1.08.2010

நாடோடிகளும் நகரவாழ்வும்

எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ஒழுங்கினை நேசிப்பவர். சாலை விதிமுறைகளை மீறத் துணியாதவர். இனிப்புப் பண்டங்களைச் சாப்பிட்டபின் அவற்றின் காகித உறைகளைத் தனது காற்சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்து, குப்பைத்தொட்டிகளைக் காணநேரும்போது அதனுள் இடக்கூடிய அளவுக்குச் சுத்தத்தினைப் பேணுபவர். ஒழுங்கினைப் பேணாத எந்தவொரு வரிசையையும் நிராகரிப்பது அவரது வழக்கம். எல்லாவற்றிலும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஆதர்ச பூமியில் வாழவேண்டுமென்பது அவருடைய கனவாக இருந்துவருகிறது. அவர் கனவுகாணும் வாழ்க்கை புத்தகங்களில் மட்டுமே சாத்தியம் எனும் யதார்த்தம் உணர்ந்து கசந்துபோயிருக்கிறவர். ஒரு தடவை அவரும் நானும் வீதியால் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, ஏறத்தாழ பாதையில் - போதையில் விழுந்துகிடந்த ஒருவரைப் பார்த்தோம். அந்த மனிதர் தனது வாந்தியின்மீது புரண்டுகொண்டிருந்தார். அவருக்குச் சற்று தள்ளி நாயொன்று குப்பைத்தொட்டியினைக் கிளறி தனது பெயரெழுதப்பட்ட பருக்கைகளைத் தேடிக்கொண்டிருந்தது. துர்நாற்றம் சகிக்கமுடியாதவாறு கிளர்ந்து கிளர்ந்து அடங்கிக்கொண்டிருந்தது. அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

“வேறு நாடுகளில் வாழக்கூடிய வசதி இருந்தும், இந்த நகர நரகத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? நீங்கள் எனது கண்களில் விசித்திரமாகத் தோன்றுகிறீர்கள்!”

அப்படிக் கேட்ட எனது நண்பர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அன்று எனது பதில் ஓரிரு வார்த்தைகளில் முடிந்துவிட்டது. நினைக்கிற எல்லாவற்றையும் ஒரு பதிலாகக் கோர்த்துச் சொல்லிவிட முடிவதில்லை. ஆனால், எழுதமுடியும். ஆம். உயரே இருந்து பார்க்கிற எவருக்கும் சென்னை தாறுமாறாக, பைத்தியத்தின் சாயலுடன் இயங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றக்கூடிய நகரமே. அநேகமாக எல்லா மாநகரங்களுக்கும் ஏறத்தாழ ஒரே முகந்தான். ஊழி துரத்திவருவதனையொத்த தோற்றத்துடன் மக்கள் பதட்டத்துடன் நாளாந்தம் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கனரக வாகனங்களும் பேருந்துகளும் ஆட்டோக்களும் அநாவசியமாக ஒலிப்பான்களை அலறவிட்டு பாதசாரிகளை அச்சுறுத்தியபடி விரைந்துசெல்கின்றன. தொலைபேசிகளைச் செவிகளில் பொருத்தி, குளிரூட்டப்பட்ட கார்களின் பின்னிருக்கைகளில் சாய்ந்தமர்ந்தபடிக்கு வசதி படைத்தவர்கள் மிதந்துகொண்டிருக்கிறார்கள். அதே வீதிகளின் தெருவோரங்களிலும் வீதிகளின் நடுவேயுள்ள மேடைகளிலும் நாய்களும் மனிதர்களும் பேதங்களின்றி உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் (நாய் அஃறிணையா?) சுத்தத்திற்குச் சவால் விடுத்தபடி வெள்ளைநிற பொலித்தீன் பைகள் எங்கெங்கும் படபடத்து அலைகின்றன. கடைகளின் முன்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளை காகிதங்களும் அழுகிய காய்கறிகளும் அலங்கரித்துக்கொண்டிருக்க, பிரித்தறியமுடியாத வாடையொன்று காற்றை நிறைத்திருக்கிறது. இறைஞ்சியழும் (கண்ணீர் வாராத) விழிகளோடு பிச்சைக்காரர்கள் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுக்கு இணையாகத் தூசியும் பதறிப் பறந்தடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால், நகரங்களுள் கிராமங்கள் இருக்கவே இருக்கின்றன. வானம் பொய்த்து வயல்கள் கட்டாந்தரைகளாகிவிட, வாழ்வாதாரம் வேண்டி நகரங்களை நோக்கிப் பெயர்ந்துவந்துவிட்ட மனிதர்களுள் அவர்கள் பிரிந்துவந்த கிராமம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இனிதென்று அந்நாளில் நாமுணராத பால்யமே நம்மை உள்நின்று இயக்குகிறது. விளையாடித் திரிந்த மாந்தோப்புகளின் இலைச் சலசலப்பு அந்திமத்திலும் கேட்கத்தான் கேட்கும். அமிழ்ந்து குளித்த ஆறுகளின் சாயலை எதிர்ப்படும் நீர்நிலைகளில் காணவே செய்கிறது மனம். மனதின் வெளிகளில் பறவைகளின் சிறகடிப்பை நாளாந்தம் மானசீகமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.


மேலும், நகரங்கள் அழகில்லையென்பதும்கூட பொதுப்புத்தி சார்ந்ததே. வயல்வெளிகளும் பூக்களும் பறவைகளும் எத்தனைக்கெத்தனை அழகோ அத்தனைக்கத்தனை அழகானது நகரம். வரிசையாக தொடர்சீரில் செல்லும் வாகனங்களின் நேர்த்திக்குக் குறைவில்லை. இரவின் குளிர் தோல்தொட விரையும்போது, பாலத்தின்கீழ் சுழித்தோடும் கூவத்தின் அழகே அழகு. கார்த்திகை, மார்கழி மாத இரவுகளில் அழகொளி படர்த்திக் கிடக்கும் வீதிகளில் நடந்துசென்றால் தொட்டுணரமுடியும் நகரத்தின் மெல்லிதயத்தை. தெருவோரக் கடையொன்றில் தேநீர் அருந்த வாய்க்குமெனில் இன்னும் சிறப்பு. ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இரவு பத்து மணிக்குமேல் நகரத்துத் தெருக்களும்கூட அவர்களைத் (பெண்களை) தம்மியல்பான மிகச்சிறிய ஆசைகளிலிருந்து நிராகரித்து வீட்டை நோக்கித் துரத்திவிடுவது துயரமே.
டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’இவ்விதமாக ஆரம்பிக்கிறது.

சிறு பரப்பில் நூறாயிரக் கணக்கானோர் நெரிசலாய் அடைந்துகொண்டு எவ்வளவுதான் நிலத்தை உருக்குலைக்க முயன்றாலும், எதுவுமே முளைக்காதவாறு எவ்வளவுதான் கற்களைப் பரப்பி நிலத்தை மூடினாலும், பசும்புல் தளிர்க்க முடியாமல் எவ்வளவுதான் மழித்தெடுத்தாலும், நிலக்கரியையும் எண்ணெயையும் எவ்வளவுதான் எரித்துப் புகைத்தாலும், எவ்வளவுதான் மரங்களை எல்லாம் வெட்டியகற்றியும் விலங்குகளையும் பறவைகளையும் விரட்டியடித்தும் வந்தாலும் - வசந்தம் வசந்தமாகவே இருந்தது, நகரத்திலுங்கூட.”

டால்ஸ்டாய் மேற்கண்ட வரிகளை எழுதி (1889-1899 படைப்புக்காலம் பத்தாண்டுகள்) ஒரு நூற்றாண்டுக்குமேல் கழிந்துபோயிற்று. இன்னுமதிகமதிகமான மக்கள், கொங்கிறீற் கற்கள், கச்சாப்பொருட்கள், இரசாயனக் கழிவுகள், தூசி… வாகனங்கள் கக்கிச்செல்லும் புகை இன்னபிற அனர்த்தங்களின்பிறகும் வசந்தம் வசந்தமாகவே இருக்கிறது. சென்னையிலுங்கூட.

போரினாலும் பொருளாதாரம் மற்றும் கல்வி வேண்டியும் மேலைநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துசென்ற எங்களைப் போன்ற ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் கீழைத்தேயங்களின் நகரங்கள்கூட கிராமங்களின் தன்மையையே கொண்டிருக்கின்றன.‘எங்களுக்கு முன்னதாகப் பிறந்த கோழிகளை’ குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்து விறைக்கும் கைகளால் எடுத்து சமைப்பது கொடுமை. இங்கே ‘பிரெட்’என்று பெரும்பான்மையாக அழைக்கப்படும் ஒரு இறாத்தல் பாணை வாங்குவதற்கு பத்து இறாத்தல் உடைகளை அணிந்துசெல்லவேண்டிய அளவுக்கு எலும்புறைய வைக்கும் குளிர் அந்த நாடுகளில். ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்து வாழும் கனடா, இலண்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்றாலன்றிச் செலவுகளைச் சமாளிக்க முடியாது. வாடகை, வெளிநாடு வர வாங்கிய கடனுக்கு வட்டி, மின்சார-தண்ணீர்க் கட்டணம், கடனட்டைக் கட்டணம், ஊரில் உறவுகளுக்கு அனுப்பவேண்டிய தொகை இன்னபிறவற்றைச் சமாளிக்க இரவும் பகலுமாக இரண்டு வேலைகளைச் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எந்நேரம் தூங்குவார்கள் என்பது அவர்களது கண்களுக்கே வெளிச்சம். வீடு இருக்கும்@ ஆனால் அங்கு வாழ்வதில்லை. கட்டில் இருக்கும்@ ஆனால் அதில் உறங்குவதில்லை. மனைவிகளும் கணவர்களும் இருப்பர்@ இயந்திர வாழ்வில் எப்படியோ குழந்தைகளும் பிறந்துவிடுகிறார்கள்.

வேலைக்குத் தம்மை ஒப்புக்கொடுத்த வாழ்வின் மீதான கசப்பு 2002ஆம் ஆண்டு ஈழத்தில் யுத்தநிறுத்தம் அமுல்படுத்தப்பட்டபோது ஒருவிதமாக வெளிப்பட்டது. அதாவது, வெளிநாடுகளிலிருந்த ஈழத்தமிழர்கள் பலர் தமது சொந்த ஊர்களில் நிலங்களை வாங்கிக் குவித்தார்கள். வீடுகளைக் கட்டினார்கள். அதை வெறுமனே சொத்துக்குவிப்பு என்பதாகப் பார்க்கவியலாது. அந்திமத்திலாவது ஓய்வு என்ற தொலைதூரக் கனவாகவோ, விரட்டப்பட்ட நிலங்களில் மீள வேரூன்றும் எத்தனம் என்றோதான் அதனைக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால், மறுவளமாக, உள்நாடுகளில் போருள் வாழ்ந்த அன்றேல் செத்துப் பிழைத்துக்கொண்டிருந்த ஏழைகள் ஏழைகளாகவே இருந்தார்கள். போர்வெறிக்குத் தீனியானவர்கள் அவர்களே. மரணமும் சொத்திழப்பும் அலைந்துலைவும் அவர்களுக்கே. வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்தவர்கள் மீள்திரும்புகையின்போது நிலச்சுவான்தாரர்களாக மாறினார்கள். டொலர்களும் பவுண்ஸ்களும் பிராங்க்குகளும் ரூபாயாக மாறிச் செய்த சித்துவேலைகள் அநேகம்.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒரே இடங்களில் வாழ்ந்தாலும் சகோதரர்கள்கூட ஒருவரையொருவர் மாதத்திற்கொரு தடவைகூடச் சந்திக்க முடிவதில்லை. ஆண்டுக்கணக்கில் முகம் பார்த்துப் பேசாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தொலைபேசிதான் அங்கே தொப்பூள் கொடியாகத் தொழிற்படுகிறது. மேலைத்தேயங்களின் வீதிகள் விழுந்து புரளுமளவிற்குச் சுத்தமானவைதாம். பூங்காக்களோவென வியக்கும்படியான சாலையோரங்களும் அங்குள்ளனதாம். வைத்தியசாலைககள் கூட நட்சத்திர விடுதிகளின் வசதிகளைக் கொண்டமைந்தனவாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நடுத்தர வர்க்கத்தினர் இங்கே கனவுகாணும் வாழ்க்கையான கார், கட்டில், இன்னபிற வசதிகளோடுடையதே அந்த வாழ்க்கை. ஆனால், ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும்போது உண்மையான அர்த்தத்தில் ‘வாழ்க்கை’ என்ற சொல்லின் பொருள் திரிந்துவிடுகிறது. எனது தோழியொருத்தி இங்கு வந்தபோது என்னைப் பார்த்துச் சொன்ன வாசகம் இது:

“உங்கள் நாட்களை நீங்களே வாழ்கிறீர்கள்”

உண்மை. அதிலும் இந்த மழைநாட்கள்! அதிகாலையில் குயில்கள் கூவுகின்றன. காற்றில் சிணுங்கும் வேம்பு அதீதப் பச்சையோடு தலையசைக்கிறது. மல்லிகைப் பூவைத் தலைநிறையச் சூடிக்கொள்வது எனக்குப் பிடிக்கும். கனடாவில் அது சாத்தியமில்லை. ஆனால், மே 19க்குப் பிறகு தலையில் பூ வைத்துக்கொள்ளும்போதெல்லாம் குற்றவுணர்வாக இருக்கிறது. தோற்றத்தில் துக்கத்தை வெளிப்படுத்துவதென்பதிலிருக்கிற சின்னப் பொய்மையையும் மிஞ்சி உறுத்துகிறது துக்கம். ‘கோலமாவு’என்று மாறாத ஒத்திசையோடு கத்திக்கொண்டு செல்பவனின் குரலை நான் நேசிக்கிறேன். ‘மீனம்மா மீனு’என்று, தன் குரல்வளையை யாரோ நெருக்கிப் பிடிப்பதுபோல ஊசிக்குரலில் கத்துகிற பெண்குரலை என்னால் ரொறன்ரோவில் கேட்கமுடியாது. வீதி வழியாகப் பொருட்களை விற்றுச்செல்கிறவர்கள் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை அழகுசெய்கிறார்கள் என்பது ஒருவகையில் குரூரமான அழகியலே.

இறந்துபோன குழந்தையின் ஞாபகத்தில் பொம்மையைச் சீராட்டும் சித்தம் பேதலித்த தாயைப்போல, தாய்நாட்டில் வாழக் கிடைக்காத என்னைப் போன்றவர்கள் அதனையொத்த ஊர்களில், எமது மொழி பேசும், எமது இனம் சார்ந்த, எங்களது தோற்றத்தைக் கொண்ட மனிதர்களிடையே வாழவே விழைகிறோம். அதுவொரு கற்பிதம் அன்றேல் விழித்தபடி காண்கிற கனவுதான். சிலசமயங்களில் நினைத்துப் பார்க்கிறபோது, வாழ்வு மொத்தமும் ஒரு நெடுங்கனவாகவே தோன்றுகிறது.

நன்றி: அம்ருதா

14 comments:

chandru / RVC said...

:(
// யார் காணும் கனவு இது?//

na.jothi said...

ஒப்பிட்டளவில் வாழ்க்கையை நகர்த்த வேண்டியிருக்கிறது பொருள் தேடி வெளிநாட்டிற்கு வந்த நாங்களும்

கவிஞர் இசை said...

கோலமாவு’என்று மாறாத ஒத்திசையோடு கத்திக்கொண்டு செல்பவனின் குரலை நான் நேசிக்கிறேன். ‘மீனம்மா மீனு’என்று, தன் குரல்வளையை யாரோ நெருக்கிப் பிடிப்பதுபோல ஊசிக்குரலில் கத்துகிற பெண்குரலை என்னால் ரொறன்ரோவில் கேட்கமுடியாது.

KP Suresh said...

Aalukku oru Desam, izhavukku kooda paarkka mudiyatha uravukaL...
antha vazhi India nai enakku puriyaathuthaan!!!

Kaiyalagatha Tamilanai vetkappadukiren!!!

Anbudan
KP Suresh

Sai Ram said...

>>>வாழ்வு மொத்தமும் ஒரு நெடுங்கனவாகவே தோன்றுகிறது.<<<

நீர்க்குமிழ் என்று வெடிக்குமோ என தெரியாத ஆனால் பயந்து கொண்டே இருக்க வேண்டிய நெடுங்கனவு.

SS JAYAMOHAN said...

"என்னைப் போன்றவர்கள்
அதனையொத்த ஊர்களில்,
எமது மொழி பேசும், எமது இனம் சார்ந்த, எங்களது தோற்றத்தைக் கொண்ட மனிதர்களிடையே வாழவே விழைகிறோம் “

இந்த வார்த்தைகளில்
உங்களின் உள்ளார்ந்த வாஞ்சை
தெரிகிறது...

உங்களின் எழுத்து, இலக்கியம், கலை ஆர்வம்,
நண்பர்கள் வட்டாரம் இவற்றிக்கெல்லாம்
சென்னை நகரம் ஒரு ஏற்ற இடம்/தளம் தானே ?!

எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள் !

அன்புடன்
எஸ். எஸ். ஜெயமோகன்

நேசமித்ரன் said...

அன்பின் தோழமைக்கு

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துகள்

மிக்க மகிழ்ச்சி உங்களின் படைப்புகள் மேலும் ஊக்கத்துடன் வெளிவரட்டும்

:)

- நேசமித்திரன்

சிங்கக்குட்டி said...

"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சிங்கக்குட்டி.

BR said...

தமிழ்மணம் விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழ்நதி said...

RVC,

நாம் அனைவரும் காண்கிற கனவுதான். AVATOR படம் பார்த்தீர்களா? ஒரு நிஜம்... ஒரு கனவு...

ஜோதி,

ம்... ஏனையவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துத் திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான். என்னதான் கிடைத்தாலும் மேலும் எதிர்பார்க்கிற மனம்தானே நமது...


டங்கு டிங்கு டு,

இசை, உங்கள் பெயரை எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது:) எங்கள் தெருவில் ஒரு பெண் நாளாந்தம் மீன் விற்றுச் செல்கிறார். அவரது குரல் மீன் முள்ளால் கீறுவது போலவே இருக்கும். அதை ஊசிக்குரல் என்பதா? முட்குரல் என்பதா நீங்களே சொல்லுங்கள்.

கே.பி.சுரேஷ்,

இந்தப் பின்னூட்டம் நீங்கள்தான் போட்டதா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது. உங்களுக்கு வலைப்பூ இருக்கிறதல்லவா? தவிர நீங்கள் 'நாய்'என்றெல்லாம் எழுதுகிற ஆள் இல்லையே...:)

சாய் ராம்,

ஆம்... வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும், தற்கொலை செய்துகொண்டு செத்துவிட முடிகிறதா என்ன? நீர்க்குமிழ் ஆனால் அழகிய நீர்க்குமிழ்...

எஸ்.எஸ்.ஜெயமோகன்,

"உங்களின் எழுத்து, இலக்கியம், கலை ஆர்வம்,
நண்பர்கள் வட்டாரம் இவற்றிக்கெல்லாம்
சென்னை நகரம் ஒரு ஏற்ற இடம்/தளம் தானே ?!"

ஆம். நான் சென்னையில் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். உண்மையைச் சொன்னால், நமக்கு அடையாளங்கள் வேண்டியிருக்கிறதல்லவா?

நன்றி நேசமித்ரன்,

தனிமடல் அனுப்பியிருக்கிறேன். ஒரு நாடோடிக்கு பயண அனுபவத்திற்கு விருது கிடைத்திருப்பது மிகப் பொருத்தமானதல்லவா? தனிப் பதிவு எழுத எண்ணியிருக்கிறேன். நாளை பதிவிடுவேன்.

சிங்கக்குட்டி (?) வாழ்த்துக்கு நன்றி.

திகாஷ், உங்களுக்கும் எனது நன்றிகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இறந்துபோன குழந்தையின் ஞாபகத்தில் பொம்மையைச் சீராட்டும் சித்தம் பேதலித்த தாயைப்போல, தாய்நாட்டில் வாழக் கிடைக்காத என்னைப் போன்றவர்கள்

:(((

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

THE WISE FOOL said...

"தொலைபேசிதான் அங்கே தொப்பூள் கொடியாகத் தொழிற்படுகிறது."
I liked the way it is expressed.
The painful reality is captured in the language. Reading this sentence, evokes sorrow.

padmanabhan said...

read your "ingu EElam virkkappadum" in kumudam. i agree with you. In Last year book exhibition, there was an announced ban on eelam related book sales to publishers.

KarthigaVasudevan said...

//வீதி வழியாகப் பொருட்களை விற்றுச்செல்கிறவர்கள் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை அழகுசெய்கிறார்கள் என்பது ஒருவகையில் குரூரமான அழகியலே.//

அழகு செயவ்வது மட்டுமா? அர்த்தமடையச் செய்கிறார்கள் என்றும் சொல்லலாம்.வீதியில் தள்ளுவண்டியில் வாடிக்கையாய் காய்கறி விற்பவர்கள்,மோர் விற்பவர்கள் (இப்போதெல்லாம் பாக்கெட் மோர் ,தயிர் தான் ) சில நாட்கள் வராமல் போனால் அதற்குப் பழகிப் போன மிடில் கிளாஸ் மனம் அந்த நாளை எதோ ஒரு விதத்தில் குறையுள்ள நாளாக கடப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.