2.23.2007

நதியின் ஆழத்தில்…


நதியின் மேற்பரப்பில் மிதந்துகொண்டிருக்கின்றன
பூக்களும் சருகுகளும்
சிலசமயங்களில் கழிவுகளும்.

ஆழத் துளைந்து அடி மடியில் அமிழ்ந்து
முங்கிக் குளித்துக் கரையேறி
வாயிலடைத்த நீரைத் ‘தூ’வென உமிழ்ந்த
சிறுவர் குறும்பிற்கு
வாய்விட்டுச் சிரித்து
மீளவருகவென்று அனுப்பியது.

அன்றொருவன் வேண்டுமென்றே எறிந்த கல்லில்
மீன் செத்து மிதக்கவும்
தாங்கி ஒரு வார்த்தை தானும் சொல்லாமல்
கரையொதுக்கி நடந்தது.

ஆழத்தின் குளிர்மையை
அடிமடியில் கிடக்கும்
பேசிப் பேசித் தேய்ந்த கூழாங்கற்களை
காட்டு வழி நடக்கும் தனிமையை
கடலின் நெடுந்தொலைவை
எவரும் அறிவதில்லை.

கரையோரம் நிழல்விழுத்தி
காற்றடிக்க கண்ணிமைத்து
நெடுநாளாய் நிற்கும் மருதமரத்தின்மேல்
நதி கொண்ட காதலை
அந்த நாணலும் அறியாது.

11 comments:

வரவனையான் said...

அற்புதம், மிக நல்ல வெளிப்பாடு

வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

மிக அருமை.
ஆறு கூடவே பேசியது போல இருக்கிறது.
வாழ்த்துகள்.

பங்காளி... said...

இப்படி ஒரு நிறைவும் நிம்மதியும் இத்தனை எளிமையாக சாத்தியமென்றால்...இதையேன் நம் வாழ்வில் அமைத்துக்கொள்ளக் கூடாது?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாருக்கு. ஏங்க ..தமிழ்நதி...அந்த நதி நிஜமாவே சந்தோஷமா இருக்கா ?
இல்லாட்டி வெறும் அமைதி தானா அதுக்கு கிடைச்சது எல்லாம்.

பங்காளி புத்தரை படிக்க ஆரம்பிச்சதும்
தத்துவமா?

வல்லிசிம்ஹன் said...

லட்சுமி நதி அமைதியாகத் தான் இருக்கு.
சந்தோஷமா இருக்கா தெரியலை.
கடந்துபோன மருத மரத்தை இல்லையா நினைக்கிறது..
பாவம்.

மங்கை said...

ஹ்ம்ம்ம்...

நீராலானது மட்டும் இல்லை நதி.ம்ம்ம்.

ரொம்ப நல்லா இருக்கு...

தமிழ்நதி said...

வழக்கத்தில் கவிதைக்குப் பின்னூட்டங்கள் வருவதில்லை. அதை எதிர்பார்ப்பதற்குமில்லை. கவிதை வரிகளை மீண்டும் எழுதி 'நன்றாக இருக்கிறது'என்று மட்டுந்தானே சொல்ல முடிகிறது. நீங்களும் நானும் பெரிதும் வேறுபட்டுச் சிந்திப்பதற்கில்லை. இருந்தும் பின்னூட்டமிட்ட உங்களுக்கு நன்றிகள்.

முத்துலட்சுமி,நதியின் மேற்பரப்பு அமைதியாகத்தான் தெரிகிறது. ஆழத்தில் என்ன இருக்கிறதென்று எனக்கோ உங்களுக்கோ தெரியாது. புதிராக இருப்பதாலேயே அது ஈர்க்கிறதோ என்னவோ... அது சரி! நீங்கள் எந்த நதியைக் கேட்கிறீர்கள்...? எல்லா நதிகளின் ஆழத்திலும் ஆயிரம் இருக்கும். ஒரு நாளைக்கு நதியோடு பேசிப் பார்க்க வேண்டும்.

மிதக்கும்வெளி said...

good poem and good expressions

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பக்கத்தில் இருப்பது யமுனா நதி, ஒருகாலத்தில் வெள்ளமா வந்ததாம் இப்போ வெறும் கால்வாயாக அசுத்தங்களை தாங்கி கொண்டு ,இன்னமும் மக்கள் போடுகின்ற மாலைகளை மரியாதைகளை ,அசுத்தம் செய்தாலும் ஏற்றுக்கொண்டு, கரைகளை பிடுங்கிக்கொண்டவர்களிடம் சண்டை போடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.எங்கே பேசினால் அழுது விடுமோ என்று பேசியதில்லை.

தமிழ்நாட்டுக்கு வந்தபோது (தமிழ்)நதியோடு பேச நினைத்து [அதாங்க பெண்கள் வலைப்பதிவு மாநாடு திசம்பரில் நடந்ததே] முடியவில்லை.

தமிழ்நதி said...

good poem and good expressions

மிதக்கும் வெளி இந்த நடக்கும் நதியைப் பற்றிக் கருத்துச் சொன்னமைக்கு நன்றி.

முத்துலட்சுமி,ஜெஸிலா ஒழுங்கமைத்த ஒன்றுகூடலைத்தானே சொல்கிறீர்கள். நீங்கள் வந்திருந்தீர்களா என்ன.. சில அனானிகள் மனதைக் குழப்பிவிட்டன. அதனால் வரவில்லை.அதற்கென்ன இன்னொருநாள் ஒரு மாநாடு(?) கூடினால் போச்சு. போகும் வழியெல்லாம் பேசிக்கொண்டே நடக்கும் நதி. அதற்கு அன்புசெய்யப் பிடிக்கும். அண்மையில் இதையொரு தோழியிடம் சொன்னேன். அவ கேட்டா... 'புஷ்ஷையும் பிடிக்குமா'என்று. நான் சொன்னேன் 'மனிதர்களை(மட்டும்) நேசிக்கப் பழகியிருக்கிறேன்'என்று.

Umabathy said...

ரொம்ப அருமையாக உள்ளது தங்களது கவிதை.