3.05.2007

ஓ கனடா…!

உயர்தர வகுப்பில் புவியியல் படித்தவேளையில், கனடாவை நிறம் தீற்றிப் பிரித்தபோது, அது மிகப்பரந்த நிலப்பரப்பெனத் தெரிந்துகொண்டோம். அமெரிக்காவை அண்மித்த நாடு(அண்டிப் பிழைக்கும் என்றல்ல) எனவும் அங்கிருக்கும் ஒன்ராறியோ ஐம்பெரும் ஏரிகளில் ஒன்றெனவும் கற்பிக்கப்பட்டது. நாங்களாகத் தெரிந்துகொள்ளும் வரையில் ஒவ்வொன்றைக் குறித்தும் எங்கள் மனதிலொரு சித்திரம் இருக்கும். அப்பா என்றால் கண்டிப்பும்… அம்மா என்றால் சோறு போடுவதும்தான் பெரும்பாலானோருக்கு நினைவு வரும். பாடசாலை என்றால் வலிக்கும் பிரம்பாலும், சுவைக்கும் பிஸ்கெட்டாலும் ஆனதென்ற ஞாபகம் பத்துவயது வரை இருந்தது. பாலும், தோடம்பழச் சுவையுடைய இனிப்பும் கையில் கிடைத்ததும் ஓசைப்படாமல் வெளியேறி அடுத்த ஐந்தாவது நிமிடம் வீட்டில் இருந்தது, பாலர் பள்ளிக்கூடத்திற்கு நான் போன காலங்களில் நடந்தது.

தேசப்படத்தில் விரல்களால் தொட்டுப் பார்த்த கனடாவில் காலம் அள்ளியெறிந்தபோது, முன்னர் கற்பிக்கப்பட்ட சித்திரங்கள் எல்லாம் அழிந்துபோயின. குளிரும் தனிமையும் இணைந்தொரு புதிய வரைபடத்தை எழுதின. மிகச் சடுதியாக இருள் சூழ திசை தொலைந்த திகைப்புச் சூழ்ந்தது. தனிமை… குளிர்… இரவில் அருகில் உறங்க ஒரு துணை… வேறொன்றுமில்லை! இலையுதிர்காலம் வார்த்தைகளில் விவரிக்கவொண்ணாத அழகுதான்! நிறங்கள் எழுதிய கவிதைதான்! ஆனால், அந்தக் குறிப்பிட்ட இலையுதிர்காலம் தனிமையெனும் கறுப்பு நிறத்தினாலானது.

வெள்ளைக்காரன் இலங்கைத்தீவை ஆண்டு முடித்து, அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு, தமிழர்களின் தலைவிதியை பெரும்பான்மைச் சிங்களவர்களின் கைகளில் தாரைவார்த்துவிட்டுப் போகும்போது போனால் போகிறதென்று ஆங்கிலத்தையும் அதுசார்ந்ததொரு மேட்டுக்குடியையும் விட்டுவிட்டுப்போனான். அதனால் அப்பாக்களும், மாமாக்களும்(கவனிக்க, அப்பாக்களும் மாமாக்களும்தான்) ஆங்கிலத்தில் பிளந்துகட்டுகிறவர்களாக இருந்தார்கள். பின்வந்த நாட்களில் பெரும்பாலான ஈழத்தமிழர்களின் பயில்மொழி தமிழாயிற்று என்பதறிவோம். ஆங்கிலம் துணை மொழிதான். இன்னொரு பொருளில், தூங்கிவழியத் துணை செய்யும் மொழி. வகுப்பு அரட்டைக்களமாக மாறியிருந்தால் ஆங்கிலப் பாட வேளை என்பது பொது அறிவு படைத்தவர்களுக்குப் புரியும். ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லாமலே கூட சில பாடசாலைகள் இயங்கியதை இப்போது நினைத்தால், நாங்கள் பெரிய கெட்டிக்காரர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆங்கிலம் பிடிக்காதவர்கள் அல்லது படிக்காதவர்கள் தமிழில் ‘புலி’களாக ஆனதொரு உபகதை.

கனடாவில் ஐந்து வயதிலிருந்து அறுபது வயதுவரை அதற்குப் பிறகும் கூட பள்ளிக்கூடம் போகலாம். தாத்தா-பேத்தியெல்லோரும் ஒரே வகுப்பில் அமர்ந்திருப்பது முதலில் வியப்பைத் தந்தாலும், வயதானவர்களைப் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பத்தில் கூச்சமாக இருந்தபோதிலும் குளிரைப்போல எல்லாம் பழகித்தான் போயிற்று. ஒரு சுபநாளில் ஆங்கிலம் படிக்கவென்று பள்ளிக்கூடம் போனபிறகுதான் தெரியவந்தது, ஆங்கிலம் தெரியாத கெட்டிக்காரர்கள் உலகமெங்கும் இருப்பது. மஞ்சள் நிறத்தில் பெரிய முகங்களுடன் எப்போதும் விறைத்தபடியிருக்கும் அடங்காத் தலைமயிருடன் இடுங்கிய சிறிய கண்களோடிருந்த சீனாக்காரர்கள் (அப்போது அத்தோற்றத்துடன் இருந்த எல்லோரும் சீனாக்கார்கள். கொரியா,வியட்நாம்,இந்தோனேசியா இந்தப் பெயர்களெல்லாம் பின்னர் தெரியவந்தவை) உச்சரித்த ஆங்கிலத்தைக் கேட்டவுடன் எங்கள் வகுப்பில் இருந்த தமிழர்களுக்கு அசாத்தியத் துணிச்சல் பிறந்துவிட்டது. சேக்ஸ்பியரை நெருங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டோம். ஆங்கிலத்தைத் துவைத்துத் தோளில் போடுவதற்கும் ஆயத்தமாகிவிட்டோம். கனடாவிற்குப் புலம்பெயர்பவர்களின்; தனிமையை முதலில் துடைக்கும் கைக்குட்டைகள் பள்ளிக்கூடங்கள்தான் என்று சொன்னால் அது மிகைப்படுத்தலல்ல. அவ்வாறு போகாதவர்களைத் தொழிற்சாலைகளின் இயந்திரப்பற்கள் அரைத்துச் செரித்துவிடுகின்றன.

பேரூந்தின் பயணச்சீட்டை முத்திரை வடிவத்தில் முன்னரே வாங்கிவைத்துக்கொள்ளலாமென்பதும், அதைக்கொண்டு நகரின் இந்த அந்தத்திலிருந்து அந்த அந்தம் வரையும் பயணித்துவிடலாமென்பதும், நூலகத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வீட்டிற்கு(பதிந்துதான். சுட்டுக்கொண்டல்ல) எடுத்துச்செல்லலாமென்பதும், நகர வாழ்விலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக்கொள்ளக் கொள்ள உதவும் பூங்காங்கள் ஆங்காங்கே அமையப்பெற்றிருப்பதும் அதில் பறவைகள் நடத்தும் சங்கீதக் கச்சேரிகளும் வியப்பளித்த அனுகூலங்கள். காலையில் நடந்து செல்லும்போது எதிரே வருபவர் எவரெனினும் தலையசைத்துப் புன்னகைத்து வணக்கம் சொல்லும் நல்ல பழக்கத்தை முதிய வெள்ளையர்களிடமிருந்து கற்றுக்கொண்டதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நிறம்,மொழி,இன பேதமறியாத குழந்தைகளின் சிரிப்பும் காலைப் பனித்துளி போல இதமானது.

இருந்தபோதிலும், அந்நாட்களில் பனியில் நனைந்து பாதையோடு ஒட்டிக்கிடந்த பலவித நிறங்களாலான இலைகளை மிதித்தபடி நடந்து வீட்டிற்கு வரும் பாதையெங்கும் ஒரே ஒரு கேள்விதான் அலைந்துகொண்டிருந்தது. “இங்கே என்ன இருக்கிறதென்று எல்லோரும் ஓடி ஓடி வருகிறார்கள்…?” அந்தக் கேள்வியை முன்பும் ஏதோ ஒரு காலத்தில் கேட்டுக்கொண்டு அந்த வழியில் நடந்துகொண்டிருந்ததான விசித்திரமான நினைவுகூட வந்ததுண்டு. அதன் காரணம் யாதென யாராவது தத்துவக்காரர்களைக் கேட்டால் தாவோ, நோவோ என்று ஏதாவது பெயர்களைச் சொல்லிப் பயங்காட்டக்கூடும்.

மொழிக்குருடு நீங்கும்வரை தொலைக்காட்சியில் ‘ஊமைப்படங்களாகப்’பார்த்துக்கொண்டிருப்பதில் பொழுது கழிந்தது. நீண்ட பகல்களாலும் குறுகிய இரவுகளாலும் ஆன சில ஆண்டுகளைத் துரத்திப் பின்னொருநாள் விழித்துப் பார்த்தபோது இயற்கை என்பது எத்தனை அழகு என்பது புரிந்தது.

ஊரில் இருந்தகாலத்தில் ‘கொக்கு வெள்ளை’என்றோம். கொக்கைக் காணாதவர்கள் ‘பால் வெள்ளை’என்றோம். கொக்கையும் பாலையும் பின்தள்ளிவிட்டது பனி வெண்மை. விடிகாலையில் எழுந்து பார்த்தால் கண்கூச வைக்கும் வெண்மை. அதற்கு இணையாக எந்தச் சொட்டு நீல வெண்மையையும் ஒப்பிடவியலாது. உலகம் சட்டெனத் தூய்மையாகிவிட்டதுபோல வீடுகளும் வீதிகளும் மரங்களும் வாகனங்களும் பனியால் போர்த்தப்பட்டிருக்கும் அழகைப் பார்த்து பனி உருகும்வரை மனம் உருகும். குளிரால் எலும்பும் உருகும். உயிரின் வடிவம் நீர் எனில் உயிர் உறையும். பனித்துகள் தலையில் மீசையில் ஆடையில் ஒட்டியிருக்க ‘விதியே’என்று வீதியில் போய்க்கொண்டிருப்பவர்களைக் காண வருத்தமாகக் கூட இருக்கும். காலநிலை குறித்து யாரோ ஒருவர் எழுதியிருந்தது நினைவில் வருகிறது.

மரங்கள் அம்மணமாகியபோது
மனிதர்கள் போர்த்திக்கொண்டார்கள்.
மரங்கள் போர்த்திக்கொண்டபோது
மனிதர்கள் அம்மணமானார்கள்.

குளிர்காலம் முடிந்து இளவேனில் ஆரம்பமாவது எந்தக் கணத்திலென்று புரிவதில்லை. நட்பு காதலாக மாறும் கணத்தைப் பிரித்தறிய முடியாததுபோலத்தான் அங்கு காலநிலை மாறுவதும். சொல்லாமல் புகுந்துவிட்ட காதலினால் எழில் வழியும் இளம்பெண்ணைப்போல புசுக்கென்று பொங்கிப் பொலியும் மரங்கள். கடினமான அந்த மரங்களுக்குள் காலம் வரும்வரை கண்மூடித் தவமிருந்தனவா அந்தப் பசுந்தளிர்கள் என்று வியந்துமாளாத அழகு அது. சிலநாட்கள்தான் இளம்பச்சைத் தளிர் முகம் காட்டும். இருந்தாற்போல அடர்பச்சையும் பூவுமாய் திருவிழாவுக்குப் புறப்பட்ட பெண்ணாய் புதுக்கோலம் காட்டும். அதிலும் சில மரங்கள் இலைகளே இல்லாமல் பூக்களாலானவை. அத்தகைய மரங்கள் இருபுறமும் நிற்கும் சாலையோரத்தில் விடிகாலையில் நடந்துபோவதற்கிணையான சுகம் காதலிலும் இசையிலும் மட்டுமே கிடைக்கும்.

இலையுதிர்காலமென்பது மழை நேர வானவில் போல மரங்கள் எழுதும் வானவில். இயற்கையின் மீதான காதலை இழந்தவர்கள்தான் அதீத அழகுணர்ச்சி ஆகாதென்கிறவர்கள். வாழ்வின் பக்கங்கள் அத்தனையையும் கண்ணீரும் குருதியும் மட்டுமே எழுதுவதில்லை. சிரிப்பாலும் சில அற்புதமான தருணங்களாலும் கூட எழுதப்பட்டதே வாழ்க்கை.

எனது உடமை என்று நிலத்தை எவரும் உரிமை கொண்டாட முடியாத பல்லின கலாச்சார நாடாக கனடா மாறிவருகிறது. எங்கேயும் போல கறுப்பு-வெள்ளை பேதங்கள் அடியாழத்தில் இருந்தாலும், ஒப்பீட்டளவில் யாரும் யாரையும் அடிமைகொள்ளக்கூடிய பெரும்பான்மையினராக இல்லை என்பதே அதன் சிறப்பு. ஒரு புகையிரதத்தில் வெள்ளை, மஞ்சள், கறுப்பு, மண்ணிறம் என்ற எல்லா முகங்களையும் காணலாம். ‘வெள்ளை என்றால் சிறப்பு’, ‘கறுப்பு என்றால் கள்ளன்’, ‘மண்ணிறம் என்றால் குறைவு’, ‘மஞ்சள் என்றால் சுயநலம்’போன்ற பொதுப்புத்திசார் கருதுகோள்களும் இல்லாமலில்லை.
ஈழத்தமிழர்களுள்ளேயே எத்தனை பிரிவினைகள்! (அப்படியொன்றும் கிடையாது என்று போர்த்து மூடிக்கொள்பவர்கள் அறுவைச் சிகிச்சையைத் தள்ளிப்போட்டுப் புண்ணைப் புரையோட விடுபவர்கள்) எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த, ஆங்கிலம் தெரிந்த, தங்களை மேட்டுக்குடியினராக, வெள்ளைக்காரர்களுக்கு இணையானவர்களாகக் கருதும், ‘மம்மீ!-டாடி’என்றழைக்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோரான ‘வெள்ளைக் கொலர்’(கொலருக்குத் தமிழ் என்ன…?) தமிழர்கள், தொண்ணூறுகளின் பின் வந்து உணவகங்களிலும், தொழிற்சாலைகளிலும் உடலையும் ஆன்மாவையும் தேய்த்து பொருளாதார ரீதியாக நிமிர்ந்தபடி கனேடிய அரசாங்கத்திற்கு வரிவருமானத்தைத் தாராளமாக வழங்கிக் கொண்டிருக்கும் ‘நீலக் கொலர்’தமிழர்கள், இரண்டாயிரத்தின் பின் கால்பதித்து குடிவரவுத் திணைக்களத்தினரிடம் கதை கதையாகச் சொல்லியலைந்து தமது இருப்புக் குறித்த நிச்சயமின்மை தொடர்பான மனவுளைச்சல்களோடிருப்பவர்கள் என ஈழத்தமிழர்களையே பல்வகைப்படுத்தலாம். தவிர, சாதியாலும் சங்கங்களாலும் ஊராலும் தாம்சார்ந்த அரசியல் கொள்கைகளாலும் தம்மைச் சுற்றி வரைந்த வட்டங்களாலும் வேறுபட்டவர்கள். ஆயினும், பெரும்பாலான எல்லோரும் சந்திக்கும் ஒரே புள்ளி எமக்கென்றொரு நாடு வேண்டும் என்பதுதானாயிருக்கும். தேச மறுப்பாளர்கள் என்று நான் யாரையும் சந்தித்ததில்லை என்பதன் அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறத் துணிந்தேன்.

அங்கிருந்த காலத்தில் மிகவும் மனதைப் பாதித்த ஒன்றெனில் அது முதியோரது தனிமைதான். போர் குறித்த அச்சத்தை விட புகலிடங்களில் விளைந்த தனிமை குறித்த அச்சம் அவர்களைப் பாதித்ததை, அங்கு ஒலிபரப்பாகும் வானொலிகளில் ஒலித்த நடுங்கும் குரல்கள் வழி கேட்கக்கூடியதாக இருந்தது.

படித்த, நல்ல உத்தியோகங்களில் அமரும் தகைமை பெற்ற இளைய தலைமுறை ஒன்று உருவாகிவருவது ஒருவகையில் ஆறுதலளிப்பதென்றால், புதிய நிலம் வழங்கிய எல்லையற்ற சுதந்திர வெளியாலும், எளிதில் ஆயுதங்கள் கிடைக்கப் பெறுதலாலும், மிதமிஞ்சிய சக்தியை எங்கு இறைப்பதெனும் இளமைத் துடிப்பாலும் சில இளைஞர்கள் தங்களை ‘ரேமினேட்டர்’களாகக் கருதி அலைவது எதிர்காலம் குறித்த பயம் கலந்த கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.

உலகத்தின் எந்த நாட்டிற்கும் (இந்தியா தவிர்ந்த) ‘விசா’எடுக்காமலே சென்றுவரக்கூடிய கனடியக் கடவுச்சீட்டு பெறுமதியானதே. இலஞ்சம், ஊழல் போன்ற பெருவாய்ப் பேய்கள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவு என்பதும் உண்மையே. இனம்,மதம்,நிறம்,மொழியில் வேறுபட்ட பல இலட்சக்கணக்கான மக்கள் நீரோட்டத்தில் ஒருதுளியாய் உறுத்தாமல் கலந்திருப்பது உன்னதமே. கிழமைக்கொரு கலாச்சார நிகழ்வு, பரத நாட்டிய அரங்கேற்றங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், ஊர் ஒன்றுகூடல்கள், பத்துக்கு மேற்பட்ட பத்திரிகைகள், வார இறுதிநாட்களில் உறவினர் வீடுகளில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள், அறுபதாம் கல்யாணங்கள், அங்கு வீணாக இறையும் உணவுகள், சத்தமெழ உடைபடும் ஷம்பெய்ன்கள், பியர்ப் போத்தல்கள், தொட்டுக்கொள்ள ஊறுகாயாய் அரசியல், ஊர்ப்புதினம்…. மேப்பிள் மர நிழலில் குறைவற்ற வாழ்வுதான். இருந்தும், ‘வா… வா…’என்றழைக்கும் ஊரின் வசியக்குரலை எப்படித்தான் மறுதலிக்க?

25 comments:

வி. ஜெ. சந்திரன் said...

நல்லா சொல்லி இருக்கிறியள்.

புலம் பெயர் வாழ்வு,கனடா.. இன்ன பிற மேலைதேய நாடுகளின் மீது கற்பனைகள், அவை வந்து இறங்கிய முதல் நாளிலேயே பொடி பொடின கதை.....

இன்னும் நிறைய சொல்லலாம்,

ஒரு பதிவு எழுதவேணும், நேரம் வரும் போது.

RBGR said...

//மரங்கள் அம்மணமாகியபோது
மனிதர்கள் போர்த்திக்கொண்டார்கள்.
மரங்கள் போர்த்திக்கொண்டபோது
மனிதர்கள் அம்மணமானார்கள்.//


அருமை! அருமை!
மிகவும் ரசித்த வரிகள்.
நல்ல கற்பனை.

வாழ்த்துகள்.

ஆதிபகவன் said...

நல்ல பதிவு......

Suban said...

இதெல்லாத்தையும் நான் இப்போது இங்கு காணுகிறேன்! எல்லாரையும் சீனர்கள் என நானும் நினைத்ததுண்டு!! என்ன இருந்தாலும் நம்ம நாடு மாதிரி வருமா??! :(

Anonymous said...

//உயர்தர வகுப்பில் புவியியல் படித்தவேளையில், கனடாவை நிறம் தீற்றிப் பிரித்தபோது, அது மிகப்பரந்த நிலப்பரப்பெனத் தெரிந்துகொண்டோம். //

Please learn Tamil first

நிறம் 'தீட்டு'வதாகத்தான் கேள்விப்பட்டுள்ளேன். இன்றுதான் நிறம் 'தீற்று'வதைப் பார்த்துள்ளேன்.

நிறம் தீற்றுவது என்றால் நிறத்தை எடுத்து ஓட்டைகளை அடைப்பது, அல்லது நிலத்தில் வரையும் படத்திற்கு வண்ணம் தீட்டும்போது அதைத் தீற்றல் என்று சொல்லலாம். ஏனென்றால் அதற்கு பெருமளவான நிறங்களைத் தீட்டவேண்டும்.

தாளில் நிறத்தைத் தீட்டுவது என்றுதான் சொல்வார்கள். தீற்றுவதென்றல்ல.

தமிழ்நதி said...

வி.ஜெ.சந்திரன்,தமிழி,ஆதிபகவன்,சுபன்,கிறுக்கன் அனைவருக்கும் நன்றி.

"நல்ல கற்பனை"-தமிழி
அந்த வரிகளுக்குச் சொந்தக்காரி நானல்ல.

கிறுக்கன்,
உலகவரைபடத்தில் ஒரு நாட்டைக் குறிக்க வண்ணங்களால் அடைப்பதை தீற்றுவது என்றுதான் எங்களுக்குச் சொல்லித்தந்தார்கள். நிலத்தில் எழுதினால் 'தீற்றுவது' தாளில் எழுதினால் 'தீட்டுவது'என்றெல்லாம் வேறு வேறாகச் சொல்லித்தரவில்லை. பொதுவில் 'கலர் அடிப்பது'என்றுதான் மாணவர்களிடையே பேசப்படுவதுண்டு. அதற்காக Please learn Tamil first என்று சொல்லக்கூடிய நீங்கள் என்ன வகையான மனோநிலையை உடையவர் என்று என்னால் உணரமுடிகிறது. தமிழில் எழுதாமல் இவ்வளவு நாட்களாக ஆங்கிலத்திலா எழுதிக்கொண்டிருந்தேன்? அரிச்சுவடி படித்துவிட்டு நேரடியாக தமிழ்மணத்திற்கு வந்து நான் எழுதிக்கொண்டிருக்கவில்லை என்பதைத் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். அது சரி இவ்வளவு தமிழ் அறிவும், 'உணர்வும்' உள்ள நீங்கள் ஏன் உங்கள் பெயரில் ஒரு 'புளொக்'அமைத்து அதனூடாக வந்து பின்னூட்டமிடக்கூடாது? கற்றுக்குட்டிகளான நாங்களும் உங்களிடமிருந்து கொஞ்சம் தமிழ் கற்றுக்கொள்ளலாமல்லவா?

வரவனையான் said...

அற்புதம் தமிழ்நதி, உண்மையில் தமிழ் உருகி வழிகிறது. உவமானங்கள் ஒரு கவிதைக்குரிய தன்மைகளோடு மிளிர்கிறது. அண்மையில் படித்த மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்றிது. வாழ்த்துக்கள்

சின்னக்குட்டி said...

வணக்கம் தமிழ்நதி..நல்ல பதிவு...ஆரம்பத்தில ஜரோப்பா வாழ் நம்மவர்களுக்கே கனடா சென்று குடியேற வேண்டும் சொர்க்கம் பூமி என்ற பிரமை இருந்தது... இப்ப அப்படி இல்லை . புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மவர்களில் கனடாவில் வாழ்பவர்கள் கொஞ்சம் முகம் இறக்கம் குறைந்து காணபடுகிறார்கள் என்பது உண்மை தான் ..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஓ...கனடாவிலும் தமிழன் தமிழனாகத்தான்! இருக்கிறான்.மாற மாட்டான்.
தனி ஒரு குணமல்லவா?
நல்லா சொல்லியுள்ளீர்!!

பங்காளி... said...

"....வாழ்வின் குழப்பத்தில்
உன் உழைப்பும் ஆசையும்
எதுவானாலும்
உள்ளே உன்க்குள்
ஓர் இடம் செய்து கொள்..."

முடிந்து போன விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பழகவேண்டும். சுகமோ,சோகமோ சும்மா கிடந்துவிட்டு போகட்டுமே என மனதில் சேர்த்து வைப்பதால்தான் நாள்பட நாள்பட இவற்றால் தேவையில்லாத குழப்பங்களும்,கவலையும்,வடுவும் சேர்கிறது.

இதை ஆரம்பத்திலேயே விலக்கிவிட பழகினால் இப்படியான ஆதங்கங்களூக்கு இடமில்லாது போகலாம்.....இதற்கு பயிற்சியும், நிதானமும் தேவை......

(ஏதோ சொல்லனும்னு தோணிச்ச்சி சொன்னேன்....வேறெந்த நோக்கமும் இல்லை தமிழ்நதி...)

Anonymous said...

//மரங்கள் அம்மணமாகியபோது
மனிதர்கள் போர்த்திக்கொண்டார்கள்.
மரங்கள் போர்த்திக்கொண்டபோது
மனிதர்கள் அம்மணமானார்கள்.//

அம்மணி, இலைகுழை அணிவது எப்பவோ முடிந்துவிட்டு


//கிழமைக்கொரு கலாச்சார நிகழ்வு,//

கிழமைக்கொரு கலாச்சாரச் சீரழிவு

//பரத நாட்டிய அரங்கேற்றங்கள்,//

துரித நாடக அரங்கேற்றங்கள்

//புத்தக வெளியீட்டு விழாக்கள்,//

புத்தக வியாபாரம்

//ஊர் ஒன்றுகூடல்கள்,//

யார் எந்த ஊர் என்று யாருக்குத் தெரியும்

//பத்துக்கு மேற்பட்ட பத்திரிகைகள்,//

பத்துக்கு மேற்பட்ட விளம்பரக்குவியல்கள்

//வார இறுதிநாட்களில் உறவினர் வீடுகளில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்,//

கேட்கவே வேண்டாம்

Raj Chandirasekaran said...

மிக அருமையான பதிவு! அப்பட்டமாக கனடா வாழ்வினைப் படம் பிடித்துக்காட்டிய பதிவு! கனடா கடவுச்சீட்டு வைத்திருந்தால் பல நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் ஆனால் இந்தியாவுக்குச் செல்ல முடியாது என்பது புதிய தகவல்.தமிழ் இங்கு நதியாகத்தான் பாய்கிறது. வாழ்த்துக்கள்.

தமிழ்நதி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் வரவணையான்,சின்னக்குட்டி,யோகன் பாரிஸ்,பங்காளி,கெக்கட்டம்,ராஜ்மோகன்அனைவருக்கும் நன்றி.

வரவணையான் மற்றும் சின்னக்குட்டி! கிறுக்கன் என்றொருவர் முகம் காட்டாமல் கிறுக்கிக்கொண்டிருக்கிறார் அல்லவா... அவர் உங்கள் இருவரையும் இழுத்துவைத்துக் கிறுக்கியிருக்கிறார். அதனால் அவரது பின்னூட்டத்தை இதில் போடவில்லை. அவர் முகம் காட்டினால்தான் இனி அவரின் பின்னூட்டங்கள் போடப்படும் என்பதை இத்தால் அவருக்கு அறியத்தருகிறேன். அதுவும் சின்னப்பிள்ளைத்தனமாக 'கிறுக்காமல்'இருந்தால் மட்டுமே.

தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி யோகன்.

"முடிந்து போன விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பழகவேண்டும்."-பங்காளி
இதை எதற்காகச் சொல்லியிருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. தவிர,அத்தனை மனப்பக்குவம் உடையவள் அல்ல நான். முடிந்துபோனவை தீயன என்றால் தீயெனக் கனன்றுகொண்டேயிருப்பதுதான் வழமை.

திரு.கெக்கட்டம்!நன்றாகச் சி(த்த)ரித்திருக்கிறீர்கள்.

அபிமானத்தில் கூறிய வார்த்தைகளுக்கு நன்றி ராஜ்மோகன். தமிழ்நதி என்ற எனது புனைபெயருக்கான விளக்கம் நட்சத்திர வாரக் குறிப்பில் உள்ளது. தமிழ், நதியாக ஓடுகிறது என்று யாரும் எழுதினால் வாசிக்கக் கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது.

பங்காளி... said...

கொஞ்ச நாளா நம்ம சேர்க்கையே சரியில்லை...அதான் அப்பொப்ப தத்துவமுத்தா மாறீட்றேன்.....ஹி...ஹி...

ஒஷோ, புத்தர்னு ரெண்டு பேரும் நம்மள ரொம்ப குழப்பறாங்கப்பா....

தமிழ்நதி said...

மதிப்பிற்குரிய சின்னக்குட்டி,
'மேலானவர்' கீழ்க்கண்டவாறு உரைத்திருக்கிறார்.

"புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மவர்களில் கனடாவில் வாழ்பவர்கள் கொஞ்சம் முகம் இறக்கம் குறைந்து காணபடுகிறார்கள் என்பது உண்மை தான் .."

சின்னக்குட்டியருக்கு எப்ப மருத்துவப்பட்டம் கொடுத்தவர்கள்? ஆய்வாளர் சின்னக்குட்டி அல்லது ஆய்க்குட்டி என்று பெயர் வைக்கலாம்.

படியாதவன் said...

ம்ம்...
நல்லாத்தான் இருக்கு வரிகளும் கவிதையும்...
கலக்கிறீங்க போங்க..
கனடா போய் பாக்கோணுமெண்டு ஆசையா இருக்கு...

சின்னக்குட்டி said...

//சின்னக்குட்டியருக்கு எப்ப மருத்துவப்பட்டம் கொடுத்தவர்கள்? ஆய்வாளர் சின்னக்குட்டி அல்லது ஆய்க்குட்டி என்று பெயர் வைக்கலாம்.//




பட்டம் கொடுக்கிற முனைவர் ஜயா ...ஏன் பாருங்கோ.....முக்காடு போட்டுக்கொண்டு முகத்தை காட்டமால் கொடுக்கிறியள்... அதென்ன ஆய்க்குட்டி புது பெயராய் கிடக்கு...இது என்ன சோழ காலத்து சொல்லே....

மிதக்கும்வெளி said...

கனடாவின் இனிசியல் oவா?

தமிழ்நதி said...

"நல்லாத்தான் இருக்கு வரிகளும் கவிதையும்...
கலக்கிறீங்க போங்க..
கனடா போய் பாக்கோணுமெண்டு ஆசையா இருக்கு... "-படியாதவன்

அது என்ரை கவிதை இல்லையப்பா...!யாரோ எழுதியதை கட்டுரைக்காக எடுத்துப் போட்டேன்.

"கனடாவின் இனிசியல் oவா?"-மிதக்கும் வெளி

கனடாவுக்கு இனிசியல் வைப்பதாயிருந்தால் c என்றுதான் வைக்க வேண்டும். அவ்வளவு cold. ஓ கனடா என்றால் கனடாவில் இருப்பவர்களுக்கெல்லாம் தெரியும். 'ஓ கனடா எங்கள் நாடும் வீடும் நீ...'என்றுதான் கனடிய தேசிய கீதம் தொடங்கும். அதனால் அப்படி.....

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நதி.

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

// மிதக்கும் வெளி said...
கனடாவின் இனிசியல் oவா?//

மிதக்கும் வெளி,

லே இங்க வாலே'னு கூப்பிடுறமாதிரி கனடாவை விளிக்கிறாங்களாக்கும். க்கும்! ;)

-மதி

தமிழ்நதி said...

"லே இங்க வாலே'னு கூப்பிடுறமாதிரி கனடாவை விளிக்கிறாங்களாக்கும். க்கும்! ;)"-மதி

கூப்ட்டு கூப்ட்டுப் பாத்தேன்... நிம்மதி அங்ஙன 'வரமாட்டேன் போ'ன்னுச்சு மதி! அதான் நான் ஓடியாந்து இங்ஙன ஒக்காந்துட்டேன். ஆனா கொஞ்ச நாளா மன்சே செரியில்ல... எத்தோ அந்த எசமாடன் கைல சொல்லிப்புட்டேன். அவந்தான் பாத்துக்கணும்.

Anonymous said...

//அதென்ன ஆய்க்குட்டி புது பெயராய் கிடக்கு...இது என்ன சோழ காலத்து சொல்லே....//

ஓ.. (இது வேறை ஓ..) அவிங்க தானா இவிங்க.. ஆகா.. கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்க..

Anonymous said...

Anonymous said...
//அதென்ன ஆய்க்குட்டி புது பெயராய் கிடக்கு...இது என்ன சோழ காலத்து சொல்லே....//

ஓ.. (இது வேறை ஓ..) அவிங்க தானா இவிங்க.. ஆகா.. கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்க..

சின்னக்குட்டியன்ன ரெம்ப சந்தோஷப்பட்டுடாதீங்கோ, குட்டி சரி ஆய் என்றால் எனவெண்று இந்திய நண்பர்களிடம் கேட்டால் பக்கத்திலேயே நிக்கமாட்டீக:-)

Ambika Sangaran said...

வணக்கம் அக்கா. கனடாவில் தமிழரின் வாழ்வைப் பற்றி அருமையான கட்டுரை. நானும் புலம் பெயர்ந்தோரின் வழித் தோன்றலே. நான் பிறந்த நாடு மலேசியா. மலேசியாவின் குடிமகளாகினும் நான் தமிழ் பெண்தான். தமிழ் குடும்பத்தை சேர்ந்தவள். வரும் செப்டம்பர் திங்கள் எனது மேர்கல்விக்காக கனடாவிற்கு வருகிறேன். கனடாவில் என் தமிழ் தாயும் அவளது குழந்தைகளும் தமிழர்களாக வாழ்வதில் பெருமை.