5.08.2012

பேரினவாதத்தின் போராயுதம்


மூன்றாவது முறையாக
மூர்ச்சித்துத் தெளிந்திருக்கிறாள்.
ஒரு மார்பு சிதைக்கப்பட்டும்
குண்டுகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை


அவர்கள் தேடுகிறார்கள்
உதடுகளில் சயனைட்டையும்
இரண்டு நாட்களாக ஆகாரம் வழங்கப்படாத
வயிற்றுக்குள்
கைத்துப்பாக்கியையும்.


அவளது பிறப்புறுப்பினுள்
குறிகளாலும் குண்டாந்தடிகளாலும்
ஒருவர் மாற்றி ஒருவர்
துளாவிப் பார்க்கிறார்கள்
சிறு தடயமும் இல்லை.


எதிரிகளின் ஆயுதக்கிடங்கைக் கொழுத்தும்
எக்களிப்போடு
சிகரெட்டால்
மறைவிடத்து (இப்போது திறந்திருக்கிறது)
மயிரைப் பொசுக்குகிறார்கள்.

வன்மத்தோடு
வயிற்றில் இறங்குகிறது
துப்பாக்கியின் ‘பயனைற்’


விரிந்த கால்களுக்கிடையில்
வடிந்து ஓடிப் பதுங்குகிறது
குருதி.


இராணுவச் சீருடையையும் நட்சத்திரங்களையும்
நேர்த்தியாகச் சரிசெய்தபின்
குறிப்பெழுத வேண்டியிருக்கிறது
ஒரு பயங்கரவாதியைப் பற்றி.



“போர்த் தந்திரோபாயங்களில் ஒன்றாக பாலியல் வல்லுறவு பிரயோகிக்கப்படுவது கொங்கோ, சூடான் போன்ற சில இடங்களில் எங்காவது எப்போதாவது நடக்கும் ஒரு விடயம் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், உண்மை அதனைக் காட்டிலும் மிக மோசமானது. பொஸ்னியா, பர்மா, சிறிலங்கா என பெரும்பாலான இடங்களிலும் பாலியல் வல்லுறவு போர்த் தந்திரங்களில் ஒன்றாகப் பிரயோகிக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். இத்தகைய கொடுமைகளை இழைப்பவர்கள் பல நாடுகளில், பல சம்பவங்களில் தண்டனையிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து அவர்களைத் தப்பிக்க விடுவதானது மேலும் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது.”

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனது மேற்கண்ட வாசகங்கள் இலங்கை அரச தரப்பைக் கொதித்தெழச் செய்தன. இலங்கை போன்ற, ஜனநாயகத்தை ‘கண்ணில் வைத்துப் போற்றும்’ ஒரு நாட்டை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தனது கூற்றின் மூலம் இழிவுபடுத்திவிட்டதாக கடுஞ்சினத்தோடு குற்றஞ்சாட்டினார்கள். பின்னர் வழக்கம்போல, ‘இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் நாடுகளைப் பட்டியலிடும்போது தற்செயலாக இலங்கையின் பெயரும் இடம்பெற்றிருக்கலாம்’என்ற தற்சமாதானத்தின் மூலம் இலங்கை அரச தரப்பு தனது கொதிப்பை ஆற்ற முயன்றது. மேலும், அது தொடர்பான கடிதப் பரிமாற்றங்களின்போது, ‘2006-2009க்கும் இடைப்பட்ட காலத்தில் அவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக அறியவில்லை’என்ற குளிர்ந்த வார்த்தைகளை அமெரிக்கத் தரப்பிடமிருந்து பெற்றதனோடு அடங்கினார்கள்.

ஆனால், ‘இலங்கை அரச படைகள் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் எதையும் இழைக்கவில்லை; அமெரிக்காவும் ஐரோப்பாவின் சில ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புகளும் தேவையற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இலங்கை போன்ற உன்னத தேசத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்’ என்ற வார்த்தைகளை, அதைச் சொல்லும் சிங்கள மேலாதிக்கமே நம்பவில்லை என்பதுதான் உண்மை.
விடுதலைப் புலிகளுடனான போர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே இத்தகைய காடைத்தனத்தை இலங்கையின் அரச படைகள் கட்டவிழ்த்துவிட்டிருந்தன. 1958, 1971, 1983 எனத் தொடர்ந்த இனக்கலவரங்களின்போது தமிழ்ப் பெண்களிடம் தனது ‘ஆண்மை’யை நிரூபித்து வந்திருக்கிறது சிங்கள மேலாதிக்கம்.

‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற அனுமதிச்சீட்டின் மூலமாக எந்தவொரு அத்துமீறலுக்கும் அரசாங்கங்களால் துணிய முடிகிறது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், காஷ்மீரிலும், பொஸ்னியாவிலும், ருவாண்டாவிலும் கெயிட்டியிலும் கிழக்குத் திமோரிலும் என எங்கெங்கும் இருக்கும் பெண்கள், அரச மற்றும் அமைதிப் படைகளின் வக்கிரங்களுக்குப் பலியானதும் தொடர்ந்து பலியாகி வருவதும் அந்த அனுமதிச் சீட்டின் மூலமாகவே. ருவாண்டாவில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்க அறிக்கை கூறுகிறது. 1990இல் 5000 குவைத் பெண்கள் ஈராக்கியத் துருப்புகளால் வல்லுறவுக்காளாக்கப்பட்டனர்.  ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவம் அதே சூறையாடலை ஈராக்கியப் பெண்கள் மீது நிகழ்த்தியது. பொஸ்னியப் பெண்களைச் சிறைப்பிடித்து அடைத்துவைத்து வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பந்தரிக்கச் செய்தபிற்பாடு சேர்பிய இராணுவம் சொன்னது: ‘இனக்கலப்பு செய்தாயிற்று. பொஸ்னியர்களின் தூய்மையைக் கெடுத்துவிட்டோம்’.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினையடுத்து, அமைதிப் படை என்ற பெயரில் ஈழத்தில் கால்பதித்த இந்திய இராணுவம் ஏறத்தாழ எட்டாயிரம் தமிழ்ப்பெண்களை தனது பாலியல் வெறிக்குப் பலியாக்கியிருக்கிறது. உலகெங்கிலும் பெண்ணுடல்களில் களமாடித் தங்கள் கொடியை ஊன்றியவர்கள் விருதுகளாலும் பதக்கங்களாலும் கௌரவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகளுக்கான- பாலியல் வதைகளுக்கெதிரான பெண்கள் அமைப்பு கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறது.
“சராசரியாக, இரண்டு வாரங்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள். உண்மையான எண்ணிக்கை அதனிலும் அதிகமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலான வல்லுறவுகள் அச்சம் காரணமாக வெளியிடப்படுவதில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள்.”

1996ஆம் ஆண்டு மட்டும் 150 தமிழ்ப் பெண்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக ‘சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்’என்ற பத்திரிகை ஜனவரி, 1997 இல் செய்தி வெளியிட்டிருந்தது.

‘இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் இந்நாட்டின் குடிமக்களே’என்று தொடர்ந்து அழுத்திச் சொல்லிவருகிறது இலங்கை அரசு. மேலும், தன்னுடைய இராணுவத்தின் கட்டுப்பாடு, கடமையுணர்வு, தேசாபிமானம் குறித்தெல்லாம் உலக அரங்கில் பெருந்தன்மை பொங்கிப் பிரவகிக்கப் பேசி வருகிறது. மனிதவுரிமை அமைப்புகளோ பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்புடைய எவருமோ முறைப்பாடு செய்யும் வேளைகளில், ‘இது விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பொய்ப்பிரச்சாரம்’என்று ஒரேயடியாக மறுத்துவிடுகிறது. அல்லது, விசாரணை என்ற பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்த முயல்கிறது. மறுக்கவியலாத ஆதாரங்களோடு முன்வைத்தால், ‘நீ மட்டும் ஒழுங்கோ…?’என்ற அடாவடித்தனமான கேள்விகளோடு குற்றச்சாட்டுக்களைப் புறந்தள்ளுகிறது. இலங்கையில் நிகழ்ந்தேறிய பல்லாயிரக் கணக்கான பாலியல் வன்கொடுமைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படாமல் அதிகாரங்களால் மறைக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், அத்தகைய எத்தனங்களையும் மீறி வெளிவந்த சில கொடூர சம்பவங்கள் நெஞ்சை அதிர வைப்பனவாக இருக்கின்றன.

ஆகஸ்ட் 7, 1996 - கிருஷாந்தி குமாரசாமி 18 வயதே ஆன, எதிர்காலம் பற்றிய கனவுகள் நிறைந்திருந்த பள்ளி மாணவி. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முதல் அமர்வை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கிருஷாந்தியை யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலிலுள்ள கைதடி விசாரணைச் சாவடியில் இருந்த சிப்பாய்கள் விசாரணைக்கென்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார்கள். அந்தச் சம்பவத்தை வீதி வழியே சென்றுகொண்டிருந்த சிலர் அவதானித்திருக்கிறார்கள். நேரம் கடந்தும் வீடு திரும்பாத கிருஷாந்தியைத் தேடி அவரது தாயார் ராசம்மா, கிருஷாந்தியின் தம்பி பிரணவன், குடும்ப நண்பர் கிருபாமூர்த்தி மூவரும் போயிருக்கிறார்கள். அவர்களும் திரும்பி வரவில்லை. 45 நாட்களின் பின் கிருஷாந்தி உட்பட நால்வரது உடல்களும் இராணுவ முகாமின் எல்லைக்குட்பட்டிருந்த செம்மணியிலிருந்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்டன.
மனிதவுரிமை அமைப்புகளின் போராட்டங்கள், தமிழ் அரசியல்வாதிகள்-உறவினர்களின் (செல்வாக்கு உள்ளவர்கள்) பகீரதப் பிரயத்தனத்தின் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் ஒருவனான கோப்ரல் தேவகே சோமரட்ண ராஜபக்சே என்பவன் தனது வாக்குமூலத்தில் கீழ்வருமாறு சொல்கிறான்:

“எங்களில் ஆறாவது நபர் கிருஷாந்தியோடு வல்லுறவு கொள்ள முயன்றபோது தனக்கு ஐந்து நிமிடங்கள் இடைவெளி அளிக்குமாறு கெஞ்சினாள். மேலும், தண்ணீர் தருமாறு விடாமல் கெஞ்சிக்கொண்டிருந்தாள். நாங்கள் அவளுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை.”

சோமரட்ண ராஜபக்சேயின் ஒப்புதல் வாக்குமூலம் ‘செம்மணி புதைகுழி’என பின்னர் அழைக்கப்பட்ட பாரிய புதைகுழிக்கு இட்டுச் சென்றது. அங்கே ஏறத்தாழ நானூறு தமிழர்களது உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் அரச படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களே அவர்கள். அவர்களது உடல்கள் சித்திரவதைகளால் சிதைந்து போயிருந்தன. கிருஷாந்தியினதும் அவரது சகோதரனதும் உடல்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு கறுப்பு பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டிருந்தது. தாயினதும், குடும்ப நண்பரதும் கழுத்துகளிலும் உடலிலும் கயிறு இறுக்கப்பட்டிருந்தது. இறுதிக் கிரியைகளுக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட உடல்கள், இரண்டு மணி நேரத்துக்குள் தகனம் செய்யப்பட்டுவிட வேண்டும் என அரச தரப்பினரால் உறவினர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.
கிருஷாந்தியின் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அது நிறைவேற்றப்படவில்லையாயினும், தன்னை உலக அரங்கில் நீதியின் பாதுகாவலனாக நிலைநிறுத்துவதற்கு அந்தத் தீர்ப்பை இன்றுவரை இலங்கை அரசு பயன்படுத்திவருகிறது.

“வீண் அவதூறை அள்ளிச் சொரிகிறார்கள்”என்று கண்கசக்கும் பேரினவாதிகளும் கிருஷாந்திக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறிந்தே இருக்கிறார்கள். இந்த வழக்கு அதிர்ச்சி தரும் வகையில் மனிதப் புதைகுழிகளுக்கு இட்டுச் சென்றதானது, தடயங்களை துடைத்தழித்து குற்றங்களிலிருந்து தப்பிக்கும் பாடத்தை அவர்களுக்குக் கற்பித்தது.
இறந்தகாலம் கற்பித்த, தடயம் அழிக்கும் உத்தியை, காவற்துறையினர் கோணேஸ்வரி படுகொலையில் பிரயோகித்தார்கள். 

கோணேஸ்வரி முருகேசப்பிள்ளை என்ற 35 வயதான, நான்கு குழந்தைகளுக்குத் தாயான பெண், 1997 மே 17ஆம் திகதியன்று அம்பாறை மாவட்டத்திலிருந்து ‘சென்றல் காம்ப் கொலனி’யிலிருந்த பொலிசாரால் இரவு பதினொரு மணியளவில் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டபின் கொல்லப்பட்டார். நான்கு வயதான மகள் மட்டுமே அந்தக் கொடூர நிகழ்வுக்குச் சாட்சியாக இருந்தாள். அவரது ஏனைய மூன்று பிள்ளைகளும் உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். கோணேஸ்வரி கொலை செய்யப்பட்ட விதம் ‘கசாப்புக்கடைத்தனமானது’என்று மனிதவுரிமை அமைப்புகளால் பதிவுசெய்யப்பட்டது. கோணேஸ்வரியின் பிறப்புறுப்பினுள் கைக்குண்டு ஒன்றைத் திணித்து அதை வெடிக்கவைத்து வல்லுறவின் தடயங்களை அழித்திருந்தார்கள் இலங்கையின் காவற்துறையைச் சேர்ந்த அந்த நான்கு பேரும்.

28 டிசம்பர், 1999 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் என்ற 29 வயதான பெண் (ஒரு பெண் குழந்தைக்குத் தாய்)அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார். சாரதாம்பாளின் தந்தையையும் சகோதரரையும் கட்டிப் போட்டுவிட்டு அவரைத் தூக்கிச் சென்றவர்கள் புங்குடுதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினரே. மறுநாட் காலை அந்தப் பெண்ணின் உயிரும் ஆடையுமற்ற உடல் புதர்களால் மூடியிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து நாடளாவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. விசாரணை நடத்த அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு ‘நீதி’நிலைநாட்டப்பட்டது.

2001ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சிவரஜனி, விமலாதேவி என்ற இரண்டு பெண்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் வைத்து பொலிசாராலும் அந்த விடுதியின் ஊழியர்களாலும் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். முறைப்பாட்டைப் பதிவு செய்யச் சென்றபோது அவர்கள் வேசிகளெனத் தூற்றப்பட்டிருக்கிறார்கள்.
அதேபோலவே, குண்டு வைத்திருப்பதாகக் கூறி ஒரு பெண் நடுவீதியில் மக்கள் பார்த்திருக்கத் துகிலுரியப்பட்டார். (விசாரணையின் பிறகு அவர் ஒரு சிங்களப் பெண் என்பது தெரியவந்தது.) அவர் குண்டு வைத்திருக்கவில்லையென அறிந்தவுடன் அவரையும் வேசியாக்கிவிட்டனர். அதாவது, பாதுகாப்புப் படையினரை நிரபராதிகளாக்க வேண்டி சம்பந்தப்பட்ட பெண்களை வேசிகளாக்கினர். கவனிக்கவும்… அவர்கள் பாலியல் தொழிலாளர்களுமல்லர்; வேசிகள்! வேசிகள், பயங்கரவாதிகள் போன்றவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்ற  பொதுப்புத்தியை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். கோணேஸ்வரி, ஐடா கமாலிற்றா, சிவமணி, விஜிகலா கூட குற்றவாளிகளால் மறைமுகமாக அவ்வாறு பழிசுமத்தப்பட்டவர்களே.

இலங்கை போன்றதொரு நாட்டின் நீதிமன்றங்களும் அரசுசார்ந்த குற்றவாளிகளைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடுடையனவாக இருக்கின்றன. காரணம், அவர்கள் அரச இயந்திரத்தின் சக்கரங்கள். அவர்கள் மீது முற்று முழுதான குற்றஞ்சாட்டுதல்களைச் சுமத்தும்போது அரசும் அந்தக் குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. அதனால், குற்றவாளிகளை ஜாமீனில் விடுவித்துவிடுகிறார்கள். அல்லது, வழக்குகளை இழுத்தடிப்பதன் வழியாக சம்பந்தப்பட்டவர்களை சலிப்படையவும் பின்வாங்கவும் செய்துவிடுகிறார்கள். சாட்சிகள் மௌனமாக இருக்கும்படி மிரட்டப்படுகின்றனர். நாட்டை விட்டு வெளியேறும்படியாக அதிகாரங்களால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அல்லது குற்றவாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிடுகிறார்கள். அதாவது, பாலியல் குற்றத்தில் ஈடுபடக்கூடிய ஒரு புதிய இடம் அவர்களுக்கு அருளப்பட்டுவிடுகிறது.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதியன்று, தர்ஷினி இளையதம்பி என்ற 20 வயதான இளம்பெண், புங்குடுதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டபின் கடற்படை முகாமுக்கு அருகிலிருந்த பாழடைந்த கிணறொன்றினுள் சடலமாகப் போடப்பட்டிருந்தார். கொல்லப்படுவதன் முன், அவர் பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கான தடயங்களை அவரது உடல் கொண்டிருந்ததாக வைத்தியசாலைச் சான்றிதழ் கூறுகிறது. உடலின் பல இடங்களில் நகக்கீறல்கள், பற்கடிகளும் காணப்பட்டிருந்ததுடன், அவரது ஒரு மார்பு மிக மோசமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. தர்ஷினியின் கொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும்படி கடற்படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். வழக்கம்போலவே விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தின் வங்காலை என்ற இடத்தில் நடந்தேறிய கொடூரம் மனிதநேயமுள்ள எவராலும் மறக்கப்படக் கூடியதன்று. அந்தக் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் (மேரி மெற்றலின் - மூர்த்தி மார்ட்டின், அவர்களது 9 வயதான மகள் லக்ஷிகா, 7 வயதான மகன் டிலக்ஷன் ஆகியோர் கொடூரமான முறையில் உளியாலும் துப்பாக்கியின் பின்புறமுள்ள கூர்முனையாலும் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். தாயைத் தவிர ஏனைய மூவரும் வெட்டுக் காயங்களுடன் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கவிடப்பட்டிருந்தனர். மேரி மெற்றலின் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் பெருகிய நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்தார். 9 வயதான லக்ஷிகாவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தார். அன்று காலையில் தேடுதல் சோதனை நடத்த வந்த இராணுவத்தினரே அந்தக் குரூரமான கொலைகளைச் செய்தவர்களென அந்தக் கிராமத்தினர் சாட்சியமளித்தனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் சில உதாரணங்களே. வெளிவந்தவை சில ஆயிரம். வெளிவராதவை பல்லாயிரம்.
‘ஆயிரத்தில் ஒரு சம்பவம் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக அல்லது கவனத்திற்குக்  கொண்டுவரப்படுவதாக’மனிதவுரிமை அமைப்புகள் கூறுகின்றன.

பாதுகாப்புப் (?) படைகளால் பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிருடன் விடப்படும் பெண்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ‘உனக்கு நேர்ந்ததை வெளியில் சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம்’என்று மிரட்டப்படுகிறார்கள். ஆகவே, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை உள்ளுக்குள் வைத்து மறுகியபடி காலமெல்லாம் கொடுங்கனவுகளால் துரத்தப்படுபவர்களாகவே பெரும்பாலான பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

புஷ்பமலர் (கச்சாய்), பாலேஸ்வரி (கெருடாவில்), வாசுகி (யாழ்ப்பாணம்), தனலட்சுமி (கிளிவெட்டி, மூதூர்), லெட்சுமிப்பிள்ளை (திருகோணமலை-மகன்களுக்கு முன்னால் வைத்து வதையும் வல்லுறவும்) சிறீறஞ்சனி, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி (சரசாலை, தாய்-மகள்-சிறிய தாய் உறவு), சந்திரகலா கிருஷ்ணபிள்ளை (அளவை),  கணபதிப்பிள்ளை சொர்ணம்மா (கல்குடா), தேனுகா (10 வயது, பத்தமேனி, அச்சுவேலி), சிவசோதி (மண்டூர்), வனிதா (மயிலம்பாவெளி), நவமணி, ஜெயந்தி, மேகலா (ஜெயந்தியும் மேகலாவும் நவமணியின் மகள்கள் - தியாவெட்டுவான்), நூர் லெப்பை சித்தி உம்மா (ஓட்டமாவடி), அலி முஹம்மத் அதாபியா(ஏறாவூர்), காளிக்குட்டி ராகினி (பனிச்சங்கேணி), கிருபாதேவி (மட்டுவில் வடக்கு), விஜயராணி (அராலி), புவனேஸ்வரி (மந்துவில்-உறவினர் மூவர் கொலை செய்யப்பட்டபின்பு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர்), நாகலிங்கம் பவானி (திருநெல்வேலி), சின்னப்பு பாக்கியம் (மாவடிவேம்பு), ரஜனி (வாழைச்சேனை), பாலந்தி (6 வயது, அச்சுவேலி), பிறேமினி தனுஷ்கோடி, ரஜனி வேலாயுதப்பிள்ளை (உரும்பிராய்), தங்கநாயகி (அம்பாறை), சந்திரகலா (அல்வாய்), யோகலிங்கம் விஜிதா(நீர்கொழும்பு), சியாமளா (பளை), அமுதா (விடத்தல்தீவு, மன்னார்), சவரி மெடலின் (சொறிக்கல்முனை), ஐடா கமாலிற்றா (பள்ளிமுனை, மன்னார்), செல்வராணி (மீசாலை), அஜந்தனா (அரியாலை), ரஜனி (பனிச்சங்கேணி), பவானி (திருநெல்வேலி), விஜயலட்சுமி (கல்மடு, வாழைச்சேனை), ஆனந்தி (செட்டிப்பாளையம்).
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை இலங்கை அரச படைகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சிலரது பெயர்கள். அவர்களுள் கொல்லப்பட்டவர்களும் ‘கருணை கூர்ந்து’தப்ப விடப்பட்டவர்களும் உள்ளடங்குவர்.


கொலைபடு களத்தில் வீழ்ந்தவர்கள் இலக்கங்களாக்கப்பட்டு விடுதல் போல, பாலியல் வெறிக்குப் பலியானவர்கள் காலவோட்டத்தில் வெறும் பெயர்களும் சம்பவங்களும் ஆக்கப்பட்டுவிட்டனர்.

மெல்லிய சோகம் கலந்த நீண்ட கண்களும் அழகான தமிழ் உச்சரிப்பும் கொண்ட இசைப்பிரியாவை விடுதலைப் புலிகளின் ‘நிதர்சனம்’தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அவர் ஊடகம் மற்றும் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இசை, நடனம், நடிப்புத்திறன் என பல்வகை படைப்பாளுமைகளும் கொண்ட பெண் எனவும் பின்னர் அறியக்கிடைத்தது. 2009 மே மாத பேரழிவிற்குப் பிறகு வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், கைகள் பின்னுக்குக் கட்டப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட தடயங்களோடு உயிரற்றுக் கிடந்த இசைப்பிரியாவின் உடலை உலகம் பார்த்தது. இசைப்பிரியா பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
“இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் நாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளது”என்று முதன்முறையாக அந்தக் காணொளியை வெளியிட்ட பிரித்தானிய தொலைக்காட்சி நிலையமாகிய ‘சானல் 4’அறிவித்தது.
ஆனால், வழக்கம்போல, தனது பழக்கப்பட்ட ‘கனவான்’ வார்த்தைகளால் இலங்கை அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டையும் மறுத்திருக்கிறது. இசைப்பிரியா அரசுக்கெதிரான போர் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அது கூறுகிறது. ‘அவ்வாறெனில், கைகள் பின்புறம் கட்டப்பட்டிருப்பது எதனால்?’என்ற கேள்விக்கு அதனிடம் பதில் இல்லை.

2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த பேரனர்த்தத்தின் பிற்பாடு காயங்களோடு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில் பலர் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததாக அங்கு அவ்வேளையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 ‘விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டுவிட்டோம்’என்ற ஆரவாரத்தோடு, இலட்சக்கணக்கான மக்களை விலங்குகளைப் போன்று- சுகாதார, உணவு, குடிநீர், இடவசதி அற்ற தடுப்புமுகாம்களில் அடைத்துவைத்திருந்தது இலங்கை அரசாங்கம். அவை பெயருக்குத்தான் தடுப்புமுகாம்களாக இருந்தனவேயன்றி, உண்மையில் அவை எஞ்சிய விடுதலைப் புலிகளை வடிகட்டுவதற்கான வதைமுகாம்களாகவே அமைந்திருந்தன. இன்னமும்கூட பல்லாயிரக்கணக்கான மக்கள், மீள்குடியேற்றப்படாமல், அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வவுனியாவின் தடுப்பு முகாமொன்றில் பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம் இது:

“முகாமிலிருந்த பல பெண்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வரவேயில்லை. நான் இருந்த முகாமில், குளிக்கும் இடத்திற்கு அருகில் நான்கு பேரின் சடலங்களை நாங்கள் பார்த்தோம். அவர்களில் மூவர் பெண்கள். அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம். அங்குள்ள அதிகாரிகளிடம் நாங்கள் கேள்விகள் எதையும் கேட்க அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் மௌனமாக அந்தச் சடலங்களைக் கடந்து சென்றோம்.”

முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள்  தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி, தென்பகுதியிலுள்ள புனர்வாழ்வு முகாம்கள் என்று சொல்லப்பட்ட வதைமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விபரங்கள் ஏதும் அறியப்படவில்லை. அவர்களுட் சிலர் அரசாங்கத்தின் கருணையால் ‘புனர்வாழ்வு’ அளிக்கப்பட்டு மீள்குடியேற்றப் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அத்தகையோருக்கு எந்தவொரு வாழ்வாதாரமும் இல்லை. இறந்தகாலத்தின் கொடுங்கனவுகளோடும் வறுமையோடும் ஏதிலிகளாக வாழ விதிக்கப்பட்டவர்களாயினர்.

மீள்குடியேற்றத்திற்குப் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்கிறது. பெரும்பாலான ஆண்கள் போருக்குப் பலியாகிவிட்டார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் காணாமற் போய்விட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தனியாக விடப்பட்ட பெண்கள் அரசபடைகளின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு தொடர்ந்து ஆளாகிவருகின்றனர்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு இன்னபிற சொற்கள் ஈழமண்ணைப் பொறுத்தமட்டில் தம்மளவில் பொருளுடையவை அன்று. அல்லது அபத்தமானவை. மேற்கண்டவர்களில் பலர் சித்தம் கலங்கிப் பேதலித்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு உயிரோடு விடப்பட்டவர்களின் மனதில் மீண்டும் மீண்டும் அந்தக் கொடூர சம்பவம் நிகழ்த்திப் பார்க்கப்படுவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களால் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லவே முடிவதில்லை என்றும் அந்த மனவுளைச்சலையும் மீறி உறங்க நேர்கையில் தாம் துன்புறுத்தப்பட்ட, இழிவுசெய்யப்பட்ட, மரணத்திற்கு நெருக்கமாகக் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் துர்க்கனவுகளாகத் தோன்றி நடு இரவுகளில் விழித்தெழத் தூண்டி விடுவதாகவும் சொல்கிறார்கள். பாலியல் வதையை எதிர்கொண்ட பலர் ஆழ்ந்த மௌனத்துக்குள் புதைந்து போய்விடுகிறார்கள். அவ்வாறு, சமூக மதிப்பில் தாழ்ந்துபோய்விடுவேனோ என்று அஞ்சி, தனக்கு நடந்ததை மற்றவர்களிடம் சொல்லாது மௌனத்துள் ஆழ்ந்திருந்த பெண்களில் பலர் தற்கொலையில், புத்தி சுவாதீனமிழப்பில் முடிந்திருக்கிறார்கள் என்பதற்கான உதாரணங்களை ஈழத்திலும் காணலாம்.

“நான் எனது கணவருடன் வாழும் தகுதியிலிருந்து இறங்கிவிட்டேனோ என்று அஞ்சுகிறேன்.”என்று, பாதிக்கப்பட்ட பல பெண்கள் உளவியலாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் பல பெண்களும் இளைஞர்களும் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இந்நிலையில், பிரித்தானியாவில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றும் ஒருவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

“யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் இரவில் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அலறுகிறார்கள். சிலரது பிறப்புறுப்புகளில் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்கள் இருக்கின்றன. சிலர் எவரையும் (ஆண்களோ பெண்களோ) அருகில் நெருங்க விடுவதில்லை. அருகில் போனால் பயந்துபோய் உரத்த குரலில் கூச்சலிடுகிறார்கள். துர்நினைவுகள் அவர்களைத் துரத்துகின்றன. என்னிடம் பேசிய ஒரு பெண், 18 மாதங்களாகத் தொடர்ந்து தன்னை இராணுவத்தினர் பாலியல் வதைகளுக்குட்படுத்தி வந்துள்ளதாகச் சொன்னார். இந்த விடயத்தை வெளியில் சொன்னால் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள்.”

போரில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சில அறங்கள், விதிமுறைகள் உள்ளன. போர்க்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டவர்களது மனிதாபிமான உரிமைகள் பற்றிய விளக்கப் பகுதியில், நான்காவது ஜெனிவா உடன்படிக்கையில் (27வது ஆவணம்) கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது.

“போரில் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்கள், அவர்களது கௌரவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பாக பாலியல் வல்லுறவு, வலுக்கட்டாயமான விபச்சாரம் மற்றும் சுயமதிப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு தாக்குதல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.”

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த பெண் போராளி ஒருவர் சொல்வதைக் கேளுங்கள்:
“உயிரற்ற சக பெண்போராளியின் உடலை எதிரி கையகப்படுத்த விட்டுச் செல்வது மிகவும் அபாயகரமானது. முடிந்தவரையில், எனது உயிரைப் பணயம் வைத்தேனும் நான் களத்திலிருந்து அந்த உடலைத் தூக்கிச் செல்லவே முயல்வேன். காரணம், அந்த உடல் எவ்விதம் இழிவுசெய்யப்படும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.”

மேற்குறிப்பிடப்படும் வார்த்தைகளை இணையத்தில் காணக் கிடைக்கிற காணொளிகளோடு நாம் பொருத்திப் பார்க்கலாம். கோணேஸ்வரி போன்ற பெண்களது பிறப்புறுப்புகளே கைக்குண்டுகளால் சிதறடிக்கப்படும்போது, பெண் போராளிகள் எத்தகைய சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதும் கலங்கடிப்பதுமாகும். போரில் காயம்பட்ட காரணத்தால் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாமல் போன பெண் போராளிகள் சிலரது தலைகள் மண்வெட்டிகளால் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. குற்றுயிராகக் கிடந்த அவர்களை இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும் பிறப்புறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும் கொன்றிருக்கிறது. ஆடைகள் அகற்றப்பட்ட உடல்களில் மறைவிடங்கள் குதறப்பட்டிருக்கின்றன. உதடுகள் துண்டாடப்பட்டிருக்கின்றன. மார்புகள் கடிக்கப்பட்டும் அரியப்பட்டுமிருக்கின்றன. பாலுறுப்புகளுள் போத்தல்களும் கம்பிகளும் செலுத்தி குடையப்பட்டிருக்கின்றன. நிர்வாணமான உடல்களை இராணுவத்தினர் கால்களால் உதைத்துக் களிகூரும் காட்சிகளைக் காணும்போதில், போராளிகளின் அந்தரங்கப் பகுதிகளைப் பற்றி ஆபாசமான வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்படுவதைக் கேட்கும்போதில், இறந்துபோன மிருகங்களின் உடல்களுக்கு அளிக்கப்படும் மரியாதை கூட மறுக்கப்படும்போதில், ‘இக்கணமே இவ்வுலகம் வெடித்துச் சாம்பலாகி விடக்கூடாதா?’என்று சபிக்கவே தோன்றுகிறது.

சமூகத்தின் பாரபட்சமான கண்களில் பெண் என்பவள் ஏற்கெனவே இரண்டாவது பிரஜையாகவே பார்க்கப்பட்டு வருகிறாள். ஒப்பீட்டளவில் ஆணுக்குள்ள சமூக மதிப்பு அவளுக்குக் கிடைப்பதில்லை. பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மேலும் ஒரு படி சமூகத்தின் கண்களில் இறங்கிவிடுகிறாள். சமூகத்தின் கண்களில் அவள் ‘களங்கப்பட்டவள்’. ஆகவே, பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டதை வெளிப்படுத்துவதற்குத் தயங்குகிறாள். சில விதிவிலக்குகள் தவிர்த்து குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறான வெளிப்படுத்தலை அவமானமாகவே கருதுகிறார்கள். காலகாலமாகக் கட்டி வளர்க்கப்பட்ட கலாச்சார மதிப்பீடுகளிலிருந்து சரிந்துவிடுவோமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஒரு இனத்தை இழிவுசெய்ய நினைக்கும் எதிரிகளுக்கு எளிய கருவியாக அமைந்துவிடுகிறது பெண்ணுடல். அதிலும், நிலத்தையும் பெண்ணையும் சொத்துடமையாகக் கருதும் சமூகத்தின் பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்குவதன் வழியாக அந்த இனத்தையும் அதன் ஆண்களையும் வெற்றிகொண்டுவிடுவதாக நினைக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். பொஸ்னியப் பெண்களது உடல்களுள் தங்கள் வக்கிரத்தை ஊற்றியபின் சேர்பியப் படைகள் சொன்ன வார்த்தைகள் அந்த அடிப்படையிலிருந்து எழுந்தவையே. காஷ்மீர் போராளிகளது விடுதலை உணர்வை அவர்தம் பெண்ணுடல்களுள் நுழைந்ததன் வழியாக இந்திய இராணுவம் சிதைக்க முயன்றது. வியட்நாமிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் உள்ள பெண்கள் மீது களமாடிய அமெரிக்க இராணுவத்தை இயக்கியது பாலியல் வெறி மட்டுமன்று. ஒரு இனத்தின் உளவுறுதியைச் சிதைக்கும் ஆயுதமாகவும் வல்லுறவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஈழத்தமிழர்களின் ஆன்மா பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் நசுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் பேதலிப்பின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள். வதைகளின் மூலம் வாகை சூடுவதே பேரினவாதத்தின் நோக்கம். தங்களது வக்கிரத்தை, வெறியை பலவந்தமாக பெண்ணுடலுள் ஊற்றுவதன் வழியாக அவர்தம் சுயமதிப்பையும் விடுதலை வேட்கையையும் பண்பாட்டையும் கலாச்சார விழுமியங்களையும் எதிர்காலம் குறித்த கனவுகளையும் அழித்துவிட வேண்டுமென்பதே ஆக்கிரமிப்பாளர்களின் திட்டம். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திலுள்ள மனிதர்கள் எவ்விதம் மனித நிலைக்குக் கீழ்ப்பட்டவர்களாகப் பார்க்கப்படுகிறார்களோ, அவ்விதமே பெண்களும் பாலியல் பண்டங்களாக ஆக்கிரமிப்பாளர்களால் பார்க்கப்படுகிறார்கள்.

பலியுயிர்களாக்கப்பட்ட பெண்கள் உன்னதமான உலகத்தை இழந்தவர்களாக, செய்யாத குற்றத்திற்கான குற்றவுணர்வோடு எஞ்சியுள்ள காலம் முழுவதும் வாழ விதிக்கப்பட்டிருக்கிறார்கள். (நமது சமூகம் அப்படித்தான் கற்பித்திருக்கிறது.) இனி அவர்களது கனவுகளில் என்ன தோன்றக்கூடும்…? சீருடைகள், குண்டாந்தடிகள், வெறி வழியும் கண்களுடன் குனியும் பேய்கள், வாய்க்குள் திணிக்கப்பட்ட உள்ளாடைகள், காலிடுக்கில் வழிந்த குருதி…

இந்தியா, சீனா போன்ற வல்லாதிக்கங்களின் ஒத்துழைப்பினால் மட்டுமன்றி, பேரினவாதிகளின் குறிகளாலும் வெல்லப்பட்டிருக்கிறது-இலங்கையின் ‘பயங்கரவாதத்திற்கெதிரான’ போர்!

நன்றி -'தீராநதி 'மே மாத இதழ்

 

28 comments:

ராம்ஜி_யாஹூ said...

வருத்தமான நிகழ்வுகள் சகோதரி


இலங்கை மட்டும் அல்ல, இந்தியா, ஈராக் என பல இடங்களில் ராணுவம், காவல் வீரர்கள்
பெண்களை ஒரு காமப் பொருளாகவே பார்க்கும் பார்வை உடையவர்கள் ஆக இருக்கின்றனர்.

தமிழ்நதி said...

ராம்ஜி,

இதை எழுதும்போதே 'இவ்வளவு கொடூரமான உலகத்தில் வாழவேண்டியிருக்கிறதே..."என்று வேதனையாக இருந்தது. பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளான பெண்களின் வலியை.... சில சமயங்களில் யதார்த்தம் எழுத்தை விட மிகக் குரூரமானதாக இருக்கிறது. எழுதவே முடியாமல், விரும்பாமல் தவிர்த்த பகுதிகள் அநேகம்.

Anonymous said...

இப்படியே கற்பழித்தார்கள் என்று சொல்லி அந்த பெண்களை மேலும் மேலும் அசிங்கபடுத்தி உங்கள் பிரச்சாரங்களை முடுக்கி விடுங்கள்

தமிழ்நதி said...

சொந்தப் பெயரில் வந்து கருத்துச் சொல்லத் திராணியற்றது ஒன்று வந்து கதைத்திருக்கிறது. அது யாரென்பதையும் என்னால் ஊகிக்க முடிகிறது.

எது எவ்வாறு இருப்பினும், வந்து பேசிய அனாமதேயம் அடிப்படை அறிவற்றது என்பதை 'கற்பழித்தார்கள்'என்ற சொல்லின் மூலம் அறிந்துகொண்டேன். 'கற்பழித்தல்'என்ற பதமே தவறானது. 'பாலியல் வன்கொடுமை, வல்லுறவு..'இன்ன பிற சொற்களைப் பயன்படுத்தப் பழகுங்கள். அதிலும், பலாத்காரமாகப் புணர்வதில் 'உறவு'எங்கிருந்து வந்தது என்ற கேள்வியும் உண்டு. ஒருவரது கற்பையும் ஒருவரும் அழிக்கமுடியாது. மேலும், கற்பு என்றால் என்ன என்பது குறித்தும் கேள்விகள் உண்டு. உடல் மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை அது.

பேரினவாத அரச படைகளால் தமிழ்ப் பெண்கள் சிதைக்கப்பட்டார்கள் என்பதை உலகத்திற்கு அறியத் தருவதானது உங்களை எந்த வகையில் தொந்தரவு செய்கிறது? அதைப் பற்றி எழுதாமல், பேசாமல் மௌனம் காத்து இலங்கை அரசுக்கு 'புனித'ப் பட்டம் வாங்கித் தரவேண்டுமென்கிறீர்களா? ஒரு இனத்தின் அழிவைப் பற்றி, அந்த இனத்தின் மீது பேரினவாதிகளால் ஏவிவிடப்பட்ட கொடூரங்களைப் பற்றி நாங்கள் எழுதத்தான் செய்வோம். இதில் பிரச்சாரம் ஒன்றுமில்லை.

ஊதுகுழல்களாகிய உங்களுக்கே இவ்விடயங்களில் மௌனம் சாத்தியம். எங்களுக்கில்லை.

ராஜ நடராஜன் said...

தமிழ்நதி!நலமா?

பேனா மூடியிட்டு உறங்கும் போது கோணல் மாணல் எழுத்துக்களும் கொக்கரித்து நடனமாடும்.

விமர்சனங்கள் இல்லாத எழுத்தாகவும்,வரலாறுமாக இல்லை ஈழப்பிரச்சினை.விமர்சனங்களை எதிர்கொண்டாலும் ஒன்றிணைந்த குரலாக தனித்தனியே ஒலிப்பதால் ஐ.நாவின் கதவில் போய் முட்டி விட்டு திரும்பி விடுகிறது.

சம்பந்தன் சிங்க கொடி தூக்கியதும் கூட பார்த்தாயா!தமிழகத்து தலைவர்கள் எவ்வளவு தூரம் யதார்த்தத்துக்கு எவ்வளவு தூரம் அப்பால் நிற்கிறார்கள் என்று இந்திய ஒற்றைக்கண் விமர்சனம் எழுகிறது.

பிரபாகரனுக்கான வெற்றிடம் இன்னும் காலியாகவே இருக்கிறது.அந்த ஆளுமையை ஜனநாயகத்தில் வெளிப்படுத்த ஒருவருக்குமே வலிமையில்லை.

எந்த ஒரு நிகழ்வும் செய்தியாக நோக்கும் போது அதன் வலியை உணரமுடிவதில்லை.உதாரணமாக அலெக்ஸ் பால் மேனன் என்ற கலெக்டர் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்டார் என்ற செய்திக்கும் பதிவுலக நண்பரின் நண்பர் என்று அறியும் போது ஏற்படும் அதிர்ச்சிக்கும் உணர்வு வேறுபாடுகள் இருந்தது எனக்கு.

இழப்புக்கள்,வன்கொடுமைகளை நீங்கள் உணர்வதற்கும்,விமர்சனம் செய்பவர்களின் மண்டை நாளங்களுக்கும் வித்தியாசமிருக்கிறது.

உங்கள் எழுத்துக்கள் அத்தி பூப்பதாக இல்லாமல் முப்போக நெல்லாக விளையட்டும்.நன்றி.

தீபிகா(Theepika) said...

மறுக்க முடியாத மனிதகுலத்துக்கெதிரான வக்கிரங்களின் வரலாற்றுச் சாட்சியாய் இந்த உண்மைகளின் பதிவு மிகமிக முக்கியமானது. மறைக்கப்பட முடியாத இந்த ரணங்களின் வலிகளை மௌனமாக கடந்து செல்ல முடியாது. வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட அத்தனை சகோதரிகளினதும் அடிமனக் குரலாய் உங்கள் பதிவு அமைந்திருக்கிறது. நன்றி.

வேர்கள் said...

இந்த கட்டுரை மனதில் எழுப்பிய பாதிப்பை எழுத்தில் எழுத எனக்கு திறமையில்லை ஆகையால் மெளனமாக கடந்துவிட்டேன்
//ஊதுகுழல்களாகிய உங்களுக்கே இவ்விடயங்களில் மௌனம் சாத்தியம். எங்களுக்கில்லை. //
மிக சரியாக சொன்னீர்கள்...

Anonymous said...

//சொந்தப் பெயரில் வந்து கருத்துச் சொல்லத் திராணியற்றது ஒன்று வந்து கதைத்திருக்கிறது. அது யாரென்பதையும் என்னால் ஊகிக்க முடிகிறது.//

ஊகித்து என்ன செய்ய போகிறீர்கள்?கருத்தை சொல்ல வருபவன் மேல் நீ திராணியற்றவன் என்று சொல்லி கருத்து எழுதுபவன் மேல் எழுத்து வன்முறையை நீங்கள் தூண்டிகிறீர்கள்!!

இணையத்தில் எல்லாரும் அனாமதேயமே. நீங்கள் நான் எல்லாரும். தமிழ்நதி என்பது உங்கள் சொந்த பெயரா? புனை பெயர்தானே.!!

முதலில் எழுத்து வன்முறையை கைவிடுங்கள், பின் உங்கள் பக்க நியாயங்களை பார்க்கலாம்.

பாலியல் வன்கொடுமையை புலி பிராசகரர்கள் தங்களில் பிராசார ஆயுதமாக தான் வெகு காலமாய் பாவித்து வருகிறார்கள். அந்த பெண்ணை படத்தை போட்டு அசிங்கமாக எழுதி இணையத்தில் ஆதரவு தேடுவது இன்று நேற்றல்ல பல காலமாக நடந்து வருகிறது.

நியாயம் கேட்க்க வேண்டிய செயலை பிராசரம் செய்ய முனைந்தால் என்ன ஆகும்?
இதனால் தானோ என்னவோ நீங்கள் இப்படி வருந்து எழுதினாலும் கேட்பார் யாரும் இல்லாமல் போகிறது.





சரி உங்கள் சொல்படியே ப

James Anand said...

புலி ஆதரவாளர்களுக்கு இதை எல்லாம் சொல்ல அருகதை இருக்கிறதா? துரோகிகள் என சொல்லி அரை வாசி தமிழர்களை கொடுமையாக கொலை செய்த புலிகள் மனித உரிமைக்கு வக்காலத்து வாங்குவது கேலிக்குரியது.

தமிழ்நதி said...

கருத்துக்கு நன்றி ராஜநடராஜன்,

நமக்கிடையிலான ஒற்றுமையின்மையே பல சிக்கல்கள் தீர்க்கப்படாமலிருப்பதற்கான காரணம் என்பதை பல தரப்பினரும் உணர்ந்திருக்கின்றனர். ஆனாலும், தத்தம் குரல்கள் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்கிற காரணத்தால் egoவினால் தொடர்ந்து சர்ச்சைப்பட்டவாறிருக்கின்றனர்.

'அத்தி பூப்பதாக இல்லாமல்'நிறைய எழுதவே எண்ணுகிறேன். ஆனாலும், நடைமுறை வாழ்வு விடுவதாயில்லை.

--
நன்றி தீபிகா,

உண்மைகளை வெளிக்கொணர்வதை நீங்கள் வரலாற்றுச் சாட்சியம் என்கிறீர்கள். சிலரோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் என்கிறார்கள். பேரினவாத அரச படைகளால் சிறுபான்மையினராகிய தமிழ்ப்பெண்கள் மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்முறையைக் குறித்து எழுதுவதானது எவ்வகையில் பிரச்சாரமாகும் என்பது எனக்குப் புரியவில்லை.

----
வருகைக்கும் முழுமையாக (நீண்ட கட்டுரையாதலால்) வாசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி வேர்கள்.

---
ஊகித்து என்ன செய்ய போகிறீர்கள்?கருத்தை சொல்ல வருபவன் மேல் நீ திராணியற்றவன் என்று சொல்லி கருத்து எழுதுபவன் மேல் எழுத்து வன்முறையை நீங்கள் தூண்டிகிறீர்கள்!!///

நீங்கள் சொல்ல வரும் கருத்து சரியானதென நம்பினால் ஏன் அனாமதேயமாக வருகிறீர்கள்? உங்களுக்கே நீங்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லை, தவறான கருத்தைச் சொல்கிறீர்கள் என்று உணர்ந்திருப்பதனால்தானே அனாமதேயமாக வருகிறீர்கள்?

அதில் இரண்டு வசதிகள் இருக்கின்றன... 1.உங்களது எதிரியாகிய என்மீது போகிற போக்கில் சேற்றை வாரியிறைப்பது. அதை வாசகர்களில் சிலர் எடுத்துக்கொள்வார்கள்.

2.சொந்தப் பெயரில் வந்து எழுதினால், உங்கள் கருத்து தவறாக இனங்காணப்படும் பட்சத்தில், ஏனையோரதும் கோபத்துக்கு ஆளாவீர்கள். 'அது இப்படித்தான் கதைக்கும்'என்றொரு பெயர் வந்து சேரும். அதனால்தான் அனாமதேயமாக வந்து கருத்து இடுகிறீர்கள்.

//இணையத்தில் எல்லாரும் அனாமதேயமே. நீங்கள் நான் எல்லாரும். தமிழ்நதி என்பது உங்கள் சொந்த பெயரா? புனை பெயர்தானே.!!///

உங்கள் முட்டாள்தனத்தை அடிக்கடி நிரூபிக்காதீர்கள். தமிழ்நதி என்ற பெயரில் நான் எழுதினாலும் நான் யார் என்பதை எல்லோரும் அறிவார்கள். உதாரணமாக மனுஷ்யபுத்திரன் என்ற பெயரில் ஹமீத் எழுதுகிறார். அதற்காக அது அவர் எழுதியது இல்லை என்று ஆகிவிடுமா?

//பாலியல் வன்கொடுமையை புலி பிராசகரர்கள் தங்களில் பிராசார ஆயுதமாக தான் வெகு காலமாய் பாவித்து வருகிறார்கள். அந்த பெண்ணை படத்தை போட்டு அசிங்கமாக எழுதி இணையத்தில் ஆதரவு தேடுவது இன்று நேற்றல்ல பல காலமாக நடந்து வருகிறது.//

இலங்கை அரசாங்கத்தின் வன்முறைகளைப் பற்றி எழுதினால், எழுதுபவர்களை புலிப் பிரச்சாரகர்கள் என்று முத்திரை குத்துவது புலியெதிர்ப்பாளர்களின் வழக்கம். பாலியல் வன்கொடுமை செய்தவனைத் தட்டிக் கேட்காமல், அதைப் பற்றி எழுதுபவர்களைத் தட்டிக் கேட்பது ஊதுகுழல்களின் வழமை. இனி உங்கள் கருத்தைக் கணக்கிலெடுப்பத◌ாக இல்லை.

//இதனால் தானோ என்னவோ நீங்கள் இப்படி வருந்து எழுதினாலும் கேட்பார் யாரும் இல்லாமல் போகிறது.///

வயிற்றெரிச்சல்... காழ்ப்புணர்ச்சி என்றெல்லாம் தமிழில் வார்த்தைகள் உள்ளன. அதற்கு நீங்கள் மிகச் சரியான உதாரணமாவீர்கள். ஐயோ பாவம்!!!

தமிழ்நதி said...

///புலி ஆதரவாளர்களுக்கு இதை எல்லாம் சொல்ல அருகதை இருக்கிறதா? துரோகிகள் என சொல்லி அரை வாசி தமிழர்களை கொடுமையாக கொலை செய்த புலிகள் மனித உரிமைக்கு வக்காலத்து வாங்குவது கேலிக்குரியது.///

வருக ஜேம்ஸ் ஆனந்தன்...:))

ஆக நீங்கள் என்னை 'புலிகள்'என்றே அழைக்கிறீர்கள். நல்லது!

'நீ புலி வால்'என்று ஒரு அரக்கு முத்திரையை என் தலையில் ஓங்கிக் குத்திவிடுவீர்கள். அதன்பிறகு நான் வாயைத் திறக்கக்கூடாது. புலி ஆதரவாளராக இருக்கும் ஒருவர் மனிதவுரிமை மீறல்களைப் பற்றிக் கதைக்கக்கூடாதா? அரச ஆதரவாளர◌ாக இருக்கும் ஒருவருக்குக் கூட மனிதவுரிமை மீறல்களைப் பற்றிக் கதைக்க உரிமை இருக்கிறது. அது அவதூறாக இல்லாமல் நியாயமாக இருக்கும் பட்சத்தில்.... மாபெரும் அவலமாகிய இனப்படுகொலையை நடத்தி முடித்த ஒரு அரச தரப்பினருக்கே மனிதவுரிமை மீறல்களைப் பற்றிக் கதைக்க உரிமை இருக்கிறதென்றால், பாதிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த எனக்கு, அதனிலும் அதிகமுண்டு.

விடுதலைப் புலிகள் மீது கூட எங்களைப் போன்றவர்களுக்கு விமர்சனம் இருக்கிறது. அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். நாங்கள் ஒன்றும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. விடுதலைப் புலிகள் தவறுகளை இழைத்தார்கள் என்பதற்காக, அவர்களது தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் ஒன்றுமேயில்லை என்று சொல்லிவிட முடியுமா? அப்படிச் சொல்லும் தகுதி உங்களுக்கோ எனக்கோ இல்லை.

'அரச படைகள் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்'என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் ஏன் பற்றிக்கொண்டு வருகிறது என்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

சின்னப்பயல் said...

எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையில் நகர்கிறது நாட்கள்.விடியட்டும் விரைவில்...

Vani said...

Talking about sexual abuse and HR violaiton by the Sri-Lankan government forces is hurting few readers. It is not hard to guess what kind of people they are. Let them defend the perpetrator while we all have the responsibility and duty to fight the murderers.

Vani said...

"'அரச படைகள் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்'என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் ஏன் பற்றிக்கொண்டு வருகிறது என்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது."

You have said it right. But no need to be surprised. There are people like that who would defend the Sri-Lankan government at cost.

தமிழ்நதி said...

நன்றி வாணி. 'தமிழ்ப்பெண்களை வன்கொடுமை செய்தார்கள்'என்ற உண்மையை யார் வேண்டுமானாலும் பேசவும் எழுதவும் உரிமை உண்டல்லவா? விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு அந்த உரிமை இல்லை என்பது, எந்தவகை நியாயத்தில் சேர்த்தி என்று தெரியவில்லை. அரசுக்கு எதிராக எழுதுவதென்பது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானது என்ற சமன்பாட்டை அவர்களாகவே வந்தடைந்து அதனடிப்படையில் பேசுகிறார்கள்.

///There are people like that who would defend the Sri-Lankan government at cost.//

yes!!!

நன்றி சின்னப்பயல். விரைந்து வரவேண்டும் விடியல்.... அதட்டும் அதிகாரங்கள் இன்றி.

ராஜ நடராஜன் said...

தமிழ் நதி!தமிழ்மணத்தின் ஈழப்பகுதியை பார்வையிட வரும்போது உங்கள் பதிவு மீண்டும் நினைவு வந்தது.

முதலாவதாக அனாமதேயமாக வருபவர்களுக்கு இருவிதமான காரணங்கள் இருக்கும்.ஒன்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாதென்ற முன்னெச்சரிக்கை.இன்ன்மொன்று ஈழ உணர்வாளர்களை விமர்சிக்கவோ அல்லது வசைபாடுவதற்குள்ள வசதி.

இன்னுமொரு பார்வையாக சுய பெயர் மாதிரி தெரியும் ஜேம்ஸ் ஆனந்த் போன்றவர்கள் பொது விமர்சனவாதிகளா என்றால் இல்லை.ஜேம்ஸ் ஆனந்த் ஈழ சார்புக்கு எதிரான நிலை அல்லது ராஜபக்சே முகாமிலிருந்து விமர்சிக்கும் நண்பராகவே இருக்கிறார்.

அனாமதேயமாகவோ அல்லது பெயர்ச்சொல்லுடனோ வந்தாலும் அவர்கள் கருத்து நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் பெயர் ஒரு பொருட்டல்ல என்றே நினைக்கின்றேன்.நமக்கு எதிரான நிலைப்பாட்டில் கருத்துக்கள் வெளியிட்டாலும் கூட அவர்களது வாதங்களை வெற்றி கொள்ள நமக்கு நியாயமான காரணங்கள் நிறைய இருக்கின்றன.எப்படி தர்க்கம் செய்து நமது வாதத்தை முன்னிறுத்துகிறோம் என்பது முக்கியம்.

தற்போதைய சூழலில் இந்தியாவின் 13,ஈழத்தை பின் தள்ளும் ஒற்றை இலங்கை,ஈழம் தமிழகத்திலும்,புலம் பெயர் தேசங்களிலும் ஈனஸ்வரத்தில் முனங்குவதாக ஏற்படுத்தும் பிம்பம் இவற்றில் மக்களின் உணர்வுகள் என்ன என்பது மட்டும் உறங்கியே கிடக்கின்றன.

எதிர்காலம் ஈழத்தமிழர்களுக்கு எந்த முடிவை வைத்துள்ளதை என்பதை ஐ.நாவின் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே தீர்வாக இருக்க முடியும்.அதனை நோக்கி தமிழர்கள் பயணிப்பது நல்லது.

தமிழ்நதி said...

ராஜ நடராஜன்

///அனாமதேயமாகவோ அல்லது பெயர்ச்சொல்லுடனோ வந்தாலும் அவர்கள் கருத்து நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் பெயர் ஒரு பொருட்டல்ல என்றே நினைக்கின்றேன்.///

ஆம்..அனாமதேயமாக வருபவர்கள் நியாயத்தோடு பேசும்போது அதைக் கருத்திற் கொள்ளவே வேண்டும். இந்தக் கட்டுரையை எடுத்துப் பாருங்கள்... "இலங்கையின் அரச படைகள் சிறுபான்மையினத் தமிழ்ப்பெண்களை வன்புணர்ந்தார்கள்...உளவியல் சிக்கலுக்கு உட்படுத்தினார்கள். போர்க்குற்றம் இன்னபிற பற்றியெல்லாம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், பேரினவாதிகளால் இழைக்கப்பட்ட அநீதியை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்."என்பதே என்னால் முன்வைக்கப்பட்டது. இதில் பிரச்சாரம் எங்கிருந்து வந்தது. ஆக, இதை அவர்கள் எப்படி எடுக்கிறார்களென்றால், இலங்கை அரசுக்கு எதிராக எழுதப்படுவனவெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் என்று எடுக்கிறார்கள். இங்கு விடுதலைப் புலிகளைப் பற்றி யார் கதைத்தது? சாதாரண மக்கள் அதிகாரங்களால் எப்படிச் சிதைக்கப்படுகிறார்கள் என்பதுதானே கட்டுரையின் சாராம்சம். அது அவர்களது கண்ணுக்குப் புலப்பட முடியாதபடிக்கு அரச ஆதரவாளர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்றுதானே பொருள்.

வாதங்களல்ல; நியாயங்கள்தான் நானும் வேண்டுவது.

///எதிர்காலம் ஈழத்தமிழர்களுக்கு எந்த முடிவை வைத்துள்ளதை என்பதை ஐ.நாவின் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே தீர்வாக இருக்க முடியும்.அதனை நோக்கி தமிழர்கள் பயணிப்பது நல்லது.///

என்னதான் முயன்றாலும் அதற்கான சாத்தியம் குறைவு நண்பரே. பிராந்திய வல்லாதிக்கங்கள் அதற்கு இடமளிக்க மாட்டா.

தமிழ்நதி said...

comment moderation இல் சில பின்னூட்டங்கள் அழிந்துபோய்விட்டன. அவற்றை மீண்டும் பதிகிறேன்.

belono என்பவரின் பின்னூட்டம்....

//தமிழ்நதி என்ற பெயரில் நான் எழுதினாலும் நான் யார் என்பதை எல்லோரும் அறிவார்கள். உதாரணமாக மனுஷ்யபுத்திரன் என்ற பெயரில் ஹமீத் எழுதுகிறார். அதற்காக அது அவர் எழுதியது இல்லை என்று ஆகிவிடுமா?//

இந்த பதில் அனாமதேயம் ஒருவருக்கு நீங்கள் கூறியது. ஆனால் தமிழ்நதி யார் என்பது எனக்கு தெரியாது. தமிழ்நதி என்பவர் கனடாவில் இருந்தவர். தற்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் புலிகளின் பிரசார பீரங்கியாக செயல்படுபவர் என்பதே கனடா நண்பர்கள் மூலம் நான் அறிந்தது. அனாமதேயம் ஒருவருக்கு நீங்கள் அளித்த பதிலுக்காக மட்டுமே இதை தெரிவித்தேன்.
உங்களது பதிவில் யாரை அனுமதிப்பது என்பது உங்களது உரிமை.
உங்களது புலிகளால் பலவந்தமாக பிடித்து செல்லபட்ட எனது உறவினர்(பெண்)மிக பெரிய அதிஷ்டம் இருந்ததினால் புலிகளிடம் இருந்து தப்பி வந்து இன்று மேற் கல்வி கற்று கொண்டிருக்கிறார். நீங்கள் புலிகளின் யுத்த வெறியால் பாதிக்கபட்ட பெண்களை புலிகளின் பிரசாரத்திற்காக பயன்படுத்துவது மிக வருத்தமானது.

தமிழ்நதி said...

belono,

"தமிழ்நதி யார் என்பது எனக்குத் தெரியாது"என்று முதலில் சொல்கிறீர்கள். பிறகு,

"தமிழ்நதி என்பவர் கனடாவில் இருந்தவர். தற்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் புலிகளின் பிரசார பீரங்கியாக செயல்படுபவர் என்பதே கனடா நண்பர்கள் மூலம் நான் அறிந்தது."

என்றும் சொல்கிறீர்கள். ஏதோவொரு வகையில், உங்கள் நண்பர்களின் வார்த்தைகளில் சொல்வதானால், ' 'புலிகளின் பிரச்சாரப் பீரங்கி'யாகவாவது என்னை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால், அனாமதேயமாக வருகிறவர்களுக்கு எந்தவித அடையாளமும் அறிமுகமும் இல்லை. தாங்கள் சொல்ல வரும் கருத்தில் அவர்களுக்கே முழு நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் அனாமதேயமாக வருகிறார்கள்.

என்னைப் புலிகளின் பிரச்சாரப் பீரங்கியாகச் சித்தரிக்கும் கனடா வாழ் புத்திசாலிகள் யாரென்பதை நான் ஓரளவு அறிவேன். அவர்களுக்கு தங்களது புலியெதிர்ப்பு அரசியலை மேற்கொண்டு நகர்த்துவதற்கு என்னைப்போன்ற ஆட்கள் தேவை. புலிகள் அரங்கத்திலிருந்து அகற்றப்பட்டான பிறகு, தங்கள் அரசியலை எப்படி நகர்த்துவதென்று தெரியாமல் திகைத்துப்போய் இருக்கிறார்கள். ஆகவே, புலிகளது 'பிரச்சாரப் பீரங்கி'யாகத் தொழிற்படும் (மிகப்பெரிய நகைச்சுவை) என்னைப் போன்றவர்களைத் திட்டித் தீர்த்துக்கொள்வதன் மூலமாவது தங்கள் இருப்பை நிறுவ முயல்கிறார்கள். நேற்றைய கூட்டத்தில் யமுனா ர◌ாஜேந்திரன் சொன்னதுபோல, "மாற்று அரசியல் மாற்று அரசியல் என்கிறீர்களே... மாற்று அரசியல் என்பது புலிகளுக்கெதிராகப் பேசுவது மட்டுமல்ல; புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட கடந்த மூன்றாண்டு காலத்தில் என்ன மாற்று அரசியலை முன்வைத்தீர்கள்?"என்பதுவே நாங்கள் கேட்பதும். ஒலிவாங்கியின் முன் நின்று புலிகளைத் திட்டித் தீர்ப்பது மட்டுமே இதுவரை காலமும் அவர்களது அரசியலாக இருந்துவந்திருக்கிறது. இனியாவது புதிதாக, ஆக்கபூர்வமாக ஏதாவது கதைக்கச் சொல்லுங்கள்.

//புலிகளின் யுத்த வெறியால் பாதிக்கபட்ட பெண்களை புலிகளின் பிரசாரத்திற்காக பயன்படுத்துவது மிக வருத்தமானது.// இந்த வார்த்தைகளின் பொருளுணர்ந்துதான் சொல்கிறீர்களா...? ஆக, மேற்குறிப்பிடப்பட்ட பெண்கள் எல்லாம் இலங்கை அரசின் படைகளால் பாதிக்கப்படவில்லை; இவர்களெல்ல◌ாம் புலிகள் போராடப் புறப்பட்ட காரணத்தால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்கள். 1956, 1958, 1971 என்று பட்டியலிடப்படும் காலப்பகுதிகளில் புலிகள் இருந்தார்களா? அப்போதும் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு யாரைக் காரணமாகச் சொல்வீர்கள்?

புலிகளும் மற்ற இயக்கங்களும் போராடப் போனது யுத்தவெறியினால் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். வரலாறு என்று ஒன்று இருக்கிறது. அது, நீங்கள் சொல்வதுபோல, புலிகளின் 'பிரச்சாரப் பீரங்கி'கள◌ால் முற்றிலுமாக எழுதப்பட்டதன்று.

பேரினவாதிகளால் சிறுபான்மை இன மக்கள் மீது தொடுக்கப்பட்ட அத்தனை அடக்குமுறைகளையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்திருக்க வேண்டுமென்கிறீர்களா? நல்லது.

தனிப்பட்ட கதைகள் எங்களிடமும் உண்டு. குடல் கிழிந்து தொங்கிய, வீரச்சாவடைந்த போராளிகள் எங்கள் பக்கத்திலும் உண்டு.. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படவில்லையெனினும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள் எங்கள் பக்கத்திலும் உண்டு. இன்னும் குறிப்பாகச் சொல்லலாம். ஆனால், தனிப்பட்ட விடயங்களைச் சொல்லி அனுதாபம் தேடவேண்டிய அவசியம் இங்கில்லை. நாங்கள் அவற்றை நீங்கள் சொன்னதுபோல வெளியில் சொல்வதில்லை. போர◌ாட்டம் எல்லோரையுந்த◌ான் பாதித்தது. எல்லோரும் 'யுத்தவெறியினால் பாதிக்கப்பட்டோம்'என்று சொல்வதில்லை. இனவிடுதலைக்கான போர◌ாட்டத்தை முன்னெடுத்தவர்கள் என்றவகையில், சிறுபான்மைத் தமிழர்கள் என்றவகையில் அவற்றை அவற்றைத் தாங்கிக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள்.... "ஒருவருடைய தலையில் ஓங்கி அடிக்கப்படும் அரக்கு முத்திரையை எப்போது நீக்குவார்கள்?"என்று. அதனடிப்படையில், எங்களால் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களையும் கறுப்பும் மஞ்சளும் நீண்ட வாலுமுடைய 'புலிக் கருத்தாக' குறுக்கும் அரசியலிலிருந்து எப்போது வெளிவருவார்கள் என்று கேளுங்கள். நன்றி.

தமிழ்நதி said...

முன்பே சொன்னபடி, சில பின்னூட்டங்களைத் தவறுதலாக அழித்துவிட்டேன். அவற்றை மீண்டும் பதிகிறேன்.

நல்லதோர் வீணையின் பின்னூட்டம்...


பேரினவாத அரச படைகளால் தமிழ்ப் பெண்கள் சிதைக்கப்பட்டார்கள் என்பதை உலகத்திற்கு அறியத் தருவதானது உங்களை எந்த வகையில் தொந்தரவு செய்கிறது? அதைப் பற்றி எழுதாமல், பேசாமல் மௌனம் காத்து இலங்கை அரசுக்கு 'புனித'ப் பட்டம் வாங்கித் தரவேண்டுமென்கிறீர்களா? ஒரு இனத்தின் அழிவைப் பற்றி, அந்த இனத்தின் மீது பேரினவாதிகளால் ஏவிவிடப்பட்ட கொடூரங்களைப் பற்றி நாங்கள் எழுதத்தான் செய்வோம். இதில் பிரச்சாரம் ஒன்றுமில்லை.

ஊதுகுழல்களாகிய உங்களுக்கே இவ்விடயங்களில் மௌனம் சாத்தியம். எங்களுக்கில்லை.

சரியாகசொன்னீர்கள்! அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. இந்தக் கட்டுரை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட எல்லாப் பெண்களுக்காகவுந்தான் பேசுகிறது. இதிலும் புலி வாலை தேடி பிடிப்பவர்கள் பிடித்துக் கொல்லட்டும்.
அவர்களால் புலி வாலை விட முடியாது.

தமிழ்நதி said...

நலமா 'நல்லதோர் வீணை'?

இணையத்தில் காணக் கிடைப்பதில்லை உங்களை.

///இதிலும் புலி வாலை தேடி பிடிப்பவர்கள் பிடித்துக் கொள்ளட்டும்.
அவர்களால் புலி வாலை விட முடியாது.///

புலி வாலை விட்டால் அவர்கள் அரசியல் செய்வது எப்படியாம்...:))))

தமிழ்நதி said...

அழிக்கப்பட்ட பின்னூட்டம்.... மீண்டும்...


இவ்வளவு நாளும் வெறும் பார்வையாளனாக இருந்து விட்டு இப்போத்தான் இணையத்துள் வந்திருக்கிறேன் தமிழ்நதி. தன் விபரத்தில் இன்று தான் சில செய்திகளை ஏற்றம் செய்திருக்கிறேன். என் கூகிள் முகவரி தற்போது காணக்கிடைக்கும். இன்னும் நிறைய எழுதுங்கள். எல்லாம் நல்லவைக்கே.

-நல்லதோர் வீணை

Anonymous said...

///"ஒருவருடைய தலையில் ஓங்கி அடிக்கப்படும் அரக்கு முத்திரையை எப்போது நீக்குவார்கள்?"என்று.///புலிகள் எல்லோர்மீதும் 'துரோகி' முத்திரை குத்தினார்களே அதைத்தானே சொல்கிறீர்கள்...

தமிழ்நதி said...

அனானி,

///"ஒருவருடைய தலையில் ஓங்கி அடிக்கப்படும் அரக்கு முத்திரையை எப்போது நீக்குவார்கள்?"என்று.///புலிகள் எல்லோர்மீதும் 'துரோகி' முத்திரை குத்தினார்களே அதைத்தானே சொல்கிறீர்கள்...?///

இந்தக் கேள்வியையாவது உங்கள் சொந்தப் பெயரில் வந்து கேட்டிருக்கலாம்.

இதற்குப் பதில் சொல்வதன் முன் ஒன்று... நான் விடுதலைப் புலிகளை நேசிக்கிறேன். எந்தளவு நேசிக்கிறேன் என்றால்.... அவர்களது அர்ப்பணிப்பை நினைத்த மாத்திரத்தில் விழிகளில் நீர் திரண்டுமளவிற்கு அவர்களை நேசிக்கிறேன்; விமர்சனங்களோடு.

முள்ளிவாய்க்கால் துயரத்தை மட்டும் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கவில்லை. பல படிப்பினைகளையும் தந்து சென்றிருக்கிறது. தியாகி-துரோகி என்று அடையாளப்படுத்தும் குறுந்தேசியவாதத்திலிருந்து பெரும்பாலானோர் விலகிவந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன். எங்களுக்கு வேண்டியிருப்பது எங்கள் மக்கள் பாதுகாப்பாக, சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழக்கூடிய ஒரு நிலைமை. தியாகி-துரோகி முத்திரை குத்தல்கள் அல்ல.

மேலும், நீங்கள் சொல்வதுபோல, விடுதலைப் புலிகள் எல்லோரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தவில்லை.

அனானிமஸாக வந்து தடாலடியாகக் கேள்வி கேட்பவர்களுக்கு மிக அவசியம் ஏற்பட்டாலன்றிப் பதிலளிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். பதில் சொல்லத் தெரியாமலில்லை. நேர விரயம். நன்றி.

ராஜ நடராஜன் said...

இன்னுமா இங்கே பின்னூட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

புலி புலியென்று இன்னும் கிலியாகிறவர்களின் மொத்த உருவகப்படுத்தல் என்னவென்று எங்கு நோக்கினாலும் விடுதலைப்புலிகளின் மீதான எதிர் விமர்சனங்களின்றி விமர்சிப்புக்கள் என்னவென்று அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

ஒரு போராட்டத்தின் நெளிவு,சுளிவுகளில் தவறுகள் இருக்கலாம்.ஆனால் தவறுகளே சரியாகி விடுவதில்லை.முள்ளிவாய்க்காலுக்குஅப்பாலான மூன்றாண்டு கால இலங்கை அரசின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து நோக்கினால் விடுதலைப்புலிகள் மீதான தவறுகளும் கூட பின் தள்ளிவிடப்படும் சூழல்தான் உருவாகியுள்ளது.

தமிழர்கள் அனைவருமே புலிகள் என்று இலங்கை அரசு பீடம் சொல்வதில் கூட பொருள் இருக்கிறது.ஆனால் புலி,பாசிஸம் இன்னும் பல சொற்பாவனைகள் எங்கேயிருந்து தமிழர்களிடம் பிறக்கின்றன?
ஈழச்சகோதரர்கள் இன்னும் ஒருவர் மீது ஒருவர் ஏன் இன்னும் விமர்சனம் கொள்கிறார்கள் என்பது இன்னும் கூட எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

2004ம் ஆண்டு கால கட்ட கருணாவின் கிழக்கு,வடக்கு பிராந்திய பிரிவினை பற்றியும் ஆன்டன் பாலசிங்கம் பிரபாகரன் சார்ந்த 25 வருட அனுபவ பகிர்வில் வடக்கு தலைமைக்கு நிகரான பதவியையே கருணாவுக்கு தரப்பட்டது என்பது பற்றி வாசிக்க நேர்ந்தது.தொடர் நிகழ்வுகளும்,தற்போதைய கருணாவின் நிலையும் கூட உண்மைகளை உரக்க சொல்கின்றனவே!இது போலவே புலி விமர்சனங்களும் காலப் போக்கில் அமிழ்ந்து போகும்.புலி விமர்சனம் என கொட்டிய வார்த்தைகளை இன்னும் சில வருடங்கள் கழித்து மீட்பு ஆராய்வு செய்வோமாக.நன்றி.

Anonymous said...

உங்களையும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார்களா

தமிழ்நதி said...

///இன்னுமா இங்கே பின்னூட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன?//

ஆம்.. ராஜ நடராஜன்:))

//புலி புலியென்று இன்னும் கிலியாகிறவர்களின் மொத்த உருவகப்படுத்தல் என்னவென்று எங்கு நோக்கினாலும் விடுதலைப்புலிகளின் மீதான எதிர் விமர்சனங்களின்றி விமர்சிப்புக்கள் என்னவென்று அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

ஒரு போராட்டத்தின் நெளிவு,சுளிவுகளில் தவறுகள் இருக்கலாம்.ஆனால் தவறுகளே சரியாகி விடுவதில்லை.முள்ளிவாய்க்காலுக்குஅப்பாலான மூன்றாண்டு கால இலங்கை அரசின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து நோக்கினால் விடுதலைப்புலிகள் மீதான தவறுகளும் கூட பின் தள்ளிவிடப்படும் சூழல்தான் உருவாகியுள்ளது.///

நீங்கள் மேலே சொல்லியிருப்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. அண்மையில் கனடாவுக்கு வந்திருந்த விமர்சகரும் எழுத்தாளருமாகிய யமுனா ராஜேந்திரன் புலியெதிர்ப்பாளர்களை நோக்கிக் கேட்ட கேள்வியும் அதே. அவர்களிடமிருந்து அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை.

///இது போலவே புலி விமர்சனங்களும் காலப் போக்கில் அமிழ்ந்து போகும்.புலி விமர்சனம் என கொட்டிய வார்த்தைகளை இன்னும் சில வருடங்கள் கழித்து மீட்பு ஆராய்வு செய்வோமாக///

விமர்சனம் என்பது சரி, பிழை இரண்டையும் குறித்து ஆராய்ந்து முன்வைக்கப்படுவது. மேற்குறித்தவர்கள் அள்ளித் தெளிப்பதெல்லாம் அவதூறுகளே. பார்க்கலாம்... காலம் யாவற்றுக்கும் பதலளிக்கும். நேரம் எடுத்துக்கொண்டு உரையாடியமைக்கு நன்றி.

தமிழ்நதி said...

//உங்களையும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார்களா///

இந்தக் கட்டுரையில் அனானிமஸாக வந்து இந்தக் கேள்வியைக் கேட்கும் நல்மனதை நான் புரிந்துகொள்கிறேன்.

அடுத்தவாரம், பாலியல் தொழிலாளர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதாக இருக்கிறேன்.

அந்தக் கட்டுரையில் வந்து 'உங்களது ரேட் என்ன?'என்று கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

குரோதத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது.