானும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். ஆனால், இப்போது பேட்டி ஒன்று கொடுத்து இலக்கிய நண்பர்கள் என்று சொல்லும்போது வண்ணநிலவன் என் பெயரைச் சொல்லமாட்டார். அது எனக்குப் பரவாயில்லை… எங்களுடையது நல்ல நட்பாக இருந்தது… அவருடைய மனைவிகூட எனக்குப் பழக்கமானவர்தான். அப்படி நல்ல நண்பர்களும் இருந்தார்கள். ஆனாலும், பொதுவாக ஒரு பெண்ணோடு என்ன இலக்கியம் பேசுவது என்றவொரு அலட்சியம் அப்போது இருந்தது; இப்போதும் இருக்கிறது என்று சொல்லலாம். ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போனால் -இதை நான் காலச்சுவடு பேட்டியில்கூடச் சொல்லியிருக்கிறேன் - “இந்தப் புடவை நல்லா இருக்கு”என்பார்கள். வீட்டில சமைச்சுட்டு வந்திட்டீங்களா…. உடல் நலமா இருக்கீங்களா?” இப்படியெல்லாம் கேட்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் நான் கூட்டங்களுக்குப் போகிறபொழுது, “அம்பைக்கு இப்போது வயதாகிவிட்டதுபோல தெரிகிறது” என்பார்கள். அப்படிச் சொல்பவர்களுக்கும் என்னுடைய வயதுதான் இருக்கும். நானும் விடுவதில்லை… நானும் கேட்பேன்… “இந்த வேட்டியெல்லாம் எங்க வாங்கிறீங்க? இதே மாதிரி ஒரு வேட்டி என் கணவருக்கு வாங்கணும்”. “நீங்க தலைக்குத் தேங்காய் எண்ணெய் போடுறீங்களா? பிறில் கிறீம் போடுறீங்களா?”இப்படியெல்லாம் கேட்பேன். அப்படி நான் கேட்பது அவர்களுக்கு உவப்பாக இருப்பதில்லை.
இப்படி ஒருவித பெண்வெறுப்பு இருந்துகொண்டேயிருக்கிறது.
ஆம், சமூகவலைத்தளங்களில் அந்தப் பெண்வெறுப்பை கூடுதலாக அவதானிக்க முடிகிறது. எழுதுகிற பெண்கள்மேல் சற்று அதிகமாகவே அந்த வெறுப்பைக் காண்பிக்கிறார்கள். பெண்ணியவாதி என்ற சொல்லே ஒரு வசைச்சொல்லாக, கெட்டவார்த்தையாகப் பிரயோகிக்கப்படுகிறது.
எழுதுகிற பெண்கள்மீது மட்டுமில்லை; பெண்கலைஞர்கள் எல்லோர்மீதும் அந்த வெறுப்பு இருக்கிறது. ஆங்கிலத்தில் ‘பெமினிஸ்ற்’என்ற வார்த்தையே ஒருகாலத்தில் கெட்டவார்த்தையாகத்தான் உபயோகத்தில் இருந்தது. பெண்ணியவாதி என்பவள் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக்கொள்வாள் என்றொரு அபிப்பிராயம் இருந்தது; இப்போதும் இருக்கிறது. படித்த, சுதந்திரமாகச் சிந்திக்கக்கூடிய செயற்படக்கூடிய பெண்ணினுடைய முதல் வேலை ஒழுக்க வரையறையை மீறுவதுதான் என்று அவர்கள் நினைத்தார்கள். இதற்காகத்தான் பெண்கள் காத்திருப்பதாக நினைத்தார்கள். கற்பு என்பது எப்படி அவர்களைப் பொறுத்தளவில் உடலை ஒட்டியதாக இருக்கிறதோ அவ்விதமே விடுதலை என்பதும் உடலை ஒட்டியதாகத்தான் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். பொது இடங்களில் பல தளங்களில் நாம் இயங்க விரும்புகிறோம். அதை அவர்கள் ஒரே அர்த்தத்தில்தான் பார்க்கிறார்கள். நாம் வேகமாக இயங்குவதற்கு ஏற்புடையதாக நமது உடைகள் மாறலாம்; தலைமுடியை வெட்டிக்கொள்ளலாம்… அதையெல்லாம் அவர்கள் உடல்ரீதியான மாற்றங்களாக, வெறும் தோற்றமாற்றங்களாக நினைக்கிறார்களேயல்லாது, உள்ளார்ந்த மாற்றமாக நினைப்பதில்லை.
ஐம்பது ஆண்டுகாலத்திற்கு மேலாக நீங்கள் தமிழிலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். அதன் வளர்ச்சிப்போக்கு சீராக இருக்கிறதா? அல்லது தேக்கம் கண்டிருக்கிறதா? அப்படி ஆரோக்கியமான வளர்ச்சிப்போக்கு இல்லையெனில், அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?
தேக்கம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என்னைப் பொறுத்தளவில் அது வளர்ச்சிப்போக்கில் சென்றுகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். புதிய பல எழுத்தாளர்கள் வந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு எழுத்தையும் இப்படித்தான் எழுதவேண்டும்… அப்படித்தான் எழுதவேண்டும் என்று சொல்லாமல் எல்லாவகையான எழுத்தையும் -கொச்சையாக எழுதுவதைத் தவிர – மற்றெல்லா வகை எழுத்தையும் நான் வரவேற்கிறேன். கடைசியில் எது நிலைக்கும் என்பதைக் காலந்தான் தீர்மானிக்கும். தொடர்ச்சியாக எழுதப்பட்டுக்கொண்டிருப்பதே ஆரோக்கியமான வளர்ச்சிதான். அத்தனை பெண்வெறுப்பு இருந்த என்னுடைய காலகட்டத்திலும்கூட எங்களுக்குள் உரையாடல் இருந்துகொண்டுதானிருந்தது. சுந்தர ராமசாமியோடு, வெங்கட் சாமிநாதனோடு இப்படி எல்லோருடனும் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டுதானிருந்தோம். சில புத்தகங்களைப் படித்துவிட்டு விவாதித்திருக்கிறோம். சிலபேர் குழுவாக இணைந்து ‘பிரக்ஞை’பத்திரிகை நடத்தியபோது நான் அந்தக் குழுவில் இருந்தேன். அதை நடத்தியவர்கள் எல்லோரும் எனது நண்பர்கள். அதனால், பல புது எழுத்துக்கள் வரும்போது அவற்றைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதுதான் ஆத்மாநாம் நிறையக் கவிதைகள் எழுதினார். பிரக்ஞையிலும் எழுதினார். பெண்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தாலும், என்னளவில் அதுவொரு பொற்காலமாக, இயங்கக்கூடிய காலமாக இருந்தது. பிரக்ஞையில் இருந்த மற்றெல்லோரும் ஆண்கள் எனினும் அவர்களோடு அமர்ந்து பேசி விவாதிக்கக்கூடிய ஆரோக்கியமான சூழலும் இருந்தது. அந்தச் சமயத்தில்தான் ராமகிருஷ்ணன் க்ரியாவை ஆரம்பித்து, வித்தியாசமான புத்தகங்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபடுகிறார். எல்லோரும் வியாபாரப்போக்கில் போகிறபோது, இவர் மட்டும் வித்தியாசமான புத்தகங்களைப் போடப்போகிறேன் என்று சொன்னதானது எல்லோருக்கும் அதிர்ச்சி. புத்தகங்கள் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, சி.சு.செல்லப்பா புத்தகங்களைச் சுமந்துகொண்டுபோய் விற்றுவிட்டு வந்திருக்கிறார். ராமகிருஷ்ணனால் வெளியிடப்பட்ட புத்தகங்களை எழுதிய ந.முத்துசாமி போன்றோர் வித்தியாசமான எழுத்துவகைமையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அந்தவகையில் 1987இல், எனது, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’யை க்ரியா வெளியிட்டபோது அது எனக்கு ஒரு பெரிய கௌரவமாகத்தான் நினைத்தேன். அந்தத் தொகுப்பிலுள்ள கதைகளுள் ‘வுமன் புரொட்டகனிஸ்ட்’ என்று சொல்வார்களே அந்த மாதிரியான கதைகள் இரண்டோ மூன்றோ இருந்தன. இயல்பாக அப்படி அமைந்ததே அன்றி நான் அதைத் தெரிந்து செய்வதில்லை. அந்தச் சாயலில் அமைந்த ஒரு பெண் இருந்தாள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் புத்தகத்தின் பின்னட்டையில், “திருநெல்வேலியில் இருக்கும் பெண்களைக் குறித்த சில கதைகள் இருக்கின்றன. அவற்றோடு சில சோதனைக் கதைகளும் உண்டு”என்று க்ரியா ராமகிருஷ்ணன் எழுதினார். ராமகிருஷ்ணன் நல்ல நண்பர்… அதனால் அவரோடு நன்றாகச் சண்டை போடலாம். ஆகவே, “கதைகளில் சோதனை பண்ணுகிற வழக்கமெல்லாம் எனக்கு இல்லை. நீங்கள் எப்படி சோதனைக் கதைகள் என்று எழுதலாம்?”என்று கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினேன். “இதே கதைகளை ஒரு ஆண் எழுதியிருந்தால் அப்போதும் நான் இதேமாதிரித்தான் பின்னட்டையில் எழுதியிருப்பேன்”என்றார். நான் ஒத்துக்கொள்ளவில்லை. “இதேபோலத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் முத்துசாமியின் நீர்மை கொண்டுவந்தீர்கள். அதில் அத்தனை கதைகளுமே ஆண்களைப் பற்றிய கதைகள்தாம். ஆனால், நீங்கள் என்ன எழுதினீர்கள்…? இந்தக் கதைகள் வாழ்க்கையைப் பற்றிய கதைகள் என்று எழுதினீர்கள். ஆக, பெண்கள் எதைப் பற்றி எழுதினாலும் பெண்களைப் பற்றியது என்ற ஒரு குறுகல் வட்டத்தினுள் அவை இருக்கின்றன என்று நீங்கள் சொல்வது போலிருக்கிறது.”என்றேன். பெரிய சண்டை! அவர் கடைசியில் சொன்னார்… “இரண்டாவது பதிப்பில் நீயே பின்னட்டையில் எழுது… நான் எழுதலை”என்று. அப்படித்தான் செய்தேன். இரண்டாவது பதிப்பைப் பார்த்தால் தெரியும் பின்னட்டையில் நான்தான் எழுதியிருக்கிறேன். அதெப்படி அப்படிப் பிரித்து எழுதலாம்? பெண்களும் வாழ்க்கைக்குள்தானே இருக்கிறார்கள்…? அவர்களால் வாழ்க்கையைப் பற்றி எழுதமுடியாதா? அப்படி அது பெண்வெறுப்பு என்று இல்லாமற்கூட இருக்கலாம். ஆனால், ஏதோவொரு வித்தியாசம் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் இருக்கிறது. ரொம்ப நல்ல எழுத்தாளர்கள், ரொம்ப நல்ல நண்பர்களது வாயிலிருந்துகூட அப்படியான பேச்சு எப்படியோ வந்துவிடுகிறது.
அதற்கு என்ன காரணமாக இருக்கும்?
அப்படித்தான் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அதனால், அவர்களை அறியாமலே அது வந்துவிடுகிறது. வேண்டுமென்றோ நம்மை அவமானப்படுத்துவதற்காகவோ அவர்கள் அதைச் செய்வதில்லை. அதைச் சுட்டிக்காட்டுகிறபோது அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். நான் எழுதுகிறபோது ஆண்-பெண் உறவு என்று எழுதாமல் பெண்-ஆண் உறவு என்று எழுதுவேன். பெண்களை எப்போதும் ‘பரன்தீஸிஸ்’ ஆக வைத்து நான் எழுதமாட்டேன். ஆனால் அதை மொழிபெயர்ப்பவர் ஒரு பெண்ணாகவே இருந்தாலும் அதை ஆண்-பெண் என்று மாற்றிவிடுவார். அதற்குக் காரணம் அந்த மொழி நமக்குள் ஊறிப்போயிருப்பதுதான். அந்த மொழியில் முங்கித்தானே நாம் வெளியில் வரவேண்டியிருக்கிறது. நம்மையே சுயவிமர்சனம் பண்ணிப் பார்க்கிறபோது எத்தனையெத்தனை விசயங்களை நாம் முறிக்கவேண்டியிருக்கிறது, மூச்சுவிட்டு வெளியேறத் திணறவேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் விசயங்கள் இருந்தாலும், இலக்கியம் தேக்கநிலையில் இருப்பதாக நினைக்கவில்லை. எழுத்தாளர்கள் தேக்கப்பட்டுப் போயிருக்கலாம். ஆனால், நான் படிக்கிற இலக்கியங்கள் தேக்கப்பட்டுப் போயிருப்பதாக நினைக்கவில்லை. சிலசமயம், நமக்குப் பிடிக்காத நபர்கள்கூட நல்ல கதைகளை எழுதுகிறபோது அதை மனத்தடையில்லாமல் வாசிக்கமுடிகிறது. நான் கதைகளை அப்படித்தான் பார்க்கிறேன். அவர்களுடைய தனிப்பட்ட நிலைப்பாடுகள் நமக்கு உவப்பில்லாதபோதும், அந்தக் கதைகளை நான் கதைகளாக மட்டுமே பார்த்துப் படிக்கிறேன். ஆனால், அந்தக் கதைக்குள் தொக்கியிருக்கக்கூடிய மறைமுகமான அரசியல் நமக்கு நன்றாகத் தெரிகிறது. என்றாலும் தொடர்ந்து நல்ல இலக்கியம் வந்துகொண்டுதானிருக்கிறது. எழுதுவதைத் தவிர, எல்லோரையும் படிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. எந்தப் புத்தகம் வெளிவந்தாலும் அதை உடனேயே வாங்கிப் படித்துவிடுகிறேன். எனக்கு எழுத்து எந்தவகையில் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசை.
வலிந்து எழுதாமல், தவிர்க்க முடியாத இடங்களில்கூட பெண்களால் காமத்தைக் குறித்து மனத்தடை இல்லாமல் எழுதமுடிவதில்லை. வாசக முகம், சமூகத்தின் கண்ணோட்டம் பற்றிய பிரக்ஞை நினைவில் வந்து தடுத்துவிடுகிறது. அந்த இடத்தை நீங்கள் எப்படி மேவி வந்தீர்கள்?
நான் எழுதும்போது பெண்ணுடைய இச்சையைப் பற்றி எழுதுவது ஒரு தவறென்று நினைக்கவேயில்லை. பெண்கள் சாதாரணமாகப் பேசும்போது அதைப் பற்றி நிறையப் பேசுவதைக் கேட்டபோது அது பேசப்படாத ஒன்றல்ல என்பதைத் தெரிந்துகொண்டேன். ஒரு கதையை எழுத அமர்கிறபோது, ‘நான் பெண் இச்சையைப் பற்றிப் பேசப்போகிறேன்’என்று முன்தீர்மானம் செய்துகொண்டு அமர்வதில்லை. அதனால் அதை நான் மீறுவதாகவே நினைக்கவில்லை. ஆனால், ‘நான் காமத்தைக் கொண்டாடும் ஒரு கவிதையை எழுதப்போகிறேன்’என்று சொல்லிவிட்டு எழுதும்போதுதான் பல தடைகள் ஏற்படுகிறது என்று எண்ணுகிறேன். எழுத்து தன்னிச்சையான ஒரு செயலாக இருந்தால், நமக்கு எந்தத் தடையும் இருக்காது. ஒரு கதையில் ஒரு பெண்ணினுடைய இச்சையைப் பற்றி எழுதித்தானாக வேண்டும் என்றால் எழுதித்தானாக வேண்டும். குட்டி ரேவதி எழுதிய ‘முலைகள்’ மாதிரி ஒரு கவிதையை எழுதுகிறபோது தன்னிச்சையாக அருவிமாதிரி வருகிறது. தவிர, மனைவி-கணவன் உடலுறவின்போதுகூட அதில் அந்தப் பெண்ணுடைய வாழ்க்கை அரசியல் எவ்வளவு பொதிந்திருக்கிறது என்று சல்மா மாதிரி எழுதுகிறபோது, ஒரு பெண்ணினுடைய வாழ்க்கை பற்றி எழுதுவதாக நினைக்கிறார்களே தவிர, இதுபோல வேறு யாரும் எழுதவில்லை நான் எழுதுகிறேன் என்று தன்னை அடையாளப்படுத்த நினைப்பதில்லை.
உங்களுக்கு முன்னோடியாக இருந்த எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பாக பெண் எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…
ராஜம் கிருஷ்ணன், சூடாமணி இவர்களெல்லாம் எனக்கு முன்னோடிகளே! ஆனாலும், நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அதிகம் படித்தது தி.ஜானகிராமன், லா.ச.ரா. போன்றவர்களைத்தான். அப்போது கலைமகள் பழைய எழுத்தாளர்களாகிய சரஸ்வதி அம்மாள், சாவித்திரி அம்மாள், குகப்ரியை, குமுதினி ஆகியோரது எழுத்துக்களை வெளியிட்டு வந்தது. குகப்ரியை நடத்திய ‘மங்கை’போன்ற பத்திரிகைகளெல்லாம் எங்கள் வீட்டில் எடுப்பது கிடையாது. கலைமகள், ஆனந்த விகடன் எடுப்பார்கள். நான் சுதந்திரத்துக்குப் பிறகு வந்த தலைமுறையைச் சேர்ந்தவள். அதனால் என்னுடைய எண்ணங்கள் சில முன்னையவற்றிலிருந்து மாறுபட்டிருந்தன. பெண்களுள் ராஜம் கிருஷ்ணனும் சூடாமணியும் லஷ்மியும் பிரபலமாக இருந்தார்கள். லஷ்மி டாக்டராக இருந்தவர். அவரது எழுத்தில் விமர்சனங்கள் இருந்ததுதான். எனினும், வேலை பார்க்கிற, படிக்கிற பெண்கள் அவர்களது குழப்பங்கள் பற்றி எழுதியவர் என்றவகையில் அவர் பிரபலமாக இருந்தார். எனினும், நான் எழுதவந்த அறுபதுகளில் எழுதிக்கொண்டிருந்தவர்களுள் மிகவும் புரட்சிகரமான எழுத்தாளர் என்று அறியப்பட்டிருந்தவர் ஜெயகாந்தன்தான்.
நாற்பதுகளும் ஐம்பதுகளும் மொழிபெயர்ப்புக் காலம். ரஷ்ய நாவல்கள், பெங்காலி, மராட்டி, குஜராத்திக் கதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தன. த. நா. சேனாதிபதி, த. நா. குமாரசாமி ஆகிய இரண்டு சகோதரர்களும் அந்த மொழிபெயர்ப்புகளுள் பெருவாரியானவற்றைச் செய்தார்கள். பெங்காலி இலக்கியத்தைப் படித்துப் படித்து மனதுள் புரட்சிகரமான பெங்காலி இளைஞன் ஒருவன் இருந்தான். தாகூர், விவேகானந்தர், ராமகிருஷ்ணர் இவர்களெல்லாம் கலந்த ஒரு இளைஞன்… திருமணம் செய்தால் இப்படியொருவனைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நினைப்பெல்லாம் இருந்தது. அப்புறம் பார்த்தால் அவனும் அப்படியொன்றும் வித்தியாசப்பட்டவன் இல்லையென்று தெரிந்துபோயிற்று (பெரிதாகச் சிரிக்கிறார்). அப்படியொரு கற்பனைக்குத் தூண்டுதலாக இருந்தவை தமிழில் படித்த இந்த பெங்காலி மொழிபெயர்ப்புக் கதைகள்தாம்.
அப்போது ஜெயகாந்தன்தான் புரட்சிகரமான எழுத்தாளர் என்று அறியப்பட்டிருந்தார். அவரது அக்னிப் பிரவேசம் கதையைப் படித்திருப்பீர்கள். அந்தக் கதையில் "கெட்டுப்போய்" (இவர்களது வார்த்தைகளின்படி) வீடு வந்த பெண்ணின் தலையில் தண்ணீரை ஊற்றிய தாயார் சொல்வார், ‘இதுதான் உன்னைச் சுத்தப்படுத்தற கங்கை’என்று. அதைப் படித்த எல்லோரும் வியந்துபோய்ச் சொன்னார்கள்… ‘யாரால் இப்படிப் புரட்சிகரமாக எழுதமுடியும்?’என்று. ‘அவள் எந்தவகையில் கெட்டுப்போய்விட்டாள்? அவளது தலையில் கங்கையை ஊற்றிச் சுத்தப்படுத்த வேண்டிய தேவை என்ன இருந்தது?’ என்று அந்தக் கதையைப் படித்தபோது எனக்குத் தோன்றியது. எனக்கு மட்டுமல்ல… என்னோடு உரையாடலில் இருந்த சில தோழிகளுக்கும் அதே எண்ணந்தான். அப்புறம் அந்த கங்கா கங்கையிலேயே செத்துப்போய்விடுவாள். நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் பட்டிமன்றம் நடக்கும்… கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?என்று… எப்போது பார்த்தாலும் இதே பட்டிமன்றந்தான். ஒருதடவை கொஞ்சம் வித்தியாசமான தலைப்பில் அதாவது, ‘பெண்களுடன் சேர்ந்து படிப்பதால் ஆண்களுக்கு நன்மையா? தீமையா?’என்றொரு பட்டிமன்றம் நடந்தது. நிறைய ஆண்கள் வந்து பெண்கள் மாதவிகளாக வந்து எங்களை மயக்குகிறார்கள் என்றெல்லாம் பேசினார்கள். நான் பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளவில்லை எனினும் குறிப்புச் சொல்லும்போது சொன்னேன்… ‘எப்போது பார்த்தாலும் பெண்கள் மாறிவிட்டார்கள் மாறிவிட்டார்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறீர்களே… ஆண்கள் மாறவில்லையா? முன்பு குடுமி வைத்திருந்தவர்கள் இப்போது கிராப்பு வைத்துக்கொள்ளவில்லையா? முன்பு வேட்டி கட்டியவர்கள் இப்போது பான்ட் போட்டுக்கொள்ளவில்லையா?”என்று கேட்டேன்.
அந்தப் பட்டிமன்றத்திற்குத் தலைமை தாங்கியவர் ஜெயகாந்தன். அவர் பேசும்போது ‘பெண்களை எப்போதும் காமத்தை ஊட்டுபவர்களாகப் பேசுகிறார்கள். அது தவறு. நடைபாதைகளில்கூட மனிதர்கள் படுத்துக்கொள்வதை நாம் பார்க்கிறோம்… அது உங்களுக்குக் காமத்தை ஊட்டவில்லை; பெண்கள் உங்களோடு சேர்ந்து படிப்பதுதான் உங்களுக்குக் காமத்தை ஊட்டுகிறதா?”என்று கேட்டார். பேச்சின் முடிவில், “ஆனால், நீங்கள் ஒரு பொதுமேடையில் பேசுகிறபோது நாகரிகமாக, நயமாகப் பேசவேண்டும்”என்று சொன்னார். ஏனென்றால், அந்த மேடையில் அந்தளவிற்கு நான் கத்திப் பேசியிருந்தேன்.
அவருடைய பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பேசும் கூட்டங்களுக்கு சமயம் கிடைக்கிறபோதெல்லாம் போவேன். அவர் ஒரு கூட்டத்திலே பேசுகிறபோது, ‘எம்.ஜி.ஆர்.தலையிலே இருக்கிறது டோப்பா’என்றெல்லாம் கத்திப் பேசினார். அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதிப்போட்டேன். “மேடையில் நாகரிகமாக, நயமாகப் பேசுவது பற்றி நீங்கள் கல்லூரியில் வந்து சொன்னீர்கள். ஆனால், அதேபோல நீங்கள் கத்திப் பேசுகிறீர்களே…! மனோதத்துவரீதியில் நீங்கள் ஒரு ஸ்பிலிட் பர்சனாலிட்டியா?" என்று அதில் கேட்டிருந்தேன். அந்தக் கடிதத்தை அவர் படித்திருக்கமாட்டார் என்று நினைத்தேன். ஆனால், பிறகொரு கூட்டத்தில் பேசும்போது, என்னைக் கூப்பிட்டு,“நீங்கள் மட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவிதானே..? உங்கள் கடிதத்தை நான் படித்தேன். நீங்கள் சொன்னது சரிதான். நாம் பேசும்போது சிலசமயங்களில் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறோம்” என்றார். நிறையப் பேர் தமது தவறை ஒத்துக்கொள்வதில்லை… என்னிடம் அவர் அப்படி ஒத்துக்கொண்டதைக் கேட்டபோது அவர் ஒரு ஜென்டில்மன் என்பதை உணர்ந்தேன். ஆனாலும், அவரது கதையைப் பற்றிய விமர்சனத்தை நான் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை.(சிரிக்கிறார்)
அப்படி அந்தக் காலத்திலே வந்த கதைகளை விவாதிக்கக்கூடிய ஒரு சூழல் இருந்தது. அவருடைய அந்தக் கதைக்கு பெண் எழுத்தாளர்கள் தந்த பதில் என்னை மிகவும் பாதித்தது. கதையில் வந்த அந்தப் பெண் அந்த அனுபவத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தால் அவலட்சணமாகப் போய்விட்டதுபோலவும் நெருப்பில் எரிந்து சாவதுபோலவும் அகோரமாகப் போய்விட்டதுபோலவும் பெண் எழுத்தாளர்கள் எழுதியிருந்தார்கள். ‘நல்ல விதவிதமான சாப்பாடு சமைத்து புருசனுக்குப் பரிமாறிவிட்டு அந்த மேசையில் வைத்து இவ்வளவு வன்முறை பொதிந்த கதைகளை இவர்களால் எப்படி எழுதமுடிந்தது?’என்று எனக்குக் கோபமாக இருந்தது. பெண்களுக்குள்ளேயே இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. எல்லோரும் சொல்கிறார்கள் பெண்கள் என்றால் தாய்மை, மென்மை, நயம் பொருந்தியவர்கள் என்று… அதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். தாய்மார்களிலேயே எத்தனை கொடுமையான தாய்மார்களை நாம் பார்த்திருக்கிறோம். பெண் என்றால் இப்படித்தான்.. ஆண் என்றால் இப்படித்தான் என்ற நியமங்களையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
நீங்கள் இப்படிச் சொல்கிறபோது ஒன்றைக் கேட்கத் தோன்றுகிறது. உங்களைக் குறித்து, “இவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர்”, “பெண் தன் சுய ஆளுமையையும் தன் சுதந்திரத்தையும் வலியுறுத்தும்பொது அது தன் அழகுகளையும் நயங்களையும் துறக்கத் தேவையில்லை என்பதற்குச் சான்றாக இருந்தவர்”என்று கட்டுரையொன்றில் வெங்கட் சாமிநாதன் சொல்லியிருந்தாரல்லவா? உங்களைக் குறித்துச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?
அதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. சுதந்திரமாக இயங்கக்கூடிய பெண் வந்து ஆண்களால் வரையறை செய்யப்பட்ட பெண் நயங்களை விட்டுவிட்டாள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. என்னால் மிகவும் மதிக்கப்படுகிற வெங்கட் சாமிநாதனால் அது சொல்லப்பட்டாலும்கூட என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இசை, பரதநாட்டியம் தெரிந்த நயமுள்ள பெண் என்பதுபோல அவர் சொல்லியிருப்பார். அவற்றையெல்லாம் பயின்றிருப்பது வேறு… பெண் நயங்கள் என்று என்னால் கருதப்படுபவை வேறு. இது ஆரம்பத்திலிருந்து இருக்கிறது. கல்வியைப் பற்றிச் சொல்கிறபோது, பெண்கல்வியானது பெண்ணின் தன்மைகளைக் குலைக்கக்கூடாது என்று சுயமரியாதை இயக்கப் பெண்கள்கூட சொல்லியிருக்கிறார்கள். பெண்தன்மை என்று அவர்கள் கருதுபவற்றுள் மிக முக்கியமானது, தாய்மை! என்னால் மிகவும் மதிக்கப்பட்ட எழுத்தாளர்கள்கூட, ‘உங்ககிட்ட இருக்கிற பெண்தன்மை, நயங்களை நீங்கள் விட்டுக்கொடுக்கவில்லை’என்று சொல்வார்கள். அவர்களது மனங்களில் பெண்தன்மை குலையாத ஒரு பெண் இருந்துகொண்டேயிருக்கிறாள். அவளை நம்மால் வெளியில் எடுக்கமுடியாது.
நீங்கள் 5 சிறுகதைத் தொகுப்புகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஆவணப் பதிவுகளும் வெளியிட்டிருக்கிறீர்கள். அதேபோல அந்நாட்களில் நிறையப்பேர் அதாவது ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, பூரணி, ஹெப்சிபா ஜேசுதாசன், வாஸந்தி, சிவசங்கரி, அநுத்தமா, பூரணி, அனுராதா ரமணன், லஷ்மி இப்படி நிறையப்பேர் உரைநடை எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போதோ கவிதையிற்போல உரைநடையிற் பெருமளவு பெண்கள் எழுதுவதில்லை. அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?
என்னுடைய அனுபவத்தின்படி என்ன தோன்றுகிறதென்றால், கவிதை எழுதுவதென்பது ஒரு எளிதான விசயமில்லை. அவ்வளவு எழுதச் சிரமமான வடிவத்தில் எழுதியவர்களால் பிறகு உரைநடையில் எழுதமுடிவதில்லை. கவிதை எழுதுவதற்கென்று ஒரு மனநிலை இருக்கிறது. கவிதை எழுதுபவர்கள்கூட உரைநடையில் எழுதுகிறபோது அவ்வளவு இரசிக்கும்படியாக இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் எழுத ஆரம்பித்தால் சிறுகதைதான் எழுதவேண்டும் என்றொரு எண்ணம் இருந்தது. அதனால்தான் நிறையச் சிறுகதைகள் வெளிவந்தன. அப்போது இரா.மீனாட்சியைத் தவிர யாருமே கவிதை எழுதவில்லை. பிறகு பெரியதொரு அலையாக வந்தார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால், நானும் கவிதை எழுத முயற்சித்து முடியாமல் விட்ட காரணத்தால் அத்தனை பேர் கவிதை எழுத வந்தது எனக்கு உவப்பான விசயமாக இருந்தது. எனக்கு சே.பிருந்தாவின் கவிதைகள் பிடிக்கும். முதற்தொகுப்பு கொண்டுவந்ததிலிருந்து அவதானித்து வருகிறேன். அவளுடைய கவிதைகளில் சில இடங்களில் சிறு குறும்பு இருக்கும். நிஜ வாழ்க்கையில் குறும்பாக இருப்பது வேறு… அதை எழுத்தில் கொண்டுவருவது எளிதில்லை.
நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் பம்பாயின் தமிழிலக்கியச் சூழல் எப்படி இருக்கிறது? எழுத்தாளர்-வாசகர் வட்டம் என்று ஒன்று இருக்கிறதா?
இருக்கலாம். பம்பாய் தமிழ்ச் சங்கத்தோடுகூட எனக்கு அவ்வளவாக உறவு இல்லை. ஆனால், அங்கு இருக்கிற சில எழுத்தாளர்களோடு எனக்குத் தொடர்பு இருக்கிறது. நாஞ்சில் நாடன் முன்பு பம்பாயில்தான் இருந்தார். அவரோடு எனக்கு நல்ல நட்பு இருந்தது. இப்போது, அங்கு இருக்கும் புதிய மாதவி, மதியழகன் சுப்பையா இவர்களோடெல்லாம் நல்ல நட்பு இருக்கிறது. வாசகர்கள் என்று பார்க்கும்போது, குமுதம், ஆனந்தவிகடன் படிக்கிற வாசகர்கள்தான் அங்கு அதிகமாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது. என்னைப்போன்றவர்களுடைய எழுத்துக்களைப் படிக்கிற சில பேர் அங்கு இருப்பார்கள்… ஆனால், அவர்கள் தொலைபேசியில் அழைத்து, ‘நான் உங்க வீட்டுக்கு வரணும்னு இருக்கேன்… உங்க கதையெல்லாம் விமர்சித்துச் சொல்லணும்… உங்க கதையெல்லாம் எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும்’என்பார்கள். அதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்களென்றால், பெண்கள் படிக்கிற கதைகளைத்தான் நாம் எழுதுகிறோமாம்… ஆண்கள் படித்தால் அதை விமர்சனந்தான் செய்வார்களாம். பம்பாயில் எனக்குத் தெரியாத தமிழர் வாழ்க்கைமுறை மதியழகனுக்குத் தெரிந்திருக்கிறது.
‘முன்னைய காலங்களில் இருந்ததுபோல, இப்போது தீவிர இலக்கிய சஞ்சிகை என்று சொல்லக்கூடிய ஒன்று தமிழில் இல்லை… இருப்பவையெல்லாம் ஜனரஞ்சக சஞ்சிகைகளும் இடைநிலை இதழ்களுந்தான்’ என்று சிலரால் பேசப்படுவது பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?
இப்போது வியாபாரப் பத்திரிகைகளுடைய பெருக்கம் அதிகமாகத்தான் இருக்கிறது. இலக்கிய சஞ்சிகைகளும் பலதரப்பட்ட பணத்தட்டுப்பாட்டின் காரணமாக விளம்பரங்களை நாடிச் செல்லவேண்டியிருக்கிறது. எல்லோரும் தங்களுடைய பத்திரிகையும் விற்கப்படவேண்டும் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். சிலபேர் அதுவொரு வியாபாரந்தானே என்று சொல்கிறார்கள். பத்திரிகை என்றால் நேர்த்தியாகக் கொண்டுவரப்படவேண்டும்; அதற்கான பணத்தை விளம்பரங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பதில் தவறொன்றுமில்லை. அதனுள் இருக்கிற உள்ளடக்கம் செறிவாக இருந்தால் போதுமானது. ஒரு பொருள் விற்பதனாலேயே அது மோசம் என்று நாம் சொல்லமுடியாது. உதாரணமாக, எங்களுடைய ஸ்பாரோவைச் சேர்ந்தவர்கள் ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பெண்களைப் பற்றி பத்துப் படங்கள் பண்ணினோம். அவற்றுள் இரண்டு படங்கள் திரையிடப்பட்டவுடன் ஒரு கூட்டம் வைத்திருந்தார்கள். அங்கு வந்திருந்த இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் என்னைக் கூப்பிட்டு…“இந்தப் படங்களெல்லாம் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மூன்றாமுலக நாட்டிலிருந்து வரக்கூடிய படங்களில் சில குறைபாடுகள் இருக்கவேண்டும்…நீங்கள் இதை மிகவும் அழகாக எடுக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறீர்கள். இவ்வளவு நன்றாக இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”என்றார். எனக்குக் கோபம் வந்துவிட்டது… “நாங்கள் பம்பாயிலிருந்து வருகிறோம்… அங்கு ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான படங்களை எடுக்கப்படுகின்றன… எனது கணவர் ஒரு இயக்குநர்… அதெப்படி எங்களால் தரமில்லாமல் எடுக்கமுடியும்?”என்று சண்டை போட்டேன். அதுபோல, தீவிர இலக்கியப் பத்திரிகை என்றால் சிரமப்பட்டு, குறைபாடுகளோடுதான் வெளிக்கொணரப்படவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இந்த வியாபாரப் பத்திரிகைகளுக்கும் இலக்கியப் பத்திரிகைகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. இரண்டும் வெவ்வேறு எல்லைகளில் இருந்தன. இப்போது அப்படியில்லை… இலக்கியப் பத்திரிகைகளில் எழுதுகிறவர்கள்கூட வியாபாரப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் பத்தி எழுதுகிறார் என்பதனால் அதை வைத்து அவருடைய கதையை நான் எடைபோடமுடியுமென்று தோன்றவில்லை. அதேபோல காலச்சுவடு, உயிர்மை, மணல்வீடு பத்திரிகைகள் நல்ல தரமாகக் கொண்டுவருகிறார்கள். வியாபாரப் பத்திரிகைகள் வடிவமைப்பில் தரமாக வருகிறபோது நாமும் அதற்கேற்ப தரத்தை உயர்த்தவேண்டியிருக்கிறது. அதேசமயம், உள்ளடக்கத்தின் தரமும் தேயாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
இங்கே கனடாவில் இருக்கிற வாசகர்கள் தெரிந்துகொள்வதற்காக, ஸ்பாரோவின் வேலைத்திட்டங்கள் பற்றிச் சொல்லமுடியுமா?
ஒருகட்டத்தில், பெண்களுடைய வரலாறு, அவர்களது வாழ்வில் இருக்கக்கூடிய அன்றாட அரசியல், பெண்கள் இயக்கம் இவற்றையெல்லாம் ஆவணப்படுத்தவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அது வாய்மொழி வரலாறாக மட்டுமல்லாமல், புகைப்படங்கள், பத்திரிகைகளில் வரக்கூடிய பல விசயங்கள் - குறிப்பாக விளம்பரங்கள்- நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துவதன் மூலமாக பெண் என்ன மாதிரியான சூழ்நிலையில் வாழ்கிறாள் என்பதைப் பதிந்துவைக்க நினைத்தோம். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டுத்தான் ஸ்பாரோவை நடத்திவருகிறோம். எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட மேம்பாட்டுப் பொருளாதாரத்தில் இந்த ஆவணப்படுத்துதல் பொதுவாக உள்ளடக்கப்படவில்லையாதலால் சிரமத்தை எதிர்நோக்கவேண்டியேற்பட்டது. ‘நாங்கள் பத்தாயிரம் புகைப்படங்களைச் சேகரித்திருக்கிறோம்’என்று சொல்லமுடியாது. நாங்கள் செய்வது பண்புசார்ந்த விசயம். மேம்பாட்டுப் பொருளாதாரத்தில் இருக்கிற ஒரு நாட்டில் ஆவணப்படுத்தல் அவசியமில்லை என்றொரு மனநிலை இங்கு நிலவுகிறது. எதிர்நீச்சல் போட்டுத்தான் அந்த மனநிலையைக் கடக்கவேண்டியிருக்கிறது. நாங்கள் பண்ணியிருக்கிற பல வேலைகளைப் பற்றி எங்கள் வலைத்தளத்தில் பதியப்பட்டிருக்கிறது.
இந்தக் கனடியத் தமிழிலக்கிய சூழல் பற்றிக் குறிப்பாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
கனடியத் தமிழிலக்கியச் சூழல் எனும்போது அது உண்மையில் இலங்கைத்தமிழிலக்கியச் சூழல் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. ஏனென்றால், இந்தியத்தமிழர்கள் யாரும் இப்படியொரு கருத்தரங்கை நடத்தியதாகவோ இயல் போன்றதொரு விருதைக் கொடுப்பதாகவோ நான் அறியவில்லை. அமெரிக்காவிலுள்ள விளக்கு அமைப்புக்கூட ரொம்பநாள் கழித்துத்தான் வந்தது. என்றாலும், அமெரிக்காவில் இருக்கக்கூடிய தமிழ்ச்சங்கங்கள்கூட இப்படிச் செயற்படுவதாக எனக்குத் தெரியவில்லை. பாரிஸூக்குப் போனாலும்… எங்கு போனாலும் தமிழ் பற்றிய விவாதம், எழுத்து குறித்த உரையாடல் எல்லாவற்றையும் செய்பவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அங்கெல்லாம் இருக்கும் எனது நண்பர்களுள் பெரும்பாலானோர் இலங்கைத்தமிழர்கள்தாம். இந்தியத்தமிழர்கள் யாரும் இப்படியொரு பத்திரிகையை நடத்துவதாகத் தெரியவில்லையே…!
குறுகிய கால அவகாசத்தில் தாய்வீடு பத்திரிகைக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி இந்த நேர்காணலை வழங்கியமைக்காக நன்றி.
ரொறன்ரோவில் (கனடா) வெளியாகும் “தாய்வீடு“ ஜூன், 2014 பத்திரிகையில் வெளியாகிய நேர்காணல்
நேர்கண்டவர் : தமிழ்நதி
5 comments:
I'm really enjoying the design and layout of your blog.
It's a very easy on the eyes which makes it much more enjoyable
for me to come here and visit more often. Did you
hire out a designer to create your theme? Fantastic work!
My web-site ... meilleurs casino en ligne
Wonderful post. I am very happy to read your blog after a long time. Thanks.
தேவை இந்தப் பதிவு. அருமை அருமை
இந்த நேர்காணலின் மூலம் அம்பையைப் பற்றி முழுதுமாக அறிந்து கொள்ள முடிந்தது. அவரது கம்பீரமும் அசாத்திய தன்னம்பிக்கையும் அவர் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. பகிர்விற்கு மிக்க நன்றி தமிழ்நதி.
Post a Comment