ஆசிரியர்:நாகார்ஜூனன்
வெளியீடு: ஆழி பதிப்பகம்
‘திணை இசை சமிக்ஞை’என்ற பெயரிலான வலைத்தளத்தில் நாகார்ஜூனனால் எழுதப்பட்ட ஆக்கங்கள், அவரால் வழங்கப்பட்ட நேர்காணல்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புகள், ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் ‘ஆழி’பதிப்பகம் வெளியிட்டிருந்தது. பித்தான்களிலிருந்து பேரழிவுகள் வரை அந்நூலில் அலசப்பட்டிருந்தது. தேடலும் சோம்பேறித்தனமும் ஒன்றாக இயங்கும் மனநிலையுடைய வாசகருக்கு ‘நளிர்’பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தைத் தருகிறதெனில் மிகையில்லை. வரலாற்றில் நாமறியாத பக்கங்களை, மனதின் பித்தங்களை, அதிகாரச் சுழலை, அதில் சிக்கி அலைவுறும் சாதாரண மனிதர்களை, இசங்களை, இலக்கியத்தை கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறார். என்னளவில், ஒரே சரட்டில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் நாவலைக் காட்டிலும் சுவாரசியம் மிகுந்ததாக அந்த வாசிப்பு அனுபவம் அமைந்திருந்தது. எதைத் தேடுகிறோமோ அதையே கண்டடைகிறோம் என்பதற்கிணங்க, இலங்கையின் இனச்சிக்கல் குறித்து இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் நாகார்ஜூனனின் கருத்துக்கள் என்னை ஈர்த்தன. உடன்படலும் முரண்படலுமாக எழுத்துக்களினூடே பயணித்தேன். இலக்கியவாதி, விமர்சகர், ஊடகவியலாளர், அறிவியலாளர், ஆய்வாளர் ஆகிய பல்வகை ஆற்றல்களையும் அனுபவங்களையும் கொண்ட ஒருவரது பகிர்வுகள் சிந்தனைத் தளத்தை விரிவுசெய்ய வல்லன என்பதில் ஐயமில்லை.
இலங்கையின் பேரினவாத அரசாங்கம் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை நிகழ்த்தி, ஏறத்தாழ மூன்று இலட்சம் தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்துவைத்திருக்கும் இந்நிலையில், உணர்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டு அதுசார்ந்த எந்தவொரு எழுத்தையும் வாசிக்கமுடிவதில்லை. அவ்வப்போது கண்ணீரற்ற விசும்பலொன்று தொண்டைக்குள்ளிருந்து குமுறி எழுந்ததை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அதிலும், அதிகார வர்க்கத்தின் கொடுங்கரங்கள் சாதாரணர்களின் இருதயக்குலையைப் பிய்த்தெறிவதற்கிணையான குற்றங்களைக் கேட்பாரன்றி நிகழ்த்திக்கொண்டிருப்பதனை நாகார்ஜூனன் எழுதும்போது, கோபம் பெரும் சூறையென ஆக்கிரமிக்கிறது. எமது கோபத்தின்முன் ‘கையாலாகாத’என்ற வார்த்தையை அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஈழம் குறித்து நளிரில் பேசப்பட்டிருக்கும் விடயங்கள், குரூரப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட மே, 2009க்கு முந்தையவை என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மைப் பிரிந்துபோனவர்களின் முகச்சாயலுடைய யாரையாவது தெருவில் பார்க்க நேரும்போது, ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு ஏக்கம் வழியும் நெஞ்சத்துடன் போவதுபோல, இப்போது வாசிக்கும் எல்லா எழுத்துக்களிலும்-பேச்சுக்களிலும் நாடு பற்றிய ஞாபகமூட்டல்கள் வந்துபோகின்றன. ஒப்புவமைகளில் ஆழ்ந்து துயருறுகிறது மனம். நாகார்ஜூனனால் தேசம்.நெற் இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டிருந்த நேர்காணலில் மார்க்ஸியத்தின் தோல்வி பற்றிக் குறிப்பிடுகையில் இவ்வாறு சொல்கிறார்:
“அறிவுப்பரப்பின் அதிகார நாட்டம் வரலாற்றில் அடைந்த அறத்தோல்வி, கலைத்தோல்வி அதுன்னு சொல்லலாம். மார்க்ஸியத்துக்கு நாமறிந்தும் அறியாமலும் கிடைத்த வெற்றியும் தோல்வியும் மனிதகுல வரலாற்றில் எல்லா உயர்ந்த இலட்சியங்களுக்கும் கிடைத்ததே என்பது நமக்கு ஒருபுறம் ஆறுதலைத் தரலாம். மறுபுறம் பதற்றத்தையும் தரலாம்.”
இப்போது அதிகளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ‘அறிவற்ற அதிகாரம்’என்ற பதம் எனக்கு ஞாபகத்தில் வந்தது. அறிவும் அதிகாரமும் எதிரெதிர் திசைகளில் பயணிக்கும் தன்மையன போலும்.
ஒரு ஊடகத்தின் அரசியல்தன்மையும் சார்புநிலையும் எவ்விதமெல்லாம் கட்டமைக்கப்படுகிறது என்பதை, பி.பி.ஸி பற்றி அவர் சொல்லியிருப்பதிலிருந்து உணரக்கூடியதாக இருந்தது. ஒரு ஊடகவியலாளன் அதிகாரங்களுக்கெதிரான வார்த்தைகளைப் பேச முற்படுகையில் அவை கொதித்தெழுந்து உயிர் குடிக்கும் கொடுமையைக் குறித்து வருத்தப்பட்டிருக்கிறார். ஊடகவியலாளர்களான நிமலராஜன், அய்யாத்துரை நடேசன், தராக்கி சிவராம் போன்றவர்கள் இலங்கையில் பலிகொள்ளப்பட்டதை விசனத்தோடும் கசப்புணர்வோடும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார். கருத்துக்களுக்காகக் கொல்லப்பட்ட, நாட்டைவிட்டுத் தப்பியோடிய, சிறையிலடைக்கப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, வித்தியாதரன், யசிதரன் தம்பதிகள், திஸநாயகம், றிச்சர்ட் டீ சொய்சா, சுனந்த தேசப்பிரிய என நீண்ட பட்டியலொன்று மனதிலோடியது.
நடுநிலை என்ற சொல்லின் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்ட ஒரு சூழலில், நாகார்ஜூனன் பேசிச் செல்லும் சில விடயங்கள் ‘நடுநிலை’குறித்த மீள்சிந்தனையைக் கோரிநிற்கின்றன. இலங்கைப் பேரினவாத அரசின் கொடுமைகள் குறித்து கசந்துபேசும் அதே குரலில் விடுதலைப் புலிகளையும் சாட அவர் மறக்கவில்லை.
“பொதுவாக இலங்கையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர் தாயகம் வரணும்। அதுக்கு உலக அரங்கில் ஒரு ஜனநாயக அங்கீகாரம் வேண்டும். தமிழர்களின் வரப்போகும் சமுதாயம் ஜனநாயக, பன்முக அமைப்பில் இருக்கவேண்டும். அதில் இஸ்லாமியர் உள்ளிட்ட பல சிறுபான்மையினர் எல்லா உரிமைகளுடனும் வாழவேண்டும்ங்கறதை ஏற்ற மனநிலையில்தான் அன்றைக்கும் இருந்தேன். இன்னிக்கும் இருக்கிறேன். அந்தத் தீர்வு அமைப்பு பற்றி அறுதியாகத் தீர்மானிக்க வேண்டியது அங்குள்ள மக்கள்தான்னு உறுதியா நம்பறேன்.”
மேற்கண்டதிலுள்ள கடைசி வரியை அவர் சொல்லும்போதிருந்த நிலை வேறு। இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் அரங்கில் இருந்தபோதிருந்த அதிகாரச்சமநிலை அழிக்கப்பட்டுவிட்டது. ஈழத்திலுள்ள தமிழர்கள் கைதிகளாகவும், ஊமைகளாகவும் ஒருவேளைச் சோற்றுக்குக் கையேந்துகிறவர்களாகவும் கீழிறக்கப்பட்டுவிட்டார்கள். ஆக, இப்போது ஈழத்தில் வாழ்கிற தமிழர்களுக்காகப் பேசவல்ல குரல்களாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், தமிழ்நாடு உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் இருக்கிறார்கள். இதனோடுகூட கேந்திர முக்கியத்துவம், பிராந்திய நாட்டாமை போன்ற சுயஇலாபங்களுக்காகவோ சற்றேனும் மிஞ்சியிருக்கிற மனிதாபிமானத்தினாலோ திடீரென்று விழிப்பு வந்து குரல்கொடுக்க ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
விடுதலைப் புலிகளின் சமரசங்களற்ற- இறுகிய- கருத்துநிலை மறுப்பின்மீதான நாகார்ஜூனனின் கசப்பானது பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. பி.பி.ஸி தமிழோசையின் முன்னைய (நாகார்ஜூனன் போன்றவர்கள் இணைவதற்கு) நிலைப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு சாடிச்சொல்கிறார்.
“தமிழோசையில் இருந்தவர்களுக்கு முன்னாடி ஒரு மரபு இருந்தது. அதாவது, களத்தில் இருக்கிற இயக்கத்தை – அதாவது விடுதலைப் புலிகளை விமர்சனமில்லாம பக்கச்சார்பா அப்படியே ஆதரித்துவிடுவதுன்னு ஒரு மரபு.”
அதனைத் தொடர்ந்து வந்த மாற்றங்களின் பிறகான காலகட்டம் பற்றிப் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“தமிழோசைங்கிறது ஒரு ஊடகம். அதில் தமிழ்பேசற, கேட்கற எல்லோருக்குமான செய்தியும் வரும். அதைத் தமிழர்களுக்கான உரிமைக்குரலாக இருக்கணும்னு நினைத்து, அதை ஓர் அமைப்பின் குரலாகச் சுருக்கியதை என்ன சொல்லுவது… சொல்லப்போனால் தமிழோசைன்னு பெயர் இருக்கறதுனாலேயே குறிப்பிட்ட அந்த இயக்கம் செய்யக்கூடிய, அது கூறக்கூடிய எல்லாத்தையும் கேள்வியில்லாம போடணும்னு எதிர்பார்த்து அது இல்லாமல் போகும்போது தமிழோசைமேல ஒருவித வெறுப்பும் கோபமும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. விடுதலைப் புலிகளை மிகத் தீவிரமாக ஆதரிப்பவர்களோட பிரச்னை இது”
‘பிரச்னை’என்ற சொல் என்னை உறுத்தியது. ஊடகங்கள் குறிப்பாக செய்தியூடகங்கள் உணர்வால் பேசுவதில்லை. அவை அறிவை வேண்டுபவை.(அவற்றின் சார்பு நிலைகளுக்கேற்ற திரிக்கப்பட்ட அறிவாக இருப்பினும்) அதுவே அவற்றின் அடிப்படைப் பண்பாகவும் இருக்கமுடியும். ஆகவே, அத்தகைய வரண்ட தன்மையைக் குறைசொல்வதற்கில்லை. ஆனால், மக்களிடம் - குறிப்பாக அழிவின் நிழலில், அராஜகத்தின் கோரப்பிடியில், நிலையற்று அலைதலில் நாளாந்தம் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களிடம் ‘தூய அறிவை’எதிர்பார்க்கவியலாது. மேலும், விரும்பியோ வேறு வழியற்றோ விடுதலைப் புலிகளைத் தவிர்த்து எங்களுக்கு மீட்சியளிக்க வல்லோர் வேறெவரும் இருக்கவில்லை. மேலும், விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டையோ விடுதலைப் புலிகளது உயிர்த்தியாகங்களையோ சந்தேகிப்பதற்கில்லை. இந்நிலையில், தமது தத்தளிப்பை அப்படியே ஊடகத்தின் உதடுகள் பேசவேண்டுமென எதிர்பார்த்தது எங்கள் மக்களின் தவறற்ற தவறெனவே கொள்ளப்படவேண்டும். வார்த்தைகள் எனப்படுபவை தனியே வார்த்தைகள் மட்டுமல்ல; சூழலையும் சேர்த்தே அவை உதிர்க்கின்றன.
இந்திய ஊடகங்களைப் பற்றிப் பேசும்போது நாகார்ஜூனன் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“இந்திய ஊடகங்களை எடுத்துக்கொண்டால், இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கைன்னு இருக்கிற நிருபர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் நீட்சியாக மாத்திரம் செயற்படுகிறார்கள். இதைத் தாண்டி ஒரு சிலர் மாத்திரம் செயற்பட்டிருக்கலாம்.”
‘த ஹிந்து’போன்ற பத்திரிகைகளின் தேசபக்தி கடல்தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவரை சென்று ஆக்கிரமிப்பாளர்களோடு கைகுலுக்கிக் குதூகலிப்பது நாமறிந்ததே. ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிகைகளின் ஊடக தர்மம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஊதுகுழலாக மாறி வெகுநாட்களாகிவிட்டன.
“இலங்கை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்குப் போறதுக்கு தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு என்ன தடை?”என்றொரு கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார். எழுத்தாளர்கள் மரணபயத்தை வென்றவர்களில்லை. அதிகாரங்களின் மீதான பயம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், படுகொலைகளைக் கண்ணால் பார்த்துத்தான் எழுதவேண்டுமென்றில்லை. ஈழத்துக்குப் போகாமலே, இனவழிப்பை எதிர்த்துக் குரலெழுப்பியிருக்க முடியும். அதைச் செய்தவர்கள் குறைவு என்று ‘கடவு’க் கூட்டத்தில் நான் சொல்லப்போய்த்தான் பெரிய சர்ச்சையாயிற்று. “நாங்கள் எழுதலையா என்ன?”என்று விசனப்பட்டவர்கள் சிலர். “ஏன் எழுதணும்? எங்கள் துயரங்களுக்காக நீங்கள் குரலெழுப்பினீர்களா?”என்ற ‘தார்மீகம்’ வழியும் கேள்வியின் வழியாகத் தனது நிலையை வெளிப்படுத்தினார் ஆதவன் தீட்சண்யா. உலகப் பொது இசமான மானுடநேயத்தை மார்க்ஸியம் படித்தவர்களும் மறந்து பேசுவதுதான் துயரம்.
நாகார்ஜூனன் ஒரு விடயத்தில் மிகத் தெளிவாக இருப்பது ஆறுதலளிக்கிறது. பல இடங்களில் ‘ஈழத்துக்கு, சிங்களத்துக்கு’என்றே குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆக, இன்றைய நிலையில் சிங்களத்துக்கு ஈழம் அடங்கினாலும், சிங்களத்துக்குள் ஈழம் அடங்கமுடியாது என்பதில் அவர்போன்ற அறிவுஜீவிகள் தெளிவாக இருக்கிறார்கள். இவ்விடயத்தை ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வு என்று வாய்கிழியப் பேசிக்கொண்டிருப்பவர்கள் கவனத்திலெடுத்துக்கொள்ளவேண்டும்.
முன்பே சொன்னதுபோல நடுநிலை என்ற சொல் மிகுந்த சலிப்பூட்டுகிறது. இருந்தபோதிலும் அறிவார்த்த தளத்தில் இயங்குபவர்கள் அதன் பொருளுணர்ந்து பேசும்போது நியாயமான அர்த்தம் கொள்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
“அனுராதபுரத்தில், பொலநறுவையில், கொழும்பில், காத்தான்குடியில் நடந்த கொலைகள் போன்ற எல்லாவற்றுக்கும் (விடுதலைப் புலிகள்) மன்னிப்புக் கேட்கவேண்டும். அதேபோல இந்திய அரசாங்கம் சார்பிலும் தமிழ்நாட்டு அரசாங்கம் சார்பிலும் ஈழத்தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருப்பது நிறையவே இருக்கு…”என்கிறார் நாகார்ஜூனன்.
இதை அவர் சொல்லியிருப்பது 2008ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில். தமிழர்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட- கைதுசெய்யப்பட்ட- பதுங்குகுழிகளே புதைகுழிகளாக மூடப்பட்ட – வைத்தியசாலைகள் பிணக்கிடங்குகளாக்கப்பட்ட பேரனர்த்தம் நிகழ்ந்தேறி முடிந்த மே மாதம் 18ஆம் திகதிக்குப் பின் மேற்சொன்ன வாசகங்கள் இன்னும் இறுக்கம் பெற்றதாகின்றன. இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு உறுதுணையாக நின்று போரை நடத்தி, தமிழ்மக்களையும் போராளிகளையும் கொன்றுமுடித்தும் முகாம்களுள் முடக்கியும் தின்று தீர்த்திருக்கும் நிலையில், குடும்ப மற்றும் கட்சி இலாபங்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டு அரசானது ஈழத்தமிழர்களின் படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்ட நிலையில், நாகார்ஜூனனின் வார்த்தைகளுக்குச் செறிவு கூடியிருக்கிறது. அவர் மேலும் சொல்கிறார்:
“ஆக, ஒரு சமுதாயத்தின் இழப்பை நாம் சாத்தியப்படுத்தி இருக்கோம்ன்னு மனத்தில் உறைக்கணும். அப்படிப்பட்ட ஒரு பெருங்கொடுமையை எல்லாத்தரப்பும் தமக்கு வேண்டியபோது செய்திருக்காங்க. ஈழத்தமிழர் சமுதாயத்தை நிலைகொள்ள முடியாதபடிக்கு இப்படி மாத்திய இந்தக் கொடுமைக்காக, அவர்களை ஆதரித்துக் கழுத்தறுத்தவங்க, எதிர்த்துச் சூனியத்தில் தள்ளியவங்க எல்லோருமே மன்னிப்புக் கேட்கவேண்டும்”
இந்தத் தார்மீகச் சீற்றம் தமிழ்நாட்டில் வாழும் பலருக்குள் இருக்கிறது। ஆனால், ஆட்சிபீடங்களில் உள்ள அதிகாரங்களிடம் இல்லை என்பதுதான் குரூரமான உண்மை. தவிர, மன்னிப்புக் கேட்பதானது மடிந்துபோனவர்களைத் திரும்பக் கொணராது என்பதை நாமறிவோம். தனது மக்களிடம் மனிதம் சார்ந்து குறைந்தபட்ச நாகரிகத்தைக் கோரும் நாகார்ஜூனனும் இதை அறிந்தவரே. அதிகாரங்களின் அறமும் மொழியும் ஆயுதங்களாகவே இருந்திருக்கின்றன. அங்கே மன்னிப்பு, பெருந்தன்மை, மனிதநேயம், ஜனநாயகம் என்ற வார்த்தைகளெல்லாம் பொருளற்றவை.
“சமுதாயம் என்பது அரசியலைவிடப் பெரியது என்கிற கண்ணோட்டம் தேவைன்னு நினைக்கிறேன் நான்”என்கிறார் நாகார்ஜூனன். ஈழத்தமிழர்களின் வாழ்வில் அரசியல், சமுதாயம் என்ற இரண்டும் தனித்தனிக் கூறுகள் இல்லை. பேரினவாத ‘அரசியலால்’ துன்புறுத்தப்படும் ‘சமுதாயமாகவே’ நாங்கள் தொடர்ந்து இருந்துவருகிறோம்.
‘வன்னியிலிருந்து வந்த பத்திரிகைக்காரரைச் சந்தித்தேன்’என்ற கட்டுரையில் பல இடங்கள் மனங்கலங்க வைப்பனவாக இருந்தன. வன்னிப்பகுதியில் நான்காண்டுகள் ஐ.நா.மன்ற சமூகப்பணியாளராக- பத்திரிகையாளராகக் கடமையாற்றியவரும், செப்டெம்பர் 16, 2008இல் அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் வெளியேற்றப்பட்ட பத்துப்பேர்களில் ஒருவருமாகிய திரு.டிக்ஸியுடனான சந்திப்பு பற்றி அந்தக் கட்டுரையில் விபரித்திருந்தார். போர் உக்கிரமடைந்துகொண்டிருந்த நேரத்தில் வன்னிவாழ் மக்களைக் கைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை டிக்ஸி சொல்லியிருந்த விதம் மனம் நெகிழவைப்பதாக இருந்தது.
“நாங்கள் வன்னியைவிட்டுக் கிளம்புமுன்பாக அங்குள்ள மக்கள் ‘எங்களை விட்டுப் போகவேண்டாம்’என்று இரண்டு நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் பாதுகாப்பு என்பதை எல்லாத் தரப்பிலிருந்தும் என்று பார்க்கவேண்டும் என்று என் அனுபவம் சொல்கிறது-அவர்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு வருகிறோமே என்று எங்கள் எல்லோர் நெஞ்சும் உருகிவிட்டது”என்று சொல்லியிருந்தார்.
எல்லோரும் சாட்சிகளை அகற்றிவிட்டே குற்றங்களைச் செய்கிறார்கள். தடயங்களையும் துடைத்தழித்துவிடுகிறார்கள். இவ்விடயத்தில் அரசாங்கங்கள் இன்னமும் கூர்ந்த மதிநுட்பத்துடன் நடந்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது. அதிலும், தமிழ்மக்கள் விடயத்தில் கருணை கிஞ்சித்துமற்று நடந்துகொள்வதென்ற முன்தீர்மானத்துடன் களத்திலிறங்கியிருந்த இலங்கை-இந்திய, சீன அரசுகளுக்கு உலகத்தின் கண்கள் முன் இயேசு கிறிஸ்துவாகவும் அன்னை தெரேசாவாகவும் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமிருந்தது. எனவே அவர்கள் சாட்சிகளை கொலைபடுகளத்திலிருந்து அகற்றினார்கள். தாண்டவக்கூத்தாடி முடித்தார்கள். திட்டமிட்டபடி துளிபிசகாமல் இனவழிப்பு சுலபமாக-சுபமாக நிறைவுற்றது.
‘இலங்கைப்போரும் தமிழ்நாட்டின் ஆதிச்சடங்கும்’என்ற கட்டுரையில், இலங்கைப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் ‘கையறு நிலை’ பற்றிப் பேசியிருக்கிறார் நாகார்ஜூனன். இந்த ‘கையறு நிலை’என்ற வார்த்தையின் பின் ஒளிந்திருக்கும் சுயநலம் ஈழத்தமிழர்கள் மற்றும் அவர்கள்பால் உணர்வுப் பற்றுடைய தமிழ்நாட்டு மக்களின் மனங்களைப் பற்றியெரியச் செய்யப் போதுமானதாக இருக்கிறது. ‘த ஹிந்து’போன்ற தேசாபிமானம் மிக்க- குருதி குடிக்கும் பத்திரிகா தர்மத்தைக் குறித்தும் கேள்வி எழுப்ப நாகார்ஜூனன் தவறவில்லை.
“வன்னியிலிருந்த ஐ.நா. மன்ற பன்னாட்டுப் பணியாளர்களை வெளியே போகச் சொன்னீர்களே ஏன்? விடுதலைப் புலிகள் அழிப்பு என்பதாகத் தொடங்கி இப்போது மூன்று இலட்சம் பேரை நிர்க்கதியாக்கியிருக்கிறீர்களே ஏன்? தமிழ்நாட்டு மீனவர்கள் இத்தனை பேரைச் சுட்டிருக்கிறீர்களே ஏன்? அதற்காக மன்னிப்புக் கேட்டீர்களா? என்றெல்லாம் ராஜபக்சே அவர்களை நீங்கள் கேட்கவில்லையே…!”என்று ஹிந்து ராமைச் சாடியிருக்கிறார். அதிகாரங்களின் கைப்பொம்மைகளாக இயங்குவோருக்கு அறிவுஜீவிகள் எனப்படுவோரின் சாடலானது உதிரும் ஒற்றை மயிருக்கும் சமானமாகாதென்பதை வரலாறு காட்டியிருக்கிறது. மேலும், ‘இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் அழிவின் விளிம்பை எட்டும்போதெல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தத்தம் வாழ்க்கையின் ஆதாரம் ஏதோ அசைக்கப்படுவதாக உணர்ந்திருக்கிறார்கள்’என்று அவர் எழுதியிருந்ததை வாசித்தபோது கசப்பான சில ஞாபகங்கள் கிளர்ந்தன. ஆறரைக் கோடி தமிழ் பேசும் மக்கள் அருகிலிருந்தும் நாங்கள் ஏதிலிகளாக்கப்பட்டோமே என்ற ஆற்றாமை மனதில் தீயெனப் படர்கிறது. ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய பெருமெண்ணிக்கையிலான மக்கள் தொகை இருந்தும் என்ன பயன்? மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கங்கள் மக்களைச் சிந்திக்க அனுமதிப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. மாயக்குழலோசையைத் தொடர்ந்து சென்று ஆற்றில் வீழும் எலிகளைப் போல அற்ப சலுகைகளில் மயங்கித் தமது அடிப்படை உரிமைகளை மக்கள் விட்டுக்கொடுக்கும் நிலை துர்ப்பாக்கியமானது. இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டிருப்பவர்கள் இதற்குள் அடங்கார். மக்களைச் சொல்லியென்ன… மகேசன்கள் சரியாயில்லை.
ஈழத்தமிழர்களின் துயரம் தன்னுடைய வாசிப்பில் எவ்விதமாக மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் இந்தக் கட்டுரையில் நாகார்ஜூனன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். கையாலாகாத குற்றவுணர்வு இட்டுச் சென்ற பித்தநிலையை வெளிப்படுத்தும் கதைகளை அக்காலத்தில் எழுதியதாகக் குறிப்பிடும் இவர், நகுலன்-மௌனி-எஸ்.சம்பத் ஆகியேரின் படைப்புகளையே தாம் அக்காலத்தில் விரும்பி வாசித்ததாகவும் சொல்கிறார்.
“இந்த வாசிப்பு-எழுத்து என் அகமாக இருக்க, புறத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை சிக்கலாகி அதில் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆற்றாமை நாடகீயமாக வெளிப்பட்டது என நினைக்கிறேன்”
இலக்கியம், சினிமாத்துறை, மனிதச்சங்கிலி இன்னபிற போராட்டங்களில்கூட இத்தகைய நாடகீயங்களைக் காணக்கூடியதாக இருந்ததாகச் சொல்லி, அவற்றை ஆற்றாமையின் நீட்சியான ஆதிச்சடங்கெனத் தொடர்புபடுத்துகிறார்.
அரசியலற்ற ஆயுதப்போராட்டத்தின் பின்னடைவுக்கு உதாரணமாக விடுதலைப் புலிகளைச் சொல்வது தற்போதைய ‘ட்ரென்ட்’ ஆகியிருக்கிறது. தத்தம் பாவங்களிலிருந்து கைகழுவித் தப்பித்துக்கொள்ளும் சமயோசிதத்தை அண்மைக்காலங்களில் கண்டுவருகிறோம். அரசியலின் புனிதக்குரலில் தடாலடியாகப் பேசமுற்பட்டுத் தம்மிருப்பைத் தக்கவைக்க முயன்றுவருகிறார்கள் சிலர். அதற்கு மறுவளமாக- அறிவினைப் புறந்தள்ளிய, சந்தேகித்த, விசாரணைக்குட்படுத்திய அதிகாரத் துஷ்பிரயோகத்தைப் பற்றி ‘காஃப்காவின் நிழலில் தமிழ் என்ற மொழிவழிச் சடங்கு’என்ற கட்டுரையில் நாகார்ஜூனன் எழுதியிருக்கிறார். 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈழத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர்களான சிவத்தம்பி, ஆ.வேலுப்பிள்ளை ஆகியோரை ‘விடுதலைப் புலிகளை ஆதரிப்போர்’என்று குற்றஞ்சாட்டி மாநாட்டிலிருந்து வெளியேற்றிய துர்ப்பாக்கிய சம்பவம் பற்றி அக்கட்டுரையில் அவர் விசனப்பட்டிருக்கிறார். அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசின் அந்த அதிகாரப் பாய்ச்சலைக் குறித்த செய்தியைப் பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் என்றவகையில் தானும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்திருந்தார். எவ்விடத்திலும், எந்தக் காலகட்டங்களிலும் அதிகாரங்களுக்கும் அறிவுக்கும் இடையில் இழுபறி நிலை இருந்துகொண்டேயிருக்கும் போலும். கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் கொல்லப்படவும் நாடுகடத்தப்படவும் கைதாகவும் காரணமாக இருப்பது, ஆட்சியாளர்கள் அன்றேல் அதிகாரத்தில் இருப்போர் தமது பொய்முகங்களை கருணை முகமூடிகளுள் ஒளித்துக்கொள்ளும் விழைவின் பொருட்டே. முகமூடிகள் கிழிந்தே போனாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை என்பது இரண்டாவது விடயம்.
‘நளிர்’அண்மைக்காலத்தில் வெளியாகியிருக்கும் புத்தகங்களுள் மிக முக்கியமானதாகும்। முன்பே குறிப்பிட்டதுபோல தேடலும் சோம்பேறித்தனமும் மிகுந்தவர்களது விருப்பத் தெரிவாக இந்நூல் இருக்கக்கூடும். ஈழத்தமிழர் பிரச்சனையைத் தொடர்ந்து கவனித்து வரும் நாகார்ஜூனன் போன்றவர்களின் கருத்துக்கள் அறிவார்த்த தளத்தில் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஆயுதப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்நிலையில் அறிவின் போராட்டம் இயங்கவாரம்பிக்கவேண்டும். ‘எல்லாம் முடிந்துவிட்டது’என்று நாம் அமர்ந்திருப்பது பொறுப்புகளிலிருந்து பின்வாங்குவதாகும். ‘இனித்தான் வாழ்க்கை’என்று எழுந்திருப்பதே இக்கொடுங்காலத்தில் நாம் செய்யவேண்டியது. இலைகள் எல்லாம் உதிர்ந்துபோனபிறகும் மரங்கள் நம்பிக்கையோடு காத்திருப்பதில்லையா அடுத்த இளவேனிலை எதிர்பார்த்து? நாம் தரையில் ஊற்றும் ஒரு குவளைத் தண்ணீரில் கூட்டமாக அழிந்துபோனாலும், மீண்டும் எறும்புகள் கூடி மழைக்காலத்திற்காகத் தானியங்களைச் சேமிக்கத்தானே செய்கின்றன? சூறாவளியும், ஆழிப்பேரலையும், பூகம்பமுமாகிய இயற்கைப் பேரழிவுகளின்பின்னும் மானுட இனம் நிமிர்ந்தெழவில்லையா இந்த மண்ணில்? இழப்புகள் கோடி வரலாம். அதன் பிறகும் எஞ்சியிருக்கவே செய்கிறது வாழ்க்கை.
நன்றி: அம்ருதா