5.15.2008

குற்றவாளி


அனலில் ஊறிய அறைகளுள்
இயலாமையுடன்
கைவிரித்துச் சுழல்கின்றன மின்விசிறிகள்.
வேம்பும் கருகிய வெளியை
உற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில்
எம்மரத்தின் இலையும் தளதளப்பும்
இக்கணம் அசைகிறதோ…!

அன்பின் நீரூற்றுகள்
மதவியாபாரிகளின் உதடுகளிலிருந்து
மட்டுமே பீறிடுகின்றன.

நவத்துவாரங்களிலும் தூசி இறைத்தபடி
வாகனங்கள் வெறிகொண்டலையும் வீதியோரம்
விழுந்து சுருண்டிருக்கும்
கிழவனைப் புறக்கணித்து
எலக்ரோனிக் அடிமைகளை
ஏற்றிச்செல்கின்றன
சொகுசுப் பேருந்துகள்.
தண்ணீர் தேடியலைகின்றன
கால்களுக்கிடையில் வால்நுழைத்து
எச்சில் இழையொழுகும் நாய்கள்.

எழுதியிருக்க வேண்டிய
அனைத்து வார்த்தைகளையும்
இரக்கமற்றுத் திருடிவிட்டது கோடை.

இத்தனை கொலை செய்தும்
இன்னமும்
வெளியிற்தான் திரிந்துகொண்டிருக்கிறது
வெயில்!

23 comments:

ரசிகன் said...

//
அனலில் ஊறிய அறைகளுள்
இயலாமையுடன்
கைவிரித்துச் சுழல்கின்றன மின்விசிறிகள்.
வேம்பும் கருகிய வெளியை
உற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில்
எம்மரத்தின் இலையும் தளதளப்பும்
இக்கணம் அசைகிறதோ…!//

அடடா.. அருமை:)

ரசிகன் said...

//
நவத்துவாரங்களிலும் தூசி நிறைத்தபடி
வாகனங்கள் வெறிகொண்டலையும் வீதிகளில்
நாகரிகத்தைப் பழித்தபடி
சுருண்டுகிடக்கிறானொரு கிழவன்.//

வார்த்தைகள் விளையாடுகின்றன.தமிழ்நதியின் கவிதைக்கரங்களில்:)

ரசிகன் said...

//
இத்தனை கொலை செய்தும்
இன்னமும்
வெளியிற்தான் திரிந்துகொண்டிருக்கிறது
வெயில்!//

சொல்லாடல்கள் அருமை:)

பொய்யன் said...

inthaanka ilavenil...kavitha ipdi madichu madichu varuthula..athumathiri epdinkka adikkirathu? nan enter thatti than adikkiren. pathivu podumpothu sernthu vanthuruthu. utharanam en puthu pathiva paarungalen. em probletha polambirukken

Anonymous said...

கவிதையை சுவைத்து படித்தேன், படித்துக் காட்டினேன் - வெயிலை பற்றி இவ்வளவு அழகா சொல்ல முடியுமான்னு அசர வச்சிட்டீங்க, நடு நடுவே சமூக சோகங்களும் வெயிலோடு காய்கிறது உங்கள் உங்கள் கவிதையில் ...

என்னன்னு சொல்ல முடியல சரியா, ஆனா புடிச்சிருக்கு :)

தமிழன்-கறுப்பி... said...

எப்பிடிங்க இப்படியெல்லாம யோசிக்கிறிங்க...

Anonymous said...

அக்கா !

பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள்! நீங்கள் ஏன் தொல்காப்பியம் நன்னூள் போன்ற இலக்கண நூல்களுக்கு உரையை எழுத கூடாது..என் போன்ற தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?

M.Rishan Shareef said...

வெப்பத்தின் உக்கிரத்தைப் பாடுகிறது கவிதை.
///வேம்பும் கருகிய வெளியை
உற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில்
எம்மரத்தின் இலையும் தளதளப்பும்
இக்கணம் அசைகிறதோ…!//

'வெம்பும் கருகிய வெளியை'என்று வரவேண்டுமோ சகோதரி?

Sai Ram said...

வார்த்தைகளை மிக சரியாக தேர்வு செய்து, நன்றாக கோர்த்து கவிதையாக்கி இருக்கிறீர்கள். காட்சிகளை விரித்து படிப்பவனின் மனதில் கற்பனை தோன்ற செய்யும் விதம் நன்றாக இருக்கிறது. தொடக்க வரிகள் மனதை நெகிழ செய்தன.

தமிழ்நதி said...

ரசிகனுக்கு என்னவாயிற்று:) ஆஹா ஓகோ என்றால் எனக்கே சங்கடமாகத்தானிருக்கிறது. ஏனென்றால் மிக அருமையான கவிதைகளை வாசித்திருக்கிறேன்/கொண்டிருக்கிறேன்.

பொய்யன்! (விளிக்க அருமையான பெயர்:))உங்கள் வலைப்பூ பக்கம் போய்ப் பார்த்தேன். சொற்களைத் தனித்தனியாகப் பிரித்துப் போடச் சிரமப்பட்டிருக்கிறீர்கள்.எனக்கும் கணனி அறிவு கையளவே.எனினும், நான் சொல்வது உங்களுக்கு உதவக்கூடும். பதிவு போடும் பெட்டிக்கு மேல் Edit Html, Compose என்ற இரண்டு விடயங்கள் இருக்கின்றன..நீங்கள் compose இல் தட்டச்சி அது தவறாகப் போனால் Edit Html போய் வார்த்தைகளை நீங்கள் விரும்பிய இடங்களுக்கு மாற்றுங்கள். முதலில் இதை முயற்சித்து அதுவும் சரிவராதுபோனால் வேறுயாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்.

மதுரா!நீண்டநாட்களாகக் காணவில்லை உங்களை.
"என்னன்னு சொல்ல முடியல சரியா, ஆனா புடிச்சிருக்கு "

வெயில் எல்லோரையும் சிறைப்படுத்தியிருக்கிறது. வெயிலை கவிதைக்குள் அடக்கமுடியாதளவு சூடாக இருக்கிறது.

""எப்பிடிங்க இப்படியெல்லாம யோசிக்கிறிங்க..."
தமிழன்! வெயிலை மட்டுமே யோசிக்க முடிகிறது:)

அனானித்தம்பி!நக்கலா? நடக்கட்டும் நடக்கட்டும். அது நன்னூள் இல்லை ராசா... நன்னூல்.

ரிஷான்!
"'வெம்பும் கருகிய வெளியை'என்று வரவேண்டுமோ சகோதரி?"

இல்லை ரிஷான்!வேம்பு எந்தக் கோடையிலும் பச்சை மாறாதிருக்கும் மரம். அதையே கருக்கிவிட்டிருக்கிறது இக்கோடையின் நெருப்பு. 'வேம்பை'நினைத்தே எழுதினேன். நீங்கள் சொன்னது போல்...ஆம் அப்படியும் எழுதலாந்தான்.

நன்றி சிறீராம்!வெயிலைத் தொடர்ந்து வருவீர்களென நம்புகிறேன். யாரோ வாசிக்கிறார்கள் என்பதே எழுதுபவர்களுக்கு மகிழ்வூட்டும் ஒன்றல்லவா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் இந்த குற்றவாளியைப் பிடித்து உள்ளே போடும் திறமை யாருக்கு இருக்கு..

அதுக்கு பயந்து நாமில்ல ஏசி அறையில் ( காசு இருப்பவர்கள்) நம்மைநாமே சிறைவச்சிக்கிறோம்.. :))
நல்ல கவிதை நதி.

லக்கிலுக் said...

இந்த வருடம் வெயிலின் தாக்கம் குறைவுதானே? கோடையை ஜாலியாக கொண்டாட முடிகிறது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 114 டிகிரியை தொட்டபோது இங்கிருந்து இருந்தீர்களேயானால் வெய்யிலாயணம் என்றொரு இதிகாசம் எழுதியிருப்பீர்கள்!!!

பொய்யன் said...

நன்றி தமிழ்நதி. பொய்யன் என்று விளிப்பதற்கு சங்கடமாக இருக்கிறது என கவிதாயினியான தாங்களே சொல்வது வியப்பளிக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், சோனியா, புத்ததேவ் பட்டாச்சார்யா, அத்வானி என்றெல்லாம் சொல்வதற்கு உங்களுக்கு சங்கடமாகவா இருக்கிறது. பொய்யால்தான் வையகம் புனையப்பட்டிருக்கிறது. பொய்யால் பலர் ஆறுதலும் தேறுதலும் அடைகின்றனர். பொய் வாழவைக்கிறது. பொய் அழகானது. பொய் கவித்துவமானது. பொய் சாஸ்வதமானது. பொய் நெகிழ்வும் நேசமும் கொண்டது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வீதியோரம் விழுந்து கிடக்கும் கிழவனைப் புறக்கணித்துப் போவதையும் வெயில் கொடுமையையும் அழகான வார்த்தைகளில் சொல்லியுள்ளீர்கள். அது தான் பிரச்சனை.!

ஒரு கொடுமையை ‘அழகான' வார்த்தைகளில் சொல்லலாமா.? இது ஆஹா, இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என மனதை ஏங்க வைக்கும் தன்மை கொண்டது.!

கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் / வார்த்தைகளைச் சிதைத்துப் போடுவதன் மூலம் கொடூரங்களை வாசிப்பவர்களின் மனதிற்குக் கொண்டு செல்வது aptஆக இருக்குமென நினைக்கிறேன்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"எழுதியிருக்க வேண்டிய
அனைத்து வார்த்தைகளையும்
இரக்கமற்றுத் திருடிவிட்டது கோடை"ம்ம்ம் கோடையும் வெயிலும் ஒரு உருவகங்கள் தானே அதை மீறிய சோகங்களை வழக்கம்போல கடந்து வருகிறது கவிதை.. வாழ்த்துக்கள்..எப்போது இங்கு வருகிறீர்கள்.

தமிழ்நதி said...

நன்றி கயல்விழி முத்துலட்சுமி! பாருங்க எப்பிடிக் கூப்பிட வேண்டியிருக்கிறதென்று:) குளிரூட்டப்பட்ட அறை என்றாலும் எவ்வளவு நேரந்தான் இருப்பது? வசதியான சிறையல்லவா அது? ஊர்சுற்றிகளுக்குச் சிரமந்தான்.

"கோடையை ஜாலியாக கொண்டாட முடிகிறது."
லக்கிலுக்! நிஜமாகவே உங்களுக்கு 'விறைத்த'மண்டைதான் போலிருக்கிறது:) பகல்10-இலிருந்து 4மணிவரை கொழுத்தோ கொழுத்தென்று கொழுத்துகிறது.வீட்டிற்குள்ளேயே ஓரிடத்தில் அமர முடியவில்லை. தரையே நெருப்புத்தணலாயிருக்கிறது. 'வெய்யிலாயணம்'என்ற பெயர் நன்றாயிருக்கிறது. பார்க்கலாம்... எழுத முயற்சிக்கிறேன்.(நகைப்பான் போடவில்லை)

பொய்யன்!
"பொய்யால்தான் வையகம் புனையப்பட்டிருக்கிறது. பொய்யால் பலர் ஆறுதலும் தேறுதலும் அடைகின்றனர். பொய் வாழவைக்கிறது. பொய் அழகானது. பொய் கவித்துவமானது. பொய் சாஸ்வதமானது. பொய் நெகிழ்வும் நேசமும் கொண்டது." என்று நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால்,ஒருவரை 'பொய்யா'என்று அழைப்பதில் சிரமமிருக்கிறது. மனம் என்பது சிலவற்றுக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவரது அருகில் போய் 'காமாந்தகா'என்று அழைத்துப்பாருங்கள். திடுக்குற்று அறைந்துவிடலே சாத்தியம். அதற்காக காமம் என்பது தவறா என்ன? 'தேவடியா பையா'என்று யாரையும் கூப்பிட்டால் 'என்னங்க சார்'என்று பவ்யமாக வந்து கேட்பார்களா? கள்ளன்,பொய்யன்,கொடுங்கோலன்... இப்படியானவர்கள் இருக்கலாம். அவர்களை அப்படி விளிக்கமுடியாது இல்லையா...??எனக்கென்னவோ பொய்யன் என்று விளிக்க சங்கடமாகத்தானிருக்கிறது.

சுந்தர்! வாசிப்பு பன்முகத்தன்மை உடையது. எழுதவிடாத கோடையின் கொடுமை தாங்கவியலாமல் அதை உணர்த்தவே எழுதினேன். கோடையின் குரூரம்தான் எனக்குத் தெரிந்தது. உங்களுக்கு அழகிய வார்த்தைகளாலான குளிர்ச்சி தெரிகிறது. என்ன செய்ய…? அவரவர் வாசிப்பு அவரவர்க்கு. ஆனால், இனி எழுதும்போது நினைவில் வைத்துக்கொள்வேன். நிச்சயமாக. சுட்டியமைக்கு நன்றி.

கிருத்திகா!எங்குவருவது? நான் இப்போது சென்னையில்தான் இருக்கிறேன். ஊரிலிருந்து வந்துவிட்டேனே... எனது 'உள்ளேன் ஐயா' பதிவு பார்க்கவில்லையா?இதற்கு முந்தையது. அல்லது....நான் தவறாகப் புரிந்துகொண்டேனோ... 'எப்போது இங்கு வருகிறீர்கள்...?'ம்... தெளிவுபடுத்துங்கள் கிருத்திகா.

கிருத்திகா ஸ்ரீதர் said...

தமிழ்நதி... கண்மறைத்துப்போயிருக்கிறது தங்களின் கடந்த பதிவு.. எப்படி ஆச்சரியம் தான்..(கூகுள் ரீடர்.. ஒரு வேளை கை எலியை உருட்டிச்சென்றிருக்கும்) அதை காணாததாலேயே சென்னைக்கு எப்போது வருகிறீர்கள் என்ற கேள்வியெழுப்பினேன்.

Chithan Prasad said...

vanakkam
manithan seytha kolaigalukku iyarkkai pazhi theerthukkolkirathu.
veyil muthal aayutham than.annai, yella kaikalilum ayuthangal yenthinal.....
manithan urpathi seythavai yiruthiyil avanaiththan azhikkum.
yirkkaiyin neram santharppam yippothu.

nammal kavithai yezhthave yiyalum.
verenna seyya?

Chithan Prasadh Editor YUGAMAYINI
please visit yugamayini.blogspot.com

பொய்யன் said...

vendumanal ennai POIKAI endru alaithukkollungal. lesbian kuriththa enathu puthiya pathivu paarkkavum

தமிழ்நதி said...

கிருத்திகா!நடைமுறை வாழ்வின் சிக்கல்களில் தொடர்ச்சியாக வாசிக்க யாருக்கு நேரமிருக்கிறது. விட்டுத்தள்ளுங்கள்.

சித்தன் பிரசாத்!உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் சொன்னபடி மனிதன் இயற்கைச் சமநிலையைக் குழப்பியதனால் வந்த வினைதான் எல்லாம். மரங்களை அழித்தால் வானம் கைவிரிக்கிறது. நீர்நிலைகளில் வீடுகட்டிவிட்டு குடிநீருக்கு அலைகிறோம்.

பொய்கை!உங்கள் பதிவு பார்த்தேன்.ஆமாமா நாம் யாருடன் வாழலாம் என்பதை சமூகமல்லவா தீர்மானிக்கவேண்டும்? அதெப்படி நாம் தீர்மானிக்கலாம்:)ம்....

Venkat said...

அருமை.சில நேரங்களில் உங்களுடைய சொற்கள் அர்த்தங்களை விட அதிக ஆளுமைக் கொள்கிறது.

anujanya said...

தமிழ்நதி,

என்னவொரு அருமையான கவிதை! மிக்க நன்றி இப்படியொரு வாசிப்பனுபவத்திற்கு !

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிக மிக மிக ரசித்தேன்.

இத்தனை கொலை செய்தும்
இன்னமும்
வெளியிற்தான் திரிந்துகொண்டிருக்கிறது
வெயில்!

சமூக அர்த்தம் பொதிந்த வரிகள்