1.06.2009

கிளிநொச்சி: இழந்துதான் போவோமோ…?


எல்லா தேவதைகளும் கைவிட்டுவிட்டனவோ என்ற ஆற்றாமையும் எதையேனும் பற்றிக்கொண்டு எழுந்துவிடவேண்டுமென்ற துடிப்பும் ஒருசேர இயங்கி குழப்பகரமான, இருண்ட மனோநிலைக்குள் தள்ளியிருக்கின்றன. ஆனையிறவும் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் வீழ்ந்துவிடும் என்று செய்திகள் கூவிக்கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே தென்னிலங்கையின் வீதிகளில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி ‘கிளிநொச்சி வெற்றி’கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வெற்றியின்போது (அவர்கள் கொள்ளும் பொருளின்படி) இருக்கவேண்டிய நிதானமும் பொறுப்புணர்வும் அற்று, அற்பத்தனமான அதிரடி அறிவிப்புகள், ஆர்ப்பாட்டங்கள், களியாட்டங்களில் கொழும்பு மூழ்கிக்கொண்டிருக்கிறது. எத்தனை தடவை கிளிநொச்சி கைமாறியிருக்கிறது என்ற வரலாற்றை மறந்து பித்துநிலையில் பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். ‘எதிரிகளிடமிருந்து கிளிநொச்சியை மீட்டுவிட்டோம்’என்று இராணுவ உயரதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குச் செவ்வி வழங்கிக்கொண்டிருக்கிறார். இத்தனை துயரத்திற்கிடையிலும் ‘யாருடைய நிலத்தை யார் மீட்பது?’என்ற வெஞ்சினம் கலந்த சிரிப்பு பீறிடுகிறது. சொல்பவனின் கயமையில் வெகுள்கிறது நெஞ்சம். தென்னிலங்கையும் அவர்களது.. வடகிழக்கும் அவர்களதே! ஆக, 'தமிழர்கள் வந்தேறு குடிகள்’ என்று சந்திரிகா அம்மையார் வாய்மொழிந்தது உண்மையாகிறதல்லவா?

ஆண்டாண்டு காலமாக தமிழர்களுடையதாய் இருந்த பூர்வீக மண்ணை, தமிழெனும் அமிழ்து சொரிந்த நிலத்தை, வீரமும் அர்ப்பணிப்பும் நிறைந்த போராளிகள் உலவித் திரிந்த பூமியை, தமிழர்களின் நிர்வாக மையமாகச் செயற்பட்ட ஒரு மாதிரி நகரத்தை, நள்ளிரவிலும் பெண்கள் பயமற்று வீதிகளில் திரியக்கூடிய அளவிற்கு பாதுகாப்பு மிகுந்திருந்த ஒரு பகுதியை ‘எமதென்று’ஒருவன் உரைக்கக் கேட்பது கொடுமையிலும் கொடுமை! தற்காலிகமாக கிளிநொச்சியை இழந்ததிலும் வலி தருவதாக அவ்வார்த்தைகள் அமைந்திருந்தன.

இழப்பும் பின்னடைவும் சிந்திக்கும் திறனிலிருந்து உணர்ச்சியின் பாதாளத்திற்குள் நம்மைத் தள்ளிவிடுகின்றன. ஆம்…! நூங்கள் நம்பியிருந்தோம். இம்முறையும் இழக்கோம் என்று நம்பியிருந்ததற்கு விடுதலைப் புலிகளின் தீரம் மற்றும் நுட்பமான படைநகர்த்தல்கள் காரணமாக இருந்தன. இராஜதந்திரப் பின்வாங்கல்கள் தோல்விகள் ஆகாதென்று தெரிந்தபோதிலும் வலிக்கத்தான் செய்கிறது. களத்தில் நின்று உயிரைக் கொடுப்பவர்களுக்கும் காயப்பட்டுத் துடிப்பவர்களுக்குமில்லாத வலியா எங்களுக்கு? பட்டினியாலும் இழப்புகளாலும் இடப்பெயர்வுகளாலும் துரத்தப்பட்டு, 'ஓடுவது என்றைக்கு ஓயும்? இனி இடம்பெயர்ந்து செல்ல இடமில்லையே?'என்ற கேள்விகளுடன் குறுகியதொரு நிலப்பகுதிக்குள், வானத்திலிருந்து பொழியும் குண்டு மழைக்குள் ஏங்கிக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கில்லாத மனக்கிலேசமா எங்களுக்கு? எனினும், இருண்ட மனத்தோடு அந்த நாள் கழிந்தது. இழவு விழுந்த வீடு போல ஒரு வெறுமை கவிந்துவிட்டது. ஊடகங்களுக்கு நல்ல தீனி. ஓயாமல் உரைத்தபடியிருந்தன. தாய்மண்ணில் வேரை விட்டு உலகெங்கும் விழுதெறிந்த எல்லாத் தமிழர்களின் மனங்களும் அன்றைக்கு வலித்திருக்கும். ஒரு பயங்கரவாதக் குழுவென ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்பட்ட விடுதலைப் புலிகளைப் பின்னடையச் செய்ய எத்தனை வல்லரசு நாடுகளின் ஆயுத உதவிகள், பயிற்சி வழங்கல்கள், கடனுதவிகள், நேரடியான இராணுவப் பிரசன்னங்கள், தாங்கிப் பிடித்தல்கள், தட்டிக்கொடுப்புகள்!

‘நம்பிக்கையோடிரு மனமே நம்பிக்கையோடிரு’ தற்சமாதானங்களாலும் தாளமுடியாதபோது எங்களைக் கைவிட்டவர்களின்பால் கவனம் திரும்புகிறது. ஈற்றில் ஈழத்தமிழர்கள் எல்லா ஆட்சியாளர்களாலும் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள். ‘தொப்பூள் கொடி உறவு’என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொன்ன வார்த்தைகள் பொருளற்று காற்றில் அலைந்து திரிவதுபோல ஒரு பிரமை. அந்த வார்த்தைகளை ஆட்சியிலிருக்கிறவர்கள் பிரயோகிக்கக் கேட்கிறபோது ‘விதியே விதியே…’என்ற சலிப்பு மேலிடுகிறது. தொப்பூள் கொடிகளின் சலசலப்பு இந்திய மத்திய அரசில் மயிரளவு சலனத்தையும் விளைவிக்கவில்லை. இலங்கை எத்தனை தடவை கழுத்தில் ஏறி மிதித்தாலும் செல்லப்பிள்ளையின் பிஞ்சுப்பாதங்கள் நெஞ்சில் படும்போதெழும் குறுகுறுப்பாக எண்ணி மீண்டும் மீண்டும் அள்ளி அணைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருக்கிறது இந்திய அரசு.

எங்கள் குழந்தைகளின் உடலுள் ஓடிய குருதி தெருவில் ஓடியதை தொலைக்காட்சிகளிலும் குறுந்தட்டுக்கள் வழியாகவும் பார்த்தீர்கள். எங்கள் பெண்கள் வன்புணரப்பட்டு தொடைகளின் இடுக்குகளில் இரத்தம் வழியக் கிடந்த காட்சிகளையும் கண்டிருப்பீர்கள். உயிரும் உடலும் கொண்டுலாவியவர்கள் ஒரே குண்டில் சதைத்துணுக்குகளாகவும் குருதிச்சேறாகவும் மாறியதையும் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். எங்கள் தெருக்கள் நிறமழிந்து சாம்பல் மேடுகளாக மாறியதையும் நீங்கள் அறியமாட்டீர்களா? எல்லாம் அறிந்தும் எங்களை ஏன் கைவிட்டீர்கள்? இந்தியாவை எப்போதும் வம்புக்கிழுக்கும் பாகிஸ்தானை, அச்சுறுத்திக்கொண்டேயிருக்கும் சீனாவை, அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான இஸ்ரேலை நாங்கள் நம்பியிருக்கவில்லை. மொழியாலும் இனத்தாலும் பாரம்பரியத்தாலும் ஒன்றேயான இந்தியாவைத்தான் நம்பியிருந்தோம். இத்தனைக்குப் பிறகும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான பாடைகள் போனபிறகும் இன்னமும் நாற்காலிகள்தான் பிரதானமாயிருக்கின்றன என்பதை தமிழக அரசு நிரூபித்துக்கொண்டிருக்கிறது. தன்னைக் கடந்து போகும் ஒவ்வொருவரையும் பசியின் விழிகளால் நிமிர்ந்து பார்க்கும் ஒரு பாதையோரச் சிறுவனைப்போல, ஆர்ப்பாட்டமான அறிவித்தல்களின்போது நம்பிக்கையின் கீற்று எட்டிப்பார்க்கிறது. பாராமுகமாகக் கடந்துபோகும் பாதசாரிகளைக் கண்டு அச்சிறுவனின் விழிகளில் ஒளி அணைந்துபோவதைப் போல, அதிகாரத்துடனான தமிழக அரசின் சமரசங்களைப் பார்க்கும்போதில் நம்பிக்கையும் செத்துப்போகிறது. அதட்டிக் கேட்குமளவு அதிகாரமிருந்தும் மத்திய அரசின் முன் அடிபணிந்துகொண்டிருப்பதன் பொருள் புரியாத புதிரன்று. ‘கடந்த காலங்களில் செய்தோமே… செய்தோமே..’என்பது, இப்போது பசியோடிருக்கிறவனைப் பார்த்து ‘நேற்றைக்குச் சோறு போட்டேனல்லவா?’என்று விரட்டுவதற்கு ஒப்பாயிருக்கிறது. வார்த்தைகளால் கண்ணீரைத் துடைக்கமுடியும் என்பது சாதாரண பிரச்சனைகளுக்குச் சரியாக இருக்கலாம். மரணம் வீட்டுக்குள் வந்து விருந்தாளியாக உட்கார்ந்துகொண்டிருப்பவர்களுக்கு வார்த்தை முழக்கங்கள் எந்தவிதத்தில் உதவும்? ஒரு பருக்கையாகக்கூட அது பயன்படாது என்பதுதான் உண்மை. இசையை அருந்தி சாதகப் பறவை உயிர்வாழ்ந்திருக்கலாம்... வார்த்தைகளை உண்டு மனிதர்களால் உயிர்தரித்திருக்க முடியாதென்பதை அறியாதவர்களா நம்முடைய அரசியல்வாதிகள்?

கைவிடப்பட்ட, துரோகிக்கப்பட்ட மனோநிலையில் இறந்தகாலத்தின் அற்புதங்களில் சாய்ந்துகொள்கிறோம். சாத்தான்கள் சிலவேளைகளில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கலாம்... அதனால் தேவதைகள் சபிக்கப்பட்டதாகப் பொருளில்லை. போர் வேறொரு கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. களம் மாறியிருக்கிறது. அவ்வளவுதான். மரபுப்போர் முறையிலிருந்து கெரில்லாப் போர்முறைக்கு விடுதலைப் போராட்டம் தள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால் வட கிழக்கில் மட்டும் நடந்துகொண்டிருந்த போரானது இப்போது தென்னிலங்கைக்கும் நகர்த்தப்பட்டிருக்கிறது. இனி நிழலைக் கண்டும் அஞ்சவேண்டிய துர்ப்பாக்கியத்துள் சிங்கள ஆட்சியாளர்கள் வாழவேண்டியதாக இருக்கும். சற்று மிகைப்படக் கூறின் மிதித்து நடக்கும் புல்லும் வெடிக்கும். ‘கட்டிலுக்குக் கீழும் கரும்புலி இருப்பான். கவனம்’என்றொரு கவிஞர் சொன்னது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. மறுவளமாக கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் ஒடுக்குமுறையின் குரூர முகத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதில் ஐயமில்லை. சுற்றிவளைப்புகளும் கைதுகளும் சித்திரவதைகளும் ஆட்கடத்தல்களும் முன்பைக் காட்டிலும் தீவிரமடையும்.

கிளிநொச்சியைப் போன்று இன்னும் இன்னும் தற்காலிக பின்னடைவுகள் நீடிக்கலாம். இருப்பினும் உயிரிழப்புகளைத் தவிர்த்து பின்னோக்கி நகர்ந்ததன் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை ‘அவரன்றி’ யாரறிவார்? இத்தனை முட்டுக்கொடுப்புகளோடு முட்டிமோதி ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியினுள்ளேயே ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் காவுகொடுத்து ஒரு சூனியப் பகுதியை வென்ற கோழைத்தனத்திற்குப் பதிலடி கிடைக்கும் வரையில் ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கட்டும்.

கவிஞர் பா.அகிலனின் கவிதை வரிகள் இவ்விடத்தில் ஞாபகத்தில் வருகின்றன.

ஆனால்,
கருகிப்போன புற்களிற்கு
இன்னும் வேர்கள் இருப்பதை,
கைவிடப்பட்ட பாடல்
சொற்களின் மூலத்துள் அமர்ந்திருப்பதை
நீ அறிவாயா?
குருதி படர்ந்து மூடிய
கடலின் ஆழத்துள்
இன்னும்
எங்களின் தொன்மச் சுடர்கள் மோனத்திருப்பதை
நீயும் அறியாது விடின்
இன்றறிக.
‘ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்’
ஓர் நாள் சூரியன் எழுந்து
புலர்ந்ததாம்.

பா.அகிலனின் ‘பதுங்குகுழி நாட்கள்’கவிதைத் தொகுப்பிலிருந்து…(குருத்து வெளியீடு)

22 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

தமிழீழ ஆதரளவாளர்கள் அனைவரது மனநிலையினையும் படம் பிடித்து காட்டியது போன்றதொரு பதிவு...

ஓர்மைகள் said...

நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

Kotticode said...

தமிழ் ஈழம் வெல்லும் இது காலத்தின் கட்டாயம்

லூசன் said...

இல்லை. நிச்சயமாக இல்லை. இது தொடர்பாக நான் ஒரு பதிவு இட்டுள்ளேன். நாம் இழக்கவே மாட்டோம். இவை எல்லாம் மீளப்பெறப்படும். அந்நேரத்தில் சிங்களத்து சேனைக்கு வன்னி மண்தான் புதைகுழி. அவனுக்கு எங்கள் மண்ணில் கொள்ளை ஆசை. வாழ இல்லை. அதில் சாக.

சந்தனமுல்லை said...

தங்கள் பதிவினை படித்துவிட்டு கனத்தமனதுடன் பதிவை வெறித்தபடி இருந்தேன்..வீரியம் மிக்க அதிசயம் உங்கள் எழுத்து!!

sukan said...

//பதிலடி கிடைக்கும் வரையில் ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கட்டும். //

அவர்கள் எம்மை நம்புகின்றார்கள் நாங்கள் அவர்களை நம்புகின்றோம் இதில் நாம் தான் ஏமாற்றுகின்றோம்.

Anonymous said...

வேதனையான, அதே நேரம் மிக உண்மையான பதிவு. தமிழக அரசின் கோழைத்தனத்தை நினைத்து வெட்கித்தலைகுனிய வேண்டியிருக்கிறது.
பாடைகளோடு போட்டி போடும் நாற்காலிகளை நினைத்து நெஞ்சம் தவிக்கிறது. இலங்கை தமிழர்களுக்காக இடைத்தேர்தலையாவது நிராகரித்திருக்கலாம் இந்த ஆளும்கட்சி.

கல்யாண்குமார்
www.kalyaje.blogspot.com
kalyangii.@gmail.com

முபாரக் said...

:-((((

சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. தொடரும் துயரங்கள் கண்ணீரைப் பெருக்கிக்கொண்டே இருக்கிறது.

Anonymous said...

http://www.keetru.com/literature/essays/ponnila_2.php

நண்பர்கள் இதைப் படிக்கவும்.

ராஜ நடராஜன் said...

மனது நெகிழும் உணர்ச்சிபூர்வமான எழுத்துக்கள்.இவ்வளவு உணர்வுபூர்வமான எழுத்துக்களுக்கூடாக சில ஈழத்து எழுத்துக்களும்,சில இந்தியக் குரல்களும் ஓர் உரிமைப் போரினை மறுதலிப்பது வேதனையாக இருக்கிறது.

supersubra said...

உங்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும்
பதவிக்கு பறக்கும் தமிழக போலி அரசியல் வாதிகளை நம்பாமல் இருந்தால்
உங்கள் மண்ணில் உடன் இருந்து போராடும் தமிழர்களை ( முறைகள் வேறாயினும் ) பகைக்காமல் இருந்தால்

கடந்து போனவை கனவாகட்டும்
நாளைய நாள் நல்லதாக பிறக்கட்டும்
புதிய தமிழீழ போராட்டம் வன்முறையை நம்பாமல் தமிழீழம் வாழ் அனைத்து தமிழர்களையும் அனைத்து சென்று மனங்களை வென்றால் ஒரு நாள் நிச்சயம்
தமிழீழம் மலரும்.

ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வருங்காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே

boopathy perumal said...

"ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்’
ஓர் நாள் சூரியன் எழுந்து புலர்ந்ததாம். "

எப்போது அந்த நன்னாள் வரும் என‌ தெரியவில்லையே, அதுவரை ஈழத்தமிழர்கள் எதிர் நோக்கவேண்டியிருக்கும் இன்னல்களை நிலைத்தால்தான் மனம் கனக்கிறது

Anonymous said...

திரு தமிழ்நதி அவர்களே!
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகாரனுக்கும் இன்னும் எல்லை தகாராறு உள்ளது..எங்கே பெங்களூரில் உள்ள அவர்கள் மேல் கைவைக்க சொல்லுங்கள் பார்போம் வாலை ஒட்ட நறுக்குவார்கள்..

இந்த பால்தக்கரேவும் தான் மும்பையில் தமிழரை தாக்கினான் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது ‘இந்தி’ய அரசு? இன்றும் பத்திரமாகத்தான் உள்ளான் இவ்வாறானவர்களை சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி இருந்தால் இந்த இந்திய தேசத்தை பாராட்டலாம்..இதுவரை தமிழன் எத்தனை மாநிலங்களில் கலவரத்தை தூண்டினான்? காரணமின்றி யாரையாவது அடித்திருக்கிறானா?மலையாளி கண்ணகி கோட்டம் என்னுடையது என்கிறான்..
இந்த மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்..இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு? சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான்.

இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்

இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.

எனவே அண்ணன் பிரபாகரன் இன்னும் சந்தியா பொந்தியா தந்தையர் தேசம் தாயார் தேசம் பாட்டி தேசம் என்று காத்திருக்காமல் இந்தியாவின் நட்பு நாடுகளான பாகிச்தான்,சீனா போன்றவற்றின் ஆதரவினை பெற முயலவேண்டும் தைரியமாக அவர்களுக்கு படைத்தளம் அமைக்க உதவவேண்டும்..
மேலும் அந்த நாடுகளின் ஆதரவுடன் அணுக்கரு பரிசோதனை எல்லாம் மேற்கொள்ள வேண்டும் வல்லாதிக்க அமெரிக்காவுக்கு அடியில் ஒரு கியுபா.. இந்திய வல்லாதிக்கதிற்கு அடியில் ஒரு தமிழீழம் மலர வேண்டும்.. தமிழனுக்கு எதிரி என்று வந்துவிட்டால் அவன் சிங்களனாக இருந்த்தால் என்ன இந்தியனாக இருந்தால் என்ன?

King... said...

என்ன செய்ய முடியும் தமிழ்நதி அக்கா...
இதற்கு யாதொன்றும் செய்ய முடியாத மனிதர்களாகவவே நாம் இன்னமும் இருக்கிறோம் என்பது தான் என்னுடைய ஏக்கமும், நிர்ப்பந்தங்கள் சூழ்ந்த வாழ்வு ஏதோ ஒரு கணத்திற்காக நகர்ந்து கொண்டிருக்கிறது...

இந்த சிங்களவர்கள் என்னத்தை படிக்கிறார்கள், என்னத்தை தெரிந்து கொள்கிறார்கள் காலங்காலமாக காவிகள் சொன்ன பொய்க்கதைகளைத்தானே நம்பிக்கொண்டு அதே மூளைச்சலவையோடு பிறந்து அப்படியே சுயமற்றே செத்தும் போகிறார்கள் முக்கியமாய் மனிதர்களல்லாதவைகளாய்...

Anonymous said...

கலங்காதீர் தோழர்களே, தமிழன் வெல்வான். விடியல் வரும், விரைவில் வரும், வந்தே தீரும்... இரத்தம் குடிக்கும் ஓநாய் கூட்டங்கள் மடிந்தொழியும். அமைதி பிறக்கும். தமிழருக்கும் ஒரு திருநாள் வந்தே தீரும்...

இப்படிக்கு,
பேச மட்டுமே தெரிந்த தமிழன்.
(நான் உள்பட, ஆனால் கண்ணீருடன்)

சுந்தரவடிவேல் said...

விடியும், நம்பிக்கை கொள்ளுங்கள்!

யட்சன்... said...

வலி் தரும் வார்த்தைகள்...

ஒரு விதவையின் வைராக்கியம், தமிழீழ கனவிற்கு அடிமேல் அடி தருகிறது என்பதை இதுவரையில் யாரும் உணர்ந்ததாகவோ அல்லது அது குறித்த விழிப்புணர்வுடன் யோசித்ததாகவோ தெரியவில்லை.

அந்த பெண்மணி நினைத்திருப்பாரேயானால் இந்த பிரச்சினைகள் மணி நேரத்தில் தீர்க்கப்படும் வாய்ப்புகள் இருக்கிறது.ஆனால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டனவா என்பது தெரியவில்லை.

ஈழத்து சகோதரன், தமிழக அரசியலின் வெற்று வாய்வீச்சாளர்களை நம்பி சோரம் போனார்கள் என்பதே என்னுடைய கருத்து....சரியான lobbying பண்ணியிருந்தால் இந்த பிரச்சினையை இலகுவாய் தீர்த்திருக்கலாம்.

உப்பை தின்றால் தண்ணீர் குடித்துத்தானாக வேண்டும்....அது ராசீவ் காந்தியாக இருந்தாலும் சரி, பிரபாகரனாயிருந்தாலும் சரி...

ஆனால் ஏதுமறியா அப்பாவி சகோதரம் கொத்துக்கொத்தாய் செத்துப்போவதன் அரசியல் எந்த ஊர் நியாயமென பிடிபடவில்லை...ம்ம்ம்ம்

தமிழ்நதி said...

கிருத்திகா,

சொல்லப்போனால் எழுத நினைத்தது இன்னும் அதிகம்.மனதில் உள்ள வெம்மையை அடக்கிக்கொண்டு சற்றே நாகரிகமான வார்த்தைகளால் எழுதியாக வேண்டியிருந்தது. எரிமலைக் குழம்புபோல இருக்கிறது உள்ளம். அதிகாரங்களுக்கெதிராக ஓரளவிற்கு மேல் விமர்சனங்களை வைக்கமுடியாது என்பது விரல்களைக் கட்டிப் போட்டிருக்கிறது தோழி.

---
ஆம் ஓர்மைகள் (பெயர்கள் பெயர்கள்... இதைப் பற்றி ஒரு பதிவை யாராவது எழுதுங்களேன்) இந்தக் காலத்தில் இணையாமல் இனி எந்தக் காலத்தில்?
---
kotticode :)

"தமிழ் ஈழம் வெல்லும் இது காலத்தின் கட்டாயம்"

அதற்காகத்தான் காத்திருக்கிறோம்.

----
லூசன்,

(திட்டக்கூடிய பெயராக வைத்திருக்கிறீர்கள். ஆம் பெயரில் என்ன பெருமிதம் வேண்டியிருக்கிறது)

தமிழர்களின் விதைகுழியானது ஆக்கிரமிப்பாளர்களின் புதைகுழியாகவும் எழுதப்பட்டிருக்கிறது என்றால் யாரால் அதை மாற்றமுடியும்?

---------
சந்தனமுல்லை,

நன்றி. என் எழுத்தில் அதிசயம் ஒன்றுமில்லை தோழி. அப்படி ஏதும் இருந்தால், நான் பேசும் விடயத்திலுள்ள சத்தியத்தின் சுடராகவே இருக்கமுடியும்.

----

நர்மதா சிவா,

"அவர்கள் எம்மை நம்புகின்றார்கள் நாங்கள் அவர்களை நம்புகின்றோம் இதில் நாம் தான் ஏமாற்றுகின்றோம்."

நிச்சயம் அவர்கள் ஏமாறத்தான் போகிறார்கள். அதைக் கடந்தகாலம் உணர்த்தியிருக்கிறது.

-------
கல்யாண்ஜி,

இடைத்தேர்தலை நிராகரிப்பதாவது....! நல்ல பேச்சுத்தான். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது தமிழகத்தில் நண்பரே. கனவில்கூட சாத்தியமில்லை.

----

முபாரக்,

கண்ணீர் தீராதென்று தெரியும். ஆனந்தக் கண்ணீராக மாறும் நாளுக்காகத்தான் தவம். பேசிப் பேசியே ஒரு வெறுப்பு வந்துவிட்டது. அரசியல்வாதிகளின் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருப்பதனால் ஏற்பட்ட ஒவ்வாமையாக இருக்கலாம்.

-----

அனானி நண்பரே,

படித்தேன். நல்ல விரிவான கட்டுரை.

----
ராஜ நடராஜன்,

"சில ஈழத்து எழுத்துக்களும்,சில இந்தியக் குரல்களும் ஓர் உரிமைப் போரினை மறுதலிப்பது வேதனையாக இருக்கிறது."

'ஈழத்து எழுத்துக்கள்' என நீங்கள் சொல்பவர்களைத் தெரிகிறது. தனிப்பட்ட நலன்களுக்காக, குரோதங்களுக்காக தங்கள் இனத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்கெதிராகவும் குரல் எழுப்பும் அவர்களைப் புறக்கணித்துவிடுங்கள்.

தமிழகத்தில் 'இவர் இன்னார்'என்பதும், அவர்கள் பேசுவதன் பின்புலம் என்னவென்பதும் நீங்கள் அறியாததா?

-------

நன்றி சுப்பர்சுப்ரா,

நீங்கள் சொல்வதுபோல ஒற்றுமை வேண்டும்தான். கடந்தகாலத் தவறுகளுக்காக வருந்தவோ சீர்செய்யவோ கூட நேரமில்லாமல் இனவழிப்பு நடந்துகொண்டிருக்கிறது. ஆயுதங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றன. என்ன செய்வது?

-------
பூபதி பெருமாள்,

வன்னிக்குள் அகதிகளாக இருக்கும் மக்களின் நிலை நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு மோசமாகத்தான் இருக்கும். ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள், பாதைகள் இராணுவத்தால் முடக்கப்பட்டுவிட்ட நிலையில் உணவு, உறையுள் பற்றாக்குறையோடு பதுங்குகுழிகளின் பற்றாக்குறையும் இருக்கும். அந்த இடத்தையே இலங்கைப் படத்திலிருந்து வழித்துத் துடைத்தெறிந்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டாற்போலத்தான் விமானங்கள் குண்டு வீசிக் கொன்று குவித்துக்கொண்டிருக்கின்றன.

----
தமிழ்தேசியன்,

எப்போதும்போல உங்கள் கருத்துக்களிலுள்ள நியாயம் சுடத்தான் செய்கிறது. தமிழர்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல இந்திய அரசும் இலங்கை அரசும் நடத்துகின்றன என்பது உண்மைதான். உங்களுக்குத் தெரியும் இந்தப் பாரபட்சம் தமிழக அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா? தெரியும். இருந்தாலும் நாற்காலிகள் ஆட்டங்கண்டுவிடக் கூடாதே என்று அடங்கிப்போகிறார்கள். 'விதியே விதியே..'என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

----
ஆம் கிங்,

தமிழர்கள் என்பவர்கள் அவர்கள் மட்டில் 'வந்தேறு குடிகள்'. மகாவம்சம் கக்கிய நஞ்சில் பெரும்பான்மையினரின் மனங்கள் கறுப்பாகிவிட்டன. பஞ்ச சீலத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய சில புத்தபிக்குகள்கூட பஞ்சமாபாதகங்களுக்குத் துணிந்திருக்கிறார்கள். புத்தர் கண்களை மூடியிருப்பதுதான் அவருக்கு நல்லது.

---------
நன்றி சஹா,

நம்பிக்கை... அது ஒன்றுதான் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

-------
சுந்தரவடிவேல்,

விடியும் விடியும் என்றுதான் கிழக்கைப் பார்த்திருக்கிறோம். தெரியும் வெளிச்சமெல்லாம் குண்டு வீழ்ந்து வெடிப்பதிலிருந்தல்லவா பிறக்கிறது:(

----

யட்சன்,

ஆம். நீங்கள் சொல்வதேபோல சம்பந்தப்பட்டவர்கள் நினைத்தால் இந்தப் பிரச்சனையை ஒரு நாளுக்குள் தீர்க்கலாம். நினைக்க மாட்டார்கள். கருணை வடிவமாகக் காட்டிக்கொள்பவர்களுக்குள் பழிவாங்கும் மனோபாவம் இருக்கிறது போலும்.

"உப்பை தின்றால் தண்ணீர் குடித்துத்தானாக வேண்டும்....அது ராசீவ் காந்தியாக இருந்தாலும் சரி, பிரபாகரனாயிருந்தாலும் சரி..."

ம்... சிலர் அதிகாரங்களுக்கு விலைபோனவர்கள். பிரபாகரனோ எதற்கும் விலைபோகாதவர். நினைத்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய பதவி, பணம், ஆடம்பர வாழ்வு...என பட்டியல் நீளும். ஒரு பேச்சுக்காக தோற்றே போகிறோம் என்று வைத்துக்கொண்டாலும் அந்த மதிப்பு மாறாதது. (தோல்வி வராது என்று தெரியும்) வரலாறு தந்த ஒரு மகத்தான மனிதரின் காலத்தில் வாழ்வதற்காக விரும்பியவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

சவுக்கடி said...

****சொல்லப்போனால் எழுத நினைத்தது இன்னும் அதிகம்.மனதில் உள்ள வெம்மையை அடக்கிக்கொண்டு சற்றே நாகரிகமான வார்த்தைகளால் எழுதியாக வேண்டியிருந்தது. எரிமலைக் குழம்புபோல இருக்கிறது உள்ளம். அதிகாரங்களுக்கெதிராக ஓரளவிற்கு மேல் விமர்சனங்களை வைக்கமுடியாது என்பது விரல்களைக் கட்டிப் போட்டிருக்கிறது தோழி.****

உங்கள் உணர்வுகள் புரிகின்றன.
ஆம். உங்களோடு ஒத்த உணர்வோடு
குமுறுகிறோம்!


****சிலர் அதிகாரங்களுக்கு விலைபோனவர்கள். பிரபாகரனோ எதற்கும் விலைபோகாதவர். நினைத்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய பதவி, பணம், ஆடம்பர வாழ்வு...என பட்டியல் நீளும். ஒரு பேச்சுக்காக தோற்றே போகிறோம் என்று வைத்துக்கொண்டாலும் அந்த மதிப்பு மாறாதது. (தோல்வி வராது என்று தெரியும்) வரலாறு தந்த ஒரு மகத்தான மனிதரின் காலத்தில் வாழ்வதற்காக விரும்பியவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.****

பொன்னாற் பொறிக்க வேண்டிய வரிகள்!
இதைவிட பொருத்தமான விடையைச்சொல்ல இயலாது.

நம்புங்கள், தமிழீழம் நாளை பிறக்கும்!
தன்னல இரண்ட கர்களின் இழிசெயல்களை யெல்லாம் வீழத்தி,
விடுதலை ஈழம் மலர்வது உறுதி.
அரசுகளும் அதிகாரங்களும் இன்று துணையில்லாவிட்டாலும்
அப்பழுக்கில்லா உணர்வுள்ளங்கள் உண்டு.
நம்பிக்கை வையுங்கள்.
வெற்றி உறுதி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்கள் இதனைப்பற்றி எழுதுவீர்கள் என்று காத்துக்கொண்டிருந்துதான் இருந்தேன்.

ஊடகம் சொல்வது பொய்யாக இருக்கக்கூடாதா என்ற ஒரு நப்பாசைதான் அதற்கு காரணம்

ஆனால் பின்னடைவும், பின்னர் ஒரு முன்னடைவுக்குத்தான் என்று நீங்கள் சொல்லும்போது நம்புகிறேன், தமிழீழம் மலரும் என..

அரசியல்வாதிகளின் நிலையை நன்றாகவே படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.
சட்டக்கல்லூரி மாணவர்களின் சாதிவெறி சண்டையைப் பார்த்த பின்னருமா இந்த அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை வரும்.

உங்கள் எழுத்தின் ஒவ்வொரு புள்ளியும் சொல்கிறது உங்களின் ஆற்றாமையை.
என்ன செய்ய முடியும், என்னால் தோழீ - இறைவனிடம் வேண்டுதல்களை வைப்பதை விட

Theepachelvan said...

அன்புள்ள தமிழ்நதி அக்கா,

தனிமைப்படுத்துகிற போர் எம்மிடமிருந்து மனிதர்களையும்
நகரங்களையும் பிரிக்கிறது.
துண்டாடப்பட்டு மெலிந்த சனங்களாய் தனித்தனியே
வதைப்படுகின்றனர்.

கிளிநொச்சியின் வீழ்ச்சி தமிர்களை
என்னவாக வதைக்கிறது.
அது உலகம் எங்கும் வாழுகிற தமிழர்களின் கனவுகளை
பிரதிபலிக்கிறது.

படைகள் என்னை துரத்த கனவில் கிளிநொச்சியின்
சிதைவை கண்டு துடித்தேன்.
நாமெல்லாம் துயரத்தால் ஒன்றாய் வதைபடுகிறோம்
என்று படுகிறது.

பதிவை கண்டு போகிறேன்

தம்பி தீபச்செல்வன்

ஆயில்யன் said...

//தாய்மண்ணில் வேரை விட்டு உலகெங்கும் விழுதெறிந்த எல்லாத் தமிழர்களின் மனங்களும் அன்றைக்கு வலித்திருக்கும்///

வலியினை நாங்களும் உணர்ந்தோம்!

எத்தனை எத்தனையோ சமாதானங்களை கூறிக்கொள்ளும் எங்க நாட்டரசியல் செயல்பாடுகள், எங்களின் மனம் வெட்கி, குறுகிப்போகும் நிலையினைத்தான் தந்திருக்கிறது :(