3.27.2008

கோடை மழை


இரத்தம் உறிஞ்சி
பளபளக்கும் உடலோடு
கழன்றுவிழுகின்றன உறவட்டைகள்.

எழுதுமேசையில்
திகிலுறுத்தும் கட்டணக்காகிதங்கள்
முதல்தேதியை முரசறைவித்தபடி...

மண்டைக்குள்
சிலந்திவலை படருமிக்காலம்
வாக்குறுதி மீறுகிறேன்
வாய்திறக்கவியலாத புத்தகங்களே!
மன்னித்துவிடுங்கள்.

கோடை தீங்கங்குகளோடு வருகிறது
அறைச்சுவர்கள் அக்கினித்தகடுகள்
நீ உவமித்தபடி
ஒரு அகதியின் கழிவிரக்கத்தை நினைவுறுத்திச்
சதா கரைந்துருகும் மின்விசிறி.

வீதியில் இறங்குகிறேன்
மாந்தளிர் விரலசைத்து
சின்னக்குமிழ் வாயால்
எச்சில் நூலிழைய
செல்லமே! நீ சிரித்துவிட்டுப்போகிறாய்.

மழையற்றும் குளிர்கிறது மண்.

6 comments:

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்நதி,

//செல்லமே! நீ சிரித்துவிட்டுப்போகிறாய்.

மழையற்றும் குளிர்கிறது மண்.//


சின்னச் சின்ன அற்புதங்கள்தான் இறுக்கமான வாழ்வை நெகிழ்த்துகின்றன.
கடைசிவரிகள் என் தாய்நாட்டைப் பிரிந்த பின்னரான வரண்ட வாழ்வையும் பிரதிபலிக்கிறது.

குடும்பம்,முன்னும் பின்னும் இடற இடறக் குழந்தைகளென சுவாசம் முழுதும் வியாபித்திருந்த உறவுகளை விட்டு வேற்று நாடொன்றின் அந்நிய மண்ணில் கால்பதித்த போதிலிருந்து அபூர்வமாய்ப் பார்க்கநேரிடும் சிறுகுழந்தையின் புன்னகை,வண்ணத்துப்பூச்சி மோதல்,வேற்றுநாட்டவரின் புன்னகை,சினேகமெனச் சிலதான் வாழ்வின் இனிப்பான பக்கத்தை நினைவூட்டுகின்றன.

அழகான படம்,உங்கள் கவிதையைப் போலவே சகோதரி...!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நதி குழந்தை சிரிப்பில் எல்லாம் மறக்கலாம்.. கடந்தகாலம் எதிர்காலம் எல்லாம் மறந்து அந்த நொடி .. இன்பமயம்.. கவிதை சின்னதா
(என்ன குழப்பாம ) நல்லா ருக்கு..

ரசிகன் said...

அட இதுவும் உண்மைதான். மழமை முகங்கண்டால்,எல்லா கவலைகளும் மறந்து விடும்ன்னு தான் தோனுது.

கவிதையில வேற ஏதாவது உட்பொருள்,மறை பொருள்ன்னு இருக்கான்னு தெரியலை..

என் அறிவுக்கு(???) இம்புட்டுதான் நேரா புரிஞ்சுது:)

நளாயினி said...

அடடா இன்னும் இன்னும் வாழ்வைக்க தோன்றும் தருணங்களில் இதுவும் தான்.

தமிழ்நதி said...

"கடைசிவரிகள் என் தாய்நாட்டைப் பிரிந்த பின்னரான வரண்ட வாழ்வையும் பிரதிபலிக்கிறது."

ரிஷான்!நீங்கள் இலங்கையில் இருப்பதாக நினைத்திருந்தேன். உங்கள் புரொபைலில் அப்படித்தான் இருக்கிறது. பொருளாதார தேவைகள் வாழ்வின் ஏனைய ஆதாரங்களிலிருந்து பிடுங்கித்தான் போட்டுவிடுகிறது. என்ன செய்வது?
முத்துலெட்சுமி!என்ன மீண்டும் பெயர் மாற்றம்? ஆம்!சின்னச்சின்னக் கணங்களில்தான் வாழ்க்கையொளி மின்னி மறைகிறது.

ரசிகன்!முத்துலட்சுமியின் பின்னூட்டம் உங்களுடையது எல்லாம் பார்த்தால் நான் ஏதோ குழப்பிக் குழப்பி எழுதுகிறேன் போலிருக்கிறது:)

நன்றி நளாயினி!நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறீர்கள். வேலை அதிகமோ...

நளாயினி said...

இந்த கவிதையின் புகைப்படக் குழந்தையின் கண்களில் பார்த்தீர்களா ஏதோ ஒரு கனவு ( கண்களுக்குள் பாருங்கள் அந்த குழந்தை எதையோ ரசித்து மகிழ்கிறது. இரு கண்களுக்குள்ளும் ஒரே பிரதி.) எங்கள் வாழ்வு தான் கானல் நீராயும் கைசேர்வதாயும் சேர்ந்த பின் தொலைவதாயும் தொலைந்த பின் தேடுவதாயும் தேடுகிறபோது கிடைப்பதும் கிடைக்காததுமாய் ...... இப்படியே ...போரின் சன்னதத்தால். நம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்.? நமது சமூகத்திற்கு கல்வி ஒன்று தானே உயிர் மூச்சு.எனது கனவுகளையும் அவர்களது கனவுகளையும் சோர்த்து அவர்களிடத்தில் காணமுயல்கிறேன். நிச்சயம் வெல்வேன்.எனது குழந்தைகளும் அதற்கு சழைத்தவர்களல்ல. வேலை எல்லாம் இப்போ இல்லை. பிள்ளைகளே மூச்சாகிவிட்டது. என்னவோ தெரியவில்லை.. என்னை தொலைத்துவிடவும் மனமில்லை.எனக்கு நளாயினியை நிறைய பிடிக்கும்.தைரியமான பெண்.எதையுமே சவாலாக ஏற்கும் பெண்.நளாயினியை தொலைத்தவிட்டு வாழ்வென்ன வாழ்வு. நீங்கள் நலம் தானே.

அன்புடன் நளாயினி.