
சீமான்,கொளத்தூர் மணி,பெ.மணியரசனைக் கைது செய்துவிட்டார்கள். அவர்கள் செய்தது இமாலயத் தவறு. அவர்கள் வார்த்தைகள் கண்காணிக்கப்படும் ஒரு நாட்டில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டார்கள். மறதி மன்னிக்கப்பட முடியாதது. இப்போது உங்களுக்கு சிதைந்துபோன ரஷ்யாவும் அதன் உளவுப்படையும் நினைவில் வந்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. முகத்தை மூடாத பெண்களுக்குத் தண்டனை வழங்கும் தலிபான்கள் நினைவில் வருவதற்கும் நான் பொறுப்பாக முடியாது. தஸ்லிமா நஸ்ருதீன், சல்மான் ருஷ்டி போன்றோரின் அலைச்சல்களும் உளைச்சல்களையும் ஏன் நினைத்துக்கொள்கிறீர்கள்? கருத்துரிமைப் புண்ணாக்கு கட்டாயம் வேண்டுமா என்ன? சாப்பிடுவதற்கும் அதிகபட்சமாக எச்சிலை உமிழ்வதற்கும் மட்டுந்தான் வாயைத் திறந்திருக்கவேண்டும். ஈழத்தமிழருக்காக உணர்ச்சிவசப்பட்டோ உருப்படியாகவோ பேசி உள்ளே போய் உட்கார்ந்திருக்க வேண்டிய தேவையென்ன?
‘இத்துடன் சீமான் பெரியாளாகி விடுவார்’என்றார் ஒரு நண்பர். அடுத்தவன் வீட்டில் இழவு விழுந்தால் எட்டாம் நாள் இறைச்சிக் கறிச்சோறு என்றில்லாமல், பதிலளிக்க முடியாத கேள்விகளை அதிகார மையங்களைப் பார்த்துக் கேட்கும் சீமானுக்கு இதுவும் வேண்டும்: இன்னமும் வேண்டும். ‘இவர் தன் வேலையைப் பார்க்காமல் பிரபாகரன், வெங்காயம் பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்’என்றார் இன்னொருவர். உண்மைதானே… காலையில் எழுந்து காப்பி குடித்து கக்கூசுக்குப் போய் அதன்பிறகு வேலைக்குப் போய் களைத்துத் திரும்பி தொலைக்காட்சியில் ‘குலுக்கல்’களைப் பார்த்து மனைவியையோ காதலியையோ கூடிவிட்டுத் தூங்காமல், ‘ஐயோ.. அண்டை நாட்டில் சகோதரனைச் சாகடிக்கிறார்களே… கேட்பாரிலையா…?’என்று கைகளை உயர்த்திக் கேட்பது மன்னிக்க முடியாத குற்றந்தான்! பெரியவர்கள், விடயமறிந்தவர்கள் அவரைத் தயைகூர்ந்து மன்னித்துவிடுங்கள்.
‘புனிதமான’ அரசியல் தலைவர்களைப் பற்றித் தரக்குறைவாக சீமானும் கொளத்தூர் மணியும் பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசுகள் மக்களின் வரிப்பணத்தில் குண்டுகளை வாங்கி அண்டை அயல்களுக்குக் கொடுத்தால் என்ன… அதைத் தனது மக்களின் தலைகள் மீதே போட்டு சிதறுதேங்காய் ஆக்கினாலென்ன? அரசாங்கங்கள் எல்லாம் சம்பந்தக்குடிகள் என்பதை மறந்தது தமிழ்த்தேசியம் பேசுபவர்களின் குற்றமல்லவா? வியட்நாமில் எரியும் நெருப்பிலிருந்து அம்மணமாக ஒரு குழந்தையை அலறியடித்துக்கொண்டு ஓடிவரச்செய்தது தீவிரவாதிகளன்றோ? ஈராக்கைப் பிணக்காடாக்கியது, பங்காளாதேஷில் பல ஆயிரக்கணக்கான பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது, யாழ்ப்பாணத்தின் பிரம்படி ஒழுங்கையில் உயிரோடு மக்கள் மீது கவசவாகனங்களை ஏற்றி இரத்தமும் சதையும் தெறிக்கத் தெறிக்கக் கொன்றது, உகண்டாவில் மனிதக்கறி சாப்பிட்டதெல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள்? அனைத்து அரசாங்கங்களும் காவியுடை உடுத்திக்கொண்டு கொல்லாமை விரதத்துடன் இருப்பதை நீங்கள் அறியீர்களா? கறுப்பாடையும் கழுத்து மாலையுமாக ஐயப்ப பக்தர்களான அரசாங்கங்கள் சாலைகளில் நடந்துபோவதை நீங்கள் கண்டதில்லையா? பிள்ளைப் பூச்சிகளான, அஹிம்சாவாதிகளான தலைவர்களைப் பற்றி சீமானும் ஏனைய தலைவர்களும் இப்படி அபாண்டமாகப் பேசலாமா?
இறையாண்மை என்பது, பிணக்குவியலின் மேல் குந்தியிருந்தபடி சிக்கன் பிரியாணியும் 65வும் சாப்பிடுவது என்ற கருத்துப்பட நீங்கள் பேசியிருக்கக்கூடாது. சொந்தக்காரப் பிணங்களுக்கு மட்டும் ஒப்பாரி வைப்பது அதன் வரைவிலக்கணங்களுள் ஒன்றெனச் சுட்டிக்காட்டியிருக்கக் கூடாது. ‘ஹிண்டு அன் கோ’வினரின் தினப்படிச் சாப்பாட்டில் விழும் உப்பெனச் சாடியிருக்கக்கூடாது. காங்கிரஸ்காரர்களின் சொல்லாயுதமென சொல்லியிருக்கக்கூடாது. குற்றம் குற்றமே! (இங்கே ‘திருவிளையாடல்’நினைவுக்கு வரவேண்டும்.)
சட்டங்களும் சித்தாந்தங்களும் மக்களை மந்தைகளாக்கி மேய்க்கின்றன என்று நீங்கள் நினைப்பது தவறு.சீமான்! நீங்கள் சினிமாவைப் பற்றிப் பேசுங்கள். ‘தம்பி’எடுத்ததுபோல ‘தங்கச்சி’என்றொரு படம் எடுங்கள். பெரியாரைக் குறித்துப் பேசுங்கள். ‘இறையாண்மை எங்கே இருக்கிறது?’என்று கையை உயர்த்தி காற்றைத் துளாவி உதடு துடிக்கத் தேடாதீர்கள். அது பரம்பொருள். கறுப்புச் சட்டைக்காரர்களின் கைகளுக்கு அகப்படாதது. கண்ணுக்குப் புலப்படாதது.
அரசாங்கங்களுக்கு முகங்கள் இல்லை. கண்ணாடி பார்ப்பதுமில்லை. இல்லையெனில் பயங்கரவாதிகளென தங்களைத் தாங்களே தூக்கிலிடவேண்டியதாகிவிடும்.
இந்த ‘ஜனநாயகம்’என்ற செத்துப் புழுத்த வார்த்தையை என்ன செய்வதென்று தெரியவில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை இதையெல்லாம் பொட்டலம் கட்டமுடிந்தால் கட்டி ஒவ்வொருநாளும் உரத்த குரலில் கூவியபடி வரும் குப்பை வண்டிக்காரனிடம் போட்டுவிடலாம்.
ஆக மொத்தத்தில் நம்மால் செய்யக்கூடியது ஒன்றுதான்… ‘மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்’ என்ற பிரயோகத்தை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நகைச்சுவைத் துணுக்காக அறிவிக்கும்படி பரிந்துரைக்கவோ இரந்துகேட்கவோ செய்யலாம்.