11.29.2008

புயலின் நாள்


மழை.. மழை... மழையன்றி வேறில்லை. கால்களில் எப்போதும் ஈர நசநசப்பு. இரண்டு மணி நேர மின்வெட்டே நாங்கள் மின்சாரத்தால்தான் இயக்கப்படுகின்றவர்களோ என்று நினைக்கத் தூண்டியிருக்க, முழுஅளவில் இருள் மூடினால் என்னதான் செய்வது? இணையத்தொடர்பு இல்லையென்றால் எத்தொடர்பும் இல்லையோ என்று ஒவ்வொரு நிமிடமும் நினைக்கும்படியாயிற்று. 26ஆம் திகதி எழுதிய பதிவை இன்று இடும் காரணம் இதுதான். ஆனால், சென்னையில் மழை எத்தனை அழகாயிருந்தது என்று எழுதும்போது ஆதவன் தீட்சண்யாவின் கவிதை ஒன்று நினைவில் வருகிறது. தலைக்கு மேல் கூரையுள்ளவர்கள் யன்னல் வழியாக மழை பார்த்துவிட்டு கவிதை எழுதுவதைப் பற்றி அந்தக் கவிதையில் சொல்லியிருப்பார். யார் எப்படிக் கோபித்துக்கொண்டாலும் மழையைப் பற்றி எழுதும் தாகம் மட்டும் தீராததாகவே இருக்கும்போல...


வேம்புகளில் புகுந்த காற்றுப்பேய்
எந்தச் சிமிழிலும் அடைபட மறுத்து
தலைசுழற்றியாடுகிறது.
அப்போதுதான் துரோகம் செவியுற்ற பெண்ணென
மூசியறையும் கடலிரைச்சல்
வீடுவரை வருகிறது.
கனத்த மழைத்திரை
சகலமானவற்றிலும் கவிந்து மூட
தெருக்களைத் தெப்பக் குளங்களாக்கி
கரைகடந்து போகிறாளொருத்தி.

மின்னறுந்த இவ்விரவில்
அலைக்கழியும் மெழுகுவர்த்தியின் துணையோடு
‘இன்றுதான் நீ பிறந்தாய்’என
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எறிகணைகளால் கிழிபடும் அந்நிலத்தில்
இன்று
நீயுறையும் பேறுற்ற
பெரும் அடவி எதுவோ?

10 comments:

அன்புடன் அருணா said...

//யார் எப்படிக் கோபித்துக்கொண்டாலும் மழையைப் பற்றி எழுதும் தாகம் மட்டும் தீராததாகவே இருக்கும்போல...//

எனக்கும் இதே கொள்கைதான்....நலாருக்கு பதிவு.
அன்புடன் அருணா

Unknown said...

கவிதை ஜோர் நன்றாக உள்ளது

M.Rishan Shareef said...

//மின்னறுந்த இவ்விரவில்
அலைக்கழியும் மெழுகுவர்த்தியின் துணையோடு
‘இன்றுதான் நீ பிறந்தாய்’என
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எறிகணைகளால் கிழிபடும் அந்நிலத்தில்
இன்று
நீயுறையும் பேறுற்ற
பெரும் அடவி எதுவோ?//

ஒரு பெரும்வலியை மழையைப் போல மனதில் பரப்பிச் செல்கின்றன அருமையான இறுதி வரிகள்...

சந்தனமுல்லை said...

கவிதை நன்று, வழக்கம்போல்!

Anonymous said...

இந்த கவிதை கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது!நன்றி தமிழ்நதி அவர்களே!

கிருத்திகா ஸ்ரீதர் said...

மழையையும் வன்முறையையும் தவிர்க்கமுடியாததாகிறது.... மழை பற்றி பேசவாரம்பித்து மனம் பற்றி முடித்திருக்கும் தங்கள் லாவகம் எப்போதும் போல் வியக்கவைக்கிறது தோழி..

Unknown said...

A poem with depth.

Anonymous said...

"மின்னறுந்த இவ்விரவில்
அலைக்கழியும் மெழுகுவர்த்தியின் துணையோடு
‘இன்றுதான் நீ பிறந்தாய்’என
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எறிகணைகளால் கிழிபடும் அந்நிலத்தில்
இன்று
நீயுறையும் பேறுற்ற
பெரும் அடவி எதுவோ?"

வரிகளுக்குள் புரிவிக்க முடியாத கதைகள் நிறைந்து கிடக்கிறது.

வாழ்த்துக்கள்.

சாந்தி

Anonymous said...

மிகக் கனதியான கவிதை.ஈரமாயும் பாரமாயும் உள்ளது.பஞ்சுசுமந்த நீரென.யசோதா.ப.

தமிழன்-கறுப்பி... said...

உங்களுக்கே உரிய சொல்லாடல்களில் மழையும் வலியும்...