
ஒரு பௌர்ணமிநாளில்
நீர்ப்பரப்பில் நிலவொளிபோல
மெல்லப் படர்கிறதுன் நேசம்.
விடியும்வரை கடலை மூசித் தழுவி
முயங்கவியலா ஏக்கத்திலா
பின்னிரவில் நிலவு முகமிருண்டு போகிறது?
பார்…!
காதற் கவிதைகளின் சாயலையொத்த
அபத்தத்துள் என்னை நீ அமிழ்த்துவதை.
ஞாபகத்தின் தெருக்களில்
நாடோடியாய் அலையுமென்னை
நிகழில் நிலைக்கவென்று அழைக்கிறாய்.
மேலும்…நான் உன் கண்ணாடியும் என்கிறாய்.
பாதரசம் கலைந்திருப்பதைக் கவனி நண்பா!
கதை மாந்தர்களின் கைபிடித்துலவிய நாட்களை
நெகிழ்ச்சியின் மடியில் சரியவைத்த கவிதைகளை
யமுனாவை… அம்மணியை… காயத்ரியை…யஷியை
காலையொளி கரையும்வரை பேசித்தீர்க்கிறோம்.
உன் வாசிப்பின் ஆழத்தில் புதைவுறவும்
நேசிப்பின் நெருக்கத்தில் கரைவதற்கும்
மலைகள் சூழ் கிராமத்தில்
நெடுங்கண்ணாளொருத்தி காத்திருப்பதறியாயா?
பேச்சின் நிழலில்
ஆசுவாசம் கொள்ளுமென் தனிமையை
இனியேனும் தனிமையில் விட்டுவிடு.
கண்ணீர் இனிப்பென
குருதி திண்மமென
கருத்துப்பிழை காட்சிப்பிழையுள்
என்னைச் சிலகாலம் செலுத்திப் பின் பிரிந்துசெல்!
நீ சொன்னபடி
அருவிக்கரையோரமொரு கறுப்பியாய்…
நீலியாய்…
பச்சையடர் கானகத்தில்
பாறைமீதமர்ந்து கதைசொல்லும் பேதையாய்
மீளப் பிறக்கும் விதை
என்னுள் விருட்சமாய் வளர்கிறது.
எல்லாம் சரிதான்!
“கனவின் பாதைகள் முடியுமிடம்
இதழிலும் மார்பிலுமா…?”
எனக் கேட்கும் சாத்தானின் கேள்வியை
எந்தப் புத்தகத்தின் பக்கங்களுள் ஒளித்துவைக்க?
நீர்ப்பரப்பில் நிலவொளிபோல
மெல்லப் படர்கிறதுன் நேசம்.
விடியும்வரை கடலை மூசித் தழுவி
முயங்கவியலா ஏக்கத்திலா
பின்னிரவில் நிலவு முகமிருண்டு போகிறது?
பார்…!
காதற் கவிதைகளின் சாயலையொத்த
அபத்தத்துள் என்னை நீ அமிழ்த்துவதை.
ஞாபகத்தின் தெருக்களில்
நாடோடியாய் அலையுமென்னை
நிகழில் நிலைக்கவென்று அழைக்கிறாய்.
மேலும்…நான் உன் கண்ணாடியும் என்கிறாய்.
பாதரசம் கலைந்திருப்பதைக் கவனி நண்பா!
கதை மாந்தர்களின் கைபிடித்துலவிய நாட்களை
நெகிழ்ச்சியின் மடியில் சரியவைத்த கவிதைகளை
யமுனாவை… அம்மணியை… காயத்ரியை…யஷியை
காலையொளி கரையும்வரை பேசித்தீர்க்கிறோம்.
உன் வாசிப்பின் ஆழத்தில் புதைவுறவும்
நேசிப்பின் நெருக்கத்தில் கரைவதற்கும்
மலைகள் சூழ் கிராமத்தில்
நெடுங்கண்ணாளொருத்தி காத்திருப்பதறியாயா?
பேச்சின் நிழலில்
ஆசுவாசம் கொள்ளுமென் தனிமையை
இனியேனும் தனிமையில் விட்டுவிடு.
கண்ணீர் இனிப்பென
குருதி திண்மமென
கருத்துப்பிழை காட்சிப்பிழையுள்
என்னைச் சிலகாலம் செலுத்திப் பின் பிரிந்துசெல்!
நீ சொன்னபடி
அருவிக்கரையோரமொரு கறுப்பியாய்…
நீலியாய்…
பச்சையடர் கானகத்தில்
பாறைமீதமர்ந்து கதைசொல்லும் பேதையாய்
மீளப் பிறக்கும் விதை
என்னுள் விருட்சமாய் வளர்கிறது.
எல்லாம் சரிதான்!
“கனவின் பாதைகள் முடியுமிடம்
இதழிலும் மார்பிலுமா…?”
எனக் கேட்கும் சாத்தானின் கேள்வியை
எந்தப் புத்தகத்தின் பக்கங்களுள் ஒளித்துவைக்க?