7.10.2009

நட்சத்திரங்களுக்கிடையில் ஒரு கதைசொல்லி


ஒரு ஊரிலே ஒரு அக்கா இருந்தாள். அவளுக்குத் தங்கச்சி இருந்தபடியால்தான் அவள் அக்காவானாள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. தங்கச்சியின் உலகம் இரவில் பேய்களாலும் துர்க்கனவுகளாலும், பகலில் பள்ளிக்கூடத்தாலும் மிகுதி அக்காவாலும் நிரம்பியிருந்தது. அக்கா ஒரே சமயத்தில் வெள்ளந்தியாயும் துணிச்சல்காரியாகவும் வாயாடியாகவும் இருந்தாள். அவளளவில் பள்ளிக்கூடம் என்பது கதைப்பதற்கு நிறையப் பேர்களைக் கொண்டதோர் இடம். புளியங்கொட்டைகளையும் மாங்காய்களையும் பள்ளிக்கூடப் பையினுள் தவறாது எடுத்துப்போனாள். தங்கச்சியோவெனில் அம்மாவின் சேலைத்தலைப்பிலிருந்து நேரடியாக அக்காவின் பாவாடை நுனிக்குப் பெயர்ந்தவள். இரவில் ஒன்றுக்கிருக்கப்போகும்போது அக்காவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வாள். வளவின் இருண்ட மூலைகளில் கண்கள் அப்போது பதிந்திருக்கும். தங்கச்சி அக்காவைப் போலில்லை அழுத்தக்காரி என்றாள் அம்மா. மேலும் யாருமறியாத இரகசியங்களாலானது தங்கச்சியின் மனம்.

அவர்கள் தட்டான்கள் பறந்து திரியும் வெளிகளில் ஏனைய சிறுவர்களோடு விளையாடினார்கள். நாயுண்ணிப் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டார்கள். மரங்களுக்குப் பின்னாலும், வீட்டின் புழக்கமில்லாத பகுதிகளிலும் கழிப்பறையிலும் அவர்கள் ஒளித்துப் பிடித்து விளையாடினார்கள். சில சமயங்களில் அம்மாவின் சேலையை எடுத்துச் சுற்றிக்கொண்டு அக்கா ஆசிரியையாகிவிடுவாள். அவர்கள் வீட்டுச் சுவர்கள் பள்ளிக்கூடப் பிள்ளைகளாகி, பூவரசந்தடியின் பச்சைத்தழும்புகளைத் தாங்கின. அக்கா சட்டி பானையில் பாவனைச் சமையல் செய்தாள். தெருவில் திரியும் பூனை, நாய்களை குழந்தைகளின் பெயர்சொல்லி சாப்பிட வருமாறு அழைத்தாள். தொளதொளவென்ற ‘சேர்ட்’டைப் போட்டிருக்கும் அப்பா வீடு திரும்பும்போது எல்லோரும் அமைதியாக அமர்ந்து படித்துக்கொண்டிருக்கவேண்டுமென்பது தற்காலிக அம்மாவாகிய அக்காவின் கட்டளை.

சில வருடங்களில் அக்கா பெரிய பெண்ணாகினாள். கன்னங்களும் நெற்றியும் மினுமினுக்க திண்ணென்றிருந்த அக்காவையிட்டுத் தங்கச்சிக்குப் பெருமிதந்தான். அக்கா ஏதோவொரு சினிமாவில் பார்த்த எவளோவொரு கதாநாயகியை நினைவூட்டினாள். அக்கா அருமையான கதைசொல்லி. எப்போதோ பார்த்த சினிமாவில் வந்த கதாநாயகன் எப்படி பத்தடிக்கு மேல் எகிறிப் பாய்ந்;து சண்டைபிடித்தான் என்பதை அக்கா சொல்லும்போது தோழிகள் வாய்பிளந்து கேட்டிருப்பதைத் தங்கச்சி அவதானித்திருக்கிறாள். கதைக்கு உபரிச் சுவை சேர்க்க அக்கா இடையிடையே ஓசைகளையும் எழுப்புவதுண்டு. ‘விசுக்கெண்டு பாய்ஞ்செழும்பி அடிக்கேக்கை ஒம்பது பேர் றொக்கெட் போலை அங்காலை போய் விழுந்தாங்கள் பாக்கோணும்’என்பாள். இடையிடையே அந்தப் படத்தின் பாடல்களைப் பாடியும் காண்பிப்பாள். அவள் பாடும்போது இராகம் முற்றிலும் மாறிவிட்டிருக்கும். தோழிப்பெண்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. இலவசமாக ஒரு முழுநீளப்படம் பார்த்த திருப்தியோடு மனசில்லாமலே எழுந்திருந்து தங்கள் தங்கள் வீட்டுக்குப் போவார்கள். மிட்டாய்காரனைத் தொடரும் குழந்தைகளைப் போல அவளை யாராவது தொடர்ந்தபடியிருந்தார்கள். அவளோடு கதைப்பதற்கு எல்லோரும் விரும்பினார்கள். குறிப்பாக இளைஞர்கள். அக்கா எவருடைய சமையலறைக்குள்ளும் சுவாதீனமாக நுழைந்து கோப்பையில் சோற்றை எடுத்துப்போட்டுச் சாப்பிடுமளவிற்கு அக்கம்பக்கங்களில் அனுக்கத்தைச் சம்பாதித்திருந்தாள். கூடப்போகும் தங்கச்சி கூச்சப்பட்டுக்கொண்டே அங்கிருப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சின்னக்குரலில் பதிலளித்துக்கொண்டிருப்பாள். “வாக்கா போகலாம்”என்பவளின் குரல் அன்றைய சங்கதிகள் தீர்ந்தபிற்பாடுதான் அக்காவின் காதில் விழும். ஆனால், அக்கா தங்கச்சியோடு மிகுந்த பிரியமாயிருந்தாள். எங்குபோனாலும் அவளைக் கூட்டிக்கொண்டே போனாள். அக்காவின் பாவாடை நுனி அன்றேல் சட்டையின் நுனி தங்கச்சியின் கையில் மற்றொரு விரலைப் போல இருந்தது. கடைகளுக்குள் தேங்காயை எடுக்கக் குனியும்போது தங்கச்சியும் அக்காவோடே சேர்ந்து குனிவதைப் பார்த்து கடைக்காரர்கள் தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள்.

அக்காவும் அவளும் சண்டைபோட்டதேயில்லை; ஒருநாளைத் தவிர. அன்றைக்கு அக்கா ஒரு இளைஞனோடு பேசிக்கொண்டிருந்தாள். அவள் கன்னங்களில் சின்னதாக ரோஜாப் பூ பூத்திருந்தது. கண்களில் ஒளியின் அலையடித்தது. நீலத்தில் வெள்ளைக்கோடுகள் போட்ட சட்டையை அன்றைக்கு அக்கா அணிந்திருந்தாள். அவன் ஒல்லியாக- முற்றத்தில் நின்ற வாழைமரம் போல நெடுத்திருந்தான். அவனது பேச்சுக்கு அக்கா விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள். தெருவில் யாராவது தடக்கி விழுந்தாலே சிரிக்கிற ஆள்தான் அவள். என்றாலும், தங்கச்சிக்கு எரிச்சலாக இருந்தது. “வாக்கா…”என்று சட்டையைப் பிடித்து இழுத்தாள். “கொஞ்சம் பொறு… அப்பிடி உனக்கென்ன அவசரம்? நீ போறதெண்டால் போ”என்றாள் அக்கா இலேசாகக் கோபம் தொனிக்கும் குரலில். தங்கச்சிக்கு அழுகை வந்துவிட்டது. வீட்டை நோக்கி ஓடிப்போனாள்.

பிறகென்னடாவென்றால் அந்த நெடுவலை அக்கா காதலிப்பதாக ஊருக்குள் கதைக்கத் தொடங்கினார்கள். அண்ணா செருப்பால் அடித்தார். அம்மா விளக்குமாற்றால் அடித்தா. அப்பா கன்னங்களில் ஓங்கி ஓங்கி அறைந்தார். அக்கா அழுதாள். ஆனாலும், அவனைத்தான் ‘கலியாணம் கட்டுவன்’என்று சொல்லிவிட்டாள். இல்லையென்றால் மருந்து குடித்துச் செத்துப்போவேன் என்று மிரட்டினாள். அம்மா பட்டினி கிடந்து பார்த்தா. அக்கா அம்மாவுக்கு மேல் கிடந்தாள். அக்காவின் மருந்துக் கதை இந்தக் கதையின் கடைசிவரையில் வேலை செய்தது. முடிவில் அக்காவின் பிடிவாதம் வென்று, அந்த நெடுவலும் அக்காவும் பாலும் பழமும் சாப்பிட்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு அக்கா இன்னமும் அழகாகிவிட்டாள். அழகழகான சேலைகளைக் கட்டிக்கொண்டு அத்தானாகிவிட்டவனோடு வெளியில் போய்வந்தாள். தங்கச்சியால் அக்காவின் சேலை நுனியைப் பற்றிக்கொண்டு கூடப் போக முடியவில்லை. படுத்திருந்து இரகசியமாக அழுதாள். என்றாலும் அக்காவின் மீதான பாசம் குறையவில்லை. அக்காவும் அன்பு குறையாமல்தானிருந்தாள்.

அக்காவின் அறைக்குள் இருந்திருந்தாற்போல அழுகைச் சத்தம் கேட்டது. பிறகு கண்கள் சிவந்துபோய் வெளியில் வந்த அக்காவைத் தங்கச்சி குழப்பத்தோடு பார்த்தாள். அம்மாவும் அக்காவும் குசுகுசுப்பது எதுவும் தங்கச்சிக்குப் புரியவில்லை. பிறகு அக்கா வீடு மாற்றிக்கொண்டு போய்விட்டாள்.

அக்காவுக்கு முதல் குழந்தை பிறந்தது. அது சின்னச்சூரியன் போல இருந்தது. விடுமுறை நாட்களில் அக்கா சமைத்து முடிக்கும்வரையில் அதைத் தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டோ, காகம், குருவி காட்டிக்கொண்டோ இருப்பாள் தங்கச்சி. “சித்தியோடை இருக்கிறியா… செல்லக்குட்டி”என்று அக்கா இடையிடையே வந்து செல்லம் கொட்டிவிட்டுப்போவாள். போகும்போது தங்கச்சியை சின்னதாய் ஒரு அணைஅணைத்துவிட்டுப் போவாள்.

இப்போதெல்லாம் யாருடனும் அக்கா அதிகம் பேசுவதில்லை. குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அதன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாள். இல்லையென்றால் எங்கோ வெளியில் அவள் பார்வை சிக்கிக்கொண்டு விடும். அத்தான் வேலை முடிந்தாலும் நேரத்திற்கு வீட்டிற்கு வருவதில்லை. அவரைப் பற்றி ஊருக்குள் நிறையக் கதைகள் உலாவின.

இரண்டாவது குழந்தை பிறந்தது. அதுவும் ஆண் குழந்தைதான். அது உரித்துப் படைத்து அக்காவைப் போலவே இருந்தது. “உனக்கொரு பெட்டைச் சட்டை போட்டால் சரியாய் அவள்தான்”என்று அம்மா கொஞ்சுவாள். இடைவெளி விடாமலே மற்றுமொரு குழந்தையையும் பெற்றெடுத்தாள் அக்கா. மூன்றாவதும் ஆண் குழந்தையாக இருந்ததில் அக்காவுக்கு கொஞ்சம் மனச்சிணுக்கம்தான்.

அக்காவின் இடுப்பில் மூன்று குழந்தைகளோடு சதையும் ஏறிக்கொண்டது. கன்னங்கள் அதைத்து கைகால்கள் தடித்து அக்கா அகலமாகிவிட்டாள். ஒரு நாள் தங்கச்சி ஒரு காட்சியைக் கண்டாள். அக்கா குனிந்து அமர்ந்திருக்க அக்காவின் முதுகில் பதிந்திருந்த நீலத் தழும்புகளில் அம்மா எண்ணெய் போட்டுத் தடவிக்கொண்டிருந்தா. ‘பிளெவ்ஸ்’ மறைத்திருந்த இடங்களில் எல்லாம் நீலக் கண்டல்கள். அக்கா விசும்பி விசும்பி சத்தம் எழுப்பாமல் அழுதுகொண்டிருந்தாள். தங்கச்சிக்கு அக்காவைப் பார்க்கப் பார்க்க என்னவென்று சொல்லத்தெரியாத ஒரு உணர்வு எழுந்தது. அக்காவை, அத்தானை எல்லோரையும் விட்டுவிட்டு எங்காவது ஓடிவிடவேண்டும் போலிருந்தது. ஒருவிதமான பயம் மனதுக்குள் வளர்ந்துகொண்டே வந்தது. சற்றே தள்ளி சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள்.

“நீ ஏன் இந்தக் கண்ராவியெல்லாம் பாக்கிறாய்…?”அம்மா அழுதாள்.

“நான் செத்துப்போனால் என்ரை பிள்ளையளை நீ பாத்துக்கொள்ளுவியா?”அக்கா தங்கச்சியைப் பார்த்துக் கேட்டாள்.

“உனக்கென்ன பைத்தியமா?”அம்மா கலங்கிப்போய்க் கேட்டா.

“சொல்லேனடி…”
தங்கச்சி விருட்டென்று எழுந்து வெளியில் வந்துவிட்டாள். யார்மீதென்று தெரியாத கோபம். இருளைப் பார்த்து வெகுநேரம் அழுதுகொண்டேயிருந்தாள். எல்லோருடனும் சிரித்தபடி கதைபேசும் அக்கா நினைவில் தோன்றித் தோன்றி மறைந்துகொண்டேயிருந்தாள்.

அக்கா இப்போதெல்லாம் அடிக்கடி அம்மா வீட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டாள். ஒவ்வொரு தடவை வரும்போதும் ஒவ்வொரு இடத்தில் காயம். ஒருநாள் நெற்றியில் ‘பிளாஸ்டர்’ போட்டிருந்தது. இன்னொரு நாள் கால் வீங்கியிருந்தது. மற்றுமோர் நாள் உதடு கிழிந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருக்க தலைவிரிகோலமாக வந்தாள். மூன்று பிள்ளைகளும் அவளுக்குப் பின்னால் வந்து சேர்ந்தன. அக்கா சாமி அறைக்குள் போய் படுத்தவள்தான். நான்கு நாட்களாக காய்ச்சல் அனலெறிந்தது. அவன் வரவேயில்லை. அவள்தான் போனாள். அக்காவுக்கு அவனைப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை.

மதியச் சாப்பாட்டின் பின் வீடு உறங்கிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தி வந்தது. அக்கா வயலுக்கு அடிக்கும் பூச்சிநாசினியைக் குடித்துவிட்டாள். ஆஸ்பத்திரிக்கு இவர்கள் போனபோது, அக்காவின் வாய்க்குள் ஒரு குழாயை விட்டு எதையோ ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அம்மா தலையிலடித்தபடி உரத்து அழுதா. தங்கச்சியைக் கண்டதும் அக்காவின் கண்களினோரம் கண்ணீர் வழிந்தது. அக்காவின் கைகள் மெதுமெதுவென்றிருந்தன.

“என்ரை பிள்ளைகளைப் பாத்துக்கொள்”

மெதுவாய் மிக மெதுவாய் உதடுகோணச் சொன்ன அக்காவின் வார்த்தைகளை அவள் புரிந்துகொண்டாள். வாயிலிருந்து குபுக்கென்று புறப்பட்ட திரவம் கட்டிலை நனைத்தது. அது தாங்கமுடியாத நாற்றமாக இருந்தது. அக்காவின் வாழ்க்கையைப் போல.

அக்கா அருமையான கதைசொல்லி. இப்போதும் நட்சத்திரங்களுக்கிடையில் அமர்ந்து அக்கா கதைசொல்லிக்கொண்டிருப்பாளென்றே தங்கச்சி நம்பிக்கொண்டிருக்கிறாள்.
-- --

இந்தக் கதையோடு தொடர்புடைய பிற்குறிப்பு: பதினாறு வருடங்களுக்கு முன் இதே நாளில் அக்கா தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனாள்.
திதி: 10.07.1993

37 comments:

நேசமித்ரன் said...

மிக அழுத்தமான கதை
நெஞ்சைப் பிழியும் வலியை எளிய சொற்களால் வடித்திருகிறீர்கள்
அதிலும் கவித்துவம் இழையோடுகிறது //பாவனைச் சமையல்//
மனச்சிணுக்கம்//
இது மெய்யான நிகழ்வென்றால் எத்துணை வலிகள் சுமந்து கொண்டிருக்கிறது உங்கள் பேனா...

தமிழ்நதி said...

நேசமித்ரன்,

அவ்வளவும் வரிக்குவரி உண்மையே. இதுதான் நான் செலுத்தக்கூடிய அஞ்சலி:(

Sai Ram said...

அக்காக்களின் வாழ்க்கை தாவணிக்கு பின் மாறி தான் போகிறது. தேவதையாய் சுற்ற தொடங்குபவர்கள் பெரும்பாலும் சோக கதைகளாய் பின்னுக்கு மெள்ள தள்ளபட்டு போவது தான் நமது சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கும் அவலம். உங்கள் எழுத்து வலிமையாய் இருக்கிறது.

Anonymous said...

இரண்டு தடவை படித்தேன். எங்கிருந்தோ ஒரு சோகம் வந்து என்னை அப்பிக் கொண்டிருக்கிறது.

இப்போது அந்த குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா?

jerry eshananda said...

தமிழே,நதியே,வணக்கம்.பொதுவாக வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத வாழ்வின் கசப்பு நிறைந்த நினைவுகளை, எழுத்துகளில் பிரசவிப்பது,அந்த படைப்பை சாகா வரம் பெற்றதாக மாற்றுகிறது. இது உங்களின் பதினாறு ஆண்டு கால தவம். அக்காவின் பெயரை சொல்லியிருக்கலாமே? என நினைத்தேன்,மீண்டும் படித்தேன்,அக்கா அக்கா என்று அறுபத்தி இரண்டு தடவை அழைத்து அக்கா தங்கை உறவை புனிதமாக்கி இருப்பது அசாதாரணம். எந்த வார்த்தைகளை போட்டு நிரப்பினாலும் அக்கா என்ற ஒரு சொல் தரும் உணர்விற்கு ஈடாகாது.மேலும் நீங்கள் இந்த கையாலாகாத தமிழகத்தை விட்டு செல்வது இந்த படைப்பை போல வலியை தருகிறது.இன்னும் ஒருமுறை யோசிக்கலாமே. நன்றி

Ayyanar Viswanath said...

அக்காவிற்கு அஞ்சலிகள் தமிழ்...

soorya said...

அன்புத் தோழிக்கு,
மிக மிக நன்றாக வந்திருக்கிறது.
நீங்களும் ஒரு கதை சொல்லியே..!
...
என் மனசில் பட்டதைச் சொல்கிறேன் ஓகேயா.
1. தமிழ் நாட்டு மொழிநடையும், ஈழத்து மொழியும் ஒருங்கே கைகூடிய படைப்பு இது.
2. ஈற்றில் பிற்குறிப்பைத் தவிர்த்திருக்கலாம்.
3. பொதுமொழி தமிழிலும் சாத்தியம்..என்பதற்காக, கதை உண்மையாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
...
என்னவோ போங்க, நல்லா எழுதுறீங்க.
ஆணாதிக்கத்தை உடைத்தெறியும் போது..,கொஞ்சமேனும் பெண்ணாதிக்கத்தையும்(I mean psudo feminism) இவற்றையும் கருத்தில் கொள்ளவேணும்.
...
எது எப்படியாயினும்.
இது தன்னளவில் ஒரு சிறந்த கதையே..!
நன்றி.

தமிழ்நதி said...

நன்றி சாய்ராம்,

ஆம் திருமணத்தின்பின் பெண்களின் வாழ்க்கை தலைகீழாகிவிடுகிறது என்றுதான் நானும் நினைக்கிறேன். தனிமனுசியிலிருந்து குடும்பமனுசியாக மாற்றம் பெறும்போது ஏற்படும் திணறல்கள்...

அனானி நண்பரே,

அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகி இப்போது என்னுடன்தான் இருக்கிறார்கள். அண்மையில் கீற்றுவில்கூட குணாளன் என்றொருவர் எழுதியிருந்தார் நினைவிருக்கிறதா? 'தமிழ்நதி தன் உறவுக்காரப் பிள்ளைகளைப் பத்திரமாகக் கூட்டிவந்துவிட்டார் என்று'அந்தப் பிள்ளைகள் இவர்கள்தான். எப்படி தனிமனித வாழ்வு அரசியலாகிறது என்று பாருங்கள். வாழ்வும் ஒருவகையில் அரசியல்தான் போல..

ஜெரி,

'அக்கா'என்ற சொல்லுக்கு உண்மையில் இணையில்லை. அந்தப் பொச்சம் தீராமல் கணவரின் அக்காவை 'அக்கா'என்று அழைத்தேன். எனது கணவரின் தம்பிகளும் என்னை 'அக்கா'என்றுதான் அழைக்கிறார்கள்.. அந்தச் சொல் 'அண்ணி'யை விட நன்றாக இருக்கிறது இல்லையா?

தமிழகத்தை விட்டுச் செல்வது எனக்கும் வலி தருவதாகவே இருக்கிறது. சுவரில் அடிபட்ட பந்தாக அன்றேல் வீட்டை விட்டுத் தூக்கிப்போய் தொலைவில் விடப்பட்ட பூனைக்குட்டியாக மீண்டும் வருவேன் என்றே நினைக்கிறேன்.

அய்யனார்,

இதை அஞ்சலிப் பதிவாக நாம் பார்க்கவேண்டாமென்று பிறகு தோன்றியது. 'ஐயோ பாவம்'என்ற இரக்கமும் வேண்டாம். ஒரு தனிப்பெண்ணுக்கு நடந்ததை பொதுவான பிரச்சனையாகப் பார்க்கலாம். வெளியில் உள்ளவர்களுடன் நாம் எத்தனை நாகரிகமாகப் பழகுகிறோம். லேசாகத் தட்டுப்பட்டாலும் 'சொறி'சொல்கிறோம். (இங்கு சாரி) ஆனால், வீட்டுக்குள் நமது சகவுயிரிகளை காலால் உதைக்கவும், தலையைச் சுவரில் மோதவும், தலைமயிரைக் கையில் கொத்தாகப் பற்றி கரகரவென்று சுற்றவும் உரிமை எடுத்துக்கொள்கிறார்கள். நான்கு சுவர்களுக்குட்பட்ட இந்த வன்முறை சகிக்க முடியாததாக இருக்கிறது. அதைப் பற்றி நாம் பேசலாம் அய்யனார்.

சூரியா,

தமிழ்நாட்டு மொழியும் ஈழத்து மொழியும் கலந்திருக்கிறதா... எழுதும்போது என்னையறியாமலே அது நடந்திருக்கிறது. ஒன்றில் கவனமாக இருக்கிறேன். வீட்டிலும், எனது ஈழத்து நண்பர்களுடனும் 'சுத்த'ஈழத்தமிழ் பேசுவதிலிருந்து வழுவுவதில்லை. இங்கு வந்து மூன்றாண்டுகளாகியும் இன்னமும் அதே பாணிதான் (யாழ்ப்பாணி அல்ல:)

பிற்குறிப்பு... அது எனது ஞாபகத்திற்காக என்று வைத்துக்கொள்ளுங்கள். பதிவு என்பது எனது நினைவுகளின் சேமிப்பு. நாட்குறிப்பு மாதிரியும். பிறகொரு காலம் எடுத்துப் பார்க்கும்போது பழைய புகைப்பட அல்பம் மாதிரி சுவாரசியமாகவும் இருக்கும்.

கதையைக் கொஞ்சம் செம்மைப்படுத்தவேண்டும் சூரியா. நேற்றே போடவேண்டுமென்று எழுதியது.

நீங்கள் குறிப்பிடும் 'பெண்ணாதிக்கம்'பற்றியும் அவசியம் கதைக்கவேண்டும். அதை நானே சில வீடுகளில் பார்த்திருக்கிறேன். ஒருவரை மற்றவர் ஆதிக்கம் செய்வது தவறு.- பெண்ணோ ஆணோ...

தவறாமல் வந்து பின்னூட்டமிடுவதற்கு நன்றி.

Unknown said...

மனம் கனத்துப் போய்விட்டது தமிழ். என் தங்கையின் நினைவு வந்துவிட்டது. அவளை நான் இழந்தது ஒரு இருள் நிறைந்த செப்டம்பர் மாதம் 23 திகதி. ஆண்டுகள் கடந்தாலும் அந்த நாளும் அதன் நினைவுகளும் மனதை பிசைந்து உயிரை வதைக்கிறது. நம்மை விட்டுப் பிரிந்துவிட்ட ப்ரியமானவர்களின் இருப்பு நம்முள்ளே இருந்துகொண்டுதானிருக்கும்.. அவளுக்குப் பிடித்த நிறம் ரத்தச் சிவப்பு. நம் சகோதரிகள் தங்கள் வாழ்வே தாங்களே முடித்துக் கொண்டவர்கள்; சில சமயம் நினைத்துப் பார்க்கையில் தற்கொலை கோழைத்தனம் இல்லை, அதை செய்வதற்கு மிகப் பெரிய தைரியமும் தீர்மானமும் தேவை (நான் நியாயப் படுத்தவில்லை) அவர்கள் கோழைகள் வாழ தைரியமற்றவர்கள் என்று மற்றவர்கள் பேசும் போது சங்கடமாக இருக்கும். சாவை புத்தியில் வைத்துக் கொண்டு நடைபிணமாக வாழப்பிடிக்காததால் இறப்பை தன் முடிவாக எடுத்துக் கொண்ட இவர்கள் இருவரும் நிலையான நட்சத்திரமாய் எம் மன வானில் நிலைத்திருப்பார்கள் தமிழ்.

V.செல்வகுமார், மைசூர் said...

அன்புள்ள தமிழ்நதி , உங்கள் இந்த பதிவு மனதை பிழிந்து விட்டது. உங்களுடைய தமிழ் நடை பெரும்பாலான தமிழ் பதிவர்களின் எழுத்தை விட மிக நன்றாக உள்ளது. நீங்கள் சென்னையை விட்டு செல்ல வேண்டாம்.
மேலும் எனக்கு உங்களுடன் ஒரு முறை பேச வேண்டும் என்று ஆவல் உள்ளது. என் மீது நம்பிக்கை இருந்தால், என்னை உங்களுடைய சகோதரனாக எண்ணி உங்கள் மொபைல் no. ஐ என்னுடைய e-mail முகவரியான selvaa67@gmail.com க்கு தெரிவிக்கவும்.
மிக்க அன்புடன்
V.செல்வகுமார், மைசூர்

Anonymous said...

//சில சமயம் நினைத்துப் பார்க்கையில் தற்கொலை கோழைத்தனம் இல்லை, அதை செய்வதற்கு மிகப் பெரிய தைரியமும் தீர்மானமும் தேவை (நான் நியாயப் படுத்தவில்லை) அவர்கள் கோழைகள் வாழ தைரியமற்றவர்கள் என்று மற்றவர்கள் பேசும் போது சங்கடமாக இருக்கும். //

உலகம் எப்போதும் நேர் திசையையே பார்க்கும். நொந்து நூலாகி தற்கொலை முடிவை எடுப்பவர்களுக்கு இறுதியில் மிஞ்சுவது ஏளனமும் அறிவுரைகளுமே. முடிவு நிறைவேறாமல் போய் விட்டால் அவ்வளவு தான், அறிவுரைகளே சொல்லியே நம்மை அணுவணுவாக கொல்வார்கள்.

Anonymous said...

நீங்கள் சென்னையை விட்டு ஒரு நல்ல ஊருக்கு செல்வதாக இருந்தால் என் வாழ்த்துக்கள். சென்ற பின் எழுதுவதை தொடர்வீர்களா?

அப்புறம், வீணையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

S.S. JAYAMOHAN said...

தமிழ் நதி அவர்களுக்கு,

அக்கா-தங்கை பாசம் உன்னதமானது என்பதை அனுபவத்தில்
உணர்ந்தவன். என் மனைவிக்கும், அவளுடைய அக்காவிற்கும்
பதினெட்டு வயது வித்தியாசம். இருவருக்கும் உள்ள அன்பு, பிணைப்பு, நேசம், என்னை நெகிழ வைக்கும்.

இந்த உங்கள் கதையும் என்னை பாதித்தது.
அழமான, அழுத்தமான வார்த்தைகள்.

அன்புடன்
எஸ். எஸ். ஜெயமோகன்

பிரம்மபுத்ரன் said...

'சுத்த'ஈழத்தமிழ்//

அப்படியொன்று இருக்கிறதா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்... வேண்டுமானால் சுத்த யாழ்ப்பாணத்து தமிழ் சுத்த மட்டக்களப்பு தமிழ் இருக்கலாம்..

அல்லது இதுமாதிரியான ஏதாவது ஒன்றைத்தான் ஈழத்துதமிழ் என பொதுமைப்படுத்துகிறீர்களா.. குறிப்பாக தமிழகத்தில் ஈழத்துதமிழ் என அறியப்பட்டது யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கே..

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க தமிழ்நதி..

ஒரு கதைசொல்லியின் பாங்கோடே இது அமைந்துள்ளது. தனது துயரத்தை படிப்பவரின் மடியில் இறக்குவது என்பது எளிதானதல்ல. இத்தனை பின்னூட்டம் வழியே அது சரியான இலக்கை அடைந்திருக்கு.
மிக நெகிழ்வான உறவுகள் பற்றி எழுதுகையில் நம் மொழியும் அவ்வாறே ஆவது இயல்பே. அக்கா குறித்த கதைகள் அனேக தங்கைகளிடமும் தம்பிகளிடமும் இருக்கவே செய்கின்றன. எனது அக்காவின் கல்விக்கு எமனாக வந்தவன் நான். என் அக்கா 6 வகுப்பு படிக்கையில் நான் பிறந்தேனாம் என்னை தூக்கிவைத்துக்கொள்ளவேண்டி என் அக்கா படிப்பை துறக்கவேண்டியதாயிற்று. என் அக்கா வீட்டிற்கான சமையல் பொருட்களின் பட்டியல் எழுதும்போது வரும் எழுத்துப்பிழைகளை பார்க்கையில் உறுத்தும்.

ஒரு சிறு விமர்சனம்.
இப்பதிவில் அக்கா மட்டுமே வளர்கிறாள்
தங்கையின் வளர்ச்சி குறித்த போக்கே இல்லை.

தமிழ்நதி said...

உமா,

உங்கள் தங்கையின் மரணத்தைப் பற்றி என்னோடு கதைத்திருக்கிறீர்கள். எத்தனை ஆண்டுகளானாலும் மறையாத வலி அது. காலப்போக்கில் அதன் கனம் குறையக்கூடும். ஆனால், நிச்சயமாக அது நமக்குள் இருந்துகொண்டேயிருக்கும். நான் எனது அக்கா இறந்ததை நினைத்துக் கவலைப்படுவதிலும் பார்க்க, உயிர் பிரியும் நேரம் "என்னைக் காப்பாற்றிவிடுங்கள்"என்று கேட்டதை நினைத்து கலங்குவதே அதிகம். அந்த வலி விபரிக்கவொண்ணாதது.

செல்வகுமார்,

தொலைபேசி இலக்கம் அனுப்பிவைக்கிறேன். நாம் பேசலாம். ஒன்றும் பிரச்சனையில்லை.

அனானி நண்பரே,

நினைத்துப்பாருங்கள்... "இன்னும் இரண்டுநாட்கள்தான் இந்த உலகத்தில் நீங்கள் வாழலாம்"என்று எமக்கொரு மீறமுடியாத கட்டளை வருகிறதென்று வைத்துக்கொள்வோம். உலகம் சட்டென எவ்வளவு அழகாகிவிடும். மரணபயம் நம்மைச் சூழ்ந்துகொள்ளும். அந்த மரணபயத்தையும் விஞ்சியதாக வாழ்வின் குரூரம் இருக்கும்போதுதான் நாம் தற்கொலையைத் தேர்கிறோம்.. உண்மையில் அதற்கு பெரிய மனத்திண்மை வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

ஆ... இந்த சமூகம்! இந்த சமூகம்!

--

அனானி இல 2,

எங்கிருந்தாலும் எழுதுவேன்.

வீணையையா? இல்லை... நான் என்னோடு கூழாங்கற்களையே எடுத்துச்செல்வேன்:)

---

ஜெயமோகன்,

எனக்கும் அக்காவுக்கும் இடையில் வயது வித்தியாசம் குறைவு. அவள் எனக்குத் தோழியாகவும் இருந்தாள். கொஞ்சக்காலம் அழுதுகொண்டே இருந்தேன். இப்போது... ம்.. காலம் நல்ல மருத்துவன்தான்.

பிரம்மபுத்திரன்,

பின்னூட்டங்களைக்கூட அவ்வளவு உன்னிப்பாகப் படிக்கிறீர்கள் போல..:) 'சுத்த ஈழத்தமிழ்'என்று சொன்னதற்கு அந்தப் பின்னூட்டத்தில் பெரிய ஆழமான அர்த்தங்கள் இல்லை. தமிழகத் தமிழ் கலவாத ஈழத்தமிழ் என்பதையே அப்படிக் குறிப்பிட்டேன். 'சுத்தத் தமிழ்'என்று ஓரளவுக்குச் சொல்லமுடியுமென்றால், எனது சிற்றறிவின்படி திருகோணமலைத் தமிழைத்தான் (நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள் என்றபோதிலும்) சொல்வேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். அவரவர்க்கு அவரவர் பேச்சுமொழி இனிப்பு.

விஷ்ணுபுரம் சரவணன்,

உங்கள் அக்காவை நினைக்க... இதில் என்ன சொல்லைப் போடுவது... 'பாவம்'என்றால் பாவம் அல்லவா?

"இப்பதிவில் அக்கா மட்டுமே வளர்கிறாள்
தங்கையின் வளர்ச்சி குறித்த போக்கே இல்லை.""

ஒருவேளை கதைசொல்வது தங்கை என்பதால் அக்காவையே அவள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டாளோ என்னவோ...அக்காதான் கதையின் பிரதான பாத்திரம். ஆனாலும் தங்கை வளர்ந்தாள்.. இப்போது உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறாள்.:)

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்ம்...

வெள்ளந்தியாய் இருக்கிற அக்காக்கள் அனேகம்பேரின் வாழ்க்கை இப்படியாகுவது நிகழத்தான் செய்கிறது...


தங்கச்சியும் நல்ல கதை சொல்லிதான்.

kalyani said...

இதே போல் ஒரு வாழ்க்கையையே எனது அக்காவும் வாழ்கிறாள் என்பதை நினைக்கும் போது
மனசு பாரமாகிறது ;(

அரங்கப்பெருமாள் said...

//..அவர்கள் வீட்டுச் சுவர்கள் பள்ளிக்கூடப் பிள்ளைகளாகி, பூவரசந்தடியின் பச்சைத்தழும்புகளைத் தாங்கின...//

//அது தாங்கமுடியாத நாற்றமாக இருந்தது. அக்காவின் வாழ்க்கையைப் போல. //


மனச தொட்டுடுச்சு.. இனம் புரியாத ஒரு வலி... மிக அருமை

நாதாரி said...

வலிகளின் ஊடே தெரிக்கின்ற ரத்தம் யாருடையது

Unknown said...

tamilnathy,

YOu are an excellent writer. Keep writing. No need to edit a.thing in that story. I know its yr pain. You have been lodging it too long. That pain is pricking you to write. P.S is also apt. Don't change a.thing.

YOu are not onl a good writer but you have lived a great life.

Go ahead.

thamarai

Deepa said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஆசையுடன் அக்கா தங்கை கதையை வாசிக்க ஆரம்பித்து அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறேன்.
நானும் உங்கள் அஞ்சலியில் சேர்ந்து கொள்கிறேன்.

மாதவராஜ் said...

கண்கள் கலங்குகின்றன.... வார்த்தைகள் வரவில்லை..

Unknown said...

அக்காவின் கதைசொல்லி திறமை தங்கையிடமும் ஒளிந்திருக்கிறது. உங்கள் அக்காவிற்கு எனது அஞ்சலிகள்.

தமிழ்நதி said...

'தங்கச்சியும் நல்ல கதைசொல்லிதான்'என்று சொன்ன தமிழன் கறுப்பிக்கு நன்றி. என்றாலும் அருகில் இருந்து கதை கேட்டவள் என்றவகையில் என்னைவிட அக்காதான் நல்ல கதைசொல்லி என்ற கருத்தில் எனக்கு மாற்றமில்லை. அக்காவின் வாயிலிருந்து விமானம் புறப்படும். வில்லன் பேசுவார். கதாநாயகி கதறிக் கதறி அழுவாள். எனக்கென்றால் அது கைவராதாம்.

வாருங்கள் அரங்கப்பெருமாள்,

வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

நாதாரி,

வலி என்னுடையது. வலியும் இரத்தமும் என் அக்காவுடையது.

அன்பின் தாமரை,

உங்கள் பெயரைப்போல் மென்மை மனமும். நீங்கள் பாராட்டும்போது உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு விஷயம் உங்களை நேரில் பார்த்தபோது சொல்லியிருக்கிறேன். "நீங்கள் என் அக்காவை நினைவுபடுத்துகிறீர்கள்"என. வயதால் நீங்கள் இளையவர். ஆனால், என் அக்காவின் முகத்தோற்றத்தில் ஏதோவொரு சாயல் உங்களிடத்தில் இருக்கிறது. சிரிப்பதா? பேசுவதா?எதுவோ ஒன்று.

நன்றி தீபா,

பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்துவிட்டதா? காலம் எல்லாவற்றையும் மறக்கடிக்கும் தீபா. (அண்ணாவின் மகள் பெயரும் தீபாதான். பிரதீபா) பழைய பதிவுகள் சிலவற்றைத் தூக்கிவிட்டீர்களா வலைப்பூவிலிருந்து?

நன்றி மாதவராஜ்,

எப்போதும்போல வந்துபோய்க் கொண்டிருங்கள். உங்களைப்போல யாரோ வாசிக்கிறார்கள் என்ற நிறைவில், நினைவில் எழுதுகிறோம்:)

ராஜா,

பூனைக்குட்டியை எப்படி வலைப்பூவில் இணைப்பது என்று விபரமாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தீர்கள்.மிக நன்றி. உங்கள் பக்கம் போய்ப் பார்த்தேன். நாம் அனைவருக்குள்ளும் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. சொல்லத் தெரிந்த சிலருள் நீங்களும் ஒருவர்.

இளைய அப்துல்லாஹ் said...

இப்போதும் நட்சத்திரங்களுக்கிடையில் அமர்ந்து அக்கா கதைசொல்லிக்கொண்டிருப்பாளென்றே தங்கச்சி நம்பிக்கொண்டிருக்கிறாள்.


உண்மையில் மனது கனத்துப்போனது

butterfly Surya said...

கதை சொல்லி என்றவுடன் ஆசையாய் வாசிக்க வந்தேன்.

கடைசியில் ஆழ்ந்த சோகம் பற்றி கொண்டு சிறிது நேரம் மெளனமே மிஞ்சியது.

எல்லா வலிகளையும் சுமந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கையா..

வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை.

butterfly Surya said...

இந்த பதிவை காண அன்புடன் அழைக்கின்றேன்.

http://mynandavanam.blogspot.com/search/label/Blogger%20Award

Admin said...

முதலில் சிறந்த பதிவருக்கான விருது கிடைத்தமைக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

நல்ல கதை, கதை சொல்லும் விதம் எல்லோரையும் கவரகூடிய மாதிரி இருக்கின்றது....
தொடருங்கள் வாழ்த்துக்கள்...

நேசமித்ரன் said...

http://4.bp.blogspot.com/_ps_cLyiVbhA/Sl4pPsjVxXI/AAAAAAAABW4/9rS-xbXyngM/s1600-h/tamil+nadhi.jpg

உங்கள் படைப்புகளை தொடர்ந்து வாசிப்பவன். உங்கள் படைப்புகளின் ஊடாக கசியும் ஈரமும் வலியும் எனக்கும் நேர்ந்த காரணங்களால் உங்கள் படைப்புகளோடு
ஒரு அணுக்கத்தினை உணர்பவன் என்கிற வகையில் ஒரு ரசிகனாக வாசகனாக சக பதிவனாக உங்களுக்கு விருது கிடைத்திருக்கும் இந்த செய்தி அளப்பரிய மகிழ்வை நெகிழ்வை தருகிறது தமிழ்நதி

வாழ்த்துக்கள்

நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் வேறேதும் சொல்லத் தோன்றாத ஏதோ ஒரு பாசமும் பரவசமும் ஒருங்கே வைக்கப் பெற்ற மனநிலை இது

''கூலாங்கல் சிற்பத்தை விட அதிகம்
பிரியத்திற்குரியதாகிறது
அதனுள் இன்னும் மீதமிருக்கும் நதிக்காக...

இளவேனில் நிலாப்பெண்
உரைநடையிலும் கவிதை
நாட்டியபெண்ணின் நடையென

பொருதிப் பெற்றதல்ல
வெட்சிப்பூ ஆனால்
போராட்டங்கள் இல்லாமலில்லை

வாழ்த்துக்கள் சகோதரி...!"

பா.ராஜாராம் said...

மிக அழுத்தமான கதை சொல்லி தமிழ் நதி
நீங்களும்.அழுத்தங்களை,பகிர்ந்து தரும்போது ஏற்படும்
தவிர்க்க இயலாத உணர்வு பிரவாகத்தை"அழுத்த"
இயலவில்லை எனில்,கதை சொல்லிகளின் ஓட்டத்தை
பிடிக்க இயலாது போய்விடும் கேட்பவர்களுக்கு.
அவ்வளவு ரணங்களை கடந்த சோர்வு காட்டாது
வாசிப்பவர்களின் உணர்வுகளையும் கூட,கூடவே
எடுத்து செல்கிறது,மொழி!
தனித்துவமான பிரயோகம்!
நெகிழ்வான அஞ்சலியும்,நிறைய அன்பும் தமிழ் நதி..

இரவி சங்கர் said...

உறைந்தே போனேன் நான், அக்காவுக்கு அஞ்சலி.

அன்புடன் அருணா said...

எதுவொன்றும் சொல்லாமல் மௌனமாக இருக்கவேண்டும் போலிருக்கிறது படித்தவுடன்.......

தமிழ்நதி said...

கல்யாணி,

உங்கள் பின்னூட்டம் எங்கோ comment moderation க்குள் சிக்கிக்கொண்டிருந்தது. இன்று தற்செயலாகக் கண்டுபிடித்துப் போட்டேன். ஆம். உங்கள் துயரம் எனக்குப் புரிகிறது. நானும் அறிந்தேன். 'கிளியை வளர்த்து...'என்பது நினைவில் வந்தது.

இளைய அப்துல்லாஹ்,

உங்கள் கட்டுரைகள் படித்திருக்கிறேன். கவிதைத் தொகுப்பு 'பிணம் செய்யும் தேசம்'வாங்கிவைத்தபடி இருக்கிறது. ஆற அமர இருந்து வாசிக்கவேண்டும்.

வண்ணத்துப்பூச்சி,

ஆம் எல்லா வலிகளையும் சுமந்துகொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை. இல்லையென்றால் இது சொர்க்கம்.(அப்படி ஒன்று இருந்தால்)

'நந்தவனம்'போய்ப் பார்த்தேன். விருது பதிவையும். நன்றி நண்பரே.

நன்றி சந்ரு,

'இம்மாத சிறந்த வலைப்பதிவர்'என்று மாற்றிச் சொல்லுங்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்குக் கொடுக்கிறார்கள். இளைஞர்கள் சிலர் சேர்ந்து மிக நேர்த்தியாக சில வேலைகளைச் செய்கிறார்கள். மேலதிக விபரங்களுக்கு thamizhstudio.com பாருங்கள்.

நன்றி நேசமித்ரன்,

வாழ்த்துக்கும் அக்கறைக்கும். பெயருக்கேற்றபடி நேசத்தைப் பொழிகிறீர்கள். வலைப்பூவில் எழுதவந்து நிறைய நண்பர்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி.

"'கூழாங்கல் சிற்பத்தை விட அதிகம்
பிரியத்திற்குரியதாகிறது
அதனுள் இன்னும் மீதமிருக்கும் நதிக்காக..."

நதி எவ்வடிவில் இருப்பினும் நதிதானே..!

நிறைய எழுதுகிறேன் நேசமித்ரன். இப்போது ஒரு கவிதைத்தொகுப்பு வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். அதனால் அடிக்கடி பதிவுகள் இடுவதில்லை. அடுத்த மாதத்திலிருந்து 'ஐயோ வேண்டாம்'எனுமளவிற்கு எழுதுவேன். இடம், சூழல் எல்லாம் வேறாக இருக்கும்.

வாருங்கள் ராஜாராம்...

உங்களைப் பற்றி மாதவராஜ் பதிவில் படித்தேன். அழுத்தத்தை எத்தனை விதமாக அழுத்தியிருக்கிறீர்கள்...! நீங்கள் எல்லோரும் சொல்வதைக் கேட்டபிறகு எனக்குக்கூட நானும் நன்றாகக் கதைசொல்கிறேனோ என்றொரு சந்தேகம் வந்துவிட்டது:)

இரவி சங்கர்,

நன்றி. குடும்ப வன்முறை என்பது உங்களைச் சூழ்ந்திருக்கும் பெண்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதைக் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள். பல தனிமனிதர்கள் இணைந்ததுதானே இந்தச் சமூகம். எங்கள் பிள்ளைகளாவது பெண்களைத் துன்புறுத்தாதிருக்கட்டும்.(பெண்களும் ஆண்களை)

அருணா,

மெளனம் வார்த்தைகளைக் காட்டிலும் கனமானது.

இரவி சங்கர் said...

பதிலுக்கு நன்றி தமிழ்நதி,

கேட்கவே மறந்து போனேன், அந்த பொத்தான் என்ன செய்து கொண்டிருக்கிறது?

கதிரவன் said...

கதையைப் படித்தவுடன் மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருந்தது தமிழ்நதி

நீங்கள் சொல்லியதுபோல, குடும்பத்தில் உள்ள அதிகாரம்/வன்முறை அடுத்த தலைமுறை சமூகத்திலாவது குறையட்டும்

பதி said...

இந்த இடுகையினை ரீடரின் உதவியுடன் முன்பே படித்திருந்தாலும், இன்று பின்னூட்டங்களையும் காண்பதற்காக இந்த வருகை...

கிராமப்புரங்களில், நான் நேரடியாக கண்ட பல குடும்ப வன்முறைகளை நினைவூட்டியது.... மனம் அமைதி கொள்ளட்டும்....