
முன்னரெல்லாம்
மழையுடனான உறவு
நெகிழ்வூட்டுவதாயிருந்தது.
பிரியமான தோழியைப்போல
எதையேனும்
எடுத்துவராமல் அது வந்ததில்லை.
குறிப்பாக ஞாபகங்களை…
அவை குளிர்நாளில் கம்பளிபோல்
கதகதப்பானவை.
நிலத்தில் குதித்துக் குமிழியிட்ட
நீர்த்தாரைகள்
எழுதவைத்திருக்கின்றன
எண்ணற்ற கவிதைகளை.
நீங்கள் அறிவீர்கள்
மழைநாளின் யன்னல்களைப்பற்றி…
எத்தனை ஓவியங்களை
எடுத்துவந்திருக்கின்றன வீட்டிற்குள்.
கூடிக்கலந்து சலசலத்து விரையும்
சாலைத்தண்ணீர்
இழந்துபோன குழந்தைமையை
விரல்பற்றிக் கூட்டிவந்ததையும்
மறப்பதற்கில்லை.
விரித்த புத்தகத்தின் வரிகளில்
வெறுமனே விழியோட்டிய
அன்றைய மாலையில்
அது காதலை அழைத்துவந்திருந்தது.
மௌனமும் மழைமுகிலும்
கனத்த பொழுது அது.
மழை விட்ட பொழுதுகளையும்
குறைசொல்வதற்கில்லை.
முற்றத்தின் தூய்மை…
புல்லின் சிலிர்ப்பு…
பூக்களின் அதீத மலர்ச்சி…
இலைநுனி வழி சொட்டிய நீர்த்துளி யாவும்
கிளர்த்தியிருந்தன மெல்லுணர்வை.
வரவிருக்கிறது மழை.
வெளிக்கொடியில் உலரும்
அவனது துணிகளை
நனைத்துவிடுவதான அச்சுறுத்தலைத்தவிர
இந்நாட்களில் எதையும் எடுத்துவராத
மழையை நினைக்க
துயரமாய்த்தானிருக்கிறது.