2.13.2007

சென்னை என்றொரு வேடந்தாங்கல்


இரண்டு மூன்று நாட்களாக வெயிலின் உக்கிரம் தணிந்திருக்கிறது. கடல் தாண்டிப் பொருள் தேடப் போன கணவனைப் போல, மழை ‘வருகிறேன்… வருகிறேன்’என்று போக்குக்காட்டி ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. ஓரிடத்தில் இருக்கவிடாமல் சன்னதம் கொண்டெழுப்பி அலையவைப்பதில் வெயிலுக்கு நிகர் வெயிலே. ஆற அமர்ந்து யோசிக்கும்போது மனசை மலர்த்துவதும் உலர்த்துவதும்கூட காலநிலையின் வேலைகளில் ஒன்றெனப் புரிந்துகொள்ள முடிகிறது. தொலைகடலைக் காட்சிப்படுத்தும் ‘பல்கனி’யில் காற்று, காயப்போட்ட துணிகளுடன் செல்லங் கொண்டாடுகிறது. கன்னத்தை நிமிண்டுகிறது. மேசையிலிருக்கும் புத்தகங்களை இடையறாமல் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்தக் காற்றில் ஊஞ்சலில் அமர்ந்து கண்மூடிக் காலுந்தினால் சொர்க்கத்திற்குப் போய்விடலாம் போலிருக்கிறது.

மிகச் சரியாக ஓராண்டிற்கு முன் இதே இடத்தில் வெறுமை வழிய அமர்ந்திருந்தது நினைவிலிருக்கிறது. யாருமற்ற வெளியில் தனித்துவிடப்பட்டதான ஓருணர்வு. போர் குறித்து யாரிடத்தில் முறையிடுவது…? இருப்பற்று அலைதல் என் தேர்வென்றான பிறகு யாரைத்தான் நோவது…? ஒரு கவிதையில் எழுதியிருந்ததுபோல ‘சொந்த மண்ணுமில்லை… தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை’எனும் விரக்தியின் விழிகளால் இம்மாநகரை அப்போது நான் பார்த்திருக்க வேண்டும். அந்நாட்களில், பார்வை ஒரு பறவையைப்போல கட்டிடக் காட்டினிடையே மரங்களைத் தேடித் தேடி அலைந்து அமர்ந்தது. சூரியஒளி பட்டுப் பளீரிடும் தென்னங்கீற்றில், அணிற்பிள்ளையின் கீச்சிடலில், கீரை விற்றுப் போகும் பெண்ணின் நலிந்த குரலில் ஓரிரு கணங்கள் கிராமத்திற்கு மீண்டிருக்கிறேன். மற்றபடி மாநகரம் என்பது தனிமையை வளர்ப்பதுதான். ‘லிப்ற்’இல் அயலவரைச் சந்திக்க நேரும்போது புன்னகைப்பதா வேண்டாமா என்று முன்னிற்பவரின் முகத்தை ஆராய்ந்து முடிவெடுக்கும் சங்கடமான தருணங்களைத் தரும் இம்மாநகர வாழ்வைக் கொண்டாட முடியவில்லை.

போர் பசிகொண்ட விலங்காக சொந்த மண்ணை விழுங்கிக்கொண்டிருக்கிறது. செய்தி வழங்கும் இணையத்தளங்களை ‘பெரிதாக எதுவும் ஆகிவிட்டிருக்கக்கூடாதே…!’ என்ற பதைப்புடனும் குற்றவுணர்வுடனும் வாசிக்கிறோம். தொலைவிலிருந்தபடி செய்திகளாக மட்டும் தாய் மண்ணைப் பார்ப்பதென்பதே எமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

குளிரூட்டப்பட்ட வண்டிகளில்தான் ஏறுவேன் என்று ‘எலிசபெத் ராணி’வகையறாவாய் அடம்பிடித்த உடலை, ஆட்டோவின் சடசடப்புக்கும் தூக்கிவாரிப் போடலுக்கும் புகைக்கும் தூசுக்கும் பழக்கப்படுத்தியாயிற்று. மாயாஜால் திரையரங்கின் சொகுசிலிருந்து கீழிறங்கி, அருகிலேயே இருக்கும் ‘பிரார்த்தனா’வில், வில்லனின் அடியாட்களிலொருவனின் கழுத்தின் இடப்புறத்தில் செருகும் கத்தி வலப்புறமாக வெளிப்படும் ‘போக்கிரி’யை விசிலடிச்சான் குஞ்சுகளுடன் ரசிக்க முடிகிறது. இடையிடையே மின்சாரம் தடைப்பட்டால், விஜய்க்கு ஈடாக வசனம் பேசிக் கோபம் கொள்கிறவர்களை ‘அதான் வந்துடுமில்ல…விடுவியா…’எனப் பார்க்கும் ‘சகிப்புத்தன்மை’ வந்துவிட்டது. மேலும், தமிழக நண்பர்களுடன் பேசிப் பேசி ‘தமிழை’ஒரு வழிபண்ணியாயிற்று. ‘இன்னாம்மா கேரளாவா…?’என்ற கேள்வியை இப்போது எந்தக் கடைக்காரரும் கேட்பதில்லை. கத்தரிக்காய், பழம் இன்னபிறவற்றில் பேரம் பேச முடிகிறது(அது கைவரவில்லை என்பது வேறு விடயம்)

முன்பே சொன்னதுபோல கடல் இல்லாத சென்னையைக் கற்பனை செய்யமுடியவில்லை. எந்தப் புகையும் தூசியும் மாசுபடுத்திவிட முடியாத படிகமாகப் பரந்திருக்கும் கடல் மீதான காதல் சொல்லி மாளாதது. இருளில் காற்றுப்புகா நெருக்கத்தில் அமர்ந்திருக்கும், ஒருவர் மடியில் மற்றவர் படுத்திருக்கும் எத்தனை காதலர்களை இந்தக் கடல் பார்த்திருக்கும்! எத்தனை முத்தங்களுக்குக் கண்களை மூடிக்கொண்டிருக்கும்! எத்தனை கபடம் செறிந்த வாக்குறுதிகளை அது கேட்டிருக்கும்! தன் மடியில் உதிர்ந்த கண்ணீர்த்துளிகளையும் இரகசியங்களையும் கடல் எந்த ஆழத்தில் இட்டு வைத்திருக்கும். அன்றைக்குக் கடற்கரையோரமாக நடந்துபோகும்போது ஒன்று தோன்றியது… பொய்களைக் கேட்டுக் கேட்டுச் சகிக்க மாட்டாமல்தான் கடல் மனிதர்கள் மீது பாய்ந்ததோ என்று. பௌர்ணமி நெருங்கும் இரவுகளில் கடல் அழகிய கவிதையாகிவிடுகிறது. நிலவின் கீற்று கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அற்புதமாகப் படர்ந்திருக்க…. அலை திரண்டு குதித்துக் குதித்து ஓடிவந்து கரையில் பொங்கி உடைவதைப் பார்க்கும்போது உள்ளுக்குள் எதுவோ பொங்கும். கரையும். உலகத்தின் அற்பத்தனங்களையெல்லாம் அந்தப் பேரனுபவம் சற்றைக்கு மறைத்துவிடுகிறது.

சென்னையொரு முரண்வெளியென்பதன் மீதான வியப்பு தீரவே தீராதிருக்கிறது. நாகரீக உடையணிந்த ஆண்களும் பெண்களும் பளபளக்கும் முகங்கள், இடுப்பில் அல்லது கழுத்தில் வேலை வழங்கிய அடையாள அட்டைகள் அசைய கைத்தொலைபேசிகளில் சர்வசதாகாலமும் பேசியபடி நடந்துகொண்டும் மோட்டார்சைக்கிள்களில் பின்னிருத்திய தத்தமது தேவதேவதைகளுடன் பறந்துகொண்டுமிருக்கிறார்கள். ‘ரைடல் பார்க்’(டைடல்?)போன்றவை ‘மின்னியல் நகரம்’எனப்படும் பெங்களுருக்கு ஈடாகச் சென்னையை அழைத்துப் போய்விடும் சாத்தியங்களைக் காணமுடிகிறது. ‘ரைடல் பார்க்’ அமைந்திருக்கும் வழிநெடுக ‘திடீர்’மரங்கள் தோன்றியிருக்கின்றன. இரவோடிரவாக நட்டு நீரூற்றி உயிர்கொடுத்திருக்கிறார்கள். நவீன ஓவியங்கள், நவீன அமைப்புடன் கூடிய பேரூந்து தரிப்பிடங்கள், செயற்கை நீரூற்று என்று கொஞ்சம்போல மயக்கம் தருகிறது.

மறுபுறம், அதற்கு சற்றே அருகில் கேலிச் சித்திரங்கள் போன்ற மனிதர்கள் கல்,மண் இன்னபிறவற்றைத் தலையில் சுமந்து வேலை செய்வதைப் பார்க்கும்போது, அவர்கள் உடலில் வயிறு என்ற ஒன்று மட்டுந்தான் இருப்பதாகத் தோன்றும் கற்பனையை எவ்வளவு முயன்றும் கலைக்க முடியவில்லை. இரவுக்குள் விற்றுமுடித்துவிடவேண்டுமே என்ற கவலை முகத்தில் அப்பியிருக்க அமர்ந்திருக்கும் பூக்காரி, ‘காலைலேர்ந்து சாப்பிடலைக்கா’எனக் கையேந்தும் சிறுமி,குடித்துவிட்டு நடைபாதையில் சண்டை போடும் கணவனை அவிழும் கொண்டையை முடிந்து முடிந்து இழுத்துத் தோற்றுக்கொண்டிருக்கும் கட்டிடத் தொழிலாளி,யார் அழைத்தாலும் வாலாட்டிப் பின்னால் ஓடிவந்துவிடக்கூடியதான பார்வையுடன் பசியோடு அலையும் தெரு நாய்கள்…. கொளுத்தும் வெயிலில் வீதியோரத்தில் சாவகாசமாகப் படுத்துறங்கிக் கொண்டிருக்கும் ஆண்கள்…என சென்னை இரு முகம் கொண்ட திருநகரம்தான்.

எங்கு பார்த்தாலும் சனங்கள் நெரிந்துகொண்டிருக்கும் தெருக்கள் பரிச்சயமாகியிருக்கின்றன. அண்ணாசாலையில் ஸ்பென்சர், பாண்டி பஜாரில் போத்தீஸ்,ராதாகிருஷ்ணன் சாலையில் அஞ்சப்பர் உணவகம், பனகல் பார்க்கில் நியூ புக் லாண்ட், கிரீம்ஸ் வீதியில் அப்பொலோ வைத்தியசாலை, பாலத்தின் கீழ் கூவம், அடையார் சிக்னல் அருகில் பழமுதிர்ச்சோலை… சற்று தள்ளிப் போனால் காந்தி நகரில் நெய் மிதக்கும் பால் கோவாவுடன் ‘கிரான்ட் ஸ்வீட்ஸ்’சுற்றிச் சுற்றி எமக்கான எல்லா மையப் புள்ளிகளையும் இனங்கண்டாயிற்று. ஓரளவுக்கு சென்னையை வாசிக்க முடிந்திருப்பதால் நாங்களும் சென்னைவாசிகளாகிவிட்டோம்.
ஈழத்தமிழர்கள் போருக்கஞ்சி புகலிடமாகக் கொண்டிருக்கும் சென்னையில் சில மாதங்களாக, வாடகைக்கு வீடு எடுப்பது, ஒரே முயற்சியில் கனடா விசா கிடைத்துவிடுவதற்கொப்பாயிருக்கிறது. அண்மைய சில அசம்பாவிதங்களுக்குப் பிறகு ‘சிலோன்காரங்களா…?’என்று கேட்டு ‘ஓம்’என்று தலையாட்டினால் வீட்டுச் சொந்தக்காரர்களும் இடம் வலதாகத் தலையாட்டி அனுப்பிவைத்துவிடுகிறார்கள். ஐம்பதினாயிரத்துக்கு அதிகமாக முற்பணம் கொடுத்தால் மேலும் கீழுமாகத் தலையாட்ட வாய்ப்பிருக்கிறது. ‘ஆமி’க்குப் பயந்து ஓடிவந்த ஆயிரமாயிரம் இளைஞர்களின் கதைகளைக் கடற்காற்று காவிவருகிறது. கனடாவின் டொலரும், சுவிஸ் பிராங்கும் இலண்டன் பவுண்ட்ஸ்சும் இந்திய ரூபாய்களாகி உணவகங்களிலும், திரையரங்குகளிலும் செலவழிகின்றன. வெளியில் பயமற்று உலவ முடிகிற இரவைப் போல் இளைஞர்களுக்கு உவப்பானது எது…? பல்லாண்டுகளுக்குப் பிறகு சுவாசிக்கும் ஆசுவாசத்தை அந்த முகங்களில் காணமுடிகிறது. பயண முகவர்களின் வாக்குறுதிகளை நம்பிப் போன சிலர் இடைநடுவில் பிடிபட்டு தொலைதூரங்களிலிருந்து புதிய கதைகளுடன் திரும்பி வருகிறார்கள். இதனிடையே படப்பிடிப்பு பார்க்க முண்டியடிப்பதும் நடிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதும் பிறவிப் பெரும் பயனென அலைபவர்களும் இல்லாமலில்லை.

உண்ணச் சோறெடுத்து வாயிலிட சுற்றிவளைப்பென்று செய்தி வாராத பகல்கள், உறங்கப் போனால் காலையில் உயிரோடு எழுந்திருக்கலாம் என்னும் உத்தரவாதம், படிக்கப் புத்தகம், நடக்கச் சாலைகள், ருசிக்கப் பழங்கள், அரட்டை அடிக்க இணையத்தில் நண்பர்கள், அவ்வப்போது எழுத்து…. இருந்திருந்துவிட்டு தொலைபேசி வழியாகச் செவிமடுக்கும் இழப்புச் செய்திகள்… அதை மறக்கடிக்கச் சுழலும் காலம்…இதைவிட இப்போது வேறென்ன வேண்டும் ஊர் திரும்பக் காத்திருக்கும் எங்களுக்கு?

25 comments:

டண்டணக்கா said...

/*
உறங்கப் போனால் காலையில் உயிரோடு எழுந்திருக்கலாம் என்னும் உத்தரவாதம்.
*/
For a second, monitor blurred...couldn't see the words.
ஒரு எளிய வாழ்க்கையே எவ்வளவு தூரத்தில்... மனிதன் மிருகம்தான் என்ற எண்ணங்கள் திடமாகின்றது.

எப்படி சொல்வதென தெரியவில்லை... அந்த கடைசி பத்தியின் எழுத்துக்கள்...

இதையாவது தமிழீழ சகோதர/சகோதரிகளுக்கு என் தழிழ் நாடு கொடுக்கிறதே என அடங்கா திருப்தியுடன்.

-டண்டணக்கா.

பங்காளி... said...

---//தொலைகடலைக் காட்சிப்படுத்தும் ‘பல்கனி’யில் காற்று, காயப்போட்ட துணிகளுடன் செல்லங் கொண்டாடுகிறது. கன்னத்தை நிமிண்டுகிறது. மேசையிலிருக்கும் புத்தகங்களை இடையறாமல் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்தக் காற்றில் ஊஞ்சலில் அமர்ந்து கண்மூடிக் காலுந்தினால் சொர்க்கத்திற்குப் போய்விடலாம் போலிருக்கிறது.//----

ம்ம்ம்ம்....சொர்கத்துக்கு போன மாதிரியே ஒரு ஃபீலிங்

இளங்கோ-டிசே said...

எஸ்.ராமகிருஷ்ணன், தஙகமணிக்கு பிறகு நெகிழ்வான் மொழியிலும் இலயமான நடையிலும் -என்னுடைய வாசிப்பு பட்டியலில்- இன்னொருவர் வந்துகொண்டிருக்கின்றார் :-).

பங்காளி... said...

---//உண்ணச் சோறெடுத்து வாயிலிட சுற்றிவளைப்பென்று செய்தி வாராத பகல்கள், உறங்கப் போனால் காலையில் உயிரோடு எழுந்திருக்கலாம் என்னும் உத்தரவாதம், படிக்கப் புத்தகம், நடக்கச் சாலைகள், ருசிக்கப் பழங்கள், அரட்டை அடிக்க இணையத்தில் நண்பர்கள், அவ்வப்போது எழுத்து…. இருந்திருந்துவிட்டு தொலைபேசி வழியாகச் செவிமடுக்கும் இழப்புச் செய்திகள்…//---

அனுபவித்தால் மட்டுமே புரிகிற வலிகள்...ம்ம்ம்ம்ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\மற்றபடி மாநகரம் என்பது தனிமையை வளர்ப்பதுதான். ‘லிப்ற்’இல் அயலவரைச் சந்திக்க நேரும்போது புன்னகைப்பதா வேண்டாமா//


அகழி கட்டி வைத்த மனிதர்கள்,
அடுத்த அடுக்கு வீட்டில் திருமணம்,
அழைப்பும் இல்லை,
அதிருப்தியும் இல்லை.

\\ செயற்கை நீரூற்று என்று கொஞ்சம்போல மயக்கம் தருகிறது.

மறுபுறம், அதற்கு சற்றே அருகில் கேலிச் சித்திரங்கள் போன்ற மனிதர்கள் //

பரவாயில்லை உடனே மயக்கம் தெளிந்திருக்கிறீர்கள்..சிலர் பாருங்கள் முன்னேற்றத்தை என்று மயக்கத்திலேயே அலைவார்கள்.

பங்காளி... said...

சென்னை என்றொரு பெரியன்னை...

இந்த தலைப்பு நல்லாருக்குமா...

திடீர்னு தோனிச்சி....மக்குதனமா இருக்கா!...

நமக்கு அப்பப்போ மண்டைக்குள்ள வெளக்கெறியுமா...அதான் கண்டுக்காதீங்க....ஹி..ஹி...

தமிழ்நதி said...

இன்றைய நாள் இப்படிக் கழிந்தது. உறங்கச் செல்வதன் முன் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி சொல்லி இந்த நாளை முடித்துக் கொள்ளலாம்.
டண்டணக்கா!(நல்ல பெயர்தான் போங்கள்)ஒதுங்க ஓரிடம் இருப்பது எவ்வளவு ஆறுதல்.

பங்காளி,நீங்கள் அடிக்கடி வந்து பின்னூட்டமிடுவதால் எனது நண்பர்களில் ஒருவர் என்னைக் கலாய்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் சோர்ந்துவிடாதீர்கள். நீங்களெல்லாம் இல்லாவிட்டால் நான் என்னைப் பெரிய ஆள் என்று எப்படி நினைத்துக்கொள்வதாம்! ஆனால்... இந்தப் 'பெரியன்னை'எல்லாம் இப்ப வேண்டாம். எந்தப் பக்கமிருந்து கல் வருமென்று தெரியாதிருக்கிறது.

முத்துலட்சுமி,மாநகரின் தனிமை குறித்து நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள். நீங்கள் இருப்பது டெல்லி என்ற மா.... நகரத்தில் அல்லவா?
டி.சே.!நன்றி.எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களை எனக்கும் பிடிக்கும். கதாவிலாசம்,துணையெழுத்து,உறுபசி எல்லாம் பிடித்தவை. தேசாந்திரி வாங்கிவைத்திருக்கிறேன். இன்னும் படிக்கவில்லை. சிகரத்தின் அருகிலே சிறு குன்று நான்... சித்திரமும் கைப்பழக்கம் என்கிறார்கள்... பார்க்கலாம்...!

theevu said...

//ஈழத்தமிழர்கள் போருக்கஞ்சி புகலிடமாகக் கொண்டிருக்கும் சென்னையில் சில மாதங்களாக, வாடகைக்கு வீடு எடுப்பது, ஒரே முயற்சியில் கனடா விசா கிடைத்துவிடுவதற்கொப்பாயிருக்கிறது.//

சில மாதங்களாகவா?:) தசாப்தக் கணக்கு..

வந்தோரை வாழவைக்கும் தமிழகம்,சென்னை என்றொரு வேடந்தாங்கல் என்பதில் எனக்கும் 100 வீத உடன்பாடே.

கானா பிரபா said...

சென்னைக்குப் போனால் சொந்த ஊருக்குப் போன உணர்வு எனக்கு, ஸ்பென்சரும், அபிராமி , தேவி, சத்யமும், சாந்திக்கு முன்னால் உள்ள சரவணபவனும் என் பட்டியலில் கட்டாயம் இருக்கும்.

ஜோ/Joe said...

மிகவும் ரசிக்கும் படியான எழுத்து .மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

பத்மா அர்விந்த் said...

தமிழ்நதி
அழகாக எழுதுகிறீர்கள். நான் சென்னையில் அதிக நாள் இருந்ததில்லை. அழகாக கண் முன் கொண்டுவருகிறது உங்கள் பதிவு. கடைசியில் ஒரு சோகத்துடன் நிஜங்களை உணர்த்தும் போது வலிக்கிறது

பங்காளி... said...

என்ன வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே..:-)))))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//உண்ணச் சோறெடுத்து வாயிலிட சுற்றிவளைப்பென்று செய்தி வாராத பகல்கள், உறங்கப் போனால் காலையில் உயிரோடு எழுந்திருக்கலாம் என்னும் உத்தரவாதம், படிக்கப் புத்தகம், நடக்கச் சாலைகள், ருசிக்கப் பழங்கள், அரட்டை அடிக்க இணையத்தில் நண்பர்கள், அவ்வப்போது எழுத்து…. இருந்திருந்துவிட்டு தொலைபேசி வழியாகச் செவிமடுக்கும் இழப்புச் செய்திகள்… அதை மறக்கடிக்கச் சுழலும் காலம்…இதைவிட இப்போது வேறென்ன வேண்டும் ஊர் திரும்பக் காத்திருக்கும் எங்களுக்கு?//

நல்லாச் சொன்னீங்க!

Osai Chella said...

நான் மிகவும் ரசித்தேன். சில வரிகளின் ஆதங்கங்கள்.. எனக்கும் உண்டுதான்! இப்பொழுதுதான் பெண்வலைப்பதிவாலர்களைத் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். நன்றி! மீண்டும் சந்திப்போம்!

சுந்தர் / Sundar said...

விடியலை நோக்கி எல்லோரும் !
விடிந்து விடும் என்ற நம்பிக்கையில்
நாம் அனைவரும் !

படியாதவன் said...

காத்திரமான எழுத்துக்கள்.
வாழ்த்துக்கள்..
என்ர நிகழ்புத்தகக்குறிகளில் இளவேனிலும் இப்ப ஒண்டு..

ஊருக்கு போறதப் பற்றி இப்போதைக்கு யோசிக்க ஏலாது போல கிடக்கு!

Pot"tea" kadai said...

தொடர்ந்து படிப்பேன்!

Chellamuthu Kuppusamy said...

தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. மிக அருமையான நடை, செய்தி.. பதிவிற்கு நன்றி!!

பாரதி தம்பி said...

உங்கள் எழுத்து நடையில் குழந்தையிடம் பேசிக்கொண்டிருப்பது மாதிரியான ஒரு மென்மையும்,மகிழ்வும் மனதுக்கு கிட்டுகிறது.
நீங்களே ஒரு பதிவில் சொன்னதுபோல உங்கள் எழுத்து நடையும் செல்வநாயகியின் எழுத்து நடையும் பல நேரங்களில் ஒரே விதமான வாசிப்பனுவத்தை தருகின்றன.

மனதின் மென் உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவது அரிதாகிவரும் சூழலில் உங்களுக்கு அது சுலபமாக கைகூடுகிறது.நன்றி..

தமிழ்நதி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் தீவு,கானா பிரபா,ஜோ,பத்மா அர்விந்த்,யோகன் பாரிஸ்,ஓசை செல்லா,சுந்தர்,படியாதவன்,பொட் 'டீ' கடை,குப்புசாமி,ஆழியூரான்
வாசித்துவிட்டு மெளனமாகப் போய்விடாமல் பேசி விட்டுப் போக நினைத்த உங்கள் மனசுக்கு நன்றி.

வி. ஜெ. சந்திரன் said...

அதிக இடைவெளி எடுத்து கொள்ளாமல் எதாவது எழுதிகொண்டே இருக்க மாட்டீர்களா
:(

பங்காளி... said...

போதுமான இடைவெளி எடுத்துக்கொண்டு எழுதுங்கள் தமிழ்நதி....

நமக்கு எண்ணிக்கைகள் முக்கியமில்லை....ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

கூத்தாடி said...

உண்ணச் சோறெடுத்து வாயிலிட சுற்றிவளைப்பென்று செய்தி வாராத பகல்கள், உறங்கப் போனால் காலையில் உயிரோடு எழுந்திருக்கலாம் என்னும் உத்தரவாதம், படிக்கப் புத்தகம், நடக்கச் சாலைகள், ருசிக்கப் பழங்கள், அரட்டை அடிக்க இணையத்தில் நண்பர்கள், அவ்வப்போது எழுத்து…. இருந்திருந்துவிட்டு தொலைபேசி வழியாகச் செவிமடுக்கும் இழப்புச் செய்திகள்… அதை மறக்கடிக்கச் சுழலும் காலம்…இதைவிட இப்போது வேறென்ன வேண்டும் ஊர் திரும்பக் காத்திருக்கும் எங்களுக்கு//

கூத்தாடி said...

//உண்ணச் சோறெடுத்து வாயிலிட சுற்றிவளைப்பென்று செய்தி வாராத பகல்கள், உறங்கப் போனால் காலையில் உயிரோடு எழுந்திருக்கலாம் என்னும் உத்தரவாதம், படிக்கப் புத்தகம், நடக்கச் சாலைகள், ருசிக்கப் பழங்கள், அரட்டை அடிக்க இணையத்தில் நண்பர்கள், அவ்வப்போது எழுத்து…. இருந்திருந்துவிட்டு தொலைபேசி வழியாகச் செவிமடுக்கும் இழப்புச் செய்திகள்… அதை மறக்கடிக்கச் சுழலும் காலம்…இதைவிட இப்போது வேறென்ன வேண்டும் ஊர் திரும்பக் காத்திருக்கும் எங்களுக்கு//

இந்த கடைசி வரிகள் கவிதை

Hariharan # 03985177737685368452 said...

சுற்றிவளைக்காமல் சுற்றிவளைத்துத் தாக்கி வாழ்வை அழிக்கும் போர் சூழலைச் சொல்லியிருப்பது நிம்மதியின்மை-நிரந்தரமின்மையை உணரவைக்கிறது.

குவைத்தில் போர் சமயத்தில் ஒரு முறை ராக்கெட் ஆரஞ்சு நெருப்புடன் விழுந்து வெடித்து வீட்டின் சன்னல் கண்ணாடிகள் அதிர்வதை வீட்டின் அருகே நேரிடையாகப் பார்த்து உடன் பெரும் பெட்டிகளில் துணிகளைப் பேக்கிங் செய்த நினைவு நினைவில் வருகிறது.

போர் செய்தியாகப் படிப்பதற்கும் போர்நடக்கும் இடத்தில் வாழ்வதற்கும் எழும் உணர்வுகளிலான பேதத்தை கொஞ்சம் உணரமுடிகிறது.

மற்றபடி போத்தீஸ், க்ராண்ட் ஸ்வீட்ஸ், ப்ரார்த்தனா டிரைவ் இன், ஸ்பென்ஸர்ப்ளாஸா , மத்தியகைலாஷ்-டைடல் பார்க் என சென்னையை நினைவூட்டிவிட்டீர்கள்.

கூவத்திலும், அடையாற்றிலும் நல்லதண்ணீர் ஓடினால் சென்னைக்கு அருகில் எந்த பெங்களூராலும் வரமுடியாது!