எழுதி ஏதும் நிகழப்போவதில்லை என்பதறிந்தும், எழுதாமலிருப்பது குற்றவுணர்வைத் தருகிறது. புலம்பெயர்ந்த நாட்டிற்கே மீண்டும் பெயர்ந்து வந்து, ஐந்தாண்டுகளின் முன் திரிந்த தெருக்களையும், கடந்த நாட்களையும் மனிதர்களையும் மீளக்கண்டுபிடிக்கவே பொழுது சரியாக இருக்கிறது. மேலும் ஒப்பீடுகளில் அலைக்கழிகிறது திருப்தியடையாத மனம். எதையாவது கொண்டு தன்னை நிரப்பச்சொல்லி தீனமாக அழைத்துக்கொண்டேயிருக்கும் இப்பக்கத்தை, கடந்த மாதம் 'உயிர்மை'இதழில் வெளியான கவிதைகளை இடுவதன் மூலம் தற்காலிகமாக சமாதானம் செய்கிறேன். என்னையும்.
------------------------
நெடுங்கோடை
காத்திருப்பில் தசாப்தங்கள் உதிர்ந்துவிட்டன
மலர்களைப்போல…
குருதிதோய்ந்த செம்பருத்தி மலர்கள்.
மேப்பிள் மரங்களுள் சிறைப்பட்டிருந்த
கபிலநிறத் துளிர்கள் விடுபட்டன
இது பதினோராவது வசந்தம் நந்தா!
கடந்த குரூரப்பனியிலும்
வீடேக விதியற்றாய்.
மூடப்பட்ட பாதையை நோக்கி
ஒரு சேனையென
இரகசியமாய் நகர்கிறது காடு.
அகாலத்தில் ஒலிக்கும் தொலைபேசிக்கு
மரணத்தின் நாக்கு
பிராங்போட்டில் நேரம் நள்ளிரவு 2:16
அழாதே சந்தியா!
மூளை வெண்குழம்பாய் சுவர் தெறித்த
காட்சிபெறா கண்கள் வாய்த்தமைக்கு மகிழ்.
நினைவின் சாலையில் நிலைக்கட்டும்
கையசைத்துத் தளர்ந்தபடி திரும்பிப்போன
அவன் முதுகும் அம்மழைநாளும்.
குட்டிச்செல்லம் ஜனனி
தன் சின்னக்கைகளில் ஏந்தியிருக்கிறாள்
ஒரு புகைப்படத்தை.
மெழுகுவர்த்திகளும் இதயங்களும்
ஒருசேர உருகும் இந்நினைவிடத்தில்
இருளிலிருந்து கசியும் சிறு விசும்பலுக்காய் காத்திருக்கிறேன்
தனியே அழுவது வெட்கமடி கண்ணே!
சென்னையின் பெருநகரப் புறாக்கூடொன்றில்
கோடையைக் குடித்தபடி
உண்டியல்காரனுக்காய் காத்திருக்கிறான் நிலவன்.
'தொலைதூரக் கனவு'கள் மினுக்கிடும் விழிகளோடு
நாளையில்நடந்து கால்சலிக்கிறான் முகிலன்.
எலும்புகள் குருதியால் கெட்டித்த வீதிகளில்
'புற்கிழங்கு விழிக்கும்
பூக்கள் காற்றொடு இழையும்'
என்ற தேய்ந்த சொற்களால்தான்
முடிக்கவேண்டியிருக்கிறது
இந்தக் கவிதையையும்.
(மேப்பிள்:கனடாவின் தேசியக்கொடியிலுள்ள இலை அடையாளம், உண்டியல்காரன்:வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை வீட்டில் கொணர்ந்து தருபவன்)
--------------------------------------
கண்ணாடிகளின் கதை
ஒவ்வொரு விடியலிலும்
வீட்டு வாசல்களில்
கண்ணாடிகள் விநியோகிக்கப்படுகின்றன
வாராந்தரக் கண்ணாடிகளிற் சில
கடைகளில் மார்புக்குவடு காட்டித் தொங்குகின்றன.
கண்ணாடிகள் காட்சிப்படுத்துகின்றன:
படுக்கையறைகளில் கலவுபவர்களை
விடுதிகளில் விபச்சாரிகளாகும் நடிகைகளை
உங்கள் கற்பெனும் கற்பிதத்தின்மேல்
காறியுமிழ்ந்தோடும் கள்ளக்காதலர்களை
நடிகரின் நாய்க்கு வாயு பறிந்ததை
மேலும் பிரமுகர்களின் வைப்பாட்டிகளை…
அந்தரங்க அரிப்பிற்குச்சுகச்சொறியல்!
மூளைக்குப் பதிலியாக
வரவேற்பறைகளில் வீற்றிருக்கிறது
சதுர வடிவிலொரு கண்ணாடி.
நடனித்தல் கழிந்தநேரம்
முகக்களிம்பிலிருந்து ஆணுறைவரை
பரிந்துரைத்தலதன் பணி.
பல்லாயிரம் கண்ணாடிகள் வழி
பல இலட்சம் கண்கள் குவிகின்றன
சின்னஞ்சிறுமியின் காலிடுக்கில் நிற்காத உதிரப்பெருக்கில்.
உங்கள் யன்னல்களிலெல்லாம்
கண்களும் புகைப்படக் கருவிகளும்.
பதறிப்போய் கண்ணாடியைக் கழற்றுகிறீர்கள்.
யாதொன்றும் செய்வதற்கில்லை நண்பரே!
நீங்கள் குருடாகிவிட்டிருக்கிறீர்கள்.
-----------------------------------------------
பறத்தல் அதன் சுதந்திரம்
உன் கோபத்தின் சூறை அணைத்துவிட்டது
என் வீட்டின் எல்லா விளக்குகளையும்.
காதலின் ஒப்பனைகள் கலைந்த
இவ்வரங்க இருள் அழகாயிருக்கிறது
அபத்த நாடகங்களைக் காட்டிலும்.
துதிபாடிகளின் தோழி…
ஒளிவட்டங்களின் காதலி…
சூதாடிகளின் கைப்பகடை…
வசைகளின் நிறுத்தற்குறியாய்
ஒரேயொரு கண்ணீர்த்துளி.
இப்போது கோபமில்லை.
நதிகளும் விழுந்துவிடும் பள்ளங்களை
கண்ணீர் எப்படியோ தாண்டிவிடுகிறது.
தன் திசை மீளும்
வலசைப் பறவையின் சிறகுகளுள்
சேகரமாயிருக்கின்றன மரமுதிர்த்த ஈரத்துளிகளும்
வசந்தத்தின் போதொலித்த பாடல்களும்.
புவியீர்ப்பை மீறி
பறத்தலே நியதி.
(தலைப்பிற்கு நன்றி:க்ருஷாங்கினி
நன்றி: உயிர்மை
9 comments:
மீண்டு(ம்) வருக!
"மேலும் ஒப்பீடுகளில் அலைக்கழிகிறது திருப்தியடையாத மனம" கடந்து வரும் பாதைகளின் மைல் கற்களெனவும் சிலசமயம் முட்களனெவும் நம்மை இயக்கு வது இது போன்ற ஒப்பீடுகள் தானே தோழி....
உயிர்மையில் இக்கவிதைகள் வந்தபோது என்னை அசைத்த கவிதைகள் மீள்வாசிப்பிற்காக தந்தமைக்கு நன்றி...
யக்கோவ்...வாழ்த்துக்கள்
கனடா உங்களை மீண்டும் வரவேற்கிறது -;)
//எழுதி ஏதும் நிகழப்போவதில்லை என்பதறிந்தும், எழுதாமலிருப்பது குற்றவுணர்வைத் தருகிறது.//
உண்மைதான்.
கவிதைகள் அருமை:)
மீண்டும் வருக!
கவிதைகள் பல தருக!
நாம் பருக!
அன்பின் தமிழ்நதி,
//அகாலத்தில் ஒலிக்கும் தொலைபேசிக்கு
மரணத்தின் நாக்கு //
மீண்டும் சுடும் நிஜங்களைப் பேசும் கவிதைகள் நீண்ட நாட்களின் மௌனத்தைக் கிழித்தபடி.
அருமையான கவிதைகள் சகோதரி...!
நன்றி சுகுணா திவாகர்
இப்போது வந்திருப்பது கனடாவிற்கு இலங்கைக்கல்ல அதனால் மீண்டு வருவதொன்றும் அசாத்தியமல்ல:)
உண்மை கிருத்திகா. மனம் என்பது 'அங்காடி நாய்'போலத்தான். அங்கே இங்கேயென்று அலைகிறது. வாழ்ந்த நிலங்களின் நன்மை தீமைகளை ஒப்பிட்டுக் களைக்கிறது. உடைகளைத் தேர்வதற்கே எத்தனை யோசிக்க வேண்டியிருக்கிறது. இருக்குமிடத்தை தேர்வதற்கு....? ம்... பார்க்கலாம்.
மதராசியா? மாதரசியா? வரவேற்பிற்கு நன்றி தம்பி:)
வழக்கம்போல் வந்து, வந்ததற்கு அடையாளமாக வார்த்தைகளை விட்டுச் சென்றமைக்கு நன்றி ரசிகன்.
நாமக்கல் சிபி, கவியரங்க மேடைகளில் வரவேற்பது போலிருக்கிறது:) வந்தேன் அரங்கிற்கு... தருவது கவிதைகளா இல்லையா அறிந்தவர்தான் சொல்லவேண்டும்.
ரிஷான், இப்போதைக்கு பழையவற்றை வைத்து, அதாவது வேறு இதழ்களில் வந்தவற்றை வைத்து இந்தப் பக்கத்தை ஒப்பேற்றுகிறேன். ஏனென்றால் வேறு இதழ்களுக்கு எழுதுவதில் மும்முரம். வருகைக்கும் எப்போதும் தரும் ஆதரவிற்கும் நன்றிகள்.
தமிழ்நதி,
எவ்வளவு வலி முதல் கவிதையில். 'கண்ணாடிகளின் கதை' கோபத்தின் முடிவில் தெரியும் கசப்பு. மூன்றாம் கவிதை புயலுக்குப்பின் வந்த அமைதி போல் தோன்றுகிறது. என்ன மொழி இலாவகம் ! நன்றிகள் பல மூன்று கவிதைகளுக்கு.
அனுஜன்யா
//அகாலத்தில் ஒலிக்கும் தொலைபேசிக்கு
மரணத்தின் நாக்கு//
கலக்கல்.
கனடாவிற்கு வாழ்த்துக்கள்!!!
Post a Comment