2.13.2007

சென்னை என்றொரு வேடந்தாங்கல்


இரண்டு மூன்று நாட்களாக வெயிலின் உக்கிரம் தணிந்திருக்கிறது. கடல் தாண்டிப் பொருள் தேடப் போன கணவனைப் போல, மழை ‘வருகிறேன்… வருகிறேன்’என்று போக்குக்காட்டி ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. ஓரிடத்தில் இருக்கவிடாமல் சன்னதம் கொண்டெழுப்பி அலையவைப்பதில் வெயிலுக்கு நிகர் வெயிலே. ஆற அமர்ந்து யோசிக்கும்போது மனசை மலர்த்துவதும் உலர்த்துவதும்கூட காலநிலையின் வேலைகளில் ஒன்றெனப் புரிந்துகொள்ள முடிகிறது. தொலைகடலைக் காட்சிப்படுத்தும் ‘பல்கனி’யில் காற்று, காயப்போட்ட துணிகளுடன் செல்லங் கொண்டாடுகிறது. கன்னத்தை நிமிண்டுகிறது. மேசையிலிருக்கும் புத்தகங்களை இடையறாமல் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்தக் காற்றில் ஊஞ்சலில் அமர்ந்து கண்மூடிக் காலுந்தினால் சொர்க்கத்திற்குப் போய்விடலாம் போலிருக்கிறது.

மிகச் சரியாக ஓராண்டிற்கு முன் இதே இடத்தில் வெறுமை வழிய அமர்ந்திருந்தது நினைவிலிருக்கிறது. யாருமற்ற வெளியில் தனித்துவிடப்பட்டதான ஓருணர்வு. போர் குறித்து யாரிடத்தில் முறையிடுவது…? இருப்பற்று அலைதல் என் தேர்வென்றான பிறகு யாரைத்தான் நோவது…? ஒரு கவிதையில் எழுதியிருந்ததுபோல ‘சொந்த மண்ணுமில்லை… தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை’எனும் விரக்தியின் விழிகளால் இம்மாநகரை அப்போது நான் பார்த்திருக்க வேண்டும். அந்நாட்களில், பார்வை ஒரு பறவையைப்போல கட்டிடக் காட்டினிடையே மரங்களைத் தேடித் தேடி அலைந்து அமர்ந்தது. சூரியஒளி பட்டுப் பளீரிடும் தென்னங்கீற்றில், அணிற்பிள்ளையின் கீச்சிடலில், கீரை விற்றுப் போகும் பெண்ணின் நலிந்த குரலில் ஓரிரு கணங்கள் கிராமத்திற்கு மீண்டிருக்கிறேன். மற்றபடி மாநகரம் என்பது தனிமையை வளர்ப்பதுதான். ‘லிப்ற்’இல் அயலவரைச் சந்திக்க நேரும்போது புன்னகைப்பதா வேண்டாமா என்று முன்னிற்பவரின் முகத்தை ஆராய்ந்து முடிவெடுக்கும் சங்கடமான தருணங்களைத் தரும் இம்மாநகர வாழ்வைக் கொண்டாட முடியவில்லை.

போர் பசிகொண்ட விலங்காக சொந்த மண்ணை விழுங்கிக்கொண்டிருக்கிறது. செய்தி வழங்கும் இணையத்தளங்களை ‘பெரிதாக எதுவும் ஆகிவிட்டிருக்கக்கூடாதே…!’ என்ற பதைப்புடனும் குற்றவுணர்வுடனும் வாசிக்கிறோம். தொலைவிலிருந்தபடி செய்திகளாக மட்டும் தாய் மண்ணைப் பார்ப்பதென்பதே எமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

குளிரூட்டப்பட்ட வண்டிகளில்தான் ஏறுவேன் என்று ‘எலிசபெத் ராணி’வகையறாவாய் அடம்பிடித்த உடலை, ஆட்டோவின் சடசடப்புக்கும் தூக்கிவாரிப் போடலுக்கும் புகைக்கும் தூசுக்கும் பழக்கப்படுத்தியாயிற்று. மாயாஜால் திரையரங்கின் சொகுசிலிருந்து கீழிறங்கி, அருகிலேயே இருக்கும் ‘பிரார்த்தனா’வில், வில்லனின் அடியாட்களிலொருவனின் கழுத்தின் இடப்புறத்தில் செருகும் கத்தி வலப்புறமாக வெளிப்படும் ‘போக்கிரி’யை விசிலடிச்சான் குஞ்சுகளுடன் ரசிக்க முடிகிறது. இடையிடையே மின்சாரம் தடைப்பட்டால், விஜய்க்கு ஈடாக வசனம் பேசிக் கோபம் கொள்கிறவர்களை ‘அதான் வந்துடுமில்ல…விடுவியா…’எனப் பார்க்கும் ‘சகிப்புத்தன்மை’ வந்துவிட்டது. மேலும், தமிழக நண்பர்களுடன் பேசிப் பேசி ‘தமிழை’ஒரு வழிபண்ணியாயிற்று. ‘இன்னாம்மா கேரளாவா…?’என்ற கேள்வியை இப்போது எந்தக் கடைக்காரரும் கேட்பதில்லை. கத்தரிக்காய், பழம் இன்னபிறவற்றில் பேரம் பேச முடிகிறது(அது கைவரவில்லை என்பது வேறு விடயம்)

முன்பே சொன்னதுபோல கடல் இல்லாத சென்னையைக் கற்பனை செய்யமுடியவில்லை. எந்தப் புகையும் தூசியும் மாசுபடுத்திவிட முடியாத படிகமாகப் பரந்திருக்கும் கடல் மீதான காதல் சொல்லி மாளாதது. இருளில் காற்றுப்புகா நெருக்கத்தில் அமர்ந்திருக்கும், ஒருவர் மடியில் மற்றவர் படுத்திருக்கும் எத்தனை காதலர்களை இந்தக் கடல் பார்த்திருக்கும்! எத்தனை முத்தங்களுக்குக் கண்களை மூடிக்கொண்டிருக்கும்! எத்தனை கபடம் செறிந்த வாக்குறுதிகளை அது கேட்டிருக்கும்! தன் மடியில் உதிர்ந்த கண்ணீர்த்துளிகளையும் இரகசியங்களையும் கடல் எந்த ஆழத்தில் இட்டு வைத்திருக்கும். அன்றைக்குக் கடற்கரையோரமாக நடந்துபோகும்போது ஒன்று தோன்றியது… பொய்களைக் கேட்டுக் கேட்டுச் சகிக்க மாட்டாமல்தான் கடல் மனிதர்கள் மீது பாய்ந்ததோ என்று. பௌர்ணமி நெருங்கும் இரவுகளில் கடல் அழகிய கவிதையாகிவிடுகிறது. நிலவின் கீற்று கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அற்புதமாகப் படர்ந்திருக்க…. அலை திரண்டு குதித்துக் குதித்து ஓடிவந்து கரையில் பொங்கி உடைவதைப் பார்க்கும்போது உள்ளுக்குள் எதுவோ பொங்கும். கரையும். உலகத்தின் அற்பத்தனங்களையெல்லாம் அந்தப் பேரனுபவம் சற்றைக்கு மறைத்துவிடுகிறது.

சென்னையொரு முரண்வெளியென்பதன் மீதான வியப்பு தீரவே தீராதிருக்கிறது. நாகரீக உடையணிந்த ஆண்களும் பெண்களும் பளபளக்கும் முகங்கள், இடுப்பில் அல்லது கழுத்தில் வேலை வழங்கிய அடையாள அட்டைகள் அசைய கைத்தொலைபேசிகளில் சர்வசதாகாலமும் பேசியபடி நடந்துகொண்டும் மோட்டார்சைக்கிள்களில் பின்னிருத்திய தத்தமது தேவதேவதைகளுடன் பறந்துகொண்டுமிருக்கிறார்கள். ‘ரைடல் பார்க்’(டைடல்?)போன்றவை ‘மின்னியல் நகரம்’எனப்படும் பெங்களுருக்கு ஈடாகச் சென்னையை அழைத்துப் போய்விடும் சாத்தியங்களைக் காணமுடிகிறது. ‘ரைடல் பார்க்’ அமைந்திருக்கும் வழிநெடுக ‘திடீர்’மரங்கள் தோன்றியிருக்கின்றன. இரவோடிரவாக நட்டு நீரூற்றி உயிர்கொடுத்திருக்கிறார்கள். நவீன ஓவியங்கள், நவீன அமைப்புடன் கூடிய பேரூந்து தரிப்பிடங்கள், செயற்கை நீரூற்று என்று கொஞ்சம்போல மயக்கம் தருகிறது.

மறுபுறம், அதற்கு சற்றே அருகில் கேலிச் சித்திரங்கள் போன்ற மனிதர்கள் கல்,மண் இன்னபிறவற்றைத் தலையில் சுமந்து வேலை செய்வதைப் பார்க்கும்போது, அவர்கள் உடலில் வயிறு என்ற ஒன்று மட்டுந்தான் இருப்பதாகத் தோன்றும் கற்பனையை எவ்வளவு முயன்றும் கலைக்க முடியவில்லை. இரவுக்குள் விற்றுமுடித்துவிடவேண்டுமே என்ற கவலை முகத்தில் அப்பியிருக்க அமர்ந்திருக்கும் பூக்காரி, ‘காலைலேர்ந்து சாப்பிடலைக்கா’எனக் கையேந்தும் சிறுமி,குடித்துவிட்டு நடைபாதையில் சண்டை போடும் கணவனை அவிழும் கொண்டையை முடிந்து முடிந்து இழுத்துத் தோற்றுக்கொண்டிருக்கும் கட்டிடத் தொழிலாளி,யார் அழைத்தாலும் வாலாட்டிப் பின்னால் ஓடிவந்துவிடக்கூடியதான பார்வையுடன் பசியோடு அலையும் தெரு நாய்கள்…. கொளுத்தும் வெயிலில் வீதியோரத்தில் சாவகாசமாகப் படுத்துறங்கிக் கொண்டிருக்கும் ஆண்கள்…என சென்னை இரு முகம் கொண்ட திருநகரம்தான்.

எங்கு பார்த்தாலும் சனங்கள் நெரிந்துகொண்டிருக்கும் தெருக்கள் பரிச்சயமாகியிருக்கின்றன. அண்ணாசாலையில் ஸ்பென்சர், பாண்டி பஜாரில் போத்தீஸ்,ராதாகிருஷ்ணன் சாலையில் அஞ்சப்பர் உணவகம், பனகல் பார்க்கில் நியூ புக் லாண்ட், கிரீம்ஸ் வீதியில் அப்பொலோ வைத்தியசாலை, பாலத்தின் கீழ் கூவம், அடையார் சிக்னல் அருகில் பழமுதிர்ச்சோலை… சற்று தள்ளிப் போனால் காந்தி நகரில் நெய் மிதக்கும் பால் கோவாவுடன் ‘கிரான்ட் ஸ்வீட்ஸ்’சுற்றிச் சுற்றி எமக்கான எல்லா மையப் புள்ளிகளையும் இனங்கண்டாயிற்று. ஓரளவுக்கு சென்னையை வாசிக்க முடிந்திருப்பதால் நாங்களும் சென்னைவாசிகளாகிவிட்டோம்.
ஈழத்தமிழர்கள் போருக்கஞ்சி புகலிடமாகக் கொண்டிருக்கும் சென்னையில் சில மாதங்களாக, வாடகைக்கு வீடு எடுப்பது, ஒரே முயற்சியில் கனடா விசா கிடைத்துவிடுவதற்கொப்பாயிருக்கிறது. அண்மைய சில அசம்பாவிதங்களுக்குப் பிறகு ‘சிலோன்காரங்களா…?’என்று கேட்டு ‘ஓம்’என்று தலையாட்டினால் வீட்டுச் சொந்தக்காரர்களும் இடம் வலதாகத் தலையாட்டி அனுப்பிவைத்துவிடுகிறார்கள். ஐம்பதினாயிரத்துக்கு அதிகமாக முற்பணம் கொடுத்தால் மேலும் கீழுமாகத் தலையாட்ட வாய்ப்பிருக்கிறது. ‘ஆமி’க்குப் பயந்து ஓடிவந்த ஆயிரமாயிரம் இளைஞர்களின் கதைகளைக் கடற்காற்று காவிவருகிறது. கனடாவின் டொலரும், சுவிஸ் பிராங்கும் இலண்டன் பவுண்ட்ஸ்சும் இந்திய ரூபாய்களாகி உணவகங்களிலும், திரையரங்குகளிலும் செலவழிகின்றன. வெளியில் பயமற்று உலவ முடிகிற இரவைப் போல் இளைஞர்களுக்கு உவப்பானது எது…? பல்லாண்டுகளுக்குப் பிறகு சுவாசிக்கும் ஆசுவாசத்தை அந்த முகங்களில் காணமுடிகிறது. பயண முகவர்களின் வாக்குறுதிகளை நம்பிப் போன சிலர் இடைநடுவில் பிடிபட்டு தொலைதூரங்களிலிருந்து புதிய கதைகளுடன் திரும்பி வருகிறார்கள். இதனிடையே படப்பிடிப்பு பார்க்க முண்டியடிப்பதும் நடிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதும் பிறவிப் பெரும் பயனென அலைபவர்களும் இல்லாமலில்லை.

உண்ணச் சோறெடுத்து வாயிலிட சுற்றிவளைப்பென்று செய்தி வாராத பகல்கள், உறங்கப் போனால் காலையில் உயிரோடு எழுந்திருக்கலாம் என்னும் உத்தரவாதம், படிக்கப் புத்தகம், நடக்கச் சாலைகள், ருசிக்கப் பழங்கள், அரட்டை அடிக்க இணையத்தில் நண்பர்கள், அவ்வப்போது எழுத்து…. இருந்திருந்துவிட்டு தொலைபேசி வழியாகச் செவிமடுக்கும் இழப்புச் செய்திகள்… அதை மறக்கடிக்கச் சுழலும் காலம்…இதைவிட இப்போது வேறென்ன வேண்டும் ஊர் திரும்பக் காத்திருக்கும் எங்களுக்கு?