11.09.2007

தீபாவளி(லி)


தொடவியலாத உயரங்களை நோக்கி
எய்யமுடிந்த மகிழ்ச்சி
வானத்திலும் விழிகளிலும்
ஒளித்துளிகளாகச் சிதறுகின்றன.
நெருப்பும் கந்தகமும்
கூடும் உச்ச கணத்தில்
உள்ளுறங்கிக் கிடந்த மூர்க்கம்
வெடித்து ஒருவழியாய் வடிகிறது.
திடீர் விபரீதங் கண்டு
பதறிக்கிடக்கும் வீதிகளில்
அந்தரித்து அலைக்கழிகின்றன நாய்கள்.
நாளைவரை பிழைத்திருக்க
கையேந்துகின்றன செவிகள்.
வெறுங்கையுடன் கிராமம் திரும்பவியலாத
வேலையற்ற பிள்ளைகளின் கண்ணீர்
ஊர்ந்துகொண்டிருக்கின்றது நடைபாதைகளில்.
பண்டிகை நுனியில் தட்டுப்பட்டு
பொருக்குடைந்த காயங்களுடன்
மகிஷாசுரமர்த்தனீ!
இந்த நாள் உறங்கும்வரை
விழித்திருக்கிறோமடி!

3 comments:

ரசிகன் said...

//நாளைவரை பிழைத்திருக்க
கையேந்துகின்றன செவிகள்.//
// இந்த நாள் உறங்கும்வரை
விழித்திருக்கிறோமடி!//

இந்த வரிகளை படிக்கும் போது.. எல்லாருக்கும் மகிழ்ச்சியை வாரித்தரும அதே தீபாவளி, மூச்சு முட்டும் கந்தக காற்றும்,உறங்கவும் விடாத வெடிச்சத்தமும் வயோதிகர்களுக்கும்,நோயாளிகளுக்கும் தரும் சிரமத்தை நினைவுப்படுத்துகின்றன..நன்றாக இருக்கிறது.

தென்றல் said...

தமிழ்நதி,

இப்பொழுதலாம் உங்கள் கவிதையை... எழுத்தை வாசித்துவிட்டு..மறுமொழியிடாமல் ..ஒரு வித வலியுடன்... சென்று விட தோன்றுகிறது.

cheena (சீனா) said...

தமிழ்நதி, கவிதை அருமை.

வானத்தில் நடக்கும் வண்ணமிகு ஒளி வெள்ளத்தின் வர்ணிப்பு நன்று.

உள்ளுறங்கிக் கிடந்த மூர்க்கம் வடித்து ஒரு வழியாய் வடிகிறது - நெருப்பும் கந்தகமும் கூடியதன் உச்சத்தால்

உவமை அருமை அருமை

செவிகள் கையேந்தும் நிலை
வேலையற்றவர்களின் கண்ணீர் ஊர்ந்து கொண்டிருக்கும் நடை பாதைகள்

இந்த நாள் உறங்கும் வரை விழித்திருப்போம்.

கருத்து கவனிக்கப் பட வேண்டியது
கவிதை அருமை
பாராட்டுகள்
தொடர்க வாழ்க வாழ்த்துகள்