2.12.2012

35ஆவது, சென்னை புத்தகக் கண்காட்சியும் இன்னுஞ் சில நினைவுகளும்…


இன்னுமொரு புத்தகக் கண்காட்சி, கோடிக்கணக்கான புத்தகங்களோடு வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் அதற்கு முன்னமும் வாங்கிய புத்தகங்களே இன்னமும் வாசித்துத் தீராத நிலையில், மீண்டும் அந்தக் குரல் இழைந்து குழைந்து அழைக்கிறது. வாழ்வின் பிடிமானமாகக் கற்பித்துக்கொண்டிருக்கும் இலக்கியமும் வாசிப்பும் இன்னமும் எத்தனை காலம் கூடவரும் என்ற சுயவிசாரணையை வசதியாக, தற்காலிகமாக மறந்தாயிற்று. ஜனவரி மாதம் நெருங்கத் தொடங்க பரவசம் கலந்த பதட்டம் தொற்றிக்கொள்வதைத் தவிர்க்கமுடிவதில்லை. திருவிழாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கிராமத்துக் குழந்தையைப் போல, புத்தகங்கள் நடுவில் நடந்து திரியும் கனவுகளோடு காலைகள் புலர்ந்தன.

34ஆவது (கடந்த ஆண்டு) சென்னை புத்தகக் கண்காட்சியின்போது, பெருநகரின் தெருக்களிலும் கண்காட்சியின் நுழைவாயிலிலும் ‘தமிழே… அமிழ்தே’என்ற பெருமித விளிப்புடன் கூடிய கலைஞரின் ‘கட் அவுட்’கள் உயர்ந்தோங்கியிருந்தன. திரும்பிய திசைகளில் எல்லாம் கலைஞர் ஸ்டாலின் சகிதம் சிரித்துக்கொண்டிருந்தார். கடந்த தேர்தலின்போது, மக்கள் அமிர்தத்தைக் குடித்துத் ‘தீர்த்து’விட்டார்கள். இந்நாள் முதல்வரோ கண்காட்சி விடயத்திலும் அலட்டிக்கொள்ளவில்லை. அவரது ஆர்வங்கள் சமச்சீர் கல்வி, நூலக மூடுவிழா என, அறிவிலும் செறிவானவை! கண்காட்சி நடக்கும் பிரமாண்ட கூடாரத்திற்கு இட்டுச்செல்லும் வழிநெடுகிலும் எஸ்.ராமகிருஷ்ணனும் சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் பாலகுமாரனும் சுஜாதாவும் வைரமுத்துவும் உருவப்படங்களாக உயரங்களில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை பெருந்திரளான சனங்கள் புத்தகச் சந்தையில் கலந்துகொண்டார்கள் என்பது எனது அனுமானம். புத்தகச் சந்தை நிறைவுற்றதும் ஆட் கணக்கெடுப்பு, பதிப்பகங்களின் இலாப நட்டத் தகவல்கள் (அண்ணளவாக) தெரியவரும். அதற்கியைபுற அனுமானத்தையும் முன்பின் நகர்த்திக்கொள்ளலாம். கடைசி இரண்டு நாட்களிலும் ஆளோடு ஆளுரசி தோளோடு தோளுரசி நடக்க வேண்டியிருந்தது. புத்தகக் கடலினுள் இறங்குவதன் முன்பாக நுழைவாயிலிலிருந்து பார்த்தபோது ‘இதனுள் நுழைந்து வெளிவந்துவிட முடியுமா?’என்ற ஐயம் எழுமளவிற்குக் கடைசி இரண்டு நாட்களிலும் கூட்டம் திரண்டிருந்தது. இலக்கியக் கூட்டங்களில் காணக்கிடைக்காத அரிய காட்சியை புத்தகக் கண்காட்சியில் காணமுடிந்தது. பெண்கள் அதிகளவில் வந்திருந்தார்கள். குழந்தைகளுக்கோவெனில் கடற்கரை போல பொழுதுபோக்கும் இடங்களில் கண்காட்சியும் ஒன்றாயிருந்தது. விற்பனை நிலையங்களில் சில பிள்ளைகள் புத்தகங்களில் கண்பதித்து ஆழ்ந்த வாசிப்பில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது. சோப்புக் குமிழிகள் மிதந்து வந்து முகத்தில் மோதி உடைந்தபோது ஒரு கணம் குழந்தைமை மீண்டு திரும்பிற்று. மாங்காய்ச் சீவல், பாலுள் முக்கிப் பொரித்த கடலை, வீண்தீனி விலக்குவோருக்கென பழங்கள் என அங்கு வயிற்றுக்கும் நிறையவே ஈயப்படுகிறது. தத்தம் வணிகத் தகவல்களைத் தாங்கிய துண்டுப் பிரசுரங்களை வழி நெடுகிலும் நின்று சிலர் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். கழிப்பறைகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுத்தமாகவும் நிறைந்த நீர்வசதியோடும் இருக்க, பெண்கள் கழிப்பறை அருகில் பெண் காவலர்கள் லத்திகளோடு அமர்ந்திருக்கிறார்கள்.

சுற்றவர இருந்த மனிதர்கள் மறைந்துபோக, புத்தகங்கள் நடுவில் கனவில் நடப்பதைப்போல அலைந்த பலரைப் பார்த்தேன். புத்தகங்களைப் புரட்டிக் கொண்டோ அல்லது புரட்டாமல் வெறுமனே முகப்பட்டைகளை உற்றுநோக்கிக் கொண்டோ காலம் உறைந்தாற் போல அவர்கள் நின்றிருந்தார்கள்.

பார்க்கப் பார்க்க, ‘சென்னை மாநகரத்தில் இவ்வளவு பேர் புத்தகங்களில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்களா?’என்று வியப்பாக இருந்தது. வருபவர்கள் எல்லோரும் புத்தகம் வாங்குபவர்களல்லத்தான். வேடிக்கை பார்க்கவும் பொழுதுபோக்கவும்கூட சிலர் அங்கு வருகிறார்கள். ஆனாலும், இவ்வளவு ஆயிரம் பேருள் ஓராயிரம் பேர் இலக்கியம் என்று எங்களால் விளிக்கப்படுவதை வாங்கினாலும் பிரதிகள் தீர்ந்துபோகுமே…! ஆனால், ஒரு பதிப்பு விற்றுத் தீர ஆண்டு பல காத்திருப்பதே (ஒரு சில நட்சத்திர எழுத்தாளர்களது படைப்புகள் விதிவிலக்கு) தமிழுக்கு விதிக்கப்பட்ட விதி. சாகித்திய அகாதமி விருது இன்னபிற அறிவிக்கப்படும்போது மட்டும் திடீரென்று விழித்துக்கொண்டாற் போல அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனை எண்ணிக்கை உயர்கிறது. கடந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களது ‘சூடிய பூ சூடற்க’நான்காயிரத்து ஐந்நூறு பிரதிகள் விற்கப்பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். இவ்வாண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’இதுவரையில் ஏறத்தாழ மூவாயிரத்து நூற்றியம்பது பிரதிகள் விற்கப்பட்டிருப்பதாக இணையத் தகவலொன்றில் வாசித்தேன். ஆக, திடீர் நன்னிமித்தங்கள் ஏற்பட்டாலன்றி, இலக்கியம் என்று எங்களைப் போன்றவர்களால் நம்பப்படுகிற எழுத்தை சராசரி மனிதர்கள் கண்டுகொள்வதில்லையோ…? அப்படித்தான் இருக்கவேண்டும்! நிலைமை இவ்விதமிருக்க, எதை முன்னிட்டு இத்தனை குறுங்குழுவாதக் குமுறல்கள், குடுமிப்பிடிச் சண்டைகள், தம்மைத்தான் பிரேரித்தல், சொற்போர்கள், மற்போர்கள், அங்கீகார ஆரவாரங்கள், அடையாள அரசியல்கள், பிதாமகத் தோரணை தொனிக்கும் பட்டியல்கள், அற்பப் புகழ்ச்சிகள், இருட்டடிப்புகள், மனம் செத்துச் சரிதல்கள்….? எல்லாவற்றுக்கும் பதிலாக, ‘ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம்’என்றொரு வாக்கியம் எப்போதைக்குமாக நம்மைத் தாங்கிக்கொள்ளக் காத்திருக்கிறது. எந்தவொரு சொல்கொண்டு போர்த்தியும் மூடமுடியாத அம்மணமாம் நுகர்வுக் கலாச்சாரத்தின் அகராதியில் எழுத்தெனப்படுவது யாதுமில்லை.

‘புத்தகங்களின் விலைகளைப் பார்க்கும்போது பதிப்பகங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களாக ஆகிவிட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது’ என்ற அதிருப்தி கலந்த குரல்களை இவ்வாண்டு அதிகளவில் செவிமடுக்க நேர்ந்தது. பணப்பற்றாக்குறையால் வாங்கமுடியாமல் போன புத்தகங்களின் சுமையை மனதில் சுமந்துகொண்டு திரிவதென்பது உண்மையில் கொடுமையானது.

கைநிறையப் புத்தகப் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு போனவர்களை, தனது ஏக்கம் வழியும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை ஒருநாள் கண்டேன். அவனது கைகளில் ஒரு ஆங்கில-தமிழ் அகராதி மட்டும் இருந்தது. தந்தையின் சைக்கிளின் பின்னால் அமர்ந்து திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனான். ‘இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது?’என்று வேதனையாக இருந்தது.

இலக்கியம் என்பது உன்னதம், கலை அது இதுவென்று நம்பிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான வாசகர்களை ஒரு சில பதிப்பகங்கள் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன. விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் புத்தகத்தை மலிவான தாளில், இலகுவில் கிழிந்துவிடும் அட்டைகளோடு அச்சிட்டு ‘உயர்ந்த’விலையில் தலையில் கட்டும் சிலரது அறம் துணுக்கிற வைக்கிறது. அதே புத்தகம் அதனிலும் நேர்த்தியான அட்டை,காகிதம்,நேர்த்தியான வடிவத்தில் அதனிலும் குறைவான விலையில் வேறொரு பதிப்பகத்தில் காண நேர்கிறபோது, ‘எழுத்தின் அறம் இதுவோ!’என்று நொந்து நடப்பதன்றி வேறென்ன செய்வதற்கியலும்?

புத்தகங்களைப் ‘பண்டங்களாக’க் கருதுபவர்கள் மத்தியில் இன்னமும் சில மனிதர்கள் எஞ்சியிருக்கிறார்கள் என்றவகையில் மகிழ்ச்சி. ‘க்ரியா’பதிப்பகமானது ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களையே ஒவ்வோராண்டும் வெளியிட்டு வருகிறது என்று (எனது அவதானத்தின்படி) எண்ணுகிறேன். க்ரியாவின் புத்தகங்கள் மட்டுமல்லாது, அதன் விலைப்பட்டியல் கையேடுகூட கலைநயத்தோடு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கவிதை நூலொன்றின் சாயலுடன் மிளிர்ந்தது. கடந்த ஆண்டினைப்போலவே இவ்வாண்டும் விகடன், கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு ஆகிய விற்பனை நிலையங்களில் அதிக கூட்டம் குழுமியிருந்ததை அவதானிக்க முடிந்தது. அத்துடன், நற்றிணை போன்ற பதிப்பகங்களும் உற்சாகமான வரவேற்பைப் பெற்றதாக அறிந்தேன்.

எனது நண்பரும் எழுத்தாளருமாகிய பாஸ்கர் சக்தியிடம் “இம்முறை நிறையப் புத்தகங்கள் வாங்கினீர்களா?”என்று கேட்டபோது, “அதிகம் இல்லை”என்று பதில் வந்தது. “குறுகிய காலப் பயிராகிய குறுவைச் சாகுபடி போல, ஆகஸ்டில் எழுத ஆரம்பித்து டிசம்பரில் எழுதிமுடித்து புத்தக வெளியீட்டு விழாவும் நடத்தி, ஜனவரியில் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டுவரப்படும் தயாரிப்புகளில் எனக்கு ஆர்வமில்லை”என்றார் அவர். அத்தகைய படைப்புகளில் எனக்குந்தான் ஆர்வமில்லை. கலையின் ஆவேசம் பிடரி பிடித்துத் தள்ள, படைப்பெழுச்சியால் உந்தப்பட்டு ஒரு பித்துநிலையில் அமர்ந்து ஒரே மூச்சில் உன்னதங்களைப் படைக்கக்கூடியவர்கள் மேற்குறித்த விமர்சனக் கத்தியை வைத்துத் தங்கள் கழுத்தை அறுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

இம்முறை புத்தகச் சந்தையில் வெளியிடப்பட்டிருக்கும் நூல்களுள் முக்கியமானவைகளாகக் கருதுவது (என்னளவில்) மொழிபெயர்ப்புகளையே. ‘ராதுகா’பதிப்பகம் என்ற பெயரும் மக்கினாற்போன்ற நிறத்தினாலாகிய காகிதத்தில் விரிந்த மஞ்சள் பூச்சொரியும் புல்வெளிகளும் கோதுமை வயல்களும் மறக்கக் கூடியனவா? ஒவ்வொரு ஆண்டும் தஸ்தயேவ்ஸ்கியின் “கரமசோவ் சகோதரர்கள் வந்துவிட்டதா?”என்று விசாரிப்பது வழக்கமாக இருந்தது. ஈற்றில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் இவ்வாண்டு அந்நூல் வந்திருக்கக் கண்டேன். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கவிஞர் புவியரசு. அதே பதிப்பகம், டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’இனை அழகிய முகப்பும் கெட்டி அட்டையுமாய் மூன்று தொகுதிகளாகப் பதிப்பித்திருக்கிறது. டி.எஸ்.சொக்கலிங்கம் மொழிபெயர்த்திருக்கிறார். 1957ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளிவந்ததாக விவரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘போரும் அமைதியும்’(சீதை பதிப்பகம்) என்ற பெயரில் ஏற்கெனவே என்னிடம் இருந்த மூன்று தொகுதிகளையும் அலைந்துலையும் வாழ்வில் எங்கோ தொலைத்துவிட்டேன். ‘குற்றமும் தண்டனையும்’ஐ தமிழில் மொழிபெயர்த்த எம்.ஏ.சுசீலா தஸ்தயேவ்ஸ்கியின் Idiot ஐத் தமிழில் ‘அசடன்’ஆக மொழிபெயர்;த்திருக்கிறார். பாரதி புக் ஹவுஸ் அந்நூலை வெளியிட்டிருக்கிறது. மாக்ஸிம் கார்க்கியின் ‘யான் பெற்ற பயிற்சிகள்’ (தமிழாக்கம்: ஆர்.ராமநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), ஜெர்மெயின் கிரீரின் ‘பாலற்ற பெண்பால்: பெண்பால் நபும்சகம்’ (தமிழாக்கம்: ராஜ்கௌதமன், விடியல்), சார்த்தரின் ‘சொற்கள்’ (தமிழாக்கம்: பரசுராம், தோழமை), ‘கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு’ (கையில் ஏந்தி வைத்துப் படிக்க இயலாத அளவு கனமுடையது- தமிழாக்கம்: ஏ.சீனிவாசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), மாம்மே ப்ராடர்சனின் ‘வால்ட்டர் பெஞ்சமின்: நிலை மறுக்கும் வாழ்வு’ (தமிழாக்கம்:எஸ்.பாலச்சந்திரன், விடியல்), கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் (எஸ்.வி.ராஜதுரை-வ.கீதா – விடியல்), டிராட்ஸ்கி என் வாழ்க்கை (தமிழில்:துரை.மடங்கன் - விடியல்) ஆகிய நூல்கள் இம்முறை வாங்கியவைகளுள் குறிப்பிடத்தகுந்தவை.

மொழிபெயர்ப்பென்பது மிகக் கடினமான கலை. அதைச் செய்ய அளவிறந்த பொறுமையும் மூலமொழியிலும் பெயர்க்கும் மொழியிலும் தெளிந்த அறிவும் அவசியம். மூலமொழிக்கு நியாயம் சேர்க்கும் அதேசமயம், பெயர்க்கப்படும் மொழியின் உச்சபட்ச பயன்பாட்டிலும் கவனஞ் செலுத்த வேண்டும். மூலமொழியின் நிலம், அரசியல் பின்புலம், பண்பாடு என்பன பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும். உலக இலக்கியங்களையும், மானுடத்தைச் செழுமையுறச் செய்த (அல்லது, தம்மால் முடிந்தவரை முயற்சித்த) கோட்பாடுகளையும் தத்துவங்களையும் தமிழில் மொழியாக்கம் செய்துதரும் கைகளைத் தொட்டு வணங்கத் தோன்றுகிறது. எந்தவொரு படைப்பும் தாய்மொழியில் வாசிக்கும்போது மூளையில் சென்று படிவதுபோல, பிறமொழிகளில் வாசிக்கும்போது படிவதோ நிலையாகப் பதிவதோ கிடையாது.

இம்முறை புத்தகச் சந்தையில் ஈழம் பற்றிய புத்தகங்கள் நிறையக் காணக் கிடைத்தன. ‘இலங்கையின் பேரினவாதிகளால் காலகாலமாக ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளைத் தமது எழுத்தில் கொணர்ந்து தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தத் தவறினார்கள்’ என்றொரு அதிருப்தி பாதிக்கப்பட்டவர்களிடத்தில் நிலவியது. அதே நேரத்தில், 2009 மே மாதம், பேரழிவு நிகழ்ந்து குருதியின் சூடு ஆறுவதற்குள்ளாகவே கிழக்குப் பதிப்பகம் ‘பிரபாகரன்:வாழ்வும் மரணமும்’என, ‘சுடச் சுட’ஒரு புத்தகம் போட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். எந்த தி.மு.க. இனப்படுகொலைக்கு முதுகு காட்டிக்கொண்டு காங்கிரஸோடு நாற்காலி பேரத்தில் ஈடுபட்டிருந்ததோ, அந்த தி.மு.க.வோடு தோளோடு தோள்நின்ற அருட்தந்தை ஜெகத்கஸ்பர் ‘வீரம் விளைந்த ஈழம் - மறக்க முடியுமா?’என்ற புத்தகத்தின் மூலம் தனது ஆறாத் துயரத்தை 2009இல் வெளியிட்டார். நந்திக்கடலோரத்தில் ஒரு சகாப்தம் நிறைவுற்றது என்ற செய்தி வெளியாகிச் சில நாட்களிலேயே, தலைவர் பிரபாகரன் தமது பத்திரிகையைப் படித்துக்கொண்டிருப்பதுபோல அட்டைப் படம் வெளியிட்டு, மக்களின் எதிர்பார்ப்பைக் காசாக்கி கல்லாவை நிரப்பியது ‘நக்கீரன்’. ஈழத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள, தமிழகத்திலுள்ள சாதாரண சனங்களுக்கு புத்தகங்களன்றி வேறு கதியில்லை என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனாலும், கொலைபடுகளத்தின் ஓலம் ஓய்வதற்குள், ஒரு இனம் தாம் வீழ்ந்துபட்டோம் என்ற திகைப்பிலிருந்து மீள்வதற்குள், அதை விலை பேசி விற்றுவிடும் சில பிழைப்புவாதிகளின் வணிக தந்திரம் சகித்துக்கொள்ளற்பாலதன்று.

2009ஆம் ஆண்டுவரை, ஈழச்சிக்கல் குறித்து விவாதங்களை முன்னெடுக்கும் புத்தகங்கள் குறைவாகவே வெளிவந்திருந்தன. இம்முறை கண்காட்சியில் அந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது. சொல்லப்பட்டு வரும் பல்வேறு வரலாறுகளிலிருந்து தீர்க்கமான வரலாற்றை (அப்படியொரு வரலாறு மனிதர்களால் அறிந்கொள்ளச் சாத்தியமற்றதெனினும்) வந்துசேரும் நோக்கில் ஈழம் பற்றி மேலும் சில அபுனைவு (அவற்றுள் அதிபுனைவுகளும் உண்டு) நூல்களை வாங்கினேன். ஏனையவர்களுக்குப் பயன்படக்கூடும் என்பதனால் அந்தப் புத்தக விபரத்தைத் தருகிறேன்.

நூல்களின் பட்டியல்: இலங்கையில் சமாதானம் பேசுதல்: முயற்சிகள், தோல்விகள், படிப்பினைகள் (கலாநிதி குமார் ரூபசிங்க – அடையாளம்), போர் உலா (கப்ரன் மலரவன் - விடியல்), கூண்டு (கார்டன் வைஸ் - தமிழில்: கானகன் - காலச்சுவடு, வாழ்புலம் இழந்த துயர் (மு.புஷ்பராஜன்-சாளரம்), ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா? (கலையரசன்-வடலி), இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும் (உதயன்-விஜயன், விடியல் பதிப்பகம்), இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும் (சி.சிவசேகரம்-கீழைக்காற்று), இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி கொலையாளிகளும் அப்பாவிகளும் (ஜெய.ஆ.இராமநாதன்), இலங்கை: ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு அறிக்கை (தமிழில்:பூங்குழலி, புதுமலர் மற்றும் தலித் முரசு வெளியீடு),கொலை மறைக்கும் அரசியல் (சேனன் - உயிர்மை),தமிழினப் படுகொலைகள் 1956 – 2008 (வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் - மனிதம் வெளியீடு) இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? (நிதின் கோகலே – கிழக்கு), விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு (விடுதலை இராசேந்திரன் - பெரியார் திராவிடக் கழக வெளியீடு), ஈழம் போர்நிலம் (தீபச்செல்வன் - தோழமை வெளியீடு), ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (கணேசன் ஐயர் - இனியொரு வெளியீடு), மகாவம்ச: சிங்களர் கதை (வில்ஹெம் கெய்கர்- தமிழில்:எஸ்.பொ. – மித்ர பதிப்பகம்), வாய்மையின் வெற்றி: ராஜீவ் காந்தி படுகொலை புலனாய்வு (டி.ஆர்.கார்த்திகேயன், ராதா வினோத் ராஜூ - தமிழில்:எஸ்.சந்திரமௌலி – ராஜராஜன் பதிப்பகம்). மேற்குறிப்பிடப்பட்டவற்றுள் சில புத்தகங்கள் ஏற்கெனவே என்னிடம் இருந்து தொலைந்துபோனவை.

ஈழத்தில், இந்திய அமைதிப் படையின் காலத்துடன் தொடங்கி, 2003ஆம் ஆண்டுவரையான காலகட்டத்தைப் பேசிய சயந்தனின்‘ஆறாவடு’நாவல் (தமிழினி வெளியீடு) தமிழக வாசகர்களிடையேயும் எழுத்தாளர்களிடையேயும் பரவலான கவனத்தைப் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுவருக்கான புத்தகங்கள் தமிழில் அருகிப் போய்க்கொண்டிருக்குங் காலத்தில், யூமா வாசுகியின் மொழிபெயர்ப்புப் பங்களிப்பினைப் பற்றிச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ‘இப்படியொரு கவித்துவ மொழி நடை கொண்ட கலைஞன், குழந்தைகள் இலக்கியத்தில் எதற்காக இவ்வளவு கவனஞ் செலுத்துகிறார்?’என்று வியந்தார் தோழியொருவர். யூமா வாசுகியின் ‘மஞ்சள் வெயில்’ஐ அண்மையிலே வாசித்து நெகிழ்ந்திருந்தார் அவர். இவ்விலக்கிய வகைமையுள் இரா.நடராசனும் குறிப்பிடத்தகு பங்களிப்பைச் செய்திருக்கிறார். ‘ஆயிஷா’வை வாசித்தவர்கள் அவளை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். குழந்தைகளை ஆத்மார்த்தமாக நேசிக்காமல் அவர்களது உலகைக் குறித்து எழுதவும் மொழிபெயர்க்கவும் முடியாது என்றவாறாக எங்களது உரையாடல் நீண்டது. சின்னஞ்சிறாரது மனவுலகம் குறித்த கவிதைகளையும் பதிவுகளையும் பற்றிப் பேசுகையில், அவ்வகைமையுள் எழுதிவரும் விஷ்ணுபுரம் சரவணன் நினைவில் வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றும் கோபிநாத்தின் ‘ப்ளீஸ்… இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க’என்ற புத்தகம் பல்லாயிரக் கணக்கில் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்ததாக நண்பரொருவர் சொன்னார். இந்தப் புத்தகக் கண்காட்சியில் கோபிநாத்தைப் பார்த்தேன். அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள பெரிய கூட்டமே கண்களில் ஆவல் கொப்பளிக்கக் காத்திருந்தது. அதன்பிறகு மேடையில் உரையாற்றிய கோபிநாத், தன் பலம் அறியாத யானையின் கதையைச் சொல்லி, ‘அப்படித்தான் இந்தியர்களாகிய நாமும்’என்றபோது, ‘சிறுகயிற்றில் கட்டப்பட்டிருந்த பெருங்களிறுகள்’ உற்சாகத்தில் கரவொலி எழுப்பினர். ஆக, புத்தகங்கள் விற்றுத் தீர்வதற்கும், உரையாற்றுகிறபோது நாற்காலிகள் நிறைந்திருக்கவும் நட்சத்திரப் பெறுமதி வேண்டும் என்பதறிக.

‘தாமரை’இதழின் ஆசிரியரும் கம்யூனிஸ்ட் தோழருமாகிய சி.மகேந்திரனின் ‘வீழ்வேனென்று நினைத்தாயோ…’புத்தக வெளியீட்டு விழாவின் ஆரம்பத்தில் பல நாற்காலிகள் காலியாகவே இருந்தன. கூட்ட முடிவில் ஏறத்தாழ எல்லா நாற்காலிகளும் நிறைந்திருக்கக் கண்டேன். அதற்கு தமிழருவி மணியனின் உரையும் ஒரு காரணம் என்று சொல்லின், அந்நேரம் அங்கிருந்தோர் அதை மிகையெனச் சொல்லார். மிகுந்த துயரமும் வெப்பியாரமும் கொதிப்பும் வெறுப்பும் வழியும் குரலில் அவர் சொன்னார்…”சமூக அக்கறையற்ற சொரணையிழந்த இந்த மக்கள் கூட்டத்தினிடையில் வாழ நேர்ந்தமைக்காக வெட்கப்படுகிறேன். விரைவில் செத்துப் போக வேண்டுமென விரும்புகிறேன்.” பிறர்மேல் தமிழெனும் மூச்சை விடும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சிலிருந்து மாறுபட்டு அது உண்மையின் குரலாக ஒலித்தது. பொய்யிலிருந்து அத்தகைய வெம்மை புறப்பட்டு வந்து நெஞ்சைத் தீய்த்திருக்க முடியாது.

ஒவ்வொரு நாட்களும் யாராவது ஒருவருடைய புத்தக வெளியீட்டு விழா கண்காட்சியில் நிகழ்ந்தபடியிருந்தது. மேடையில் அமர்ந்திருக்கும் கருத்துரையாளர்களிடம் மணிக்கணக்கில் செவிகளைக் கையளித்துவிட்டு ‘எப்போதடா கூட்டம் முடியும்?’என்று காத்திருப்பதிலும், புத்தகக் கண்காட்சியினுள் இடம்பெற்ற பதினைந்து நிமிட வெளியீட்டு விழாக்கள் மகிழ்ச்சியளிப்பனவாக இருந்தன. கடந்த ஆண்டு போல, கண்காட்சியைச் சாட்டாக வைத்து நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் குதூகலம் என்ன காரணத்தினாலோ இம்முறை அதிகளவில் கிட்டவில்லை.

முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுமிடத்து இவ்வாண்டு குறிப்பிடத்தகுந்த அளவில் ஈழத்து எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார்கள். கொழும்பிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன், மட்டக்களப்பிலிருந்து உமா வரதராஜன் கல்முனையிலிருந்து அனார் (குடும்பத்துடன் வந்திருந்தார்) கனடாவிலிருந்து சேரன், சுவிட்சர்லாந்திலிருந்து சயந்தன், நோர்வேயிலிருந்து வ.ஐ.ச.ஜெயபாலனும் வந்திருந்தார்கள். ஈழவாணியும் சோமிதரனும் தீபச்செல்வனும் யாழ் தர்மினியும் நானும் சென்னைவாசிகள் என்ற கணக்கெடுப்பினுள் வருகிறோம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுள் அமெரிக்காவிலிருந்து பெருந்தேவியும், நைஜீரியாவிலிருந்து நேசமித்ரனும் வந்திருந்தார்கள். அல்லது, அவர்களை மட்டுமே சந்திக்கவும் பேசவும் முடிந்தது.

கண்காட்சியிலிருந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட கவிஞர் ஒருவர், “ஈழத்தமிழர்கள் ஏன் எப்போதும் புலம்புகிறீர்கள்?”என்று கேட்டார். அவர் குடித்திருந்தார். அந்தக் கேள்வி அவரால் மட்டும் கேட்கப்பட்டதாக அதன் தொனி உணர்த்தவில்லை. பல்லாண்டுகளாகக் கேட்கப்பட்டு வரும் கேள்விதான் அது. “உங்கள் உறவுகளில் சில பேரைக் கொன்றுவிடலாம். உங்கள் வீட்டை எரித்துவிடலாம். உங்களை வேறொரு மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ கொண்டுபோய் இறக்கிவிட்டு விட்டு உங்களிடம் இதே கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?”என்று கேட்க நினைத்தேன். ஆனால், கேட்கவில்லை. வயதானவர்களையும் குடித்திருப்பவர்களையும் வார்த்தைகளால் தானும் காயப்படுத்துவது பண்பாட்டுக்கு முரணானது. மேலும், அவர் நேசிக்கத்தகு கலைஞனாயிருக்கிறார் என்பதனாலும் எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து விலகி விரையவேண்டியதாயிற்று. ‘குடி நீக்கம்’செய்யப்பட்ட வார்த்தைகளே பொருட்படுத்தத் தக்கனவாம்.

இனிமேல் புத்தகங்கள் வாங்குவதில்லை என்ற சங்கற்பம் சங்கற்பமாகவே நின்றுவிட்டது. வாங்கிக் குவித்திருக்கும் புத்தகங்கள் என்னைப் பரிகாசப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன. பட்டியலைக் கணனியில் சேமிக்கும் வேலைகூட இழுபறியாக இருக்கும் நிலையில், எப்படித்தான் இவ்வளவையும் வாசித்து முடிக்கப் போகிறோம் என்று மலைப்பாக இருக்கிறது. புத்தகங்களுக்குள்ளிருந்து, கொலையுண்டவர்களின் குருதி பெருக்கெடுக்கிறது. நம்பிய கொள்கைக்காக மாண்டவர்களது சாம்பல் பறந்து வந்து முகத்தை மூடுகிறது. சரிந்த சாம்ராஜ்ஜியங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து தீனமான குரல்கள் கேட்கின்றன. இழந்த காதலின் பாடல்கள் மிதந்து வருகின்றன. மொழியின் அழகு பித்தேற்றிப் பிதற்றத் தூண்டுகிறது.

புத்தகங்களுக்கு நடுவில் எப்போதும் இருக்க வாய்த்தவர்கள் பாக்கியவதிகள்-பாக்கியவான்கள்.

நன்றி - தீராநதி

19 comments:

தமிழ்நதி said...

இந்தப் பதிவு தமிழ்மணத்தில் தோன்றமாட்டேன் என்கிறது. “நீங்கள் இதில் இணைக்கப்படவில்லை”என்று சொல்கிறது. சந்திரமதி கழுத்து மாங்கல்யம் மாதிரி உங்களில் யாருக்காவது தெரிகிறதா இந்தப் பதிவு?

வவ்வால் said...

உங்கப்பதிவு தமிழ் மணத்தில் தெரியுதே.இன்னும் எத்தனைப்பேர் வாங்கின நூல்களைப்படிக்கவில்லைனு பெருமையாக சொல்லிக்கொண்டே இருப்பதைக்கேட்க வேண்டுமோ தெரியவில்லை :-))

தமிழ்நதி said...

வவ்வால்,(தலைகீழாத் தொங்குவீங்களா?:)) ஒரு நண்பரின் வழிகாட்டுதலால் பதிவினை இணைக்க முடிந்தது. அவருக்கு நன்றி.

”இன்னும் எத்தனை பேர் வாங்கின நுால்களைப் படிக்கவில்லைன்னு பெருமையாக சொல்லிக் கொண்டே இருப்பதைக் கேட்கவேண்டுமோ தெரியவில்லை...”

அது பெருமை இல்லை... கவலை! கைம்மண்ணளவும் கற்கமுடியவில்லையே என்ற ஆற்றாமை நண்பரே...! ஆனாலும், புத்தக ஆசை யாரை விட்டது?

SS JAYAMOHAN said...

"கைநிறையப் புத்தகப்
பைகளைத் தூக்கமாட்டாமல்
தூக்கிக்கொண்டு போனவர்களை,
தனது ஏக்கம் வழியும் கண்களால்
பார்த்துக்கொண்டிருந்த சிறுவன்
ஒருவனை ஒருநாள் கண்டேன்.
அவனது கைகளில் ஒரு
ஆங்கில-தமிழ் அகராதி மட்டும்
இருந்தது "

நீங்கள் சொன்னது, அந்தச்
சிறுவனுக்கு மட்டும் அல்ல,
புத்க்கத் திருவிழாவில்
பங்கேற்ற பெரியவர்கள்
பலருக்கும் பொருந்தும்
என்று கருதுகிறேன்
++

அறிந்து, உணர்ந்து, உங்கள்
மொழியில் சொல்வதென்றால்
"அவதானித்து" அழகாக எழுதி
இருக்கிறீர்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு
உங்கள் எழுத்துக்களை
வாசித்தேன். மகிழ்ச்சி !
++

கதை, கவிதை, இலக்கியம்,
ஆன்மிகம் இவற்றைத் தாண்டி,
கணினி-தொழில் நுட்பம்,
பங்கு வர்த்தகம் நிர்வாக
மேலாண்மை போன்றவற்றிலும்
வெளிவரும் புத்தகங்களை
மக்கள் இப்போது
விரும்பி வாங்குகிறார்கள்.

Anonymous said...

அகதி தமிழ்நதியே இன்னமும் நீ இந்தியாவை விட்டு போகவில்லையா? சீக்கிரம் போ உன்னை போல கிறுக்குகள் என் தாய் மண்ணை நாசம் செய்ய வேண்டாம்.

Vetirmagal said...

விளக்கமாக எழுதி , எங்களால் பார்க்கமுடியாத குறையை தீர்த்து வைத்தீர்கள். நன்றி.

பல பதிப்பகங்களின் பெயர்களை அறிந்து கொண்டேன். அதற்கும் நன்றி.

மொழிபெயர்ப்புகளைப் பற்றி நன்றாக பட்டியல் இட்டுள்ளதள்கு நன்றி.

இந்த தகவல்களை பயன்படுத்தி புத்தகங்களை தபால் வழியாக வாங்க ஆசை.

வணக்கம்.

Garunyan Konfuzius said...

அழகான கட்டுரை, பலமுறையும் சென்னை புத்தககண்காட்சியில் கலந்துகொண்டவன் என்கிற முறையில் அது எப்படி நடந்திருக்கும் என்பதை என்மனத்திரையில் செவ்வனே விரித்தது. பாசாங்கு, படபடப்பற்ற இயலபான வார்த்தைகளால் இக்கட்டுரையை வார்த்த தமிழ்நதிக்கு பாராட்டுக்கள்.

தமிழ்நதி said...

நன்றி எஸ்.எஸ்.ஜெயமோகன். சில எழுத்தாளர்களும் அவ்விதம் -புத்தகங்களின் விலை அதிகமாக இருந்த காரணத்தால் வாங்கமுடியவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார்கள்.

ஒவ்வொரு தடவையும் வலைப்பூவுக்குத் திரும்பிவிட வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால், சஞ்சிகைகளுக்கு எழுத வேண்டியிருப்பதனால் தடைப்பட்டுக்கொண்டே போகிறது. மீண்டும் இந்தச் சோதியில் ஐக்கியமாகிவிட வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட விருப்பம்.
----
”அகதி தமிழ்நதியே இன்னமும் நீ இந்தியாவை விட்டு போகவில்லையா? சீக்கிரம் போ உன்னை போல கிறுக்குகள் என் தாய் மண்ணை நாசம் செய்ய வேண்டாம்.”

சும்மா காமெடி பண்ணாதீங்க அனானி. வெளியிலிருந்து ஆட்கள் வந்தா உங்க இந்தியாவை நாசம் பண்ண வேண்டும்? அதெல்லாம் நீங்களே பண்ணிப்பீங்க...!

அப்புறம், சொந்தப் பெயரில் வந்து பின்னுாட்டம் இடமுடியாத அளவு முதுகெலும்பற்றவனாக இருப்பதைப் பார்க்கிலும், அகதியாக இருப்பதில் மகிழ்ச்சி. “அகதி“என்று அழைத்துப் பெருமை சேர்த்த உங்களுக்கு நன்றி.

வெற்றிமகள்,

நல்லது. பதிப்பக விபரங்களை அடைப்புக்குறிக்குள் இட்டது அதற்காகத்தான். புத்தகங்களை வாங்க இலகுவாக இருக்கும் என்பதனால்.

நன்றி நண்பர் கருணாகரமூர்த்தி,

கடந்த தடவை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தோம். இம்முறையும் நீங்கள் வந்திருக்கலாம். வாங்கிய புத்தகங்களைப் படிக்காமல் அடுத்த கண்காட்சிக்கு வருவதில்லை என்றொரு சங்கற்பம். (சங்கற்பங்களை என்றைக்குக் கணக்கிலெடுத்திருக்கிறோம்?)

ஹேமா (HVL) said...

புத்தகக் கண்காட்சிக்கு வர ஆவலிருந்தாலும் வேற்றூரில் இருப்பதால் முடியவில்லை!

உங்களுடைய 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன். அனைத்தும் மனதை பாதிக்கும் கதைகள்.

வவ்வால் said...

//சாகித்திய அகாதமி விருது இன்னபிற அறிவிக்கப்படும்போது மட்டும் திடீரென்று விழித்துக்கொண்டாற் போல அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனை எண்ணிக்கை உயர்கிறது. கடந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களது ‘சூடிய பூ சூடற்க’நான்காயிரத்து ஐந்நூறு பிரதிகள் விற்கப்பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். இவ்வாண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’இதுவரையில் ஏறத்தாழ மூவாயிரத்து நூற்றியம்பது பிரதிகள் விற்கப்பட்டிருப்பதாக இணையத் தகவலொன்றில் வாசித்தேன்.//

ஆமாம் இப்படி எல்லாம் ஏதேனும் விருது அறிவுப்பு வந்தால் மட்டும் ஓடிப்போய் வாங்குகிறவர்கள் சாமனியர்கள் அல்ல, வாசிப்பும் ,இலக்கியமும் கூடவே பின் தொடரும் நிழலாக வருவதாக எண்ணிக்கொள்ளும் இலக்கிய கர்த்தாக்கள்/ ஆர்வலர்கள், ஆனால் வாங்கியதைப்படிக்க நேரம் இல்லை என்று சொல்லிக்கொள்வார்கள். அப்புறம் ஏன் வாங்குறார்கள் என்றால் புத்தகம் கைவசம் இல்லை என்றால் இலக்கியவாதினு சொல்லிக்க முடியாதல்லவா :-))

//திடீர் நன்னிமித்தங்கள் ஏற்பட்டாலன்றி, இலக்கியம் என்று எங்களைப் போன்றவர்களால் நம்பப்படுகிற எழுத்தை சராசரி மனிதர்கள் கண்டுகொள்வதில்லையோ…? அப்படித்தான் இருக்கவேண்டும்!//

மேலே சொன்னதுப்போல திடீர் இலக்கிய தாகம் சாமனியர்களுக்கு எப்போதுமே ஏற்படுவதில்லை, அவர்களுக்கு சுஜாதாவும் , கல்கியின் பொன்னியின் செல்வனுமே இன்னமும் இலக்கியங்கள். எனவே , திடீர் நன்னிமித்தங்களால் வாங்கியவர்களே , முன்னர் வாங்கியதே படிக்காமல் இருக்குனு என்று சொல்லிக்கொள்கிறார்கள். :-))


//கைநிறையப் புத்தகப் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு போனவர்களை, தனது ஏக்கம் வழியும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை ஒருநாள் கண்டேன். அவனது கைகளில் ஒரு ஆங்கில-தமிழ் அகராதி மட்டும் இருந்தது. தந்தையின் சைக்கிளின் பின்னால் அமர்ந்து திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனான். ‘இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது?’என்று வேதனையாக இருந்தது.//

இது எதற்கோ?

//“குறுகிய காலப் பயிராகிய குறுவைச் சாகுபடி போல, ஆகஸ்டில் எழுத ஆரம்பித்து டிசம்பரில் எழுதிமுடித்து புத்தக வெளியீட்டு விழாவும் நடத்தி, ஜனவரியில் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டுவரப்படும் தயாரிப்புகளில் எனக்கு ஆர்வமில்லை”என்றார் அவர். அத்தகைய படைப்புகளில் எனக்குந்தான் ஆர்வமில்லை.//

ஃபியோடர் தஸ்வோவ்ஸ்கி கேம்ப்ளர்(சூதாடி) நாவலை ஒரு நெருக்கடியினால் நான்கு வாரங்களில் எழுதியதை நீங்களும் உங்கள் சகாவும் இலக்கியமாக கருதமாட்டீர்கள் ,அதனால் ஒன்றும் இலக்கியத்திற்கு பங்கம் வந்துவிடப்போவதில்லை, அவர் எழுதி நூறாண்டு ஆகிடுச்சு, தப்பித்தார் உங்களிடம் இருந்து :-))

ஆனால் அடுத்தவரியிலே ஒரு முன் ஜாமீன் மனுவாக இப்படியும் சொல்லி இருக்கிங்க, ஏன் எனில் தஸ்வோஸ்கி போல உதாரணம் யாராவது சொன்னால் இப்படியும் சொல்லி இருக்கேன் பாருங்க என சொல்ல உதவும் என்றா...

அது என்னவென்றால்....

//கலையின் ஆவேசம் பிடரி பிடித்துத் தள்ள, படைப்பெழுச்சியால் உந்தப்பட்டு ஒரு பித்துநிலையில் அமர்ந்து ஒரே மூச்சில் உன்னதங்களைப் படைக்கக்கூடியவர்கள் மேற்குறித்த விமர்சனக் கத்தியை வைத்துத் தங்கள் கழுத்தை அறுத்துக்கொள்ள வேண்டியதில்லை.//

ஆக உங்களுக்கு தெரியும் யார் கலையின் ஆவேசம் பிடரித்தள்ளி எழுதினாங்க , யார் குறுகியக்காலப்பயிராக பணத்திற்கு எழுதினாங்க என்று :-))

தலைகீழாக தோங்கினாலும் நேராகவே சிந்தை இருக்கும் வவ்வாலுக்கு :-)) முன்,பின் ஆக ஊசலாடுவதில்லை!

தமிழ்நதி said...

நன்றி ஹேமா. “நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது“வாசித்து முடிந்ததும் தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

வவ்வால்,

உங்கள் பின்னுாட்டத்தில் வரிக்கு வரி காழ்ப்புணர்ச்சி தெறிக்கிறது. ஒருவரைப் பிடிக்கவில்லையென்றால், தாக்க வேண்டுமென்று நினைத்துவிட்டால், அவரது எழுத்தை அக்கக்காகப் பிரித்துப் போட்டுவிட முடியும். அப்படியொரு “வீராவேசத்தோடு“புறப்பட்டுவிட்டால் மகோன்னதமான இலக்கியங்கள் என்று பெரும்பான்மையினரால் ஒப்புக்கொள்ளப்பட்டவற்றைக் கூட கிழித்துத் தோரணம் கட்டி விடமுடியும். அவ்விதமிருக்க, நான் எம்மாத்திரம்? அடித்து ஆடுங்கள். இத்தகைய விமர்சனங்களினால் மனம் சுருங்கிச் சோர்ந்த காலங்களை நான் கடந்துவிட்டேன். நோக்கம் இன்னதென்று அறிந்தபிறகு, காழ்ப்புணர்வு மிகுந்த வார்த்தைகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

//கைநிறையப் புத்தகப் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு போனவர்களை, தனது ஏக்கம் வழியும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை ஒருநாள் கண்டேன். அவனது கைகளில் ஒரு ஆங்கில-தமிழ் அகராதி மட்டும் இருந்தது. தந்தையின் சைக்கிளின் பின்னால் அமர்ந்து திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனான். ‘இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது?’என்று வேதனையாக இருந்தது.//

இது எதற்கோ?

எதற்கென்று புரிந்து கொள்ளும் திறனுடையவர்கள் புரிந்துகொள்வார்கள். தலைகீழாகத் தொங்குவதனால் மூளை குழம்பிப் போய் இருப்பவர்களுக்கு அந்த வருத்தம் புரிய வாய்ப்பில்லை.

எப்படியாவது மட்டந் தட்டியே தீர்வதென்று முடிவெடுத்து வந்த பிறகு, ஒவ்வொரு தாக்குதலின் முடிவிலும் எதற்கு நகைப்புக்குறி...? ”நான் அப்படியொன்றும் குரூரன் அல்லது குரூரி இல்லை”என்று நிறுவுவதற்கான முன்ஜாமீனா?

தமிழ்நதி said...

மின்னஞ்சலில் வந்த மடல்.

மிக நேர்த்தியாகவும் விவரித்தும், மொழியளுமையோடு எழுதப்பட்ட கட்டுரை அது.வாசகனாக தங்களுக்கு எனது நன்றிகள்

நான் உங்களுக்குக் கடிதம் எழுதவதற்கான அடிப்படையான செய்தியானது: தாங்கள் வாங்கிய போரும் அமைதியும். கரமசோவ் சகோதரர்கள், அசடன் போன்ற புத்தகங்கள் பற்றியது. அந்தப் புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருந்தும்.. நீங்கள் அவதானித்த அந்த சிறுவனைபோலவே நானும் ஏக்கத்தோடு பார்த்துவிட்டு மட்டும் வந்தேன்.

ஆனாலும் என்னால் முடிந்த அளவுக்கு புத்தகங்களை வாங்கவே செய்தேன்.

நான் மிகநீண்ட நாட்களாக படிக்க எதிர்பார்த்து இருந்த யோன்ஸ்டைன் கார்டரின் ' சோபியின் உலகம் ' பி.ஏ.கிருஷ்ணின் கலங்கிய நதி
மற்றும் இன்னும் சில புத்தகங்களை வாங்கினேன்.

அதில் சோபியின் உலகம் பேரனுபவம்.

நான் பி.ஏ.சுசீலா மொழிபெயர்த்த குற்றமும் தண்டனையும் வாங்கி படித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் முடிக்கவில்லை.

நீங்கள் வாங்கிய , போரும் அமைதியும். கரமசோவ் சகோதரர்கள், அசடன் போன்ற புத்தகங்கள் மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறது?

(படித்திருந்தால் மற்ற நண்பர்கள் யாரேனும் படித்திருந்தால் கேட்டு சொன்னாலும் நலம்) ?

நான் கேட்கும் காரணம் ... சில ஆண்டுகளுக்கு முன் ( 5 ஆண்டுகள் இருக்கலாம்) போரும் அமைதியும் மலிவு விலை பதிப்பொன்று வாங்கி
மிக மோசமாக ஏமாந்தேன். அதன் பொருட்டே அதன் தரத்தை அறிய விரும்புகிறேன்.

நான் மிக ஆவலோடு என் கல்லுரி நாட்களில் வாங்கிய டி.எஸ்.சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் போரும் அமைதியும் வாங்கி (மூர் மார்க்கெட்டில்) ரோஜா முத்தையா நூலகத்துக்கு கொடுத்துவிட்டேன். வீடு வசதியின்மை காரணமாக புத்தகங்களை பூச்சி பிடிக்க ஆரம்பித்துவிட்டது

போரும் அமைதி புத்தகத்தில் ஒரு பாகம் மட்டும் என்னிடம் இருந்தது மற்றொரு காரணம். இப்பொழுது அந்தப் புத்தகம் எப்படி வந்துள்ளது நீங்கள் கூறினால் நான் வாங்க உதவியாக இருக்கும்...


போரும் அமைதியும். கரமசோவ் சகோதரர்கள், அசடன் மூன்றும் சேர்த்து ரூ 3500 ஆகிறது. அந்த புத்தகங்கள் விலைமதிக்கமுடியாத பொக்கிஷங்கள்தாம். ஆனாலும் ஒரு முன் அனுபவத்தைக் கேட்டுக்கொண்டு வாங்குவது நலமென்று எண்ணுகிறேன்..

நீங்கள் தெளிவாக எனக்கு விளக்குவீர்கள் எனும் நம்பிக்கையுடன்

நட்புடன் -
யுவராஜா.

யுவராஜா, உங்கள் மின்னஞ்சலைப் பின்னுாட்டமாக இட்டிருக்கிறேன். புத்தகங்கள் பற்றிய தகவல்களை அறிய ஆவலோடு இருப்பவர்களுக்கு (பெரும்பாலும் வெளிநாட்டில் இருப்பவர்கள்) எனது பதில் சிலசமயம் உதவக்கூடும். மேலுமொரு கட்டுரையால் உடன் பதில் எழுத இயலவில்லை. நாளை எழுதுவேன். நன்றி.

தமிழ்நதி said...

யுவராஜா,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இம்முறை வாங்கிய புத்தகங்களுள் மொழிபெயர்ப்புகளையே என்னளவில் முக்கியமானவையாகக் கருதுகிறேன்.

1.கரமசோவ் சகோதரர்கள் - தஸ்தயேவ்ஸ்கி (2 தொகுதிகளாக - தமிழில்-கவிஞர் புவியரசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

2.அசடன் - தஸ்தயேவ்ஸ்கி (தமிழில் எம்.ஏ.சுசீலா, பாரதி புக் ஹவுஸ்)

3.போரும் வாழ்வும் - டால்ஸ்டாய் (தமிழில் டி.எஸ்.சொக்கலிங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

ஆகிய மூன்றுமே மிக அழகான வடிவமைப்புடன், அருமையான மொழியாக்கத்துடன் வெளிவந்திருக்கின்றன. வாசித்து முடித்து மறந்துவிடுவனவாக அவற்றின் உள்ளடக்கமோ, இரவல் கொடுத்து திருப்பிப் பெற மறந்துபோய் அசிரத்தையாக விட்டுவிடும் விதமாக அவற்றின் வடிவமைப்போ இல்லை. உங்கள் வார்த்தையில் சொன்னால் அவை பொக்கிஷங்களே. வேறொரு பொருளை வாங்குவதை ஒத்திவைத்துவிட்டு நிச்சயம் வாங்குங்கள்.

Vetirmagal said...

ஏற்கனவே ஆர்டர் செய்தாகிவிட்டது. உங்கள் விமரிசனத்தின் ஊக்கத்துடனும் கூட!

நன்றி.

UdayaKumar said...

அன்புள்ள சகோதரிக்கு வணக்கம்.
நானும் கடைசி இரு நாட்களுக்கு முன்பு புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தேன். வாங்க வேண்டும் என்று நினைத்த அத்தனை புத்தகங்களையும் நான் வாங்க வேண்டுமென்றால் நான் இன்னும் பல ஜென்மங்களுக்கு உழைத்து சொத்து சேர்க்க வேண்டும்போல. தாங்கள் சொன்னதைப் போலவே பல பதிப்பகங்கள் கார்பரேட் நிறுவனங்களைப் போலத்தான் புத்தகங்களை விற்கின்றன. கம்யுனிச புத்தகம் கூட விலையைப் பொறுத்தவரையில் முதலாளித்துவத்தைத்தான் வலியுறுத்தியது. . ஈழ இன அழிப்பை விற்றுத் தீர்ப்பதில் பதிப்பகங்கள் பல போட்டா போட்டியில் ஈடுபட்டிருந்தன. இந்த முனைப்பை எல்லா பதிப்பகங்களும் முன்பே செய்திருந்தால் எல்லாத் தமிழர்களுக்கும் தன் இனம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்ற உண்மையை ஒரு சதவீதமாவது கொண்டு சேர்த்திருக்கலாம்(அப்படிச் செய்தால் மட்டும் இலவசத்திற்கு மண்டியிட்டுக் கிடக்கும் எங்கள் முதுகெலும்புகள் நிமிர்ந்துவிடவா போகின்றன?). இன்னும் ஒரு சில படைப்புவாதிகள்! இல்லையில்லை பிழைப்புவாதிகள் , விடுதலைப் புலிகளின் தவறுகள் என்று ஒரு வக்கீலைப் போலவே புத்தகங்களை எழுதியிருந்தார்கள். புலிகள்தான் அழிக்கப்பட்டு விட்டனரே, உயிருத்தெழுந்து வந்து எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்ற தெளிவு இருக்கும்போல. நாம்தான் யோக்கியமானவர்களாயிற்றே, வீடு கட்டுவதற்காக ஒரு செங்களைக் கூட நகர்த்தமாட்டோம். ஆனால் பிறர் கட்டும் வீட்டில் அது குறை இது குறை இன்று சொல்வதில் நாட்டமைகளாகி விடுகிறோம்.சில புத்தகங்களை பதிப்பகங்கள் உண்மையான அக்கறையுடன் வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதே. காலச் சுவடு விற்பனை மையத்திற்கு அருகில் மனுஷ்யபுத்திரன் அவர்களைப் பார்த்தேன். அவர் என்னை அறியார். இருப்பினும் வலியச் சென்று இரண்டு நிமிடம் பேசி விட்டு வந்தேன். வெளியே எதோ ஒரு பேச்சாளர் பேசிக்கொண்டு இருந்தார். கீழே நாற்காலியில் அமர்ந்து கேட்டவர்களைக் காட்டிலும், மேடையில் அமர்ந்திருந்தவர்களே அதிகம் என்று நினைக்கிறேன். பூவுலகின் நண்பர்கள் பதிப்பகம் பல நல்ல நூல்களை வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. சகுனம், திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள், தண்ணீர், சாகாவரம், ஓசோ-ஞானத்தின் பிறப்பிடம், லெனின், மார்க்ஸ், நான் ஏன் நாத்திகன் ஆனேன், தமிழருவி (விகடன் பிரசுரம்), கூடங்குளம் ஏன் கூடாது, எல்லோரும் இன்புற்றிருக்க-இறையன்பு உள்ளிட்ட பன்னிரண்டு புத்தகங்களை மட்டுமே வாங்க முடிந்தது. வாங்க முடியாத புத்தகங்களை மனதில் சுமந்து கொண்டே வீடு திரும்ப வேண்டியிருந்தது. மாதக் கடைசியில் புத்தகம் வாங்கச் செல்பவன் மன நிறைவோடு திரும்ப முடியுமா என்ன?
அன்புடன்
ப. உதயகுமார்

சித்திரவீதிக்காரன் said...

மொழிபெயர்ப்பு நூல்களில் ஆல்பெர் காம்யூவின் அந்நியனும், சிங்கிஸ் ஜத்மாதவின் ஃபேர்வெல் குல்சாரியும், ஜமீலாவும்தான் நான் வாசித்தவை. இனி தங்கள் பட்டியலில் உள்ள சில புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். தினந்தோறும் புத்தகங்களோடுதான் வாழ்வு. நானும் பாக்கியவான்தான் என்று பெருமை கொள்கிறேன். பகிர்விற்கு நன்றி.

UdayaKumar said...

அன்புள்ள சகோதரிக்கு,
ஒவ்வொரு முறை உங்கள் தளத்திற்கு வரும்போதும், நான் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. படித்த புத்தகங்களின் எண்ணிக்கை கடலின் ஒரு துளியே என்ற தெளிவோடு என் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்திக் கொள்கிறேன். மனிதர்களோடு உலாவுவதைக் காட்டிலும் புத்தகங்களில் புதைந்துகொல்வதையே நல்லதென்று நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை வாசிப்பதைக் காட்டிலும் வேறொரு தியானம், தவம் இல்லையென்றே கருதுகிறேன்.

புத்தகங்களைப் படிக்கப் படிக்க
நான் தொலைந்து போகிறேன்,
நான்
காணாமல் போனாலும் பரவாயில்லை
யாரும் கண்டுபிடித்து விடாதீர்கள்.......

அன்புடன்
ப. உதயகுமார்

UdayaKumar said...

அன்புள்ள சகோதரிக்கு,
ஒவ்வொரு முறை உங்கள் தளத்திற்கு வரும்போதும், நான் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. படித்த புத்தகங்களின் எண்ணிக்கை கடலின் ஒரு துளியே என்ற தெளிவோடு என் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்திக் கொள்கிறேன். மனிதர்களோடு உலாவுவதைக் காட்டிலும் புத்தகங்களில் புதைந்துகொல்வதையே நல்லதென்று நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை வாசிப்பதைக் காட்டிலும் வேறொரு தியானம், தவம் இல்லையென்றே கருதுகிறேன்.

புத்தகங்களைப் படிக்கப் படிக்க
நான் தொலைந்து போகிறேன்,
நான்
காணாமல் போனாலும் பரவாயில்லை
யாரும் கண்டுபிடித்து விடாதீர்கள்.......

அன்புடன்
ப. உதயகுமார்

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு