3.06.2008

ஒரு இரவின் பதிவு


கைவிடப்பட்டதான இந்த மனோநிலையை எழுத்தின் முதுகில் இறக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அதுவும் எத்தனைக்கென்றுதான் தாங்கும்? சுமைதாங்கவியலாமல் ஒருநாள் இடிந்து அமர்ந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ‘என்னை விட்டுவிடுங்கள்’என்று கதறியபடி தெருவில் இறங்கி ஓடவாரம்பித்துவிட்டால் என்ன செய்வது?

இன்றைக்கு ஏனிப்படித் துயரப்பனி பொழிகிறது? பல்கனியில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து இருட்டை வெறித்துக்கொண்டிருக்கிறேன். நிலவு கூடவே இருக்கிறது. மரணத்தின் இருள் எந்நேரமும் கவிந்திருக்கும் வீதிகளைத் துறந்து வரும்போது நிச்சயமான காலைகளை விளைந்திருந்தேன். இடையூறற்ற உறக்கத்தைக் கேட்டேன். நாய்கள் அரண்டு குரைக்கும்போதெல்லாம் மரணம் வாசலில் வந்து நிற்பதாகப் பதறினேன். எல்லா அறைகளிலும் இதயம் பதட்டத்தில் படபடக்க, அனைவரது விழிகளும் சில மணிகளேனும் திறந்தேயிருந்தன. யன்னலருகில் துப்பாக்கியின் நிழல் அசைவதாகத் தோற்றம் காட்டிய ஓரிரவு பகலாயிற்று. காலையில் எழுந்திருந்து முதல் வேலையாக அந்தச் செடியைத் தேடிப்போய்த் தடவிக் கொடுத்தேன்.

‘இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’என்று பொலிசில் பதிவு செய்யப் போனபோது கேட்டார்கள். ‘நாங்கள் இங்கே உயிரோடு இருக்கிறோம்’என்று சொன்னதைக் கேட்டதும் அந்த அதிகாரியின் இறுக்கமான முகத்தில் புன்னகையின் ஒளி ஒருகணம் பரவியது. எல்லோருக்குள்ளும் எங்கேயோ ஓர் ஓரத்தில் ஒரு துளி ஈரம் இருக்கத்தான் செய்கிறது.

எல்லாமே பிழைத்திருத்தலுக்கான போராட்டங்கள் என்றுதான் தோன்றுகிறது. வீதியில் வெயில் வெளிர்த்திய பரட்டைத் தலையோடு அமர்ந்திருப்பவனுக்கும், குளிரூட்டப்பட்ட அறையில் உயரமான சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆடிக்கொண்டிருப்பவனுக்கும் உயிரோடு இருப்பதொன்றே உச்சபட்ச நோக்கமாயிருக்கும். சிந்தித்துப் பார்க்கும்போது அபத்தமாகத்தானிருக்கிறது. உயிரோடு இருப்பதற்காகப் பற்றிக்கொண்டிருப்பதன் மீதான பிடி தளர்கிறபோது தற்கொலையைப் பற்றிய எண்ணம் வருகிறது.

மேன்சன் அறைகளில் தங்கியிருக்கும் இளைஞர்கள் அறைக்குத் திரும்பியதும் எப்படி உணர்வார்கள்? பூட்டியிருக்கும் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்து மின்விளக்கின் ஆளியை அழுத்தும் விவாகரத்தான பெண்ணொருத்தியின் மனோநிலை எவ்விதம் இருக்கும். இருள் படர்ந்து வரும் தெருவைப் பார்த்தபடி வராண்டாவில் அமர்ந்திருக்கும் வயோதிபத் தம்பதிகளை ஒவ்வொரு நாட்களும் எப்படியெல்லாம் சிறுகச் சிறுகச் சிதைப்பனவாயிருக்கும். கந்தலைப் போர்த்திக்கொண்டு வீதியோரத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரியின் குழிவிழுந்த கீற்றுக் கண்களுள் என்ன நினைவு தேங்கியிருக்கும்? தன்னிலும் அகலமான போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரை இந்தச் செங்குத்தான படிகளில் ஏறிச் சுமந்துகொண்டு வந்து வைத்துவிட்டுப்போன குழந்தைத் தொழிலாளியின் மனதில் நான் என்னவாகத் தோன்றுவேன்?

மது தன்னிரக்கத்தைத் தூண்டுகிறது. இறந்தகாலத்தின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறியழச் சொல்கிறது. காறியுமிழவும் கைநீட்டிச் சபிக்கவும் உந்துகிறது. பாடலின் வாத்திய இரைச்சல்களையும் மீறி யாரோ விசும்பும் ஒலி. யன்னல்கள் நிலைபெயர்ந்து திரியும் இவ்விரவில் குழாயிலிருந்து தண்ணீருக்குப் பதிலாக பாம்பு வழிகிறது. ஒரு ரொட்டித் துண்டுக்கும் பிரதியுபகாரம் எதிர்பார்க்கும் இவ்வுலகம், உறவு-நட்பு-மனிதம்-கருணை போன்ற சொற்களை அகராதியிலிருந்து விரட்டியடிக்கத் தூண்டுகிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் நான் என்னைப் புகழ்ந்து சொல்லப்படும் ஓரிரு வார்த்தைகளை எதிர்பார்க்கிறேனா… இந்த உலகம் கேவலமாக இருக்கிறது. நான் உட்பட! நந்திதா! நீ ஒருபோதும் முகம் காட்டிவிடாதே. அருவமாய் இருப்பவர்களைத்தான் நேசிக்க முடிகிறது.

நந்திதா! நிராதரவு இந்த இருளில் அசையும் இலைகளில் தெளிக்கப்பட்டிருக்கிறது. குப்பைத்தொட்டியைக் கிளறும் நாயின் கண்களில் ஒளிர்கிறது. சைக்கிளை அவன் தள்ளிக்கொண்டு போகிறானா… சைக்கிள் அவனைத் தள்ளுகிறதா என்று மயக்கமூட்டியபடி தெருவோடு போகும் குடிகாரனின் பாடலில் ஒலிக்கிறது. சோகையாக வீசும் இந்தக் காற்றில் இருக்கிறது. நான் போக வேண்டும். உனக்கும் எனக்கும் தெரியும். கூடத்தில் எனது சிரிப்பொலி சில மணிகளில் கேட்கலாம். ஆனால் நந்திதா! சில இரவுகள் உண்மையிலேயே இருண்டவைதாம்.

6 comments:

M.Rishan Shareef said...

//சில இரவுகள் உண்மையிலேயே இருண்டவைதாம்.//

ஆமாம்.யாருமற்ற கருத்த இரவில் தனித்துவிடப்படும் ஆன்மாக்களுக்கு... :(

இரா. சுந்தரேஸ்வரன் said...

Incidentally, I am currently reading Albert Camus' essays on absurdity and suicide.

King... said...

மகளிர் தின வாழ்த்துக்கள்...

தமிழ்நதி said...

பின்னூட்டக் கயமைக்கு அஞ்சி நான்கைந்து பின்னூட்டங்களாவது சேரட்டுமே என்று சில நாட்கள் விட்டுப் பதிலளிப்பதே வழக்கம்.

அடிக்கடி வந்து பஞ்சிப்படாமல் கருத்துச் சொல்லும் ரிஷானுக்கு நன்றி.

சுந்தரேஸ்வரன்!நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பவை இணையத்தில் இருந்தால் இணைப்புத்தரவும்.நானும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

கிங்!அத்தனை நாட்களும் மறந்துவிட்டு அன்றன்றைக்கு திடீரென வாழ்த்தும் அலையில் நாமும் அடிபட்டுப்போக வேண்டாமே. மகளிர் தினமாவது பரவாயில்லை.அன்னையர் தினம் போன்றவை உண்மையாகவே கடுப்பேற்றுபவை.நினைவுவைத்து வாழ்த்தியமைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அத்தனை நாட்களும் மறந்துவிட்டு அன்றன்றைக்கு திடீரென வாழ்த்தும் அலையில் நாமும் அடிபட்டுப்போக //

இப்படித்தான் எனக்கும் நேற்று தோன்றியது.

எதற்குக் கவலைப் பட வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் இல்லை.
வெறும் புகைப்படங்களும் சொற்களும் மங்கையரை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றன.

இவ்வளவு ஆழமாக எதையும் யோசிக்கும் உங்களது சிந்தனையை வாழ்த்துகிறேன்.

Aruna said...

மிக நல்ல இரவுப் பதிவு!
அன்புடன் அருணா