1.16.2008

‘குற்றவுணர்வின் மொழி’: ஒரு கவிதை அனுபவம்


ஒரு படைப்பை மதிப்பீடு செய்தல்,திறனாய்தல்,விமர்சித்தல்,பார்வை இப்படிப் பல பெயர்களாலாய செயல் எவ்வளவிற்குச் சாத்தியமுடையது என்பதில் எனக்குச் சந்தேகமிருக்கிறது. மேற்கண்ட வாக்கியம் கவிதையை முன்வைத்தே சொல்லப்பட்டது. ஏனெனில்,மிகவும் அகவயம்சார்ந்த மொழிவெளிப்பாடாகிய கவிதையை வாசித்து, அது நமக்குள் கடத்தும் அற்புதானுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன் நிறுத்திக்கொள்வதே அதற்கு நாம் செய்யும் நியாயமாக இருக்கமுடியும். தன்னை எழுதப் பணிக்கும் கவிதையின் குரலை, அதன் தொனியும் பொருளும் குறைவுபடாமல் பதிவுசெய்ய அதனோடு தொடர்புடைய படைப்பாளியே திணறும்போது வாசகனோ சகபடைப்பாளியோ அதை உள்வாங்கிக்கொள்வதும், அதன் சாரத்தை எழுத முற்படுவதும் வியர்த்தமே. அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த ‘குற்றவுணர்வின் மொழி’யைப் பற்றி எழுதவேண்டுமென்று தோன்றியபோது, ‘விமர்சனம்’, ‘மதிப்பீடு’போன்ற வார்த்தைகளைத் தள்ளிவைக்கவேண்டுமெனத் தோன்றியது அதனாலேயே. கவிதைகளை வாசித்ததும் எழுந்த உடனடி உணர்வுந்துதலே இக்கட்டுரையாகிறது.

‘ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது அதை எழுதியவனை அல்லது எழுதியவளை வாசிப்பதுபோலவே இருக்கிறது’என்பது நாவலுக்கும் சிறுகதைக்கும் பொருத்தமற்றதெனத் தோன்றலாம். ஆனால், கவிதைகளுக்கல்ல. கவிதைகள் பெரிதும் எழுதுபவனின்-எழுதுபவளின் வாக்குமூலமாக அமைந்துவிடுதலே இயல்பு. ‘குற்றவுணர்வின் மொழி’யைப் படித்தபோது, பாம்பாட்டிச்சித்தனின் அகநிலைச் சித்திரங்கள் வரைந்த சாலையினூடே நடப்பது போன்றே இருந்தது. தொகுப்பின் முன்னுரையில் சி.மோகன் அவர்களால் கூறப்பட்டிருப்பதுபோல, ‘கவிஞன் அடிப்படையில் ஒரு சுயசித்திரக்காரன்’தான். இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் தன்னனுபவ வெளிப்பாடாக இருத்தலுக்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. ‘நரபலியின் கூற்று’, ‘குற்றவுணர்வின் மொழி’, ‘வழித்துணையாய் வந்த கடவுள்’, ‘டிசம்பர் 13,2003’ ஆகிய நான்கு கவிதைகள் மட்டுமே புறவுலக அரசியல் சார் கவிதைகள் எனலாம்.

ஒற்றை வாசிப்பில் புரிந்துகொள்ளலாமென்ற எதிர்பார்ப்புடன் பக்கங்களைப் புரட்டிச் செல்ல முற்படும் வாசகனை தனது செறிவார்ந்த மொழிக் கட்டமைப்பால் ஏமாற்றிவிடுகிறார் கவிஞர். அவ்வகையில் ஆழ்ந்த வாசிப்பினை வேண்டி நிற்கின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள்.

தான் கண்ட காட்சியைத் தன் கற்பனைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப வார்த்தைகளில் ஏற்றிவிடும் கலை கவிஞனுக்கே வாய்த்திருக்கிறது. அக்கலை பாம்பாட்டிச் சித்தனுக்கு விரல்கூடியிருக்கிறது.

"தொலைபேசி ஒலிகள்
பிரவாகித்தபடி இருக்கும்
ஆளில்லாத வீட்டைச் சுற்றி
செழித்தடர்கிறது வேதனைப்புதர்"

எடுப்பாரில்லாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் தொலைபேசி மணியோசை, அந்த வீட்டைக் கடந்து செல்பவரிடை எத்தனை கேள்விகளை எழுப்பியிருக்கும்? நிச்சயமாக அது துயரத்தின் ஓசையாகத்தானிருந்திருக்க முடியும்.

-
"எலுமிச்சை மரயிடுக்குகளில் பொசிந்த
மஞ்சள் வெயில் சுவைத்து
வாய்கூசிக் கரையும் காகங்கள்"


எலுமிச்சையிலிருந்து பொசியும் வெயிலும் புளிக்குமோ…? இதுவரை எவரும் எடுத்தாளாத கற்பனை இது. ஆளரவமற்று அயர்ந்த நடுப்பொழுதில் வாய்கூசிக் குழறும் காகங்களின் கரைதல் கவிதையை வாசிக்கும்போது ஒலிப்பது போலிருந்தது.

தொகுப்பு முழுவதையும் ஒரே அமர்வில் வாசிக்கும்போது, கவிதைகளினூடே ஒரு குழந்தையின் சிறிய பாதங்கள் நடந்துதிரியும் மெல்லிய காலடியோசையைக் கேட்கமுடியும். பெரும்பாலான கவிதைகள் குழந்தைகளின் உலகம் குறித்ததாகவும், அந்த உலகத்தின் வினோதாதீதங்களினாலேற்பட்ட வியப்பில் விழியகன்ற ஒரு கவிஞனின் வரிகளாகவுமே இருக்கின்றன. ‘உயிர் வருகை’, ‘படைப்பின் இரகசியம்’, ‘வாழ்தலும் புரிதலும்’, ‘இருந்தும் இல்லாமல் போன இடத்தில்…’, ‘தனிச்சி’, ‘குழந்தையுடனான யாத்திரை’, ‘பிள்ளை விளையாட்டு’, ‘குணாதிசயம்’, ‘பனிமொழி’,’வனம் புகுதல்’, ‘நீர்க்கரை’ போன்ற கவிதைகளில் குழந்தைமையும் குழந்தைகளும் பாடுபொருளாகவோ அன்றேல் பக்கப்பொருளாகவோ இருக்கின்றன. குழந்தைகளுக்கான படைப்புகள் தமிழில் அருகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், குறைந்தபட்சம் அவர்களின் மனவுலகம் பற்றிய எழுத்துக்கள் வருவது நிறைவுதருகிறது. கவிஞர் உளவியல் துறை சார்ந்த பணியில் இருப்பதனாலும் இது சாத்தியப்பட்டிருக்கலாம்.

கவிஞருடைய பெயரின் விசித்திரம் போலவே மாயாவாத கனவொன்றினுள் வாசகரை இட்டுச்செல்லும் வரிகள் தொகுப்பெங்கிலும் விரவிக்கிடக்கின்றன.

“உயிர்விடும் முன் எழுதிய கடிதம்
சூனியத் தகடாக…”

“மந்திரித்த மரப்பாச்சி போல்
மடல் மேலமர்ந்து ரீங்கரித்த…”

“கருப்பு சூன்யத்தாலோ
மற்றதென் சகாயத்தாலோ…”

“சூத்திரப்பாவையின்
கயிறறுந்த விதம் பற்றிய…”

கவிதைகள் இப்போது சிறுகதைகளின் வேலையைச் செய்வதாக’கவிஞர் யவனிகா சிறீராம் ஓரிடத்தில் சொல்லியிருந்தார். அண்மைய நாட்களில் அக்கூற்றை உறுதிசெய்வதான கவிதைகள் நிறையவே வாசிக்கக் கிடைக்கின்றன. இத்தொகுப்பிலும் ‘பிரிவிற்கு முந்தைய கணங்கள்’, ‘வழித்துணையாய் வந்த கடவுள்’போன்ற கவிதைகள் சிறுகதையாக விரிக்கத்தக்க சம்பவ சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன.

கவிதைக்கு வடிவம் இன்னதுதான் என்றில்லை. அது ஊற்றப்படும் பாத்திரத்தில் தண்ணீராக தன்வடிவம் நிர்ணயிக்கும் தன்மையது. ஆனால், கட்டிறுக்க மொழியைக் கொண்டமைந்த கவிதைகளைக் காலம் பின்னிறுத்தாது, தன்னுடன் எடுத்துச்செல்லும் என்பது எழுதா விதி. பாம்பாட்டிச் சித்தனின் கவிதைகளில் அத்தகு சிறப்பினை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக,

“வார்த்தைகள் நிரப்பாத மௌனப் பெருங்குழி”

“சொல்வலைக்குள் சிக்காத சிறுபறவை”

போன்ற வரிகள் எந்தச் சாயலுமற்று வாசித்த கணத்தில் மனஆழத்தில் சென்று இறங்குபவை.

ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு சொல் பிடித்தமானதாக இருக்குமோ என்னமோ… எனக்குத் ‘தனிமை’என்ற சொல் தவிர்த்து எழுதவியலாது. ‘சொற்கள்’உம் எப்போதும் என்னைப் பிரிய மாட்டேனென அடம்பிடிப்பவை.(நல்லதுதானே) கூறியது கூறல் குற்றந்தான் எனினும், எப்போதும் கூடவே இருக்கும் ஞாபகங்களைப் போல சில சொற்களைப் பிரியவியலாது. ‘குற்றவுணர்வின் மொழி’யில் ‘வெளி’என்ற சொல் நட்சத்திரங்களைப் போல அநேக கவிதைகளில் சிதறிக்கிடக்கிறது.

‘சம்பாசணைப் பெருவெளிகளை’
‘மலர்தலுக்கும் உதிர்தலுக்குமான வெளியில்’
‘காலவெளியினுக்கு இரையாகி’
‘மாடியின் வெளி விடுத்து’
‘பாழ்வெளியலைந்து’
‘நீர்ச்சமவெளியை’
‘வளிவெளியில்’
பாழ்வெளித் தனிமையை’
‘பேதலித்த மனவெளியோடு’
‘வானமற்ற வெளியில்’
‘வெளியைப் புணர்ந்த வெக்கை’

‘வெளி’யில் எல்லோர்க்கும் விருப்பந்தான். சிறையிருத்தல் உவப்பில்லை. தனித்தனிக் கவிதைகளாகப் பார்க்கும்போது தோற்றாத இந்த மீள்கூறல், தொகுப்பாக அமையும்போது உறுத்துவதாகிவிடுகிறது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் சொற்தேர்வினாலும் கட்டிறுக்கத்தினாலும் சிறக்கின்றன. ஆனாலும், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக ஆரம்பித்த இடத்திலிருந்து முடிவினை நோக்கி மூச்சைப் பிடித்துக்கொண்டு நிறுத்தற்குறிகளற்று நகர்வதனால், இடைப்பட்ட பொருள் இழக்கப்படுகிறது. கவனம் முழுவதும் இறுதிப்புள்ளியில் குவிவதனால் சொல்நேர்த்தியை,பாடுபொருளை ஆசுவாசமாக முழுவதுமாக அனுபவிக்க இயலவில்லை.

"கருக்கலில் வரும்
கருத்தப் பால்காரியை
கூடும் புணர்ச்சியில் பூரணப்படுகிறது
என் புலரி"


போன்ற வரிகளில் கல்யாண்ஜி தொனிக்கிறார்.

கவிதையைச் சுமந்து அலைவது ஒரு வலியென்றால், நமக்குரிய வடிவத்தைக் கண்டடைவது மிகுவலி. அந்த அலைச்சலை, பரிதவிப்பை, தேடலை பாம்பாட்டிச்சித்தனின் கவிதைகளிலும் காணமுடிகிறது. திசைகளெங்ஙணும் சிறகடித்தபடி தன் கூட்டைத் தேடியலையும் ஒரு பறவையின் தவிப்பை, இவரைப்போலவே முதற்தொகுப்பை வெளியிட்ட அநேக கவிஞர்கள் அனுபவித்திருப்பார்கள். அந்த அலைதலின் நீட்சியாக ‘வழித்துணையாய் வந்த கடவுள்’என்ற கடைசிக்கவிதை அமைந்த வடிவத்தைக் கொள்ளலாம். ‘சொல்வலைக்குள் சிக்காத சிறுபறவை’ அந்த மரத்திலேயே தன் கூட்டைத் தொடர்ந்து இழைக்கவும் இசைக்கவும் கூடும்.

இத்தொகுப்பின் அட்டைப்படம் மற்றும் வடிவமைப்பு மிக நேர்த்தியாக அமையப்பெற்றிருந்ததை அவதானிக்கமுடிந்தது.

‘குற்றவுணர்வின் மொழி’ கவிஞரின் முதற்தொகுப்பென்பதை நம்புவதற்கரியதாக்குகிறது அதன் மொழியழகு. எனினும், எண்ணிக்கையில் இல்லை இலக்கியம்; அதனோடான படைப்பாளியின் தொடர்ந்த இருப்பில் இருக்கிறது என்பதன் அடிப்படையில், இது முதற்தொகுப்பென்பதை நம்பித்தானாக வேண்டியிருக்கிறது.


வெளியீடு: அன்னம்
கவிஞரின் மின்னஞ்சல் முகவரி:pampattisithan@gmail.com



6 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

மிகச்சிறந்த அறிமுகம், பொதுவாக கனமான கட்டுரைகளுக்கு முக்கியத்துவமளிப்பது என் வழக்கம், பின் கதைகள்...பின் எப்போதாவது கவிதைகள் ஆனால் இந்த புத்தகத்தை வாசிக்கும் ஆர்வம் தங்கள் பதிவினால் ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.. நன்றி.. வாழ்த்துக்கள்

manjoorraja said...

குற்றவுணர்வின் மொழி என்ற இந்தக் கவிதைத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளின் அனுபவங்களை சொல்கின்றன என்பதே உண்மை.

உங்கள் விமர்சனம் உங்களுடைய வாசிப்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

வெளிப்படுத்துகிறது என்று எழுதுகையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வெளி என்ற சொல் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. வெளி பல கவிதைகளின் ஊடாக வருகிறது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு கவிதையையும் தனித்தனிக் கவிதையாக பார்க்கையில் இந்த முரண் உங்களுக்கு தோன்றாது. மேலும் இந்த தொகுப்பிலுள்ள கவிதைகளில் உள்ள வெளி என்னும் சொல் சரியான இடங்களில் சரியாகவே பொருந்தியிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

வித்தியாசமான கோணத்தில் அனைத்துக்கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகளின் உலகம் பற்றி:

''ஸ்தம்பித்த வாகனங்களிடையே
தளிர்நடை போட்டு
விளையாட்டின் சுவாரசியத்தில்
வீதியில் விட்டெறிந்த
பூமிப்பந்தை மீட்டுத்திரும்புகிறது
குழந்தை
"

என்னும் கவிதையை குறிப்பிடலாம்.

நல்லதொரு தொகுப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Anonymous said...

வணக்கம் தமிழ்.

குற்றவுணர்வின் மொழி என் மனதிற்கு மிக அருகில் இருக்கும் ஓர் கவிதை தொகுப்பு. அது குறித்த பதிவிற்கு நன்றி தமிழ்.

தாங்கள் கட்டுரை நெடுக பயன்படுத்தியுள்ள மேற்கோள்கள் தங்களின் ரசனையையும் தெரிவையும் காட்டுகின்றன.

நீங்கள் சொல்லாமல் விட்ட இரண்டு விஷயங்களை சொல்ல வேண்டும். தொகுப்பில் மிகச்சிறந்த கவிதைகளுள் ஒன்றாக எனக்கு பட்ட முகில் சித்திரம். மற்றது, தொகுப்பினைக் குறித்த கவிஞர் யூமா. வாசுகியின் வரிகள்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

‘ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது அதை எழுதியவனை அல்லது எழுதியவளை வாசிப்பதுபோலவே இருக்கிறது’என்பது நாவலுக்கும் சிறுகதைக்கும் பொருத்தமற்றதெனத் தோன்றலாம். ஆனால், கவிதைகளுக்கல்ல. கவிதைகள் பெரிதும் எழுதுபவனின்-எழுதுபவளின் வாக்குமூலமாக அமைந்துவிடுதலே இயல்பு//

நதி சிலசமயம் இது உங்களைப்பற்றிய கவிதையா என்று கேட்டால் பதில் சொல்லாமல் இருக்கவே புரியக்கூடாத வகையில் வார்த்தைகளை அடுக்கி கவிதை தோன்றுமாக்கும் எனக்கு..

விமலா said...

//மிகவும் அகவயம்சார்ந்த மொழிவெளிப்பாடாகிய கவிதையை வாசித்து, அது நமக்குள் கடத்தும் அற்புதானுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன் நிறுத்திக்கொள்வதே அதற்கு நாம் செய்யும் நியாயமாக இருக்கமுடியும்?/

வெகு நிச்சயமாக வாசிக்க தூண்டும்
நூல் அறிமுகம்..

தமிழ்நதி said...

அன்பு நண்பர்களுக்கு, நான்கு நாட்களாக இணையத்தொடர்பு கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கிறது. அதனால் உங்கள் பின்னூட்டங்களை உடனடியாகப் போடமுடியாமற் போயிற்று.

நன்றி கிருத்திகா! கவிதை மிக அழகும் ஆழமும் நிறைந்த மொழிவளமுடையது.(எல்லாக் கவிதைகளுமல்ல:)) இனி முயற்சித்துப் பாருங்கள்.

மஞ்சூர் ராசா!அறிமுகப்படுத்தினேனா... அது சரி...உருவான தருணங்கள் தாங்கள் அறியாததா? ம்... 'வெளி'என்ற சொல் தனித்தனிக் கவிதைகளாகப் பார்க்கும்போது உறுத்தவில்லை என்று நானே குறிப்பிட்டிருக்கிறேன். தொகுப்பாகப் பார்க்கும்போது வேறு வேறு தொனிப்பொருளில் வந்தாலும்... ம்... கவிஞரே அறிவார்.

சித்தார்த்! உண்மையைச் சொன்னால் எனக்கு 'முகில் சித்திரங்கள்' ஏனையவற்றோடு ஒப்பிடும்போது ஈர்க்கவில்லை. யூமா வாசுகியின் வரிகளைப் பற்றி எழுதவேண்டுமென நினைத்திருந்து நினைத்திருந்து மறந்தே போயிற்று. அதுவும் பாம்பாட்டிச்சித்தனின் ஆதர்சக் கவிஞரை எப்படி மறந்தேன்...? இணையத்தொடர்பு அறுந்ததால் ஞாபகத்தந்திகளும் அறுந்தனவோ என்னவோ...

முத்துலட்சுமி! ஆம் கவிதை பெரும்பாலும் தன்வெளிப்பாடுதான். கதைகள், கட்டுரைகள் வேண்டுமானால் புனைவாக இருக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விமலா. புத்தகக் கண்காட்சியும் முடிந்தாயிற்று. நியூ புக் லான்ட்ஸ் இல் இந்தத் தொகுப்பு கிடைக்கும்.