8.04.2009

அந்தரத்தில் இருக்கிறது வீடு


‘எல்லாப் பாதைகளும் உன் வீட்டு வாசலில் கொண்டு சேர்க்கும்’என்ற வரிகளை அதில் தொனிக்கும் காதலுக்காக அன்றி வேறேதோ காரணத்திற்காகப் பிடிக்கும். பெரும்பாலும் வீடு பற்றிய கவிதைகள் ஈர்ப்பனவாக இருக்கின்றன. சுற்றியலைவதை வேண்டுமென்றே தேர்பவர்களுக்குள்ளும் வீடு உயிர்ப்போடு துடித்துக்கொண்டுதானிருக்கிறது. அதன் வழிகளில் மானசீகமாக நடந்து நடந்து வீடு நோக்கிப் போய்க்கொண்டுதானிருக்கிறோம் எல்லோரும். பிறகொருநாள் உண்மையாகவே போகும்போது ஒன்றும் புதிதாய் தோன்றாமலிருப்பதற்கு அந்த மானசீகத் திரும்புதல்கள்தான் காரணம்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பதன் பொருள் பல்பரிமாணமுடையது. புலம்பெயர்ந்த புகலிடங்களில் தங்களைச் சிக்கென்று பொருத்திக்கொண்டவர்களுக்கு அத்தகைய சிக்கல்கள் இல்லை. அத்தகையோர் இலகுவாக தத்தம் ‘வீடு’களுக்குத் திரும்பிவிடுகிறார்கள். ‘எனது வீடு எங்கோ தொலைவில் திரும்பவியலாத தேசத்தில் இருக்கிறது’என்ற அகதி அந்தரிப்பில் இருப்பவர்களின் வீடு தரையில் இல்லை. அது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அது தரையிறங்கும் சாத்தியங்களும் அறுந்துபோய்விட்டன. ஈழத்திற்குள்ளேயே புலம்பெயர்க்கப்பட்டு அலைக்கழிபவர்களின், முகாம்களில் இருப்பவர்களின் வீடுகளோ கல்லறைகளாகவோ அன்றேல் இராணுவ முகாம்களாகவோ மாற்றப்பட்டுவிட்டன. கூரை, நாற்புறம் சுவர்கள், வாசல், முற்றத்து நிலவு, பூச்செடி, கிணறு, நாய்க்குட்டி இன்னபிற இனிக் கனவுகளில் வந்தால்தான் உண்டு.

வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்குப் புறப்படும்போது இருக்கும் குறுகுறுப்பு ஒரு வாரத்திலேயே தீர்ந்துபோய்விடுகிறது. வந்து சேர்ந்த இடம் சொர்க்கமாகவே இருந்தாலும், சொந்தங்கள் அன்பைச் சொட்டினாலும் தனக்குள் ஒடுங்க ஆரம்பித்துவிடுகிறது உள்ளம். பழகிய படுக்கை கூப்பிட ஆரம்பித்துவிடுகிறது. புத்தகங்கள் மாயக் கரங்களைக் காற்றில் அசைக்கின்றன. வேம்பின் பச்சையை உள்ளிழுத்தபடி பருகும் தேநீர் ஏடு படர்த்தி நமக்காகக் காத்திருப்பதுபோல தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அதுவரை இரைச்சலிட்டுக் கொண்டிருந்த மனமும் உதடுகளும் மௌனத்தில் விழுந்துவிடுகின்றன.

மேலைத்தேயம் எத்தனை அழகோடிருக்கிறது! எவ்வளவு மரங்கள்! எத்தகைய நேர்த்தியான சாலைகள்! குறைசொல்லவியலாத போக்குவரத்து வசதிகள்! பிரமாண்டமான பேரங்காடிகள்! நடக்கத் தோதான பூங்காக்கள், இடிபடாத-இடிக்காத நாசூக்கான மனிதர்கள், சுத்தம் வாழும் இடங்கள் இவை. ஆனால், திப்புசுல்தானைப் போல எத்தனை தடவை படையெடுத்தாலும் வெளிநாடுகள் மனதில் விழுத்தும் அந்நியத்தன்மையை அகற்றமுடிவதில்லை. யாரும் யாரோடும் ஒட்டாததுபோன்ற விலகல். மேலும்,தாழ்வுணர்ச்சிக்குத் தள்ளும் மிகைமனிதர்கள் நடுவில் நம்மியல்போடு இருக்கமுடிவதில்லை.

யாரோவுடைய நிலத்தில் யாரோபோல இருப்பதில் என்ன இருக்கிறது?

உணர்ந்திருக்கிறீர்களா நீண்ட இன்மையின்பின் உங்கள் வீட்டுக்குத் திரும்பும் சாலை வளைவில் நெஞ்சுக்குள் நிறைந்து வழியும் உவகையை? ‘இல்லை’எனக் கருதிய எல்லாம் இருப்பதை? முகர்ந்ததுண்டா நீண்ட நாட்களுக்குப் பின் திரும்பும் உங்களை அணைத்துக்கொள்ளும் பிள்ளைகளின் மென்வாசனையை?
திரும்பவியலாத வீட்டைக் கொண்டவளை, அவள் வீடென வரித்துக்கொண்ட ஒன்று கூப்பிடுகிறது தன் ஈரக்கண்களால். தெருக்களெங்கும் நெருநெருக்கும் மனிதர்களை, தூசியை, ‘ங்கோத்தா’என்றாலும் இனிக்கும் மொழியை, பிள்ளைகளை, அரிய சில நண்பர்களை அவள் ‘மிஸ்’பண்ணுகிறாள். (மிஸ் பண்ணுவதை எந்தத் தமிழ்ச்சொல்லால் இட்டு நிரப்பலாம்?)
அந்தரத்தில் இருக்கிறது வீடு. அது தரையிறங்கும்வரை அந்தரத்தில் அலைகின்றன கால்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்று சொன்ன கணியன் பூங்குன்றா! நாடிழந்து அலையும் துயரின்முன் யாதோ ஊர்? எவரோ கேளிர்?